—— சி. ஜெயபாரதன்
வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர்
வேறொன்று கொள்வாரோ? .....
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
மகாகவி பாரதியார்
(சுதந்திரப் பெருமை)
கவிஞர் பாரதிதாசன் தனிப்பட்ட எவருக்கும் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை. கவிஞர் யாவரும் பூமியில் பிறந்த மனிதர்களே! சாதாரண மாந்தரை விடக் கவிஞர்கள் உன்னத சிந்தனை உடையவராயினும், அவரிடமும் குறைவு, நிறைவுகள் இருக்கலாம். குறைகள், நிறைகள் இல்லாத கவிஞர்கள் இருப்பது வெகு, வெகு அபூர்வம். நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று சிவபெருமான் எழுதிய பாட்டில் கூடப் பிழை யிருப்பதாகப் பாண்டிய மன்னன் முன்பாக வாதாடியவர் புலவர் நக்கீரர். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. மேலும் எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என் பெயர் செயபாரதன் இல்லை! நண்பர் திரு இளங்கோவன் என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதி இருக்கிறார். அது அவரது எழுத்துரிமை என்று கருதி, அப்பிழையை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப்படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை "இளங்கோபன்" என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா எனக்குத் தெரியாது. நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், ஹாங்ஹாங், பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பு, சரஸ்வதி போன்ற பெயர்களை எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று எழுதினால் பூரிப்படைவேன். நான் அவரது பெயரை இலங்கோவன் என்று எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா? தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ போன்ற அன்னிய எழுத்துக்களை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை பழுதுபடாது! உலகெங்கும் ராக்கெட் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும் இணைந்து முன்னேறுகின்றன! தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்!
சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!
என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று "தமிழ் விடுதலை ஆகட்டும்", என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் பறைசாற்றினேன்! திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!
இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடை களில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!
"வாளினை எடடா!" என்னும் ஒரு பாடலில் பாரதிதாசன், குணம் மேவிய தமிழனை ஜனநாயகத்தில் அறமே புரியக் "கொலை வாளினை எடடா," என்று முரசடிக்கிறார்! பாரதிதாசனின் அந்தப் பாடலை படிப்போருக்குப் பெரும் குழப்பம் உண்டாகிறது. "காந்தியின் அறச் செயல் வெல்லும்'" என்று எழுதிய பாரதிதாசன் குடியரசு நாட்டில் கொலை வாளினை எடடா என்று ஏன் தீவிரவாதியாகக் கட்டளை யிடுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. இதோ அப்பாடல்:
கொலை வாளினை எடடா! மிகு
கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா! .....
தலை யாகிய அறமே புரி,
சரி நீதி உதவுவாய்!
சமமே பொருள் ஜனநாயகம்
எனவே முரச றைவாய்!
நண்பர் நாக இளங்கோவன் குடியாட்சியில் கொலை வாளினை எடுப்பது தீவிரவாதமில்லை என்று எனக்குச் சுட்டிக் காட்டுகிறார்! இதே போல் பீரங்கி, வில்லெடுப்பு இவையெல்லாம் தீவிரவாதியின் ஆயுதங்கள் இல்லை என்றால், வேறு எவை அவரின் ஆயுதங்கள் என்று கட்டுரையில் எடுத்துக் காட்டி யிருக்கலாம்! பிளாஸ்டிக் வெடிகள் தீவிரவாதிகளின் கொலை ஆயுதங்களாக அஞ்சப்படும் இந்த காலத்தில், கொலை வாளையும், பீரங்கியையும் எந்த வகுப்பில் பிரித்து வைக்கலாம்?
பாரதியார் காலத்தில் விரிந்த பாரதிதாசனின் பாரத விடுதலைத் தரிசனம், பிற்காலத்தில் குறுகித் தமிழக விடுதலையாகச் சுருங்கிப் போனது என்று தெளிவாகக் கூறுகிறார், நண்பர் இளங்கோவன். இதை எதிர்த்துத்தான் பாரதியார் தனது "சுதந்திரப் பெருமை" என்னும் பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர்
வேறொன்று கொள்வாரோ? .....
விண்ணில் இரவிதனை விட்டுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ? ....
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
பாரதியின் நிழலில் வளர்ந்த பாரதிதாசன் கடைசிப் பாதிக் காலத்தில் எப்படிச் சுதந்திர தேவியை மறந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது!
அக்கா, அக்கா என்றாய்
அக்கா வந்து கொடுக்க
சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே !
என்று நக்கல் புரிகிறார் கவிஞர் பாரதிதாசன் !
பாரதியாரின் தாசனாகக் கூறிப் பெயரைக் கூடப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர். பாரதியார் “ஆனந்த சுதந்திரம் அடைத்து விட்டோம்”, என்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடியவர். ஆனால் பாரதிதாசன் சுதந்திரப் போராட்டத்தைக் கிடைக்குமா வென்று கிண்டல் செய்தவர்.
‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் ‘ என்று பாரதியார் தீர்க்க தரிசியாய் 1908 இல் கனவு காணும் போது, விடுதலை இயக்கத்தைப் பாரதிதாசன் ஒரு பாட்டில் நக்கல் புரிந்து கேலி செய்வதைப் பலர் அறிய மாட்டார்கள்! கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன், ‘அக்கா! அக்கா! என்றாய், அக்கா வந்து கொடுக்க சுக்கா, மிளகா, சுதந்திரம் கிளியே ? ‘ என்று எள்ளி நகையாடுகிறார்!
அகிலவலைத் திண்ணை, பதிவுகளில் வெளிவந்த எனது விஞ்ஞானக் கட்டுரைகளைப் பாராட்டியதற்கு நண்பர் நாக. இளங்கோவன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றி.
ஒரு கவிஞன் ஆத்மீகக் கவிஞனாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்க வில்லை! ஆத்மீகக் கவிஞனாக இருக்க வேண்டிய தேவையு மில்லை! கவிஞன் எப்படி இருக்க வேண்டும் என்று ஓர் இலக்கண விதியை நான் ஆக்க விரும்பவும் வில்லை! கவிஞன் தானாக உருவாகிறான். கவிஞன் தானாக மாறுகிறான். ஆனால் பாரதியின் நிழலில் தோன்றித் தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்ட கவிஞர் சுப்புரத்தினம் மெய்யாகப் பாரதியாரின் சீடரா என்பதைத்தான் நான் சிந்தித்து உளவு செய்கிறேன். முதலில் பாரதியின் சீடராய்த் துவங்கிப் பாதி காலத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்டு வேறு வடிவில் உலவி வந்தார் பாரதிதாசன் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன்.
ஓர் கடவுள் உண்டு!
பேரும் அதற்கில்லை!
பெண்டும் அதற்கில்லை!
தேரும் அதற்கில்லை!
சேயும் அதற்கில்லை!
என்று பாரதிதாசன் தன் கடவுள் நம்பிக்கையைத் தனித்துவ முறையில் அழகாகக் காட்டி உள்ளார். ஆனால் அதை ஆத்மீகக் கருத்தென்று நான் சொல்ல மாட்டேன். இந்து சமயக் கருத்துக்களைப் பாடிய பாரதியாரின் எண்ணற்ற ஆத்மீகக் கவிதைகள் மாதிரி பாரதிதாசன் பலவிதப் பக்திப் பரவசக் கவிதைகள் எழுதவில்லை. நண்பர் கிரிதரன் கூறியபடி, காளி, முத்து மாரி, சிவன், பராசக்தி, விநாயகர், முருகன், கலைமகள், லட்சுமி, கண்ணனைப் பலவிதத் தோற்றங்களில் கண்டு சூரியன், அக்கினி மீது துதிகள், ஊழிக் கூத்து, சக்திக் கூத்து என்றெல்லாம் தோத்திரப் பாடல்கள் பாடித் தான் முழுக்க முழுக்க ஓர் ஆத்மீகக் கவிஞராகக் காட்டி யிருக்கிறார், பாரதியார். அவர் பாடிய பல வேதாந்த பாடல்களைப் போல், வசன கவிதைகளில் தனது விஞ்ஞான அறிவைக் காட்டியது போல் பாரதிதாசன் தன் பாக்களில் எழுத வில்லை!
ஈசன் வந்து சிலுவையில் மாண்டனன்!
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்!
என்று ஏசு பெருமானைப் பற்றி இந்து சமயவாதி பாரதியார் எழுதுகிறார். பிறகு இஸ்லாமியரின் தேவரான அல்லாவைப் பாராட்டி இந்து ஆத்மீகவாதி பாரதியார் பாடுகிறார். ஆனால் இதற்கு முற்றிலும் எதிராகப் பாரதிதாசன் ஏசு, முகமது, சிவன் ஆகியோர் பக்கம் போகாதே என்றல்லவா மக்களுக்குப் பாதை காட்டுகிறார். பண்டித நேரு, "உலக ஆற்றல்களிலே மிகச் சக்தி வாய்ந்தவை மதங்களும், மத நம்பிக்கைகளும்," என்று தன் நூல் ஒன்றில் கூறுகிறார். எந்த அணு ஆயுதங்களாலும், பல நூற்றாண்டுகள் பூமியில் ஆலமரமாய் வேர் ஊன்றி, விழுதுகள் விட்ட மதங்களையும், அவற்றின் தனித்துவ மதக் கடவுள்களையும் அழிக்க முடியாது! ஆத்மீகக் கவிஞரான பாரதி ஒருவனுக்கு அது புரிந்திருப்பதால் அவர் மதங்களை வெறுக்காமல் வரவேற்கிறார். விவேகானந்தர், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆத்மீகவாதிகளுக்குச் சான்றாகக் கூறலாம். அவ்விதம் நோக்கினால் பாரதிதாசனை ஓர் ஆத்மீகக் கவிஞராகக் கருத முடியுமா என்பது ஐயப்பாடே!
பாரதியாருடன் இருந்த பிரெஞ்ச் பகுதியில்தான் பாரதிதாசன் ஆரம்ப காலக் கவிதைகளை எழுதியிருக்க முடியும் என்பது என் கருத்து. பாரதிதாசன் வசித்த புதுச்சேரியில் பாரதியார் போல் அநேகக் கவிதைகளைத் தான் எழுத முடிய வில்லை என்று நண்பர் கிரிதரன் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. பண்டித நேரு ஆங்கில ஆட்சியில் கைதி செய்யப்பட்டு, வடநாட்டில் அகமத்நகர் கோட்டைச் சிறையில் இரண்டரை ஆண்டுகள் [1942-1945] அடைபட்டுள்ள போதுதான், உலகப் புகழ் பெற்ற அவரது, "இந்தியக் கண்டுபிடிப்பு" [Discovery of India] என்னும் நூலை எழுதினார். ஆக்க உந்து சக்தி உள்ளவருக்கு வாழும் தளம் எதிர்ப்பு அளித்துத் தடை செய்தாலும், படைப்புகள் இரகசியமாய் எழுதப்பட்டு அன்னிய நாடுகளில் வெளியாகி யிருப்பதை நாம் வரலாறுகளில் படித்திருக்கிறோம்.
பாரத விடுதலை மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பாரதிதாசன் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் என்பதில் எனக்கு ஐயமில்லை என்று நான் எனது முதல் புகாரி கவிதை விழாக் கட்டுரையில் கூறி யிருக்கிறேன். இப்போது உருவக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பாரதிதாசன் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் என்பதில் எனக்கு ஐயமில்லை என்று சொல்கிறேன். நண்பர் கிரிதரனின் இரண்டாம் கட்டுரைப்படி பாரதிதாசன் பாரதியார் காலஞ் சென்ற பின்னும் 9 ஆண்டுகள், அதாவது மொத்தம் 39 வருடங்கள், பாரத விடுதலைப் பற்றி நினைவில் வைத்திருந்தார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆயினும் பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துள்ள சமயம், பாரதிதாசனிடம் நான் சுட்டிக் காட்டிய சில குறைபாடுகள், மறைபாடுகள் இன்னும் விளக்கம் பெறவில்லை! தேசப் பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, பாரதிதாசன் இரங்கல் கவிதை எதுவும் எழுதாமல் புறக்கணித்தது ஒன்று. அடுத்தது, பாரதம் விடுதலை பெற்று 200 ஆண்டு கால வரலாறு மாறியதைப் பற்றிக் கண்டும் காணாமல் புறக்கணித்தது. பாரதிதாசனைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் இவற்றின் காரணங்களை எனக்கு எடுத்துச் சொன்னால் நான் தெரிந்து கொள்வேன்.
பார்க்கப் போனால் இரட்டைக் கவிஞர்கள் பாரதிதாசன் வடிவில் வாழ்ந்திருப்பது போல் எனக்குத் தெரிகிறது! பாரதியார் காலத்தை ஒட்டிச் சுமார் 39 வருடங்கள் பாதி வயதுவரைக் கடவுள் நம்பிக்கை கொண்டு, காந்தியார் மேல் பாசமும், விடுதலைப் பற்றும் கொண்டு வாழ்ந்த கவிஞர் ஒருவர். பிறகு சுமார் 34 வருடங்கள் காந்தியாரைத் துறந்து, பெற்ற சுதந்திரத்தைப் போற்றாது, முற்றிலும் வேறான பகுத்தறிவுக் கருத்தாளராக வாழ்ந்த கவிஞர் அடுத்தவர். இவ்விரண்டு கவிஞர்களில் யார் மெய்யானர், யார் பொய்யானவர் என்பதைப் பாரதிதாசனின் கவிதை ஆக்க எண்ணிக்கை, கவிதைக் கருத்துக்களைப் படிப்போர்களே ஊகித்துக் கொள்ளட்டும். பாரதி மறைவுக்குப் பின்னர் வாழ்ந்த பகுத்தறிவுப் படைப்பாளியான பாரதிதாசனே மெய்யான கவிஞர் என்பது என் கணிப்பு! பாரதியாரின் பக்கத்தில் இணையாக நிறுத்திப் பாரதிதாசனை ஓர் ஆத்மீகக் கவிஞராகவோ அல்லது ஒரு தேசீயக் கவிஞராகவோ என்னால் கருத முடியவில்லை!
(நன்றி PathivukaL By V.N. Giritharan)
தகவல்:
1. தமிழ் இலக்கிய வரலாறு, டாக்டர் மு. வரதராசன் [சாகித்திய அக்காடெமி வெளியீடு, பதினெட்டாம் பதிப்பு (2003)]
பாரதியார் பற்றிப் பக்கங்கள்: இக்காலப் பாட்டிலக்கியம் (236-349)
பாரதிதாசன் பற்றிப் பக்கங்கள்: (349-355)
2. தமிழ் இலக்கிய வரலாறு, பேராசிரியர் எம். ஆர். அடைக்கலசாமி எம்.ஏ. [ராசி பதிப்பகம் முப்பத்து ஆறாவது பதிப்பு (2003)]
பாரதியார் பற்றிப் பக்கங்கள்: 20 ஆம் நூற்றாண்டுக் கவிதைகள் (235-241)
பாரதிதாசன் பற்றிப் பக்கங்கள்: (241-246)
3. பாரதிதாசன் கவிதைகள் [உமா பதிப்பகம், சென்னை .. மார்ச் 2007]
4. http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html
________________________________________________________________________
தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)
http://jayabarathan.wordpress.com/
No comments:
Post a Comment