Saturday, November 30, 2019

கீழடியால் நாம் பெறுவது என்ன?

கீழடியால் நாம் பெறுவது என்ன?

—  முனைவர் சிவ. இளங்கோ



          பூமியில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் வரலாறு உண்டு. பூமி, சூரியக்குடும்பம், பேரண்டம் ஆகியவற்றுக்கும் வரலாறு உண்டு. ஆனால் வரலாறு என்பது மனித இனத்தைச் சார்ந்தே உருவாக்கப்படுகிறது. மனிதனின் சிந்தனை வளர்ச்சியே அதற்குக்காரணம். அதேநேரம், போகிற போக்கில் எதையும் சொல்லிவிடுவது வரலாறாகாது. இதற்குப் புராணம், இதிகாசம், வேதம், சாத்திரம் என்பவை சரியான எடுத்துக்காட்டுகள். சான்றுகளுடன் கூடியவையும், அறிவியல் வழியிலும் நிறுவக்கூடிய வையும்தான் வரலாறாக வரலாற்றாய்வாளர்களால் ஏற்கப்படுகிறது. ஆனால் அந்த வரலாற்றுக் காலத்துக்கு ஒரு வரையறை (கி.மு.300) வைத்து அதிலிருந்து வரலாற்றுக் காலம் என்றும், அதற்கு முற்பட்டது வரலாற்றுக்கு முந்தைய காலம் எனவும் இந்தியத் தொல்லியல் துறை வரையறை செய்திருக்கிறது. அந்த வரையறையை உடைத்துப் புதிய வரலாற்றுக்கால வரையறையை ஏற்படுத்தியதுதான் கீழடி அகழ்வாய்வுகளின் முடிவுகள்.

          கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. வைகை நதிக்கரையின் போக்கோடு இயைந்திருந்து புதையுண்டுபோன ஒரு நகர நாகரிகம். இந்தியாவில் சிந்துவெளிக்கும் அடுத்த ஓர் நகர நாகரிகம் இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல ஆய்வுகளில் பல பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை நடந்த அகழ்வாய்வுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 1,35,600 புதைபொருட்கள் கிடைத்து தமிழகத் தொல்லியல் துறை வசம் உள்ளன. அதில் 10 விழுக்காடு கூட காட்சிப்படுத்தப் படவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒரு புதையல் என ஆங்காங்கே கிடைத்து வருகிறது. அவை அந்தந்தப் பகுதிகளின் நாகரிக வளர்ச்சியைக் கூறுகின்றன. ஆனால் ஒரு நகரமாக, நகர அமைப்புடன், அதன் அடையாளங்களுடனும், வசதிகளுடனும் கூடிய ஒரு நாகரிகமாக அறியப்படுவது சிந்துவெளி நகர நாகரிகத்தையடுத்துக் கீழடி நகர நாகரிகம்தான். இது கங்கைச் சமவெளி நாகரிகக் காலத்தோடு சமன்படுவது என்ற நிலையைக் கங்கைச் சமவெளியினர் மறுத்துக் கொண்டிருக்கின்றனர்.

          இந்திய அரசின் தொல்லியல்துறை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வு செய்துவருகிறது. அதேபோல் கீழடியிலும்  2014 இல் இருந்து மூன்று முறை அகழ்வாய்வு செய்தது. மூன்றாவது அகழ்வாய்வின் போது திடீரென்று இது அகழ்வாய்வு நடத்துவதற்கு ஏற்ற இடமாக இல்லை என்று கூறி நிறுத்திவிட்டது.

          கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை மக்கள் ஆர்வம் பெருகி வர, தமிழக அரசின் தொல்லியல்துறை 2017ஆம் ஆண்டில் தொடங்கி இருமுறை அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொண்டு உடனடியாக அறிக்கையும் வெளியிட்டு இருக்கின்றது. தமிழக அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொண்டுள்ள நாற்பது அகழ்வாய்வுக் களங்களில் மிக விரைவில் அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்பட்டது கீழடி அகழ்வாய்வில்தான். அதற்கு நன்றிக்கடன் போலவே கீழடியின் முடிவுகள் வரலாற்று வரையறைக் காலத்தையே தகர்க்குமளவில் அமைந்திருக்கின்றன. ஆம், கி.மு.300ஆம் ஆண்டை வரலாற்றுக் காலத் தொடக்கம் என்பது போய், கி.மு. 600 எனச் சொல்லவைக்கிறது கீழடி. இன்னும் தோண்டினால் வரலாற்றுக் காலம் இன்னும் பின்னோக்கிப் போகக் கூடும் என்று தமிழர்கள் மகிழவும், பிறர் அச்சம் கொள்ளவும் கூடும். இனக் குழுக்களாக இருந்த மனிதர்கள் வேட்டையாடி உணவுத் தேவைகளை நிறைவு செய்துகொண்ட காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. இம்மக்கள் ஆற்றோரப் பகுதிகளின் வளமையைக் கண்டு அங்கேயே நிரந்தரமாகத் தங்கி தங்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டும், தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்துகொண்டும் நாகரிகச் சமூகமாக வளர்ச்சி நிலையை அடைந்தனர். இது உலகமெங்கும் நாகரிகக் குடியிருப்பை ஏற்படுத்தியது. மெசபடோமியா, எகிப்து ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளியை மையமாகக் கொண்டு எழுந்த சிந்துவெளி நாகரிகம் போன்று தற்போது கண்டெடுக்கப்பட்ட வைகைக் கரை நாகரிகம் தமிழர்களின் தொன்மை நாகரிகத்திற்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

படம் உதவி: தமிழக தொல்லியல் துறை

          வெறும் குடியிருப்புப் பகுதிகளாக மட்டும் இல்லாமல் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான நகர அமைப்பையும், அதற்கான கட்டிடங்களையும் கீழடி வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட செங்கற் சுவர்கள், தரைத்தளங்கள், வீட்டின் அமைப்பிலான பக்கச் சுவர்கள், கூரை ஓடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் நேர்த்தியான அளவுகளும், உறுதியான கட்டுமானத்திற்கான தொழில்நுட்பமும் இவற்றை இணைப்பதற்கான மரம், இரும்பு ஆணி இவற்றின் பயன்பாடும் தமிழ் மக்களின் கட்டிடக்கலையறிவைப் பறை சாற்றுகின்றன. இப்பகுதியில் கிடைத்துள்ள ஆணி முதலான பொருட்களால் இரும்பின் பயன்பாடு இம்மக்களுக்கு இதற்கு 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருக்கும் நிலையை உறுதி செய்கிறது. கூரை ஓடுகளில் காணப்படும் மழைநீர் ஒழுக்கின் அமைப்பு, வீதிகள் அல்லது கட்டிடங்களிலிருந்து கழிவுநீர் வெளியேறும் அமைப்பு ஆகியவை சங்க காலத்தில் நிலவிய சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வுகளில் பெரும்பாலும் முதுமக்கள் தாழி மட்டுமே கிடைத்திருப்பதால் தமிழ்நாடு ஒரு வாழ்விடமாக இருந்திருப்பதை ஐயத்திற்குள்ளாக்கி, அதன் வழி சங்க இலக்கியங்களையும் கற்பனைக் கதைகளாகச் சித்தரிக்கும் வட இந்தியப் பார்வையை உடைக்கும் சம்மட்டியாக இன்றைய கீழடியில் புதைந்திருக்கும் கட்டிடங்கள் விளங்குகின்றன.

படம் உதவி: தமிழக தொல்லியல் துறை

           ஒரு நாகரிகத்தைத் தோற்றுவித்த மக்கள், அதுவும் ஒரு நகர நாகரிகத்தைக் கட்டியமைத்த மக்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள், பிற்காலச் சந்ததியினர்க்கு ஓர் எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கும். கீழடி மக்களின் வேளாண் சார்ந்த சமூகத்திற்கு அடையாளமாக விளங்கும் நீர் மேலாண்மையை விளக்கும் உறைக்கிணறுகள், காளை, பசு, ஆடு, கோழி ஆகியவற்றின் பயன்பாட்டை விளக்கும் அப்பறவை மற்றும் விலங்குகளின் எலும்புகள் இவையெல்லாம் ஆய்வுக்குட்படுத்திய பின்னர் 2600 ஆண்டுகளுக்கு முன்பான தமிழர் பண்பாட்டைக் கூறுகின்றன. 

          புனேவில் உள்ள டெக்கான் கல்லூரி ஆய்வகத்தில் (டெக்கான் – தட்சிணம் – திராவிடம்) ஆய்வு செய்த பின்னர் திமில் உள்ள காளையின் எலும்பாக அது கண்டறியப்பட்டுள்ளது. திமிலுள்ள காளைகள் தமிழ்ப் பண்பாட்டின் வீர அடையாளத்திற்குரியவை. சங்க இலக்கியங்கள் அனைத்துமே காளைகளைப் பற்றியும், அக்காளைகளைத் தழுவும் மானுடக் காளைகள் (இளைஞர்கள்) பற்றியும் விரிவாகக் கூறுகின்றன. காதலியைத் தழுவும் முன்பு காளையைத் தழுவ வேண்டும் என்பதை வீரமாகவும், விளையாட்டாகவும் அமைத்துக் கொண்ட ஒரு பண்பாட்டைக் கற்பனையாக்க எத்தனை நெஞ்சுரம் அல்லது வஞ்சகம் வேண்டும்! ஆனால் அது கற்பனையல்ல, இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் சங்க இலக்கியப் பண்பாட்டின் நீட்சி என்பதைக் கீழடியில் புதைந்துள்ளவை எடுத்துக் கூறுகின்றன. அது  2,600  ஆண்டுகளுக்கு முன்பான நகர நாகரிகத்தோடு மட்டும் முடிந்து விடுவதல்ல. அதற்கும் மேலே விரிந்து கொண்டே போகிறது. சிந்து வெளியின் அடையாளம் என்ன என்று ஒரே சொல்லில் பதில் கேட்டால் யாருமே திமில் உள்ள காளை அல்லது எருதினைத்தான் கூறுவார்கள். சிந்துவெளியின் அத்தனை முத்திரைகளிலும் திமில் உள்ள காளை உருவம் இருக்கிறது. காளையை அடக்கும் வீரர்களைத் திமிறிப் பந்தாடும் காட்சிகளை உடைய முத்திரைகளும் சிந்துவெளியில் உள்ளன. சிந்துவெளிக் காளைகளையும், ஏறு தழுவுதலையும் அப்படியே காட்சிப் படுத்தியிருக்கும் சங்க இலக்கியங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதில் பல தவறான கருத்துகளே இதுவரை நிலவி வந்தன. சிந்துவெளி நாகரிகமும், சங்க இலக்கியப் பனுவல்களும், கீழடி நகர நாகரிகமும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து இந்தியா முழுவதும் கோலோச்சியிருந்த தமிழர் நாகரிகத்தைத் தற்போது உறுதிப்படுத்தி இருக்கின்றன. இவையெல்லாம், வாய்மொழிப் பாட்டாக உருவெடுத்து ஓர் இலக்கியமாக வளரும் காலநிலைகளெல்லாம், தமிழர் இருப்பை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு செல்லக் கூடிய நிலையை உறுதிப்படுத்துகின்றன.

          கீழடித் தமிழ்ச் சமூகம் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததைப் போலவே இரும்புப் பொருட்கள் தயாரித்தல், தச்சு வேலை, பானை வனைதல், நெசவு, அணிமணிகள் செய்தல் ஆகியவற்றைத் துணைத் தொழில்களாகக் கொண்டிருந்தது. அணிகளில் தங்க அணிகலன்களும், கண்ணாடி மணிகளும் கிடைத்துச் செல்வந்தரும், சாதாரண மக்களும் ஒன்றாக வாழும் சமுதாயமாகக் காணப்படுகிறது. தாயம், பாண்டி முதலிய விளையாட்டுகளுக்கான சில்லுகள், பகடைக் காய்கள், சதுரங்கக் காய்கள், வட்டச் சுற்றிகள், வண்டிச் சக்கரங்கள் (இவை பெரும்பாலும் சுடுமண்களால் செய்யப்பட்டவை) ஆகியவை அதிக அளவில் கிடைத்து, வாழ்க்கையைக் கூடிக் களித்துக் கழிக்கும் முறையில் வாழ்ந்திருக்கின்றனர் என்று தெளிவுபடுத்துகிறது. “முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால் முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல” என்று சங்க இலக்கியம் (கலித்தொகை) சொல்கிறது. காதலர் கூடியிருக்கும் நிகழ்வைத் தாய விளையாட்டில் பகடையை உருட்டிப் பத்து எண்ணிக்கை பெற்றால் எப்படி மனம் மகிழுமோ அப்படி மகிழ்ந்திருந்ததாகச் சங்க இலக்கியம் வரைகிறது. அந்தப் பகடைக் காய்களைத்தான் இப்போது கீழடி சான்றாக அளித்திருக்கிறது.

          இப்பொருள்களின் உற்பத்தி உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமல்லாமல் இலங்கை, கிரேக்கம், எகிப்து, ரோம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, முத்து, மிளகு போன்ற பொருட்களும் வணிகம் செய்யப்பட்டுள்ளன. தங்கம், மதுவகைகள், நறுமணப்பொருட்கள் ஆகியவை இறக்குமதி செய்யப் பட்டு வணிகம் செழிப்பாக நடைபெற்ற வரலாற்றை கீழடி மண் கூறுகிறது.

          பானை வனைதல் என்பது ஆதி குடிகளின் பண்பாடு கலந்த தொழில். விதவிதமான பானைகளோடு சுடுமண் பொம்மைகள் பற்பல உருவங்களில் செய்யப்பட்டு வந்தன. இவ்வுருவங்கள் அக்காலத்து மக்களின் உணவுப் பழக்கங்கள், விளையாட்டுப் பழக்கங்கள், அவர்கள் வளர்த்த விலங்குகள், பறவைகள், அவர்களிடையே நிலவிய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன. சுடுமண்ணிலேயே வண்ணமேற்றும் முறை, சூளையில் ஏற்றித் தேவைக்கேற்ப கடினப்படுத்துதல் போன்ற தொழில் நுட்பங்கள் மிகவும் கைவரப்பெற்ற சமுதாயமாகவே கீழடி இருந்துள்ளது. இவை தவிர வேறு கடவுள் உருவங்கள், சடங்கு முறைப் பொருட்கள் ஏதும் கீழடியில் கிடைக்கவில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு மதச்சார்புள்ளவர்களை திடுக்கிட வைத்திருக்கிறது.

          தமிழ்ச்சமூகம் என்பது தாய்த்தெய்வ வழிபாடுள்ள ஒரு சமுதாயமாகத்தான் அறியப்படுகிறது. அதனால் எந்தக் காலம் ஆனாலும் தாய்த் தெய்வ உருவங்கள் அகழ்வாய்விலும் கிடைக்கும். மேற்பரப்பிலும் இன்றும் காணப்படும். அதன் நீட்சியாக இன்றுவரை அம்மன் வழிபாடுகளும், சிறுதெய்வ வழிபாடுகளும் இருந்து வருகின்றன. ஆதி குடிகள் என்பதை நிரூபிக்கும் இவ்வகை வழிபாடுகள் தமிழ்க் குடிகளில் பரவலாகக் காணப் பட்டவையே. இயற்கையோடு ஒன்றியிருந்த இவற்றிற்குச் சமய மதிப்பேதும் இல்லை. மேலும் சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வியலில் நடுகல் வழிபாடு, கொல்லிப்பாவை, மரத்தில் உறையும் தெய்வம், காணுறை தெய்வம், அணங்கு, வேலன் வெறியாட்டு எனப் பல்வகை பண்பாட்டுப் பழக்கங்களைப் பட்டியலிடுகின்றன. தமிழர்க்கேயுரிய முன்னோர் வழிபாட்டு முறையும், குலதெய்வ வழிபாட்டு முறையும் இன்றளவும் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருவதை நீண்ட நெடிய பண்பாட்டுத் தொடர்ச்சியாகத் தான் கருதமுடிகிறது.

          இந்தியா முழுவதிலும் பரவியிருந்த தமிழ்ச் சமூகத்தோடு சேர்ந்து வளர்ந்த சமயமாக சமணமும், அதனையடுத்து பவுத்தமும், ஆசீவகமும் இருந்திருக்கின்றன. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சமயங்கள் அசோக மன்னர் காலத்தில் அரசாங்க ஆதரவுடன் இந்தியா முழுமையும் குறிப்பாகத் தென்னகத்தில் அதிகமாகப் பரவின. அப்போது கூட உருவ வழிபாடுகள் ஏதும் இருந்திருக்கவில்லை. அசோகர் காலத்தில் ஒரு நினைவுச் சின்னமாக நிறுவப்பட்ட புத்தரின் காலடி உருவம் பின்னாட்களில் வழிபாட்டு உருவமாக மாறியது. இதன் பின்னர் கி.பி.4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வைதிகச் சமயங்களின் ஊடுருவல் காரணமாகச் சமணம், பவுத்தம், ஆசீவகம் ஆகியவையும் உருவ வழிபாட்டை ஏற்று மெல்ல மெல்ல வைதீகத் தெய்வங்களின் கற்பனை உருவங்கள் கடவுள்களாக்கப்பட்டன. அதிலிருந்தே சடங்கு முறைகளும் தொடங்கின. ஆகையால் கி.மு.300 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கிடைக்கும் பொருட்களில் தாய்த் தெய்வம், முன்னோர் வழிபாடு, நடுகல் ஆகியவை தவிர்த்து வேறு கடவுள் உருவங்களோ, சடங்கு நடந்த சான்றுகளோ கிடைப்பதற்கு வழியேயில்லை.

                    “ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
                    ஒளிறுஏந்து  மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
                    கல்லே பரவின் அல்லது நெல்உகுத்துப் பரவும்
                    கடவுளும் இலவே”
என்று புறநானூறு தெளிவாக வரையறை செய்கிறது. தமிழ்ச் சமுதாயத்தைக் காக்கப் போரிட்டு மாண்ட வீரனுக்கு எழுப்பப்படும் நடுகல்லைத் தவிர படையல் செய்யக்கூடிய வேறெந்தக் கடவுளும் இல்லையென மூவாயிரம் ஆண்டுப் பண்பாடு தெளிவாகத் தெரிவிக்கிறது.

          தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கீழடியில் கிடைத்ததுதான் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தைச் (சங்க இலக்கிய காலத்தை) பின்னோக்கிச் செலுத்தி தமிழர்களை நெஞ்சு நிமிர வைத்துள்ளது. இதுவரை கீழடியில் தமிழி எழுத்துகள் கொண்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்னர், தமிழகத்தில் நடைபெற்ற வேறு சில அகழ்வாய்வுகளில் தமிழி எழுத்துள்ள மோதிரங்களும், தேனூரில் கோதை என்ற பெயருடன் ஏழு தங்கக் கட்டிகளும் கிடைத்துள்ளன. 32க்கும் மேற்பட்ட ஊர்களில் தமிழியில் எழுதப்பட்ட 110 கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அறிவியல் சோதனைகளில் இவற்றின் ஆண்டுகள் 2400, 2500 என முடிவுகள் கிடைத்தாலும், பலரும் அதைப் பொருட்படுத்த வில்லை. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட அசோகன் கல்வெட்டுக் காலத்தையே வரலாற்றுக் காலத்திற்கு எல்லையாகக் கொண்டு, அந்தக் கண்ணாடியைக் கழற்றாமலேயே எல்லா ஆய்வு முடிவுகளையும் ஆய்வாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அரசாங்கமும் அப்படியே, அரசியலும் அப்படியே. இம்முறைதான் மக்கள் பார்க்கத் தொடங்கினர். மெரினா சல்லிக்கட்டு எழுச்சிக்குப்பின் தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஒரு விழிப்புணர்ச்சி மக்கள் மனதில் ஓர் ஓரமாக இருந்து கொண்டேயிருந்தது. அந்த இயல்பான தன்னெழுச்சியின் வினைதான் இன்று கீழடியின் வரலாற்றுக் காலத்தையும் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது.

          அசோகன் பிராமியிலிருந்துதான் எழுத்தறிவுக் காலம் தோன்றியது என்ற அடிப்படையில் இந்தியாவின் வரலாற்றுக் காலம் என்பது 2300 ஆண்டுகளோடு வரையறை செய்யப்பட்டு எல்லோராலும் ஏற்கப்பட்டும் வந்தது. இதனால் அசோகர் காலத்திற்கு முன்னர் தமிழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதெல்லாம் அதன் காலம் 2300க்கு பிறகே என்பதும், அந்த எழுத்துமுறை கூட அசோகன் பிராமி எழுத்து முறையிலிருந்து வந்தவையே என்பதும் எழுதப்படாத சட்டமாக இருந்தன. தமிழ்நாட்டு ஆய்வாளர்களில் சிலருக்கு, 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் வெளியில் சொல்லமுடியாமல் தவித்து வந்தனர். இதற்கும் தலையில் பிறந்த ஆதிக்கமே காரணம். அதனால்தான் எழுத்துருக் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட போது அவ்வெழுத்தைப் பிரம்மனின் பெயரால் பிராமி என்றழைத்தனர். பிரம்மன் தானே படைப்புக்கடவுள்? ஆக, பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமி எழுத்தை அசோகர் கல்வெட்டில் பொறித்ததால் அது அசோகன் பிராமி ஆனது. இந்தியா முழுமையும் அசோகன் பிராமிக் கல்வெட்டுகளே காணப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்து வந்தன. இந்தியா முழுமையும் இதுவரை கிடைத்திருக்கும் சுமார் 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60000 தமிழி எழுத்துக் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. தெலுங்கில் 10000, கன்னடம் 15000, சமஸ்கிருதம் 5000, பிறமொழிகளில் 15000 என்றும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதில் தமிழைத்தவிர ஏனையவை அனைத்தும் கி.பி. 500 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டவை. 13ஆம் நூற்றாண்டில் தான் வட்டெழுத்து + கிரந்தத்துடன் கூடிய மலையாளக் கல்வெட்டு கிடைத்தது.

          இப்படி இந்தியாவிலேயே காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டுகள் கிடைத்தும், அவை அசோகன் காலமான 2300க்குப் பிந்தியவை என்ற முத்திரையிலும், அசோகன் பிராமி எழுத்து முறையிலிருந்து அவை மாறுபட்டதால் தமிழ் பிராமி என்று வேறுபடுத்தியும் கூறிவந்தனர். ஆனால் 2600க்கும் முற்பட்ட தமிழில் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்து, கல்வெட்டுத் தமிழியின் உண்மை நிலையை உணர வைத்திருக்கிறது. இனி இந்தியாவின் வரலாற்றுக் காலவரையறை 2600 (தற்காலிகமாக) என்றும், இந்தியாவின் முதல் எழுத்துமுறை தமிழே என்றும், அசோகன் பிராமி எழுத்துமுறை, தமிழி என்னும் எழுத்து முறையிலிருந்தே பெறப்பட்டது என்றும், இனி பிராமியே இல்லாத தமிழாக அதாவது தமிழியாக இது வழங்கப்படும் என்பதும் தற்போது மக்கள் எடுத்த முடிவுதான். இதைத்தான் இனி ஆய்வாளர்களும், அரசாங்கமும் பின்பற்றவேண்டும். அப்படித்தான் தமிழக அரசின் கீழடி அகழாய்வு அறிக்கையும் அண்மையில் வெளியிடப் பட்டிருக்கிறது.

          உலகில் பேச்சுமொழி என்பது 20000 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம். அதுவும், தமிழின் வளமையைப் பார்த்தால் அது 50000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேச்சுமொழியாக இருந்திருக்கும் என்பது பாவாணர் போன்றோரின் கருத்து. ஆனால் எழுத்து முறை (வரி வடிவம்) என்று வரும்போது இந்தியாவின் முதல் வரிவடிவம் சிந்துவெளி எழுத்துதான். ஆனால் அது குறியீடுகளைக் கொண்ட எழுத்தாக இருப்பதனால் அதைப் படித்தறிவதில் ஒருமித்த கருத்து இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், அவை தமிழுக்கு முன்னோடியான குறியீடுகள் என்பதில் பெரும்பாலானோரின் கருத்துக்கள் ஒன்றுபடுகின்றன. சிந்துவெளி எழுத்தைச் சுட்டிக்காட்டி இந்தியாவின் முதல் எழுத்து மொழி தமிழ்தான் என்று கிளைட் விண்டர்ஸ் என்ற ஆப்பிரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர் தனது ‘Dravidian Origin of the Harappan Civilization’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆப்பிரிக்க – இந்தியப் பழங்குடி மக்கள் திராவிடர்களே என்றும், சிந்துவெளி மொழியே தமிழ்நாட்டில் இன்று பேசப்படும் மொழி என்றும் அறிவிக்கும் ‘Journey of Man’ என்ற  தனது ஆய்வுக் கட்டுரையை 07.07.2019 சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் ஸ்பென்சர் வெல் என்ற ஆய்வாளர் சமர்ப்பித்தார். அரேபியருக்கும் ஆங்கிலேயருக்கும் மூத்த தொல்குடியினர் திராவிடர் என்றும், அவர்களே இன்றைய தென்னிந்தியர் என்றும், அவர்களின் மொழியே தமிழ் என்றும், பிரான்சு நாட்டு மானுடவியல் ஆய்வாளர் ரொமைன் சிமெனல் அண்மையில் புதுச்சேரியில் நேர்காணலில் கூறியுள்ளார். பின்லாந்து அறிஞர் அஸ்கோ பார்ப்பலோவும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியருமான ஜார்ஜ் எல். ஹார்ட் போன்றோரும் சிந்துவெளியின் மொழி தமிழே என்று தங்கள் ஆய்வுகளின் வழி வெளிப்படுத்தி உள்ளனர். 


          கீழடி தமிழி எழுத்துப் பொறிப்புகளில் ஆதன், குவிரன், கோதிரையன் என்ற தமிழ்ப் பெயர்கள் படிக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கம்போல் சில வல்லுநர்கள் இவை கடன் வாங்கப்பட்ட சொற்கள் என வலிந்து கருத்துத் திணிப்பு செய்து வருகின்றனர். இதில் தமிழர்களும் உண்டு. அவர்களில் சில ஆய்வாளர்களும் உண்டு என்பது பெரும் வேதனை. ஆதன், ஆதிரை, சாத்தன், தித்தன் ஆகியவை தமிழ்மொழியின் அடிப்படைப் பெயர்கள். தமிழ்நாட்டிலும், மலையாள நாட்டிலும் ஆதன் பெயரை முன்னொட்டு, பின்னொட்டாகக்  கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. (ஆதம்பாக்கம், ஆதனூர்) ‘வாழி ஆதன் வாழி அவினி’ என்கிறது குறுந்தொகை. ஆதன் என்ற பெயருக்குத் தலைவன், மன்னன், ஆதல் மூச்சு, உயிர்வளி என்றெல்லாம் பொருளுண்டு. நெடுவேள் ஆதன், நல்லியாதன், நெடுஞ் சேரலாதன், ஆதன் அழிசி, ஒய்மான் வில்லியாதன் (இலங்கை மன்னன்) என்று இன்னும் பல தமிழ் மன்னர்களின் பெயர்கள் ஆதன் என்று வழங்குபவை.

          அதேபோலக் குவிரன் என்ற சொல்லையும் வடமொழி என்று நிறுவுதற்காக ஐராவதம் மகாதேவனைச் சுட்டுகின்றனர். ஏற்கனவே பல கல்வெட்டுகளிலிருந்த குவிரன் என்றபெயரை குபேரன் என்று மாற்றிப் படித்து, மாற்றியும் பொருள் சொன்னார் மகாதேவன். ஆகா, மகாதேவனே சொல்லிவிட்டார் என்று காலஞ்சென்ற அவரைப் போய் வம்புக்கிழுக்கின்றனர் சிலர். மகாதேவன் இத்தவறு மட்டுமல்ல ஆதன் என்ற பெயரை, தானம் என்று படித்தார். கணி என்ற தூய தமிழ்ப் பெயரை அழுத்தம் கொடுத்து (Gani) என்று படித்து வேற்றுமொழிச் சொல்லாக்கினார். நல்ல வேளை கணியன் பூங்குன்றனாரும் பிற கணியர்களும் இப்போது இல்லை. இப்படியாகத் தமிழியைப் படிப்பதில் மகாதேவன் செய்திருக்கும் தவறுகளை அவர் இருக்கும்போதே பலர் சுட்டிக்காட்டி உள்ளனர். அதில் சில திருத்தங்களை அவர் ஏற்றுக்கொண்டார். 
          குவிதல், குனிதல், குமிதல் ஆகிய மூன்று சொற்களும் கூம்பிய வடிவத்தைக் காட்டும். நெல் மற்றும் தானியங்களைக் குவித்தால் அது குவியல் எனப்படும். இதைப் பேச்சு வழக்காகக் கொண்டால் கி.மு. 2000 ஆம் ஆண்டுக்கும் மேல் செல்லும். செல்வம் குவிந்தவனைக் குவிரன் என்று சொல்வதும் தமிழ் வழக்கம். அன் என்ற விகுதியைச் சேர்த்து பெயர்ச் சொல்லாக அழைப்பது பழந்தமிழர் வழக்கம். வேலன், ஆதன், குமரன் என்பதுபோல. அதுபோலவே குவி என்ற பகுதியுடன் அன் என்ற விகுதி சேர்ந்து ‘ர்’ என்ற ஒற்றுச் சொல்லோடு குவிரன் என்ற பெயர்ச் சொல்லாக ஆகிறது. இப்பெயர் கொடுமணலில் நான்கு சில்லுகளில் காணக்கிடைக்கிறது. ஒன்றில் குவிரன் அந்தை என்ற பெயர் உள்ளது. இதற்குக் குவிரன், ஆதன் தந்தை என்று பொருள் கொள்ள வேண்டும். மேலும் காலத்தால் முற்பட்ட குகைக் கல்வெட்டுகளிலும் குவிரன் என்ற பெயர் காணப்படுகிறது. இந்தக் குவிரன் மிகப் பிற்காலத்தில் குபேரன் என்று மருவி அழைக்கப்பட்டு அதற்கொரு கதையும் கட்டப்பட்டு இப்போது குபேரனிலிருந்து குவிரன் வந்ததாகக் கண்டுபிடிக்கிறார்கள். இந்தியா ஆசியக் கண்டத்தில் மோதும் ஒரு தீவாக டெத்தீஸ் என்ற கடலில் பன்னெடுங்காலம் பயணித்தது. அது தீவாக இருந்த கதையை நால்வலந்தீவு (நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு) என்று பழந்தமிழ் கூறுகிறது. அதுவே திரிந்து நாவலந்தீவு என்று வழங்கலாயிற்று. எதையுமே சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துவிட்டால் அது உடனே அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அதுபோல நாவலந்தீவை மொழி பெயர்த்தனர். ஆனால் நாவல் என்பதை நாவல்பழம், நாவல் மரம் எனப் பொருள் கொண்டு அம்மொழியில் நாவலுக்கு ஜம்பு என்ற பெயரானதால் ‘ஜம்ப்வித்தீவஹ’ என்று மொழி பெயர்த்தனர். சில காலம் சென்று அதுவே ‘ஜம்புத்தீவு’, சம்புத்தீவு என்று தமிழுக்கு வந்தது. பிற்காலத் தமிழ்ப் பாடல்களில் வரும் சம்புத்தீவு என்ற பெயரைக் கொண்டு இது சமற்கிருதத்தில் கடன் வாங்கப்பட்ட சொல் என்று கூறுபவர்களை நாம் எப்படிப் பார்ப்பது? திருவள்ளுவர் நகர் என்ற பெயர் டி.வி. நகராகிப் பின் தமிழன்பர் ஒருவரால் தொலைக்காட்சி நகரான கதைதான். இப்படித்தான் குவிரன் என்ற சொல்லை ஆய்வாளர்களும் கையாள்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு கதைகளைத் தாங்கித் தாங்கியே தமிழ் இன்னமும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

          பொதுவாக உலகம் முழுவதிலும் சேர்த்து எழுத்து தோன்றிய காலம் இன்றிலிருந்து பின்னோக்கி 5000 ஆண்டிலிருந்து 8000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று ஆய்வாளர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனாலும் வரலாற்றுக் காலமாக 2600 ஆம் ஆண்டை முன்னிறுத்தக் காரணம் புதிய கற்கால எழுத்து என்று கூறப்படும் டிஸ்பிலியோ டேப்லெட் எழுத்துமுறை கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதுதான். மேலும் ருமேனியாவில் டார்டேரியா டேப்லெட் என்று அழைக்கப்படும் தொடக்கக் கால எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டு மொழிகளும் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. எனவே உலகத்தின் முதல் எழுத்து முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டான 2600 ஐ வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகக் கொண்டனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் அசோகன் பிராமி என்னும் எழுத்து முறையின் தொடக்கக் காலமாக 2300 அமைவதால், இந்தியாவில் வரலாற்றுக் காலம் என்பது 2300 ஆக வரையறை செய்யப்பட்டு வந்தது. கீழடிக்கு முன்பே பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுப் பொருட்களைக் கரிமப் பகுப்பாய்வு  செய்தபோது அவை கி.மு. 400, 500 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவையாகத் தெரியவந்தன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளோ கி.மு.900 வரை பழமையை எட்டியது.

          இந்திய மொழிகளான பாலி, பிராகிருதம், தமிழ் ஆகியவற்றின் வரிவடிவங்களைப் புத்தர்தான் ஏற்கனவே வழக்கிலிருந்த எழுத்து முறையைக் கொண்டு உருவாக்கினார் என்று பண்டிதர் அயோத்திதாசர் கூறி 100 ஆண்டுகளுக்கும் மேலாயிற்று. ஏற்கனவே வழக்கிலிருந்த எழுத்துமுறை என்றது தமிழியைத்தான். புத்தரின் காலமோ சரியாக 2600 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் கீழடியில் கிடைத்த தமிழி எழுத்து முறையால் இந்தியாவின் வரலாற்றுக் காலம் 2600 வரை என்று பின்னோக்கிச் செல்கிறது. அதாவது உலகத்தின் தொன்மை எழுத்து முறைகளாக கிரீஸ், ருமெனிய நாடுகளின் எழுத்துமுறைக் காலத்திற்குச் சமமாக இந்தியாவின் தமிழ் மொழியைத்தான் முன்னிறுத்த முடிகிறது. கீழடியிலும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் முறையான அகழ்வாய்வு செய்தால் இதன்காலம் இன்னும் பின்னோக்கிப்போய் உலகின் தொன்மை எழுத்தாகத் தமிழ் மொழியே அறிவிக்கப்படும்.

          ஏற்கனவே சிந்துவெளி மொழியின் காலம் 5000 ஆண்டுகளாகக் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் மறைந்த காலத்திற்கும், தமிழ் எழுத்து முறை எழுதப்பட்ட காலமான 2600 ஆம் ஆண்டிற்கு முன்பும் ஆன ஒரு கால இடைவெளியில் ஒரு வரிவடிவம், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பயன்பாட்டிலிருந்திருக்கிறது. அது குறியீடுகளும், கீறல்களும் கொண்ட ஒரு எழுத்து வடிவம். இவ்வெழுத்து முறை இன்னும் படித்தறியப்படவில்லை. அதற்கென்று ஒரு பெயர் வைக்கப்படவுமில்லை. சிந்துவெளி நாகரிகத்திற்கு அடுத்த செப்புக் காலப் பண்பாட்டின் தொடர்ச்சியான பெருங்கற்காலப் பண்பாட்டில் இக்குறியீடுகள் பயன்பாட்டிலிருந்துள்ளன. தொல்குடிகள் பயன்படுத்திய கருப்பு, சிவப்பு பானை ஓடுகளிலும், பெருங்கற்கால ஈமச் சின்னங்களிலும் (முதுமக்கள் தாழி போன்றவை) இக் குறியீடுகளும், கீறல்களும் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன் குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் மற்றும் பல தென்னிந்தியப் பகுதிகளிலும் இவ்வகைக் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளதாகத் தமிழக அரசின் அறிக்கை கூறுகிறது. மேலும் இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாமா ஆகிய பகுதிகளிலும் இவை பயன்பாட்டிலிருந்திருக்கின்றன. இவை படித்தறியப் பட்டுவிட்டால், சிந்துவெளிக் குறியீட்டு எழுத்து முறைகளும் படிக்கப்பட்டுவிடும். தமிழோடு தொடர்புடைய இப்பழைமையான  எழுத்து முறை படிக்கப்பட்டு விட்டால் இந்தியாவின் எழுத்து முறையின் காலம் சிந்துவெளியின் காலமான 5000 ஆண்டுகள் என்று அறியப்பட்டு உலகத்தின் முதலில் தோன்றிய மொழியாகவும், முதலில் எழுத்து முறையை உருவாக்கிய மொழியாகவும் தமிழ்மொழி சான்றுகளுடன் அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுவிடும். 

          இந்தியாவைப் பொறுத்தவரை இது தமிழர்களுக்குப் பெருமையாக இருந்தாலும் பிற மொழியினர் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூக்குரலைத் தள்ளிவிட்டு அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அப்படிப் பட்ட அரசியலே இந்தியாவில் பன்னெடுங்காலமாக நடந்துகொண்டு வருகிறது. ஆகவேதான் இதுபோன்ற ஆய்வுகளைத் தாமதப்படுத்தும் நிலையை மத்திய அரசு மேற்கொள்கிறது. ஆனாலும் இன்றைய மத்திய அரசின் தலைமை அமைச்சர் உலகத்தின் மூத்த மொழியாகத் தமிழை முதன்மைப்படுத்திக் கூறுவது வரவேற்புக்கு உரிய ஒன்றுதான். அதுவும் அமெரிக்க நாட்டில் அவர் அப்படிக் கூறியதோடு மட்டுமல்லாமல் சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பாடலின் வரிகளையும் தமிழிலேயே கூறி, அப்புலவர் 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் கூறியிருக்கிறார். இது அமெரிக்கப் பத்திரிக்கைகளில் எல்லாம் செய்தியாக வந்திருப்பதுடன், இந்தியாவின் புதிய கருத்தாகவும் மொழிக் கொள்கையாகவும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

          தமிழுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உலகத்தின் அதிகாரத் தலைமை நாட்டினில் இப்படிக் கூறியிருப்பது மறுக்கவியலாத சான்றுகள் உறுதியானதால்தான் என்று நம்பலாம். தமிழின் அத்தனை வளங்களையும் தமதாக்கிக் கொண்ட சமஸ்கிருத மொழியைக் காட்டிலும், மூத்த மொழி தமிழ் மொழியே என்று இந்தியத் தலைமை அறிவிப்பதன் பின்னணியில் எத்தனையோ தவிர்க்கவியலாத அரசியல் இருக்கக்கூடும். ஆனாலும் ஏதோ ஒரு கட்டம் வரை நின்று நிதானித்து உண்மையைப் பட்டவர்த்தனமாக அறிவிக்கும் இந்நிலைக்கு, இப்படிப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி வெளிப்படும் அறிவியல் பூர்வமான உண்மைகளும், அதை அக்கால இலக்கியங்களில் பாடிவைத்துத் தமிழர்களின் வாழ்வியலை எழுதப்பட்ட வடிவில் தரும் சங்க இலக்கியங்களுமே காரணம் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். இந்த உணர்வுதான் அகழ்வாய்வின் இடங்களையும், கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாப் பொருட்களையும் காப்பாற்றித் தமிழர் வாழ்வும், சங்க இலக்கியமும் ஒன்றே என உலகம் அதிர முழங்க வைக்கும்.



சான்றுகள்:
1. கீழடி – வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 2019.
2. உலகத்தமிழ் மாநாடு – சிகாகோ, ஜூலை, 4 – 7 தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகள்.
3. சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை 27 – 28, செப்டம்பர் 2019 ஆகிய நாட்களில் நடத்திய கல்வெட்டியல் கருத்தரங்கச் சொற்பொழிவுகள். 
4. இந்தியத் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் நேர்காணல் – 27.09.2019.
5. இந்தியத் தொல்லியல்துறை ஆய்வாளர் எஸ். ராஜவேலு அவர்களுடன் நேர்காணல் – 28.09.2019.
6. ஒடிசா அரசின் ஆலோசகர் திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (சிந்துவெளி ஆய்வாளர்). அவர்களுடன் நேர்காணல் – 28.09.2019.
7. சங்க இலக்கிய நூல்கள்.
8. ஐம்பெரும், ஐஞ்சிறுங் காப்பியங்கள்.








தொடர்பு: முனைவர் புதுவை சிவ. இளங்கோ (ilangosiva57@gmail.com)







No comments:

Post a Comment