Sunday, August 8, 2021

ஐரோப்பிய தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள்: ஆனந்த் அமலதாஸ்

ஐரோப்பிய தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள்: ஆனந்த் அமலதாஸ்

 -- முனைவர் க. சுபாஷிணி

நேர்காணல்: ஆனந்த் அமலதாஸ்; சந்திப்பு: முனைவர் க. சுபாஷிணி


சுபா: இன்றைய சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஐரோப்பிய மொழிகளைக் கற்று ஆராய்ந்த தமிழியல் ஆய்வாளர்களில் நீங்களும் ஒருவர். உங்களது ஐரோப்பிய மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியத் தமிழியல் துறையில் முக்கியத்துவம் பெறுபவை. உங்களுடைய ஆரம்பக்காலக் கல்விச் சூழல், பணிகள்பற்றிக் கூறுங்கள்.

anand.amaladass.jpg
ஆனந்த் அமலதாஸ்: நான் சிவகங்கை மாவட்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சேசு சபையில் சேர விரும்பி 1962இல் அவர்கள் நடத்துகின்ற பயிற்சித் தளத்தில் சேர்ந்தேன். அங்கு ஆன்மீகப் பயிற்சியோடு இலத்தீன், கிரேக்க மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்கள். பிறகு சென்னை இலயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். அதன்பிறகு செண்பகநூரில் மூன்றாண்டுகள் மெய்யியல் பயின்றேன். பின்னர் முதுகலைப் படிப்புக்காகக் கர்நாடகத்தின் தார்வார் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்துறையில் படித்துவிட்டுத் திருச்சி தூய  வளனார் கல்லூரியில் ஓர் ஆண்டு சமஸ்கிருத ஆசிரியராகப் பணிசெய்தேன். புதுடில்லியில் நான்கு ஆண்டுகள் இறையியல் படித்துவிட்டு 1977இல் முனைவர் பட்டத்திற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்கு ஆய்வுக்கான  எனது வாழ்வு தொடங்கியது.

சுபா: நீங்கள் எழுதிய நூல்கள்..

ஆ.அ: இதுவரை 28 நூல்களை எழுதியுள்ளேன். 25 நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன். 150 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவை  பெரும்பான்மையும் ஆங்கிலம், ஜெர்மன், தமிழ் மொழிகளில் உள்ளன. சில கட்டுரைகள் இத்தாலிய, பிரஞ்சு மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சுபா: நீங்கள் சமஸ்கிருத மொழி வல்லுநர். அம்மொழியைக் கற்றுக்கொள்ள ஏற்பட்ட ஆர்வம், அம்மொழியில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லுங்கள்.

ஆ.அ: எனக்கு ஆன்ம வழிகாட்டியாக இருந்த பாதர் இக்னேசியஸ் இருதயம் தூண்டுதலில் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினேன். தார்வார் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபிறகு முனைவர் பட்டத்திற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் ஆய்வு மேற்கொண்டேன். பின்னர்  இந்த ஆராய்ச்சி 1981ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. இந்த ஆய்வு நூலைத் தீர்ப்பிடும் நடுவராக வியன்னா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஓபர்ஹாமர் நியமிக்கப்பட்டார். எனது ஆய்வுக்கு நல்ல மதிப்பெண் கொடுத்து வியன்னாவுக்கு அழைப்புவிடுத்தார். அதுதான் எனது ஐரோப்பிய அனுபவத்தின் தொடக்கம்.

சுபா: இது நிச்சயமாக உங்களுக்குச் சமஸ்கிருத ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபடச் சிறந்த தொடக்கத்தை அமைத்திருக்கும் எனத் தெரிகிறது. இந்த அனுபவம் எத்தகைய பணிகளை நீங்கள் மேற்கொள்ள உதவியது? எங்கு உங்கள் பணியை முதலில் தொடங்கினீர்கள்?

ஆ.அ: சென்னை – திருவான்மியூரில் அமைந்துள்ள சத்திய நிலையம் மெய்யியல் துறையில் முப்பதாண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றினேன். தொடக்கத்தில் ‘இந்தியன் பிலாசபி என்று வேதாந்தச் சிந்தனையாளர்கள்’ பற்றிப் பாடம் சொல்லிக்கொடுத்தேன். பிறகு பதினைந்தாண்டுகள் பகவத்கீதை சொல்லிக் கொடுத்தேன். ஒரு துறையில் பேராசிரியராகப் பணிசெய்யும்பொழுது பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு இருந்தது. அது எனது ஆராய்ச்சியோடு சேர்ந்து இருந்த என் ஆசிரியப்பணி. அதன் விளைவாக மாணவர்களுக்குத் துணையாகச் சில நூற்களை வெளியிட்டேன். அவை:
‘Introduction to Aesthetics.’ Satya Nilayam Publications. Chennai 2000.
‘Introduction to Philosophy.’ Satya Nilayam Publications, Chennai 2001.
‘Philosophy of History’, Satya Nilayam Publications, Chennai 2008.
‘Philosophy of Education’, Satya Nilayam Publications, Chennai 2008.
தமிழ்க் கவிதைகள், நாடகங்களில் பாடுவதிலும் பங்கெடுப்பதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் முறையாகப் பயிற்சிபெற வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் ஆராய்ச்சித் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

சுபா:  உங்களுடைய முனைவர்பட்ட ஆய்வு,  ஆராய்ச்சி என்னென்ன? எந்தத் துறையில் ஆய்வைத் தொடர விரும்பினீர்கள்?

ஆ.அ: முனைவர்பட்ட ஆராய்ச்சிக்கு, ‘த்வனி’ கோட்பாடு படிக்கத் தொடங்கினேன். தமிழில் இதை ‘இறைச்சி’ என்று சொல்வதுண்டு.  காஷ்மீரைச் சார்ந்த ஆனந்தவர்தனா எழுதிய நூலான ‘த்வன்யாலோகா’வை ஆய்வுசெய்யத் தொடங்கினேன். ‘Philosophical Implications of Dhvani’ (1984). பிறகு இது நூல்வடிவமாக வியன்னாவில் வெளியானது. அதன் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் எழுதினேன்.  ‘த்வனி’ கோட்பாட்டை ஒரு நூலின் உட்பொருளை வெளிக்காட்டும் முறையாக (hermeneutics) புரிந்துகொண்டேன். அதனடிப்படையில் இந்திய மரபில் உரை எழுதும் முறைகள் என்று பாடம் நடத்தினேன். அவற்றைத் தொகுத்துப் பாடப்புத்தகமாக வெளியிட்டேன். (Indian Exegesis, 2003).

சுபா: பொதுவாக முனைவர்பட்ட ஆய்வை மேற்கொள்ளும் பலரும் இத்தகைய துறைகளில் கவனம் செலுத்துவது குறைவு. அந்தவகையில் உங்களது ஆய்வு குறிப்பிடத்தக்கதாகவே அமைந்துள்ளதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆய்வுப்பணிக்குப் பின் எவ்வகையான ஆய்வுகளை மேற்கொண்டீர்கள்? அவை தொடர்பாக நீங்கள் எழுதிய நூல்களையும் சொல்லுங்கள்.

ஆ.அ: இங்கு நான் ரெய்மோன் பணிக்கர் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் 20ஆம் நூற்றாண்டின் இந்தியச் சிந்தனையாளர்களுள் முக்கியமானவர் – அவரது தந்தை கேரளத்தைச் சார்ந்த இந்துக் குடும்பத்தினர், தாய் இஸ்பானிய நாட்டுக் கத்தோலிக்கர்; இரு பண்பாட்டிலும் பங்கெடுத்து வளர்ந்தவர். அவரது நூல்கள் பதினெட்டுப் பகுதிகளாகத் தொகுக்கப்பட்டு இத்தாலியா, இஸ்பானியா, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய ஐரோப்பிய மொழிகளில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவரது சில நூல்களைத் தமிழருக்கு அறிமுகப்படுத்தினேன். ‘ரெய்மோன் பணிக்கர் – வாழ்வும் வாக்கும்’, 2014. அவரது பல்சமய உரையாடல் பண்பாட்டுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.

சுபா: உண்மைதான்…

ஆ.அ: வீரமாமுனிவரின் வாழ்க்கையில் திருக்குறளின் தாக்கம் பொதுவானது. அவர் எழுதிய எல்லா நூற்களிலும் திருக்குறள் புதைந்துகிடப்பதைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, தேம்பாவணியில் மட்டும் சுமார் 75 குறள்களைத் தமது பாடல்களோடு ஒன்றிணைத்துள்ளார். இதன்வழியாகக் கிறித்தவக் கோட்பாடுகளுக்குத் தமிழ் நிறம் கொடுத்தார்.  இந்தப் பின்னணியில் இஞ்ஞாசியாரின் ஆன்மீகச் சிந்தனைகளைத் திருக்குறளோடு இணைத்து ஒரு நூல் வெளியிட்டுள்ளேன். அதன் பெயர் ‘பன்மரபுப் பார்வையில் அறவழிச் சிந்தனைகள்’ (2021).  தமிழ்க் கிறித்தவர்கள் திருக்குறள் படித்திருக்கின்றார்கள்; இஞ்ஞாசியாரைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்; ஆனால் இந்த இரண்டு கோட்பாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை பலருக்கும் தெரியாது. இந்த இருகோட்பாடுகளையும் இணைத்து ஒற்றுமையைக் காட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட நூல் அது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கிறித்தவ ஆன்மீக முறை தமிழ் மரபுக்குப் புறம்பானது அல்ல என்று அவர்களுக்குக் காட்டும் நோக்கம் இதன் பின்னணி.

சுபா: பல்சமய ஆய்வுகள் என்ற ரீதியில் உங்கள் பங்களிப்பு ?

ஆ.அ: இருபதாண்டுகளாக Hindu-Christian Studies Bulletin என்ற முயற்சியில் ஈடுபட்டு இணை ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘சமயங்கள் சந்திக்கின்றன’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கெடுத்தேன். பிறகுதான் இந்த முயற்சி தொடங்கியது.  பிறகு திருவான்மியூரில் உள்ள சத்திய நிலையம் மெய்யியல் துறையில் தலைவராக இருக்கும்போது ‘Journal of Intercultural Philosophy’ என்ற வெளியீட்டைத் தொடங்கி ஆறு ஆண்டுகள் அதற்குத் தொகுப்பாசிரியராக இருந்தேன்.  கடந்த ஓராண்டாக செங்காந்தள் என்ற இணைய செய்தியிதழைத் தொகுத்து நடத்துகிறேன்.  இந்து சமய நூல்களைக் கற்றுப் பல்சமய உரையாடல் பண்பாட்டில் ஈடுபடுவதற்குச் சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினேன். ஒரு சமயத்தவரை மற்றொரு மரபில் உள்ளவர் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்தம் மூலமொழியில் உள்ள நூல்களில் தேர்ச்சிபெற வேண்டும். அப்போதுதான் ஆராய்ச்சியின் மூலம் மற்றவரின் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும்.  அதுபோல, இஸ்லாமியரைத் தெரிந்துகொள்ள அரபுமொழி கற்கத் தொடங்கினேன். ஆனால் அதில் தொடர்ந்து பயிற்சிபெற வாய்ப்பு அமையவில்லை. இருப்பினும் அவர்களது வரலாற்றைப் படித்தேன். முகம்மது இக்பால் எழுதிய நூற்கள், ஆல்பிருனியின் பங்களிப்பு, தாராசிகோ (அவுரங்கசீப்பின் அண்ணன்) போன்றவர் முயற்சிகளை அறிந்துகொண்டேன்.

சுபா: உங்களின் மொழி தொடர்பான ஆர்வமும் பல்வேறு சமயங்களை விருப்புவெறுப்பின்றி அணுக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் வியக்கவைக்கின்றன. இக்கால இளம் ஆய்வாளர்களுக்கு இவை நல்ல தூண்டுதலாகவும் அமையக் கூடியன. மேலும் சொல்லுங்கள்.

ஆ.அ: தமிழ் வைணவத்துறைக்கு எனக்கு வழிகாட்டியவர் வியன்னா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஓபர்ஹாமர். தென்கலை மரபின் தலைவரான பிள்ளை லோகாசாரி எழுதிய ‘தத்வத்ரயம்’ என்ற சூர்ணைகளையும் அதற்கு உரை எழுதிய மணவாளமாமுனியையும் சேர்த்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். பிறகு மணவாளமாமுனி எழுதிய ‘ஆர்த்திபிரபந்தம்’ நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

         அதன்பிறகு நம்மாழ்வார் பாடல்களில் நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஜெர்மனில் மொழிபெயர்த்தேன். வியன்னாவில் பாடம் சொல்லிக்கொடுக்க இந்நூலைப் பயன்படுத்தினேன். ‘My God is a thief ’ அதாவது, நம்மாழ்வார் சொல்லாடலைத் தலைப்பாக வைத்தேன். “என் கண்ணன் என்னைத் தனதாக்கி, என் பாடல் வழியாகத் தன்னை வெளிக்காட்டுகிறான். அவன் ஒரு ‘வஞ்சக் கள்வன்’ என்கிறார் நம்மாழ்வார். இது பக்திப் பாடல் பண்பாட்டின் எடுத்துக்காட்டு.  அதன் பின்னர் வியன்னாவில் ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அங்கு என்னுடைய பொதுத் தலைப்பு ‘இந்திய மரபில் கடவுள் பற்றிய சிந்தனை.’ ஓர் ஆண்டு வைணவத்தையும் அடுத்த ஆண்டு சைவத்தையும் அறிமுகம் செய்தேன்.  சிவனுடைய நாட்டியம் பற்றிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஜெர்மனில் மொழிபெயர்த்தேன். தமிழ் படித்துவிட்டு வாருங்கள் என்றால் யாரும் என் வகுப்புக்கு வரமாட்டார்கள். அதனால் இந்தப் பாடல்களை மொழிபெயர்த்துக் கொடுத்து உரையாடல் நடத்தினேன். அது மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

         திருமந்திரத்தில் ஒன்பதாவது அதிகாரம் சிவநடனம் பற்றியது.  ‘சிவன் எங்கு நடனமாடுகிறார், ஏன் நடனமாடுகிறார், பார்ப்பவர் மத்தியில் நாட்டியத்தின் விளைவு என்ன’ என்ற கேள்விகளுக்குப் பதில் கொடுத்து இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. அதோடு சமஸ்கிருதத்திலும் சிவநடனம் பற்றிய நூல்கள் உண்டு. ‘குஞ்சித அங்கிரஸ்தவ’ என்று பெயர்; அதிலும் சில பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டேன். அதற்கு அடுத்த முறை, அருணகிரி நாதர் எழுதிய ‘கந்தர் அனுபூதி’யையும் மொழிபெயர்த்து – வள்ளலாரின் சில பாடல்களையும் சித்தர் பாடல்களையும் சேர்த்துப் புத்தகமாக வெளியிட்டேன். ‘சிவன் தென்னிந்தியாவில் நடனமாடுகிறார்’ என்ற பொருளில் இந்த நூல் வெளிவந்தது.

சுபா: இந்துப் பாரம்பரியத்தில் சைவம், வைணவம் என்ற ஆண் தெய்வ வழிபாடுகள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால் ஐரோப்பிய ஆய்வாளர்கள் சூழலில் இந்த இரண்டு பெருந்தெய்வ வழிபாட்டுக்கான விளக்கத்தை அறிமுகப்படுத்த உங்கள் ஆய்வுக் கவனம் குவிந்ததாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆ.அ: இல்லை. தமிழக இறையியல் சூழலில் பெண்ணியமும் பெண் தெய்வங்கள் பற்றிய இந்திய வரலாறும் முக்கியத்துவம் பெறுவதை உணர்ந்திருக்கின்றேன்.  நான் ஓராண்டாகப் பெண் தெய்வங்களைப் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து ஐரோப்பிய ஆய்வு மாணவர்களுக்குப் பாடம் தயாரித்தேன். உலகளவில் அது ஒரு பெரிய முயற்சியாக இன்னும் இருக்கிறது. அதற்காக இந்திய மரபு நூல்களைத் தேடினேன். சமஸ்கிருதத்தில் பல நூல்கள் உள்ளன. ‘தேவீ மாகாத்ம்யம்’, ‘சௌந்தர்யலகரி’ போன்றவை. தமிழில் ‘அபிராமி அந்தாதி’ எனக்குப் பிடித்திருந்தது. அதையும் ஜெர்மனில் மொழிபெயர்த்து ஓர் ஆண்டு பாடநூலாகப் பயன்படுத்தினேன்.

சுபா: இது மிக முக்கியமான மொழிபெயர்ப்பு. ஜெர்மானிய மொழியில் பெண் இந்துக் கடவுளர்களின் அறிமுகத்தைப் பார்த்த லோமஸ் சீகன்பால் தனது ‘Genealogy of the South Indian Deities’ என்ற நூலில் அதை வழங்கினார். அதுபோல, டச்சுக்காரரான பிலிப்ஸ் பால்டெயூஸ் ‘A Description of the East-India Coasts of Malabar and Coromandel and also of the Isle of Ceylon with their Adjacent Kingdoms & Provinces’ என்ற நூலிலும் மலபார், அதாவது தமிழ் நிலமக்களின் கடவுளர்களைக் குறிப்பிடும்போது பெண் தெய்வங்களை அறிமுகப்படுத்துகின்றார். இப்படி பிரஞ்சு மொழியிலும் பொ.ஆ.19 காலகட்டத்தில் சில நூல்கள் வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக இந்த நூற்றாண்டில் உங்களது முயற்சியும் வரலாற்றில் இடம்பெறுவதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது டாக்டர் ஆனந்த். சரி, பொ.ஆ. 16 தொடங்கி தமிழகம் வந்த ஐரோப்பிய மதச் சேவையாளர்களின் தமிழ்ப் பணிகளைக் கூறுங்கள்.

ஆ.அ: தமிழகத்திற்கு வந்த சேசுசபை மறைப் பணியாளர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு பெரிது. சிறப்பாக தே நோபிலி, வீரமாமுனிவர் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழ் தெரியாத மற்றவருக்கு அறிமுகம்செய்வதை என் நோக்கமாகக் கொண்டிருக்கின்றேன்.  தே நோபிலி இருபதுக்கும் மேற்பட்ட நூற்களைத் தமிழில் எழுதியுள்ளார். சிறப்பாக தாமஸ் அக்குவினாஸ் பதிவுசெய்த கிறித்தவக் கோட்பாடுகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். நான் ‘கடவுள்நிர்ணயம்’, ‘ஆத்துமநிர்ணயம்’, ‘நித்திய சீவன சல்லாபம்’, ‘தூசன திக்காரம்’ போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளேன். அதுபோல வீரமாமுனிவர் எழுதிய திருக்காவலூர்க் கலம்பகம், அன்னை அழுங்கல் அந்தாதி போன்ற நூல்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இப்போது ‘கித்தேரி அம்மாள் அம்மானை’யையும் தயார் செய்துகொண்டிருக்கிறேன்.

சுபா: உங்களது படைப்புக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஜெர்மானிய நூல்களைக் காண்கிறேன். ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளில் உங்கள் அனுபவம், செயல்பாடுகள் என்னென்ன?

ஆ.அ: ஜெர்மன் மொழிபேசும் பகுதியான ஐரோப்பாவுடன்தான் எனக்கு அதிகத் தொடர்பு இருந்தது. அங்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் கொண்ட நட்பு பெரிதும் உதவியது. அவர்கள் தங்களின் அன்பளிப்பாக தாங்கள் எழுதிய நூல்களைக் கொடுப்பது வழக்கம். ஒருமுறை பிராங்பர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் நூல் ஒன்றைக் கொடுத்தார். அது அவர் எடுத்த முயற்சியின் பயன். பள்ளி அளவில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்குப் பெரிய நூலக வசதி அதிகம் இருக்காது. பல்வேறு சமயங்களையோ அவர்களின் கோட்பாடுகளையோ எளிதில் கற்க வசதியும் இருக்காது. அவர்களுக்கு உதவியாக எண்பது பேராசிரியர்களை அழைத்துப் பல்சமயப் பண்பாட்டுக் கருத்தியலைக் கொடுத்து, ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு பக்க அளவில் கட்டுரை தயாரித்து வெளியிட்டார்கள். இந்து சமயம், உரையாடல், அரசியல், பாலின வேறுபாடு, ஜனநாயகம், இஸ்லாம், மானுடவியல், கொன்பூசியனிசம் என்று நூறு தலைப்புகள் அடங்கிய நூல்.  அதைப் பார்த்ததும் ஏன் அதைத் தமிழில் கொண்டுவரக்கூடாது என்று நினைத்துத் தமிழாக்கம் செய்து ‘பல்சமயப் பண்பாட்டுக் களஞ்சியம்’ (2016) என்ற தலைப்பில் வெளியிட்டேன். ‘Kunst und Religion’ (2021) ‘கலையும் சமயமும்’ என்ற தலைப்பில் இந்திய மரபின் பின்னணியில் பலமுறை உரையாற்றினேன் – அது புத்தகமாக இப்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கெடுப்பதற்குப் பல முறை வாய்ப்புக் கிடைத்தது. ஒருமுறை ‘ஆசீவகக் கோட்பாடு’ பற்றி உரையாற்றினேன். அதன்வழியாகப் பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய ஆசீவகம் சார்ந்த நூல்களை அறிமுகம் செய்தேன். மற்றொரு முறை வள்ளலாரைப் பற்றி உரையாற்றினேன். இவற்றையெல்லாம் வலைத்தளங்களில் பதிவுசெய்து மற்றவர் கவனத்திற்குக் கொண்டுசேர்த்தேன்.

சுபா: உங்கள் ஆய்வுகள் இந்தியப் பண்பாட்டுச் சூழலை, குறிப்பாகச் சமயங்களை மையமாகக்கொண்டு அமைகின்றன. இந்தியக் கலை வரலாற்றில் கிறித்தவக் கண்ணோட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஆ.அ: சமயவாதிகள் மத்தியில் பல பூசல்கள் இருந்தாலும், கலைஞர்கள் மத்தியில் பல்சமய இணக்கம் உண்டு என்பது உண்மை. கலைஞர்கள் பல்வேறு சமுதாய வேலிகளைத் தாண்டும் மனநிலை பெற்றவர்கள். இதற்கு எடுத்துக்காட்டாக எழுந்ததுதான் எனது ‘Christian Themes in Indian Art’ என்ற நூல். இதில் கிறித்தவ, இந்து, இஸ்லாமிய, பார்சி கலைஞர்கள் கிறித்துவின் படங்களை வரைந்துள்ளார்கள். கிறித்து சிலுவை சுமப்பது, கடைசி இரவு உணவு (Last Supper) போன்ற காட்சிகளைத் தனது ஓவியக்கலைக்குள் சேர்த்துள்ளார்கள். இவற்றைத் தொகுத்து – அக்பர் காலம் தொடங்கி இந்தியாவில் சமய உறவு நிலைத்திருப்பதைக் காட்டுவதுதான் இந்நூல். ‘Christian Themes in Indian Art’ 2012 என்ற இந்த நூலை ஜெர்மன் நாட்டின் குத்ரூன் லோவ்னர் என்பவரோடு இணைந்து எழுதி வெளியிட்டேன்.

சுபா: இந்த நூலை நான் பார்த்திருக்கின்றேன். அருமையான வடிவமைப்பில் மிகச்சிறப்பான ஆய்வுச் செய்திகளோடு வந்திருக்கும் சிறந்த படைப்பு அது.

ஆ.அ: நோபிலி (Roberto de Nobili) பற்றியும் சொல்ல வேண்டும். அவர் சமஸ்கிருதத்தில் பேசவும் எழுதவும் கற்றவர்.  கிறித்தவர்கள் எழுதிய சமஸ்கிருதப் பாடல்களையும் நூல்களில் சிலவற்றையும் தேர்ந்தெடுத்தேன். அவற்றை இரண்டு கத்தோலிக்கர், இரண்டு புராட்டஸ்டன்ட் ஆசிரியர்கள், மொழிபெயர்த்துத் தந்ததையும் தொகுத்து ‘Indian Christiad’ (1995) என்ற நூலை வெளியிட்டேன். கிறித்தவர்கள் விவிலியத்தைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார்கள். ஜான் மூயர் என்பவர் பல்வேறு நூல்களைச் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்.  ‘Sri Krista Sangita’ என்ற முக்கிய நூல் காப்பிய வடிவில் உள்ளது. இதிலிருந்தும் சில பகுதிகள் எனது நூலில் இடம்பெறுகின்றன.

சுபா: தமிழ்க் கிறித்தவத்தில் இசையும் இசைப்பாடல்களும் எத்தகைய பங்குகளை வகிக்கின்றன?

ஆ.அ: கத்தோலிக்கக் கிறித்தவர்கள் 1968க்குப் பிறகு தங்கள் வழிபாட்டு முறையைத் தமிழ் மயமாக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். கர்நாடக இசை முறையைச் சிலர் கற்றனர். அந்தமுறையில் கிறித்தவப் பாடல்களை அமைத்தார்கள். இந்த வரிசையில் வேதநாயக சாஸ்திரி, ஆப்ரகாம் பண்டிதர், சின்னசாமி முதலியார் போன்றவர்களின் பங்கு மிகப் பெரிது.  எனக்கு இசையில் பயிற்சி பெற அதிகம் வாய்ப்பில்லை. இருந்தாலும் இசையில் ஈடுபட்டோரது செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் வகையில் 35 கிறித்தவப் பாடலாசிரியர்களையும் அவர்களின் இரண்டிரண்டு பாடல்களையும் தொகுத்து ‘Musical Spring. Christian Music Exponents in Tamilnadu’ (2007) என்னும் புத்தகமாக வெளியிட்டேன்.

சுபா: உங்களது தொடர்ச்சியான ஏனைய பணிகள் ...

ஆ.அ: ‘தமிழியல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினேன். வெளிநாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கெடுக்க அழைப்பு வந்தபோது தமிழ் மரபுசார்ந்த தலைப்பில் கட்டுரைகள் எழுதினேன். குறிப்பாகத் திருக்குறளை முன்வைத்து அவற்றை எழுதினேன். எடுத்துக்காட்டாக:
1. ‘Values in Leadership in the Tamil Tradition of Tirukkural vs. Present day Leadership Theories’, in International Management Review, USA, Vol. 3, N0.1. 2007. pp.9 –16.
2. ‘Ancient Poets And Prophets Speak For The Consumers. Intercultural Dialogue On Traditional Wisdom And Values’, In Journal Of International Business Ethics USA And China (JIBE), Vol. 2. No. 1. March, 2009. 73-78.
3. ‘Learning From The Perennial  Wisdom Of The Tirukkural’, Puthia  Panuval, (Online Journal) An  International Journal Of Tamil Studies, Vol. 01, Issue 3, August 2009, PP. 54-62.
4. ‘Should We Speak of Philosophy in the Tamil Classical Literature?’ in: Puthia Panuval, An International Journal of Tamil Studies. Online Journal, Vol. 6, Issue 1, April 2015, 122-135.
இந்த வெளியீடுகளெல்லாம் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளின் விளைவு. முன்னதாகவே திட்டம்போட்டு எதையும் சாதிக்க வேண்டும் என்ற நிலையில் உருவானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகள். இதைப் பண்பாட்டுப் பரிமாற்றம் என்று சொல்லலாம். இதற்கு எனக்கு வழிகாட்டியவர்கள், வாய்ப்பு வழங்கியவர்கள் அநேகர். அவர்களுக்கெல்லாம் எனது மனமார்ந்த நன்றி.

சுபா: இக்காலச் சூழலில் தமிழக ஆய்வுப் பரப்பில் ஐரோப்பியத் தமிழியல் குறித்தான ஆய்வினைச் செய்பவர்கள் மிகக் குறைவாக இருக்கின்றனர். இதனை நிவர்த்திசெய்யவும் இத்துறையில் இளம் ஆய்வறிஞர்களைத் தமிழகக் கல்விக் கழகங்களில் உருவாக்கவும் எத்தகைய செயல்திட்டங்கள் தேவை எனக் கருதுகின்றீர்கள்?

ஆ.அ: அயல்நாட்டவர் பார்வையில் தமிழகம் என்ற தேடல் அவசியமானது. மார்க்கோ போலோ, ஜான்மோந்தே கோர்வீனோ, தே நோபிலி போன்றவர்கள் இத்தாலிய மொழியில் தமிழ் மக்களை விமர்சனம் செய்துள்ளார்கள். இது இன்னும் ஆய்வுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒரு தலைப்பு. ஏற்கெனவே தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் கடிகை இணையக் கல்விக்கழகத்தின்வழி செய்துவரும் ஐரோப்பியத் தமிழியல் பணிகளில் தமிழகப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இணைந்து ஐரோப்பிய மொழிகளில் உள்ள தமிழ், தமிழ்மக்கள் தொடர்பான ஆய்வுகளை விரிவாக்கலாம். உதாரணமாக நீங்கள் (க. சுபாஷிணி) தற்சமயம் எழுதி வெளியீட்டிற்குத் தயார்நிலையில் உள்ள பெஞ்சமின் சூட்சேயின் மெட்ராஸ் பற்றிய நூல் நல்ல எடுத்துக்காட்டு. இத்தகைய தமிழக வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுசெய்து வெளியிடலாம்.

         இதுமட்டுமன்றி, முனைவர் பட்டப் படிப்பிற்குத் தயார் நிலையில் இருப்பவர்கள் அவர்கள் துறைசார்ந்த தலைப்பில் மற்ற மொழியில் என்ன பதிவாகியுள்ளது என்று தெரிந்துகொள்ள முயல வேண்டும். எடுத்துக்காட்டாக, ஜெர்மன் மொழியில் தமிழ் சைவ மரபின் பல்வேறு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணிக்கவாசகர், தாயுமானவர் நூற்கள் குறிப்பிடத்தக்கவை.  சில ஆராய்ச்சியாளர்கள் என்னிடம் கலந்துரையாட வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிவருகிறேன். தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளில் தரமாக மொழிபெயர்க்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இன்று உள்ளன. ஆய்வாளர்கள் இத்துறையில் தீவிர நாட்டத்துடன் இயங்க வேண்டும். ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டவேண்டும்.

சுபா: ஐரோப்பியத் தமிழியல் துறையில் உங்கள் பங்களிப்பு சிறப்பிடம் பெறுகிறது. தங்களது அனுபவங்களை இக்கலந்துரையாடல் வழிப் பகிர்ந்துகொண்டமைக்கு எனது நன்றி.

ஆ.அ: நன்றி.


இந்நேர்காணலைச் செய்தவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி.
நன்றி:காலச்சுவடு,  ஆகஸ்ட் 2021 இதழ்

--- 

No comments:

Post a Comment