Friday, February 9, 2018

கோயிலின் விமானங்கள்

——   நூ.த.லோக சுந்தரம். 
    கோயிலின் சுற்று தளம் செவ்வக வடிவுடையதாகவும், தூங்கானை மாட விமானம்  கொண்டதாகவும், படத்தில் காண்பது போல  சில கோயில்கள் அமைந்திருப்பதுண்டு.  இதன் காரணம், கோயிலின்  பழங்காலத்திய  கருவறை  விமானம்  கருங்கல்லால்  ஆகாமல்  சிதிலமடைந்ததால்   பின்னாளில்  அந்நாளைய (current) புதுமை, பெருமை  தாங்கும்  வகையில்  ஆனதான  தூங்கானை  மாடமாக  விமானம்  மட்டும்  அமைக்கும்  ஒரு  முயல்வு  இதுவாகலாம்,  இது  ஓர்  சிறப்பு  தனி  நிலை  எனல்  வேண்டும்.    அதான்று,  இது  இருநிலை  மாடக்கோயில்  உச்சியில்  இருக்கும்  இரண்டாம்  தளம்தான்  தூங்கானை  மாட  விமானமாகும்  என்பதையும்  கவனிக்க  வேண்டும்.   பல  தூங்கானை   மாடங்கள்  போல்  அல்லாது  அடிமட்டத்திலிருந்தே  தூங்கானை   வடிவாகக்  கட்டுமானம்  அமையாமல்  உள்ளது.

    இன்று  சாதாரண  நிலையில்  உள்ள  ஊர்களில்  அரச,  ஆல  மரத்தடியில்  பிள்ளையார்,  அம்மன்  சிலைகளை  மேடைமீது  அமைத்து  வழிபடுவதும்,  இதுவே ஊர்மன்றம்  எனவும்  ஊர்ப்பொதுக்காரியங்கள்  பேசுமிடம்  ஊர்த்தலைவர்  சந்திக்குமிடம்  எனவும்  உள்ளமை  நன்றே  அறிவோம்.   இவ்வகை  வழிபாட்டு  இடம்  நாகரீகம்  மேற்படும்போது  அதன்  கூரைகள்  ஓலைகளாகவும்,  பின் செங்கல்லாலும்,  பின்  பொலிவுமிக்க  கவின்பெரு  கருங்கற்களால்  சிற்பங்களுடன்  கூடியதாகவும்,   கற்றளி  எனவும்  பரிணமித்தது  என்பது  இயல்பான  வரலாற்றுப்பாதை  ஆகும்.   ஆனால்,  பல்லவர்கள்  அமைத்த  குடைவரைக்கோயில்கள்  இவ்வகைத்தது  ஆகாமல்  முற்றும்  வழிபாட்டுத்தலமாக  மட்டும்  எழுந்தவை  ஆகும்.

    விமானம்  எனும்  சொல்  வானம்/கூரை - தலைக்கு  மேலுள்ள  அமைப்பு  தொடர்புடையது.  விதானம்  எனவும்  வழங்கும்.   விண்ணகர் எனப்படுவதும்  உண்டு.    பந்தர்(ல்),  காவணம் எனும்  சொற்களும்  அப்பொருள்  தாங்கும்.  ஆனால்   இவை  தற்காலிகமானவை.   சிலநேரங்களில்  கொடி,  பதாகை  போன்று  நகரக்கூடியவையாகவும்  இருக்கும்.   குடைபோன்ற  அமைப்புடன்  இன்றும்  கோயில்  இறைவன்  வீதி  உலா  ஊர்தி/வாகனங்களில்  'சவுடல்'  விமானம்  உண்டு. 

    திருவானைக்கா  கோயிலின்  வரலாற்றில்  சிலந்தியும்  யானையும்  போட்டிபோடும்  விதானம்  மற்றும்  அதன்  பராமரிப்பு  குறித்துப் பேசுவதை  நினைவு  கொள்க.

மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியம் சகடுஅணைய வானத்து 50
          சிலப்பதிகாரம் 1 புகார்க் காண்டம் ; பதிகம் 1 மங்கல வாழ்த்துப் பாடல்

திருக்கோயி லில்லாத திருவி லூருந்
              திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
               பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்
               விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
               அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே 6.95.5
                                                அப்பரடிகள்;  திருத்தாண்டகம்

விதானம்  அமைந்த  கோயில்கள்  இல்லாமல்  இருக்கும்  ஊர்  ஊரல்ல   என்பது,  நாகரீகம்  முதிராது  வாழும்  குடிகள்,  அதாவது  காட்டுவாசிகளாக  வாழும்  இடம் (அடவி காடு) என்பதாகும்  

வேறு;
ASPIDAL, என்பது  தூங்கானை  மாட  அமைப்பின்  ஆங்கிலச்சொல், வடமொழியில் गजपृष्‍ठाकार எனக்கட்டுகின்றது (https://shabdkosh.raftaar.in/). வாதபிக்கோயில்  ஒருவகையில்  இத்தகையதே.   இங்கு  அடித்தளம்  தூங்கானை  மாடம்  மேலே  சதுர  அமைப்பு.

    இப்படி  இருந்தால்தான்  இது,  அல்லது  சிறிதே  மாறினாலும்  அதுவாகாது  எனும்  கொள்கையைக்  கடைபிடிப்பது  மிகுந்த  இடரைத்தரும்  எனலாம்.   கோஷ்டம்  என்றால்  நான்குபுற  சுவரினில்  சன்னல்  போல்  வைக்கும்  அமைப்பு.   கோஷ்டத்தில்தான்  தென்முகன்  பிரம்மா/லிங்கோத்பவர்,  துர்க்கை,  கணபதி எனும்  உருவங்களை  வைப்பர்.   ஆனால்,  புதுமையாகத்  தனித்துவம்  தாங்கி  குடந்தை  நாகேசுரர்  கோயில்  கோஷ்டங்களில்  சோழமன்னன்,  அவர்தம்  குடும்பம்/பரம்பரை  பெண்கள்  உட்படத்  தந்தை  மகன்  உருவங்கள்  உள்ளன.   அதனால்  அது  ஒரு  படைவீடாகுமோ  என்று  ஐயம்  உள்ளது.   ஆனால்,  கல்வெட்டுகள்  அப்படிக் காட்டவில்லை.

கீழே உள்ளவை - சில்பசாத்திரம்  தொடர்புடைய சொற்கள் :-இரண்டாவது  படத்தில்  தரும்  விளக்கங்கள்  ஒரு  தனி  மனிதர்  இரண்டையும்  ஒப்புக்காட்ட  வந்த  நிலை  மட்டுமே  ஆகும்.   முதலில்  உள்ளது  கட்டிடம்  பின்தான்  அதனை  ஒப்பு காட்ட  வந்தநிலையில்  ஓர்  விளக்கம்.   எனவே, விளக்கம் என்பது இங்கே  பின்  வந்தது.  விளக்கத்திலிருந்து  கட்டிடம்  அமைக்கப்படவில்லை. 

    'வி'மானம்  வானம்  பறத்தல்  தொடர்புடையது   இதனில்  உள்ள  'வி'  என்பது  வடமொழி  முன்னொட்டு(prefix)  விதானம்,  விநாயகன்,  விபுலம்,  விக்கிரமன்,  விபூதி'  விமலன்,  விநாசம்  போன்றவை  சில.   வடமொழியில்  சிலபோது  'வகரம்'  'பகராக'  மாறும்.   வங்காள குடாக்கடல் Bay of "Bengal" எழுத்தின் வடிமமும் காண்க,  மிகச்சிறிதே மாற்றப்பட்டுள்ளது.  'व'  'ब' வயிற்றின் நடுவண் ஓர் கிடைக்கோடுமட்டும்.

    அதான்று,  ஓர்  பலபொருள்  அங்காடியில்  ஒரே  கூரையின்  கீழ் கிட்டுவதால்  அதற்கு  (காமதேனு,  சிந்தாமணி  போல்)  'விதான்'  எனவும்  பெயரிட்டுள்ளனர்.  
 படங்கள்: நன்றி இணையப் பக்கங்கள் 

________________________________________________________________________
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>

No comments:

Post a Comment