Sunday, August 8, 2021

வெளிச்சத்திற்கு வந்த வேட்டை நாய்

வெளிச்சத்திற்கு வந்த வேட்டை நாய்

 -- ச.பாலமுருகன்

          தமிழ்நாட்டில் மகத்தான நாகரிகம் ஒன்று மண்ணுக்குள் உள்ளது என்பதை அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடக்கும் பல அகழாய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அகழாய்வு செய்யாமலே மண்ணின் மேலடுக்கிலே அல்லது மண்மூடிய மேட்டிலிருந்து கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நமக்கு தென்பெண்ணையாற்று நாகரிகம் அளித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரைகளில் நூற்றுக்கணக்கான தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைக்கின்றன. அது போலத்தான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷம் தான் தானிப்பாடி அருகே உள்ள வேளூரில் கிடைத்த வேட்டை நாய்க்கு வைத்த நடுகல். 


          அண்மையில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் பராமரிப்புப் பணியின் போது, தா.வேளூர் பாம்பாற்றுப் படுகையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகற்கள் அருகே இருந்த மேட்டுப்பகுதியை சரிசெய்யும் போது தட்டுப்பட்ட கல்லை எடுத்து வைத்துப்பார்த்த போது முகமற்ற நாயின் உருவம் தெரிந்தது. இது என்ன அரிதான ஒரு சிற்பமாக இருக்கிறதே என்று அருகில் மேலும் ஆய்வு செய்யும் போது மற்றொரு கல்லில் நாயின் தலையும் எதிரே பன்றியின் உருவமும் கொண்ட கல்லும் கிடைத்தது. இரண்டும் ஒட்டவைத்துப் பார்த்ததில் முழு உருவம் தெரியவந்தது. 



          இதுபற்றி மேலும் ஆய்வு செய்கையில் இதே போன்று உருவமுள்ள சில நடுகற்கள் கர்நாடகா பகுதியில் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஏற்கனவே நாய்க்கு வைத்த நடுகற்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் இதுபோன்று நாய் பன்றியுடன் சண்டையிட்டு இறந்ததின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாயின் உருவம் நல்ல வேட்டை நாய்க்கு உண்டான உடல் வாகுடன் உள்ளது. பயிரை உண்டு அழிக்க வந்த காட்டுப்பன்றியுடன் சண்டை செய்யும் போதோ அல்லது தனது எஜமானுடன் வேட்டைக்குச் செல்லும் போதோ காட்டுப்பன்றியுடன் சண்டையிட்டு நாய் இறந்துள்ளது. இந்த நன்றியுள்ள நாய்க்கு அப்போதே நடுகல்லும் வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் அது உடைந்து பூமிக்குள் சென்றுள்ளது. 

          நல்வாய்ப்பாக நமது கூட்டு முயற்சியால் அந்த நடுகல் வெளிவந்து தற்போது சரிசெய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப அமைதியை நோக்கும் போது இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இத்துடன் தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் உள்ள நாய் உருவத்துடனும் இது ஒத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை ஓவியத்தில் உள்ள நாய் அலங்கு என்ற இனத்தைச் சேர்ந்தது என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டது. இது தொடர்பாக சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு ஒரு நாய் இனமே இல்லை என்றும் அலங்கு என்பது வேறு வகை உயிரினம் என்று தெளிவு படுத்தினார். எனவே அலங்கு என்பது நாய் இனம் அல்ல என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது. 

          எடுத்தனூர் நாய் நடுகல்லுக்கு அடுத்ததாக கிடைத்த இந்த நடுகல்லும் நேரில் சென்று பார்க்கத்தூண்டும் ஒன்றுதான்.  பூமிக்குள் இருந்து இந்த நாய் நடுகல் வெளிவர உதவிய பழனிச்சாமி, மதன்மோகன், ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா, கி.நி.அ.முத்து, செந்தில் குமார், கார்த்திக் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் நடுவத்தின் சார்பாக நன்றிகள். 

---

No comments:

Post a Comment