Thursday, February 1, 2018

எல்லாம் வல்ல கொலம்பஸ்!!!




8. எல்லாம் வல்ல கொலம்பஸ்!!!


https://books.google.com/books?id=YTRCDwAAQBAJ&pg=PA66

By: தேமொழி 

கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய  ஒரு புதிய கடல்வழித்தடத்தைக் கண்டுபிடிக்க கடற்பயணம் மேற்கொண்டார்.  பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார்.  ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார்.  இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் போர்த்துக்கீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.


இருப்பினும்  ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்குக் கொலம்பஸ் செய்த உதவியே காரணம்.  அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழி.   கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை. கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்க கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில்  கொண்டாடப்படுகிறது.


கொலம்பஸ் தினமான அக்டோபர் 12, 2014 க்கு சில தினங்களுக்கு முன்னர் அக்டோபர் 8, 2014 அன்று நிகழ்ந்த முழுச்சந்திரகிரகணமும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததில் பலருக்கு சந்திரகிரகணத்தையும்  கொலம்பசையும் இணைக்கும் ஒரு சுவையான நிகழ்ச்சியையும் நினைவிற்குக் கொண்டு வந்தது.


தனது இந்தியப் பயணங்களில் மூன்று முறை தோல்வியடைந்திருந்த கொலம்பஸ் தனது கடலோடிக் குழுவினரையும், பழங்குடி மக்களையும் கொடுமைப்படுத்திய காரணத்திற்காகக் கைகால்களில் விலங்கிடப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.  கரீபிய தீவுகளில் ஆளுநர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மன்னரும் அரசியும் மனமிரங்கி  அவரை மன்னித்து மீண்டும் ஒருமுறை பயணம் செய்து இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்க உதவ முன் வந்தனர். நான்காவது  முறையாகத் தனது  கடற்பயணத்தை 1502 ஆம் ஆண்டு மே 12 ஆம் நாள் துவக்கினார் கொலம்பஸ். இப்பயணத்தில் அவருடைய சகோதரர்கள் பார்த்தலோமோ, டியாகோ மேண்டேஸ், கொலம்பஸின் 13 வயது மகன் ஃபெர்னாண்டோ ஆகியோரும் உடன் பயணித்தனர்.


'காப்டியானா', 'கல்லீகோ', 'விஸ்கைனா', 'சாண்டியாகோ டி பாலோஸ்' என்ற நான்கு கப்பல்களில் மேற்கு நோக்கிப் பயணம் செய்தனர்.  கடற்புழுக்கள் கப்பலின் மரத்தைக் கரையான் போல அரித்துவிட, இரு கப்பல்களில் துளைகள் விழுந்து நீர் உள்ளே வரத் துவங்கிய காரணத்தினால் கொலம்பஸ் அந்தக் கப்பல்களைக் கைவிட நேர்ந்தது. கரீபியன் கடல் பகுதியை அடைந்து, அங்குத் தீவுகளையும் மத்திய அமெரிக்க பகுதிகளையும் சுற்றிவரும்பொழுது கியூபா நாட்டின் பகுதியில் ஏற்பட்ட புயலில் சிக்கி அடுத்த இரு கப்பல்களும் சேதமடைந்து 1503 ஆம் ஜூன் மாதம், ஜமைக்காவின் வடகரையில் 'செயின்ட் ஆன்' வளைகுடாப் பகுதியில் கரைதட்டி நின்றன.  சென்ற முறை அங்கு வந்திருந்த பொழுது ஏற்படுத்திய ஸ்பானிஷ் குடியிருப்புகளின் உதவியை நாடித்  தகவல் அனுப்பச் சிறு படகொன்றில் சிலரை அனுப்பிவிட்டு தனது குழுவினருடன் ஜமைக்காவில் கொலம்பஸ் காத்திருந்தார். இவ்வாறு சற்றொப்ப ஓராண்டுக் காலம் போல அப்பகுதியில் தங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.


அப்பகுதியில் வாழ்ந்த  'அராவாக்' (Arawak Indians) பழங்குடியினர் நட்புள்ளம் கொண்டவர்கள் என்றாலும், கொலம்பஸும் அவர் குழுவினரும் செய்யும் அடாவடிகள், கலவரம், கொள்ளை ஆகியவற்றில் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்கள்.  முதலில் அன்புடன் உதவியவர்கள், பின்னர் கொலம்பஸ் கேட்ட அளவிற்கு அவர் குழுவினருக்கு உணவு அளித்துப் பராமரிக்க மறுத்துவிட்டனர். கடற்பயணிகள் வழங்கிய பண்டமாற்றுப் பொருள்கள் யாவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இல்லாமல் (தகர ஊதுகுழல்கள் போன்றவை) அவர்கள் ஆர்வத்தையும் கவரவில்லை.  இதன் விளைவாக கொலம்பஸ் குழுவினர் பசி பட்டினியில் நொந்து போனார்கள்.  தங்களுக்கு உதவி வரும் வரை எப்படித் தாக்குப் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த கொலம்பஸிற்கு, நூல்களைப் புரட்டியதில் ஒரு யோசனையும் கிடைத்தது.


அக்காலத்தில் கடற்பயணம் செய்பவர்கள் மிகத் தடித்த வானியல் குறிப்புக்கள் கொண்ட நாட்குறிப்பு நூல்களை தங்கள் பயணத்திற்குத் துணையாகக் கொண்டு செல்வார்கள்.   இது 'அல்மனக்' (Almanac) என்றழைக்கப்படும்.  இந்திய மக்கள் வானின் கோள்களைக்  கணித்துப் பயன்படுத்தும் பஞ்சாங்கம் போன்றே சூரியன், சந்திரன், மற்ற பிற கோள்களின் நிலையையும், பயணத்திற்கு வழிகாட்டி உதவும் விண்மீன் கூட்டங்களையும், பருவநிலை, தட்பவெட்ப நிலைக் குறிப்புகளையும்  கொண்ட நிரல்களும் அட்டவணைகளும் கொண்டது இந்த அல்மனக். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஜெர்மன் நாட்டுக் கணிதமேதையும் வானியல் வல்லுநருமான 'ரிஜியோமாண்ட்டனஸ்' கோள்களைக் கணித்து வழங்கிய நாட்குறிப்பில் (Ephemeris of the German astronomer Regiomontanus) கொலம்பஸிற்கு ஒரு தகவல் கிடைத்தது.  அந்த 1504 ஆம் ஆண்டு, பிப்ரவரி  மாதம் 29 ஆம் நாள் ஜமைக்கா பகுதியில் முழுச்சந்திரகிரகணம் தோன்றும் என்ற குறிப்பு அந்நூலில் அவருக்குக் கிடைத்தது.




இத்தகவல் தெரிந்ததும் கொலம்பஸ் அராவாக் பழங்குடியினருடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். தங்களை வெறுத்துச் சரிவர நடத்தாமல், உணவும் வழங்காத பழங்குடியினர் மீது அவருடைய கிறிஸ்துவக் கடவுள் மிகக் கோபமான இருக்கிறார்.  தான் கோபம் கொண்டதை உணர்த்த இரு நாட்களில் நிலாவை மறையச் செய்து அதனைச் செந்நிறமாக்கி தனது கோபத்தை பழங்குடியினருக்கு உணர்த்துவார்.  அவர்களது நடவடிக்கை மாறாவிட்டால் பழங்குடியினருக்கு  கேடு காலம்தான் என்று   மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கொலம்பஸ் கதைகட்டினார்.  பழங்குடியினர் அதை நம்பவில்லை, சிலர் பகடி செய்தும் நகர்ந்தனர்.  ஆனால் கொலம்பஸ் குறிப்பிட்ட நாளில் கீழ்வானில் நிலா வழக்கம் போலத் தோன்றினாலும், சிறிது நேரத்தில் கிரகணம் துவங்கி, இருள் சூழத் துவங்கியது.  பழங்குடியினர் அச்சமடைந்து கொலம்பஸ்ஸிடம் ஓடிவந்தார்கள்.



"பழங்குடியினர் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பல திசைகளில் இருந்தும் கப்பலை நோக்கி ஓடிவந்தார்கள்.  தங்களுக்காக கொலம்பஸ் கடவுளிடம் பேசி கடவுளை அமைதிப்படுத்த வேண்டும், இனி தவறாது உணவு தர சம்மதம் என்று உடன்பட்டார்கள்" என்று கொலம்பஸின் மகன் ஃபெர்னாண்டோ தனது குறிப்பில் எழுதியுள்ளார்.  கொலம்பஸ் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு மணற்கடிகாரத்தை நிமிர்த்தியும்  கவிழ்ந்தும்  காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.  கிரகணம் முடியும் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்து கடவுள் இனி அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டார், தனது கோபத்தை மறந்து அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யப்போவதில்லை என்பதற்கு அடையாளமாக நிலா சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிலையை அடையும் என்று அறிவித்தார். அவ்வாறே நிலவும் சிறிது நேரத்தில் கிரகணத்தில் இருந்து விடுபட்டது, பின்னர் பழங்குடியினர் ஒத்துழைப்பும் அவருக்குத் தவறாது கிடைத்தது.


கொலம்பஸ் ஜமைக்கா பகுதியில் வந்து சேர்ந்த ஓராண்டுக் கழித்து 1504 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு உதவிக்  கப்பல் வந்து சேர்ந்தது.  அந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் திரும்பினார், பின்னர் தனது 54 ஆவது வயதில், முடக்குவாதம் கொடுத்த மூட்டுவலியின் காரணமாகவும், உணவு ஒவ்வாமையின்  காரணமாக இரு ஆண்டுகளில் (மே 20, 1506) அவர் மரணமடைந்தார்.


இந்த நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் அவரவர் பின்னணியின் காரணமாக கொலம்பஸ் செய்தது புத்திசாலித்தனம் என்றும், அவர் செய்தது அறநெறிக்கு மீறிய சூழ்ச்சி, பழங்குடியினரை ஏமாற்றியது சரியல்ல என்றும் கருத்தில் வேறுபடுவர்.  ஆனால் இது அறிவிப்பது 'அறிவே சக்தி' (Knowledge is Power) என்பதைத்தான். ஆர்வமூட்டும் இந்த நிகழ்வு சில எழுத்தாளர்கள் கவனத்தைக் கவர, இதை அடிப்படையாக வைத்து கதைகள் எழுதத் துவங்கினர். சிலர் சூரியகிரகணம் என்று மாற்றியும் கதைபுனைந்தனர்.  அவற்றில் குறிப்பிடத்தக்கன, எச். ரைடர் ஹாகர்ட் எழுதிய  'கிங் சாலமான்ஸ் மைன்ஸ்' (H. Rider Haggard's King Solomon's Mines) என்ற கதையும், மார்க் டுவைன் எழுதிய  'எ கனிக்ட்கட் யாங்கீ இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட்' (Mark Twain's A Connecticut Yankee in King Arthur's Court) என்ற கதையும், டின் டின் படக்கதையான, 'ப்ரிசனர்ஸ் ஆஃப் தி சன்' (Hergé's Tintin adventure Prisoners of the Sun) என்ற கதையுமாகும்.  தங்கள் கதைகளில் அவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் எந்தக் கிரகணமும் நிகழவில்லை என்பதையும் சில ஆசிரியர்கள்  கவனமின்றி கையாண்டும் உள்ளார்கள். 




No comments:

Post a Comment