Showing posts with label ச.பாலமுருகன். Show all posts
Showing posts with label ச.பாலமுருகன். Show all posts

Tuesday, February 1, 2022

மேக்களூரில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பக் கல்வெட்டு

– ச.பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் 



திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் குழுவினர் கீழ்பெண்ணாத்தூர் அருகே மேக்களூர்  நவநீதக் கோபால கிருஷ்ணசாமி கோவிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பமும், கல்வெட்டும், கீக்களூர் கோவிலில் சம்புவராயர் கால கல்வெட்டும் கண்டறிந்தனர்.

மேக்களூர் கோவிலில் உள்ள யானைச்சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள கல்லின் மேல் பகுதியில் பாதி வட்டமாகவும் கீழ்ப்பகுதி நீளமாகவும் உள்ளது.  மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் யானையின் உருவம் தனது தும்பிக்கையை மடக்கிய நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லில் உள்ள யானையின் கீழ் யானையின் பெயரை தனியாக ஒரு வரியில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்குக் கீழ் 5 வரியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. 

இக்கல்வெட்டைப் படித்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால், இந்த யானை சிற்பத்தின் கீழ் உள்ள கல்வெட்டில், ஸ்ரீபுத்தன் புவந திவாகரன் என்பவர் இந்தப் பட்டத்து யானைக்கு நீலகண்டரையன் என்று பெயர் கொடுத்துள்ளான். இது 10 அல்லது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.  யானையின் உருவம் பொறித்து அதன் கீழ் நீலகண்ட ரையன் என்று எழுதப் பட்டுள்ளது. இது திருவண்ணாமலை பகுதியில் கிடைக்கும் அரிய வகைக் கல்வெட்டாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


அதேபோல் கீக்களூர் சிவன் கோவிலில் கருவறையின் பின்புறம் உள்ள சுவரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயரின் 2 நிலதானக்கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் சிமெண்ட் பூச்சுகளால் முழுமையற்று உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


---




Wednesday, September 22, 2021

வேட்டவலம் - பாக்கம்: கற்கால உலகத்தின் பொற்பாதை

– ச.பாலமுருகன்


பண்டைய காலத்தில் தொண்டை மண்டலமாக கருதப்படுகின்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகள் வரலாற்றுக்கும் தொல்லியலுக்கும் அளப்பறியச் சான்றுகளை அளித்துக்கொண்டே உள்ளது. சமணம், பௌத்தம், நடுகற்கள், பாறை ஓவியங்கள், குடைவரைகள், கோயில்கள், பெருங்கற்கால மற்றும் புதிய கற்காலத் தடங்கள் எனப் பட்டியல் நீளும். இவை அனைத்தும் ஒரே பகுதியில் காணவேண்டுமெனில் நாம் செஞ்சிக் குன்றுகளில் காணலாம். வேட்டவலம் பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் செஞ்சிக்குன்று வடகிழக்காகவும், தென்கிழக்காகவும் நீண்டு செல்கிறது. வடக்கே தேசூர்- வந்தவாசி வரையிலும் தெற்கே திண்டிவனம்- விழுப்புரம் வரையிலும் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் எத்தனை எத்தனை தொல்லியல் புதையல்கள். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதே ஒரு பரவச அனுபவம் தான். அப்படியொரு கொள்ளை அழகு.

செஞ்சி -வேட்டவலம் இடையே அமைந்துள்ள குன்றுகள் தொல்லியல் ஆர்வலர்களால் தேடப்படும் பகுதியாக மாறியதில் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் கால ஓவியம், பாக்கம் மலைப்பகுதியில் உள்ள கோட்டைச்சிதிலங்கள், புதிய கற்கால இடங்கள், செத்தவரை ஓவியங்கள், வேட்டவலம் ஓவியங்கள், கஞ்சூர் சமணப்படுக்கை ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா ஓர் அற்புதமாக புதையலைக் கண்டுபிடித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த மதன்மோகன், பழனிச்சாமி, ச.பாலமுருகன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தோம். செத்தவரை ஓவியத்திற்கு சற்றேறக்குறைய இணையான இரண்டு ஓவியத் தொகுதிகள் அவரால் உலகத்திற்கு வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள் பாரதிராஜா. 

pakkam.jpg
தொடரட்டும் தேடல்கள். அந்த ஓவியத்தைப் பற்றி....
வேட்டவலத்திற்கு வடகிழக்காக அமைந்துள்ள மலைப்பகுதியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தின் நந்தன் கால்வாய் அருகே ஒரு பாறையில் இரண்டு பகுதிகளாக ஓவியங்கள் காணக்கிடைத்தன. இதில் பாறையின் உயரமான பகுதியில் உள்ள ஓவியத் தொகுதியில் மீன் அல்லது ஆமை போன்ற தோற்றம் கொண்ட செஞ்சாந்து நிறத்தில் சுமார் 3 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட ஓர் ஓவியமும் அதன் அருகில் ஊர்வன போன்ற வடிவம் கொண்ட ஓவியம் சுமார் 2 அடி நீளமும் ஓர் அடி அகலமும் கொண்டுள்ளது. அதன் அருகில் சுமார்  1 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட சிறிய அளவிலான மீன் அல்லது ஆமை போன்ற வடிவம் கொண்ட மற்றொரு ஓவியமும் அமைந்துள்ளது. இந்தப் பாறையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஓவியத் தொகுதியில் இரண்டு மனிதர்கள் உருவமும் வடிவியல் சார்ந்த குறியீடு கொண்ட ஓவியங்களும் உள்ளன. இந்த ஓவியங்கள் வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பாக்கம் கிராமத்திலும்  ஏரிக்கரையின் அருகில் உள்ள மற்றொரு பாறை ஒன்றில் மங்கலான நிறமுடைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டன, 

இவ்வோவியங்கள் குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இங்கு இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன என்றும் முதலாவது பிரிவில் உள்ள ஓவியங்கள் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்து நிறங்கள் கலந்த ஓவியங்கள் உள்ளன என்றும் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாலாம் என்றும் இரண்டாவது தொகுதி ஓவியங்கள் வடிவியல் சார்ந்த குறியீடுகள் தனியாகவும் மனித உருவங்களும் சேர்ந்து  வரையப்பட்டுள்ளன. இதில் கோடுகள் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் காட்டப்பட்டுள்ளது. சில குறியீடுகள்  கீழ்வாலை மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள குறியீடுகள் போன்ற வடிவத்தை ஒத்துள்ளது. மேலும் இங்கு காட்டப்பட்டுள்ள மனித உருவங்களில் ஆண்குறி கட்டப்பட்டுள்ளது இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. அருகில் உள்ள பாக்கம் கிராம எல்லையில் உள்ள ஓவியங்கள் மங்கிய நிலையில் மனித உருவங்கள் மட்டும் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள்  பெருங்கற்கால ஓவியங்களாக கருதப்படுகின்ற ஓவியங்கள் போல உள்ளது எனக் கூறினார் , இதன் அருகில் உள்ள செத்தவரை , கீழ்வாலை போன்ற ஊர்களிலும் ஏற்கனவே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  தொடர்ச்சியாக இப்பகுதியில் பாறை ஓவியங்கள் கிடைத்து வருவது இதன் தொல்லியல் முக்கியத்துவத்தையும் அக்கால மனிதர்களின் கலை சிறப்பினையும் உணர்த்துகிறது. தமிழகத் தொல்லியல் துறை இந்த ஓவியத்தைப் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும். 

----





Wednesday, August 11, 2021

மண்ணில் இருந்து மீண்டு வந்த அரிதாரிமங்கலம் நடுகல் வீரன்


-- ச.பாலமுருகன்


வரலாற்று ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான திருவண்ணாமலை வெற்றிவேல் அவர்கள் மண்ணில் புதைந்தவாறு இருந்த  புகைப்படத்தை அனுப்பி அதன் இருப்பிடத்தையும் அனுப்பினார். புகைப்படத்தைப் பார்த்தால் பழமையான நடுகல் என்று தெரிந்தது. மேலும் அதன் தலைக்கு மேலே காலியான வெற்றிடம் போல இருந்தது. கல்வெட்டு இருக்கிறதா என கேட்க, ஆம் என்றார் வெற்றிவேல்.  எனக்குச் சந்தேகமாக இருந்தது. இருந்தாலும் நேரில் சென்று பார்த்துவிடலாம் பக்கம் தானே என்று சென்றேன். துணைக்கு எனக்குத் தெரிந்த காஞ்சி வெங்கடாசலம் அவர்களை அழைத்துக்கொண்டேன். 

வெற்றிவேல் கூறிய பள்ளியின் எதிரே உள்ள நடுகல்லை ஆய்வுசெய்த போது மேற்புறம் 5 வரிகளில் கல்வெட்டு இருந்தது. ஆச்சர்யமும் சந்தோஷமும் கலந்த நிலையில் அங்கிருந்த ஊர் மக்களிடம் இந்த நடுகல்லின் முக்கியத்துவத்தைக் கூறினேன். உடனே ஆளுக்கு ஒரு கைபிடிக்க பல நாட்களாக மண்ணில் புதைந்திருந்த நடுகல் தூக்கப்பட்டு, அருகில் இருந்த புளியமரத்தின் கீழ்  நிற்கவைக்கப்பட்டது. அப்போது பார்க்கும் போது பின்பக்கமும் எழுத்துக்கள் இருப்பது தெரியவந்தது. மாலை நேரம் ஆனாலும் அப்போதே அந்த எழுத்தைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடுகல்லை சுத்தம் செய்து மாவு பூசிப் படியெடுத்துப் பார்த்தால் இந்த நடுகல் முதலாம் பராந்தகன் காலத்திய பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்து என்று கல்வெட்டு முன்பக்கம் இருந்தது. பின்பக்கம் பெருமளவு சிதைந்து இருந்தது.  புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். 

s balu.jpg
அதன் பிறகு மதன், பழனிச்சாமி ஆகியோர்களுடன் மீண்டும் சென்று அந்த நடுகல்லை, அருகிலேயே அனைவரும் பார்க்கும் வண்ணம் நிலையாக ஒரு தளம் அமைத்து நிற்கவைக்கப்பட்டது. இந்த நடுகல்லில் சுவாரஸ்யம் என்னவென்றால் சாலை ஓரமாக சுமார் 20 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், இதை யாரும் பார்க்கவில்லை அந்த ஊரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வெற்றிவேலுக்குத் தகவல் அனுப்ப வெற்றிவேல் எனக்குச் சொல்ல அந்த நடுகல் மீண்டெழுந்தது. இதற்கு முன்னர் இந்த நடுகல் கூட்டுறவு கடை கட்ட பள்ளம் எடுக்கும் போது மண்ணுக்குள் இருந்துள்ளது. அதை எடுத்து சாலையின் மறுபுறம் போட்டுவிட்டனர். வரலாறு எப்படியோ தன்னை மீட்டுக்கொள்ளும் என்பது போல,  அந்த வீரன்  மிகவும் சிரமப்பட்டுப் பல ஆண்டுகளாக மண்ணுக்குள் உள்ளேயும் 20 ஆண்டுகளாக சாலையின் ஓரம் கேட்பாரற்றும் கிடந்தான். இன்று உற்சாகமாக வில்லும் வாளும் கொண்டு காட்சியளிக்கிறான். இந்த காட்சியைப் பார்ப்பது ஒன்றே போதும் எங்களை போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு. 

இந்த நடுகல் கல்வெட்டில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டது.  இதில் உள்ள வீரனின் உருவம், இடது கையில் வில்லும்  வலது கையில் வாளும் கொண்டு போருக்குத் தயார் நிலையில் உள்ளது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது.  இதில் மேற்பகுதியில் 5 வரியிலும் பின்பக்கத்தில் 6 வரியிலும் கல்வெட்டுகள் உள்ளன. 

இந்த கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால், இந்த கல்வெட்டு மதிரை கொண்ட பரகேசரி என்ற பட்டம் உடைய பராந்தக சோழனின் முப்பத்துமூன்றாவது ஆட்சியாண்டில் (கி.பி. 940) வெட்டப்பட்டது என்றும் இதில் பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்தைச் சேர்ந்த அதிராக மங்கலம் என்ற ஊரில் நடைபெற்ற ஒரு போரில் ஈடுபட்டு கலிமுகற் பெருங்கருமான் மருமகன் மலையன் என்பவர் இறந்துள்ளான்  என்று அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

s bala.jpg

அரிதாரிமங்கலம் நடுகல் கல்வெட்டு
1. ஸ்ரீமதிரை கொண்ட கோப்ப
2. ர கேசர பந்மற்மக்கி யாண்
3. டு முப்பத்து மூன்றாவது ப
4. ல் குன்றக் கோட்டத்துக் கீழ் வே
5. ள் நாட்டு காந்தளூர்க் கூற்றத்து அ
6. திரா…
7. கலிமுகற் பெருங்கருமான் மரு
8. மகன் மலையன் அதிராக மங்
9. கலத்து……யப்பன்
10. மங்க…
11. ….
12. ….

இதில் குறிப்பிடும் அதிராக மங்கலம் என்பதே தற்போது அரிதாரிமங்கலம் (இடம்: 12°23'53.1"N 78°59'08.3"E) என்று வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீரனின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நடுகல் ஒருகாலத்தில் மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளது. பின்பு ஏதோ காரணத்தால் பூமியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. 

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இதை மீட்டு சீரமைத்து மக்கள் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் ஏற்றவாறு அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த கல்வெட்டை படித்தளித்த சு. ராஜகோபால் கல்வெட்டறிஞர் அவர்களுக்கும்,  இவையனைத்தும் சாத்தியமாக்கிய வெற்றிவேல், விக்னேஷ், அரிதாரிமங்கலம் ஊர்மக்களுக்கும் அன்பான நன்றி. 



------

Sunday, August 8, 2021

வெளிச்சத்திற்கு வந்த வேட்டை நாய்

வெளிச்சத்திற்கு வந்த வேட்டை நாய்

 -- ச.பாலமுருகன்

          தமிழ்நாட்டில் மகத்தான நாகரிகம் ஒன்று மண்ணுக்குள் உள்ளது என்பதை அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடக்கும் பல அகழாய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அகழாய்வு செய்யாமலே மண்ணின் மேலடுக்கிலே அல்லது மண்மூடிய மேட்டிலிருந்து கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நமக்கு தென்பெண்ணையாற்று நாகரிகம் அளித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரைகளில் நூற்றுக்கணக்கான தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைக்கின்றன. அது போலத்தான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷம் தான் தானிப்பாடி அருகே உள்ள வேளூரில் கிடைத்த வேட்டை நாய்க்கு வைத்த நடுகல். 


          அண்மையில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் பராமரிப்புப் பணியின் போது, தா.வேளூர் பாம்பாற்றுப் படுகையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகற்கள் அருகே இருந்த மேட்டுப்பகுதியை சரிசெய்யும் போது தட்டுப்பட்ட கல்லை எடுத்து வைத்துப்பார்த்த போது முகமற்ற நாயின் உருவம் தெரிந்தது. இது என்ன அரிதான ஒரு சிற்பமாக இருக்கிறதே என்று அருகில் மேலும் ஆய்வு செய்யும் போது மற்றொரு கல்லில் நாயின் தலையும் எதிரே பன்றியின் உருவமும் கொண்ட கல்லும் கிடைத்தது. இரண்டும் ஒட்டவைத்துப் பார்த்ததில் முழு உருவம் தெரியவந்தது. 



          இதுபற்றி மேலும் ஆய்வு செய்கையில் இதே போன்று உருவமுள்ள சில நடுகற்கள் கர்நாடகா பகுதியில் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஏற்கனவே நாய்க்கு வைத்த நடுகற்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் இதுபோன்று நாய் பன்றியுடன் சண்டையிட்டு இறந்ததின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாயின் உருவம் நல்ல வேட்டை நாய்க்கு உண்டான உடல் வாகுடன் உள்ளது. பயிரை உண்டு அழிக்க வந்த காட்டுப்பன்றியுடன் சண்டை செய்யும் போதோ அல்லது தனது எஜமானுடன் வேட்டைக்குச் செல்லும் போதோ காட்டுப்பன்றியுடன் சண்டையிட்டு நாய் இறந்துள்ளது. இந்த நன்றியுள்ள நாய்க்கு அப்போதே நடுகல்லும் வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் அது உடைந்து பூமிக்குள் சென்றுள்ளது. 

          நல்வாய்ப்பாக நமது கூட்டு முயற்சியால் அந்த நடுகல் வெளிவந்து தற்போது சரிசெய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப அமைதியை நோக்கும் போது இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இத்துடன் தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் உள்ள நாய் உருவத்துடனும் இது ஒத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை ஓவியத்தில் உள்ள நாய் அலங்கு என்ற இனத்தைச் சேர்ந்தது என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டது. இது தொடர்பாக சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு ஒரு நாய் இனமே இல்லை என்றும் அலங்கு என்பது வேறு வகை உயிரினம் என்று தெளிவு படுத்தினார். எனவே அலங்கு என்பது நாய் இனம் அல்ல என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது. 

          எடுத்தனூர் நாய் நடுகல்லுக்கு அடுத்ததாக கிடைத்த இந்த நடுகல்லும் நேரில் சென்று பார்க்கத்தூண்டும் ஒன்றுதான்.  பூமிக்குள் இருந்து இந்த நாய் நடுகல் வெளிவர உதவிய பழனிச்சாமி, மதன்மோகன், ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா, கி.நி.அ.முத்து, செந்தில் குமார், கார்த்திக் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் நடுவத்தின் சார்பாக நன்றிகள். 

---

Wednesday, March 3, 2021

வயலூர் கல்வெட்டு காட்டும் தமிழ்ப் பற்று மிக்க கோப்பெருஞ்சிங்கன்

வயலூர் கல்வெட்டு காட்டும் தமிழ்ப் பற்று மிக்க கோப்பெருஞ்சிங்கன்

ச.பாலமுருகன்

தமிழைப் போற்றிய பல மன்னருள் சிறப்புப்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் என்ற பிற்காலப் பல்லவர் அரசராவான். அவனுடைய புகழையும் மாட்சியையும் தமிழ்மீதான பற்றினையும் சோழனை வென்று சிறைபிடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல்களையும் ஒருங்கே பெற்ற ஒரு கல்வெட்டு, சேத்துப்பட்டு அருகே வயலூர் என்ற குக்கிராமத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கல்வெட்டு ஏற்கனவே இந்தியத் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டு எப்பிகிராபியா இந்தியா மடலம் 23 இல் வேங்கடசுப்பையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.  

இக்கல்வெட்டை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் மீண்டும் ஒரு முறை படியெடுத்து காட்சிக்கு வைத்தது. தற்போது அதன் புகைப்படமும் கல்வெட்டுப் பாடமும் "யாதும் ஊரே.காம்"தளத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது.

இக்கல்வெட்டின் சிறப்பாகக் கருதுவது கோப்பெருஞ்சிங்கனின் தமிழ் ஆர்வமும் இக்கல்வெட்டு  3 வகை பா வகையினால் அமைந்துள்ளதும் ஆகும். இக்கல்வெட்டு  பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலும், நேரிசை வெண்பாவிலும், கலிவிருத்தத்திலும் , எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Pallavarkone Koperunjingan inscription2.jpg
Pallavarkone Koperunjingan inscription.JPG

கல்வெட்டு:
மாவட்டம் : திருவண்ணாமலை
வட்டம் : சேத்துப்பட்டு
கிராமம் : வயலூர்
இடம் : தெற்குப் பகுதியில் உள்ள சிறிய குன்றின் நீர்நிலைக்கு அருகில்.
காலம் : 13 ஆம் நூற்றாண்டு
அரசன் : கோப்பெருஞ்சிங்கன்
ஆட்சி : பிற்காலப் பல்லவர் – காடவராயர்
மொழி : தமிழ்
எழுத்து :  தமிழ்
பதிப்பு : இ.க.ஆ. 418/1922 , எ.இ. எண் 27, பக்கம் 174.

குறிப்பு:
தெள்ளாற்றில் சோழனிடம் போரிட்டு வென்று சிறையிட்டு, சோணாடு கொண்ட அழகிய சிங்கன்,  பொன்னிநாடனும் கண்ணி, காவிரி, பாகீரதி நதிகள் பாயும் நாடனும் அவணி நாராயணன், செந்தமிழ்க் காவலன், தொண்டை மன்னவர், மல்லை வேந்தர், என பலவாறு புகழ்ந்தும் அவனது வெற்றியும் வலிமையையும் போற்றும் பாடல் கல்வெட்டு.

 கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவத்தி ஸ்ரீகோப்பெருங்சிங்க சோழனை தள்ளாற்றில்
வென்று சகல பரிச்சினமும் கொண்டு சோழனை சிறையிட்டு வைத்து சோணாடு கொண்ட
அழகியசிங்கன் பொன்னி நாடனும் முரிமையும் அமைச்சரும் இருபத்துன் சிறைகோட்டம் பொருப்பி
ண்டென வளர்ந்த தோள்வலியினர் கொண்டது சோணாடு கண்ணி காவிரி பாகிரது நின்பரியாடு தன்துறை வாவி
காவல் மன்னவர் திரையுடன் வணங்குவது உன் பெருங்திருவசால் வென்னிட பொர்கன்ன வெள்ளிடப்
பொருதூதுங் பெருங்சேனை விலங்கு செம்பொனின் அம்பலக்கூத்து நீ விரும்பிய தேவாரம் பின்னக்வால்
அவனிநாரயண பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கனின் பெருமை யார் புகழ்வாரே.
திரையிட்ருமின்கள் தேவ வேந்தர்செம்பொன் திறையிட்ட பூம்புகார்ச் சோழன் சிறைகிடந்த கொட்டந்தனை நினை
மின் கோப்பெருங்சிங்கன் கமல நாட்டன் கடை சிவந்த நாள் . மில்வன் கொடி இடை வேந்தர் மார்பினன் தோளிது  
ன் திட்டிய தொண்டை மன்னவர் வாலில் வென்றிடு சிறைவளவன் துஞ்சிய நாலினும் பெரியதுன் நாளெனப் புறம்பே
அரை கடலின் இசையுடனே ஆண்டார் வெயினும் பல்லிசை சேவிகவர அந்தி மாலை நிறைமதியி நிலவென்று நெருப்புப் பட்
டால் நீரிலை நின்றவோ நிருபதுங்க பிறை பொருத்த கன மகர இம்புரி வங்கோட்டுப் பெருங்கல்லிறு சோழனையும் அம
ச்சரையும் பிடித்து சிறையில்லிட்ட கல்லிரு விடமிதன் சிய திரிபுவன நாட்டராசங்கள் தம்பிரானே  ஒரு நாளும் விடியா
த நெடிய கங்குலியேன நிண்டு வர உலகிற் புங்கன் மருமலை யிடுமுன்னே வந்தென்றால் மடந்தை யிவ்வாற்றுவான்
மல்லை வேந்தே பொருமலை முடியரசர் கன்னிமாதர் பொற்றிசையும் புவனமுமுதுடையார்தாமும் திருமாதும் புணர்
புயத்து மிண்டான் சியத் திரிபுவன நாட்டிராசாக்கல் தம்பிரானே.. இது சொக்க சீயன் ஆணை


நன்றி- திரு. சேது, முனைவர் ரா.சேகர், முனைவர் ராசவேலு



source:
http://www.yaadhumooray.com/வயலூர்-கல்வெட்டு/
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
(Tiruvannamalai District Centre for Historical Research) (Reg.No. 163/2017)
தொடர்புக்கு- mail: tvmchr@gmail.com, contact : 9047578421
----





Thursday, November 14, 2019

பிரம்மதேசக் கோயில் கல்வெட்டுகள் தரும் செய்திகள்

ச.பாலமுருகன்



          தமிழகத்தின் முக்கிய ஆறாகவும் பழங்கால மக்கள் வாழ்ந்த தடயங்களைக்கொண்டதாகவும் விளங்குவது பாலாறு ஆகும். பிரம்மதேசம் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இப்பாலாற்றின் கரையில் அமைந்துள்ள மற்றொரு ஊரான பில்லாந்தாங்கல் என்ற ஊரில் பழங்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கருவிகள், கோடரிகள், கத்திகள் போன்ற பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றை நோக்கும் போது இவ்வூரும் பழங்காலந்தொட்டே மக்கள் வசிக்கும் ஊராக இருந்திருக்கலாம். மேலும் இவ்வூர்க் கல்வெட்டுகளில் இவ்வூர் முக்கிய வழித்தடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுவதால் இது மக்கள் போக்குவரத்து, வணிகம், விவசாயம் ஆகியவற்றில் சிறந்த ஊராக பண்டைய காலத்திலிருந்திருக்க வேண்டும். 




          வரலாற்றுக்கால தொடக்கக் காலமான சங்ககாலம், சங்கம் மருவிய காலச் சான்றுகள் நேரடியாகக் கிடைக்கப்பெறவில்லை எனினும், இவ்வூர் 9 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து முக்கிய வழிபாட்டு இடமாக இருந்துள்ளது. இங்குள்ள இரண்டு பண்டைய கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரின் வரலாற்றை மிக அழகாக விளக்குகின்றன. 

பிரம்மதேசத்தின் கல்வெட்டுகள்:
          இவ்வூரில் மொத்தம் 90 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் கல்யாணவரதர் கோயிலில் ஒன்றும், செல்லியம்மன் கோயிலில் ஒன்றும், சந்திரமௌலீஸ்வரர் கோயிலின் வெளிப்புறத்தில் ஒன்றும், உருத்திர கோட்டீஸ்வரர் கோயிலில் நான்கும் மற்றவை சந்திரமௌலீஸ்வரர் கோயிலிலும் உள்ளன.  இக்கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது பல்லவர் காலத்துக் கல்வெட்டு ஆகும்.  கம்பவர்மன் காலத்தில் (பொ.ஆ.866) கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கப்பெறும் பழைய கல்வெட்டு ஆகும். 



அரசர்கள்:
          பிரம்மதேசம் கோயில் கல்வெட்டுகளில் பல்லவ அரசர் கம்பவர்மன், சோழ அரசர்களில் ஆதித்தியன், பராந்தக சோழன், சுந்தரசோழன், பார்த்திவேந்திரவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன், வீரகம்பண்ணன் ஆகியோரது கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் வீர கம்பண உடையாரின் கல்வெட்டே காலத்தால் பிந்தியதாகும். 

ஆட்சிப்பகுதி:
          தொண்டை மண்டலத்தின் அமைந்துள்ள பிரம்மதேசம் கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு கரைக்கோட்ட பிரம்மதேயம் என்று குறிப்பிடுகிறது. இதில் ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்பது சோழர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிப்பிரிவாகும். தாமர் கோட்டம் என்பது தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களுள் ஒன்றாகும். (தாமர் என்பது தற்போது தாமல் என்ற பெயராலே வழங்கப்படுகிறது) தாமர் நாடு என்பது தாமர் கோட்டத்தில் உள்ள பல நாடுகளில் இதுவும் ஒன்றாகும். ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்ற ஆட்சிப்பிரிவு 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலிருந்து குறிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய கல்வெட்டுகளில் தாமர்கோட்டம் மட்டுமே குறிக்கப்படுகிறது. மேலும் இவ்வகைப்பாட்டில் பற்று என்ற வருவாய்ப்பிரிவு இவ்வூர் கல்வெட்டுகளில் அதிகம் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கோட்டங்கள்
          பிரம்மதேசம் தாமர் கோட்டத்தில் உள்ள ஒரு பிரிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவ்வூர் கோயிலுக்கு அளித்த கொடைகளைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகளில் பல்வேறு கோட்டங்களிலிருந்து கொடைகள் வரப்பெற்றுள்ளன. குறிப்பாக படுவூர் கோட்டம், புலியூர் கோட்டம், சோழநாட்டுக் கிழார் கூற்றம், ஊற்றுக்காடு கோட்டம், வெண்குன்றக்கோட்டம், புறழ்கோட்டம், செங்காட்டுக் கோட்டம், காலியூர் கோட்டம் போன்றனவாகும்.  இதுபோல நாட்டுப்பிரிவுகளில் இன்னம்பர் நாடு, சக்ரப்பாடி, நீர்வேளுர்நாடு, மழநாடு, இங்கநாடு, உம்பர்நாடு, புலியூர்நாடு, பெரும்பாணப்பாடி நாடு, படுவூர்நாடு போன்றவையும் ஊர் என்ற பிரிவில் சங்கரப்பாடி, மாங்காடு, விதியூர், நெல்வேலி, வள்ளிவயம், இலங்காடு, தும்பூர், திரைராஜ்யகடிகா, தில்லைச்சேரி, அறியூர், மும்முடிச்சோழபுரம், பறியலூர், குண்டூர், ஆற்றூர், மயிலாப்பூர், காந்தப்புர பேட்டை  போன்றன. இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் கோட்டங்கள் காவிரி வடகரையிலிருந்து தொண்டைமண்டலத்தின் வடஎல்லை வரை நீண்ட பகுதிக்குள் அமைந்துள்ளன.  இக்கோயில் மிக்க புகழ்பெற்றிருந்தது என்பதாலேயே இவ்வளவு பெரும் பரப்பிலிருந்து பல்வேறு சமூகப் பிரிவிலிருந்து கொடைகள் பெற்றுத் திகழ்ந்தது. 

ஊர்ச்சபைகள்:
          சோழர் கால ஆட்சியின் முக்கியச்சிறப்பாகக் கருதப்படுவது ஊர்ச்சபைகள் அல்லது குழுக்களின் உருவாக்கமும் அதன் செயல்பாடும் ஆகும். சங்க காலத்தில் இனக்குழுவாக இருந்த மனித சமூகம் வேளாண்மை, நெசவு, சிற்பக்கலை, ஓவியக்கலை உள்ளிட்ட துறைகள் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. சோழர்காலத்தில் உச்சநிலையை அடைந்த இக்கலைகளுடன் ஊர் உருவாக்கம், கோயில்கள், தெருக்கள், ஏரிகள், மடங்கள், அன்னசத்திரங்கள், பாசனவசதி, நில அளவீடுகள்  போன்ற மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் உருவாகி நிலைபெற்றன. ஊரில் உருவான சமுதாய சொத்துக்களைப் பராமரிக்கவும், கோயிலில் தொடர்ந்து பூசைகள், வழிபாடுகள் நடைபெறவும், ஊர் அளவிலான குழுக்களும் சபைகளும் தோன்றி துறைவாரியான பணிகளை மேற்கொண்ட தகவல்கள் கல்வெட்டுகளில் காணலாம். 

          பிரம்மதேசம் என்ற ஊர் தற்போது சிறிய ஊராட்சியாக உள்ளது. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியின் நிர்வாகம் செய்யக்கூடிய அலகாக அமைந்திருந்தது. இவ்வூரில் பல்வேறு குழுக்களும் வாரியங்களும் செயல்பட்ட விவரங்கள் கல்வெட்டில் காணக்கிடைக்கின்றன. பொதுவாக ஊரில் உள்ள சபை ஊரின் செல்வந்தர்களால் அல்லது பிராமணர்களால் அமையப்பெற்றிருக்கும். இச்சபையின் கீழ் பல வாரியங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. 

          பிரம்மதேசம் கல்வெட்டில் பெருங்குறி மகாசபை என்ற அமைப்பு முக்கியத்துவம் பெற்ற ஒரு சபையாகக் குறிக்கப்பட்டுள்ளது. இச்சபை ஊரில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்துச் செயல்பட்டுள்ளது.  இச்சபை புளியமரத்தின் கீழ் கூடிய முடிவெடுத்தது பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சபையின் கீழ் அல்லது இது போன்ற பிற சபைகளான கம்மாளர்சபை, ஆளுங்காணத்து குழு, கணவாரியப் பெருமக்கள், ஏரிவாரியப் பெருமக்கள், கிராமந்தர் என்ற நீர்பாசனப்பிரிவு, இவற்றுடன் அஞ்சஷட்டசதத்து சபை என்கிற நாலாயிரவர் சபை போன்றவை கல்வெட்டுகளில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு கோட்டங்களிலிருந்து வரும் கொடைகளைப் பெற்று அதை வாரியங்கள் வாரியாக செயல்படுத்தும் பணியை இச்சபைகள் செய்கின்றன.  இச்சபைகள் ஊரின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைப்பாகவும் நிர்வாக அலகாகவும் செயல்பட்டது பற்றி அறியலாம். கச்சி ஏகம்பத்து திருவுண்ணாழிகை சபை பற்றிய குறிப்பும் உள்ளது. இக்குழுக்களின் உறுப்பினர் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. 

ஏரிகள்:
          மக்கள் வாழ்க்கையில் உயிர்நாடியாகத் திகழ்வது நீர். இந்நீரைச் சேமிக்கவும் பயன்படுத்தவும் ஆதி காலத்திலிருந்தே மக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். ஆதிகால மக்கள் நீர் இருக்கும் இடமான ஆற்றங்கரையிலே தங்களது குடும்பங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். பின்னர் வேளாண்மை பெருகிய போது ஆற்றிலிருந்து நீரைத் தொலை தூரத்திற்குக் கொண்டு செல்ல வாய்க்கால்களையும் அந்நீரைச் சேமிக்க ஏரிகளையும் வெட்டினர். தொண்டை மண்டலப்பகுதியில் பாலாறு, தென்பெண்ணையாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் இருந்தாலும் அவற்றில் ஆண்டு முழுக்க நீர் இருக்காது என்பதாலும் மழை குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே பெய்யும் என்பதாலும் நீரைச் சேமிக்க ஏரி, குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளைத் தமிழர்கள் அமைத்தனர். அதில் முக்கியமான பாசன ஆதாரமாக விளங்குவது ஏரி. சோழர்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் உருவாக்கம் பெற்றது பற்றிப் பல கல்வெட்டுகளில் காணலாம். 
          பிரம்மதேசம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் என்பதால் அவ்வாற்றிலிருந்து நீர் கொண்டு வந்த சேர்க்க போதிய நீர் ஆதாரங்களை அமைக்கத் தேவையேற்பட்டதன் விளைவாக அவ்வூரில் பல ஏரிகள் வெட்டுவித்துப் பயன்படுத்தப்பட்ட தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவ்வூரில் திகைத்திறல் ஏரி, பனையுடைநல்லூர் ஏரி, குந்தவை பேரேரி, வீரமாதேவி பேரேரி, இராசேந்திரசோழப் பேரேரி, சுந்தரசோழப் பேரேரி, தூரேரி, கடப்பேரி, சம்புவராயர் பேரேரி, மதுராந்தகப் பேரேரி  என்ற ஏரிகள் பற்றிய குறிப்புகளும் பரமேசுவர வாய்க்கால், ராமவாய்க்கால், சோழபாண்டிய வாய்க்கால் போன்ற வாய்க்கால்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழபாண்டிய பேராறு, திருவெக்கா ஆறு, வேகவதி ஆறு போன்ற ஆறுகளின் பெயர்களின் இக்கல்வெட்டுகளில் காணலாம். 

விழாக்கள்:
          கோயில் உள்ள ஊர்களில் திருவிழாவிற்குப் பஞ்சம் இருக்காது. பிரம்மதேசத்தில் பல்வேறு கோயில்களுள்ளன. இக்கோயில்களில் பெருவீற்றை நாள்விழா, திருவோணம், ஐப்பசித்திருநாள் போன்ற விழாக்கள் நடைபெற்றது பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் கோயிலில் வழிபாட்டிற்குப் பயன்படுத்திய படையல் பற்றியக் குறிப்புகளும் காணப்படுகின்றன. அவை, இலைக்கறி, நெய், தயிர், பாக்கு, வெற்றிலை, மோர், மிளகுக்கறி, புளிக்கறி, சர்க்கரை ஆகியனவாம். 

ஊரமைப்பு:
          ஊரில் கோயில்களும் சாலைகளும், தெருக்களும் பொது இடங்களும் இருந்ததைப்பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரம்மதேசத்தில் ஆறாங்கட்டளைத்திருவீதி, பெருந்தெரு என்று தெருக்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாங்ககட்டளைத்திருவீதி என்று குறிக்கப்பட்டிருப்பதால் இவ்வூரில் இதேபோன்று ஆறு தெருக்கள் இருந்தன என்பதை அறியலாம். மேலும் இவ்வூரில் தெண்ணாயிரவர் மடம், பவித்ரமாணிக்க மடம், ஜனநாதன் மண்டபம் ஆகியன அமைந்திருந்ததைப்பற்றியும் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். 

அளவைகள்:
          தமிழர்களின் எண்ணியல் அறிவு பற்றிய அறிய சோழர்காலத்துக் கல்வெட்டுகள் மிக்க பயனுடையதாக உள்ளன. தமிழ் எண்ணியலில் மேலிலக்க எண்கள், கீழிலக்க எண்கள் என இரு பெரும் பிரிவாகப் பிரித்து கீழிலக்க எண்களில் மீச்சிறு அளவைகளாப் பிரித்துப் பயன்படுத்திய விதம் வியப்புக்குரியதாகும். ஒரலகை 320 (முந்திரி) ஆகப் பிரித்து வகைப்படுத்தும் அறிவு கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. பிரம்மதேசம் கல்வெட்டுகளில் நிலங்களைக் குழி, மா, வேலி என்ற அளவாலும், பொன்னைக் கழஞ்சு என்ற அளவிலும் முகத்தில், அளவையை மரக்கால் என்ற அளவாலும், நெல்லைக் காடி என்ற அளவாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்மக்கட்டளை என்ற நிறுத்தல் அளவை, தூனி, உழக்கு, ஆழாக்கு, செவிடறை, மஞ்சாடி, செவிடு, குண்டில், தடி, கோல் என்ற அளவைகளும் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை  அறியலாம். இப்பகுதியில் பயன்படுத்திய மரக்கால் சீரிபோழ்ந்தம் மரக்கால், அருண்மொழி தேவன் மரக்கால் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. நிலங்களை 16 சாண்கோல் என்ற அளவுகோலால் அளக்கப்பட்டது என்பதும் கல்வெட்டுகளில் மூலம்  தெரியவருகிறது. 

எண்ணுப்பெயர்ச்சொல்:
          இவ்வூரில் உள்ள ஒரு சபையின் பெயர் அஞ்சஷ்டசதத்து சபை என்ற (5 X 8 X 100) என்ற நாலாயிரவர் சபை என்ற பெயரும் ஏழாயிரவன், சதுரமூவாயிரவன், மூவாயிரத்து நூற்றுவன், மூவாயிரத்து முன்னூற்றுவன் போன்ற போன்ற எண்ணிக்கையில் பெயர் கொண்டவர்கள் உள்ளனர். இவர்கள் வணிகக்குழுக்களாக அல்லது பட்டமாக இருக்கலாம். 

பெருவழிகள்:
          இக்காலத்தைப் போன்று அக்காலத்திலும் சாலைப்போக்குவரத்து நன்முறையில் செயல்பட்டுள்ளது. தற்போது பிரம்மதேசம் அமைந்துள்ள இப்பகுதி ஒரு பெருவழியாக இருந்துள்ளது. தென்தமிழகப்பகுதியில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் பிரம்மதேசம் அமைந்துள்ளது. இதைப்பற்றி இவ்வூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதிக்கு (திருமலை) கூட்டமாகச்  செல்லும் 100 பக்தர்களுக்காக இவ்வூரில் ஜெனநாத மண்டபத்தில் உணவளிக்கவும், தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரின் எல்லையாக ராஜமல்லப்பெருவழி என்ற வழியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரம் செல்லும் சாலையாக இருக்கலாம். 

வரிகள்:
          இக்கோயில் கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டைத்தவிர மற்றவை சோழர்காலக் கல்வெட்டுகளும் ஒரு பல்லவர் கல்வெட்டும் ஆகும். இக்கல்வெட்டுகளில் தானம் பற்றிய தகவல்கள் தான் அதிகமாக உள்ளன. வரி செலுத்த வேண்டியது பற்றிய விவரங்கள் இல்லை. மேலும் இக்கோயிலில் காணப்படும் விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டான கம்பண்ண உடையார் கல்வெட்டு (பொ.ஆ. 1363) ஆய்குடி மக்கள் மீது ஆயம், உள்ளாயம், உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்பட்டது தெரியவருகிறது. பொதுவாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் சோழர்கள் காலத்தில் வரிகள் குறைவாகவும் பிற்காலத்தில் வந்த விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில் மிக அதிகமாக வரிகள் விதிக்கப்பட்டதையும் இங்கு நோக்கத்தக்கது. 

சமூக அமைப்பு:
          பிரம்மதேசம் என்ற ஊர் அந்தணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஊர் என்பதால் இவ்வூரில் அந்தணப் பெருமக்கள் அதிகம் என்பதும் இவ்வூர் சமூக பிரிவுகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுக்களிலும் வாரியத்திலும் உறுப்பினர்களாக இருந்தார்கள் என அறியலாம். இவ்வூரில் வைணவர்கள்,  வணிகர்கள்,  வேளாண்மை செய்யும் குடிகள், கோயில் தானங்களையும் கொடைகளையும் கண்காணிக்கும் கண்காணி போன்றவர்களைப்பற்றியும் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புக்கல்வெட்டுகள்:
          பிரம்மதேசம் கல்வெட்டில் அரசாட்சி, கிராமசபை, கோயில் நிர்வாகம், நிலக்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரியவருகின்றன. இதில் சில கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவாகவும் உள்ளன. அவை;

1.  வீபரீத தண்டம்


          பிரம்மதேசம் ஊரில் அமைந்துள்ள அஞ்சஷ்டசத்தது சபை  ஏரி வாரியத்தின் கணக்கை எழுதும் கணக்கனுக்கு மதிப்பூதியம் வழங்க நிர்ணயித்துள்ளனர். மதிப்பூதியமாக தினமும் 3 நாழி நெல்லும் வருடத்திற்கு 7 கழஞ்சு பொன்னும் ஒரு சோடி ஆடையும் வழங்கிடத் தீர்மானித்துள்ளனர்.  அவர் கணக்குகளைச் சமர்ப்பிக்கும் போது தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியினை கையில் பிடிக்கவேண்டும் என்றும் கையில் தீக்காயம் ஏற்படவில்லை என்றால் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இல்லையென்றால் 10 கழஞ்சு பொன் தண்டமாக விதிக்கப்படும் என்றும் உடல் ரீதியான தண்டம் ஏதும் விதிக்கப்படாது என்ற விநோத வழக்கம் இருந்ததைக்காணலாம்.

2.  ராஜேந்திர சோழன் பள்ளிப்படையா?
          பிரம்மதேசம் சிவன் கோயில் ஒரு பள்ளிப்படைக் கோயில் என்றே செய்திகள் பரப்பப்பட்டு அதையும் சில ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டதனால் இராஜேந்திரசோழன் தனது இறுதிக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தார் என்றும் அவர் இறந்தது இங்குதான் என்றும் அவரது சமாதியே பள்ளிப்படைக் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் பரவியுள்ளன. ஆனால், கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் ஆதாரமாகக் கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். இராஜேந்திரசோழனுக்கு முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படைக் கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம். மேலும், இக்கோயிலின் கல்வெட்டில் இராஜேந்திரசோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறிய மன்னரின் தேவி வீரமாதேவியார் இறப்பிற்காகத் தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர்ப் பந்தல் அமைக்க இவரது உடன் பிறந்த சகோதரர் மதுராந்தகன் என்னும் பரகேசரி வேளான் என்பவனுக்கு நிலம் விற்றுக் கொடுத்துள்ளார். இதில் வீரமகாதேவியார் உடன்கட்டை ஏறிய தகவல் இருப்பதால்தான்  இங்கு இராஜேந்திரசோழன் இறந்தான் என்று நம்புகின்றனர்.



          கோயில் அமைப்பு பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் ஊரின் கிழக்குப்பகுதியில் பனைமரங்கள் சூழ இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதுமாக இந்தியத் தொல்லியல் துறையினரால் சீரமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டுவருகிறது. இக்கோயில் வடபுறத்தில் சிறிய விமானமும் அதைத்தொடர்ந்து கோயிலும் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இக்கோயில் 3 தள விமானத்துடன்  அமைந்துள்ளது. விமானத்தின் நான்குபுறங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன் அமைந்துள்ளது. நந்தி அர்த்தமண்டபத்தில் அமைந்துள்ளது. கருவறையில் லிங்கமும் அதன் தென்மேற்கு மூலையில் மற்றொரு லிங்கமும் அமைந்துள்ளது. கோயிலைச்சுற்றி  சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. கோயில் விமானம் மணற்கற்களால்  அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்று பக்கமும் நிறையக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. எளிய தோற்றத்துடன் மிக்க அழகுடன் அமைந்த கோயில் இதுவாகும். இக்கோயிலில் வழிபாடு ஏதும் இல்லை.

          பாலாற்றின் கரையில் அமைந்துள்ள ருத்திர கோட்டீஸ்வரர் ஆலயம் பாழடைந்து உள்ளது. ஆனால் வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோயிலிலும் முக்கிய கல்வெட்டுகள் உள்ளன.

நடுகற்கள்/ நினைவுச்சின்னங்கள்:
          இவ்வூரில் மையத்தில் நாயக்கர் கால நவகண்ட நடுகல் ஒன்றும் மூத்த தேவி சிலை ஒன்றும் காணப்படுகிறது. இது இந்த ஊரின் சிறப்பான வரலாற்றுக்குத் தக்க சான்றாகும்.



முடிவுரை:


          இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் பிரம்மதேசம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்பு சிறப்புப் பெற்ற ஊராகவும் பல்வேறு சமய, கலாச்சார, சமூக, நிலவியல், நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களுடன் எளிமையான அழகான தோற்றத்தில் அமைந்துள்ள ஊராகும். ஊரிலிருந்து தனித்து ரம்மியமாக நிற்கும் இக்கோயில் சோழர் கால கட்டக்கலைக்கும்  தொண்டைநாட்டின் வரலாற்றிற்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.




குறிப்புதவி:
1. தமிழ்நாட்டுக்கல்வெட்டுகள்- திருவண்ணாமலை  மாவட்டம் தொகுதி – 1
2. விக்கிப்பீடியா


நன்றி:
புகைப்பட உதவி – திரு. சேது, திரு. சுகுமார், துணை வட்டாட்சியர்.
And unknown facebook user.



குறிப்பு:
          திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியீடான "வரலாற்றில் பிரம்மதேசம்" (ஊர் வரலாறு மின்னூல் வரிசை # 1)" என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.





கட்டுரை ஆசிரியர்:
திரு. ச. பாலமுருகன்,
செயலர், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
தொலைபேசி: 9047578421
தொடர்பு:  tvmchr@gmail.com