முன்னுரை:
பூனை - என்றதும் குறுகுறு மீசைமுடிகளுடன் கண்களைச் சுருக்கிக்கொண்டு மியாவ் என்று கத்தும் அந்த அழகிய குட்டி விலங்கினை யாருக்கும் நினைவு வராமல் இராது. இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து பாலைக் குடித்துவிடும் பூனை இப்போதெல்லாம் பகலிலும் அந்த வேலையைச் செய்கிறது. பாலுக்குக் காவல் பூனையா? என்று கேட்ட காலமெல்லாம் போய் இப்போது பூனைகளை வீட்டிலேயே செல்லமாக வளர்க்கிறார்கள். நாயினைப் போலவே பூனைக்கென்று தனிப்பட்ட உணவுவகைகளும் வந்துவிட்டன. நாயினைப் போலன்றி, வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் செல்ல விலங்கான பூனைகளைச் சங்க காலத்தில் தமிழர்கள் தங்கள் வீட்டில் வளர்த்தார்களா என்பதைப் பற்றியும் சங்க இலக்கியங்களில் பூனைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளையும் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
பூனை - பெயர்களும் காரணங்களும்:
பூனை என்னும் விலங்கினைக் குறிக்க வெருகு, வெருக்கு, பிள்ளை, பூசை ஆகிய பெயர்களே சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாம் தற்போது புழங்கிவரும் பெயரான பூனை என்ற பெயர் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது வியப்புக்குரியது. ! இவற்றுள்,
வெருகு, வெருக்கு ஆகிய பெயர்கள் இவ் விலங்கின் வெருவுதல் அதாவது அஞ்சுதல் பண்பினாலும்
பிள்ளை என்ற பெயர் குழந்தையைப் போல இரவில் ஓசையெழுப்பும் பண்பினாலும்
பூசை என்ற பெயர் பூப்போல பலமற்ற உடலினை உடையது என்ற பொருளிலும் ஏற்பட்டிருக்கலாம்.
பூசை என்னும் பெயரே பின்னாளில் பூஞை என்றும் பூனை என்றும் மருவியிருக்க வேண்டும். பல்வேறு இந்திய மொழிகளில் பூனைகளைக் குறிக்கும் பெயர்கள் சங்க இலக்கியத் தமிழ்ப் பெயர்களை ஒட்டியே அமைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தி - பில்லி - சங்க இலக்கியப் பெயரான பிள்ளை என்ற பெயரில் இருந்து மருவியது.
மலையாளம் - பூச்சா - சங்க இலக்கியப் பெயரான பூசை என்ற பெயரில் இருந்து மருவியது.
தெலுங்கு - பில்லி - சங்க இலக்கியப் பெயரான பிள்ளை என்ற பெயரில் இருந்து மருவியது.
கன்னடம் - பெக்கு - சங்க இலக்கியப் பெயரான வெருகு என்ற பெயரில் இருந்து மருவியது.
சங்க இலக்கியத்தில் பூனை:
சங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள பூனை காட்டுப்பூனை ஆகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த காட்டுப்பூனையின் விலங்கியல் பெயர் ஃபெலிஸ் சாவஸ் ( Felis chaus ) ஆகும். காடுகளில் மட்டுமின்றி காடுகளுக்கு அருகில் உள்ள ஊர்களிலும் இவை வசித்தன. காட்டுப்பூனையின் கடைவாயில் உள்ள கோரைப்பற்கள் நீண்டு கூரிதாய் இருந்ததாகவும் பார்ப்பதற்கு இவை முல்லைமலரின் கூரிய மொட்டுக்களைப் போலத் தோன்றியதாகவும் இலக்கியம் கூறுகிறது. காட்டுப்பூனையின் காலடி விரல்கள் குவிந்தநிலையில் இருந்ததாகவும் அது இலுப்பைப் பூவினைப் போலத் தோன்றியதென்றும் கூறப்பட்டுள்ளது. காட்டுப்பூனையின் கண்கள் இரவிலும் ஒளிரும் தன்மை கொண்டவை என்று கூறுகிறது. இரவு நேரங்களில் எலியினை வேட்டையாடி உண்ணும் காட்டுப்பூனையானது சில நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகளையும் வேட்டையாடிக் கொன்றுண்ட செய்திகள் கூறப்பட்டுள்ளன. காட்டுப்பூனையின் உடலில் பல நிறங்கள் உண்டென்றும் வரையப்பட்ட ஓவியம் போல அது இருந்ததாகவும் கூறுகிறது. காட்டுப்பூனையின் குட்டிகளின் உடலில் இருந்த மயிர் வெள்ளைநிறத்தில் புசுபுசுவென்று இலவம் பஞ்சு போல இருந்ததாகவும் தாயினைச் சுற்றி குட்டிகள் இருந்தபோது பார்ப்பதற்கு வானத்தில் நிலவினைச் சுற்றி விண்மீன்கள் இருந்ததைப் போலத் தோன்றியதாகவும் இலக்கியம் குறிப்பிடுகிறது. சங்ககாலத் தமிழர்களின் வீட்டில் பூனை வளர்க்கப்பட்டதாகச் செய்திகள் எதுவும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்படவில்லை.
சங்க இலக்கியத்தில் காட்டுப்பூனை குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களில் விரிவாகக் காணலாம்.
1. பூனையின் மயிர்
2. பூனையின் பல்
3. பூனையின் கண்கள்
4. பூனையின் காலடி
5. பூனையின் உணவு
6. பூனையும் குட்டிகளும்
1. பூனையின் மயிர்:
பூனையின் பல சிறப்பு அம்சங்களில் அதன் மயிரும் ஒன்று. புசுபுசுவென்று பஞ்சினைப் போல மென்மையான மயிர் அதன் உடல் முழுவதும் மூடியிருக்கும். பூனையை வளர்ப்பவர்கள் அடிக்கடி அதனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுவதற்கான காரணங்களில் பூனையின் மென்மயிரும் ஒன்று. பூனையின் உடல் மயிரில் பல நிறங்கள் உண்டு. உடல் முழுவதும் அழகிய வண்ணத்தில் நேர்த்தியான பல கோடுகளைக் கொண்டிருந்த ஒரு காட்டுப்பூனையானது பார்ப்பதற்கு வரையப்பட்ட ஒரு ஓவியம் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.
எழுதி அன்ன கொடி படு வெருகின் - அகம். 297
காட்டுப்பூனையின் குட்டிகளின் உடலில் புசுபுசுவென்று பொலிந்திருந்த மென்மையான வெண்ணிற மயிரினை இலவ மரத்தின் பஞ்சுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் அகப்பாடல்.
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை - அகம். 297
இப்பாடலில் வரும் பூளை என்பது இலவ மரத்தின் பஞ்சினைக் குறிக்கும்.
2. பூனையின் பல்:
பூனையின் வாய்க்குள் பார்த்தால், சிறிய கோரைப்பற்கள் சிலவற்றுடன் மேல்தாடையில் நீண்ட கோரைப்பற்கள் இரண்டும் கீழ்த்தாடையில் நீண்ட கோரைப்பற்கள் இரண்டும் இருக்கும். இரையினைக் கிழித்துச் சாப்பிட இந்த நீண்ட கோரைப்பற்கள் உதவுகிறது. வெண்ணிறத்தில் கூர்மையுடன் விளங்கும் இந்த நீண்ட கோரைப்பற்களுக்கு உவமையாக வெண்ணிறத்தில் பூத்திருக்கும் முல்லை மலரின் கூரிய மொட்டுகளைச் சங்கப் புலவர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர். அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு.240
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் - அகம். 391
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும் - புறம். 117
பூத்த முல்லை வெருகு சிரித்து அன்ன
பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த - குறு. 220
முல்லையின் மலராத கூரிய மொட்டுக்களைப் பார்த்த போதெல்லாம் புலவர்களுக்குப் பூனையின் கூரிய நீண்ட கோரைப்பற்களே நினைவுக்கு வந்ததனை மேற்பாடல் வரிகள் கூறாநிற்கின்றன. அருகில் உள்ள படத்தில் முல்லையின் கூரிய மலர் மொட்டும் பூனையின் நீண்ட கோரைப்பல்லும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
3. பூனையின் கண்கள்:
பூனையின் சிறப்பு அம்சமே அதன் கண்கள் தான். பூனையின் கண்கள் மற்றும் பார்வையினைப் பற்றி விக்கிப்பீடியா இவ்வாறு கூறுகிறது: " பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் என்ற இமைப்பானது கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. "
விக்கிப்பீடியா கூறுவதைப் போலவே நள்ளிரவு நேரத்திலும் பூனையின் கண்கள் ஒளிர்வதைக் கீழ்க்காணும் சங்கப்பாடலும் உறுதிசெய்கிறது.
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க - அகம். 73
இரவிலும் ஒளிவீசும் பூனையின் கண்களைப் போல ஒளிவீசுகின்ற பெரிய முத்துப் போன்ற கண்கள் இமைகளுக்கு இடையில் விளங்க .. என்பது மேற்பாடல் வரிகளின் பொருளாகும். இவ்வாறு புலவர் கூறுவதன் காரணம், தலைவனைச் சந்திக்கத் தலைவியானவள் நள்இரவு நேரத்திலும் புறப்படத் தயாராகி விட்டாள். தலைவனைச் சந்திக்கப் போகும் ஆவலினால் பூனையின் கண்களைப்போல அவளது முத்துப் போன்ற பெரிய கண்கள் இரவிலும் ஒளிர்கின்றனவாம். என்ன ஒரு உவமை !. இப்பாடலில் வரும் முலை என்பது மார்பகங்களைக் குறிக்காமல் கண்ணிமைகளைக் குறிக்கும். இதைப்பற்றி கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
மேற்பாடலைப் போலவே, எலிவேட்டை ஆடிய வேட்டுவச் சிறுவர்களின் கண்களும் ஆண் காட்டுப்பூனையின் கண்களைப் போல இருளில் ஒளிர்ந்ததாகக் கீழ்க்காணும் புறப்பாடல் கூறுவதைப் பாருங்கள்.
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
......... வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
...... பருத்தி வேலி கருப்பை பார்க்கும் - புறம். 324
4. பூனையின் காலடி:
பூனையின் காலடியானது விரிந்து பரந்திராமல் குவிந்தநிலையில் காணப்படும். நடக்கும்போது ஓசையேதும் கேட்காத வண்ணம் இருக்க இத்தகைய குவிந்த காலடி அமைப்பு உதவுகிறது. இதனால் பூனை தனது இரையினை மிக அருகில் நெருங்க முடிகிறது. பூனையின் காலடி விரல்கள் குவிந்திருப்பதைக் கூறும் சங்கப்பாடல் கீழே:
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை - அகம். 367
வீடுகளில் பூனை வளர்ப்பவர்கள் ஒரு பாதுகாப்பிற்காகப் பூனையின் கால்விரல் நகங்களை வெட்டிவிடுவர். ஆனால் காட்டுப்பூனையின் கால் விரல்கள் உருண்டு திரண்டு கூரிய நீண்ட நகங்களுடன் காணப்படும். இவை பார்ப்பதற்கு நீண்ட கூரிய மருப்புடன் கூடிய இலுப்பைப்பூவின் குவிந்த மலர் மொட்டுக்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.
வெருக்கு அடி அன்ன குவிமுகிழ் இருப்பை - அகம். 267
அருகில் உள்ள படத்தில் பூனையின் காலடித்தடமும் இலுப்பைப் பூவின் வடிவமும் ஒப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது.
5. பூனையின் உணவு:
காட்டுப்பூனையின் முதன்மை உணவுகளாகக் குழிமுயல், எலி போன்ற சிறு விலங்குகளை விக்கிப்பீடியா கூறுகிறது. விக்கிப்பீடியா கூறுவதைப் போலவே கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலும் நள்ளிரவில் பூனையானது வீட்டில் திரியும் எலியினை வேட்டையாடி உண்பதைப் பற்றிக் கூறுகிறது.
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு - குறு.107
காடுகளில் குழிமுயல், எலி போன்றவை கிடைக்காதபோது காட்டுப்பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படும் சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளை வேட்டையாடிக் கொன்றுண்ணும். காதலி ஒருத்தி தனது காதலனுடன் இரவில் சேர்ந்து மகிழ்ந்திருக்கும்போது திடீரென்று கூவித் துயில் எழுப்பிய சேவலுக்கு " காட்டுப்பூனையின் வாய்ப்பட்டு ஒழிவாயாக " என்று சாபம் விடுவதாகக் கீழ்க்காணும் பாடல் அமைந்துள்ளது.
தொகு செம் நெற்றி கணம்கொள் சேவல்
..... பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி
..... யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே - குறு.107
காட்டுப்பூனை ஒன்று வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல்கோழியைக் கொன்றுண்ண, அது கண்மூடி அயரும் வேளையினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்சியினை கீழ்க்காணும் அகப்பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவருகிறது.
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் - அகம். 367
வேங்கை மரத்தருகில் வரகின் கதிர்கள் பெரும் போராகக் குவித்து வைக்கப்பட்டிருக்க, அதன் பின்னால் இருந்தவாறு குவிந்த அடிகளை உடைய ஆண் காட்டுப்பூனையானது, தனது பெண் துணையின் பசியினைப் போக்குவதற்காக, முருக்கம்பூப் போன்ற உச்சிக்கொண்டையினை உடைய சேவல் கோழியானது கண் அயரும் வேளையினை எதிர்நோக்கிக் காத்திருந்ததாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.
சங்ககாலத் தமிழர்கள் தமது வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் கோழி மற்றும் பெட்டைக் கோழிகளைக் காட்டுப்பூனைகள் தாக்கிக் கொல்லாதிருக்கச் சுற்றிலும் வேலி அமைத்திருந்தனர். ஆனால் காட்டுப்பூனைகள் இரவு நேரத்தில் இந்த வேலிகளின் மேலிருந்தவாறு கோழிகளை நோட்டம் விட்டு வேட்டையாடின. இதனால் இவற்றை 'வேலி வெருகு' என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப்பற்றிய ஒருசில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மனை உறை கோழி குறும் கால் பேடை
வேலி வெருகு இனம் மாலை உற்று என - குறு. 139
ஊர் முது வேலிப் பார்நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை - புறம். 326
6. பூனையும் குட்டிகளும்:
பெரிய பூனையைக் காட்டிலும் அதன் குட்டிகள் தான் மிக அழகாக இருக்கும். வீட்டுப்பூனையோ காட்டுப்பூனையோ எதுவானாலும் தாய்ப்பூனைக்கும் அதன் குட்டிகளுக்கும் இடையிலான பாசம் அதிகம். பல சமயங்களில் தனது சிறிய குட்டியினைப் பூனைத் தன் வாயினால் கவ்வியவாறு தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். தாய்ப்பூனை எங்கு சென்றாலும் அதன் பின்னாலேயே அதன் குட்டிகள் தொடர்ந்து செல்லும். இதனை ஒரு அழகான உவமையுடன் கீழ்க்காணும் பாடலில் புலவர் கூறுவதைப் பாருங்கள்.
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் - அகம். 297
காட்டுப்பூனையின் குட்டிகள் தன் தாயினைச் சூழ்ந்தநிலையில் இருந்ததனை வானத்தில் விண்மீன்கள் நிலவினைச் சூழ்ந்து இருந்ததனைப் போலத் தோன்றியதாக மேற்பாடலில் கூறுகிறார் புலவர். இதிலிருந்து, அந்தக் காட்டுப்பூனை மற்றும் குட்டிகளின் உடலில் வெண்மை நிறம் மிக்கிருந்ததனை அறியமுடிகிறது.
முடிவுரை:
சங்க இலக்கியங்களில் காட்டுப்பூனைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளைக் கண்டோம். சங்ககாலத் தமிழர்கள் வீடுகளில் பூனை வளர்க்கவில்லை என்றே தெரிகிறது. அப்படி வளர்த்திருந்தால் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, நாய், கோழிகளைப் பற்றிக் கூறியதைப்போல வீட்டுப்பூனைகளைப் பற்றியும் பதிவுசெய்திருப்பர். ஆனால் காலம் மாறமாற தமிழர்களுக்குத் தமது வீடுகளிலும் பூனைகளை வளர்க்கவேண்டிய தேவை ஏற்பட்டது. காரணம், அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த நெல் முதலான தினைகளை எலிகளும் பெருச்சாளிகளும் கவர்ந்து சென்றுண்டன. இவற்றைக் கொல்வதற்காகவே வீடுகளில் பூனைகளை வளர்க்கலாயினர். ஆனால் வளர்ப்புப் பூனைகளுக்கும் காட்டுப்பூனைகளுக்கும் குணவேறுபாடுகள் உண்டு; இரண்டின் விலங்கியல் பெயரும் வேறுவேறு. வீட்டுப்பூனைகள் எலிகளையும் பெருச்சாளிகளையும் வேட்டையாடியதே ஒழிய வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளைத் தாக்காமல் நட்புடன் பழகத் துவங்கின. இப்படியாக மனித சமுதாயத்துடன் பூனைகள் இயைந்து வாழ்ந்த நிலையில், பூனை தொடர்பாகப் பல பழமொழிகளும் உருவாயின. " ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம் " என்பது அவற்றுள் ஒன்று.
________________________________________________________________________
தொடர்பு:
திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html
No comments:
Post a Comment