Sunday, February 18, 2018

யாளி

——   இராம.கி.

"யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்களுடையதா? தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா?" என்றதொரு கேள்வி சொல்லாய்வுக்குழுவில் கேட்கப்படுவது.  இக்கேள்வி ஆழமானது. இதற்கு நீளமாகத்தான் விடையளிக்கமுடியும்.

யாளி, முதற்சொல்லல்ல. ஆளியே முதல். ஆளல்/ஆள்தல் என்பது அதிகாரங் குறிக்கும் வினை. ஆட்சி, ஆட்டம், ஆடலென 100க்கும் மேற்பட்ட சொற்களை ஆல்>ஆள் என்றவேர் உருவாக்கும். நிலத்தை, வித்தையை ஆள்பவன் ஆளன்/ஆளி. பரி 8-64 இல் முருகனையே கூட ஆளியென்பார். இன்னொரு வகையில் ஆளி என்பது தோழி, மனைவியைக் குறிக்கும். நிலத்தலைவன் ஆளியானது போல் காடாளுஞ் சிங்கமும் ஆளியானது. ஆழ்ந்து பார்க்கின், விலங்குலகில் அரசனுக்கு இணைச்சொல் ஆளியே. யானையளவிற்குப் பெருவிலங்கையும் அடித்துண்ணும் வலிகொண்ட சிங்கம் காட்டை ஆள்வதாய் இந்தியப்புரிதலில் ஒரு தொன்மமுண்டு.

இன்று கூர்ச்சரம் போன்ற இடங்களில் மட்டும் சிங்கம் வதிந்தாலும், சங்ககாலத்தில் நம்மூரிலுமுண்டு. (அரி, ஆளி, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல பெயர்களில் சிங்கம் சங்கநூல்களிற் பேசப்படும்). சிங்கம் என்றசொல் சங்கநூல்களில் இல்லைதான். ஆனால் சங்கநூலிற் பழகாது மக்களிடை காலங்காலமாய்ப் புழங்கிவந்த தமிழ்ச்சொற்கள் மிகப்பல. சங்கநூற்களை நான் அகரமுதலிகள்போல் என்றுங் கருதியதில்லை. அக்காலத் தமிழின் ஒருபகுதியை மட்டுமே அவை பதிவுசெய்தன. அவ்வளவு தான். புலி மட்டுமே தமிழர் விலங்கு, சிங்கம் நமக்கு அயலென அறியாமையிற் கதைகட்டுவதையும் நான் ஏற்பதில்லை. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குப் பரம்பலை, இன்றுபோற் கருதுவது சரியல்ல. சிங்கங் குறித்து ஒருசேரப் புழங்கிய யாளி, ஆளியின் சங்கச் சொல்லாட்சிகளை இங்கு கீழே விவரிக்கிறேன். முதலில் நாம் காணப்போவது பெரும்பாணாற்றுப்படை 258-260 வரிகளில் வரும் யாளி.

[ஓர் இடைவிலகல். . .  ’முக’வெனும் தமிழ்ச்சொல்லிடை வழக்கம்போல் ரகரம்நுழைத்து ம்ருகவெனும் சங்கதச்சொல் கிளைக்கும். முக>ம்ருக>மிருக. அதை மீளக் கடன்வாங்கி மிருகமெனத் தமிழிற்பயிலாது, முக>மக>மா என்ற தமிழ்ச்சொல்லையே பயிலலாம். காண்க முகன்>மகன்>மான்; முகள்>மகள்>மாள். ஆளிக்கு இன்னும்வேறு பொருட்பாடுகளுண்டு. குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது linseed ஐக் குறிக்கும் ஆளிவிதை. ஆளிநெய் நம்மூரில் இல்லாவிடினும், குளிர்நாடுகளில் அது பெரிது. ஆளிநாரிற் செய்த ஆளித்துகிலும் (linen), எகிப்தியன், சுமேரியன், பாபிலோனியன், கிரேக்கம் போன்ற விடங்களில் பெரிது. நம்மூர் பருத்திக்கு மாற்றாய் பட்டோடு ஆளியும் பழந்தமிழகத்தில் இறக்குமதியானது.]
பாட்டிற்கு வருவோம்.

அணங்குடை யாளி தாக்கலின் பலஉடன்
கணம்சால் வேழம் கதவுற்றா அங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை

இப்பாடல் வரிகள் ”யானைக்கூட்டத்தில் இருந்தவொரு யானைமேல் மீவிலங்கு மூர்க்கமாய்த் தாவிப்பாயுஞ் சிங்கங் (”அணங்குடை யாளி”) கண்டு அச்சுற்று விரைந்தோடும் யானைகள் போல் கரும்புச் சாறுபிழி எந்திரங்கள் விரைந்தசைந்து என்றுங் குறையாத ஓசையை எழுப்புகின்றனவாம். யாளிகள் தாக்க முடிவுசெய்தால், அணங்கு தம்மேல் ஏறியதுபோல் எழுச்சியுற்று இரைகளின்மேற் பாயுமென்பது இங்கு சொல்லப்படும் செய்தி. அதென்ன, “அணங்குடை யாளி” ?  அணங்குக் கருத்தீட்டைப் புரிந்துகொள்வதில் பல தமிழறிஞர் தடுமாறியுள்ளார். பெண்முலைக் காம்பில் அணங்கு இறங்குகிறதென்று கூடத் தவறாகப் பொருள்சொல்வார். நானறிந்தவரை, அணங்கைச் சரியாக, விரிவாக விளக்கியவர் முனைவர் வி.எஸ்.ராஜம் மட்டுமே.

நம் வாயுள் மேலிருப்பது அண்ணம். நமக்கு மேல்/முன் இருப்பவன் அண்ணன். அண்ணுதல்/அணங்குதலுக்கு மேலேறுதலென்று பொருள். ஆழ்ந்துபார்த்தால் ”அங்கு” எனும் ஈற்றில்முடியும் தமிழ்ச்சொற்கள் கணக்கற்றவை. ”சுரம்” பற்றிச் சொல்லாத பாலைப்பாட்டுக்களே இல்லை (153 குறிப்புகள் சங்கநூல்களில் உண்டு, சங்கப்பாட்டுகளில் 50% க்கும் மேலானவை பாலைப்பாட்டுக்களே.) சுரங்கம் தமிழ்ச்சொல்லென நொதுமலாருக்கு உறுதியாகச் சொல்லலாம். அணங்கும் அதுபோன்ற ஈறு கொண்டதே. அணங்கு பற்றிய 150 குறிப்புகளாவது சங்கநூல்களிற் காணலாம்.

சிலகுறிப்பிட்ட நேரங்களில் மனம்பேதலித்து, தன்னையே (கும்பிடும் சாமி, அல்லது ஏற்கனவே இறந்த யாரோவொரு முன்னவரென) வேற்றாளாய்க்கருதி பேசவும் செயற்படவும் ஒருவர் தொடங்கினால், “என்னவாச்சு இவருக்கு? சாமிகீமி வந்துருச்சா?” என்கிறோமில்லையா? இக்கால உளவியலில் இதை மீமாந்த நிலையென்றும், schizopherenic state களில் ஒன்றென்றும் சொல்வார். நம் ஆன்மாவிற்கு மேல் இன்னோர் ஆன்மா ஏறியதாய் உணரப்படும் இந்நிலையை நாட்டுப்புறங்களில் (குறிப்பாகச் சிவகங்கைச்சீமையில்) ”சாமி வந்தது” என்பார். தென்பாண்டி நாட்டில் இது வழமை. முருகனுக்குக் காவடி எடுத்துப்போகிறாரே? செடிலில் தொங்குகிறாரே? ஐயனார்கோயில், அம்மன்கோயில் விழாக்களில், பூக்குழி நெருப்பின்மேல் நடக்கிறாரே அதெல்லாம் இந்தச் சாமிவந்த நிலையில் நடப்பது தான். (இவற்றை அறிவியல் பார்வையில் காண்பதும், படியாதார் பார்வையில் காண்பதும் அவரவர் உகப்பு.)

திருவிழாக்களிலும், முன்னோர்க்குப் படைக்கையிலுங் கூடச், ”சாமி வருவது” நடக்கும். இன்னார்க்கு மட்டுமே சாமி வரும் என்றில்லை. நிகழ்விற் கூடிய இருபாலரில் யாரோ ஒருவர் நிகழ்ச்சியோடு ஒன்றி, மீமாந்த உள உந்தலில், மறைந்த முன்னோர் பேசுவது போலோ, தொழப்படும் சாமியே வந்தது போலோ செயற்படத் தொடங்குவதைப் பலமுறை கண்டிருப்போம். அப்போது “சாமி வந்திருச்சு;” என்றுசொல்லி பொதுமக்கள் நாடு, குமுகம், குடும்பமென எதிர்காலம் பற்றிக் குறிகேட்பார். குறிநடக்குமா, நடவாதா என்பது வேறுகதை. இன்றைக்குநாம் “சாமி” என்பதையே சங்ககாலத்தில் “அணங்கு இறங்கியதாய்ச்” சொன்னார். அணங்கு என்றசொல் தான் வழக்கில் மறைந்தது. 2000 ஆண்டுப் பழக்கம் இன்றும் நம் வாழ்வில் நீடிக்கிறது. அணங்கென்பது மாந்தர்மேல் மட்டுமின்றி, விலங்குகள்மேலும் ஏறலாமென்பது சங்ககால நம்பிக்கை. அப்படித்தான், “அணங்குடை யாளி” என்ற சொல்லாட்சி பிறந்தது.இன்றுவரை நம்மூர்க் கோயில்களிலுள்ள யாளிச்சிற்பங்கள் பாய்ந்துதாக்கும் பொதிரையே (posture) பெரிதுங் காட்டும். அணங்கை உணர்த்த, யாளிச் சிலைகளின் வாயிலிருந்து முறுக்கிய தண்டொன்று வெளிவருவதாய்க் காட்டுவர். அதைப்பலரும் யானைத்துதிக்கையோடு ஒப்பிடுவர். உருவகம் புரியாச் சிற்பிகள் அதைத் துதிக்கையாக மாற்றியதுமுண்டு. (ஆனால் உண்மை மாறாது. பழஞ்சிற்பங்களிலும் வெவ்வேறு சிற்பப்பள்ளிகளுண்டு. ஒருபள்ளியின் விதப்பை முழுச் சிற்பக்கலைக்கும் பொதுமையாக்க முடியாது. தமிழர்மனத்தை ஆட்கொண்ட உறுப்பு துதிக்கையாகும். பிள்ளையார்மேல் நாம்கொள்ளும் ஈர்ப்பும் துதிக்கையாற்றான் வந்தது.) ”வாயில் வெளிவருந் தண்டு” என்பது ஒருவித மீமாந்த உள்ளமையை (surrealistic) சிற்ப வழி உணர்த்தும் உத்தி. தண்டு என்பது யாளியோடு சேர்ந்த உள்ளமை (realstic) உறுப்பில்லை. தண்டை/துதிக்கையை ஒதுக்கின், யாளி, கற்பனையுருவுமல்ல. அடிப்படையில் அதுவொரு பாயுஞ்சிங்கம்.   

இதுபோன்ற கலையுத்திகள் இன்றுங்கூட மீமாந்த உள்ளமைகொண்ட வண்ணப்படங்களிலும் சிற்பங்களிலும் (surrealistic paintings/scluptures) வெளிப்படும். முகனப் (நவீன/modern) படங்களில் உணர்வு வெளிப்படுத்த படத்தில்வரும் உருக்களைச் சிதைப்பதும், இல்லாத அலங்காரங்களை ஏற்றுவதுமுண்டு. காட்டாக விகடன் நிறுவனம் வெளியிடும் ”தடம்” இதழில் கதைப்பட மாந்தரின் கழுத்து பெரிதும் நீட்டிக் காட்டப்படும். அதன்வழி பேசும்மாந்தரை ஓவியர் உணர்த்துகிறாராம். நாளைக்கு இந்தப் படங்கள் 100 ஆண்டுகள் கழித்துக்கிடைத்தால், தமிழர் நீண்டகழுத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லி விடுவோமா? என்ன மடத்தனம்? கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் புரிந்துகொள்ள வேண்டாமா? உள்ளமையை அப்படியே அச்செடுக்கும் கலைக்கு மாறாய், உணர்வுகளை வெளிக் கொணரும் உத்திகள் எல்லாக்காலமும் இருந்துள்ளன. நம்மூர்க்கோயில் யாளிச்சிற்பங்களின் வாய்களிலும் இதுவுண்டு. யாளியின் கொடுரத்தை வெளிப்படுத்தத் தண்டு அடையாளமானது. சீனத்து நீர்ப்பாம்பின் வழி 'திராகன்' எனும் விலங்கை உருவகிக்கையில் இதேபோல் வாயில் நெருப்பு வெளிவருவதாய்ப் படங்களிலும் சிற்பங்களிலுங் காட்டுவர். அந்நெருப்பும், யாளித்தண்டும் மூர்க்க உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வு வெளிப்பாட்டையும், உள்ளமை உறுப்பையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. Art appeciation என்பது ஒரு திறமை. அடுத்து பொருநராற்றுப்படை 139-142 வரிகளைப் பார்ப்போம்.

ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலைகோள் வேட்டம் களிறு அட்டாஅங்கு

சில்= நுண்ணிய துண்டு. இது இழை, மயிராகவும் இருக்கலாம். சிலிர்த்தல் = துளிர்த்தல். மயிர் துளிர்ப்பதும் சிலிர்த்தலே. உடம்பு சிலிர்த்தல் = மயிர்க்கூச்செறிதல். சில்>சில்கு>சிலுக்கு= துளையிற் புகுதல், மாட்டிக் கொள்ளுதல். சிலுக்கு>சிக்கு = எளிதில் சீவமுடியா, தாறுமாறாய் மாட்டிய கேசம். இதற்கு குடுமியும். உச்சிப்பொருளும் சொல்வர். சிக்கு>சிக்கை>சிகை. சிக்கு>சிங்கு>சிங்கம் = சிகையுள்ள ஆண்விலங்கு. இதுவே சிங்கம்>சிம்ஹ என வடக்கே சொல்லப்பெறும். சிகையால் மதர்ப்புத் தோற்றங் கிடைப்பதாய் இந்தியத் துணைக்கண்டத்தில் பலருங் கருதுவர். சிங்கமே இன்று பொதுப்பெயர்.

சங்ககாலத்தில் அரி/ஆளி. நன்= நளினம். நங்கை= பெண். நன்மான்= பெண்விலங்கு. ஆளி நன்மான்= பெண்சிங்கம். ”ஆளி நன்மான் அணங்குடைக் குருளை” = தாயின் அருகுள்ள சிங்கக்குட்டி. குருளை (girl என்ற இந்தையிரோப்பியன் சொல் இதற்கிணை)= குட்டி (விதப்பாகப் பெண்குட்டி). இங்கு புனிற்றிளங் கரிகாலனுக்கு உவமை சொல்வதால் குருளை சிறுவனைக் குறிக்கிறது. 

”பால்குடிமாறா மாத்திரத்து அணங்குடைக் குருளை, தன் பெருமைமிக்க தோளில் மிகுவலிசெருக்கித் தன் முதல்வேட்டையிற் களிற்றையடித்தது போன்ற” காட்சி இங்கே விவரிக்கப்படுகிறது. இச்சிங்கம் போல் இளமைமாறாக் கரிகாலன் களிறுபோன்ற தம்முறவுப் பகைவர்மேற் பாய்ந்தானாம். இங்கும் ஆளி என்பது உள்ளமை விலங்கே. கற்பனையல்ல. அடுத்தது ஆரியவரசன் பிரமதத்தனுக்குச் (இவன் மகத அரசனென்றே நான் எண்ணுகிறேன். வேறிடத்தில் பேசவேண்டும்) சொன்ன குறிஞ்சிப்பாட்டு 252-253 ஆம் வரிகள்.
 
அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்

இதில் கொலைவெறி மிகுந்த புலியும், ஆளியும், உளியமும் (கரடியும்), துளைக்கொம்பு கொண்ட காட்டுமாடுகளின் ஆணும், ஆண்யானையும் பேசப்படுகின்றன. இயல்விலங்குகளோடு ஓர் கற்பனை விலங்கு சேர்த்துப் பேசப்படுமா? கபிலர் போன்ற பெரும்புலவர் அத்தகைய தவற்றைச் செய்வாரோ? எனவே ஆளி என்றசொல் இந்தியாவில் தசையும், எலும்புமான உள்ளமை விலங்கே. இனி நற்றிணை 205, 1-5 வரிகளைப் பார்ப்போம்.

அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து
ஆளி நன்மான், வேட்டுஎழு கோள்உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய, வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு, வயக்களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய்,

”அருவி ஓசையெழும் பெருங்குன்றின் அடுக்கத்தில் வேட்டையில் போட்டிக்குவந்த கொள்நகம்கொண்ட, உடம்பெலாம் பூப்போல் புள்ளிகொண்ட சிறுத்தையை அங்கிருந்து தொலைத்த ஆளிநன்மான்.
 தானடித்துக்கொன்ற, கூர்த்தந்தங்களுடைய வலியயானையை இழுத்துப்போகும் அருமையான காடு” என்பது இதன்பொருள். பூம்பொறி உழுவை, இங்கு சிறுத்தையைக் குறிக்கும். யானைவேட்டையில் சிறுத்தைக்கும் ஆளிக்கும் இங்கே போட்டி நடந்திருக்கிறது. சிறுத்தையை விரட்டி, யானையைக் கொன்று, உணவாயிழுத்துப் போனது கற்பனையா? உண்மை விவரிப்பா? இன்னுமா இதில் ஐயம்? ஆளி என்பது ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால் சிங்கமே. (அந்த மரத்தில் பேயிருக்கிறது, இந்த மரத்தில் பூதமிருக்கிறது என்போருக்கே கற்பனை விலங்குகள் உதிக்கும். அடுத்தது அகம் 78, 1-6 வரிகள். . .

நனந்தலை கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ்கிளர் முன்பின்
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய்புகு, கடாத்து
பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்
இரும்பிணர்த் தடக்கையில் ஏமுறத் தழுவ
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்

”நிறைசூலியான பெண்யானை அகன்றகாட்டில் ஆளியையஞ்சி, தன்கூட்டத்தை நாடிவந்து தழுவ, வண்டுகள்சுற்றி ஓசையெழுப்ப, மதநீர்சொட்ட, புள்ளிமிகுநெற்றி பொலிந்திருக்க, வலிமிகுத்ததால் முன்னும்பின்னும் அசைந்தபடியிருக்கும் வயக்களிற்று ஒருத்தல் தன் கருங்கோங்கிலவு மரம்போன்ற துதிக்கையால் ஏமமுறும்படி அணைக்கும், சாரல்” என்பது இதன்பொருள். ஒருத்தல் = கூட்டத்தில் தனித்துச் செம்மாந்துதெரியும் விலங்கு. இங்கு ஆண்யானை. ஏமம்= safety. ஆளிகண்டு அஞ்சிய நிறைசூலியானையை ஏமத்திற்காக வயக்களிற்று ஒருத்தல் தழுவுகிறது. அதன்பின்னும் பெண்யானை நடுங்குகிறது. இதுவும் ஓர் இயற்கைவிவரிப்பே. இதில் கற்பனையாளி எங்குவந்தது? யானையைச் சிங்கமடிப்பதும், கொல்வதுமே குறிப்பால் உணர்த்தப்படுகிறது. அடுத்தது அகம் 252, 1-4 வரிகள். 

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும்

புலிபற்றிய ஓர் அவதானம் தமிழகத்திலுண்டு. புலி எப்போதும் தனக்கு வலப்பக்கத்து இரையையே பாய்ந்தடிக்குமாம். இடப்பக்க இரையை அடிக்காதாம். அப்படி அடிக்கவேண்டுமெனில் சுற்றிவந்தே செய்யுமாம். அச்செய்தியே இங்குமேலே சொல்லப்படுகிறது. (இதைப்போய் துணுச்சாரை (dinasaur), அது இது என்று சிலர் சொல்வது அறிவியலில் ஆழாத பேச்சு. துணுச்சாரைகளின் காலத்தில் மாந்தருங் கிடையாது, தமிழுங் கிடையாது. அவற்றின் மிச்சசொச்சம் தான் இன்றுள்ள பறவைகள். உடலியல் தெரிந்தோர் இதற்கு விளக்கந்தரலாம். தமிழார்வலர் சற்று நிதானத்தோடு, விளக்கங்களைக் கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.) படுத்தல்= அடித்தல் “இடம்படுப்பை அறியாத, வலம்படு வேட்டையை விரும்பும், வரிப்புலி நடுங்கும்படி உள்வந்து, உயர்நெற்றி கொண்ட யானையின் புள்ளிமுகத்தில் ஆளியடித்து வெண்தந்தத்தைப் பிய்க்குமாம்:” இந்த வரிகளில் வருவதும் ஓர் இயல்விவரிப்பே. ஆளி என்பது ஒரு கற்பனை விலங்கல்ல. கற்பனை சிலரின் மனத்திலுள்ளது. பொதுவாகச் சங்கநூல்களில் மீமாந்த/மீவிலங்குக் கற்பனை என்பது மிகக்குறைவு. (பிற்காலக் கற்பனைகளை முற்காலத்திற் செலுத்துவது சரியல்ல.) அடுத்தது அகம் 381- 1-4   

ஆளி நல்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப.
ஏந்தல் வெண்கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்,

”தனித்துச் செம்மாந்துவரும் அணங்குடைய பெண்சிங்கம், குட்டியானையைக் கொன்று அதன் முளைத்தந்தம் விலக்கி, சதையுண்ணுவது கண்டு, நெடுந்தளர்ச்சியோடிருக்கும் வலியபெண்யானை புலம்பி நிற்பதைக்கண்டு யாருக்கும் அச்சம்வரும்படி அவ்விடம் இருந்ததாம்.” ஒரு தாயின் குட்டியை இன்னொரு தனிப்பெண் சாப்பிடுகிறாள். இது கொடிய இயற்கை. ஆனால் கற்பனையல்ல. யாளியைக் கற்பனை விலங்கென்போர், எவ்வளவு பெரிய கொடுமையையும் ஒருமாதிரி sanitize செய்துவிடுகிறார். தாமரையிலைத் தண்ணீராய் எவ்வுணர்வும் நம்மைப் பாதிக்காது நாமும் படித்து நகர்கிறோம். சிங்கமென ஆளியை நகமுஞ் சதையுமாய் உணர்ந்தாற்றான் நமக்கது உறுத்துகிறது. அடுத்தது புறம் 207, 6-9 வரிகள்.

மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்ளவிந்து அடங்காது வெள்ளென
நோவாதோன் வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே

”தானேகனியாத காயின்பொருட்டு, உள்ளவிந்து அடங்காது, நம்மேல் வெளிப்பட இரங்காதவனிடம் நின்றுதிரங்கி, வலியவிலங்கின் முன்பின் அசையும் ஆளிபோல், உலமருகலாமோ?” என்பது இதன் பொருள். ”கனியாத விலங்கின் தசைவேண்டிச் சிங்கம்தான் சுற்றிச்சுற்றிவரும். தானே கனியாதவனிடம் நாம் வேண்டிநிற்கலாமோ?”. என்பது இங்கே புலவரின் குறிப்பு. இதைப் படித்தபிறகுமா ஆளி ஒரு கற்பனை விலங்கென்போம்?

இதேபோல் சிலப்பதிகாரம் காட்சிக்காதையில் “ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்” என 48 ஆம் வரியில் வருவதும் சிங்கமே. ஆளியின் அணங்கென்பது பெண்சிங்கக் குட்டி, அரியின் குருளை என்பது ஆண்சிங்கக் குட்டி சில உரையாசிரியர் நினைப்பதுபோல் இங்குவரும் ஆளி கற்பனை விலங்கல்ல. அப்படிச் சிலர் கருதுவது இடைக்காலத்து வந்த சங்கத ஊடாட்டத்தாலாகும். தமிழில் இருப்பதையெல்லாம் சங்கதவழி வந்ததாய்ச் சொல்லும் போக்கு.

அடுத்து வேட்டுவவரியில் வெட்சிப்புறநடைப்பாட்டின் ”கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும்போலும்” என்ற 4 ஆம் வரிக்கு “ஆளிக்கொடி உயர்த்துங் கொற்றவை” என அடியார்க்கு நல்லார் பொருள்சொல்வார். கொற்றவைக்குச் சிங்கக்கொடியையே நம்மூரில் கற்பிப்பார். சிங்கந்தான் அவளுக்கான வையம். (= wagon, வாகனம்; அகராதிகளில், சிலம்பில் பயனுற்ற இந்த ’வையம்’ எனும் நற்றமிழ்ச்சொல்லை அருள்கூர்ந்து பயனுறுத்துங்கள். மீண்டும் மீண்டும் ’வாகனம்’ வேண்டுமா)? (ஆளிபோக ஆளரி என்றசொல் ஆண்சிங்கத்தையும், கூடவே நரசிம்மனையும் குறிக்க நாலாயிரப் பனுவலில் பயன்படும். ’கோளரி’ என்பது சிங்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்வர்.)

சங்க இலக்கியங்கள் போக திருக்கோவையார், இறையனார் அகப்பொருளுரை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், நக்கீரதேவரின் பதினோறாந் திருமுறை, பெரியபுராணம், திருக்குற்றாலத் தலபுராணம் எனப் பல்வேறு நூல்களிலிருந்தும் சான்றுகாட்டலாம். நான் புரிந்துகொண்டவரை இவை எல்லாவற்றிலும் சிங்கப்பொருளேயுண்டு. உரைகாரர்சொல்வதால் மட்டுமே அவற்றைக் கற்பனை விலங்குகளாய்ச் சொல்லமுடியாது. மூலங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பாடல்களுக்குப் பொருள் சொல்வதில் உரைகாரர் பங்கு பெரிதெனினும், அவர் சொல்வதை அப்படியே ஏற்கத் தேவையில்லை. மூலத்தின் ஒத்திசைவு பார்த்து ஏற்கலாம். இக்கால அறிவியல், நுட்பியல் செய்திகளோடு கொஞ்சமாவது பொருத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திற்குமாய் ஒரு புனைவு இருக்காதா, என்ன?

படித்துப் பார்த்தால், சங்ககாலப் புனைவென்பது குறைந்த அளவோடிருக்கும். இடைக்கால, இக்காலப் புனைவுகளோ தறிகெட்டுப் பறக்கும். (நாகரிகம் வளர, வளரக் கற்பனை கூடுவது எங்கும் இயல்பு.) வேண்டுமானால், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூருக்கு வாருங்கள். அங்குள்ள பெருத்தங்கா (ப்ரத்யங்க்ரா-கொற்றவை. சங்கத ரகர, யகர, வகர நுழைவுகளால் நாம் தடுமாற, நம்சொற்களே நமக்குப் புரியாதபடி மாயங் காட்டும். இங்கே திருமாலின் தங்கையே கோயில் மூலத்தி) கோயிலில் நாம் நினைத்துப்பார்க்காத அளவிற்குப் புதுப்புனைவுத் திருமேனிகளைச் செய்துவைத்திருப்பார். குறி சொல்வதும் அங்கு நடைபெறும். நாளெலாம் கவலும் இற்றைமாந்தர் “எத்தைத் தின்றால் பித்தந் தெளியும்?” என்றலைவதால், கூட்டமங்கு நிரம்பிவழியும். ”அந்த யாகம், இந்த யாகம்”என விதவிதமாய் நடைபெறும். இதையெலாம், 1000/2000 ஆண்டுகளுக்கு முந்தையக் கதைகளென்று சொல்லிவிட முடியுமா? புதுப்புதுப் புனைவுகள். வெளிப்பாடுகள்.

இன்றுதானே வியந்தகைப் (fantasy) படங்கள் நம்மூரில் பெருத்துப்போயின? மக்களை வியக்கவைக்க தோட்டாத்தரணிகள், சாபுசிரில்கள், எந்திரன்கள், பாகுபலிகள், ஆன்மேற்றங்கள் (animation), வரைகலை (graphics) முயற்சிகள், நகர்வுக்கட்டுகை (Motion capture). என்னதான் இல்லை இந்தக்காலத்தில்? விதம்விதமான நுட்பமுயற்சிகள் எழயெழ, வியந்தைக்கதைகள் நம்மிடை கூடத்தானே செய்யும்? ஆரி பார்ட்டார் போன்ற புதினங்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி எல்லாமொழிகளிலும் கூடிவருகின்றனவே? புதினங்களைச் செய்வதிலும் மாகை உள்ளமை (magical realism) என்ற புதுமுயற்சி கூடுகிறதே? புதினங்களின் போக்கிலும் கற்பனை கூடுகிறதே?. 8000-22000-100000 என்று சொலவம் பெருகிய மாபாரதம் 1500 ஆண்டுகளில் பெருவளர்ச்சி கண்டதல்லவா?. இன்றோ ”வெண்முரசு” என்றபெயரில் செயமோகன் 16 நூல்களை எழுதுகிறார். முடிக்கும்போது எத்தனை நூல்கள் எழுதுவாரோ? மொத்தத்தில் மாபாரதப் புனைவு அனுமார் வால்போல் வளர்ந்துகொண்டே போகிறது.

ஆளிப் புனைவும் அப்படித்தான். சிங்கம்> (சிங்கம்+யானை) > (சிங்கம்+யானை+நாகம்) > (சிங்கம்+யானை+நாகம்+அரசாளி) என்று விரிந்துகொண்டே போகிறது. கற்பனைக்கு அளவென்ன? இவற்றையும் யாரோவொருவன் கதையெழுதுவான், படமெழுதுவான்; சிலைவடிப்பான். அவற்றைப்பற்றி நம் கொள்ளு/எள்ளுப் பேரன்/பேத்திகளும் பேசிக்கொண்டிருப்பார்.

நான் சொல்லவந்தது மிக எளிது. யாளியின் தொடக்கம் இயற்கை சார்ந்தது. பின் கூடியது கற்பனை வளம். இதில் தமிழரசர்/தெலுங்கரசர் என்பதெல்லாம் முகன்மையில்லை. சங்கத ஊடாட்டம் கூடியதும், புராணப்புளுகு கூடியதுந்தான் காரணம்.

அரசாளி (=வல்லூறு)  பேரரசுக் காலத்தில் அரசக்குறியீடாய் மாறியது. (இற்றை அமெரிக்க அரசின் குறியீடும் அதுவே.) ஆலுங் காரணத்தால் அது எழவில்லை. (ஆலல்= சுற்றல்; ஆலா= சுற்றிச் சுற்றிவரும் கடற்பறவை) நானறிந்தவரை, ஆளிக்கு பறவைப் பொருள் எந்த நூலிலும் சொல்லப்படவில்லை. முதன்முதல் அதைப் பார்த்தது இன்றுவந்த செயமோகனின் ”ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா” என்ற பதிவே (http://www.jeyamohan.in/106894#.WojLwzbrbIU). இதிலொரு சாமியார் அகளி எனும் பறவைபற்றிக் குறிப்பிடுவார். அகளி, ஆளியென்று திரியலாம். உகள்>உவள்>உவளை என்பது தமிழில் எழக்கூடிய சொல்லே. (உவளல்= உயரல் என்பது அகரமுதலியிலுண்டு. ”உவளை” இல்லை. ’உவணம்’ உண்டு.) உவள்>உவண்>உவணம்= கழுகு, கருடன். உயரப் பறக்கும் வல்லூறு. உவளை இந்தையிரோப்பியன் eagleக்கு இணையாகலாம். ஆனால் தோற்றந் தெரியவில்லை என்றே இந்தையிரோப்பியன் சொற்பிறப்பு அகரமுதலிகள் சொல்லும். பெரிய கருநிறப் பறவை என்றே அதற்குப் பொருள்சொல்வார். தமிழில் கருளன்>கருடன், கள்>கழு>கழுகு, கழு>கழுளன் ஆகிய சொற்களெல்லாம் பொருள்வழி, கருநிறப்பறவையையே குறிக்கும்.

ஆளற்பொருளின் நீட்சி. ஆளிகளுக்கு அரச ஒப்பீட்டில் எழுந்தது. காடுலவும் விலங்குகளுக்குச் சிங்கம் ஆளியானதுபோல், பறவைகளையுஞ் சேர்த்த மொத்த விலங்குகளுக்கு அரசாளியானது போலும். இக்கற்பனை, யாளியோடு சேர்வது இயல்பு தான். பல அரசுகளின் இலச்சினையாக அரசாளி இருந்தது. அண்டபேரண்டம் என்பதெல்லாம் இதற்கும் அதிகமான கற்பனை வளர்ச்சி. (அரசாளியின் தொடக்கம் ஆளி என்பதே. கற்பனை கூடாதென நான் எப்போதுஞ் சொல்லவில்லை. எது அடிப்படை, எது மேலொட்டு, எது கற்பனை எனப்புரிந்துகொள்ளுங்கள் என்றே வேண்டுகிறேன்.  .       

முடிக்குமுன் ஆளி என்றசொல் யாளியானது பற்றிச் சொல்லவேண்டும். ஒருசிலர்க்கு இதைச் சங்கதமென்று சொல்லாவிடின் தலைவெடித்துவிடும் போற் தோன்றுகிறது, இல்லாவிடில் இவரின் “ஜன்மம் சாம்பல்யம் அடையாது” போலும். இவர்போன்றவர் மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்த்து நிலையைப் புரிந்துகொள்ளவும் மாட்டார். நான்பார்த்த வரை, சங்கதத்தில் ”யாளி, யாடி, யாதி” என்ற எச்சொல்லுக்கும் இப்பொருள் கிடையாது. ”வ்யாடி” என்றே முதற்சொல் காட்டுவார். (அதற்குச் சிங்கமென்ற பொருளும் வராது. ”கொடூரவிலங்கு” மட்டுமே வரும்.) ’வியாலி/வ்யாளி’ என்ற வடிவைத் திரிசொல்லாகவே சங்கதங் காட்டும். வ்யாடி என்பதை வி+அட் என 2 சொற்களிலிருந்து எழுந்ததாய்க் காட்டுவார்.

व्याड
(H1) व्याड [p= 1036,3] [L=209669] mfn. (said to be fr. 3. वि+- √अड् ; cf. व्याल) malicious , mischievous L. (with loc. , g. शौण्डा*दि)
(H1B) व्याड [L=209670]    m. a beast of prey MBh. R. Ma1rkP.
(H1B) व्याड [L=209671]    m. a snake L.
(H1B) व्याड [L=209672]    m. " a rogue " or " a jackal " (= वञ्चक) L.
(H1B) व्याड [L=209673]    m. N. of इन्द्र L.

வி என்பதற்கு ”பலதிசைகளில் பரந்த” என்று பொருள்சொல்வர். இச்சொல் தமிழிலும் உண்டு. விய்தல்= விரிதல். விய்வம்>வியுவம்>விசுவம் என்றால் விரிந்த பேரண்டமென்று பொருள். இதுவும் சங்கதம் போகும். விசுவநாதனென்று சிவனுக்குப் பெயர்சொல்கிறோமே? விய்யில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் 40/50 ஆவது உண்டு. ”அட்” என்பதற்குச் சரியான பொருளை சங்கதத் தாதுபாடத்தில் நான் காண முடியவில்லை. endeavour என்ற பொருளை அட் என்ற சொல்லின் பொருளாய்ப் பார்த்தேன். இவையிரண்டுஞ் சேர்ந்து எப்படி வியாடியாய் மாறியதென்று புரியவில்லை. யகர உடம்படுமெய் தமிழிலுண்டு. சங்கதத்திலுண்டோ? கேள்விப்பட்டதில்லை. இங்கே கூட்டுச்சொல்லில் யகர உடம்படுமெய் வந்துள்ளதே? சங்கதச் சொல்லாயின், அது இயலுமா? யாராவது சொல்லுங்கள்.

வியாடியிலிருந்து வியாளி வந்ததென்பது தலைகீழாகத் தேடுவதையொக்கும். தமிழுக்கும் பாகதத்திற்கும் தெலுங்கே இடைமொழி என்பார் பாவாணர். ’சோழ’ என்ற தமிழ்ச்சொல் தெலுங்கில் ’சோட’ ஆகும். சற்று கலிங்கம்போனால் ’சோர’வாகும். வடக்கே சோட/சோர எனவிரண்டும் புழங்கும். இதுபோல் ள/ட/ர திரிவு பலசொற்களில் உண்டு. வியாளியிலிருந்து வியாடி ஏற்படுவதே இயல்பான திரிவு. தெலுங்கையும் ஒடியத்தையும் உணராதோரே தலைகீழாய்ச் சொல்வர். வியாளியைத் திரிசொல்லாய் மோனியர்வில்லிமசு ஏற்றுக்கொண்டதே நமக்கு அதன் ஊற்றைக் காட்டுகிறது. வியாளியை விய்+ஆளி என்று பிரித்தால் வினைத்தொகை அதனுள் புகுந்து விளையாடுவது புரியும். விய்ந்த ஆளி, விய்கிற ஆளி, விய்யும் ஆளி.  இக்காலத் தமிழில் விய்தலைக் காட்டிலும் வியல்தலே விழைவோம். வியல்ந்த ஆளி, வியல்கிற ஆளி, வியலும் ஆளி. ஆளிமான் காடுமுழுதும் நகர்ந்துகொண்டேயிருக்கும். தனக்கு உணவு கிடைக்கும் பெரும்பரப்பில் பரந்துகொண்டே இருக்கும். வியாளி நல்ல தமிழ்ச்சொல். சரி, யாளி என்பது எப்படி? யாக்கல்/ஆக்கல், யாக்கை/ஆக்கை, யாடு/ஆடு, யாண்டு/ஆண்டு, யாமை/ஆமை, யாய்/ஆய், யார்/ஆர், யாறு/ஆறு, யானை/ஆனை என்ற இணைகள் எப்படியானதோ, அதே படிதான் தமிழில் இது காலகாலமாய் இருக்கும் பழக்கம். இதை விய்யாளி என்றாலும் வியாளி என்றாலுஞ் சரிதான், வடக்கே இச்சொல் தான் போயிருக்கிறது.

அப்புறம் ”சிங்கம் சங்ககாலத்தில் தமிழகத்திலில்லை”, என்றுசிலர் சொல்வது கூடைச்சோற்றுள் பூசனி மறைப்பது போலாகும். சிங்கமென்பது ஆளி மட்டுமல்லாது அரி, அறுகு, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல்வேறு பெயர்களில் சங்கநூல்களில் ஆளப்பெற்றுள்ளது. பூசனியை மறைப்பவர் எந்த விலங்கியல் சான்றை இங்கு காட்டியுள்ளார்? சும்மா, போனபோக்கில் இப்படிச்சொன்னால் எப்படி? நான் சங்க நூல்களை நம்புகிறேன். அதிலுள்ள செய்திகள் அக்காலப் பட்டகைகள் (facts), புரிதல் (understanding) என்றே நம்புகிறேன். பட்டகைகளை ஒதுக்கித் தான் புகலும் தேற்றே (theory) சரியெனும் கற்பனைவாதி நானல்ல. யாளி பற்றிய என் தொடர் முடிந்தது. பொறுமையுடன் படித்த எல்லா நண்பருக்கும் என்நன்றி.படம் உதவி:  http://www.wikiwand.com/en/Western_Chalukya_architecture
________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com
No comments:

Post a Comment