Sunday, October 6, 2019

மதர்


—   முனைவர். ப.பாண்டியராஜா


            மதர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் 28 முறை பயின்று வருகிறது. தமிழ்ப்பேரகராதி (Tamil Lexicon) இதனை வினைச்சொல்லாகவும், பெயர்ச் சொல்லாகவும் கொள்கிறது. இதனை வினைச்சொல்லாகக் கொண்டு, இதற்கு,

            செழித்தல், To flourish; to be fertile, rich or luxuriant;
            மிதமிஞ்சிக்கொழுத்தல், To be too luxuriant to be productive, as soil, plants, etc,
            மதங்கொள்ளுதல், To be affected with frenzy, as a bull or elephant;
            செருக்குதல், To be self-conceited, arrogant;
            களித்தல், To rejoice; to be full of joy,
            மிகுதல், To increase, abound,

என்ற பொருள்களும், பெயர்ச்சொல்லாகக்கொண்டு,

            செருக்கு, Pride, arrogance, self-conceit, wantonness;
            மகிழ்ச்சி, joy,
            மிகுதி, Abundance;
            பாய்ச்சல்,  Rush; gust; impulse;
            வீரம், Bravery

ஆகிய பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அகராதிகளிலும் இவற்றையொட்டிய பொருள்களே கொடுக்கப்பட்டுள்ளன.

            இனி, சங்க இலக்கியங்களில் இச்சொல் இந்தப் பல்வேறான பொருள்களை எவ்வாறு தாங்கி வருகிறது என்று பார்ப்போம். இச்சொல், சங்க இலக்கியங்களில் வருகின்ற 28 இடங்களில், 21 இடங்களில் பெண்களின் கண்களுக்கு அடைமொழியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறு அல்லாத மற்ற பயன்பாடுகளை முதலில் பார்ப்போம்.

1.
            கடும்தெறல் இராமனுடன் புணர் சீதையை
            வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
            நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் - புறம் 378/18-20

மிக்க திறலையுடைய இராமனுடன் காட்டிற்குச் சென்ற சீதையை
மிக்கவலிமைபெற்ற அரக்கன் இராவணன் கவர்ந்துசென்றபோது
சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த வளப்பம் மிக்க அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய
என்பது இதன் பொருள்.

            எனவே, இங்கு சீதை அணிந்திருந்த அணிகலன்கள் மிகவும் விலையுயர்ந்தவையாய் இருந்திருக்குமாதலால், அவற்றை rich or luxuriant என்ற பொருளில் செழுமையான அல்லது வளப்பம் மிக்க நகைகள் எனப் பொருள்கொள்ளலாம்.

2.
            மதர் புலி வெரீஇய மையல் வேழத்து - அகம் 39/11

செருக்குற்ற புலியினைக் கண்டு அஞ்சிய மயக்கம் பொருந்திய யானைக்கூட்டம்

            இங்கே செருக்கு என்ற வினைப்பொருள் ஏற்புடையதாய் இருக்கக் காண்கிறோம்.

3.
            மதர் எழில்
            மாணிழை மகளிர் பூணுடை முலையின்
            முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு - அகம் 99/3-5

இறுமாந்த அழகினையும்
மாண்புற்ற அணியுமுடைய மகளிரது பூண் அணிந்த முலையினைப் போன்ற
முகைகள் அலர்ந்த கோங்கம்பூக்களொடு

4.
            இதழ் அழிந்து ஊறும் கண் பனி மதர் எழில்
            பூண் அக வன முலை நனைத்தலும் - குறு 348/4,5

இமையின் விளிம்பைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, இறுமாந்த அழகினையுடைய
பூண்களின் அகத்தே இருக்கும் அழகிய முலையை நனைக்கின்றதனையும்

            இங்கே, மதர் என்பது இளம்பெண்களின் எடுப்பான மார்பகங்களுக்கு அடைமொழியாகக் கொடுக்கப்பட்டிருப்பதால், மதர் என்பதற்கு, செருக்கு என்பதன் வேறொரு பொருளான இறுமாப்பு பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. பால்ஸ் மின் தமிழ் அகராதியும் மதர் என்ற சொல்லுக்கு, இறுமாப்பு, haughtiness என்ற பொருளைத் தருகிறது.

5.
            மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம் 140/10

செருக்குள்ள கயல் இரண்டு எதிர்த்துப் பொருவது போன்ற அவள் கண்கள்

6.
            நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்
            ஒள் இழை மகளிர் பள்ளி அயர - மது 622,623

பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மடப்பத்தினையும் செருக்கினையும்
ஒள்ளிய அணிகலன்களையுமுடைய மகளிர் துயிலுதலைச் செய்ய

7.
            காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ
            ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை
            கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி
            உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
            பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
            கரப்பார் களி மதரும் போன்ம் - பரி 10/63-68

காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் அக் காமக் களிப்பு தோன்ற,
ஊருக்காக மிகவும் அஞ்சி, அக் காமக்களிப்பினை ஒளிப்பார் சிலர், அவரின் நிலை
கள்ளுண்டதால் களிப்பு மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு அஞ்சி,
உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி, தம் களிப்புக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி.

            மேற்கூறிய 7 இடங்களைத் தவிர, சங்க இலக்கியங்களில் 21 இடங்களில் மதர் என்ற சொல் பெண்களின் கண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் 11 இடங்களில் ’அரி மதர் மழைக்கண்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            ’அரி மதர் மழைக் கண்’ என்ற தொடரில் வரும் மதர் என்ற சொல் பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்பதில் குழப்பம் நிலவுகிறது. இத்தொடரில் அரி (செவ்வரி), மழை (குளிர்ச்சி) ஆகிய சொற்கள் பெயர்ச்சொற்களே. எனவே மதர் என்பதனையும் ஒரு பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான உரையாசிரியர்கள் இத்தொடருக்கு, செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண் என்றே உரை கொள்கின்றனர். ஆனால், தமது விளக்கவுரையில், மதர் - செருக்கு,  மதர் - களிப்பு என்ற பொருளும் தருகின்றனர். எனவேதான் இத்தொடரில் வரும் ‘மதர்’ என்ற சொல்லை எதில் சேர்ப்பது என்ற குழப்பம் நிலவுகிறது.

            கண் என்ற சொல்லுக்கு அடையாகக் கொடுக்கப்படும் மதர் என்ற சொல் பயன்பாட்டை மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்.


1. தலைவி அல்லது ஓர் இளம்பெண்ணின் கண்களைப் பாராட்டும் விதமாக அமைந்திருப்பது.

            அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி
            மட மதர் மழை கண் இளையீர் - குறி 140,141

தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும்
மடப்பத்தையுடைய மதர்த்த குளிர்ந்த கண்ணினையுமுடைய இளையீரே

            அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
            பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
            திரு மணி புரையும் மேனி மடவோள்
            யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் - நற் 8/1-4

நீங்காத துயரத்தின்வாய்ப்பட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும்,
பல பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும்
அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!

            முது நீர் இலஞ்சி பூத்த குவளை
            எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
            அரி மதர் மழை கண் காணா ஊங்கே - நற் 160/8-10

நாட்பட்ட நீரினைக்கொண்ட பொய்கையில் பூத்திருக்கும் குவளை மலர்களை
எதிர் எதிராக வைத்துக்கட்டியதைப் போன்ற இவளது
செவ்வரி பரந்த செழுமையும் குளிர்ச்சியும் மிகுந்த கண்களைக் காண்பதற்கு முன்னர்

            ஒரீஇயின போல இரவு மலர் நின்று
            திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் - பதி 21/34,35

குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,

            கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை
            நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல்
            முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்
            நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை - பரி 8/74-77

குளத்திடத்து இருக்கும் நெய்தல் பூக்களையும், மலர்ந்து மணங்கமழும் மொட்டுக்களின் மணத்துடனான மலர்ச்சியினால்
கண்டோர் விரும்புவதற்குரிய நறவம் பூவின் இதழையும் போன்ற மதர்த்த மையுண்ட கண்களையும், ஒளிவிடும் நெற்றியையும்,
மொட்டாகிய முல்லையையும் வென்று, அழகிய முத்துக்களைப் போன்றிருக்கும் வெண்மையான பற்களையும் கொண்ட தலைவி
கூறியது நகைப்பதற்குரிய கனவு அன்று, உண்மையாக நடந்த நிகழ்ச்சியும் அன்று!

            திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்
            அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
            அணங்குசால் அரிவையைக் காண்குவம் - அகம் 114/13-15

செல்வமுள்ள மனையில் தங்கிய குற்றமற்ற கற்பினையும்
செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும் மூங்கிலை ஒத்த பருத்த தோளினையும் உடைய
தெய்வம் போல் சிறந்த நம் தலைவியைக் காண்போம்.

            ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
            காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது
            அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
            பெரு மலை நாடன் மார்பு புணையாக
            ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி - அகம் 312/4-8

உயர்ந்த மலையினின்றும் வீழும் மிக்க மழையாலான அருவி நீரில்,
காந்தள் பூக்களையுடைய இச்சீறூரின் அலரினைப் போற்றாது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் சிவந்திட, நாளை
பெருமலைநாட்டினனாகிய தம் தலைவனின் மார்பு தெப்பம் ஆக
விளையாடுவோம் வருவாயாக காதல் மிக்க தோழியே!

            கள்ளின்
            மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
            சின் மொழி பொலிந்த துவர் வாய்
            பன்மாண் பேதையின் பிரிந்த நீயே - அகம் 343/16-19

கள்ளால் ஆகிய
மகிழ்வு போல் மகிழ்தற்கு ஏதுவாகிய செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும்
சிலவாய மொழிகளால் பொலிவுற்ற பவளம் போன்ற வாயினையும்
பலவாய மாண்புகளையும் உடைய நம் தலைவியாகிய பேதைப்பெண்ணைப் பிரிந்த நீ

            தூமலர் தாமரை பூவின் அங்கண்
            மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன
            திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
            அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை - அகம் 361/1-4

தூய மலராய தாமரைப் பூவிடத்தே
கரிய இதழ்களையுடைய குவளை மலர் இரண்டினைப் பிணைத்துவைத்தாற் போன்ற
அழகிய முகத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும்
அழகிய வளைகளையுடைய முன்கையினையும் அழகிய வாய் இதழினையுமுடைய நம் தலைவியின்

            நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா
            கடிய கூறும் வேந்தே தந்தையும்
            நெடிய அல்லது பணிந்து மொழியலனே
            இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
            அரி மதர் மழை கண் அம் மா அரிவை
            மரம் படு சிறு தீ போல
            அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே - புறம் 349

தன் கை வேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து
கேட்டார் அஞ்சத்தக்க மொழிகளைக் கூறுகின்றான் வேந்தனும், இவள் தந்தையும்
நெடுமொழிகளைத் தவிர பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை,
இது இவர்கள் கொள்கை ஆகும், இதனை ஆராயுங்கால் கூரிய பற்களையும்
அரி பரந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையுமுடைய அரிவையாவாள்
மரத்தைக் கடையுமிடத்துத் தோன்றும் சிறு தீ அம் மரத்தை அழிப்பது போல
வருத்தம் விளைவிப்பவளாயினள் இவள் தான் பிறந்த ஊர்க்கு.

            மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள ‘மதர்’ என்ற சொல், ஒரு பாராட்டுச்சொல்லாகவே இருக்கக் காண்கிறோம். எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்பதற்கு, செழிப்பான (luxuriant), வளமைபொருந்திய (rich), மகிழ்ச்சி நிறைந்த (joyful) போன்ற பொருள்கள் ஒத்துவரும் எனத் தோன்றுகிறது. மேலும், இவற்றில் சில இடங்களில், மதர்க்கண் என்பதைக் காந்தக்கண்கள், சுண்டியிழுக்கக்கூடிய கண்கள், கவர்ச்சியான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம் எனத்தோன்றுகிறது.


2. அடுத்து, தலைவனை மயக்கி இழுக்கும் பரத்தையரின் கண்களும் மதர்க்கண்கள் எனப்படுகின்றன.

            மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
            தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால்
            இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை
            தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி - பரி 20/55-58

இணக்கமுள்ள மதர்த்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி, இளமைபொருந்திய விரல்களால்
பொருள்கொடுப்போருக்கு யாழினை இசைத்து இசையெழுப்பி இன்பமூட்டும் பொழுதே, என் அணிகலன்களையும்
அணிந்து, மகிழ்வித்து, இன்பம் வழங்குவதில் பொதுமையுடையவளே!

            சேரி
            அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
            பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
            செரு ஒழிந்தேன் சென்றீ இனி - கலி 91/12-15

சேரியிலிருக்கும்
செவ்வரி படர்ந்த மதர்த்த மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது";

            அரி மதர் மழை கண் மாஅயோளொடு
            நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
            பெரு நீர் வையை அவளொடு ஆடி
            புலரா மார்பினை வந்து நின்று எம்வயின்
            கரத்தல்கூடுமோ - அகம் 296/3-7

செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்ணினை உடைய மாமை நிறத்தையுடைய பரத்தையுடன்
நேற்றும் மணம் கமழும் பொழிலில் துயின்று இன்றும்
அவளுடன் வையையின் நீர்ப்பெருக்கில் விளையாடி
ஈரம் புலராத மார்பினையுடையையாய் எம்பால் வந்து நின்று
எமக்கு மறைத்தல் இயலுமோ?

            பரத்தையரின் கண்ணழகைத் தலைவியர் உறுதியாகப் பாராட்டமாட்டார் என்பது உறுதி. எனவே இது ஒரு வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கவேண்டும். மதர் என்ற சொல்லுக்கு with intense desire என்ற ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு. வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் தமது சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இச்சொல்லுக்கு இந்த இடங்களில் luscious என்று பொருள்கொண்டிருப்பார். இதற்கு, Having strong sexual appeal என்று பொருள். இதனை seductive, voluptuous என்றும் கொள்ளலாம். எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்ற சொல்லுக்கு போதை தரும், மயக்கம்தரும், வெறியூட்டும் என்ற பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.


3. அடுத்து, மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து கண்ணீர்விடும் ஒரு பெண்ணின் கண்களும் மதர்க்கண் எனப்படுகின்றன.

            நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
            ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் - குறி 247,248

பெரிய மழைத் துளிகள் ஓங்கிப்பாய்ந்த மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து,
ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன - (இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்),

            திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
            அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் - கலி 77/3,4

தன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, தான் விரும்பியவனுக்காக வருந்துபவளின்
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல் தெறிப்பது போல்

            ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்
            பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் - கலி 82/20,21

அப்பொழுது, 'மகளிரின் செவ்வரிபடர்ந்த, செழித்த, மைதீட்டிய கண்கள் பசந்துபோகும்படி அவருக்கு நோவைத் தரும்
உன் தந்தையின் பரத்தைமைக் குணத்தைப் போலிருக்காதே' என்றாள்,

            மதர் எழில் மழை கண் கலுழ இவளே
            பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
            மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
            அழல் தொடங்கினளே  - அகம் 120/6-9

மதர்த்த அழகினையுடைய குளிர்ந்த கண் கலங்கிட, இவள்
மிக்க நாணத்தைக் கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய
தன் மாண்புற்ற அழகு கெட ஏக்கமுற்று அமையாது
அழுதலைத் தொடங்கியுள்ளாள்

            வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
            எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
            அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே - அகம் 149/17-19

வண்டு வீழ நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்
புதிய மலர் இரண்டின் சேர்க்கை போன்ற இவளது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரினைக் கொள்ள

            நெடிது உயிர்த்து
            வருந்துவள்கொல் அளியள் தானே சுரும்பு உண
            நெடுநீர் பயந்த நிரை இதழ் குவளை
            எதிர் மலர் இணை போது அன்ன தன்
            அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே - அகம் 381/18-21

பெருமூச்செறிந்து
வருந்தியிருப்பாளோ! இரங்கத்தக்காள்! வண்டு தேனைப் பருக
ஆழமான நீரினால் தரப்பட்ட நிரையாகவுள்ள இதழ்களையுடைய குவளையது
புதிய மலராய இரண்டு பூக்களைப் போன்ற தனது
செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள

            திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாய்
            அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் - அகம் 387/1,2

இவளின் திருந்திய அணி நெகிழவும் பெரிய தோள் நெகிழவும்
அரி பரந்த மதர்த்த கண்களில் நீர் ஒழுகவும் செல்லும் தலைவரே

            கார் வான் இன் உறை தமியள் கேளா
            நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
            அரி மதர் மழை கண் அம் மா அரிவை - புறம் 147/3-5

கார்காலத்து மழையின் இனிய துளி வீழ்கின்ற ஓசையை தமியளாய்க் கேட்டு
நேற்று ஒருபக்கத்துத் தனிமைகொண்டிருந்த
அரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும் அழகிய மாமை நிறத்தினையும் உடைய அந்த அரிவையின்

            இவற்றில், சில இடங்களில், தலைவி துயருறுவதற்கு முன்னர் கண்கள் இருந்த நல்ல நிலை சுட்டப்படுவதாகக் கொள்ள இடமுண்டு. முன்பு மதர்த்திருந்த கண்கள் இப்போது கண்ணீர் மழை சொரிய என்ற பொருள் கொண்டால் இங்கு மதர் என்ற சொல்லுக்கு நாம் முதன்முதலில் (எண் 1) கண்ட பொருள் ஒத்துவரும். ஆனால்,

            நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
            அரி மதர் மழை கண் அம் மா அரிவை

என்ற அடிகளில் தனிமைத்துயரில் வாடும் மதர்க் கண்ணையுடைய அரிவை என்ற பொருள் அமைவதால், பொதுவாக, மதர் என்ற சொல்லுக்குத் தரப்படும், செழிப்பு, களிப்பு, செருக்கு ஆகிய பொருள்கள் ஏற்புடையனவாக இல்லை.

            வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும்
            கோன் ஆர் மகள்தன் வடிவம் நோக்கி - சிந்தா:12 2456/2,3

வான் நிலவு அனைய ஒளி முகமும், இளம் மானைப் பழிக்கும் மதர்த்த நோக்கும் உடைய
கோவிந்த மன்னனுடைய மகளின் வடிவழகைக் கண்டு

            என்ற சிந்தாமணி அடிகள் நமக்கு ஒரு புதுப்பொருளைத் தருகின்றன.

            மட மான் மதர் நோக்கும் என்ற தொடருக்கு ’மடமானை வென்ற மதர்த்த நோக்கும்’ என்று பொருள்கொள்வார் பெருமழைப்புலவர்.

            மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் - சிறு 31
            மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று - குறி 25
            மயில் இயல் மான் நோக்கின்
            கிளி மழலை மென் சாயலோர் - பட் 149,150
            மான் அமர் நோக்கம் காணா ஊங்கே - நற் 101/9
            பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் - கலி 58/2
            மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக - கலி 69/4
            மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து - அகம் 74/10
            மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே - அகம் 91/18
            மான் பிணை நோக்கின் மட நல்லாளை - அகம் 195/6

            ஆகிய அடிகள், பெண்கள் மானைப்போன்ற பார்வையைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றன. மானின் கண்களில் உள்ள சிறப்பு அதன் மருண்ட பார்வைதான்.

            மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து - அகம் 74/10 என்ற அகநானூற்று அடி இதனை உறுதிப்படுத்துகிறது.

            எனவே, மதர் என்பதற்கு இங்கு ’மருண்ட’ அல்லது ‘மருட்சி’ என்ற ஒரு பொருளும் உண்டு என்பது இதனால் புலப்படுகிறது.

            இந்தப் பொருளே மூன்றாவதாக இங்குக் குறிப்பிடப்படும் துயருள்ள பெண்களின் கண்ணுக்கு அடையாகக் குறிப்பிடப்படும் மதர் என்ற சொல்லுக்குச் சரியான பொருளாகும்.  ஆனால் எந்த அகராதியிலும் இந்தப் பொருள் கொடுக்கப்படவில்லை. இனிவரும் அகராதிகளில் இந்தப்பொருளும் சேர்க்கப்பட்டால், இச் சொல்லுக்குரிய பொருள் அட்டவணை முழுமைபெறும்.
___________________________________________________________
தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/
No comments:

Post a Comment