Sunday, February 25, 2018

காளமேகப்புலவரும் பாண்டியநாட்டுச் சிவத்தலங்களும்



——   தேமொழி


இரட்டுற மொழிதல் என்றாலே காளமேகப்புலவர் பாடல்  என்று தமிழிலக்கியத்தில் முத்திரை பதித்தவர் கவி காளமேகம். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் கவி காளமேகம் எனப் பல வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது [1].   காளமேகப்புலவர் எழுதிய  பாண்டிய நாட்டில் உள்ள சிவத்தலங்கள் குறித்த பாடலொன்று உண்டு. இப்பாடல் காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள் நூலில் கொடுக்கப்படுகிறது [2]. தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம் வழங்கும் கவி காளமேகம் பாடல்கள் வரிசையில் 117 ஆவது பாடலாகவும் இடம்பெறுகின்றது [3].

கூடல், புனவாயில், குற்றாலம், ஆப்பனூர்
ஏடகம்நெல் வேலி, இராமேசம், - ஆடானை
தென்பரங்குன்றம், சுழியல், தென்திருப்புத் தூர், காசி
வன்கொடுங்குன் றம்,பூ வணம்.

(பாடல் - 117: சிவத்தலங்கள் / பாண்டிய நாட்டில் உள்ளவை)

1.  கூடல் - மதுரை
2.  புனவாயில் - திருப்புனவாயில்
3.  குற்றாலம் - திருக்குற்றாலம்
4.  ஆப்பனூர் - திருவாப்பனூர்
5.  ஏடகம் - திருவேடகம்
6.  நெல்வேலி -  திருநெல்வேலி
7.  இராமேசம் - திருஇராமேச்சுரம்
8.  ஆடானை - திருஆடானை
9.  தென்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம்
10. சுழியல் - திருச்சுழியல்
11. திருப்புத்தூர் - திருப்புத்தூர்
12. காசி - தென்காசி
13. வன்கொடுங்குன்றம் - திருக்கொடுங்குன்றம்
14. பூவணம் - திருப்பூவணம்;
என்னும் இவை யாவும் பாண்டிநாட்டுத் தலங்கள் ஆகும்.
என்பது பாண்டிநாட்டுச் சிவத்தலங்கள் குறித்து இப்பாடல் கொடுக்கும் குறிப்பு.

பாண்டிநாட்டுச் சிவத்தலங்கள் குறித்த இந்த வெண்பா, 1906-ஆம் ஆண்டில் உவேசா பதிப்பித்த  'திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்'  என்ற “பழைய திருவிளையாடல்” புராணத்தில் இடம் பெறுகின்றது.

கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றென்றிருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்

ஆனால், இது காளமேகப்புலவரின் பாடல் என்ற குறிப்பு உவேசா வின் நூலில்  கொடுக்கப்பெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காளமேகம் இயற்றியதாகப் பல தனிப்பாடல்கள் கிடைக்கப் பெறுகின்றன என்று காளமேகப்புலவர் குறித்த ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு [4].  இவ்விரு பாடல்களுக்கும் உள்ள வேறுபாடு; 12  ஆவதாகக் குறிக்கப்படும் சிவத்தலம்  காசி என்பது  கானை என உவேசா வின் நூலில்  கொடுக்கப்பட்டுள்ள வேறுபாடு.

பாண்டித் தலம் 14-ம் கூறும் வெண்பாவில் “காளையார்கோயில்” உள்ள கானப்பேர் என்ற ஊர் “கானை” எனக் குறிப்பிடப்படுகிறது.  இன்றைய காளையார்கோயில்  “கானப்பேர்” என்றும் “கானையம்பதி”  என்றும் அழைக்கப்பட்டது.  “கானப்பேர் எயிற் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்ற சங்க கால வரலாற்றுக் குறிப்பும் உண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டு எழுதப்பட்ட பழைய திருவிளையாடற்புராணத்தில்,  கானப்பேர்   “கானையம்பதி” என்றும் குறிப்பிடப்படும் (திருவாலவா. 27, 31). ஆகவே, கானை என்பது கானப்பேர் என்பதன் மரூஉப் பெயராகும்.



தேவார மூவர் முதலிக​ளான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் என்போரால் பாடப்பெற்ற 14 பாண்டிநாட்டுத் தேவாரத்தலங்கள் என அறியப்பெறும் ஊர்கள் முறையே: 1. மதுரை; 2. திருப்புனவாயில்;  3. குற்றாலம்; 4. திருவாப்பனூர்; 5. திரு ஏடகம்; 6. திருநெல்வேலி; 7. திருவிராமேச்சுரம் ; 8. திருவாடானை; 9. திருப்பரங்குன்றம் ; 10. திருச்சுழியல்; 11. திருப்புத்தூர், 12. காளையார் கோயில்; 13. திருக்கொடுங்குன்றம்  (பிரான்மலை); 14. திருப்பூவணம்.  இந்தப் பதினான்கு திருத்தலங்களும் "பாண்டி பதினான்கு" எனவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

இதே ஊர்களே குமரகுருபரரின் மீனாட்சியம்மை குறம் என்ற பாடலிலும்; 
கூடல்புன  வாயில்கொடுங்  குன்றுபரங்  குன்று
            குற்றாலம்  ஆப்பனூர் பூவணநெல்  வேலி
ஏடகமா  டானைதிருக்  கானப்பேர்  சுழியல்
            இராமேசந்   திருப்புத்தூ  ரிவைமுதலாந்  தலங்கள்
நாடியெங்க  ளங்கயற்கண்  ணாண்டதமிழ்ப்   பாண்டி
            நன்னாடும்  பிறநாடும்  என்னாடதாகக்
காடுமலையுந்  திரிந்து   குறி சொல்லிக்  காலங்
            கழித்தேனென்  குறவனுக்குங்  கஞ்சிவாரம்மே
- குமரகுருபரசுவாமிகள்

திருப்பூவணப் புராணத்திலும்; 
தென்மதுரை பரங்குன்றந்திருவிராமேச்சுரமாடானைபுத்தூர்
பன்னுதமிழேடகநெல்வேலி பகர்குற்றாலமாப்பனூர்பார்
மன்னுபுனற்சுழியல்புனவாயில் கொடுங்குன்றமெழின் மருவுகானை
பொன்மதில் சூழ் பூவணமும் பொருந்துகின்ற புகழ்ப் பொதியப் பொருப்பனாடு (117)

காளையார்கோயில் புராணத்திலும்; 
ஆலவாய் கானப்பேரூராடானைபுனவாயில்குற்
றாலமேடகம்பரங்குன்றாப்பனூர்சுழியலபுத்தூர்
மாலிராமேச்சுரம்பூவணங்கொடுங்குன்றுவேய்நெல்
வேலியாந்தலமுறுப்பாமேயதுபாண்டிநாடு. (8)

திருப்பூவணநாதருலாவிலும்; 
“திருக் கங்கை வார் சடையார் தென்பாண்டி நாட்டில்
இருக்குந் தலங்கள் பாடு என்னப் - பெருக்கம்

திகழ் பூவுலகில் சிவலோகம் என்னப்
பகர்கூட  ஆலவாய் பாடி –-  மிக மால்

பிறிக்கும்  அடியார் பிறவிக் கருவேர்
பறிக்கும் புனவாயில் பாடிக்  - குறிக்குமால்

சங்கந் திகிரி தன் நந்தும் மழு மான் எடுக்கு
நங்கள் குற்றால நகர்பாடித் -  தங்கு ஒருபால்

பெண்மைத் திருக்கோலப் பெம்மான் இனிது  உறையும்
உண்மைத் திருவாப்பனூர் பாடித் -  திண்மை அற

வாட்டும் பிறவி வழி மறித்து ஞானவழி
காட்டுந் திருவேடகம் பாடி -  நாட்டின்

விரவு திருவெண்ணீற்றின் மெய்யன்பர் கூட்டம்
பரவு திருநெல்வேலி  பாடிப் -  பரவுமுனை

சேர் திருவி  ராகவன் முன் சேனையுடன் கண்டுதொழச்
சார் திருவி ராமேச்சரம் பாடி - ஏர் தரு பொற்

கொம்பரன்  நாடானை  ஒரு கூறு இலங்குங் கோலத்து
நம்பரன்  ஆடானை நகர்பாடி -  வம்பர்

புரம் குன்ற வான் நகைசெய் பொன் மலை விற்செல்வன்
பரங்குன்றம்  மாநகரம் பாடி -  உரங் கொள்

விடைக்கும்  சரம் உகைப்பார் வீற்றிருக்கக் காணி
படைக்குந் திருச்சுழியல் பாடிக் -  கிடைக்கும் அகத்து

ஆசை உடைச் சிற்சபையில் ஐயன் திருச்சிலம்பின்
ஓசை  உடைத்  திருப்புத்தூர் பாடித் -  தேசுநலந்

தாங்கு திருத்தேர் வீதிச் சைவ ஆகமம் வேதம்
ஓங்கு திருக் கானப்பேர் ஊர் பாடி -  வாங்குந்

தனிக் கொடுங்குன்றம் அதன் தன்னை எரித்தார்
பனிக் கொடுங்குன்ற நகர் பாடித் -  தொனிக்கு மறைப்

பாவணம் பாடும் பரமன் திருக்கோயிற்
பூவணம் பாடும் பொழுதிலே -  நாவணங்கு

நாதன் புதல்வர் நவினான் மறைபாடக்
கீத இசை கின்னரர் பாடக் -  கோதிலாச்”

காட்டப்படுகின்றன.  மேற்கூறியவாறு தேவாரப்பாடல்கள், மீனாட்சியம்மை குறம், திருப்பூவணப் புராணம், காளையார்கோயில் புராணம் மற்றும் திருப்பூவணநாதருலா ஆகியனவற்றில் காளையார்கோயில் தலம் பாண்டி பதினான்கு  தலங்களில்  ஒன்றாகக் கொடுக்கப்படுகிறது.  இவை எவற்றிலுமே தென்காசி இடம் பெறவில்லை என்பதைக்  கருத்தில் கொள்ள வேண்டும். தேவாரப்பாடல்களில் “தென்காசி திருத்தலத்திற்குப் பாடல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை“.

கானை  என்பது காசி என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் ஏடு எழுதியவரின் குற்றமாகலாம். இதற்குக் கானை என்பதன் பொருள் குறித்த அறியாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். பிழை திருத்துவதாக நினைத்து காசி என (தென்காசியைக் குறிப்பதாக பிழையான புரிதல் நிலையில்) ஏடு எழுதியவர் மாற்றியிருக்க வேண்டும் எனக் கருதலாம்.  இது  பிற்காலப் பாடல் என்பதும் தெரிகிறது.  பாண்டியர்கள் மதுரையை இழந்தபின் தென்காசியில் வாழ்ந்த பிற்காலத்தில் எழுதப்பட்ட, 15 ஆம் நூற்றாண்டு காலத்தையொட்டிய பாடல் எனவும் கருத வழியுண்டு. எண்ணிக்கை மாறாமல் பிற்கால  இடத்தின் பெயர் நுழைக்கப்பட்டுள்ளது பாடலின் காலம் பற்றிய குறிப்பையும் கொடுக்கிறது. கானை என்பது காசி என மாற்றப்பட்டதால் பாடலில் தளைதட்டுவதும் பிழையை உறுதி செய்கிறது.  அத்துடன், பாடலை எழுதிய புலவர் கவி காளமேகம்தானா அல்லது அவர் பெயரின் கீழ்  வகைப்படுத்தப்பட்ட தனிப்பாடலா இது என்பதுவும் ஆய்விற்குரியது

பாண்டிநாட்டுச் சிவத்தலங்கள் கூகுள் வரைபடத்தில்:
https://drive.google.com/open?id=1aa-Y5xmjsH6bgR8-hdb4kNjV7cpsirf0&usp=sharing

படம்:

https://lh3.googleusercontent.com/-XCaYzfKBEVg/WotWJ4CXzcI/AAAAAAAAH2s/BqoW08euzXk5yvhgzJf9Z9nhVVJvSBSKACLcBGAs/s1600/padal%2Bpetra%2Bthalam.jpg


கட்டுரையில் இடம்பெற்ற பாண்டிநாட்டுச் சிவத்தலங்களின் புவியிடக் குறிப்புக்கள்: 
1. மதுரை (9.9195, 78.11934)
2. திருப்புனவாயில் (9.89416, 79.06361)
3. குற்றாலம் (8.9342, 77.2778)
4. திருவாப்பனூர் (9.92607, 78.12152)
5. திருவேடகம் (9.99539, 77.98885)
6. திருநெல்வேலி (8.71391, 77.75665)
7. இராமேச்சுரம் (9.28762, 79.31292)
8. திருஆடானை (9.78336, 78.91827)
9.  திருப்பரங்குன்றம் (9.88144, 78.07297)
10. திருச்சுழி (9.53456, 78.1999)
11. திருப்புத்தூர் (10.10847, 78.5973)
12. காளையார்கோயில் (9.84568, 78.63136)
13. திருக்கொடுங்குன்றம்  (10.23611, 78.43886)
14. திருப்பூவணம் (9.82596, 78.25758)
-----
மற்றும் ...
தென்காசி (8.95902, 77.31293)


குறிப்பு: 
இக்கட்டுரை எழுத தகவல் தந்து உதவிய முனைவர் காளைராசன், முனைவர் நா. கணேசன், திரு. மயிலை நூதலோசு, திரு. இராம.கி. ஆகியோருக்கு நன்றி.



துணைநூற் பட்டியல்:
[1] பாவலர் சரித்திர தீபகம், அ. சதாசிவம்பிள்ளை. பகுதி 2. கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு (பக்கம் – 97), 1979.

[2] காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன், முதற் பதிப்பு : டிசம்பர் 2010, பக்கம்: 108

[3] கவி காளமேகம் பாடல்கள், தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம் -
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0220.html

[4] திருமலைராயனும் காளமேகப்புலவரும், தேமொழி, பிப்ரவரி 17, 2018, சிறகு -
http://siragu.com/திருமலைராயனும்-காளமேகப்/

[5] இராமேசம், இராம.கி. -
https://mymintamil.blogspot.com/2018/02/Ramesam-by-Ramaki.html










No comments:

Post a Comment