Tuesday, October 15, 2019

தொல் தமிழகத்து வழிபாடுகளில் இயற்கைப் பொருட்கள்- ஒரு ஒப்பீடு


— முனைவர் ச.கண்மணி கணேசன் 


முன்னுரை:
            பண்டைத் தமிழரிடம் நிலவிய வழிபாடுகளில் இடம் பெற்ற இயற்கைப் பொருட்கள் எவை எவை? வழிபாட்டுக்கு ஆதாரமாக அமைந்த நம்பிக்கைகளும்,   காரணங்களும் என்னென்ன? எந்த  முறையில் வழிபாடு நடந்தது ஆகியவற்றைக் கண்டறிந்து ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.  காலத்தால் முற்பட்டனவாகக் காணப்படும் இயற்கை வழிபாடுகளின் எச்சங்களை இன்றும் நம்மால் இந்து சமயத்தில் அடையாளம் காண இயல்கிறது. எடுத்துக்காட்டாகத் தலமரங்களைக் கூறலாம். பறவை வழிபாடுகளும் இனம் தெரிகின்றன. இதனால் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில் நிலவிய இயற்கை வழிபாடு பற்றிய தெளிவான அறிவு தேவைப்படுகிறது.

            எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் இடம் பெறும் வழிபாடுகள் சுட்டும் இயற்கைப்பொருட்கள் மட்டுமே ஆய்வுக்குரிய எல்லையாக வரையறுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. காலத்தால் முற்பட்டனவாகக் கிடைத்திருக்கும் தொகை நூற்சான்றுகளே முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள், இன்றைய ஊடகச் செய்திகள், ஆய்வாளர் கட்டுரைகள் முதலியன இரண்டாம்நிலைத் தரவுகளைத் தருகின்றன.  இயற்கைப் பொருட்களைத் தொகுக்குங்கால் மரபு வழிப்பட்ட பகுப்புமுறை ஆய்வு பின்பற்றப்படுகிறது. காக்கை, கூகை பற்றிய  நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் ஒப்பியல்முறையில் பொருத்திக் காட்டப்படுகின்றன 


[1] தொல்தமிழர் சமயக் கொள்கை:
            இயற்கை வழிபாட்டுடன் மாறுபட்ட உருவவழிபாட்டை எள்ளுவது போன்ற தொகைநூற் பாடல்கள் உள்ளன.

            “தோற்றம் அல்லது நோய்க்கு மருந்தாகா 
            வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி”- (குறுந்.- 263) 
என்னும் தலைவியின் சலிப்பான சொற்கள் தொல்தமிழகத்து மக்கள் போற்றியது   இயற்கைப் பொருட்களின் வழிபாடு என்ற கொள்கையைத்தெளிவுறுத்துகின்றன.

            “கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும் 
            கடவுள் நண்ணிய பாலோர் போல”- (குறுந்.- 203) 
என்ற பாடலடிகள் வருணத்தார் வருகையால் தமிழகத்து இயற்கை வழிபாடு மாற்றம் அடைந்ததென வெளிப்படையாகப் பேசுகின்றன.      


[2] வழிபட்ட இயற்கைப்பொருட்கள்:
தொன்மையான ஆல், கடம்பு, வேம்பு முதலிய மரங்களும்; நிழல் தருமளவிற்கு உயர்ந்த கள்ளி மரமும், நடுகல் வழிபாட்டிற்கு நிழல் தந்த ஓமை மரமும் பொது மக்களால் படையலிட்டு வழிபடப்பட்டன. அம்மரங்களில் தெய்வங்கள் உறைவதாக நம்பினர். மலை உச்சியும், அம்மலைகளில் இருந்த சுனைகளும், காடும், கடல் முதலிய பிற நீர்த் துறைகளும், மணம் பொருந்திய மலர்களும், அரவு,முதலை, ஆளி முதலிய விலங்குகளும், சுறவின் கோடும், பூமியும், நிலவும் தெய்வத் தன்மை பொருந்தியன எனக்     கருதப்பட்டன. 

மரங்கள்:
            “எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய
            கடவுள் முதுமரத்து”- (நற்.- 83) 
என்ற பாடல்; ஊரின் வாயிலில் நீர்த்துறையின் கரையில் இருந்த முதுமரத்தைக்  காட்சிப்படுத்துகிறது. அம்மரத்தைக் ‘கடவுள்மரம்’ என்று தலைவி அழைப்பது நோக்கத்தக்கது. இத்தகு மரங்களைக் ‘குற்றமில்லாத மரம்’ எனும் பொருளில் ‘மாசில் மரம்’ என்றனர். (நற்.- 281)

            கறவைகளின் முதுகைத் தீண்டுமளவு விழுதுகள் தாழ்ந்த ஆலமரத்தைக் “கடவுள்ஆலம்” என்று சுட்டுவது நோக்கத்தக்கது (நற்.-343). இதே தொடர் புறம்- 199ம் பாடலிலும் பயின்று வருகிறது. விழுதுகளே மதில் போன்று அமைந்து பலி இடும் இட்டிகையுடன் அமைந்த ஆலமரத்தை அகம்- 287 விரித்து வருணிக்கிறது.

            ஏறு தழுவல் நிகழ்ச்சியின் போது காளைகள் வீரர்களின் குடலைக் குத்தி எடுத்து ஓடிய காட்சிக்கு உவமை கூறும் முல்லைக்கலிப்பாடல்,
            “ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட 
            மாலை போல் தூங்கும்”- (பா- 106) 
என; ஆலமரத்திலும், கடம்ப மரத்திலும் மக்கள் சுற்றிக் கட்டியிருந்த மாலையைக் காட்சிப்  படுத்துகிறது. அம்மரங்களை மக்கள் மாலையிட்டு வழிபட்டமை பெறப்படுகிறது.

            குறிஞ்சிப்பாட்டில் யானைக்கு அஞ்சித் தலைவனைச் சூழ்ந்து தம் கைகளைக் கோத்த தலைவியும் தோழியும் பற்றிப் புனையும் கபிலர்,
            “திணிநிலைக் கடம்பின் திரளரை வளைஇய 
            துணையறை மாலையிற் கைபிணி” - (குறிஞ்சிப்பாட்டு- அடி.- 176-177) 
விடாதவர்களாக அவர்களைப் பற்றி வருணிக்கிறார். இங்கே இரண்டு மாலைகளைச் சேர்த்து இட்ட பருத்த அடிமரம் பற்றிய ‘திரளரை’ என்ற தொடர் அம்மரம் முதிய மரம் என்னும் பொருளைக் குறிப்பாகத் தருகிறது.

            முதிய வேப்பமரத்தில் தெய்வம் பொருந்தி இருப்பதாக நம்பியமை;
            “தெய்வம் சேர்ந்த பராரை வேம்பு“- (அகம்.- 309) என்ற பாடலடி மூலம் புலனாகிறது. பருத்த அரை என்பதால் முதுமரம் என்பது தெளிவு.   

            கள்ளிமர நிழலில் தெய்வ வழிபாடு நிகழ்ந்தமையை; 
            “கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”- (புறம்.- 260) எனும் தொடர் குறிக்கிறது. நிழல் தருமளவு உயர்ந்த கள்ளி முதுமரமே எனலாம்.

            வீரமரணம் அடைந்தவனின் நடுகல் ஓமைமர நிழலில் இருந்தமையால்;  
            “சூர்முதல் இருந்த ஓமையம் புறவு”- (அகம்.- 297) தெய்வத்தன்மை பெற்றது.

மலை உச்சி, காடு, நீர்த்துறைகள்:
            மலையுச்சியைக் கடவுள் உறையும் இடம் எனக் கொண்ட  தொல்தமிழகக்  கொள்கையை;
            “அணங்குடை நெடுங்கோட்டு”- (நற்.- 288& அகம்- 272),
            “அணங்குடை நெடுவரை உச்சி”- (அகம்- 22),
            “சூர்புகல் அடுக்கத்து”- (அகம்.- 359), 
            “பிறங்குமலை மீமிசைக் கடவுள்”- (குறிஞ்சிப்பாட்டு- அடி.- 208),
            “கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல்”- (புறம்- 158), 
            “கடவுள் ஓங்குவரை”- (நற்.- 165) 
என்று; பலரும் பாடியிருப்பது காட்டுகிறது. 

            காட்டில் தெய்வம் உறைவதாக நம்பி வழிபட்டனர்.
            “காடுறை கடவுள் கடன்கழிப்பிய” (பொருநராற்றுப்படை- அடி- 52) 
என்ற செய்தி உள்ளது. 

            முல்லை நிலத்து ஆயர் ஏறுதழுவும் முன்னர் நீர்த்துறையையும், மரங்களையும் முறைப்படி வழிபட்டனர்.
            “துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் 
            முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ”- (கலித்தொகை.- 101) 
என்ற முல்லைக்கலிப் பாடல் அவர்கள் அடுத்தடுத்துச் செய்த செயல்களை வரிசைப் படுத்துகின்றது.

            மலைச்சுனைகள் இறைத்தன்மை உடையன என்பது;   
            “சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க”- (நற்.- 7),
            “கடவுட் கற்சுனை”- (நற்.- 34), 
            “ஏர்மலர் நிறைசுனை உறையும் சூர்மகள்”- (அகம்- 198) 
எனும் பாடலடிகளால் புலப்படுகிறது. 

            கடற்கரையில் நின்ற பெண்ணைக் கடல்தெய்வம்  என்று புனைந்துரைக்கிறது ஒரு அகப்பாடல்;
            “பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ”- (நற்.- 155) 
என்று நெய்தல் நிலப் பெண்ணைப் பார்த்துத் தலைவன் கேட்கக் காரணம் கடல் ஒரு தெய்வமாகக் கருதப்பட்டமையே எனலாம். 

            கடலின் தெய்வத்தன்மை; 
            “தண்பெரும் பௌவம் அணங்குக”- (குறுந்.- 164),
            “பெருங்கடல் தெய்வநீர் நோக்கி”- (கலி.- 131) 
என்ற பாடல் அடிகளாலும் தெளிவு பெறுகிறது.      

நிலமும், திசைகளும்: 
            காடும் மலையும் பொருந்திக் கடலால் சூழப்பட்ட நிலத்தையும், திசைகளையும் தெய்வம் என்றனர்;
            “வையக மலர்ந்த தொழில்முறை ஒழியாது 
            கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து 
            தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்து”- (பதிற்.- 88)
என்னும் பகுதி; பூமி கடவுள் என்னும் கருத்தைத் தருகிறது. 

            நெடுநல்வாடை கட்டுமானப் பணியைத் தொடங்கும் முன்னர்; 
            “நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் 
            தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
            பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை”- (அடி.- 77-78) 
என வகுத்த போது திசைத் தெய்வங்களை வாழ்த்தியதைக் காட்டுகிறது.

நிலவு:
            பட்டினப்பாலை திங்களைக் கடவுள் என்பதாக; நிலவுக்குரிய வழிபாட்டிடம் 
            “மதிசேர்ந்த மகவெண்மீன்
            உருகெழு திறலுயர் கோட்டத்து”- (அடி- 35-36) 
எனப் பேசுகிறது.

            “தொழுது காண் பிறையின் தோன்றி”- (குறுந்.- 178) என்ற உவமையும் நிலவு வழிபடப் பட்டமையைக் காட்டுகிறது.    

மலர்கள்:
            மணம் பொருந்திய காந்தளும், கடம்பும், அழகிய வேங்கை மலரும் தெய்வத்  தன்மை பொருந்தியனவாகக் கருதப்பட்டன;
            “சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த 
            கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன் 
            இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி”- (அகம்- 152) 
என்று  பாடுங்கால் மணம் காரணமாகக் காந்தளுக்குக் கடவுட்தன்மை இருப்பதாகக் கருதியமை தெளிவு. 

            “புகழ் பூத்த கடம்பமர்ந்து”- (பரி.- 2) என்னும் போது;
            “கார்நறுங் கடம்பு”- (நற்.- 34) என்று 
போற்றப்பட்ட பூவின் மணமும் முருகனும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். 

            அழல் போல் சிவந்த வேங்கைக்கு தெய்வத்தன்மை ஏற்றப்பட்டமை;“எரிமருள் வேங்கை கடவுள் காக்கும்”- (நற்.- 216) என்ற தொடரால் தெரிகிறது.  

விலங்குகளும் அவற்றின் உறுப்புகளும்:
            அரவும் முதலையும் தெய்வத்தன்மை உடையனவாகக் கருதப்பட்டமை;
            “அணங்குடை அரவின்”- (நற்.- 168) என்ற தொடராலும்,
            “நாகத்து அணங்குடை அருந்தலை”- (நற்.- 37) என்பதாலும், 
            “சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய”- (அகம்- 72) என்ற 
அடியாலும் வெளிப்படுகிறது. சுறாவின் கொம்பு வழிபாட்டிற்குரிய பொருளானது.

            தாம் வேட்டையாடிய சுறா கருவுற்றிருப்பின் அதன் கொம்பைத்  தெய்வ வழிபாட்டிற்கு உரியதாக்கினர் பரதவர். பின்வரும்;   
            “சினைச் சுறாவின் கோடு நட்டு 
            மனைச் சேர்த்திய வல்லணங்கின்”- (பட்டினப்பாலை.- அடி.- 86-87) 
எனும் பாடலடிகளால் அத்தெய்வம் துடியான தெய்வமாகக் கருதப்பட்டமை தெளிவாகிறது. இன்று எத்தன்மைத்து என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாத ஆளி என்னும் விலங்கு தெய்வத்தன்மை பொருந்தியதாகக் கருதப்பட்டது.

            “ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்”- (அகம்.- 381)  யானைக் கூட்டத்தின் தலைமை சான்ற களிறு வீழும்படியாகத் தாக்கி அதன் கோட்டைப் பறித்து உண்டது      

காக்கை:
            மக்கள் தம் இல்லங்களில் காக்கைக்குப் பலிச்சோறு படைத்தனர்.
            “பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 
            கொக்குகிர் நிமிரல்”- (நற்.- 258) மாந்திய காக்கை காண்க.

            திருக்குறள் மழையைத் தெய்வமாகப் போற்றுவதை அந்நூற் பாயிரத்தில் காண்கிறோம் (வான் சிறப்பு). நீர்ஆதாரங்களைத் தெய்வமாகக் கருதிய வழக்காறு நீதிஇலக்கிய காலத்தில் மழைப்பராவலாகத் தொடர்ந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் ஞாயிறு, நிலவு, மழை, காவிரிஆறு முதலிய இயற்கைப் பொருட்கள் போற்றப் படுகின்றன. (மங்கலவாழ்த்துப்பாடல்& கானல் வரி) நிலவைத் தெய்வமாக வழிபட்டமை சிலப்பதிகாரத்திலும் பேசப் படுகிறது. (கனாத்திறம் உரைத்தகாதை- அடி- 13) இன்றும் பல கோயில்களில் சந்திரனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. முழுநிலவு நாளுக்கென்று சிறப்பு வழிபாடும் நடைமுறையில் உள்ளது. பாம்பு வழிபாடு இன்றுவரை தொடர்வதும்; அதற்கெனத் தனிச் சந்நிதிகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கன. தாய்த்தெய்வ வழிபாட்டில் வேம்பு இன்றும் தனிச்சிறப்பு பெறுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் முதலை தெய்வமாக இருந்தது. இதை அகழ்வாய்வு முடிபுகளின் துணை கொண்டு ஆய்வாளர் நிறுவியுள்ளனர். (Dr. Naga Ganesan- Gharial god and Tiger goddess in the Indus valley: Some aspects of Bronze Age Indian Religion-Museumof FineArts, Houston, TX,2007) https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007 


[3] வழிபாட்டின் காரணம் அச்சம்: 
            நிலவு, நிலம், திசை தவிர்ந்த பிற வழிபாடுகள் அச்சத்தால் உருவாயின.

            வறட்சி மிகுந்த காட்டு வழியில் ஆறலைப்போரின் கணைகளால் உயிரை விட்டவர்களின் புண்ணிலிருந்து வழியும் குருதியைக் குடித்த காக்கைகள் ஒற்றர் போலத் தம் குரல் ஒடுங்கிப் பயிலும் மலைக்காட்டு வருணனை காக்கை வழிபாட்டின் அடிப்படை அச்சம் என்று நிறுவுகிறது. (அகம்.- 313)

            பூமியைப் பிளந்து சென்ற மாலை போன்ற விழுதுகள் வேராகும் ஆலமரப் பொந்தில் கூகை குளறுவதை வருணிக்குங்கால் ஆலமர வழிபாடு அப்பறவை காரணமாகவே அச்சத்திற்கு உரித்தாகிறது (புறம்.- 364).
பெரிய ஒலியும், பிதுங்கிய கண்களும், சுடுகாட்டில் பிணத்தின் தசையை உண்ணும் செயலும்; பேய் உலவும் இரவுப் பொழுதில் இரை தேடி அலைவதும் கூகை பற்றிய அச்சத்தைக் கூட்டும்.   (பதிற்.- 44, குறுந்.- 393, நற்.- 218, அகம்.- 19, 122& நற்.- 319).   
தான் வாழும் மரப்பொந்தில் இருந்து கொண்டு; போழ்ந்தாற் போலும் வாயலகை உடைய பேராந்தை ‘சுட்டுக் குவி’ எனச் செத்தோரை அழைப்பது போலக் கூவுகின்ற புறங்காட்டு வருணனை கூகை தங்கும் மரத்தின் வழிபாட்டிற்கு  அச்சத்தை அடிப்படை ஆக்குகிறது (புறம்.- 240& 261). 

            வேப்ப மரத்தில் தங்கிய கூகை அம்மரத்தை அச்சத்திற்குள்ளாக்கிற்று.  (நற்.- 218).

            ஆண்யானை தாக்கியும் சிதையாத வைரம் பாய்ந்த  ஓமைமரத்தில் தங்கியிருந்த பருந்தால் அச்சம் தோன்றியமை (அகம்.- 397) காண்கிறோம். அதுபோல் வௌவால் தங்கிய முதுமரங்கள் விதந்து பேசப்பட்டுள்ளன (குறுந்.- 352, அகம்.- 244).   

            மலையுச்சியிலிருந்த குகைகள் அச்சத்திற்குக் காரணமாயின. (அகம்.- 272) “அணங்குடை நெடுங்கோட்டு அஞ்சுவரு விடர்முகை” காண்க.  படமெடுத்து அச்சுறுத்தும் என்ற பொருளில் அரவின்; “அணங்குடை அருந்தலை பைவிரிப்பவை”- (அகம்.- 108) என்னும் போது பாம்புவழிபாடும் அச்சத்தையே அடிப்படையாகக் கொண்டது.

            கடல்வேட்டைக்கு இடையூறாகச் சுறாக்கள் வலைகளைக் கிழித்தமையும், பரதவர் உயிரை அழித்தமையும் பற்றிக் கூறும் பாடல்கள் பல. (குறுந்.- 318, நற்.- 78, 207, 215, அகம்- 190, 300, 340, 350& கலி.- 123) தாம் அழித்த சுறாக்கள்  கருவுற்று  இருப்பின்; அக்கருவைக் கொன்றமைக்கு அஞ்சி; அவற்றின் கொம்பைத் தெய்வமாக வழிபட்டுள்ளனர். 


[4] வழிபாட்டின் அடிப்படையாகும் நம்பிக்கை:
காக்கை வழிபாடு:   
            மரவழிபாட்டில் படைத்த பலிப்பொருட்களைக் காக்கைகள் உண்டன. காக்கை கரைவது நல்ல நிமித்தமாகக் கருதப்பட்டதால் மக்கள் தம் இல்லத்திலும் காக்கைக்குப் பலிச்சோறு இட்டனர். இதனால் காக்கைக்கும் தெய்வத்தன்மை இசைவதாயிற்று. வீரமரணம் அடைந்தவர்க்கு வழிபாடு நிகழ்த்துங்கால் அவர்களது ஆவி காக்கை உருவில் வந்து பலியை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருந்தது.  

            காக்கை தன் கூட்டத்தை அழைத்துக் குஞ்சுடன் சேர்ந்து மரவழிபாட்டின் 
            “கருனைச்செந்நெல் வெண்சோறு
            சூருடைப் பலியோடு” கவர்ந்தது (நற்.- 367, 343& 281).
பெண்கள் இல்லங்களில் காக்கைக்குப் பலியிட்டதை 1.1.7ல் கண்டோம்.  

            உடன்போக்கில் பிரிந்து சென்ற தன் மகள் மீண்டுவர வேண்டுமென்ற விருப்புடன் காத்திருந்த தாய்; காக்கை கரைந்தவுடன் நல்ல நிமித்தமாகக் கருதி அதற்குப் பலியிட;
            “பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி 
            முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
            எழுகலத்து ஏந்தினும் சிறிது” என்று கருதுகிறாள். (பா- 210)  

            வீரமரணம் அடைந்தோர்க்குக் குருதி கலந்த சோறு படைத்து வழிபாடு நிகழ்த்த; கருங்காக்கை அதை உண்டது (பொருநராற்றுப்படை- அடி- 184). சேரன்   பல்யானைச் செல்கெழு குட்டுவனின் போர்முரசுக்கு விசும்பு அதிரும்படியாகச் செய்த வழிபாட்டைப் பற்றி விரிவான விளக்கம் பதிற்றுப்பத்தில் உள்ளது (பா- 30). அச்சம் தரக்கூடிய மரபின்படி படைத்த குருதி அளைந்த பலியைப் பேய்மகளும் தொட அஞ்சி நடுங்க; எறும்பும் மூசாத அப்பிண்டத்தைக் காக்கையும், பருந்தும் அருந்துவது கண்டு அனைவரும் மகிழ்ந்தனராம்.

            தென்னிந்தியாவில் சாதிப்பிரிவினை பற்றிய பழைய ஆதாரங்களைக்  கட்டுரைக்கும்; முனைவர் ஜார்ஜ் ஹார்ட் மேற்சுட்டிய வழிபாடு பற்றிப் பேசுங்கால் அதில் இருக்கும் இயற்கைப்  பொருளின் பங்கிற்கு உரிய இடம் அளிக்கவில்லை. (Early Evidences Of Caste In South India- 1987-  http://www.tamilnation.co/caste/hart.pdf) எனவே சமயம் பற்றிய அவர் கருத்து மீள்பார்வைக்கு உரியது.   

            மரத்திற்குப் படைப்பது; அம்மரப்பொந்திலிருக்கும் கூகை உண்பதற்கு உரியதாயிற்று. கூகை குளறுவது தீயநிமித்தமாகக் கருதப்பட்டது. இரவுக்குறியில் தன்னைக் காணத் தலைவன் வருங்கால் கூகை குளறின் அது தீநிமித்தமாகும் என்பதால்; தன் ஊர் முதுமரத்தில் வாழ்ந்த கூகையிடம் அது குளறாமல் இருக்கக் கெஞ்சும் தலைவி;
            “மையூன் தெரிந்த நெய்வேண் புழுக்கல்
            எலிவால் சூட்டொடு மலியப் பேணுதும்” (நற்.- 83) என்கிறாள்.      
வெள்ளைவாரணர் மேற்சுட்டிய நற்றிணைப் பாடல் தலைவி கூகைக்குப் பலிச்சோறு படைப்பது பற்றிப் பேசுவதாகக் கூறுகிறார். ஆனால் அவரது கருத்தை ஏற்கச் சான்று ஏதும் இல்லை. அவரது கருத்துக்கான ஆதாரம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது    

            ‘ஆண்டலைக்கொடி’ என்னும் திருமுருகாற்றுப்படைத் தொடருக்கு நச்சினார்க்கினியர் மனிதத்தலையும் பறவை உடம்பும் கொண்ட வடிவம் என விளக்கம் அளிக்கிறார். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை கோழிச்சேவலே முருகவழிபாட்டுடன் தொடர்புடையது. அவர் சுட்டும் உருவம் கொண்ட புடைப்புச் சிற்பங்களை மாமல்லபுரத்தில் காண இயல்கிறது. மாமல்லபுரத்துச் சிற்பங்களின் காலமும்(கி.பி.6ம் நூடு.); அதை வெட்டிய பல்லவரின் நாகரிகமும் கருத்தில் கொள்ள வேண்டியவை. தம்மைப் பரத்துவாஜ கோத்திரத்தினர் என்று சொல்லிக் கொண்ட பல்லவர் வடநாட்டில் இசைக்கலைஞர்களை உயிர்ப்பலியாக்கிய   ஆரிய நாகரிகத்தில் கால்கொண்டு; தமிழகம் பெயர்ந்தவராவர். அவ்வாறு   கொல்லப்பட்ட கின்னரர் என்னும் இசைஞரே மனிதத்தலையும் ஆந்தை உடலும் கொண்ட தேவர் என்பர். தொல்தமிழகத்தில் பாணரோ, பொருநரோ, துடியரோ உயிர்ப்பலி கொடுக்கப்பட்டமைக்கு ஆதாரம் ஏதும் இல்லை. மாறாக வேந்தரின் வெற்றிக்கு வழிவகுக்கும் வழிபாட்டைச் செய்யும் தகுதி படைத்தவராக இருந்து உள்ளனர். (முனைவர் ஜார்ஜ் ஹார்ட்- மேற்.) நச்சினார்க்கினியரின்  உரையை ஒட்டியே நற்றிணைப் பாடலுக்கு வெள்ளைவாரணர் பொருள் கூறி  உள்ளார்.  

             வடநாட்டுத்  தாந்திரீக முறையிலிருந்து தொல்தமிழர் வழிபாடு  மாறுபட்டது. இன்றும் தீபத்திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளியன்று; அதாவது அமாவாசை இரவில் மாயசக்தி படைத்ததென்ற நம்பிக்கையில் கூகைகளைப் பலிகொடுத்து வேண்டிக்கொள்ளும் வழக்கம் வடக்கில் உள்ளது. அங்கு கூகை சாமுண்டா என்னும் தாய்த் தெய்வத்தின் வாகனமாகும். ‘மா லோகி’ என்று அழைக்கப்படும் இலக்குமியின் வழிபாட்டில் கூகை உள்ளது.   
(The Logical Indian- Sromana Bhattacharya- Diwali Ritual Of Sacrifice Puts Lives Of Indian Owlls At Risk -  https://thelogicalindian.com/exclusive/indian-owls-sacrificed/,
Traffic- India’s Festival Of Lights Darkens The Future Of Owls - 7.11.2012-  https://www.traffic.org/news/indias-festival-of-lights-darkens-the-future-for-owls/,
Global post- Jason Overdorf- India’s Secret Shame; Owl Sacrifice mars Hiduism’s Biggest Holiday- Global Post- 10.11.2012 -    https://www.pri.org/stories/2012-11-10/indias-secret-shame-owl-sacrifice-mars-hinduisms-biggest-holiday) 

            தொல்தமிழகத்தில் மேற்சுட்டிய நம்பிக்கையும் பலியும் பயின்றமைக்கு ஆதாரம் ஏதும்  இல்லை. தொல்தமிழர் பறவைகளை நேசித்த பாங்கிற்கு அதிகன் என்னும் எயினன் முன்மாதிரி ஆகிறான் (அகம்.- 208& 142). மிஞிலியுடன் போரிட்டு மாண்ட போது அவன் மேல் வெயில் படாதபடி அவன் போற்றி ஆதரித்த பறவைகள் அனைத்தும் வானில் பறந்து நிழல் செய்தன. அத்துடன் பகலில் கண் தெரியாத கூகை; எல்லாப் பறவைகளையும் போல் அவனுக்கு நிழல் தரவில்லையே என்று நாணம் கொண்டது என்று மீண்டும் பாடியிருப்பவர்; வரலாற்றைப் பதிவு செய்வதில் பேர்பெற்ற பரணர் ஆவார் (அகம்.-148). தேவை இல்லாத கற்பனை சிறிதும் இடம் பெறாத சங்க இலக்கியத்தில் இப்படி ஒரு பாடல் இருப்பது; தொல்தமிழர் பிற பறவைகளைப்போல் கூகையையும் நேசித்த தன்மையையே காட்டுகிறது. நற்றிணைத் தலைவியும் அவ்வாறே நேசிக்கிறாள். எனவே வடவர் மாயசக்தி இருப்பதாகக் கருதிச் செய்யும் கூகைப்பலியும்; தாந்திரிக வழிபாடும் தமிழகத்தில் இல்லை என்பது துணிபு. மரத்திற்கு இடும் பலியே கூகைக்கு ஆனது.         

            கடம்ப மரத்தில் முருகன் உறைவதாக நம்பினர். முருக வழிபாட்டிற்கான  கொடியும், பலியிடுவதற்குரிய விடையும் கடம்ப மரத்திலேயே கட்டபட்டன.
            “கடம்பமர் நெடுவேள்”- (பெரும்பாணாற்றுப்படை-அடி-75), 
            “கடம்பமர் செல்வன்”- (பரி.- 8- அடி- 126), 
            “கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம்”- (பரி.- 19- அடி- 104), 
            “ கடம்பின் சீர்மிகு நெடுவேள்”- (மதுரைக்காஞ்சி- அடி.- 613-614), 
            “அணங்குடைக் கடம்பு”- (பதிற்.- 88) 
என்னும் தொடர்களும்; 

            “கடம்பு கொடியாத்து”- (அகம்.- 382),      
            “விடைஅரை அசைத்த வேலன் கடிமரம்”- (பரி.- 17- அடி- 3) 
என்னும் பாடலடிகளும்  மேற்சுட்டிய கருத்தை நிலைநாட்டுகின்றன.


[5] வழிபாட்டில் இடம் பெற்ற பிற பொருட்கள்:
            வேப்பந்தளிர், பனைமடல் குருத்து போன்றவை வழிபாட்டில் பெரிதும் இடம் பெற்றன. வேலன் வெறியாடிய போது;  
            “.....வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமோடு சூடி…... 
            தோடும் தொடலையும் கைக்கொண்டு”- (அகம்.- 138) 
என்று காட்சி அளிக்கிறான். மணம் பொருந்திய கடம்பமலர்கள் தெய்வ வழிபாட்டிற்கு உரியன  எனவும், காடு முழுதும் மணம் வீசியதெனவும் பாடியுள்ளனர் (அகம்- 99).  தென் கன்னடத்துக் கோயில்களில் இன்றும் பக்தர்களுக்குப் பனம்பூவே  பெரிதும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 


முடிவுரை:
            தொன்மையான ஆல், கடம்பு, வேப்ப மரங்கள், நிழல் தருமளவிற்கு உயர்ந்த கள்ளி மரம், நடுகல் அமைந்த நிழலுக்குரிய ஓமை மரம்  முதலியன பொது மக்களால் படையல்  இட்டு வழிபடப்பட்டன. மலையுச்சி, மலைகளில் இருந்த சுனைகள், காடு, கடல் முதலிய பிற நீர்த் துறைகள், மணமும் அழகும் பொருந்திய மலர்கள், அரவு, முதலை, ஆளி முதலிய விலங்குகள், சினைச் சுறவின் கோடு, பூமி, நிலவு முதலியன தெய்வத்தன்மை பொருந்தியனவாகக் கருதப்பட்டன. நிலவு, நிலம், திசை தவிர்ந்த பிற வழிபாடுகள் அச்சத்தின் அடிப்படையில் அமைந்தன. மரவழிபாட்டில் படைத்த பலிப்பொருட்களைக் காக்கைகளும் கூகைகளும் உண்டன. காக்கை கரைவது நல்ல நிமித்தமாகக் கருதப்பட்டதால் மக்கள் தம் இல்லத்திலும் காக்கைக்குப் பலிச்சோறு இட்டனர். வீரமரணம் அடைந்தவர்க்கு வழிபாடு நிகழ்த்துங்கால் அவர்களது ஆவி காக்கை உருவில் வந்து பலியை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருந்தது. கூகை குளறுவது தீய நிமித்தமாகக் கருதப்பட்டது. கூகைப்பலியும்; கூகைக்கு வழிபாடும் தமிழகத்தில் இல்லை. கடம்ப மரத்தில் முருகன் உறைவதாக நம்பினர். வேப்பந்தளிர், பனைமடல் குருத்து போன்றவை வழிபாட்டில் பெரிதும் இடம் பெற்றன.         
துணை நூற் பட்டியல்:
எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்  
Arbar Ahmed- A Traffic India Report- 2010
George L. Hart- Early Evidences Of Caste In South India- 1987
(Dr. Naga Ganesan- Gharial god and Tiger goddess in the Indus valley: Some aspects of Bronze Age Indian Religion-Museumof FineArts, Houston, TX,2007)
(The Logical Indian- Sromana Bhattacharya- Diwali Ritual Of Sacrifice Puts Lives Of Indian Owlls At Risk
Traffic- India’s Festival Of Lights Darkens The Future Of Owls- 7.11.2012
Global post- Jason Overdorf- India’s Secret Shame; Owl Sacrifice mars Hiduism’s Biggest Holiday- Global Post- 10.11.2012)

சுருக்கக் குறியீட்டு விளக்கம்:
நற்.-   நற்றிணை
பரி.-    பரிபாடல் 
பதிற்.- பதிற்றுப்பத்து
குறுந்.- குறுந்தொகை


குறிப்பு: 
11.10.’19 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும்; சென்னை குரு நாணக் கல்லூரியும் இணைந்து ‘ஆசியப் பண்பாட்டிற்குத் தமிழ்ச் சமய இலக்கியங்களின் பங்களிப்பு’ என்ற பொருண்மையில் நடத்திய கருத்தரங்கில் வாசித்து அளிக்கப்பட்டது. 12.10.’19 அன்று வெளியிடப்பட்ட கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது.

தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஒய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி

No comments:

Post a Comment