—— ருத்ரா இ.பரமசிவன்.
ஓங்கி உலகளந்த அழகனை
ஏங்கி உள்ளச் சிமிழுக்குள்
வாங்கினாள் ஆண்டாள் என்கின்ற
நம் மண்ணில் பூத்த மின்னற்பெண்!
தமிழ் நறும்பூவின் சொல்லினிலே
அமிழ்தின் மழைதனை பெய்வித்தாள்.
தமிழைக்குழைத்தாள் தன் உள்ளமதாய்!....(1)
மார்கழிப் பனியின் விழுதுகளில்
ஊஞ்சல் ஆடினாள் தமிழிசைத்து.
பிரம்மம் என்பது உடலா? இங்கு
பிரம்மம் என்பது கடலா? அலையா?
கவலை அந்த கன்னிக்கில்லை
பொறி வண்டுகள் பூவைத் துளைக்க
பொறி அங்கு வைத்தது பிரம்மம் தானே.....(2)
கூர்த்த மதியும் குவியும் உணர்வும்
தூர்த்து போமோ? அவள் செந்தமிழில்.
பாடல் தோறும் பாடல்தோறும்
பாற்சோற்றின் தீஞ்சுவை போல
ஊன்சோற்றுள் ஊடிப் பற்றி
ஞானத்தீயும் செஞ்சுவை ஊட்டும்.
விண்டத்தமிழில் அண்டம் விரிந்தது......(3)
இரண்டு ஆன்மக்கூடல் அங்கு
இருட்கடல் பிளந்து ஒளியாகி
கல்லும் மண்ணும் பூவும் புள்ளும்
கலந்த விண்வெளி யானதுவே! அவள்
பள்ளியெழுச்சி பாடலெல்லாம்
துள்ளிய ஞானச் சுடர்வரியே!
அள்ளிய நெஞ்சில் அமிழ்தொலியே!....(4)
சிறுபூ தொட்டும் பெரும்பூ அணைந்தும்
அளைந்தாள் அவனை அணைத்தாளே..தன்
உயிர் மகரந்தம் தூவிக்கொடுத்து
சூடிக்கொடுத்தாள் தன் உயிர்மாலை.
விண்ணவன் மேனி வருடியதெல்லாம்
அவள் உயிரின் உயிரின் பூக்களே தான்.
அவள் மனங்களின்அந்தம் மகரந்தம்......(5)
பக்தி என்றோர் சிறு சொல் போதா.
பெருங்கடல் கூட சில் துளி தான்..அவள்
அன்பின் விரிவே ஆயிரம் அண்டம்!
அவன் அவதாரம் பாடினாள்.
அவன் அரிதாரம் பாடினாள்.
உருவம் கொண்டு அவளுக்குள்
உருண்டு திரண்டது பிரம்ம மதாய்.....(6)
வீட்டுப்பூட்டுள் ஒலிக்கும் பூங்கிளி
"வீடு"பேறு தேடி கோயில்
இதயம் புகுந்து கொண்டதுவே
பிரம்மம் என்னும் பேரின்பம்
பெருங்கனிச் சுவைத்து உண்டதுவே
அத்தனை சுவையும் தமிழாகி
அருஞ்சுவைப் பாட்டாய் ஒலித்ததுவே...(7)
சின்ன இன்பம் பெரிய இன்பம்
வேறுபாடுகள் தெரிவதெங்ஙன்?
ஆண்டவனுக்கே சூடிக்கொடுக்க தன்
ஆத்மப்பூக்கள் தொடுத்தாளே.
அத்தனைப்பாட்டும் நரம்பை மீட்டும்
அத்தனைப்பாட்டும் தமிழை மீட்டும்.
சொற்றுளியெலாம் சோதிப்பெருங்கடல்.....(8)
ஒருபுறம் பார்த்தால் அங்கு
தமிழை ஆண்டாள் அவள் ஆனாள்
மறுபுறம் பார்த்தால் அங்கு
தமிழால் ஆண்டாள் அவள் ஆனாள்.
பாற்கடல் பள்ளிக்கூடலும் தமிழ்ப்
பாற்கடல் பள்ளிக்கூடமே..அவள்
படித்ததெலாம் அங்குப் பரந்தாமன்.....(9)
உணர்வுத்தீயை பக்தி என்பீர்!
உணவுத்தீயும் அதுவே தான்.
ஞானமும் உண்ணலாம் அறிவீரோ?
ஞானப்பசியே உலகம் ஆச்சு.
ஒவ்வொரு சோறும் வரலாறு ..மண்ணின்
ஒவ்வொரு துளியும் வரலாறு.
வரலாறு இன்றி வாழ்க்கை இல்லை.......(10)
மிருகமாய்த் தோன்றிய போதினிலே
இரைகள் தானே நம் இலக்கு...அந்த
இரையும் காமமும் இறைவன் ஆகி
அவதாரம் வந்த கதைகளும் உண்டு.
அதையெலாம் மறப்பது அறிவீனம்.
இறையாண்மை என்பதும் கூட
இரையாண்மையின் அடிப்படையே ....(11)
மனிதன் உருவில் இருந்தாலும்
இறைவன் உருவில் இருந்தாலும்
ரத்த சதையாய் இருந்தாலும்
ஆவிகளாய் திரிந்தாலும் அது
பசியின் ஒளியே அறிந்து கொள்
அறிவின் பசியே உணவுகள் ஆகி
உலகு சுழற்றும் அறிவாய் நீ..............(12)
காமம் செப்பாது கண்டது மொழிமோ!
காமம் அங்கொரு அக்கினிக்குஞ்சாய்
காமம் அங்கொரு பொந்திடை இருந்து
காட்டிய வெளிச்சம் ஆயிரம் ஆயிரம் .
வெந்து தணிந்தது காடு காடு.
வேகாமல் நின்றது மனித சிந்தனை.
சாகாமல் நின்றது மனிதம் மனிதம்.......(13)
படம் உதவி: விக்கிப்பீடியா
https://commons.wikimedia.org/wiki/File:The_Saint_Andal_LACMA_M.86.94.2.jpg
________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)
No comments:
Post a Comment