சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943
நூல் விமர்சனம்
ஆசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியம்
பல நூறு ஆண்டுகளாகச் சாதீய உயர்வு தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலக்கட்டத்தில் தமக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புகளின் பலனாலும் அக்கால சுயமரியாதை சிந்தனை எழுச்சியின் காரணத்தினாலும் சமூக விழிப்புணர்வு பெற்றனர். சமூகப் பார்வை என்பது அரசியல் பார்வையுடன் ஒருமித்த வகையில், அக்காலகட்ட எழுச்சி நிலை அமைந்திருந்தது. இந்த விழிப்புணர்வின் அடையாளமாகத் தலித் மக்கள் முயற்சியில், தமது சமூகத்தவர் பிரச்சனைகளை அலசும் வகையிலும், தீர்வுகளைக் காண முனையும் வகையிலும் இதழ்கள் வெளிவரத்தொடங்கின. இந்த இதழ்கள், பத்திரிக்கைகள் பற்றி இன்று பலரும் மறந்து விட்ட சூழலில் கி.பி. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த 42 தலித் பத்திரிக்கைகள், இதழ்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவற்றை மேற்கோள்களுடனும், அவற்றை வெளியிட்ட ஆசிரியர், பதிப்பகத்தார் பற்றியும் தொகுத்து நல்லதொரு நூலைப் படைத்திருக்கின்றார் நூலாசிரியர். எனது அண்மைய வாசிப்புக்களில் மிக விரிவான களப்பணியுடன் கூடிய ஒரு ஆய்வு நூலாக இந்த நூலைக் காண்கின்றேன்.
20ம் நூற்றாண்டின் பத்திரிக்கை மற்றும் இதழ்கள் பற்றின முயற்சி எனப் பேசத்தொடங்கும் போது பொதுவாக பலரும் அறிந்தவையாக இருப்பவை சுதேசமித்திரன், இந்தியா, ஆனந்த விகடன், கலைமகள், கல்கி எனக் குறிப்பிடலாம். தலித் இதழ்கள் எனக் குறிப்பிட்டு தேடத் தொடங்கினால் ஒரு சிலருக்கு அயோத்திதாசப் பண்டிதரது முயற்சியில் வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை நினைவுக்கு வரலாம். இந்த நூலிலோ 42 இலக்கிய முயற்சிகள் தலித் சமூக விழிப்புணர்ச்சிக்காக இயங்கியமை பற்றியும் இவை அனைத்துமே தலித் சமூகத்தவரால் தொடங்கி நடத்தப்பட்டவை என்பதையும் அறிகின்றோம்.
கல்வி பெறுவதிலிருந்து ஒதுக்கப்பட்ட தலித் சமூகத்தவர் கல்வி பெற வேண்டும் என சீரிய பணியாற்றியோர் பலரைப் பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. திரு.ஜான் ரத்தினம் அயோத்திதாசப்பண்டிதரோடு இணைந்து திராவிடப்பாண்டியன் என்ற இதழை நடத்தியவர். இவர் 1889ம் ஆண்டு தலித் சமூகத்துக் குழந்தைகள் கல்வி கற்கும் வகை செய்ய ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கியிருக்கின்றார். 1892ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆண் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் என ஒரு பெரிய பள்ளிக்கூடத்தைத் தொடங்கியிருக்கின்றார். அதோடு சென்னை மக்கீம் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தையும், 1889ம் ஆண்டு பெண்களுக்கான மாணவியர் விடுதி ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றார். இவருக்கு அடுத்து 1906ம் ஆண்டு எம்.ஒய்.முருகேசம் பிள்ளை (தலித் சமூகத்தவர் குறிப்பாகப் பண்டிதர்கள் அக்காலச் சூழலில் பிள்ளை என்ற அடையாளத்தை பயன்படுத்தினர்) கோலார் தங்கவயல் பகுதியிலும், மாரிக்குப்பம் பகுதியிலும், சாம்பியன் காலணியிலும் இன்னும் வேறு சில பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியிருக்கின்றார். இவர் மட்டுமே பகல் வேளையில் இயங்கும் இரண்டு பள்ளிக்கூடங்களையும் 16 இரவு பள்ளிக் கூடங்களையும் தொடங்கியிருக்கின்றார். சிதம்பரத்தில் தலித் மக்கள் சமூக மேம்பாட்டிற்காகச் சேவை செய்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள். இவர் சிதம்பரத்தில் 1910ம் ஆண்டு நந்தனார் பள்ளியைத் தொடங்கினார். தலித் சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட எம்.சி.ராஜா 1916ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ஜகந்நாதன் சாலையில், அதாவது தற்போது வள்ளுவர் கோட்டம் உள்ள சாலைக்கும் நுங்கம்பாக்கம் சாலைக்கும் இடையில் இருப்பது, ஆதிதிராவிட மகாஜன சபையின் பள்ளியைத் தொடங்கினார். எல்.சி.குருசாமி என்பவர் 1921ம் ஆண்டு சென்னை ராயபுரத்திலும் புதுப்பேட்டையிலும் இரவுப்பள்ளிகளை நிறுவினார். இவை மட்டுமன்றி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களால் தலித் மக்கள் கல்வி மேன்மைக்காக பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன என்றாலும் அவை பற்றின தகவல்களும் ஆவணங்களும் முறையாகப் பதியப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் தலித் சமூகத்துக் குழந்தைகள் நவீன ஆரம்பக் கல்வியையும் அதன் பின்னர் உயர் நிலைக்கல்வியையும் பெறும் வாய்ப்பினை பெற்றனர். இத்தகைய கல்வி வாய்ப்பு பெற்று வளர்ந்தவர்களில் சிலரே ஏனைய தலீத் சமூகத்து மக்கள் நலன் கருதி பத்திரிக்கைகளும் இதழ்களும் ஏற்படுத்தி சமூக சீர்திருத்த செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இதன் காரணமாக விளைந்தவையே அக் காலச்சூழலில் வெளிவந்த பத்திரிக்கைகளுக்கும் இதழ்களுக்கும் எனலாம்.
இந்த நூலில் ஆசிரியர் தனது ஆய்வில் அடையாளம் கண்டு ஆராய்ந்த பத்திரிக்கைகளின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியர்களையும், பதிப்பகத்தையும், அவை முன்னெடுத்த சீரமைப்பு சிந்தனைகளையும் முடிந்த வரைக்கும் மிகச் சிறப்பாக விளக்கிச் செல்கின்றார்.
இந்த நூலில் முதலில் வருவது சூரியோதம் இதழ். இது திருவேங்கடசாமி பண்டிதர் என்பவரால் 1869ம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. அடுத்து வருவது பஞ்சமன் இதழ். இது 1871ம் ஆண்டு வெளிவந்தது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டக் குரலாக இந்த இதழ் செயல்பட்டதாக ஆசிரியரின் தகவல்கள் அமைகின்றன. 1872ம் ஆண்டு சுவாமி அரங்கையாதாஸ் என்பவரால் மெட்ராஸிலிருந்து வெளியிடப்பட்டது சுகிர்தவசனி எனும் இதழ் இது சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கருத்துக்களை முன்வைத்துச் செயல்பட்ட ஒரு இதழாக அமைகிறது. இந்துமத சீர்திருத்தி எனும் இதழ் 1883ம் ஆண்டு பாளையங்கோட்டையில் கே ஆறுமுகம் பிள்ளை எனும் ஆதிதிராவிடரால் தொடங்கப்பட்ட முயற்சி. வேலூர் முனிசாமிப் பண்டிதரின் முயற்சியால் 1886ம் ஆண்டு ஆன்றோர் மித்திரன் எனும் இதழ் தொடங்கப்பட்டது. சென்னை கிருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பா.அ.அ.இராஜேந்திரம் பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்ட இதழ் மஹாவிகடதூதன். இது 1886 முதல் 1927 வரை வெளிவந்தது என்றும் வேறு தலித் சமூகத்து பத்திரிக்கை ஆசிரியர்கள் இதன் வெளியீட்டைத் தொடர்ந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது. பறையன் இதழ் இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் 1893 முதல் 1900 வரை வெளியிடப்பட்டன. மாத இதழாகத் தொடங்கி பின்னர் வார இதழாக இது மாற்றம் பெற்றது. இந்தப் பத்திரிக்கை ஒடுக்கப்பட்டோருக்காக அதிலும் பறையர் சமூகத்தோருக்காகத் தனிப்பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து வெளிவந்தது என அறியமுடிகின்றது. திராவிடப் பாண்டியன் எனும் இதழை ஜான் இரத்தினம் அவர்களும் அயோத்திதாசப் பண்டிதரும் இணைந்து 1896ம் ஆண்டு தொடங்கினர் முதலில் ஒரு சங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் தொடர்ச்சியாக இதே பெயரில் இதழையும் தொடங்கினர் என்பதையும் இந்த நூலிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
இல்லற ஒழுக்கம் (1898), பூலோகவியாஸன் (1903-1917), ஒரு பைசா தமிழன், திராவிட கோகிலம், மதுவிலக்கு தூதன், ஆல்காட் கிண்டர்காடன் ரிவியூ, விநோதபாஷிதன், ஊரிஸ் காலேஜ் கிண்டர்கார்டன் மேகசின், வழிகாட்டுவோன், ஆதிதிராவிடன், மெட்ராஸ் ஆதிதிராவிடன், ஜாதி பேதமற்றோன் இந்திரகுல போதினி, சாம்பவர் நேசன், ஆதிதிராவிட பாதுகாவலன், சாம்பவகுல மித்திரன், தருமதொனி, சந்திரிகை என ஒவ்வொரு இதழைப்பற்றிய குறிப்புக்களையும் நூலாசிரியர் தேடிச் சேகரித்து இந்த நூலில் வழங்கியிருக்கின்றார். 42 இதழ்கள் மட்டும்தானா, என்று நம் மனதில் எழும் கேள்விக்கு, இன்னும் கூட பத்திரிக்கை முயற்சிகள் இருக்கலாம், ஆனால் அவை மேலும் ஆராயப்பட வேண்டும் என்ற சிந்தனையையே வாசிக்கும் வாசகர்களுக்கு நூல் வழங்கும் செய்தியாக இருக்கின்றது.
இந்த நூல் குறிப்பிடும் தலித் இதழ்களில் பல இன்று தமிழகத்தில் தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது அரசினால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களில் தேடினால் இவற்றைக் கண்டெடுக்க வாய்ப்புண்டு. அதோடு இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் இவற்றின் படிகள் இருக்கவும் வாய்ப்பு நிச்சயம் இருக்கலாம். அவ்வகையில் தேடுதல் முயற்சிகளை முன்னெடுத்தால் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி வெளிவந்த தலித் பத்திரிக்கைகளையும் இதழ்களையும் நாம் காணும் வாய்ப்பு கிட்டும்.
நூலாசிரியரின் கடுமையான ஆய்வு முயற்சியும், இத்துறையிலான விரிவான வாசிப்பும் நூலில் முழுமையாக வெளிப்படுகின்றது. நல்லதொரு ஆய்வு நூலை வழங்கியிருக்கும் முனைவர் ஜெ.பாலசுப்பிரமணியம் பாராடுதலுக்குறியவர். மேலும் சிறந்த ஆய்வுப் படைப்புக்களை அவர் வழங்க எனது நல்வாழ்த்துகள்.
குறிப்பு - இந்த நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.
முனைவர்.க.சுபாஷினி
No comments:
Post a Comment