Showing posts with label Megala Ramamurthy. Show all posts
Showing posts with label Megala Ramamurthy. Show all posts

Tuesday, April 29, 2014

பாவேந்தரின் நகைச்சுவை!



பாவேந்தரின் நகைச்சுவை!


தமிழகத்தின் அன்றைய நிலையை (ஏன் இன்றைய நிலையும் அப்படித்தான் இருக்கிறது!) மிக அழகாகத் தன் கவிதை வரிகளில் காட்சிப்படுத்துவதில் பாவேந்தரை விஞ்சிய ஓர் கவிஞனைத் தமிழகம் காணவில்லை இன்றுவரை! தமிழ் அவர் கரங்களில் பூனைக்குட்டிபோல் கொஞ்சி விளையாடியது; இழுத்த இழுப்பிற்கு வளைந்துகொடுத்தது!


நம் மக்களிடம் நெடுங்காலமாக மாற்றமுடியாமல் இருக்கும் ஒரு பழக்கம், வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் நகைகளை அள்ளிப் போட்டுக்கொள்வதும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொள்வதும்! எளிமை என்பதை ஏட்டில்கூட எழுதிப் பார்க்க பலர் விரும்புவதில்லை. (எளிமை விரும்பியான) இறைவனைத் தொழுவதற்கு ஆலயம் செல்லும்போதும் இதே நிலைதான்!


இதையெல்லாம் கண்ணுற்ற பாரதிதாசன் நகைச்சுவையாகவும்...அதே நேரம் மக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் ஓர் அழகிய பாடலை இயற்றியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த பாவேந்தரின் பாடல்களில் இப்பாடலுக்கு எப்போதும் ஓர் முக்கிய இடமுண்டு!! :-)


’ஏசுநாதர் ஏன் வரவில்லை?’ என்பது அப்பாடலின் தலைப்பு. தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதல்லவா? பாடலிலும் ’பகடி’ கபடி விளையாடுகின்றது!


பாடலின் கருத்து: தேவாலயத்தில், எளிமையை விரும்பும் பாதிரியார் ஒருவர் ஒருநாள், “இனிமேல் யாரும் தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், கால் போன்ற எட்டு உறுப்புக்களிலும் நகைகள் அணிந்துகொண்டு வந்து தேவகுமாரனைத் தரிசிக்கக் கூடாது!

அதுமட்டுமல்ல….ஆடம்பரமான ஆடைகளும் உதவாது; எளிமையான, விலைமலிவான ஆடைகளை அணிந்துவந்தால்தான் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவீர்கள்! இல்லையென்றால் no entry” என்று (தெரியாத்தனமாக) ஓர் உத்தரவு போட்டுவிட்டார்!


உத்தரவு போட்டதுதான் தாமதம்…அதன்பிறகு தேவாலயத்தின் பக்கம் ஓர் ஈ, காக்காய் கூட எட்டிப் பார்க்கவில்லை. தேவாலயமே வெறிச்சோடிப் போனது; வெலவெலத்துப்போனார் பாதிரியார்.


நீண்ட நேரம் (குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி) ஆழ்ந்த யோசனை செய்துவிட்டுத் தேவாலய வாசலில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்தார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்…”இனிமேல் பக்தகோடிகள் அனைவரும் தலை, காது உள்ளிட்ட எட்டுறுப்புக்கள் மட்டுமின்றி இமைகள், உதடு, நாக்கு போன்ற உறுப்புக்களிலும் நகைகள் போடலாம்! அதுமட்டுமா? நீங்கள் உங்கள் அழகைப்(!) பார்த்து ரசிப்பதற்கு வசதியாகப் புதிதாக ரசம்பூசப்பட்ட பளபளப்பான ஆளுயரக் கண்ணாடி ஒன்றும் (உடனடியாகத்) தேவாலயத்தில் மாட்டப்படும்!”  :-)


அறிவிப்பைப் படித்தனர் மக்கள்; மகிழ்ச்சியில் மலர்ந்தன அவர்தம் முகங்கள்! அலைகடலெனத் திரண்டுவந்தனர் தேவாலயத்திற்கு! ஆனால் ஒருவர்மட்டும் தேவாலயத்திற்கு வரமறுத்துவிட்டார்! அவர் யார் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? அவர்தான் ’ஏசுநாதர்!’


கோயிலுக்குச் செல்லும்போதேனும் நம் மக்கள் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடாதா என்ற பாவேந்தரின் ஏக்கமே இந்தப் பாடல்!


தலைகாது மூக்கு கழுத்துகை மார்புவிரல்
தாள்என்ற எட்டுறுப்பும்
தங்கநகை வெள்ளிநகை ரத்தினமி ழைத்தநகை
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென் றேபாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!


நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள் உதடுநாக்கு
நிறையநகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும்உண்டென
இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்துசேர்ந்தார்
ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே
இனியபா ரததேசமே!


இதைத்தான் ”ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்கிறார் கவியரசர்!



ஆக்கம்: திருமதி மேகலா ராமமூர்த்தி

Sunday, April 27, 2014

முதியோர் காதல்!


 elder



பாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவருவது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் ரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதலே!’

மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமான அளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!

மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட (குடும்ப விளக்கின் தலைமைப் பாத்திரங்களான) தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.

தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…

”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்…

”மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
இனிதாக வாழு கின்றோம்
முந்துறச் சுற்றத் தார்க்கும்
செய்வன முழுதும் செய்தோம்
இந்தநாள் வரைக்கும் வாய்மை
இம்மியும் மறந்த தில்லை

இந்நாட்டின் நலனுக்காக
நல்லறம் இயற்றி வந்தோம்
எந்நாளும் பிறர்க்குத் தீமை
எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.”

இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் அருமை மனைவியைப் பார்க்கிறார். அழகு கொலுவிருந்த அவளுடைய முந்தைய இளமைத் தோற்றமும், உடல் தளர்ந்த இப்போதைய முதிய தோற்றமும் அவருடைய மனக் கண்ணிலே மாறி மாறி வந்துபோகின்றன.

காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ…என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போலல்லவா அந்த எழில்முகம் உருமாறிவிட்டது?!” எனப் பெருமூச்செறிகிறார்!

“மேனி அழகு குலைந்துபோய்விட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கின்றது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் அந்த மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!

நெஞ்சை நெகிழச் செய்யும் அந்தப் பாடல்….

புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம் குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!

 எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது!

உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தானே! கவிஞர் வைரமுத்து சொல்வதுபோல் ’உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல்’ மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!

’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.

அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’யை இளையோர், தம்முடனே ஒன்றாக இணைந்து வசித்துவந்த, பெற்றோரிடமும் ஏனைய பெரியோரிடமும் நேரடியாகக் கற்ற அனுபவமே! இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!

’Nuclear Family’ என்று சொல்லப்படுகின்ற தனிக்குடும்ப அமைப்புமுறை கோலோச்சத் தொடங்கிவிட்ட இன்றைய சூழலில் முதிய தம்பதியர் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!

வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கதுதானே?



அன்புடன்
மேகலா

வல்லமை மின்னிதழில் வெளிவந்தது.

ஆக்கம்: திருமதி மேகலா ராமமூர்த்தி

Saturday, April 26, 2014

பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!


பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!
மேகலா இராமமூர்த்தி 

முத்துலட்சுமி ரெட்டியார், மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் போன்று களப்பணியாற்றிப் பெண்ணுரிமைக்கு உழைத்தோர் சிலர்; அதுபோல் கவிப்பணியாற்றிப் பெண்டிர்தம் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டோர் வேறுசிலர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற கவிஞரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவர். தீப்பொறி பறக்கும் தன் கவிதைகள் வாயிலாகப் பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தவர் அவர்.

பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்டிர்தம் நல்வாழ்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைப் பெண்களின் மறுவாழ்வு, மணமுறிவு பெற்றவர்களின் மறுவாழ்வு என்று பல தளங்களில் தன் விரிந்த சிந்தனையைச் செலுத்தி இவையனைத்திற்கும் தம் புரட்சிப் பாக்கள் வாயிலாகத் தீர்வு(ம்) கண்டுள்ளார் பாவேந்தர்.

அகண்ட, விசாலப் பார்வையும், சமூகச் சீர்திருத்த எண்ணங்களும் இயல்பிலேயே அமையப்பெற்ற பாவேந்தர், சமுதாயத்தின் கண்களாய் விளங்கிடும் பெண்களின் அவலநிலை துடைத்திட ஆற்றிய கவிதைப் பங்களிப்பு மகத்தானது.

இந்தியத் திருநாட்டில் மண்ணடிமை ஒழிய வேண்டுமானால் முதலில் நம் வீடுகளில் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாரதிதாசன், தன் ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற காவியத்தில்,

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”
என்று அக் காவிய நாயகியின் மூலம் ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்.

பெண்கல்வியின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துகின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும், அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.

பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே!பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!…………………………………கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்அந் நிலத்தில்
புல்விளைந் திடலாம்நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனிஅங்கே
நல்லறி வுடைய மக்கள்
     விளைவது நவில வோநான்?” 

என்று பெண்கல்வியின் அவசியத்தைத் தன் ’குடும்ப விளக்கு’ என்ற நூலில் தெளிவாக விளக்குகின்றார்.

புரட்சிச் சிந்தனைகளையும், முற்போக்குக் கொள்கைகளையும் பாவேந்தரின் பாடல்கள்தோறும் காணமுடிவது ஓர் சிறப்பாகும். அதற்குப் ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரோடு பாவேந்தர் கொண்டிருந்த நட்பும் ஓர் முக்கியக் காரணம் என்று கூறலாம்.

பெண்கள் தங்கள் மணாளனைத் தாங்களே முடிவு செய்தல் வேண்டும் என்றும் பெற்றோரின்/மற்றோரின் கட்டாயத்திற்காக மணத்தல் தவறு எனவும் அறிவுரை கூறுகின்றார் இந்தப் புதுவைக் கவிஞர். இக்கருத்து எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதே அல்லவா?

’கல்யாணம் ஆகாத பெண்ணே! – உன்
கதிதன்னை நீநிச்ச யம்செய்க கண்ணே!
வல்லமை பேசியுன் வீட்டில் – பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;
நல்ல விலை பேசுவார் – உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,
கல்லென உன்னை மதிப்பார் – கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்;
வல்லி உனக்கொரு நீதி – இந்த
வஞ்சத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்
…………………………………………………………………………………………………………..
கற்றவளே ஒன்று சொல்வேன் – உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!’
  
பெண்ணை விலைபேசும் இத்தகைய வழக்கம் ’வரதட்சணை’ என்னும் பெயரில் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

கைம்பெண்களின் நல்வாழ்விற்கும் அதிகம் குரல்கொடுத்தவர் புரட்சிக் கவிஞரே என உறுதியாகக் கூறலாம். இக்கைம்மைக் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் ஆவேசம் கொண்டவராய்,

ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்
     அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்
     பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
     மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? என்று சீறுகின்றார்.

காதல் என்ற உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொதுவான ஒன்றுதானே….அதிலென்ன பேதம்? ஆண்மகன் வயதுசென்ற கிழவனாக இருந்தாலும் தன் மனைவி செத்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகிவிடுகின்றான். அது சரியே என்று ஒத்துக் கொள்ளும் இச்சமூகம் ’வாடாத பூப்போன்ற ஓர் மங்கை நல்லாள்’ கைம்மை அடைந்துவிட்டால் அவளின் நல்வாழ்வு குறித்தோ, எதிர்காலப் பாதுகாப்பு குறித்தோ சற்றும் சிந்திக்காமல் அவள் மறுமணம் புரிவது தவறு என்றும் தீது என்றும் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? என்று வினவுகின்றார். அதனை விளக்குவதற்கு அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவை; சிந்தனையைத் தூண்டுபவை.

”பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
     பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”
என்று பெண்ணிற்குத் தீங்கிழைக்கும் இச்சமூகத்தை நோக்கி வினா எழுப்புகின்றார்.

அடுத்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாக நடத்தப்படும் நாள் தமிழ்நாட்டில் என்று வருமோ? என்ற தன் ஏக்கத்தை அழகாய்ப் பதிவுசெய்துள்ளார் ஒரு பாடலில்…

”கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்த நாளோ ?” 

அதுமட்டுமன்று, திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒன்றாய் இணைந்து வாழ்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் அந்த ஆணோ அல்லது பெண்ணோ விலகி வாழ விரும்பினால் அஃது அனுமதிக்கப்படவேண்டும்; மேலும் (மணமுறிவு பெற்ற) அவர்கள் வேறு ஆடவனையோ, பெண்ணையோ மணந்து கொள்வதிலும் தவறில்லை என்ற கருத்துடைய பாவேந்தர், புரட்சிக் கவிஞராக மட்டுமின்றிப் புரட்சிச் சிந்தனையாளராகவும் தோன்றுகின்றார்.

”-------------------------------காதல்
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு பட்டால்
மடவார் பிறனை
மணக்க விடவேண்டும்
ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம்.” என்பது பாவேந்தரின் சித்தாந்தம்.

இவற்றோடு நில்லாமல், குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்யவேண்டும், குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழக் கருத்தடை முறையினைப் பின்பற்றவேண்டும் என்பன போன்ற சமூக நலத்திற்கானச் சீரிய கோட்பாடுகள் பலவற்றையும் தன் கவிதைகள் மூலம் பதிவுசெய்துள்ளார் பாவேந்தர்.

பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்தம் நல்வாழ்விற்கும் உழைத்தோர் வரிசையில் பாவேந்தருக்கும் ஓர் முக்கிய இடமுண்டு என்பதில் ஐயமில்லை.

***************