Wednesday, April 23, 2014

இனிய 450வது பிறந்த நாள், மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

 


கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு மேலாக ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கொடுங்கனவாக இருந்துவருகிறார், ஷேக்ஸ்பியர்.

பாவம், எத்தனை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இவரது குழப்பமான நாடகங்களையும், அதில் வரும் குழப்பமான கதாபாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமே என்று  நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியாது. இவரது நாடகங்களை நடிப்பவர்கள் எத்தனை பேர் இவரது புகழ் பெற்ற வசனங்களையும், இறவா வரம் பெற்ற வரிகளையும் மேடையில் மறக்காமல் பேசவேண்டுமே என்று தவிக்கிறார்களோ, தெரியாது.

ஏன் தான் இவரது துன்பக்கதைகளுக்கு பக்கம் பக்கமாக விரிவுரை எழுதினோம் – பேசாமல் ஹாலிவுட் நகைச்சுவை படங்களுக்கு விரிவுரை எழுதியிருக்கலாம் என்று பல ஆங்கில பேருரையாளர்கள் வருந்திக் கொண்டிருப்பார்களோ? எப்படியாயினும், இவர்கள் எல்லோரும் ஷேக்ஸ்பியரை நேசிப்பவர்களே, அதில் சந்தேகமில்லை.

இப்படி எல்லோரையும் ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்த, ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்த  மகா கவிஞன், நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் 450 வது பிறந்த நாள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இவர் யார், இவருக்கு ஏன் இத்தனை பெயரும் புகழும் என்று பார்ப்போம்:

முதலில் அவரது கொடையாண்மையைப் பார்ப்போமா? ஆங்கில மொழிக்கு இவர் அளித்த வார்த்தைகள் 1700 க்கும் அதிகம். அதுமட்டுமா? ஆங்கில மொழியில் இருக்கும் பெயர் சொற்களை வினைச் சொற்களாகவும், வினைச்சொற்களை பண்புச் சொல்லாகவும் மாற்றி, பழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு முன்னொட்டு (prefix), பின்னொட்டு (suffix)  சேர்த்து அவற்றை புது வார்த்தைகளாக மாற்றி, புத்தம்புது அசல் வார்த்தைகளையும் கண்டுபிடித்து ....எத்தனை எத்தனை செய்திருக்கிறார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பல சொலவடைகள் இவரது எண்ணத்தில் உதித்தவை. எதாவது நமக்குப் புரியவில்லை என்றால் “It’s Greek to me’ என்கிறோமே, இந்த சொற்றொடர் ஷேக்ஸ்பியரால் பயன்படுத்தப்பட்டது. உண்மையில் அவருக்கு கிரேக்க மொழி தெரியாதா? கிரேக்கத்தை மையக் கருத்தாக வைத்து Timons of Athens, Troilus and Cressida போன்ற நாடகங்களை எழுதியவருக்கு கிரேக்க மொழி தெரியாதா? இல்லை கிரேக்கர்களை வெறுப்பேற்ற இப்படிச் சொல்லுகிறாரா? அவருக்கே வெளிச்சம்!

இவர் பயன்படுத்திய நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் சில சொற்றொடர்கள்: ‘vanish into thin air’, too much of a good thing, seen better days, live in a fool’s pradise...... இவற்றை தவிர 38 நாடகங்கள், 154 சானேட்ஸ் (14 வரிகள் கொண்ட பாடல்கள்), மற்றும் பல பல்சுவை பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவரது நாடகங்களில் மெல்லிய நகைச்சுவையிலிருந்து ஆழ்ந்த துன்பியல் சுவை வரை  காணலாம். இந்நாடகங்களின் கதாபாத்திரங்கள் மனிதனின் நல்ல பக்கங்களையும், கெட்ட பக்கங்களையும் காட்டுபவையாக இருக்கின்றன. இவர்கள் உயிரோட்டமுள்ளவர்களாக நம்முடனேயே வாழுபவர்கள். பலதலமுறை வாசகர்களும் நாடக விரும்பிகளும் இந்தக் கதாபாத்திரங்களை விரும்புவார்கள் அல்லது இவர்களை வெறுப்பதற்கு முயற்சிப்பார்கள்

ரோமியோ ஜூலியட்டை ஈர நெஞ்சத்துடன் நினைக்காத காதலர்கள், காதல் கதைகள் உண்டோ? தமிழ் சினிமாக்களில் காணப்படும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிலவும் கடுமையான பகைமையை மீறி அங்கு இருக்கும் இரு இளநெஞ்சங்களில் மலரும் காதல் – இவரது கொடைதான். மென்மையான மேக்பெத் மெல்ல மெல்ல பழிவாங்கும் வில்லனாக மாறுவதாகட்டும்; ஒதேல்லோவின் கண்மூடித்தனமாக பொறாமையாகட்டும் – மனித இனத்தின் உணர்ச்சிக் குவியல்கள் இவரது கதாபாத்திரங்கள்.

ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவன் என்ற ஊரில் பிறந்த இவரது பிறந்த தேதி நிச்சயமாகத் தெரியவில்லை. ஞானஸ்நானம் செய்யப்பட போது இவருக்கு இடப்பட்ட பெயர் கிலியாமஸ் பிலிய ஜோஹனஸ் ஷேக்ஸ்பியர். (Guiliamus filius Johannes Shakspere) லத்தீன் மொழியில் இதன் பொருள் வில்லியமின் மகன் ஜான் ஷேக்ஸ்பியர் என்பது. இவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது ஏப்ரல் 26, 1564. அதனால் இவர் பிறந்தது ஏப்ரல் 23 ஆக இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். மறைந்ததும் ஏப்ரல் 23 அன்று தான், வருடம் 1616.

எழுதுவது, நாடகங்களை தயாரிப்பது, நடிப்பது என்று லண்டன் நகரிலேயே தனது வாழ்நாளை கழித்தாலும், தான் பிறந்த சின்னஞ்சிறு ஊரை மறக்காமல் அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருந்தார் இவர்.

இவர் எப்போது எழுதத் தொடங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் 1592 ஆம் வருடத்திலேயே இவரது நாடகங்கள் லண்டன் நகரில் அரங்கேறத் தொடங்கிவிட்டன. அப்பொழுதே இவரை கடுமையாக விமரிசித்தவர் ராபர்ட் கிரீன். ‘எல்லாம் தெரிந்தவன் போல காட்டிகொள்ளும் ஒன்றுக்கும் உதவாதவன், இரண்டாம்தர எழுத்தாளன்’ என்று ஷேக்ஸ்பியரை வர்ணித்தார். பென் ஜான்சன் இவரை கொஞ்சம் கூட கற்பனைத் திறன் இல்லா கவிஞன் என்று கூசாமல் திட்டினார். ஆனால் அகராதிகளின் தந்தை என்று அழைக்கப்பட்ட சாம் ஜான்சன் ஷேக்ஸ்பியரின் மிகப்பெரிய விசிறி. ஏனென்றால் ஷேக்ஸ்பியர் இல்லையென்றால் ஒலியியலில் 2,000 வார்த்தைகள் குறைந்திருக்குமே!

எழுத்தாளர், நடிகர், நாடக ஆசிரியர் இவை தவிர ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த தொழிலதிபராகவும் இருந்தார். அவரும் அவரது சகாக்கள் சிலரும் சேர்ந்து சொந்த நாடகக் கம்பனி ஒன்றை தேம்ஸ் நதியின் தெற்கு கரையில் ஆரம்பித்து அதற்கு குளோப் என்று பெயரும் இட்டனர். உலகமே நாடக மேடை என்று சொன்னவரின் நாடகக் கம்பனிக்கு இதைவிட பொருத்தமான பெயர் உண்டோ? இதில் வந்த வருமானத்தை மிகவும் பத்திரமாக மறுபடி மறுபடி முதலீடு செய்து லண்டன் நகரில் பல சொத்துக்களையும், ஸ்ட்ராட்போர்டில் இருந்த இரண்டாவது பெரிய வீட்டையும் வாங்கினார் ஷேக்ஸ்பியர்.

பாரிசிலும், லண்டனிலும், மற்ற ஐரோப்பிய நகரங்களிலும் இவரது 450வது பிறந்த நாளைக் கொண்டாட விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர் பிறந்த ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவனிலும் பல கலை நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

நாமும் இந்த மகா கவிஞனை வாழ்த்துவோம், வாருங்கள். இனிய 450 வது பிறந்த நாள் வாழ்த்துகள் மிஸ்டர் ஷேக்ஸ்பியர்.

4தமிழ்மீடியாவிற்காக:  ரஞ்சனி நாராயணன்

No comments:

Post a Comment