Friday, February 9, 2018

அடுத்து என்ன?



——    பழமைபேசி



1. நாட்டுப்பற்றும், நாட்டாண்மையும்


    அமெரிக்க ஊடகங்களில் அண்மைக்காலமாக இடையறாது பேசப்படுவது, சீனாவின் ஆதிக்க விரிவாக்கம். தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் நாடுகள் ஒவ்வொன்றாகச் சீனாவுடன் அடக்கமாகி வருகின்றன. இராமேசுவரத்திலிருந்து மிகக் குறைந்த தொலைவாக, பத்து மைல் தொலைவிலிருந்தே துவங்கி விடுகிறது எல்லைக்கோடு, அதனின்று சில நூறு அடிகள் உள்ளே போய்விட்டாலும், 10 இலட்சம் முதல் 17.4 கோடி வரை தண்டம் கட்ட வேண்டி வரும். இப்படி, கிழக்காசியாவிலிருக்கும் தம் அணுக்க நாடுகளை வைத்து, சீனா தம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. தரைவழியிலும் அதேநிலைதான். மியான்மார் நாட்டினை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட சீனா, வடக்கு, கிழக்கு எல்லையில் நெருக்கிக் கொண்டு நிற்கிறது. சீனாவின் ஆதிக்க விரிவாக்கத்தைக் கண்டு அமெரிக்கா அலறி வருகிறது. ஜப்பான், இந்தியாவைக் கொண்டு சீனாவைக் கட்டுக்குள் கொண்டு வரலாமென அமெரிக்கா நினைக்கிறது. இந்திராவும், அவர் தம் மகனும் இருந்தவரை, அணிசேரா நாடுகள் என்கிற அமைப்பைத் துடிப்போடு வைத்துக் கொண்டு, சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்குமே பிடி கொடுக்காமல் வந்தனர். அதற்குப் பின் எல்லாமுமே மாறி விட்டது. இங்கேதான் நாட்டுப்பற்றும்(patriotism), நாட்டாண்மை(nationalism)யும் பேசுபொருளாகின்றன.

    நாட்டுப்பற்று(patriotism) என்பது என்னவென்றால், நாட்டின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகள், மொழிகள், விழுமியங்கள், வளங்கள், தொன்மம், நாகரிகம், பாதுகாப்பு, முன்னேற்றம் முதலான எல்லாவற்றின் மீதும் பற்றுக் கொண்டு பேணுதல் என எளிமையாகச் சொல்லிவிடலாம். நாட்டாண்மை(nationalism) என்பது மிகச்சிக்கலானதும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதுமானவொன்றாகும். Nationalism makes one to think only of one’s country’s virtues and not its deficiencies. Patriotism, on the other hand, pertains to value responsibilities and  enables people to understand both the shortcomings and improvements made.

    நாட்டில் இருக்கிற சமூக, சமயம், மொழி, பண்பாடு என எல்லாவற்றையும் ஒருதன்மையாக்கி ஒரு தலைமையின் கீழ்க் கொணர்ந்து ஆட்சிக்குட்படுத்துவதே நாட்டாண்மை. எடுத்துக்காட்டாக, சோவியத்தில் இருந்து பிரிந்த  கசகசுதான், கிரிகிசுதான், உசபெக்கிசுதான், துர்க்மினிசுதான் முதலான நாடுகளிலும் பாகிசுதானின் பெரும்பாலான மாகாணங்களிலும் இப்படியான நாட்டாண்மைதான் நடப்பில் இருந்து வருகிறது. ஒரு பொதுக்கட்டமைப்பின் மேலான ஒற்றைத்தலைமையின் ஆட்சி. மேற்குறிப்பிட்ட நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இடம் பெற்றாலும், மொழி, இனம், பண்பாடு போன்றவற்றில் உரிய இடத்தை அளித்தே வருகின்றனர்.

    அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அண்மையில் அமைந்த பெரும்பான்மை வாதத்துடன் கூடிய நாட்டாண்மையாட்சிக்கான வெற்றிகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு உலகின், குறிப்பாக, மூன்றாநிலை நாடுகளிலும் அதேபோன்ற போக்கு தலைதூக்கி வருகிறது. நாட்டின் கட்டமைப்பு, பொருளாதாரம், அறிவியல், மருத்துவத்துறை குறித்தெல்லாம் ஆய்ந்து பேசாமல், சமயம், இனம் குறித்துப் பேசி, பெரும்பான்மைத் தொகுதியின் ஆதரவைப் பெற்று, ஒற்றைத்தலைமையின் கீழான நாட்டாண்மையை நிலைநிறுத்தும் போக்கு, தனித்துவமான இதர மொழிகள், பண்பாடு போன்றவற்றை அழித்தொழிக்கும். நாடுகளெல்லாம் இத்தகைய முன்னெடுப்பின் கவனமாய் இருக்க, அதை நன்கு பயன்படுத்திக் கொள்கிற சீனா தம் ஆதிக்கத்தை வெகுவாக விரிவாக்கிக் கொண்டே வருகிறது.

How the US is losing the region to China?

China’s expansionism poses ‘threat’ to India

    இனி நாம் நம் பணியைத் தொடரலாம்... ஆண்டாள், இறைவழிபாடு, பத்மாவதி, துர்கா, களவாணி, புறம்போக்கு, தமிழ், சமசுகிருதம், மன்னிப்பு, சீயர், what is next?? அடுத்து என்ன?



***************


2) வெளியுறவுப் பூசல்கள் 

    நாட்டுப்பற்றியத்துக்கும்(patriotism) நாட்டாண்மி(nationalism)யத்துக்குமான வேறுபாட்டினைப் பற்றி ஆய்வு செய்யும் போது, அண்டை நாடான சீனாவின் ஆதிக்க விரிவாக்கம் குறித்துப் பார்த்தோம்.

    சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்  செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்த கருத்தின் போது,  எந்தப் பிரச்சினையானாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆக்கிரமிப்பு காசுமீரம் பகுதியில் அமையவிருக்கிற, “சீனா பாகிசுதான் பொருளாதாரத் தாழ்வாரம்”, சீனா அமைக்கவிருக்கிற கட்டமைப்புகள் குறித்த இந்தியாவின் கவலையைக் கருத்திற்கொள்கிறோம். இந்தியா விரும்பினால், அத்திட்டத்திற்கு வேறு பெயரை வைத்துக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோமென்பதோடு முடித்துக் கொண்டார்.

    சீனா,  பூட்டான், இந்தியா ஆகிய மூன்றுக்குமான எல்லைக்கோடு சந்திக்கும் இடத்திற்கருகில் பூட்டானுக்குள் ஊடுருவி, டோக்லாம் பகுதியில் சாலை நீட்டிப்புச் செய்திருந்தது சீனா. அப்போது, கிட்டத்தட்ட 77 நாட்களுக்கு இந்திய சீன படைகள் எதிரெதிராக நின்ற பதட்டமும் ஏற்பட்டிருந்தது. பிறகு, சீனா தம் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிக்க, இந்தியப் படைகள் தத்தம் பாசறைகளுக்குத் திரும்பி விட்டன. ஆனாலும், ஆக்கிரமித்த பகுதிகள் தமக்குச் சொந்தமானவை என்றே சீனா கூறிவருகிறது.

    ’சீனா பாகிசுதான் பொருளாதாரத் தாழ்வாரம்(CPEC)’ என்பதைப் போலவே, ’சீனா பங்களாதேசு பொருளாதாரத் தாழ்வாரம்(CBEC)’ என்பதும் சீனாவின் மற்றுமொரு திட்டமாகும். சீனாவைப் பங்களாதேசு நாட்டின் சிட்டகாங் துறைமுகத்தோடு இணைக்கும் சாலை(One Border One Road, OBOR), இந்த CBEC திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த சாலைக்கட்டுமானத்தின் ஒரு பகுதியாகத்தான் மேற்கூறிய டோக்லாம் ஆக்கிரமிப்பும் இடம் பெறுகிறது. அதுமட்டுமல்லாது, 1890இல் அப்போதைய பிரிட்டன் அரசுடன் இடம் பெற்ற ஏதோவொரு ஒப்பந்தத்தைக் காண்பித்து, சிக்கிம் மாநிலத்திலும் சீனாவுக்குப் பங்கிருக்கிறது எனச் சொல்லி வருகிறது சீனா.

    உளவுத்துறை முன்னாள் அலுவலர் RSN சிங் கூறுகிறார், ”நேபாளம், பாகிசுதான், பங்களாதேசு ஆகிய நாடுகளை தமக்கு ஏதுவாக வளைத்துக் கொண்ட சீனா,  கூர்கா தீவிரவாதிகளையும் அரசியற் புரட்சியாளர்களையும் வளர்த்து விட்டு, அப்பகுதியின் நிலைத்தன்மையைக் குலைப்பதன் வாயிலாக, சிக்கிம் நிலப்பகுதியின் வாயிலாக சாலையை அமைத்துவிடத் துடிக்கிறது சீனா”

    ஆக்கிரமிப்புக் காசுமீர் வழியாக பலுசிசுதான் பகுதிக்குச் சாலை அமைப்பதன் வாயிலாக அரபிக்கடலையும், சிக்கிம் வழியாக பங்களாதேசின் சிட்டகாங் துறைமுகத்துக்குச் சாலை அமைப்பதன் வாயிலாக வங்காள விரிகுடாவையும் தொட்டுவிடத் துடிக்கும் சீனா, ஏற்கனவே சிட்டகாங் துறைமுகத்தை ஆழப்படுத்த 10 பில்லியன் டாலர்களும்,  பலுசிசுதானின் குவேடார் துறைமுகப்பணிகளுக்கு 6 பில்லியன் டாலர்களையும் ஒதுக்கிப் பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை வெறும் எல்லைப் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது. இருப்பின் பிரச்சினையாகக் கருதி எவ்வகையிலேனும் இந்தியா முனைந்து செயற்பட வேண்டுமென்கிறார் RSN சிங்.

(இனி நாம் நம் நாய்ச் சண்டைகளுக்குத் திரும்புவோம்,  திராவிடம்,  ஆரியம், மன்னிப்பு, கழகம், ப்ளா ப்ளா....)

__________________________________

http://www.indiandefencereview.com/news/spare-no-weapon-if-doklam-poses-existential-crisis/
http://www.dnaindia.com/india/report-china-maintains-rigid-stance-on-doklam-but-willing-to-talk-to-india-to-sort-out-cpec-issue-2579459

***************


3)  எல்லைப் பிணக்குகள்



    அடுத்து என்ன? விரிவான ஒரு பார்வையைப் பார்த்து விட வேண்டியதுதான். சமூக அரசியலைக் காட்டிலும் முக்கியமானது பூகோள அரசியல். பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் அடிப்படை நிலம். நிலமில்லாவிட்டால் ஏதுமில்லை. நிலத்தின் மீதுதான் கடல், மலை, வான்பரப்பு எல்லாமும் உள்ளன. ஆகவே, ஒவ்வொரு சதுர அடி நிலமும் முக்கியமானதும் அவசியமானதுமாகும். அப்போதைக்கு அது வெற்றுநிலமாகக் கூட இருக்கலாம். ஆனால் அதற்காக அதை யாரும் புறந்தள்ளி விட முடியாது. எனவே பூகோள அரசியல் முக்கியமானது. நம்மில் எத்தனை பேர் பூகோள அரசியலைக் கவனிக்கிறோம்? சில்லறைப் பூசல்களினால் ஆளப்படுகிறோமென்பதுதானே உண்மை?! பெருகிவரும் மக்கட்தொகை, தொழில்நுட்பம் நிமித்தம், அத்தகைய நிலத்தின்பால் வல்லரசுகள் எப்போதும் தம் கழுகுக்கண்களைப் பாய்ச்சியபடியேதான் இருக்கின்றன. அப்படியான பாய்ச்சலில் நமக்குத் தெரிந்த இந்திய சீனா பூகோள அரசியல்தான் இது. இதில், இன்று, நாம் முதலாவதாகப் பார்க்கப் போவது எல்லைப் பிணக்குகள் பற்றியதாகும்.

    இந்திய சீன எல்லையென்பது, காசுமீரம் முதல் மியான்மார் வரையிலாகக் கிட்டத்தட்ட 3488 கிலோ மீட்டர்கள் தொலைவைக் கொண்டதாகும். பாதுகாப்புக்கு இந்தியாவை நம்பியிருக்கும் பூட்டான் எல்லையையும் சேர்த்துக் கொண்டால், 4100 கிமீட்டர்கள் ஆகும். இத்தகைய எல்லையென்பது, பல இடங்களில் முறையாகக் குறிக்கப்பட்டிருக்கவில்லை; எல்லை வகுக்கப்பட வில்லை. கடுமையான மலைப்பகுதியென்பதால் உத்தேசமாகவே யூகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பல இடங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு அவ்வப்போது இடம் பெற்றே வந்திருக்கிறது.

1. தவாங்
    இன்னமும் அருணாச்சலப் பிரதேசத்தைத் தன் பகுதியென்றே சீனா கூறி வருகிறது. எனினும், முக்கியப் பிரச்சினையாகப் பார்க்கப்படுவது, அருணாச்சலத்தில் இருக்கும் தவாங் பகுதியாகும். ஏன் சீனா இப்பகுதியை மட்டும் குறிவைத்துக் கேட்கிறது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது, கடும் மலைப்பாங்கான பகுதிகளுக்கிடையே தவாங் பகுதி கணிசமான சமதளப் பகுதியைக் கொண்டிருக்கிறது. அத்தகைய நிலம் தம் கைக்கு வந்துவிட்டால், இந்தியாவையும் பூட்டானையும் நெருக்கக் கூடிய வகையில் விமானப் படைதளத்தை அமைத்து விடலாமென்பதுதான் கணக்கு. மேலும், தவாங் பகுதியில் பெருவாரியாக வசிப்பது திபெத்தியர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் திபெத்துக்கு உரிமை கோரிப் பிரச்சினைகளை மேற்கொள்ளலாம். ஆகவே, அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது சீனா. திபெத்தில் இருக்கும் திபெத்தியர், தம் ஆறாவது தலாய்லாமாவான தசான்யாங் கியாசுடோவின் பிறந்த இடமான தவாங் பகுதியை புனிதத்தலமாக நினைப்பதும் அங்கு அடிக்கடி சென்று வருவதும் சீனாவுக்குக் கவலையளிக்கக் கூடியதாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தவாங் பகுதியை எங்களுக்குக் கொடுத்து விட்டால் இதர அருணாச்சலப்பகுதி, 1962 போரின் போது ஆக்கிரமித்துக் கொண்ட காசுமீரின் அக்சாய் சின் உள்ளிட்ட எல்லா எல்லைப்பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுப்பதாகச் சொல்கிறது சீனா. ஆனால் இந்தியா தரப்பில் கடுமையாக மறுக்கப்பட்டே வருகின்றது. விட்டுக் கொடுத்தால், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை நன்கு அறிந்தே இருக்கிறது இந்தியா. தவாங் பகுதி சீனா வசம் போகுமானால், பூட்டானுக்குப் பாதுகாப்பளிப்பது மிகக் கடினமாகும். மேலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை இணைக்கும் சிலிகுரி குறுநிலத்தை நோக்கி முன்னேறும் பணி சீனாவுக்கு எளிதாய்ப் போய்விடும்.

2. அக்சாய் சின்
    1962ஆம் ஆண்டு நிகழ்ந்த போரின் போது லடாக் பகுதியில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது. இப்பகுதியைப் பொறுத்த வரை இருவிதமான எல்லைக் கோடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

    1962ஆம் ஆண்டு வரையிலும் இந்தியாவின் வரைபடத்தில் இடம் பெற்றது ஜான்சன் எல்லைக்கோடு என்பதாகும். பிரிட்டனைச் சார்ந்த நில அளவியலாளர் வில்லியம் ஜான்சன் என்பாரால் வரையறுக்கப்பட்டு, அப்போதைய காசுமீர் அரசரிடம் கொடுக்கப்பட்டு, 1865ஆம் ஆண்டில் அந்நிலமானது அரசரின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வந்த ஆங்கிலேயே அரசிடம், அப்பகுதியைச் சார்ந்த குறுநில மன்னர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில், 1893ஆம் ஆண்டு பிரிட்டன் தூதுவர் சர் மெக்டொனால்டு என்பாரிடம் புது வரைபடம் கையளிக்கப்பட்டது. இதன்படி அரசரின் ஆளுகைக்குட்பட்ட பகுதி சீனக் குறுநில மன்னர் ஆளுகைக்குட்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இரு வரைபடங்களுமே புழக்கத்தில் இருந்தன. ஆங்கிலேயர்களின் கட்டுக்குள் ஏனைய பகுதியும் இருந்ததால், அவ்விரு எல்லைக்கோடுகளுக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் இருந்திருக்கவில்லை. ஆனால், 1962இல், இவ்விரு கோடுகளையும் கடந்து உள்ளே வந்து அக்சாய் சின் பகுதியில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது சீனா.

    நடப்பு காலத்தில் இடம் பெறும் பேச்சுகளில், தாம் ஆக்கிரமிப்புச் செய்த நிலத்தை விட்டுக் கொடுத்து மெக்டொனால்டு எல்லைக்கோட்டுக்குப் பின்வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறது சீனா. இந்தியாவோ, காசுமீர் அரசரின் புழக்கத்திலிருந்த ஜான்சன் எல்லைக்கோடே இந்தியாவின் எல்லைக்கோடெனச் சொல்லி, இன்னும் பின்வாங்கிப் போக வேண்டுமெனச் சொல்லி வருகிறது.

3. மெக்மேகன் எல்லைக்கோடு
    திபெத் நாட்டுக்கும் அருணாச்சாலப் பகுதிக்குமிடையேயான எல்லையை 1914ஆம் ஆண்டு, திபெத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர் ஹென்ரி மெக்மேகன். இதுதான் இந்தியாவின் எல்லைக்கோடாகப் பாவிக்கப்பட்டு வருகிறது. நடப்பில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (அவ்வப்போது சென்று ஆளுகைக்குட்படுத்தப்படும் பகுதி, line of control, LoC), இயல்புக் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு( Line of actual control, LoAC, எப்போதும் ஆளுகைக்குட்பட்டது), மெக்மேகன் எல்லைக்கோடு ஆகிய மூன்றும் இடம் பெற்று வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் மெக்மேகன் எல்லைக்கோட்டையே பாவித்து வருகிறது. 1962ஆம் ஆண்டு போரின் போது, பெரும்பாலான அருணாச்சலப் பகுதியை சீனா ஆக்கிரமிப்புச் செய்து, போர் முடிந்ததும் மெக்மேகன் எல்லைக்கோட்டுக்குப் பின்வாங்கிக் கொண்டது. இருப்பினும் மிக அண்மையில், இருவாரங்களுக்கு முன்பு, இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இருக்கும் கிராமத்தில் சீனர்கள் ஊடுருவி, சாலையமைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், இந்தியப் படைகள் அவர்களை விரட்டியடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)


***************


4) திபெத், தலாய் லாமாவுடன் கொண்ட நட்புறவு


    சீனாவின் நடப்பு நிலைமை குறித்த ஒரு தகவலையும் பார்த்து விட்டு, இந்திய சீனா உறவுக்குள் இருக்கும் சிக்கல்களில்,  எல்லைப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக இடம் பெற்றிருக்கும் திபெத், தலாய் லாமா குறித்துப் பார்ப்போம்.

    உலக நாடுகள் அனைத்துமே பதட்டத்தோடு உற்று நோக்கிக் கொண்டிருப்பது சீனாவின் கடன் என்பதுதான். நாட்டின் மொத்தக்கடன் தோராயமாக ஆண்டுக்கு இருமடங்காகவும், உள்ளூர் அரசாங்கங்களின் கடன் கடந்த 15 ஆண்டுகளில் 36 மடங்காகவும் உயர்ந்து வந்திருக்கிறது. நாட்டில் எண்ணற்ற புது நகரங்கள், கட்டுமானப்பணிகள், துறைமுகங்கள் என கட்டமைப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாகமே கடனை வாங்கிச் செய்வதுதான் இதற்குக் காரணம்.

    ’ஓர் ஆண்டின் உற்பத்தித்திறனைக் காட்டிலும் 300 மடங்காக இருக்கப் போகிறது நாட்டின் கடனளவு’ என உலக வர்த்தக நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது எல்லாம் யார் பணம்? உலகில் இருப்பவர்கள் எல்லாரது பணமும்தான். எப்படி? நேரடி வங்கி என்பது, ஒருவர் கடன் வாங்குவார். மற்றொருவர் வட்டியுடன் கடனைச் செலுத்துவார். நிழல்வங்கி என்பது, சில பல கடன்களை(bond)த் தொகுத்து ஒரு பொட்டலமாக்கி, ஏதோ ஒரு நிறுவனம் அதைக் கடன் பத்திரமாகச் சந்தையில் விற்கும். உங்களையும் என்னையும் போன்றவர்களும், நாம் பணத்தை முதலீடு செய்யும் நிறுவனங்களும் அவற்றின் மீது முதலீடு செய்வோம். வட்டி அல்லது உரிய இலாபத்துடன் குறித்த காலத்தில் அவை ஈடு செய்யப்பட்டால் இரு தரப்புக்குமே நல்லது. உற்பத்தித்திறனைக் காட்டிலும் செலவுதொகை அதிகமாக இருக்கும்நிலையில், அவை உகந்தபடிக்கு உரியத் தருணத்தில் நகர்வுகளை மேற்கொள்ளாவிடில், பொருளாதாரச் சுணக்கம், மந்தம், திவால் போன்றவை இடம் பெறும். எனவேதான் சீன நாட்டின் தலைவர், தம் கட்சியின் கூட்டத்தில், ‘நாம் கடன் சுமையைக் குறைக்கப் பாடுபட வேண்டும். அல்லாவிடில், நாட்டின் பாதுகாப்புக்கே மோசம் வந்து விடும்’ என அலறியிருக்கிறார். இதைப் பற்றி, விரிவாகப் பிறிதொரு பகுதியில் பார்க்கலாம்.

திபெத், தலாய் லாமா
    திபெத் என்பது உலகிலேயே மிக உயரத்தில், இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு, இனம், பண்பாடு ஆகும். குளிரான இப்பகுதியில், குறைவான மக்கட்தொகை, பெரும்பாலான பகுதி ஆளில்லா நிலம் என்பனவற்றால், ஏதோவொரு பேரரசுடன் நட்பு பாராட்டி, பெரும்பாலும் அதன் ஆளுகைக்குட்பட்டே வந்திருக்கிறது. 1912ஆம் ஆண்டு வரையிலும் சீனப்பேரரசோடு இணங்கி இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு சீனாவில் இடம் பெற்ற புரட்சியில், இந்நிலப்பரப்பு சீனர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. அதே காலகட்டத்தில், இந்தியப் பகுதியை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களோடு இணங்கி, சமயத்தலைவராகிய தலாய் லாமாவின் வழிகாட்டுதலில், குடியரசாக வாழ்ந்து வந்தனர் திபெத்தியர்கள்.

    ஓரளவுக்குப் புரட்சியெல்லாம் ஓய்ந்து, நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றி நிலைத்தன்மையடைந்த சீன அரசு, 1959ஆம் ஆண்டு வாக்கில், திபெத்தையும் தன் ஆளுகைக்குள் உட்படுத்தத் துவங்கியது. 1959ஆம் ஆண்டு சீனப்படைகள் திபெத் பகுதிக்குள் சென்று ஆக்கிரமிக்கத் துவங்கியது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் 87 ஆயிரம் திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். 14 வயதேயான தலாய் லாமா, மாறுவேடத்தில், அரண்மனையிலிருந்து வெளியேறி கால்நடையாகவே கிட்டத்தட்ட 31 நாட்கள் நடந்து வந்து இந்தியாவில் புகலிடம் பெற்றார். அதற்குப் பின், நாடு கடந்த திபெத்தியர் அரசாங்கம் தொடர்ந்து தமது விடுதலைக்கான முன்னெடுப்புகளை இன்று வரையிலும் செய்து கொண்டேதான் இருக்கிறது. இரண்டு இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் திபெத்தியர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாமென கணக்கிடப்படுகிறது.

    திபெத்தை முற்றாக வளைத்துக் கொண்ட சீனா, இந்திய எல்லையில் அவ்வப்போது சிற்சிறு அத்துமீறலைச் செய்து வந்தது. எந்த நேரத்திலும் எல்லை கடந்து வந்து ஆக்கிரமிப்புச் செய்வர் என எதிர்பார்த்த நேரு அரசாங்கம், காசுமீர் மெக்மேகன் எல்லைக்கோட்டில் முன்தடுப்புக்காவல் அரண்களை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது. இவர்கள் எல்லைக்கோட்டில் அத்துமீறி வருகிறார்கள் என்பதைச் சொல்லி, 1962 அக்டோபர் 20ஆம் நாள் தாக்குதலைத் துவங்கியது சீனா. ஆனால் உண்மையான காரணம் இதுவல்ல. இந்தியாவில் இருக்கும் தலாய் லாமாவையும் திபெத்தியர்களையும் உடனடியாகத் தம் வசம் ஒப்படைக்கக் கோரியதும், இந்தியா அதற்கு மறுத்து விட்டதுமே முக்கியக் காரணமாகும். இந்தியாவின் தவாங் பகுதியிலிருந்து கொண்டு, திபெத்தியர்கள் கொரில்லாப் போரில் ஈடுபட்டு வருகிறார்களென்பது சீனாவின் சீற்றமாகும்.

    ’வடகிழக்கு எல்லைப்புற மாகாணம்’ என்று அக்காலகட்டத்தில் அழைக்கப்பட்ட இன்றைய அருணாச்சலப் பிரதேசத்தை நான்கே நாட்களில்  கைப்பற்றிக் கொண்டது சீனா. ஆனால், காசுமீர்ப் பகுதியின் ரசாங்லா பகுதியில் இருந்த இந்தியத் தளபதி சேத்தான் சிங் பேட்டியின் தலைமையிலிருந்த 123 பேர் கொண்ட படையானது, கிட்டத்தட்ட 1400 பேருக்கும் மேலான சீனப்படையினரைக் கொன்று குவித்தது. சினம் கொண்ட சீனா பெருமளவில் படையை காசுமீர் நோக்கி நகர்த்தவே, இறுதியில் தளபதி சேத்தான் சிங் வீரமரணம் தழுவினார். அவரது மரணத்துக்குப் பின்னர் அக்சாய் சின் பகுதி முழுவதையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது.

    உலக அரங்கில், இப்போரானது  சீனாவின் மீது சினமும், இந்தியாவின் மீது அனுதாபத்தையும் உண்டாக்கியது. இந்தியப் பிரதமர் நேரு அமெரிக்க அதிபர் கென்னடிக்கு இரு கடிதங்கள் எழுதினார். அதே காலகட்டத்தில், சோவியத்துகள் கியூபாவில் இருந்து கொண்டு, அமெரிக்காவை நோக்கி அணு ஏவுகணை அமைத்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் பெரும் பதற்றம் மேலோங்கியிருந்தது. இருப்பினும், தளவாடங்களும் உணவுப் பொருட்களும் அமெரிக்க விமானங்களில் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட 3 வாரங்கள் அமைதியாகக் கழிந்தன. மேற்குலக நாடுகள் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியதை அறிந்த கொண்ட சீனா, தாமாகவே முன்வந்து போர்நிறுத்தத்தையும், எல்லைக்கப்பால் 20 மைல் தொலைவில் நிற்பதெனவும் முடிவு செய்து, 1962 நவம்பர் 21 அன்று  பின்னகர்ந்து விட்டது. எனினும், காசுமீரின் அக்சாய் சின் பகுதியை விட்டு இன்று வரையிலும் வெளியேறவில்லை.

    இக்காலகட்டத்தில், நேரு அமெரிக்காவிடமிருந்து பண உதவி கேட்டிருந்தார். இடையில் நேர்ந்த கியூபன் அணு ஏவுகணைப் பதற்றம் 13 நாட்களில் 1962 அக்டோபர் 28ஆம் நாளன்று முற்றாகத் தணிந்து விட்டபிறகு, அமெரிக்க அதிபர் கென்னடி இந்தியாவிற்குப் பல வழிகளிலும் உதவ முன் வந்தார்.   தைவான் வசமிருந்த வீட்டோ உரிமையை முந்தைய காலகட்டத்தில் இந்தியாவிற்கு அளிக்க முன் வந்ததையும், இந்தியா மறுக்கவே அது சீனாவசம் சென்று சேர்ந்து விட்டதை எண்ணியும் மிகவும் குறைபட்டுக் கொண்டார் கென்னடி. எனினும், திபெத்தியர்களுக்கும் தலாய் லாமாவுக்கும் உரிய உதவிகள் தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். முதல் தவணையாக 500 மில்லியன் டாலர்கள் தருவதென முடிவு செய்து இந்திய அமெரிக்க ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியக்குழு அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், 1963, நவம்பர் 22 அன்று கென்னடி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கென்னடிக்குப் பின்னர் வந்த லிண்டன் ஜான்சனும் இந்தியாவின் உறவில் நாட்டம் செலுத்தி ஒப்பந்தம் செய்து உதவ விரும்பினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியக்குழு வாசிங்டன் சென்று சேர்ந்தது. ஆனால், அன்று மாலையே அக்குழு ஒப்பந்தம் எதுவுமில்லாமல், தம் தலைவனுக்கு இறுதி வணக்கம் செலுத்தத் தாயகம் திரும்ப நேரிட்டது பெரும் சோகம்.  நேரு அவர்கள் மே 27, 1964 அன்று, நாட்டின் போர் குறித்த மன அழுத்தம் பீடிக்க உடல்நலம் குன்றி மரணமடைந்து விட்டார். இந்த காலகட்டத்தில் பாகிசுதானின் தலைவர் அயூப்கான் அமெரிக்காவை ஒப்பந்தம் செய்யக் கூடாதென நிர்ப்பந்தம் செய்தார். அமெரிக்காவின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட லால்பகதூர் சாஸ்திரி, வேண்டிய உதவிகளை சோவியத்திடமிருந்து பெற்று இராணுவத்தை பலப்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து, அமெரிக்காவின் நேச நாடாக பாகிசுதானும் சோவியத்தின் நேச நாடாக இந்தியாவுமென ஆகிப் போனது. 1990களுக்குப் பின்னர்தான் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் நிகழத் துவங்கியதெனலாம்.

    அமெரிக்கா, இதர மேற்குல நாடுகள், சோவியத் என எல்லாருமே திபெத்தியர்களுக்கான பண உதவியைச் செய்து வந்தனர். இந்தியாவும் தலாய் லாமை இன்று வரை கைவிடவில்லை. உலகப் பொருளாதாரமயமாக்கலில் சீனா இந்தியாவை முந்திக் கொண்டு, முதலிடத்தைப் பெற்றது. இதன் காரணம், தலாய் லாமா, திபெத் குறித்த ஆதரவுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. எல்லா நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து, ஆதரவினை முற்றாகத் தடுத்து விட்டது சீனா. ஆண்டுதோறும் திபெத் உதவிக்காக ஒதுக்கப்படும் நிதியை இனி ஒதுக்கத் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார் டிரம்ப். எனினும் சில மேற்குலக நாடுகளும் இந்தியாவும் தம் உதவிகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக, தம் மீது கொரில்லாப் போர் தொடுக்க உசிதமான இடமாகக் கருதப்படுவதும் திபெத்தியர் செறிவாக வாழ்ந்து வருவதுமான இந்தியாவின் தவாங் நிலப்பரப்பும், தலாய் லாமாவுக்கு புகலிடம் கொடுத்துப் போற்றி வரும் கொள்கைமுடிவும் இந்திய சீனச் சிக்கலில் முக்கியவொன்றாக இருக்கிறது.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)


***************


5) சமயச்சச்சரவுகளும் பண்பாட்டுப் புரட்சியும்

    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இருக்கும் எல்லைப் பிரச்சினைகள், திபெத் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைப் பார்த்தோம். திபெத் ஆக்கிரமிப்பும் தலாய் லாமாவின் இந்தியப் புகலிடமும் இரண்டறக் கலந்தவை என்பதையும் பார்த்தோம். ஆனால், தலாய் லாமாவை ஓர் அரசியற்பிரச்சினையாக மட்டுமே கருதிவிட முடியாது. அவருக்கு மற்றொரு கோணமும் உண்டு. அது என்னவென்றால், சமயம் என்பதும்தான். சமயம் என்பது எப்படி இந்தியாவுக்கும் சீனாவுக்குமான நல்லுறவில் இடம் பிடிக்கிறது என்பதுவும் முக்கியமானவொன்றாகும்.

    1950ஆம் ஆண்டு சீனாவில் இடம் பெற்ற கிளர்ச்சியும் புரட்சியும் புதிய அரசினை நிலைநாட்டி, அதன் தொடர்ச்சியாக, புதிதாக அமைந்த அரசுக்குளேயும் நாட்டுக்குள்ளேயும் மீண்டுமொரு கிளர்ச்சியும் புரட்சியும் வெடித்தது. அது, ’பண்பாட்டுப் புரட்சி’ என்று அழைக்கப்பட்டது. அப்புரட்சியின் போது, நாட்டில் இருந்த சமயவழிபாட்டுத் தலங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டன. சமயத்தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; கொல்லப்பட்டார்கள். ஆளுங்கட்சிக்குள் இருந்த சமயவழிபாட்டாளர்கள் நீக்கப்பட்டார்கள். ஆதரவுக்குரல் எழுப்பியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். நாட்டின் தலைவரான ’மாவோ’ நாத்திகத்தை வலியுறுத்தினார். பழங்குடியினர் ஊர்ப்புறவாசிகள் மட்டும் நாட்டார் தெய்வங்கள், வழக்காறுகள், முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 1975க்குப் பின்னர் உலகமெங்கும் பொருளாதாரமயமாக்கல் இடம் பெறத் தலைப்பட்டது. அதன் நீட்சியாகவும், மேற்குலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகவும், புரட்சித்தலைவன் மாவோ மறைந்து சீர்திருத்தக்காரர்களின் தலைமை இடம் பெற்றதாலும், 1978ஆம் ஆண்டு, கடுமையைத் தளர்த்தி, புத்தம், தாவோயிசம், இசுலாமியம், புரொட்டெசுடண்ட் கிறித்துவம், கத்தோலிக்க கிறித்துவம் ஆகிய ஐந்து மட்டும், கட்டுப்பாடுகளுடன் கடைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டது.

    நடப்பு காலத்தில் நகரப்பகுதிகளில் எண்பது விழுக்காட்டினருக்கும் மேலாக எச்சமயமும் சாராதவர்களாகவே இருக்கின்றனர். ஊரகப்பகுதிகளில் பெரும்பாலும் நாட்டார் தெய்வப் பற்றுடையவர்களாகவும் கணிசமான அளவில் அனுமதிக்கப்பட்ட சமயங்களைத் தழுவியவர்களாகவும் இருக்கின்றனர். ஒட்டுமொத்த அளவில் பார்க்கின், 55-60% சமயம் சாராதவர், 35% நாட்டார்வழக்கு சார்ந்தவர், 10% மக்கள் இதர சமயங்களைச் சார்ந்தவர்களாயும் இருக்கின்றனர்.

    Cultivation, வளர்த்தெடுத்தல் எனும் ஆங்கிலச்சொல்லின் வேர் cult என்பதாகும். அப்படியான cult, மூளைச்சலவையின் வாயிலாகத் தனிமனிதர்களையோ உருவகங்களையோ தொழுதுபின்பற்றப் போதித்துவளர்த்தல் என்பது சீனாவில் முற்றாகத் தடை செய்யப்பட்டவொன்றாகும். எடுத்துக்காட்டாக, ஃபலுன் காங்(Falun Gong) எனப்படுகிற யோகக்கலையும் ஆன்மிகச்சொற்பொழிவும் இயைந்த பழக்கவழக்கம் தடை செய்யப்பட்டவொன்றாகும். ஆனால், இந்திய யோகாவிற்குச் சீனாவில் பெருத்த வரவேற்பு உண்டு. கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட யோகா பயிற்சிக்கூடங்கள், இந்திய பயிற்றுநர்களைக் கொண்டு சீனாவில் இயங்கி வருகின்றன. இவையாவும், வெறும் உடற்பயிற்சிக் கூடங்களைப் போல மட்டுமே இடம் பெற்றுப் பெருகி வருகின்றன. 1995க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் யோகா அறிமுகப்படுத்தப்பட்ட போது இடம் பெற்ற யோகா செய்தியிதழ்கள், அவற்றில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளின் தன்மை கருதித் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    பெருகிவரும் உலகமயமாக்கல், பன்னாட்டு வணிகம் நிமித்தம் இதர சமயத்தைச் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டே வருகின்றன. குறிப்பாக, இந்து சமயக் கோவில், யோகா விழா போன்றவற்றை அரசுத் துறையே, தம் கண்காணிப்பின் கீழ், வார்ப்புமுறை இடம்பெற்று விடாதபடிக்கு எடுத்து நடத்தி வருகிறது இப்படி சமயவழிபாட்டு முறைகளை, கடுமையான கட்டுப்பாடுகளுடன் தம் கண்காணிப்பில் வைத்திருக்கும் அரசு, திபெத் எல்லைக்கருகிலுள்ள தவாங் பகுதிக்கு வந்து சமயச்சொற்பொழிவாற்றுவதை சீனா விரும்பவில்லை. 2017 ஏப்ரல் மாதம், அருணாச்சலப் பகுதிக்குச் சென்று வழிபாட்டுக் கூட்டங்களைத் தலாய் லாமா முன்னின்று நடத்தியதைக் கண்டு சினமுற்ற சீனா, இந்தியத் தூதரான விஜய் கோகலேவை அழைத்துக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டது. இந்தியாவில் இருந்து எவ்விதச் சமயமும் சீனாவுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில் சீனா மிக உறுதியாய் இருக்கிறது என்பதும் கருத்திற்கொள்ள வேண்டியதாகும்.

    இந்தியாவில் சமயச்சச்சரவுகள் இடம் பெற்றும் இத்தருணத்தில் சீனாவின் சில கட்டுப்பாடுகளை நாம் பார்த்து விடுவது உசிதமாய் இருக்கும். வாட்சப், எல்லாச் சமூக வலைத்தளங்கள், வழிபாட்டுக் கூடங்கள், ஆரவாரமிக்க விழாக்கள், தொலைக்காட்சி கருத்தாடல்கள் போன்றவை தடை செய்யப்பட்டவை. அவரவர் வீட்டிற்குள் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அரசுப் பணிகள், கட்சியில் உறுப்பினராகச் சேர விரும்புவோர், தாம் சமயப் பற்றாளன் அல்லவென்று எழுதிக் கொடுக்க வேண்டும். உறுதிமொழி மீறுதல் சட்டப்படிக் குற்றமாகும். 2017ஆம் ஆண்டு பிற்பகுதியில், ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைமைக்குழு தெரிவு செய்யப்பட்டது. நடப்புத் தலைவருக்கு அடுத்த இடத்தை இவர்தான் பிடிப்பாரென்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சன் செங்க்காய் என்பவர் நீக்கப்பட்டார். அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, முன்னோரைத் தொழும் பழக்கம் இருந்ததாகவும் கிங்க் ஆஃப் குளோரி விளையாட்டினை விளையாடும் பழக்கம் கொண்டவராகவும் இருந்தது ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிரானது என்பதாகும்.

    இப்படிப் பண்பாட்டு ரீதியாகத் தன்னுடன் முரண்பாடுடையதாய்க் கருதுகிற பாகிசுதான், இந்தியா உள்ளிட்ட தன் அண்டை நாடுகள் எதிலிருந்தும் இறைவழிபாட்டு முறைமைகள் இறக்குமதி ஆகிவிடக் கூடாதென்பதில் மிகக் கட்டுப்பாட்டுடன், எல்லைகளில் கண்கொத்திப் பாம்பாய் இருந்து வருகிறது சீனா.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)

__________________________________

http://www.shenzhenstuff.com/profiles/blogs/burn-loot-and-pillage-destruction-of-antiques-during-china-s
https://youtu.be/r0c1XilUIM4

***************
6) ஆற்றுநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்



    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ஆற்றுநீர்ப் பங்கீடு குறித்த சிக்கலாகும்.

    1958இலிருந்து 1962ஆம் ஆண்டுக்கிடையேயான காலகட்டமானது, சீனப் பெரும்பஞ்ச காலமென வரலாற்றில் இடம் பெறுகிறது. இப்பஞ்சத்தின் போது சீனாவில் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி மக்கள் உயிரிழந்தனர். படிப்படியாக நிலைமை தேறினாலும், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஆங்காங்கே பசிபட்டினியினால் உயிரிழப்புத் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இருப்பினும் சீனாவின் மக்கட்தொகையும் படுவேகத்தில் பெருகிக் கொண்டே வந்தது. இதன்காரணமாக, ஒரு குழந்தைச் சட்டம் 1979ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஒருவேளை இச்சட்டம் இடம்பெற்றிருக்காவிட்டால், 1980ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 200 கோடியளவுக்கு உயர்ந்திருக்கக்கூடும். ஆனால் தற்போது 138 கோடியளவில் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே 60 கோடி பிறப்புகளைக் கட்டுப்படுத்தியதாக சீன அரசாங்கம் கூறிக் கொண்டாலும், பிரச்சினை பிறிதொரு வடிவில் உருவெடுத்திருக்கிறது.

    எதிர்வரும் 20 ஆண்டுகளில், தற்போதைய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் ஓய்வு பெற்று, சமூகத்தில் போதுமான இளையோரின்றி கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்படுவாரென்றும், வேலை செய்வதற்கு போதிய ஆட்களின்றி பொருளாதாரம் படுத்துவிடக் கூடிய நிலைமைக்கு ஆளாக நேரிடுமென்ற இக்கட்டான சூழ்நிலை வரக்கூடுமெனவும் கணிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டு ‘ஒரு குழந்தைச் சட்டம்’ கைவிடப்பட்டு இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் கொணரப்பட்டது. இருப்பினும் பிறப்பு விகிதம் உயரவில்லை. தற்போது குழந்தை பிறப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு தரப்பில் முடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே எப்படியும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள்தொகை உயர்வின் வேகம் உயருமென எதிர்பார்க்கலாம்.

    இது ஒருபுறமிருக்க, தற்போதைய தேவையைச் சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் செறிவாக வாழும் வடசீனாவெங்கும் ஆறுகள் கடுமையாக மாசுபட்டநிலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. எண்ணற்ற தொழிற்சாலைக் கழிவுகளும் இதரக் கழிவுகளும் நிலத்தடி நீரையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகின் மக்கட்தொகையில் இருபது விழுக்காட்டு மக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சீனாவிடம், உலகத்தினுடைய குடிநீரில் வெறும் ஏழு விழுக்காடு அளவே தற்போதைக்கு இருக்கிறது. மேலும், நாட்டு மக்களின் பெருந்தொகை உணவான அரிசி விளைவிப்பதிலும் மாசுபட்ட நிலமும் தண்ணீர் பற்றாக்குறையும் சிக்கலை ஏற்படுத்தத் துவங்கியிருக்கிறது. விரவில் உணவுப் பற்றாக்குறையும் இதனால் தலைதூக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றோடு, உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கேற்ற வகையில், மின்னுற்பத்தியிலும் வளர்ச்சியில்லாமல் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரிக்கட்ட, தென்பகுதியிலிருக்கும் இமயமலைச் சொத்தான திபெத் பீடபூமியைப் பயன்படுத்தியே ஆகவேண்டிய தேவையில் இருக்கிறது சீனா. இதன் விளைவு, பூகோளரீதியாக  இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே ஆற்றுநீர்வளப் பங்கீட்டுப் பிரச்சினை முளைக்கிறது.

    சீனா(திபெத்)வின் கட்டுப்பாட்டில் இருக்கும் இமயமலையின் வடப்புறத்தில் உற்பத்தியாகி, தென்புறத்திலிருக்கும் இந்தியாவுக்குள் பாய்ந்து வரும் ஆறுகளாக, சிந்து, சட்லெஜ், காக்ரா, கண்டக், கோசி, மானஸ், சுபான்சிறீ, பிரம்மபுத்திரா, திபாங், லோகித் ஆகியவை உள்ளன. இவற்றுள், சிந்துவும் பிரம்மபுத்திராவும்தான் பேராறுகளாகும்.

    சிந்துநதியானது திபெத்தின் மேற்குப்பகுதியில் இமயமலையில் தலைமாட்டிலுள்ள கைலாயமலையின் மானசரோவர் ஏரிக்கருகில் உற்பத்தியாகி, இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காசுமீரத்தின் வழியே உட்புகுந்து பாகிசுதானின் தேசியநதியாகி அரபிக்கடலில் கலக்கிறது. நேரு – அயூப்கான் ஒப்பந்தப்படிக்கு, ஐந்து விழுக்காட்டு உரிமைதான் இந்தியாவுக்கு உள்ளது. அதற்கு ஈடாக, சிந்துநதியின் துணையாறுகளான  திபெத்தில் உருவாகிக் கடக்கும் சட்லஜ், இந்தியப்பகுதியில் உருவாகும் இராவி, பியாசு உள்ளிட்டவற்றின் உரிமை இந்தியாவிடம் இருக்கின்றபடியாவில் இந்தியாவுக்கு இப்பகுதியில் ஆற்றுநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை பெரிதாக இல்லை.

    கைலாயத்தின் உச்சியில் ‘சாங்போ’ எனும் பெயரில் எழுச்சியோடு புறப்பட்டு, இமயமலையின் வடபுறத்தில் சீனக்கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே வளைந்து நெளிந்து கிழக்கு நோக்கி ஏறத்தாழ 1800 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து வந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருக்கிற அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைக்கோட்டருகே தென்மேற்காக வளைந்து ‘சியாங்’ எனும் பெயரில் ஆர்ப்பரித்து நுழைந்து இந்தியச் சமவெளிக்குள் ’திகாங்’ என பெயர்மாற்றம் கொண்டு பாய்கிறது இப்பேராறு. கிட்டத்தட்ட 35 கிமீ சலனமின்றிச் சமவெளியில் பாய்ந்து, கிழக்கிலிருந்து சீறிவரும் திபாங், லோகித் ஆகிய துணையாறுகளை உள்வாங்கியதும் ஆரவாரத்துடன் மேற்குநோக்கிப் பாய்ந்து அசாம் மாநிலத்துக்குள் பிரம்மபுத்திராவாக நுழைகிறது. இடப்பக்கத்திலிருந்து சுபான்சிறீயும் வலப்பக்கத்திலிருந்து தனசிறீயும் வந்து சேர்ந்து கொள்ள பத்து கிமீ அகலம் பரப்பிப் பாய்கிறது இந்த பிரம்மபுத்திரா. படிப்படியாக கோப்பிலி, மானஸ், துப்ரி முதலான துணையாறுகளும் வந்து பிரம்மபுத்திராவில் சங்கமித்துக் கொள்கின்றன. இவை எல்லாமுமாய்க் கலந்து பங்களாதேசுக்குள் நுழைய, சிக்கிமிலிருந்து டீஸ்ட்டாவும் வந்து சேர்ந்து கொள்ள  ’ஜமுனா’ என்றாகி டாக்கா நோக்கிப் போகிறாள். கீழ்க்கங்கையிலிருந்து பிரிந்து வந்து இடப்பக்கமாய்ப் புணர்ந்து கொண்ட பத்மாவும் சற்றே தொலைவில் வலப்பக்கமாய் வந்து கலந்த சுர்மாவுமாய்ச் சேர்ந்து மேக்னாவாய்க் கீழ்நோக்கி வந்து, வங்காள விரிகுடாக் கழிமுகத்தில் தம்முடைய 2800 கிலோ மீட்டர் பயணத்தை முடித்து அமைதி கொள்கிறாள் இவள்.

    இதனால் என்ன பிரச்சினை? தண்ணீர்ப் பற்றாக்குறையும் மின்சாரப் பற்றாக்குறையும் கழுத்தை நெரிக்க, கைவசமிருக்கும் கைலாயமலையை, அம்மலைதரு கொடையைச் சும்மா விட்டு வைக்குமா சீனா?? 1800 கிமீட்டர் தூரம் மலைகளுக்கிடையே ஓடிவரும் பாதையில் ஏற்கனவே மூன்று அணைகளைக் கட்டி மின்சாரம் எடுக்கத் துவங்கிவிட்டது சீனா. அடுத்த ஐந்தாண்டுகளில் இன்னும் சில பல திட்டங்களை நிறைவேற்றக் காத்திருக்கிறது. கூடவே, தண்ணீரையும் குழாய்கள் போட்டு திபெத் பீடபூமி வழியாகக் கொண்டு செல்லவும் தயங்காது. இதன் விளைவு இந்தியாவுக்கு என்னவாக இருக்கும்?

    நீர்வரத்துக் குறைவால், விவசாயிகளின் பாசனம் பாதிக்கும். இந்தியாவின் பாசனப் பாதிப்பை விட, பங்களாதேசின் பாசனம் பாதிக்கும். ஏற்கனவே பங்களாதேசு மக்களின் அத்துமீறிய குடியேற்றத்தால் வடகிழக்கு மாகாணங்களில் கொந்தளிப்பு. அம்மக்களிடையே இது நடந்தால் இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும். இத்தனைக்கும் மேற்பட்டு, கட்டப்படும் அணைக்கட்டுகளால் நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம் மலையுச்சிக்குக் கீழேயிருக்கிற இந்திய மக்கள்தாம் பாதிப்புக்குள்ளாவர். மழைக் காலங்களில் ஆற்றுப் பெருக்கு குறித்த தகவலைச் சரிவர மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. ஆற்றுப் பாய்ச்சலின் கீழ்நிலையில் இருக்கும் இந்திய வடகிழக்கு மாநிலங்கள் அவ்வப்போது இத்தகைய இடரை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியாக வடகிழக்குப் பிராந்தியத்தின் வாழ்வாதாரத்தின் நிலை கேள்விக்குள்ளாகும். அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. . சிந்துநதிப் பங்கீட்டு ஒப்பந்தம் போல, சீனா, இந்தியா, பங்களாதேசுக்குமிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்.

    சீனாவின் கை எல்லாவிதத்திலும் ஓங்கி இருக்கிற நிலையில், இந்தியாவும் பங்களாதேசும் எதை விட்டுக் கொடுத்து, எதை பெறப் போகின்றன? நீர்வளத்துக்குத்தான் உலகப் போர் மூளும் என்பர். இந்நாடுகளுக்கிடையே அப்படியெல்லாம் நடக்காத வகையில், பிரம்மபுத்திரா ஆற்றுநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் உருப்பெற வேண்டியதும், அதற்கு நாட்டுப்பற்றாளர்கள் பூகோள அரசியலுணர்வு தரித்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)

__________________________________

http://chinawaterrisk.org/big-picture/china-water-crisis/
https://youtu.be/999ngrj_BHM


***************

7) சீலா/சேலா கணவாய்ச் சுரங்கம்
 

    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது சீனா நுழைவிசைவு(visa) குறித்த சிக்கலாகும்.

    அருணாச்சலப் பிரதேசத்தைத் தம் மாகாணங்களுள் ஒன்றான திபெத்தின் தென்பகுதியென்றே சொல்லி வருகிறது சீனா. எல்லைத் தகராற்றுக்குட்பட்ட காசுமீர், இந்நிலையில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் யாராவது சீனா செல்வதற்கான நுழைவிசைவுக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பிப்பவர் காசுமீர் அல்லது அருணாச்சலப் பகுதியைச் சார்ந்தவராக இருப்பின், நுழைவிசைவினை அவர்களுடைய கடவுச்சீட்டில் பதிக்காமல், நுழைவிசைவு பதிக்கப்பட்ட தனித்தாளைக் கடவுச்சீட்டுடன் கோர்த்துக் கொடுக்கும் பழக்கத்தைச் செயற்படுத்து வருகிறது சீனா.

    பிரச்சினைக்குரிய பகுதிகளாகக் கருதும் இடங்களில் இருந்து விண்ணப்பிப்போருக்கு விசா கொடுப்பதை தவிர்த்தே வந்திருக்கிறது சீனா. கொடுப்பதும் கொடுக்காமல் விடுவதும் அந்தந்த நாட்டின் உரிமை என்கிற வகையில் அதுவொரு பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், காசுமீர், அருணாச்சலப் பகுதியைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்குத் தனித்தாள் நுழைவிசைவினைக் கொடுக்கத் துவங்கியதும், இந்திய வெளிவிவகாரத்துறை அச்செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. எந்தவொரு நாடும் தம் குடிமக்களைப் பிரித்தாளும் தன்மைக்கு இட்டுச் செல்வதை ஏற்கமுடியாது என்கிற விதத்தில் இந்தியாவின் எதிர்வினைக்கு மற்ற நாடுகளும் ஆதரவளித்தே வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்குமுகமாக, தனித்தாள் நுழைவிசைவு வைத்திருப்போரை வெளியேற அனுமதிக்கக் கூடாதெனும் அறிவிப்புகள் எல்லா விமானநிலையக் குடிவரவு அலுவலர்களின் வேலையிடங்களிலும் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

    இதுமட்டுமன்றி தான் வழங்கும் நுழைவிசைவுத் தாளில் இருக்கும் தன் நாட்டு வரைபடத்தில் காசுமீர், அருணாச்சலப் பகுதியையும் சேர்த்திருக்கிறது சீனா. இதற்கும் பதிலடி கொடுக்குமுகமாக, தாம் கொடுக்கும் நுழைவிசைவு மற்றும் இதர ஆவணங்களிலிருக்கும் இந்திய வரைபடத்தில், எல்லாப்பகுதியும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு சீனாவிலிருக்கும் தம் அலுவலகங்களைப் பணித்திருக்கிறது இந்தியா.

    அருணாச்சலப் பகுதிக்கு விரைவில் இந்தியப் பிரதமர் வருகையளிக்க இருப்பதும், அசாம் மாநிலத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி கட்டமைப்புப் பணிகள், இதர தொழிற்சாலைகள் அமைக்க எடுத்து வரும் முயற்சிகளும், 2018ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ’செலா கணவாய்’ சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கியிருப்பதும், எல்லைக்கருகே இருநாடுகளுமே போர்த் தளவாடங்களைக் குவித்து வருவதும், போர் மேகம் சூழ்ந்து விட்டதோவென நினைக்க வைப்பதாக மேற்குலக நாடுகள் தம் பதற்றத்தைத் தெரிவித்திருக்கின்றன.

    செலா கணவாய்(Sela Pass) என்பது, எல்லைக் கோட்டருகேயுள்ள  அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியையும் இந்தியாவின் பிறபகுதியையும் இணைக்கக் கூடிய ஒரே ஒரு கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததும், கடல் மட்டத்திலிருந்து 13,700 அடிகள், 4.2கிமீ உயரத்திலிருக்கும் விபரீதமான ஓர் இடமாகும். நிலச்சரிவு, பனிப்பொழிவு, இருள்சூழ்தன்மை முதலானவற்றால் போக்குவரத்தென்பதே துணிகரச் செயலாக இருக்கும் பகுதியாகும். அப்படியான இடத்தில் சுரங்கப்பாதையென்பது, இராணுவம், அருணாச்சலப்பகுதி மக்கள் மட்டுமல்லாது பூகோளமுக்கியத்துவம் அறிந்த அனைவராலும் வெகுவாக வரவேற்கப்படுகிறது.

    1962ஆம் ஆண்டு, நவம்பர் 17. மலையுச்சியை சீனப்படை நெருங்கி விடுகிறது. உடனிருந்தோரெல்லாம் வீழ்ந்து விடுகின்றனர். 21 வயதேயான ஜஸ்வந்த் சிங் ராவத், தனியாள், தடுப்புக்காவலுக்குப் பின்னர் இருந்து கொண்டு தாக்குதலைத் தொடுக்கிறான். சீனப்படைகள் சிதறுகின்றன. தனியாளாய் இருப்பதைப் பார்த்த உள்ளூர்ப் பழங்குடிச் சிறுமிக், செலா, நுரா இருவரும் உதவிக்கு வந்து சேர்ந்து விடுகின்றனர். ஆங்காங்கே இருக்கும் துப்பாக்கிகள், தளபாடங்களைக் கொண்டு போய் அவன் சொல்லுமிடத்தில் வைப்பதுதான் இவர்களுடைய வேலை. இடம் மற்றி இடம் போய்ச் சுட்டு வீழ்த்துகிறான். செலாவும் நுராவும் உணவுக்கு வழிவகை செய்கின்றனர். நாட்கள் நகர்கின்றன. கிட்டத்தட்ட 300 சீனச்சிப்பாய்கள் மடிந்து விழுகின்றனர். அவர்களுக்கோ, இதைக் கடந்தால்தான் மேற்கொண்டு முன்னேற முடியும். மூன்று நாட்களை முறியடித்து விட்டான் ஜஸ்வந்த் சிங்.



    நான்காம் நாள். உள்ளூர் வேலையாள் ஒருவனைச் சிறைபிடித்து விடுகிறது சீனப்படை. தடுப்புக்காவலில் இருப்பது ஒரே ஒருவன்தான். கூடத் துணைக்கு இந்த இரு இளம்பெண்களை வைத்துக் கொண்டு அவன்தான் சீனப்படைகளை சிதறடித்துக் கொண்டிருக்கிறான் எனும் தகவல் தெரியவர, சீனப்படைகள் சீறிப்பாய்கின்றன. அவனை நோக்கி வீசப்பட்ட எறிகுண்டுக்குப் பலியாகிப் போனாள் செலா. சீனப் படைகள் அண்மித்து விட்டதை உணர்ந்தவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டான். சீனப்படைகள் நுராவை சுட்டு வீழ்த்தியது. அவனுக்கு ஊக்கமாயிருந்த செலாவின் நினைவாகிப் போனது இந்த ‘செலாக் கணவாய்’.  அவளுக்குத் துணையாக இருந்த நுராவின் நினைவாகிப் போன அந்த ஊர், இன்று நுரானங். அந்த நுரானங் எனும் ஊரில்தான் அவனுக்கான கோயில், ’ஜஸ்வந்த் கார்க்’ எனும் பெயரில்.

    ஜஸ்வந்த் கார்கில், அவன் இருந்த அறையில் இன்றும் அவன் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஐந்து வீரர்கள் வந்து அவன் அறையைத் துப்புரவாக்கி, அவன் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், உடுப்புகள் போன்றவற்றை நாள்தோறும் துடைத்து வைக்கின்றனர். அவன் இன்னமும் அங்கிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தவாங் பகுதி மக்கள் நம்புகின்றனர்.


    குளிர்காலம் நெருங்கியதை உணர்ந்துதான் ’தோக்லாம்’ எதிர்ப்பாடு கைவிடப்பட்டதா? எல்லையின் இருமருங்கிலும் இருநாட்டுப் படைகளும் தத்தம் தளபாடங்களைக் குவித்து வருவது, குளிர்காலம் முடிந்தவுடன் சமர் கொள்ளவா?? முந்தைய போரினை நினைத்துப் பாருங்கள் எனச்சொல்ல, இன்றைய இந்தியாவின் நிலை வேறு எனச்சொன்னது அணு ஆயுதங்களை மனத்திற்கொண்டா?? பூகோள அரசியற்போர் தென்சீனக்கடலில் துவங்குமா? தவாங், தோக்லாமில் துவங்குமா?? வினாக்களுக்கு வரைமுறையில்லை. அமைதியும் இணக்கமும் கைகூடுவதாக. காலம் மட்டுமே விடையளிக்கும். அது எந்தக் காலமானாலும், அந்தக் காலத்திற்கும் தப்பாமல் செலா, நுரா, ஜஸ்வந்த்சிங் கிடைத்துக் கொண்டே இருப்பர் என்பது மட்டும் உறுதி.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)

__________________________________

https://www.telegraphindia.com/1150604/jsp/nation/story_23835.jsp
https://prashantb.wordpress.com/2016/09/19/the-unsung-hero-of-1962-war-rifleman-jaswant-singh-rawat/
https://youtu.be/unuLqbyMtZM
https://youtu.be/-ACI9JmXgDM



***************

8) வணிகச் சமன்பாடின்மை 


    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது வணிகச் சமன்பாடின்மை(trade deficit) குறித்த சிக்கலாகும்.

    கிபி இரண்டாயிரத்தில் ஆண்டுகளுக்கிடையிலான இந்திய சீனா வணிகத்தில், இந்தியப் பொருட்கள் 1.35பில்லியன் அளவுக்கும், இந்தியாவுக்குள் சீனப்பொருட்கள் 1.56பில்லியன் அளவுக்குமாக இருந்து, இந்தியாவின் பற்றாக்குறை 0.21பில்லியன் டாலர்களாக  இருந்தது. வணிகம் படிப்படியாக உயர்ந்து, இன்றைக்கு இந்தியாவின் பற்றாக்குறை தோராயமாக 53பில்லியன் டாலராக இருக்கிறது. பற்றாக்குறை என்பதைக் காட்டிலும், சீனாவுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய பணத்தின் அளவு கூடிக்கொண்டே போவதால், அரசியல், புவிசார் உரிமை எனப் பல வகையிலும் சீனாவின் பிடி ஓங்கிக் கொண்டே இருக்கிறது.

    ஏன் இந்திய சீன வணிகத்தில் இந்த ஏற்றத்தாழ்வு? இந்தியா சீனாவிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குகிறது. ஆனால் சீனாவின் இந்திய இறக்குமதியானது, சீனாவுக்குத் தேவையான மூலப்பொருட்களான கனிமத்தாது(இரும்பு, துத்தநாகம், செம்பு உள்ளிட்ட கனிமங்கள், மதிப்பு மிகுந்த கற்கள் எனப் பலவும்) போன்றவற்றையாக மட்டுமே உள்ளன. சுருங்கக் கூறினால், மூலப்பொருட்களை குறைந்த விலைக்குக் கொடுத்து, அக்கடையிலிருந்தே அதனின்று செய்யப்பட்ட பொருட்களை பன்மடங்கு அதிகப்படியான விலைகொடுத்து வாங்குவதற்கு ஒப்பானதாகும். 1.56பில்லியன் டாலர்கள் சமன்பாடின்மையாக இருந்த நிலையானது, 53பில்லியன் டாலர்கள் சமன்பாடின்மையாகக் கடந்த பதினைந்தே ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது என்பதை, இந்தியர்களின் நுகர்வுக் கலாச்சாரம் நாட்டை எந்த அளவுக்கு இக்கட்டில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய தகவலாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

    இயற்கையின் விளையாட்டு எப்போதுமே விநோதமானதுதான். ஓரிடத்தில் ஏதோவொன்று மிகைப்படும்போதோ குறைபடும்போதோ, மறுகோடியின் எங்காவது ஓரிடத்தில் உரிய ஆப்பைச் சொருகி நிலையைச் சமன்படுத்திக் கொள்ளும். சீனாவின் பொருளாதார மேம்பாடு, அந்நாட்டு மக்களை இயற்கையினின்று வெகுதொலைவு கொண்டு போய் நிறுத்தியது. அதன் விளைவுகளில் ஒன்றாக, அந்நாட்டு மக்கள், இறைச்சி உண்பதை மேட்டிமையாக, பெருமையாக, நலம் பயப்பதாகக் கருதி இறைச்சிமிகுந்த உணவுகளை வெகுவாக உண்ணத் தலைப்பட்டனர். இறைச்சியின் தேவை பன்மடங்கு உயர்ந்து நாட்டையே உலுக்கி விட்டது.

    அதிகமான அளவில் இறைச்சி தேவைப்பட, ஊரகப்பகுதியில் இருந்தவர்கள் எல்லாரும் தத்தம் விவசாயத்தைக் குறைத்துக் கொண்டு, ஒவ்வொரு வீடுகளிலும் ஐம்பது முதல் நூறு பன்றிகள் வரை வளர்க்கத் துவங்கினார்கள். நகரங்களில் இருப்போரெல்லாம் தொழிற்சாலைகளில் வேலை செய்து பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்க, ஊரகங்களில் இருப்போரெல்லாம் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டார்கள். நாய் வளர்ப்பில் ஈடுபட்டார்கள். வசதியிருக்கிறவர்கள் 10 யுவான் கொடுத்து பன்றிக்கறி வாங்கி உண்டனர். வசதியற்றவர்கள் 5 யுவான் கொடுத்து அதே அளவு நாய்க்கறியை வாங்கி உண்டனர். விளைவு என்னவாக இருந்தது?

    பன்றி வளர்ப்பில் இடம்பெற்ற சிறுநீர்க்கழிவு, பீக்கழிவு போன்றவை மொத்த வடசீனாவின் நிலத்தடியை நஞ்சாக்கி, நீர்நிலைகளையும் ஆறுகளையும் மாசுபடுத்தியது. பன்றி வளர்ப்புக்கும் இதர கால்நடை வளர்ப்புக்குமான தண்ணீர்த் தேவை பன்மடங்கு உயர்ந்து, இயற்கைச் சூழலின் இயக்கத்தை முற்றாகச் சீர்குலைத்தது. தற்போதைய இறைச்சித் தேவையை, சரிபாதி அளவுக்குக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்து கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும் இறைச்சித் தேவையை இன்று வரை அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை. குடிசைத் தொழிலாக இருக்கும் பன்றி வளர்ப்பை ஒழித்து, பெரும்பண்ணைகள் மூலமாக பன்றிவளர்ப்பை மேற்கொண்ட முயற்சியில், பன்றிகள் வாயிலாக மக்களிடையே ஏற்பட்ட தீராத வியாதிகள் வெகுவாக ஒழிக்கப்பட்டன. ஆனாலும் தண்ணீர்த் தேவையும் சுற்றுச்சூழல் மாசும் கட்டுக்குள் வரவில்லையென்பதுதான் சீனாவின் பெருங்கவலை.

    சுற்றுச்சூழல் துன்பம் ஒருபுறம் நெருக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் பண்பாட்டுத் துன்பமும் சீன மக்களைப் பதம் பார்த்தது. ஊரகப்பகுதியில் வாழும் பழங்குடிமக்களும் ஏழை மக்களும் அவர்களுடைய வசதிக்கேற்ற நாய்க்கறியை உண்டு வருகின்றனர். நாய்க்கறி விழா எடுத்தனர். நகரங்களில் வாழும் நாகரிகம் மிகுந்த சீனர்களை அது வருத்தம் கொள்ளச் செய்தது. பெருவாரியாகத் திரண்டு நாய்க்கறி உண்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அரசாங்கம், அது நாட்டுப்புற மக்களின் வழக்காறு, பண்பாடு என்றெல்லாம் சொல்லிச் சமாளித்து வருகிறது.

    இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட இந்திய அரசு கடந்த பத்தாண்டுகளாகவே, இறைச்சி ஏற்றுமதியின் வாயிலாகச் சீனாவுடனான வணிகச் சமன்பாடின்மையை களைந்து விட எண்ணியது. ஆனால், இந்திய இறைச்சியில் சுகாதாரக் குறைபாடுகள் உள்ளனவென்று சொல்லி, இறக்குமதிக்குத் தடை விதித்தது. இதன்பொருட்டு, இந்தியாவிலிருந்து வியட்நாம் வாயிலாக வியட்நாம் கறியாய்ச் சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டது. அம்முயற்சி ஓரளவு பயனைக் கொடுத்தாலும், கிடைக்கும் இலாபத்தை வியட்நாமுடன் பங்கு போட வேண்டிய நிலை. இத்தருணத்தில் புதிதாய் அமைந்த இந்திய அரசு சீனாவுடன் நெருக்கிப் பேசியதில், நேரிடையாக இறக்குமதி செய்வதாகச் சொல்லி, கடந்த 2017 முதல் அத்தகைய இறக்குமதிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது சீனா. இருப்பினும் சீனப்பொருட்களின் நுகர்வும் இந்தியாவில் பெருகிவருவதால், சமன்பாடின்மையானது உடனே கட்டுக்குள் வரவில்லை.

    இந்தியாவின் பலம் என்பது, சேவை வழங்குதல், மருந்துப்பொருள் ஆராய்ச்சி, மென்பொருள் கட்டுமான ஆகியவையாகும். இத்தகைய பலத்தைத் தமக்கு உண்டாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவைத் துணைக்கு அழைக்கிறதேவொழிய, நேரிடையான வணிகத்துக்கு மறுப்புத் தெரிவித்தே வருகிறது சீனா. இந்த இழுபறியில் இந்தியா வளைந்து கொடுக்காமல் இருந்து வருகிறது. ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களைப் பெரும்விலை கொடுத்து வாங்கியது சீனா. உடனே தலையிட்ட இந்திய அரசு, அந்த வணிகத்துக்கான ஒப்புதலைக் கொடுக்காமல் மறுப்புத் தெரிவித்தது.

    சமன்பாடின்மையைக் குறைக்க இந்தியாவிற்கு இரு வழிகள்தாம் உள்ளன. முதலாவது, சீனச்சந்தையைப் புரிந்து கொண்டு சரியான பொருட்களை ஏற்றுமதியைப் பெருக்குவது. இறைச்சி உற்பத்தியைப் பெருக்கினால், இந்தியாவும் சீனாவாகும் ஆபத்து உள்ளது. இரண்டாவது, சீன இறக்குமதியை வெகுவாகக் குறைப்பது. முதலாவது வழிக்கு, அரசாங்கமும் தொழில்முனைவோரும் முயலவேண்டும். இரண்டாவது வழிக்கு, கடவுள், பக்தி, அவன், இவன், சாதி, சமயம் போன்ற உணர்வுக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, மிகையான நுகர்வுக் கலாச்சாரவொழிப்புக்கு வித்திட வேண்டியவர்கள் நாட்டு மக்கள்.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)

__________________________________

http://www.agriculture.gov.au/SiteCollectionDocuments/agriculture-food/food/publications/food-consumption-trends-in-china/food-consumption-trends-in-china-v2.pdf
http://www.straitstimes.com/asia/east-asia/more-in-china-are-eating-dog-meat-but-its-set-to-change
http://indianexpress.com/article/business/business-others/china-finally-agrees-to-import-buffalo-meat-from-india-4476301/
http://money.cnn.com/2015/08/05/news/economy/india-beef-exports-buffalo/index.html
https://www.theguardian.com/environment/2010/feb/09/china-farms-pollution
https://www.theguardian.com/world/2016/jun/20/chinas-meat-consumption-climate-change 


***************
 
9) புன்னகைக்கும் புத்தர்

    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit)  ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’புன்னகைக்கும் புத்தர்’ குறித்த சிக்கலாகும்.

    கதிரியக்க மருத்துவம், அணுமின்சக்தி வழங்கல், அணுவுலை கட்டுமானம் போன்ற அணுசக்தி தொடர்பான பணிகளை எல்லா நாடுகளும் செய்து விட முடியாது. அணுசக்தி விநியோக நாடுகள் குழுமத்தில், Nuclear Suppliers Group (NSG) உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் மட்டுமே செய்ய முடியும். அதைமீறி எந்த நாடாவது அவற்றைச் செய்யத் தலைப்பட்டால், அந்த நாடு உலகளாவிய பொருளாதாரத்தடைக்கு ஆட்பட நேரிடும். அந்தக் குழுமத்தில் இந்தியா இல்லை. எனவே அணுவுலை கட்டவோ, அணுசக்தி சார்ந்த இதரப்பணிகளை அடுத்த நாடுகளுக்கு வணிகரீதியில் பணியாற்றவோ அனுமதி கிடையாது. விண்வெளித் துறையில், பொருளாதாரத்தில் முக்கிய நாடாக விளங்கும் இந்தியா, இக்குழுமத்தில் உறுப்பினராய்ச் சேர விரும்புகிறது. புதிதாக ஒரு நாட்டை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால், தற்போது அக்குழுவில் இருக்கிற 48 நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படியான ஒப்புதலை அளிக்க சீனா மறுக்கிறது. ஏன்? ‘புன்னகைக்கும் புத்தர்’ குறித்து அறிந்து கொண்டால்தான், சீனாவின் மறுப்புக்கான பின்னணி புரியவரும்.

    1944ஆம் ஆண்டு ஹோமி பாபா அணுசக்தி குறித்த ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர், பிரதமர் நேருவுடன் நேரடித் தொடர்பில் இருண்டு கொண்டு படிப்படியாக துறைசார் பணிகளில் மேம்பாட்டினை அடைந்து வந்து கொண்டிருந்தார். அமெரிக்கா, கனடாவுடன் இணைந்து பணிகள் குறித்தான கருத்தாடலில் ஈடுபட்டிருந்தனர் நேருவும் பாபாவும். ஒருகட்டத்தில் இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி என்பதற்கு மாறாக, உள்ளூர்த் தயாரிப்பு என்பதில் உறுதியாக இருந்தனர் பாபாவும் நேருவும். 1960ஆம் ஆண்டு அணுமின் நிலையமொன்றை மராட்டியத்தின் தாராபூரில் நிறுவும் ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் நேரு. அப்போதுதான் நாம் ஏன் அணுவாயுதம் உற்பத்தி செய்யக் கூடாதென வினவினார். ’இன்னும் ஓர் ஆண்டுக் கால அவகாசம் கொடுங்கள், முடித்துக் கொடுக்கிறேன்’ என்றார் பாபா.

    பணிகள் நடந்து கொண்டிருந்தன. மோப்பம் பிடித்து விட்டது சீனா. எல்லையில் பதற்றம் தரும் வகையில் நடந்து கொள்ள, நேரு தடுப்புக் காவலரண்களை முன்னகர்ந்து நிறுவ, போர் வெடித்தது. பல மாற்றங்கள். பணிகள் தொய்வடையத் துவங்கின. நேருவின் மரணம் பாபாவை ஏமாற்றத்துக்குள் ஆழ்த்தியது. ஆனாலும், அவர் சொல்லிவிட்டுச் சென்ற பணியை முடித்தே தீருவேன் எனச் சூளுரைத்தார். அக்டோபர் 16, 1964 அன்று தம் பரிசோதனையொன்றை மிக இரகசியமாய்ச் செய்து முடித்துவிட்டு, அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் பாபா. ”அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் போல நாமும், அவர்களைக் காட்டிலும் குறைந்த செலவிலேயே செய்து விட முடியுமென அமெரிக்காவுக்கு ஆன பொருட்செலவு, நமக்குத் தேவையான பணத்தின் இலக்கு இவ்வளவு” என்று மீண்டும் 1966ஆம் ஆண்டு இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசினார். அடுத்த சில நாட்களில் விமான விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. அவர் சென்ற விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மான்ட் பிளாங்க் என்ற பகுதியில் மோதி விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அங்கு விமானத்தின் சிதறிய பாகங்கள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது. அநேகமாக இது அமெரிக்கா அல்லது சீனாவின் வேலையாக இருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது.

    பாபாவுக்குப் பின்னர் அந்த வேலையை விக்ரம் சாராபாய் அவர்களிடம் பணித்தார் லால்பகதூர் சாஸ்திரி. ’நான் காந்தியவாதி, என்னால் அழிவுக்கான ஆயுதங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட முடியாது’ என மறுத்துவிட்டார் விக்ரம் சாராபாய். சீனாவும் மேற்குலக நாடுகளும் அணுவாயுதத்தைச் சொல்லிச் சொல்லியே மிரட்டினர். பாகிசுதானுக்கு ஆதரவாக அமெரிக்கப் போர்க்கப்பலை இந்தியாவின் எல்லைக்கு அனுப்பினார் நிக்சன். இந்திரா கொந்தளித்தார். அந்தக் கப்பலுக்குப் பின்னாலேயே அணு ஆயுத ஏவுகணைகளுடன் வந்து நின்றது சோவியத் நீர்மூழ்கிக்கப்பல். பங்களாதேசு பிறந்தது. நிக்சன் பேசிய பேச்சுகளும் சீனாவின் பேச்சுகளும் இந்திராவுக்குள் கனன்று கொண்டிருந்தது.

    மே 18, 1974, புத்தர் பிறந்தநாள். திபெத்தியர்களின் புத்தர் பிறந்தநாள் திபெத்தில் இடம்பெறாமல் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தது சீனா. ஆனால் புத்தர் சிரித்தார். பாகிசுதான் எல்லையில், அணு ஆயுத வெடிப்புச் சோதனை வெற்றிகரமாய் நிகழ்ந்தது. உலகமே அதிர்ந்தது. ‘புன்னகைக்கும் புத்தர்’ என்று பெயரிட்டு, மிக இரகசியமாக அத்திட்டத்தைக் கையிலெடுத்திருந்தார் இந்திரா. அணு ஆயுதச் சோதனை முயற்சி குறித்து நாட்டின் இராணுவ அமைச்சர் ஜெகஜீவன்ராமுக்கே தெரிந்திருக்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் சுவரன்சிங்குக்கு மட்டும் சிலமணி நேரத்துக்கு முன்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா ஆர்ப்பரித்தது. அமெரிக்காவும் சீனாவும் பிரிட்டனும் அதிர்ந்து போய் இலண்டனில் கூட்டமொன்றைக் கூட்டினார்கள். இலண்டன் கிளப் என்று பெயரிட்டுக் கொண்டார்கள். அக்கூட்டத்தில் உருவானதுதான் இந்த ‘அணுசக்தி விநியோக நாடுகள் குழு, NSG’ என்பதாகும்.

    இந்தக் குழுமத்தில் இருந்த நாடுகளெல்லாம் இந்தியாவிடம் ’அணு ஆயுதப் பரவல் தடை’ ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். அதாவது, ஏற்கனவே இருக்கும் அணு ஆயுத வல்லரசு நாடுகளைத் தவிர மற்றவர்கள், புதிதாக எந்த அணுகுண்டு, அணு ஆயுதத்தைத் தயாரிக்க மாட்டோமென்று ஒப்புக் கொள்ள வேண்டும். இன்றுவரை இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒருபோதும் ஒப்புக் கொள்ளக்கூடாதென இந்திரா பலமுறை இந்திய மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

    உலகத்தின் பொருட்களை விற்கக்கூடிய சந்தையாக, பல்வேறு துறைகளில் முன்னணிக்கு வந்திருக்கும் நாடு, தாமும் இந்தக் குழுவில் உறுப்பினராக வேண்டுமென்கிறது. அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் தம் நிபந்தனையற்ற ஆதரவினைப் பகிரங்கமாகவே அறிவித்து விட்டன. இந்தியாவும் குழுவில் இடம் பெற்றுவிட்டால், ஆசியாவில், ஏன் உலக அளவிலும் தமக்கு நிகரான சக்தியாக இந்தியா வலுப்பெறுமென்கிற கவலை சீனாவுக்கு.

    பயங்கரவாதம், தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாகிசுதானை இக்குழுவில் சேர்க்க மேற்குலக நாடுகள் சேர்க்க விரும்பாது என்பதை மனத்திற்கொண்டு, ’இந்தியாவை உறுப்பினராகச் சேர்க்க வேண்டுமானால் பாகிசுதானையும் சேர்க்க வேண்டும். அதற்கு நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே இந்தியாவையும் உறுப்பினராக ஆக்கக் கூடாது’ என்று சொல்லி வருகிறது சீனா.

    சீனாவின் வணிகத்துக்குப் பெரும் சந்தையாக இருந்து வருகிறது இந்தியா. அதற்கு இடமளிக்காமல் கிடுக்கிப்பிடி போடுமா? எல்லையில் பதற்றத்தைக் கூட்டுவதன் மூலமும் தென்சீனக்கடலில் பதற்றத்தைக் கூட்டுவதன் மூலமும் சீனாவை வழிக்குக் கொண்டுவருமா?? மேற்குலக நாடுகளும் சில கிழக்காசிய நாடுகளும் இந்தியாவின் பின்னால் அணிவகுத்து வழங்கும் ஆதரவினை இந்தியா நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)

__________________________________

http://www.nti.org/learn/treaties-and-regimes/nuclear-suppliers-group-nsg/
Spying on the Bomb: American Nuclear Intelligence from Nazi Germany to Iran, Jeffrey T. Richelson


***************


10) பயங்கரவாதம்

    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’பயங்கரவாதம்’ குறித்த சிக்கலாகும்.

    பயங்கரவாதம் என்பது இந்தியா, சீனா, பாகிசுதான், ஆப்கானிசுதான் ஆகிய நாடுகளுக்குள் ஒன்றையொன்றை பாதிக்கக் கூடியவொன்றாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் குறித்தவை பிரச்சினைக்குரியதாக இருக்கின்றன. சீனாவுக்கு, புத்தசமயம் மேலோங்கியிருக்கிறதும் தன்னாட்சியுடன் இருக்கிறதுமான திபெத் மாநிலமும், இசுலாம்சமயம் மேலோங்கியிருக்கிற சின்சியாங் மாநிலமும் பிரச்சினைக்குரியவை ஆகும். பாகிசுதானுக்கு பலூச் இன மக்கள் வாழும் பலுச்சிசுதான், வடமேற்கு மாகாணம், ஆப்கானிசுதான் ஆட்சியைக் கைப்பற்றப் போராடும் தலிபான்கள் செறிவாக இருக்கும் எல்லைப்பகுதிகளும், ஆப்கானிசுதானுக்குத் தலிபான்களும் சின்சியாங் மாகாண விடுதலை கோரும் கிளர்ச்சியாளர்களும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன.

    தலாய் லாமாவுக்குப் புகலிடம் கொடுத்தும் ஆதரவளித்தும், திபெத் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தியா எனச் சொல்கிறது சீனா. பலுசிசுதான் கேட்டுப் போராடும்  பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவியளிக்கிறது என்பது பாகிசுதானின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

    பயங்கரவாதிகளான தலிபான்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து ஆப்கானிசுதானுக்கு எதிராகப் பாகிசுதான் செயற்படுகிறது என்பது ஆப்கன் மற்றும் இதர நாடுகளின் குற்றச்சாட்டாகும்.

    திபெத் போராளிகளுக்கும், சின்சியாங் மாநிலத்திலிருந்து கிழக்கு துர்க்மினிசுதான் கேட்டுப் போராடும் இசுலாம் போராளிகளுக்கு ஆப்கன் களமாக இருந்து செயற்படுகிறது என்பது சீனாவின் குற்றச்சாட்டு.

    காசுமீர்ப் பயங்கரவாதிகளுக்குப் பாகிசுதானும், வடகிழக்குப் பகுதி கலகக்காரர்களுக்குச் சீனாவும் தூண்டுதலாய் இருக்கின்றன என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.

    இப்படியாக நான்கு நாடுகளுமே ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஐநா சபையால் ஜெய்சு இ மொகம்மது எனும் அமைப்பு கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் தலைவரான மசூது என்பாரை இன்னமும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கவில்லையெனச் சொல்லி, அமெரிக்காவும் பிரிட்டனும் இரு முறை விண்ணப்பித்தும் சீனா தன்னுடைய ‘வீட்டோ’ பாவித்து, பயங்கரவாதி என அறிவிக்கும் முடிவுக்குத் தடை போட்டுவிட்டது. இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் என்ன சிக்கல் என்பதையறிந்து கொள்ள, மசூது அசார் பற்றிய பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

    இந்தியாவுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டதாக, 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அசார் மசூது. அதன் பின்பு, 1995ஆம் ஆண்டு மலையேறும் பயிற்சிக்காக இந்தியா வந்திருந்த வெளிநாட்டினரைக் கடத்தி வைத்துக் கொண்டு, சிறையிலிருந்த அசார் மசூதுவை விடுதலைச் செய்யக் கோரி, முயற்சி பயனளிக்காமல் போகவே 14 வெளிநாட்டினரும் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.  தொடர்ந்து, அசார் மசூதுவின் தம்பியின் தலைமையில் தலீபான்களின் கட்டுப்பாட்டிலிருந்த காந்தகார் விமான நிலையத்திற்கு  இந்திய விமானமொன்று நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டது. அவ்விமானத்தையும் பயணிகளையும் மீட்கும் பொருட்டு, அசார் மசூதுவும் உடனிருந்த நால்வரும் இந்திய அரசால் காந்தகார் கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர் பாகிசுதான் சென்று, அங்கிருந்து கொண்டே அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதச் செயலிலும்,  2008 மும்பைத் தாக்குதல், 2016 பதான்கோட்டைத் தாக்குதல் போன்றவற்றில் மசூதும் அவரது தம்பியும் மூளையாகச் செயற்பட்டதற்காகவென சர்வதேச காவற்துறையால் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இப்படியாக இந்திய மண்ணில் நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொறுப்பானவரை பயங்கரவாதியாக அறிவிக்காமல் முட்டுக்கட்டை போடுவது சீனாவின் பயங்கரவாதம் குறித்த இரட்டை நிலைப்பாட்டைக் காண்பிக்கிறது என்பது இந்தியாவின் வாதம்.

    சீனா ஏன் முட்டுக்கட்டை போடுகிறது?

    பாகிசுதானைத் தவிர, இருக்கும் எல்லையோர நாடுகள் எவற்றோடும் சுமூக உறவில்லை சீனாவுக்கு. பாகிசுதானிடமும் முழுமுற்றாகச் சுமூகம் எனச் சொல்லிவிட முடியாது. சீனாவிலிருந்து பாகிசுதானின் குவாடர் துறைமுகத்துக்குச் சாலையமைக்கும் பணிக்காகவும் இதர நிறுவனங்களில் பணிபுரிவதற்காகவும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் சீனர்களும், சுற்றுலாவுக்காக இருபதாயிரம் சீனர்களும் பாகிசுதானுக்குள் இருந்து வருகின்றனர். பாகிசுதானுக்குள் இருக்கும் பயங்கரவாதிகள் ஏற்கனவே சீனர்களைக், கொல்வது, பணம் கேட்டுக் கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் இம்முயற்சிக்குத் துணை போனால், தம் குடிமக்களுக்கும் சாலையமைக்கும் பணிக்கும் பின்னடைவு ஏற்படுமென அஞ்சுகிறது சீனா. சுமூக நாடாக இருக்கும் பாகிசுதானைப் பகைத்துக் கொண்டால் பல வழிகளிலும் தனக்குச் சிக்கல் வருமென்றும் அஞ்சுகிறது. குறிப்பாக, பாகிசுதான் தாலிபான்கள் வாயிலாகச் சீனாவின் சின்சியாங் பிரிவினையும் பயங்கரவாதச் செயல்களும் ஊக்கம் பெறக்கூடுமென நினைப்பதும் ஒரு காரணம். இதெல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியா பாகிசுதான் காசுமீர்ப் பிரச்சினையை உயிர்ப்போடு வைத்துக் கொண்டு, இந்தியாவுக்கான நெருக்கடியைத் தேவைப்படும் போதெல்லாம் கொடுத்துக் கொள்ளலாமென்பதும் ஒரு காரணமாகும். மேலும், நேரிடையாக நெருக்கமில்லாத வளைகுடா நாடுகளுடன் தன் வர்த்தகத்தைப் பேண, பாகிசுதானை நம்பியே இருக்கிறது சீனா.
   
    அசார் மசூதுவைப் பயங்கரவாதி என அறிவிப்பதன் மூலம், உள்நாட்டுப் பிரச்சினைகள் தலைதூக்குமெனப் பாகிசுதானும் அஞ்சுகிறது. பலுசிசுதான் உளவாளியாக வந்து பாகிசுதான் சிறையிலிருக்கும் இந்தியாவைச் சார்ந்த ஜாதவை விடுவிக்கத்தான் இந்தியா இதை வலியுறுத்துகிறது என்பதும் பாகிசுதானின் வாதமாக இருந்து வருகிறது.

    இப்பிரச்சினையில் அமெரிக்காவும் இதர நாடுகளும் சீனாவுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கத்தான் போகின்றன. வேண்டப்பட்ட பயங்கரவாதி, வேண்டப்படாத பயங்கரவாதி எனும் இரட்டை நிலையை எடுத்திருக்கும் சீனாவின் நிலையை நாங்கள் உலகநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்கிறது பிரான்சு. அடுத்தடுத்து பாகிசுதானுக்குள் இருக்கும் வெவ்வேறு நபர்களின் மீது பயங்கரவாத அறிவிப்புக் கோரிக்கை வைக்கவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன. எல்லாவற்றையும் சீனாவால் புறந்தள்ளி விட முடியுமா? ஆப்கானிசுதான், பாகிசுதான், சின்சியாங்(கிழக்கு துர்க்மினிசுதான்), திபெத் ஆகிய நிலப்பரப்பில் வேண்டிய பிரச்சினைகளை வேண்டிய அளவுக்கு வைத்திருக்கும் சீனா என்ன செய்யப் போகிறது?? விடை காலத்தின் கையில்.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)

__________________________________

http://www.news18.com/news/india/china-scuttles-indias-effort-to-get-masood-azhar-listed-as-global-terrorist-again-1565465.html
https://www.dawn.com/news/1365503
https://www.voanews.com/a/china-warns-citizens-pakistan-possible-terror-attacks/4155820.html



***************

11) கொந்தளிக்கும் தென்சீனக் கடல்


    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம் ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’தென்சீனக் கடல் பங்கீடு’ குறித்த சிக்கலாகும்.

    இன்றைய தேதியில் மிகச்சிக்கலானதும் பதற்றமானதும் மோதலை விளைவிக்கக் கூடியதுமான பிரச்சினை எதுவென்றால், அது தென்சீனக்கடல் பங்கீட்டுப் பிணக்கு என்றே சொல்லலாம். தென்சீனக் கடற்பகுதியில், சீனா, அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், இந்தியா, புருணை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்சு, வியட்நாம், ஜப்பான், தைவான், கம்போடியா, கிழக்கு திமோர், லாவோசு, தாய்லாந்து ஆகிய நாடுகள் நேரிடையாகப் பங்கு பெறுவதோடு, இவற்றுள் பெரும்பாலான நாடுகளின் இராணுவம், கப்பல், போர்விமானங்களென யாவும் ஒன்றையொன்று உறுத்திக் கொண்டும் முறைத்துக் கொண்டும் அங்குமிங்குமெனத் திரிந்து கொண்டிருக்கின்றன. களத்தில் இருக்கும் தம் கப்பல் மற்றும் விமானங்களுள், கிட்டத்தட்ட 65 விழுக்காட்டுக்கும் மேலானவை தென்சீனக்கடல் ரோந்துப் பணிகளுக்காகவும் பாதுகாப்புப் பணிகளுக்காகவும்தான் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிறது அமெரிக்கா.

    அப்படியென்ன இருக்கிறது தென்சீனக்கடலில்? உலகின் 40 விழுக்காட்டு வர்த்தகத்தைச் சுமந்து போகிற கப்பல்கள் கடந்து போகும் 1.5 நாட்டிகல் மைல் அகலமே கொண்ட மலாக்கா நீரிடை இப்பகுதியின் தென்கோடியில் இருக்கிறது. இந்த நீரிடையை மறித்து விட்டால் போதும், சீனாவுக்கு எரிபொருள் எதுவும் போகாது. இந்தியாவின் வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் தடைப்பட்டுப் போகும். வளைகுடா நாடுகளிலிருந்து எரிபொருள் எதுவும் இந்தவழியாக ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் போகாது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 250 கப்பல்கள் இவ்வழியாகச் செல்கின்றன. இந்நீரிடையைக் கடந்து உள்ளேபோனால் கடலுக்கு இரு மருங்கிலும் பல நாடுகள் உள்ளன. இருகரைகளுக்குமிடையே ஆங்காங்கே சிறுசிறு தீவுகளும் உண்டு. கூடவே விலைமதிப்பு மிக்க இயற்கைவளம், மீன்வளம், கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவையும் இக்கடலுக்கடியில் பொதிந்து கிடக்கிறது.


    கரைகளில் இருக்கும் நாடுகள், அவரவர் கரைகளை அண்மித்து இருக்கும் கடற்பரப்பும் தீவுகளும் அந்தந்த நாட்டுக்குச் சொந்தமானதென உரிமை கோருகின்றனர். சீனாவோ, ஆறு புள்ளி வரைகோடு எனவொன்றைச் சொல்லி கடலின் பெரும்பாலான பரப்பும் தனக்கே சொந்தமென உரிமை கோருகிறது. சிறுசிறு திட்டுகள் கண்ட இடமெல்லாம் மூன்று மைல் சுற்றளவுக்குச் செயற்கையாகத் தீவுகளை அமைத்து அதன்மேல் விமான ஓடுபாதைகளை நிறுவுகிறது. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, இப்பகுதியிலிருக்கிற ஒவ்வொரு நாட்டின் கரையிலிருந்து 200 நாட்டிக்கல்மைல் தொலைவுக்குட்பட்ட கடற்பரப்பு அந்தந்த நாட்டுக்குச் சொந்தமெனத் தீர்வளித்தது பன்னாட்டு நீதிமன்றம். துச்சமெனத் தூக்கிப் போட்டது சீனா.

    முதன்முதலாக அமெரிக்காவின் நேசநாடான பிலிப்பைன்சு அதன் கட்டுப்பாட்டில் இருந்த தீவுகளில் 1970ஆம் ஆண்டு துவக்கம் ஆய்வுகளை நடத்தி, 1984ஆம் ஆண்டு பெட்ரோல், எரிவாயு இருப்பதைக் கண்டுபிடித்தது. அதுவரையிலும் கண்டுகொள்ளாமல் இருந்த சீனா, ஒரேயடியாகத் தென்கோடி வரையிலும் தன்னுடை எல்லைக்குட்பட்டதென அறிவித்தது. தீவுகளில் மீன்பிடிக்கச் சென்ற பிலிப்பைன்சு மீனவர்களை விரட்டியடித்தது சீனா.  இது முதலில், பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்குமிடையேயான தகராறு என்கிற அளவிலாக மட்டுமேயிருந்தது. பிலிப்பைன்சுக்குத் துணையாக அமெரிக்க இராணுவம் அவ்வப்போது உதவிகளைச் செய்து வந்தது.

    2011ஆம் ஆண்டு மேற்குக்கரையில் இருக்கும் வியட்நாம் இந்தியாவை அழைத்து, தனக்கு உரிமையுள்ளதாகக் கருதப்படும் கடற்பரப்பிலும்  தீவுகளிலும் பெட்ரோல், இதர வளங்கள் இருக்கிறதாவென ஆராயச் சொன்னது. அப்பணிகளின் நிமித்தம் ஜூலை 22, 2011 அன்று இந்தியக் கப்பற்படைகள் தென்சீனக் கடலுக்குள் வந்தன. சீன இராணுவம் இந்தியக் கப்பல் அத்துமீறித் தன் பகுதிக்குள் வருவதாகவும் திரும்பிச் செல்லுமாறும் கட்டளையிட்டது. தாம் பன்னாட்டுக் கடல் வழியில் மட்டுமே வந்து கொண்டிருப்பதாகப் பதிலளித்தது இந்தியத் தரப்பு. தொடர்ந்து வியட்நாம் தரப்பு குறிப்பிட்ட எல்லைக்குள் சென்று, இந்திய ஆய்வாளர்கள் அவர்தம் பணியைத் தொடர்ந்தனர்.”பிரச்சினைக்குரிய பகுதிக்குள் மற்ற நாடுகளுக்கு இடமில்லை. தொடர்புடைய நாடுகள் பேசித் தீர்த்துக் கொள்ளும்” என்று சீன வெளியுறவுத்துறை எச்சரித்தது. ”எங்கள் நாட்டு எண்ணெய் எரிவாயுக்கழகத்துடன் பெட்ரோவியட்நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படியே நாங்கள் செயலாற்றுகிறோம். மற்றவர் தகராறில் நாங்கள் ஈடுபடவில்லை” எனப் பதில் கொடுத்தது இந்தியா.

    இதைக் கண்ட சீனா, போர்க் கப்பல்களை வரவழைத்து தீவுகளைக் கைப்பற்றும் பணியையும் தீவுகளை உருவாக்கும் பணியையும் செய்யத் துவங்கியது. பிலிப்பைன்சு, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் அமெரிக்காவை அழைத்தன. கடற்பரப்புக்கு மேல் செல்லும் விமானங்கள் தம்மிடம் அனுமதி பெற்றுத்தான் பறக்க வேண்டுமெனச் சீனா மிரட்டியது. சீனாவின் கப்பல்களைப் பின் தொடர்ந்து வரத்துவங்கின அமெரிக்கப் போர்க்கப்பல்களும். வானத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் பறந்தன. ’தொடர்பில்லாத நாடுகள் தேவையில்லாமல் அத்துமீறுகின்றன; கடும் விளைவுகள் நேரும்’ என்று சொல்லி சீனா கொந்தளித்தது. ”அமைதியை நிலைநாட்டவும், பன்னாட்டுப் பொதுவெளியைப் பாதுகாக்கவும் அமெரிக்காவுக்கு உரிமையுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபை மூலமாகவே பிரச்சினையை அணுக வேண்டுமென அமெரிக்கக் காங்கிரசு தீர்மானம் நிறைவேற்றி, தென்சீனக் கடலைப் பாதுகாக்குப் பொறுப்புக்குக் கூடுதல் இராணுவத்தை அனுப்பியது.

    இடையே பிலிப்பைன்சு தொடர்ந்த மற்றொரு வழக்கில், பன்னாட்டுக் கடற்பரப்பு நீதிமன்றம் பிரச்சினைக்குரிய தீவுகளிலிருந்து சீனா வெளியேற வேண்டுமெனவும் அவை பிலிப்பைன்சுக்கு உரியவையென்றும் தீர்ப்பளித்தது.

    தென்கிழக்காசிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளான வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் நேரிடையான தலையீடு இதில் இருக்க வேண்டுமென வலியுறுத்தியது. இந்தியப் போர்க்கப்பல் இம்முறை தன்னிச்சையாக அப்பகுதிக்குச் சென்றது. தமது வர்த்தகத்தில் 50% விழுக்காட்டுக்கும் மேல் இந்தப்பகுதியின் வழியாகத்தான் நடக்கிறது. பன்னாட்டு வழித்தடப் பயனர் என்கிற முறையில், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கடமை தமக்கு உள்ளதாக வெளியான அறிவிப்பு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.

    சீனாவின் நெருக்கமான நாடாக இருந்த சிங்கப்பூர், எதுவானாலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு சீனா நடந்து கொள்ள வேண்டுமென அறிவிப்புச் செய்ததோடு இந்தியாவின் போர்ப்படைக் கப்பலோடு இணைந்து தம் பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டது. அதுமட்டுமின்றி, தம் பகுதியில் இந்தியப் போர்ப்படைக் கப்பல்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது சிங்கப்பூர். விடுதலை பெற்றதிலிருந்தே இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பேணி உதவி பெற்ற வந்த மலேசியா, இதன்பொருட்டு, இந்தியாவின் பங்கினை மேலும் கூட்டிக் கொண்டது. தொடர்ந்து வியட்நாம், ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தியக் கப்பற்படைக் கப்பல்களுடன் இணைந்து தென்சீனக் கடலில் பயிற்சிகளை அவ்வப்போது நடத்தி வருகின்றன.

    வரலாற்று ரீதியாக இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்ததில்லை. அந்த நாடுகளெல்லாம் இந்தியாவை யே முன்னின்று நடத்தச் சொல்கின்றன. அவற்றுக்கு இணைப்புப் பாலமாக இந்தியா இருப்பதையே அமெரிக்காவும் விரும்புகிறது.அமெரிக்காவிடமிருந்து விலகிக் கொண்டிருக்கும் பிலிப்பைன்சும் இந்தியாவின் உதவியப் பெற முயன்று வருகிறது.

    இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்சு, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பு, தம் உறுப்பு நாடுகளின் கடல் எல்லையைப் பாதுகாக்குப் பொறுப்புக்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டுமென, இந்தியக் குடியரசு நாள் விழாவில் கோரிக்கை விடுக்க, தென்சீனக்கடலை ஏகபோகமாக ஆக்கிரமிக்க சீனாவை அனுமதிக்க மாட்டோமெனச் சூளுரைத்திருக்கிறது இந்தியா.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)


__________________________________

https://youtu.be/eeDhC8O5C-s
https://www.forbes.com/sites/panosmourdoukoutas/2017/07/07/vietnam-and-india-to-spoil-chinas-south-china-sea-ambitions/#71e81a6d1af7
http://www.dw.com/en/india-asean-agree-on-maritime-cooperation-as-china-asserts-power/a-42321422


***************

12) மாலத்தீவுகள்

    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம், தென்சீனக் கடல் பங்கீடு ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’மாலத்தீவுகள்’ குறித்த சிக்கலாகும்.

    மாலைத்தீவுகள் (Maldives) அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகின்றன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில்மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.

    1988இல் இடம் பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த கிளர்ச்சியின் போது இந்திய விமானப்படை களத்தில் இறங்கி, ஒரு மணி நேரத்துக்குள்ளாகக் கிளர்ச்சியை முறியடித்து ஆட்சியை நிலைநாட்டியது. 1978ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரையிலும் அப்துல் கயூம் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் நாட்டினை மக்களாட்சியை நோக்கிக் கொண்டு சென்றார்.

    2008ஆம் ஆண்டு நடந்த மக்களாட்சித் தேர்தலில் மொகம்மது நசீது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். 2004ஆம் ஆண்டு சுனாமியில் சிக்கிய மாலத்தீவினைப் புனரமைப்பதற்காக வாங்கப்பட்ட கடன்சுமை இவரது ஆட்சிக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. கயூம், நசீது இருவருமே இந்தியாவுடன் நட்பு பாராட்டுபவர்கள்.

    2013ஆம் ஆண்டு சீன ஆதரவாளரும் துணை அதிபருமான அப்துல்லா யாமீன், அதிபர் வாகித் அசீனைப் பதவியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதோடு, நசீதுவின் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டினை முன்வைத்து 13 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை சுமத்தினார். இவரது ஆட்சிக்குப் பிறகு எல்லாமும் தலைகீழாகிப் போனது. மாலத்தீவில் இந்தியத் தூதரகம் மட்டுமே இருந்து வந்தது. இவரது ஆதரவினால் சீனத் தூதரகம் அமைந்தது. துறைமுகப் பயன்பாட்டினைச் சீனாவுக்கு வழங்கினார். இந்திய நிறுவனம் மேற்கொண்டிருந்த விமானநிலையக் கட்டுமானத் திட்டத்தை நிறுத்தி விட்டு, ஒப்பந்தத்தைச் சீனாவுக்கு மாற்றிக் கொடுத்தார். பல ஒப்பந்தங்கள் சீனாவுடன் கையெழுத்தானது. எதுவுமே பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. ஒரு மணி நேரத்திற்குள்ளாக மிரட்டி கையெழுத்துகள் பெறப்பட்டன.

    இந்நிலையில்தான் சிறையிலிருக்கும் முன்னாள் அதிபர் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ”சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இந்தியா உடனே தலையிட்டு, குற்றமற்றவரும் மக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தற்போது வெளிநாட்டில் இருப்பவருமான ஹசீன் நசீதுவின் ஆட்சியை அமைத்திட வேண்டும்” என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் நீதிபதிகளும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் மறைமுகப் போர் இதுவென்றே உலகத்தின் பார்வையில் பார்க்கப்படுகிறது. முந்தைய காலத்தைப் போல தன் இராணுவத்தை இந்தியா அனுப்புமா? இருக்கும் கடனில், எழுபது விழுக்காட்டுக் கடனைத் தன்னிடம் வாங்கியிருக்கும் மாலத்தீவினை, தம் வசப்படுத்திக் கொள்வது சீனாவா??  இந்தியாவின் புறக்கொல்லையைத் தன் வசமாக்கிக் கொள்ளும் முயற்சியா?? உலக அரசியல் நோக்கர்கள் மனத்தில் எழும் கேள்விகள்தான் இவை.


(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)


__________________________________

https://avas.mv/en/44019
http://www.firstpost.com/india/maldives-crisis-male-is-latest-theatre-for-india-china-proxy-war-new-delhi-must-play-a-more-proactive-role-4336617.html
http://www.aljazeera.com/news/2018/02/maldives-declares-state-emergency-crisis-deepens-180205153207323.html 



***************
13) மணிக்கொடி

    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம், தென்சீனக்கடல் பங்கீடு, மாலத்தீவு அரசாட்சி ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக இடம் பெறுவது ’இந்தியப் பெருங்கடல் மணிக்கொடி(String of Pearls (Indian Ocean))' குறித்த சிக்கலாகும்.

    சீனாவின் பொருளாதாரம் உற்பத்தித்திறன்சார் பொருளாதாரமென்றும்,  இந்தியாவின் பொருளாதாரம் அறிவுத்திறன்சார் பொருளாதாரமென்றும் வர்த்தக உலகில் வரையறுக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மென்பொருட்துறை, மருந்துப்பொருள் ஆய்வு, வானவியல் தகவல் தொழில்நுட்ப உயர்பணி வழங்கல் போன்ற துறைகள் சார்ந்தவற்றை அயல்நாட்டிற்கு வழங்குதலைக் கொண்டு இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. மாறாக, மனித வாழ்வியலுக்குத் தேவையான சகல பொருட்களையும் பெருமளவிலான எண்ணிக்கையில் மொத்தமாக உற்பத்தி செய்வதன் மூலம், குறைந்த விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்து உலகப்பொருளாதாரத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சீனா.

    அறிவுத்திறன்சார் வர்த்தகத்தை நம்பியிருக்கும் நாடுகளை விட, உற்பத்தித்திறன்சார் நாடுகளுக்கு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் குறைவான போக்குவரத்துச் செலவில் சந்தைப்படுத்தப்பட வேண்டிய தேவையிருக்கிறது. அதன் பொருட்டு, கடல் மற்றும் தரைவழிப் போக்குவரத்தினைத் தனக்கு ஏதுவாக அமைத்துக் கொள்வதிலும், தன்னுடைய வல்லாண்மையை போக்குவரத்துத் துறையில் நிலைநாட்டிக் கொள்ளவும் கடந்த 15 ஆண்டுகளாகவே பெரும் பொருட்செலவில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாக்கியும் வருகிறது சீனா. தன்னுடைய பெருநிலப் பகுதியிலிருந்து உலகின் ஏனைய இடங்களுக்குச் செல்லும் தரைவழிப் பாதைகளை, ’ஒரு சாலை, ஓர் இணைப்பு One Road One Belt’ எனும் திட்டத்தின்கீழ் உருவாக்கி, பல்வேறு நாடுகளுடனான போக்குவரத்தினைக் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் அமைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே, கடல்வழிப் பாதைகளையும் தனக்கு ஏதுவாக அமைத்து வருகிறது. அப்பணிகள் குறித்த கருத்தாக்கத்தின் பெயர்தான், ‘இந்தியப் பெருங்கடலின் மணிக்கொடி’ என்பதாகும்.

    அமெரிக்காவைச் சார்ந்த ’பூஸ் அலன் ஹாமில்ட்டன்’ எனும் மேலாண்மை நிறுவனம், சீனா தன் கடல்வழிப் போக்குவரத்துக்காக இப்படியிப்படியான நகர்வுகளை மேற்கொள்ளக்கூடுமெனச் சொல்லி, ஒரு கருத்தாக்கத்தினை  ’இந்தியப் பெருங்கடலின் மணிக்கொடி’ எனும் பெயரில் முதன்முதலில், இரண்டாயிரமாவது ஆண்டுவாக்கில் வெளியிட்டது. அன்றிலிருந்துதான் இச்சொல்லாடல் உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்ததோடு, சீனாவும் அத்தகைய நடவடிக்கைகளையே மேற்கொண்டும் வருகிறது. இந்தியப் பெருங்கடற்பகுதியில் உள்ள சிறுசிறு நாடுகளைத் தன்வழிக்குக் கொணர்ந்து, தனக்கு ஏதுவான துறைமுகங்களை கட்டமைத்தும் மேம்படுத்தியும் வருவது வர்த்தகப் பயன்பாட்டுக்கெனக் கூறிக்கொண்டாலும், இந்தியாவை முற்றுகையிடக் கூடிய வகையில் இராணுவப் பயன்பாட்டுக்கும் சீனா பயன்படுத்திக் கொள்ளத் தயங்காது என்பதால், அதை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா.

    தற்போதைக்கு இந்தியப்பெருங்கடல் வழியாகத்தான் சீனாவுக்குத் தேவையான எரிபொருளில் 75 விழுக்காடு சென்று கொண்டிருக்கிறது. அக்கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து மலாக்கா கால்வாய் வழியாகத் தென்சீனக் கடலுக்குள் புகுந்து செல்ல வேண்டியிருப்பதால், தென்சீனக் கடலையொட்டிய சில அயல்நாடுகளிலும் பல துறைமுகங்களை உருவாக்கியும் மேம்படுத்தியும் வருகிறது சீனா.

    இம்மணிக்கொடியில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆங்காங் துறைமுகம்(1) முதல்மணியாகவும், சீனாவின் சன்யா(2) துறைமுகம் இரண்டாவது மணியாகவும், பிரச்சினைக்குரிய தீவுகளில் சில மணிகளும் இடம் பெற்று, ஆறாவது மணியாக தாய்லாந்துத் துறைமுகமும் இடம் பெறுகின்றன. இது வரையிலுமான மணிகளால் இந்தியாவின் கவனயீர்ப்புத் தேவையில்லை. ஆனால் இதற்குப் பிறகு இடம் பெறும் மணிகள்தாம் இந்தியாவைச் சுற்றிவளைத்தாற் போல அமைந்திருக்கின்றன. ஏழாவது மணியாக, இந்தியாவின் போர்ட்பிளேயர் தீவுக்கு அருகிலேயே இருக்கும் மியான்மார் தீவில் சீனாவின் துறைமுகம் அமைந்திருக்கிறது. எட்டாவதாக மியான்மார்ப் பெருநிலத்தின் கியாக்பு துறைமுகமும் ஒன்பதாவதாக பங்களாதேசின் சிட்டகாங், பத்தாவதாக சிறீலங்காவில் இருக்கும் அம்பாந்தோட்டையும், பதினொன்றாவதாக மாலத்தீவின் மாரோவும், பன்னிரண்டாவதாக பாகிசுதானின் குவாடர் துறைமுகமும் இடம் பெற்றிருக்கின்றன. குவாடருக்குப் பிறகு, மாண்டெப் குறுக்கு நீரிடை வழியாக வளைகுடாப் பகுதியான சூடான் வரையிலும் நீண்டு, அதற்குப் பிறகு ஆப்பிரிக்க நாடுகளிலும் மேலும் பல துறைமுகங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறது சீனா.

    இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மார், பங்களாதேசு, இலங்கை, மாலத்தீவு, பாகிசுதான் ஆகிய நாடுகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லி, அதற்கான ஒப்பந்தங்களைப் போட்டு, அத்திட்டங்களுக்குச் செலவான தொகையை உங்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லையென்பதால், இந்தந்தத் துறைமுகங்கள், சாலைகளைச் சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள் என்கிற முறையில் தன் வல்லாதிக்கத்தைச் செலுத்தி வருகிறது சீனா. அண்மையில், உகாண்டா நாட்டில் பெருவழிச் சாலையொன்றை அமைத்துத் தருகிறேனெனச் சொல்லி, உகாண்டாவையே இரண்டாகப் பிரித்ததோடு அதன் மீதான கடனையும் பெருமளவில் சுமத்தி விட்டிருக்கிறது சீனா. அந்நாடும் விரைவில் சீனாவிடம் எழுதிக் கொடுக்கப்படலாமென்பது நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

    இராஜபக்சே ஆட்சியின் போது இலங்கையிலும் சீன நிறுவனங்கள் பல திட்டங்களில் பெருமளவு முதலீடு செய்தன. இராஜபக்சேவின் மகன் நேரிடையாக பல கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதன் வாயிலாக, இலங்கையின் சொத்துகள் பல கைமாறிப் போய்க் கொண்டிருக்கின்றன என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் மனித உரிமை மீறல், போர்க்காலக் குற்றங்களுக்காக இராஜபக்சேவின் மீது குற்றப்பத்திரிகை கொண்டு வந்தபோது, சீனா செய்த உதவிக்குத்தான் அம்பாந்தோட்டை சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்டதென்றும் கூறுகின்றனர். ”எங்களை நாங்களே விற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழி எங்களுக்கில்லை” என்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் இரவி கருணாநாயகே. பெரும்பொருட் செலவில் துறைமுகம், போக்குவரத்துச் சாலைகளெனப் பலதையும் சீனாவுக்காகச் சீனாவே கட்டமைத்து விட்டு, பணமும் கேட்க, திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது இலங்கை. இப்படித்தான் பல நாடுகளும் சீனாவுடன் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இந்தியா என்ன செய்யப் போகிறது? எங்கெல்லாம் சீனாவின் துறைமுகம் இருக்கிறதோ, அதற்கு மாற்றாக இந்தியாவும் துறைமுகங்களைக் கட்டமைத்து வருகின்றன. இந்தியப் பெருங்கடலின் தீபகற்பம் இந்தியா என்பதால் மூன்று பக்கங்களிலுமாக இந்தியாவுக்கு ஏதுவான வாய்ப்புகள் பல இருக்கின்றன. இருப்பினும் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தென்சீனக்கடல் நாடுகள், ஈரான், குவைத், ஓமன், கத்தார், அமீரகம், துர்க்மினிசுதான், உசபெக்கிசுதான், கிர்கிசுதான், கசகசுதான், மங்கோலியா முதலிய நாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்தும், இராணுவ ஒப்பந்தங்கள் போட்டும் இணையான அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் முன் இருக்கும் சவால் ஒன்றே ஒன்றுதான். ஆசியான் நாடுகளுக்கும் சீனாவுக்குமிடையேயான வர்த்தகம் 571 பில்லியன். இந்தியாவின் வர்த்தகம் 71 பில்லியன். ஆசியான நாடுகளுக்கு வேண்டிய பாதுகாப்பு, இராணுவத் தளபாடங்களை வழங்க முற்பட்டிருப்பதன் வாயிலாக இந்த இடைவெளி குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உற்பத்தித்திறன்சார் வர்த்தகம் மேம்பட்டு, சீனாவின் வர்த்தகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் தென்சீனக் கடல் நாடுகளின் விருப்பமாக இருக்கின்றது.

(இந்திய சீன உறவில், இடம் பெற்று வருவன என்ன? தேடுதலைத் தொடர்வோம்....)



__________________________________

http://www.bbc.com/news/business-40044113
https://www.reuters.com/article/us-uganda-road/chinese-built-expressway-divides-uganda-as-debts-mount-idUSKBN1FK0V1
https://www.indiatimes.com/news/india/here-is-all-you-should-know-about-string-of-pearls-china-s-policy-to-encircle-india-324315.html



***************
14) இடவல இந்தோசீனம் 




    இந்திய சீன உறவில் இருக்கும் சிக்கல்களில், இதுவரையிலும் எல்லைப் பிரச்சினை, திபெத் ஆக்கிரமிப்பு, சமயக்கட்டுப்பாடு, திபெத்தியர் புகலிடம், ஆற்றுநீர்ப் பங்கீடு, நுழைவிசைவு(visa) வழங்கல், வணிகச் சமன்பாடின்மை(trade deficit), புன்னகைக்கும் புத்தர், பயங்கரவாதம், தென்சீனக்கடல் பங்கீடு, மாலத்தீவு அரசாட்சி, இந்தியப் பெருங்கடல் சுற்றிவளைப்பு(string of pearls) ஆகியவற்றைப் பார்த்தோம். இனி இருநாடுகளுக்கும் இருக்கும் இதர பிரச்சினைகள் குறித்துப் பார்க்கலாம்.

    கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கின், 1960ஆம் ஆண்டு இந்தியாவின் உற்பத்தித்திறன் சீனாவைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், 1978ஆம் ஆண்டு உலகச்சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறியதும், அதே காலகட்டத்தில் மேற்கொண்ட அரசியற்சீர்திருத்தங்களும் கிடுகிடுவென வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்று, இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தை விடச் சீனாவின் பொருளாதாரம் நான்கு மடங்கு பெரியதாக இருக்கிறது. பணவீக்கத்தில் இந்தியா சீனாவிடை ஆறுமடங்கு பின்னடைவுடையதாக இருக்கிறது. உற்பத்தித்திறனில் சீனா இந்தியாவை விடக் கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்தநிலையில் உள்ளது.  குடும்பநலத்தில் ’ஒரு குழந்தைத் திட்டம்’ என்பது சீனாவின் குடிமக்களைக் கடுமையான இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அரசியலைப் பொறுத்தமட்டில் சீனாவின் நிலை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது. பொதுவுடைமைக் கோட்பாடு எனும் பெயரில் ஒருகட்சி ஆட்சிமுறையில் இருக்கும் சீனாவில், ஏழைப் பணக்காரன் வித்தியாசம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

    நடப்புகாலத்தைப் பார்க்கும் போது சீனாவில் தனிமனித சராசரி ஆயுள் 73.5 ஆண்டுகளாகவும், இந்தியாவில் 64.4 ஆண்டுகளாகவும் இருக்கிறது. கல்விகற்றோர் சீனாவில் 94%ஆகவும் இந்தியாவில் 74% ஆகவும் இருக்கிறது. பெண்கள் கல்வி சீனாவில் 99%ஆகவும் இந்தியாவில் 70%க்குக் கீழாகவும் இருக்கிறது.  சுகாதாரத்திலும் இந்தியாவை விடச் சீனா வலுவான நிலையில் இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 66% குழந்தைகளே குறைந்தபட்ச தடுப்பூசிகளையும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாறாக, சீனாவில் 98% குழந்தைகள் முழுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக்கின்றனர். ஆக,  இப்பின்னடைவை சமூகச் சீர்திருத்தங்கள் வாயிலாக மட்டுமே அகற்ற முடியுமென்கிறார் அமர்த்தியாசென். சீனாவில் இறக்குமதியாகும் பொருட்களில் 30% பங்களாதேசில் இருந்தே ஆகிறது. அந்த அளவுக்கு பங்களாதேசு சீனாவோடு அணுக்கம் காட்டி வருகிறது. அப்படியான பங்களாதேசில் கூட, சராசரி ஆயுள், குழந்தைபிறப்பு விகிதம், பெண்கள் கல்வி முதலானவை இந்தியாவைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் மேம்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் 66%ஐக் காட்டிலும் பங்களாதேசில் 97% குழந்தைகள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்.

    இருநாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவின் பின்னடைவாகப் பார்க்கப்படுவதில் முதலிடத்தைப் பெறுவது கல்விதான். இந்திய நிறுவனங்கள் சரியான கல்வியும் திறனுமுடைய பணியாளர்களை வேலைக்கமர்த்துவதில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 122 நாடுகளில் இடம் பெற்ற மனிதவள ஆய்வில், 78ஆம் இடத்தையே இந்தியா பெற்றிருக்கிறது. சீனாவைப் போலவே இந்தியாவிலும் நகரமயமாக்கல் துரிதமாக இடம் பெற்று வருகிறது. உரிய கட்டமைப்புகளைக் கட்டமைப்பதில் சீனாவைக் காட்டிலும் பின்தங்கியே வந்திருக்கிறது இந்தியா. சீனாவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, சீனாவில் இடம் பெற்றிருக்கும் காற்று, தண்ணீர் போன்றவை மாசடைதலைத் தடுத்து சரியான வழியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. ஆண் பெண் விகிதாச்சாரத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா நல்ல நிலையில் இருந்து வருகிறது. இருப்பினும், பெண்களுக்கு உரிய உரிமைகள் பெற்றுத்தருவதிலும் கல்வியிலும் பின் தங்கியே இருக்கிறது இந்தியா. மற்றபடி, வளர்ச்சியைக் கூட்டுவதற்கான மனிதவளமும் இயற்கை வளமும் சீனாவைக் காட்டிலும் இந்தியாவிடமே இருக்கிறது எனக் கணிக்கிறது உலக வங்கி.

    கடந்த 50 ஆண்டுகளாக வளர்ச்சிப்பாதையில் மேம்பட்டு உலகின் வல்லரசாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் சீனா, அதற்குக் கொடுத்தவிலை எண்ணிப்பார்க்க முடியாதபடிக்கு மலைக்க வைக்கக் கூடியதாகும். தனிமனித உரிமைகள் மறுக்கப்பட்டன. அரசியல் உரிமைகள் நசுக்கப்பட்டன. இன்றும், ஊடக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மை என்பதே கிடையாது. கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் அற்ற சமூகமாக ஆக்கப்பட்டதின் விளைவுகள், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தொகையான மக்கள் மூப்பெய்தி ஓய்வுபெறும் தருணத்தில், வேலைபார்க்க ஆட்கள் இல்லாமலும் மூத்தோரின் உடல்நலம், மனநலம் பேணக்கூடிய கட்டமைப்பின்றியும் தவிக்கும் நிலை வரப்போகிறதெனக் கவலைப்படுகின்றனர் சீனர்கள்.

    படிப்படியாகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சீனாவில் குன்றி வருகிறது. சரியான புள்ளிவிவரங்களைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறதெனப் பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உள்ளூர்த் தேவைகளை நிரப்பாமல் ஏற்றுமதியைச் செய்து வந்த சீனா இனியும் தம் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் உள்நாட்டில் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்க வேண்டியிருக்குமென்றும் எச்சரிக்கின்றனர். இருக்கிற இயற்கை வளத்தையெல்லாம் சுரண்டி விட்ட சீனா, குடிதண்ணீர், விளைச்சலுக்குக்கந்த பண்பட்ட நிலம், மின்சக்தி, எரிசக்தி முதலானவற்றுக்கு அயல்நாடுகளை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அரசியற் காரணங்களுக்காக இந்தியா, தென்சீனக்கடல் நாடுகள் உள்ளிட்ட நாடுகளிடம் பகைமையை வளர்த்துக் கொள்வது சிக்கலை உண்டாக்கக் கூடும். பொதுவுடைமைக் கோட்பாட்டு அரசியலெனச் சொல்லிக் கொள்ளும் நாட்டின் கட்சியையும் அரசாங்கத்தையும், தனியார் முதலாளிகள் கைவசப்படுத்தி வைத்திருக்கின்றனரென்றும்,  அதனால் இடம் பெற்று வரும் ஊழல் தேவைக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தடையாய் இருக்கிறதென்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதையெல்லாம் கருத்திற்கொண்ட சீனா, தம் எல்லையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சீனாவின் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளில் பிலிப்பைன்சு, இலங்கை, மியான்மார், பாகிசுதான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மாலத்தீவு, ஆப்பிரிக்க நாடுகள் முதலானவை நேரிடையாகவோ மறைமுகமாகவோ இடம் பெற்றிருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பெருமளவு நிலத்தைக் கொள்முதல் செய்து, சீனாவின் பெருநிலத் தேவைக்கான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ய அந்நிலங்களுக்குப் பெருமளவில் தம் குடிமக்களைக் குடியேற்றம் செய்து வருகிறது சீனா. ”கைப்பற்றிய இடங்களை விடுவிக்கும் பழக்கம் சீனாவுக்கு என்றும் இருந்ததில்லை” எனும் சீன அமைச்சரின் அண்மைப் பேச்சொன்று நோக்கர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத் தகுந்ததாகும். அரபிக்கடலைச் சீனாவுடன் இணைக்கும் பொருட்டுத் தாம் அமைத்து வரும் குவாடர் துறைமுகப்பணிகள், சாலைகளுக்காக பாகிசுதானுக்குள் முப்பதாயிரம் சீனர்களை இதுவரையிலும் குடியமர்த்தியிருக்கிறது சீனா. இலங்கை அம்பாந்தோட்டையைக் கைப்பற்றிக் கொண்டதைப் போல, பாகிசுதானின் இயற்கை வளங்களையும் கைப்பற்றிக் கொள்ளும் சீனமுன்னெடுப்புகளுக்குத் துணை போக மாட்டோமெனப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கின்றன சில பாகிசுதான் தீவிரவாத அமைப்புகள். இவை எல்லாவற்றையும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகள் உற்று நோக்கி வருகின்றன. சீனாவின் நகர்வுகளுக்கு மையமாக இருக்கிற இந்தியாவோ, அணுவாயுதக் கப்பல்கள் உற்பத்தி, அணுவாயுத ஏவுகணைக்கான பிரித்வியெனத் தன் இராணுவசக்தியை விரிவாக்கும் பணியின் வேகத்தைக் கூட்டி வருகிறது. கூடவே, “குப்பைகொட்டுதற்காப்பு வரி” எனும் பெயரில் சீனாவின் பொருட்களின் இறக்குமதிகட்கு வேட்டு வைக்கும் வேலையையும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கையிலெடுத்திருக்கின்றன.

    சமூக இணக்கம் கொண்டதாக, பண்பாட்டில் விழுமியப் போட்டி கொண்டதாக, மனித உரிமைகள் போற்றத்தக்கதாக, உளவியலில் மேன்மை பொருந்தியதாக, திறத்தில் போட்டியுடையதாக இருக்கும் பொருட்டு, இயற்கையுடன் இயைந்த நாடாகச் சீனா தம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிறார் எழுத்தாளர் மனோரஞ்சன் மொகாந்தி. சீனாவின் வளர்ச்சிப் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு, மேற்குலக நாடுகளையொத்த மனிதத்துவத்துடன் கூடிய பாதையில் இந்தியாவின் இயக்கம் இருக்கிறதெனப் பெருமிதம் கொள்கிறார் உலகவங்கித் தலைவர் ஜிம் கிம்.

(முற்றும்)


ஊக்கமும் ஆதரவும்: Senthil Nathan Saravanakumar Manian வேந்தன் அரசு



__________________________________

References:
https://thediplomat.com/2017/10/chinas-communist-party-3-successes-and-3-challenges/
http://www.businessinsider.com/9-biggest-challenges-chinese-economy-2012-9
http://knowledge.wharton.upenn.edu/article/chinas-investments-in-africa-whats-the-real-story/
http://www.indiandefensenews.in/2018/02/india-successfully-test-fires-nuclear.html


***************
________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)


 

No comments:

Post a Comment