Tuesday, October 15, 2019

இந்திய வரலாற்றை மாற்றும் கீழடி

 முனைவர் எஸ்.சாந்தினிபீ 


            அண்மைக் காலத்தில் தமிழார்வம் கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிகழ்வு கீழடியின் அகழ்வாய்வுகள். இந்த கீழடி மதுரை நெடுஞ்சாலை வழியே கிழக்கு தென்கிழக்கு திசையில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஐந்து கட்ட ஆய்வுகள் முடிந்து ஆறாவதிற்காகக் காத்திருக்கும் இந்த மண்மேடு கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவிற்குப் பரவியுள்ளது. பல மதிப்புமிக்க வரலாற்றுப் புதையலை தன் மடியில் சுமந்துள்ள இத்தாய்மண் தன் மீது தென்னையைத் தாங்கியுள்ளதால் நவீன கான்க்ரீட் பயிரிலிருந்து தப்பி விட்டாள் போலும்.

            கீழடியில் 2014 முதல் தொடர்ந்து அகழ்வாய்வு செய்யப்படுகிறது. 2014 முதல் 2017 வரையிலுமான முதல் மூன்று கட்ட ஆய்வுகளை மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவு நடத்தியது. நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை(2017-2019) தமிழக அரசு தொல்லியல் துறை நடத்தியது. அத்தோடு தேவையான பரிசோதனைகளையும் நடத்தி அதன் முடிவுகளான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. இத்தாய்மடி நமக்கு வெளிப்படுத்திய வரலாற்று உண்மைகள் ஒன்றல்ல பல.

            நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையில், கீழடியின் பண்பாட்டுக் காலத்தை மூன்று காலகட்டமாகப் பிரித்துள்ளனர். முதல் பண்பாட்டுக்காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை என்று அறிவியல் பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது. இதுதான் ஆய்வுப்பள்ளத்தின் அடியில் உள்ள பகுதி.

            கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டு வரையிலானது இரண்டாம் பண்பாட்டுக் காலமாகும். இது இடையில் அமைந்திருப்பது.  மூன்றாவது கால கட்டம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருப்பது. இந்த அடுக்குதான் மேலே காணப்படும் முதலடுக்கு. இதன் மேற்புறம்தான் தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளது.

            கி.மூ. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான 1800 ஆண்டுகள் மனிதர்கள் இந்நிலத்தில் தொடர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். (ஆனால்  புதிய கற்கால ஆயுதமும் கிடைத்திருப்பதால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஆண்டுகளாக இங்கே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்ற உண்மையும் வெளிப்படுகிறது. (நடுவன் அரசு தொல்லியல் துறை ஆய்வில் கிடைத்தது. அதன் அதிகாரப் பூர்வமான அறிக்கை இன்னமும் வெளிவராததால் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை) இதற்குப் பின்தான் ஏதோ காரணங்களால் மனிதன் இங்கே வாழவில்லை. காரணம் இனிமேல் தான் வெளிக்கொணர வேண்டும். இவ்வேளையில் சோழர் காலத்திய ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது.

            முதலாம் குலோத்துங்கச் சோழன்(கி.பி.1070-1120) காலத்திய பல கல்வெட்டுகள் சிரீரங்கப்பட்டனம், இரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான காவிரிக்கரையில் அமைந்திருந்த பெரும் நிலப்பரப்பு வெள்ள பாதிப்பினால் பயிர் செய்யப்படாமல் கடந்த 100 ஆண்டுகளாகப் பாழாய் கிடப்பதாய் குறிப்பிடுகின்றன. இதைக் குறித்தெல்லாம் கவனத்துடன் ஆய்வு மேற்கொண்டால், நமது வரலாற்றின் பல திருப்பங்கள் வெளிச்சத்திற்கு வரலாம்.

            முதல் பண்பாட்டுக் காலத்தில் கிடைத்த பானை ஓடுகள், கட்டுமான மிச்சங்கள் இந்திய வரலாற்றை சில திருத்தங்களுடன் மீண்டும் எழுத வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

            அறிவியல் பரிசோதனைகள் மூலம் இப்பண்பாட்டின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்ற உண்மையே இம் மாற்றத்திற்கானக் காரணம்.இங்குக் கிடைத்த செங்கல் போன்ற கட்டுமான பொருட்கள் இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட சங்ககாலப் பொருட்களை முற்றிலும் ஒத்து உள்ளன. எனவே இங்கு கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களும் சங்ககால நாகரீகத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதுவரை சங்ககாலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது என நம் வரலாற்றில் எழுதப்பட்டதை மாற்றி எழுத வேண்டும். கீழடி கண்டுபிடிப்பின் விளைவாகச் சங்ககாலம் 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிலவியது என்ற உண்மை நிரூபணமாகிவிட்டது.

            வட இந்தியாவில் புத்தர், மகாவீரர் வாழ்ந்ததும்  கங்கைக்கரை பகுதிகளில் இவர்களைப் போன்று நூற்றுக்கணக்கான வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட ஞானிகள் வாழ்ந்ததும் இதே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுதான். பவுத்தமும் சமணமும் தோன்ற இக்காலத்தில் இங்கு வாணிபத்தால் உண்டான பொருளாதார வளமையும், நகரமயமாதலும் மிக முக்கிய காரணிகளாகும். இவை இரண்டிற்கும் அடிப்படை காரணம் இரும்பின் பயன்பாடாகும். இரும்பால் செய்யப்பட்ட விவசாயக் கருவிகள் வேளாண்மையில் உபரி விளைச்சலை உண்டாக்க அவை வாணிபத்தைப் பெருக்க, பொருளாதார வளமை ஏற்பட்டு, இதுவே நகரமயமாதலுக்கு வித்திட்டது. இந்த கோட்பாடு பரவலாக உலகின் எல்லா வரலாற்றாளர் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டது.

            சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் துவங்கியது என்ற கோட்பாடு நம் தமிழர்களின் வாணிகம், பொருளாதார வளமை இதைச் சார்ந்த நகரமயமாக்கல் உள்ளடக்கிய இந்த வளர்ச்சி கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என நேற்று வரையில் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழடியின் கண்டுபிடிப்பில், வட இந்திய நகரமயமாக்கலும் தமிழரின் நகரமயமாக்கலும் சமகாலத்தியதே எனத் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே தான் நமது இந்திய வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டிய தேவை கீழடி கண்டுபிடிப்புகளால் ஏற்பட்டுள்ளது.

            கீழடியில் தமிழி (அல்லது  தமிழ் பிராமி) எழுத்துக்களைக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழக அரசு தொல்லியல் துறை நடத்திய நான்காம் கட்ட ஆய்வில் மட்டும் 56 பானை ஓடுகள் தமிழி எழுத்துக்களுடன் கிடைத்த தகவல் அதன் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிசய தகவல் அல்ல, நம் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன. ஆனால் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பானை ஓட்டில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.

            இந்திய வரலாற்றில் இங்குதான் மாற்றம் தேவைப்படுகிறது. இதுநாள் வரையிலும் கி.மு.  3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மவுரிய மன்னர் அசோகர் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்களே முதன்மையானவை, பழமையானவை என்றும் இது பிராமி எழுத்துக்கள் என்றும் வரலாற்றில் வழங்கப்பட்டு வருகிறது. சங்ககாலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டதால், சங்ககாலத்து எழுத்துக்களும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என முடிவு செய்யப்பட்டுள்ளது. காலத்தால் அசோகர் பிராமி ஒரு நூற்றாண்டு காலம் முற்பட்டது என்பதால், அசோகர் பிராமியிலிருந்தே தமிழ் பிராமி தோன்றியது என்ற கருத்தும் வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

            ஆனால் இன்று கீழடியில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில்  தமிழ் பிராமியில் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்திருப்பதால், இதுவே காலத்தால் அசோகர் பிராமியைக் காட்டிலும் 200 ஆண்டுகள் மூத்த மொழியாகிவிட்டது. எனவே இந்தியாவின் மூத்தமொழி தமிழ் என்றும் தமிழி எழுத்துக்களிலிருந்தே அசோகர் பிராமி உருவானது என்றும் இந்திய வரலாற்றில் மாற்றி எழுத வேண்டிய நிலையை கீழடி ஏற்படுத்தியுள்ளது.

            பானை ஓட்டில் உள்ள எழுத்துக்கள் பானையின் உருவாக்கத்திற்குப் பின் பொதுமக்களால் எழுதப்பட்டுள்ளது. பொதுமக்களின் இடையில் பரவலான கல்வியறிவு அக்காலத்தில் பரவியிருந்தமைக்கான சான்றாகும். வட இந்தியப் பானை ஓடுகளில் இப்படி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டது இதுவரை கிடைக்கவில்லை.மன்னர்களின் சாசனங்கள் மட்டுமே கிடைக்கின்றன. சனாதன தர்மமும் கல்வி அறிவை எல்லோருக்கும் பரவலாக்காமல் அது சிலருக்கான சலுகையாகச் சொல்லுவதையும் இங்கே நினைவு கூறுவது அவசியம். சங்ககாலத் தமிழர் சமுதாயத்தில் சனாதன தர்மம் பின்பற்றப் படவில்லை என்பதற்கும் இந்த பானை ஓடுகள் காட்சியளிப்பதாகக் கொள்ளுதல் தவறாகாது.

            உலக வரலாற்றிலே 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில்மயமாக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் பல முன்னேற்றங்களை அச் சமுதாயம் சந்தித்தது. ஆடம்ஸ்மித் எனும் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் கி.பி 1776 இல் ’வெல்த் ஆப் நேசன்’ எனும் புத்தகத்தை எழுதினார். அதில் பொதுமக்களுக்கான கல்வியின் தேவையை வலியுறுத்தியிருந்தார். அதனால் பொதுமக்களுக்குக் கல்வித் தேவை எனும் கருத்தைச் சொன்ன முதல் மனிதர் என உலக அரங்கில் போற்றப்படுகிறார். ’தொழில்துறை  முதலாளித்துவத்தின் வெளிப்பாடே  பொதுமக்களுக்கான கல்வி’ என்றார். இவரின் கருதுகோளை நிரூபணம் செய்வதாகவே கீழடியிலும், தொழிற்கூடங்களும் பரவலான கல்வியறிவும் காணப்படுகிறது.

            கல்வி நவீனத்தின் திறவுகோல், கல்வியே ஒரு சமுதாயத்தில் முன்னேற்றம், அறிவின் தெளிவு போன்ற பல அற்புதங்களை உண்டாக்கும் சக்தி கொண்டது என்ற பல்வேறு கருத்துக்கள் உலக அரங்கில் 18 ஆம் நூற்றாண்டு முதல் பேசப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் பரவலான கல்வியறிவு பெற்ற சங்ககால சமுதாய முன்னேற்றத்தின் அளவு கோலாக விளங்குவதே நம் சங்க இலக்கியங்கள். அந்த சமூகத்தில் வாழ்ந்தவர்களால் தான் பிறப்பால் அனைவரும் சமம், அவரவர் செயலாலே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என வேறுபடுகின்றனர், யாது ஊரே யாவரும் உறவினர் என்பதையும் தாண்டி ’நமக்கான தீதும் நன்றும் பிறன் தர வாரா’ போன்ற உயர்ந்த கருத்துக்களைச் சொல்ல முடிந்தது.

            கீழடி வாழ் சமூகத்தின் பொருளாதார உயர் நிலையைச் சொல்வதாகவே அங்கு கிடைத்த, அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் மிச்சங்கள் காட்சியளிக்கின்றன.முதலில் அலங்கார அணிகலங்களில் கவனம் செலுத்துவோம். தங்கத்தாலான தொங்கட்டான், சட்டைப் பொத்தான், ஊசி, மணி உள்ளிட்ட ஏழு பொருட்கள் கிடைத்துள்ளன. சங்கு , யானைத்தந்த வளையல்கள் போன்றவை அணிகலன்களில் அடங்கும். இவற்றைப் பெண்கள் மட்டுமே அணிந்ததாக நாம் எண்ணக்கூடாது. ஆண், பெண் இருபாலரும் அணிந்திருக்கலாம். முற்றிய விதை மணிகளைப் பறவைகள் கொத்திச் செல்லாது காவல் காத்து வந்த சங்கப் பெண் ஒருத்தி தன் தங்க காதணியைக் கழற்றி வீசி பறவையை ஓட்டினாள் எனும் சங்கப் பாடல் நினைவில் வருகிறது. தங்க நகைகளை குறைந்தது 2600 ஆண்டுகளாக அணிந்துவரும் சமூகம் நம்முடையது. இது ’திரைகடலோடியும் திரவியம் தேடு’, ’பொருளில்லாதோர்க்கு இவ்வுலகில்லை’ போன்ற முதுமொழிகள் நம் முன்னோரின் அனுபவ வார்த்தைகளே தவிர, வெற்றுச் சொற்கள் அல்ல என்று நிரூபிக்கின்றது கீழடியின் அணிகலன்கள். இதுவரை இந்தியாவின் எந்த அகழ்வாய்விலும் கி.மு. 600 க்கான தங்க நகைகள் கிடைத்ததில்லை என்பதும் வரலாறே. இதுவும் வரலாற்றில் புதிதாகப் பதிக்கப்பட வேண்டிய உண்மையே.

            தமிழகத்தில் கீழடியில் அகழ்வாய்வு நடத்தியதைக் காட்டிலும் அதில் கிடைத்த பொருட்களை உடனடியாக அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் அறிக்கையும் உடனடியாக வெளியிட்டதே மிகமிக முக்கியமான பாராட்டுக்குரியச் செயலாகும். 

            இந்த ஒரு செயல் வரலாற்றில் பல மாற்றங்களைச் செய்ய வைக்கிறது. சங்ககாலத்தின் துவக்கம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு, தென்  மற்றும் வட இந்திய நகரமயமாக்கல் சமகாலத்தியவை, தமிழே இந்தியாவின் மூத்த மொழி, தமிழிலிருந்தே அசோகர் பிராமி உருப்பெற்றது, கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமுதாயத்தில் பொதுமக்கள் பரவலாகக் கல்வியறிவு பெற்றிருந்தனர், இதுபோல், பல முக்கியமான உண்மைகள் கீழடியில் வெளியானதை வைத்து இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியம் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.





தொடர்பு:
முனைவர் எஸ்.சாந்தினிபீ (chandnibi@gmail.com)
வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்
உபி  அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்




No comments:

Post a Comment