—— இராம.கி.
"நெருப்பிலே பூத்த நெகிழ்" என்ற ஈற்றடிக்கு ஒருகாலத்தில் (ஏப்ரல் 8, 2006) எழுதிய இன்னிசை வெண்பா. அப்பொழுதெலாம் ஈற்றடிக்கு வெண்பாப் புனையும் விளையாட்டு இணையத்தில் நடந்துகொண்டிருந்தது. இப்பொழுது இதுபோல் நடக்கிறதாவென்று தெரியவில்லை. இன்று வேறெதற்கோ இணையத்தில் தேடியபொழுது இலவசக்கொத்தனாரின் வலைப்பதிவில் என் பதிவிருந்தது தெரிந்தது. நானே இதுபற்றி மறந்துவிட்டேன். என் ஆக்கங்கள் இப்படித்தான் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. பலவற்றை மறந்தும் விட்டேன். இது ஏதோ தன்னேர்ச்சியாய்த் திடிரென்று இன்று கிட்டியது. சரி, ஓரிடத்தில் சேர்த்துவைப்போமே? என்று என் முகநூல் பக்கத்திலும், வலைப்பதிவிலும், மடற்குழுக்களிலும் பதிகிறேன். இப்பாட்டில் அறுபடைவீட்டையும் ஊடே குறித்திருக்கிறேன்.
முருக்கன்; குமரன்; முளைச்சேயோன்; கந்தன்;
கருப்பன் மருகன்; கடம்பிற் பரமன்;
செருத்தணியான்; செந்தில்; சிலம்பன்; இவனோ
நெருப்பிலே பூத்த நெகிழ்.
இனிப் பாட்டின் விளக்கம்.
முருக்கென்பது பலாசமரம் அல்லது புரசைமரம் எனப்படும். சென்னைப் புரசைவாக்கத்தை நினைவுகொள்ளுங்கள். புரசைவாக்கம் சிவன் கோயிலில் தலமரம் முருக்கமரமே; இது முள்முருக்கென்றும் சொல்லப்படும். Butea monosperma. இம்மரமே flame of the forest ஆகும். தீம்பிழம்பு போல முருக்கமரக்காடு பூக்கள் மலர்ந்த நிலையில் காட்சியளிக்குமாம். சிலர் புரியாமல் மயிற்கொன்றையை / குல்மொஹரை flame of the forest என்று சொல்வார். அது தவறு. மயிற்கொன்றை மொரிசியசிலிருந்து இங்கு இறங்கியது. தமிழ்நாட்டைச் சார்ந்ததில்லை. முருக்கம்பூவே நம்முடையது. புரசைப்பூ = முருக்கம்பூ =செக்கச்செவேலென்று சிவந்த பூ. சிவந்த நிறத்தின் காரணமாகவே முருக்கன்>முருகன் என்ற பெயர் எழுந்தது; அழகு, இளமை எல்லாம் பின்வந்த வழிப்பொருள்கள். முதற் பொருட்கள் அல்ல. பலாசமரம் நிறையவிருந்த இடம் பலாசி; பலாசி யுத்தமென இந்தியவரலாற்றில் படித்திருப்போமே? இராபர்ட் கிளைவிற்கும், வங்காள நவாபிற்கும் நடந்த சண்டை; அது புரசைமரக் காடுகளில் தான் நடந்தது.
குமரன் = இளையோன்; தந்தைக்கு ஓமெனும் பொருளை உரைத்த கதை இக்காலத்தில் இதைச் சாமிமலையிற் புனைந்துசொல்வார்; ஆனால் ”இப்படைவீடு சரிதானா? திருவேரகமென்பது எது?” என்று திருமுருகாற்றுப் படையின் வழி உணரமுடியவில்லை.
முளைச்சேயோன்; முளை = தண்டாயுதம்; பழனி தண்டாயுதபாணியே இங்கே முளைச்சேயோன்
கந்து = மரத்தூண்; ஒவ்வொரு மரத்தூணிலும் முருகன் இருப்பதாக நம் முன்னோர் எண்ணினர்; அதனாற்றான் தூணிற்படரும் வள்ளிக்கொடியை அவன் மனையாளாய்க் கருதினர்.
கருப்பன் மருகன்: விளக்கம் சொல்லத் தேவையில்லை.
கடம்பிற் பரமன்: திருப்பரங்குன்றம் அக்காலத்தில் கடம்பவனம் என்ற பெயர்பெற்றது. மதுரைக்கும் ஒருகாலத்தில் கடம்பவனத் தொடர்பும், மருதவனத் தொடர்புமுண்டு. (பரிபாடலின் படி மருதையே மதுரையாயிற்று.) பரமன் = பரங்குன்றன்
செருத்தணியான் = திருத்தணிகையான்
செந்து + இல் = செந்தில் = சிவந்தவன் இருக்கும் வீடு. அந்தவூர் மண்ணும் செக்கச்செவந்து இருக்கும். திருச்செந்தூரிலிருந்து குமரிவரை போனால் சிவந்த மண் நெடுகக் கிடக்கும். எல்லாம் அருமண் மாழைப் பூண்டுகள் (rare earth metal compounds) செய்யும் வேலை
சிலம்பாறும், அருவியும் பாயும் இடம் பழமுதிர்சோலை; அங்கு குடியிருப்பவன் சிலம்பன்.
நெகிழ்: மலர்தலென்பது இதழ்கள் நெகிழ்ந்துவிரிதலே; அவ்வகையில் நெகிழென்பது மலரெனும் பெயராயும் ஓரோவழி அமையும்.
நெருப்பிலே பூத்த நெகிழ் = சிவனுடைய நெற்றிக்கண் நெருப்பில் தோன்றி சரவணப் பொய்கையில் பூத்த மலர்.
________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com
No comments:
Post a Comment