Monday, October 21, 2019

திருக்குறளின் முன்னோடி நூல் எது?

 ——  திருத்தம் பொன்.சரவணன்



முன்னுரை:
            உலகப் பொதுமறை என்று பல சமயத்தாராலும் புகழப்பெற்று பரந்த இவ்வுலகெங்கும் வாழ்கின்ற தமிழர்க்கெல்லாம் பெருமை தேடித் தந்திருப்பது திருக்குறள் ஆகும். இரண்டே இரண்டு வரிகளில் அருமையான கருத்துக்களைப் பொதித்து வைத்திருக்கும் பெரும் புதையல் திருக்குறள் என்றால் மிகையில்லை.

            திருக்குறள் தோன்றிய காலத்திற்கு முற்பட்டு எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் நான்கு அடிகள் முதல் வெவ்வேறு எண்ணிக்கையிலான அடிகள் வரையிலும் எழுதப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருவள்ளுவருக்கு மட்டும் இரண்டே இரண்டு அடிகளில் கருத்தைச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உண்டானது? சங்க இலக்கியத்தின் எந்த நூலின் தாக்கத்தினால் இப்படி ஒரு கருத்து அவருக்குள் முகிழ்த்திருக்கக் கூடும்? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இக் கட்டுரை ஆகும்.

புறநானூறும் திருக்குறளும்:
            ஆராய்ந்து பார்த்ததில், சங்க இலக்கியத்தின் புறத்திணை நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களே திருவள்ளுவருக்கு ஒரு பெரும் உந்துதலாய் விளங்கி இருந்துள்ளது என்று உறுதியானது.

            புறநானூற்றுப் பாடல்களில் வரும் போர் முறைகள், வீரர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை வள்ளுவரும் படைமாட்சி, படைச்செருக்கு போன்ற அதிகாரங்களில் எடுத்தாள்வதைப் பார்க்கலாம்.

            அதுமட்டுமின்றி, புறநானூற்றுப் பாடல்களில் வரும் கருத்துக்களை எடுத்தாளும்போது, சில  பாடல்களின் ஈற்றிலிருந்த இரண்டு அடிகள் வள்ளுவரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். அந்த இரண்டு அடிகளில் புலவர்கள் கூறியிருந்த கருத்துக்கள் பொதுவுடைமை சார்ந்தவையாய் மக்களுக்கு அறிவூட்டுவதாய் இருப்பதை அறிந்தார். அதுமட்டுமின்றி, அந்த இரண்டு அடிகளிலிருந்த சொற்களை ஏழு சீர்களாய்ப் பிரிக்க முடிவதையும் கண்டறிந்தார். இவற்றின் அடிப்படையில், இரண்டு அடிகளில் ஏழு சீர்களை அமைத்துப் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கூற விரும்பினார். அப்படி அவர் முனைந்து இயற்றியதே இன்று நாம் அனைவரும் கொண்டாடும் திருக்குறள் ஆகும்.

புறக்குறள்:
            புறநானூற்றுப் பாடல்களில் குறள் வடிவத்தில் காணப்படுவதால் இந்தப் பாடல்களைப் புறக்குறள் என்று அழைக்கலாம். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றுவதற்குப் புறநானூற்றின் சில பாடல்களில் கடைசி இரண்டு அடிகளிலிருந்த இந்த புறக்குறள்களே உந்துதலாய் இருந்தது என்று மேலே கண்டோம். பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்ட அந்த புறக்குறள்கள் பெரும்பாலும் பாடலின் கடைசியிலிருந்தாலும் சில பாடல்களில் மட்டும் பாடலின் இடையிலும் இருக்கின்றன. புறநானூற்றிலிருந்து இதுவரை அறியப்பட்ட புறக்குறள்களும் அவற்றின் பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

            நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
            அல்லது செய்தலோம் புமின் - புறம். 195
பொருள்: பிறருக்கு ஒருபோதும் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்வதை எப்போதும் தவிர்த்து விடுங்கள்.

            இன்னா தம்மவிவ் வுலகம் இனிய
            காண்கவிதன் இயல்புணர்ந் தோரே - புறம். 194
பொருள்: இந்த உலகம் துன்பங்களால் நிறைந்தது தான்; இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே இதில் இன்பங்களையும் காண்கிறார்கள்.

            பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல்
            ஆருயிர் முறைவழிப் படூஉம் - புறம். 192
பொருள்: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் போக்கில் செல்லும் படகினைப் போல உயிர்கள் விதி வசப்பட்டு அதன் வழிதான் செல்லும்.

            செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம்
            எனினே தப்புந பலவே - புறம். 189
பொருள்: பிறர்க்குக் கொடுத்து உதவுவதே செல்வத்தால் விளையும் உண்மையான பயனாகும். முழுவதையும் தாமே அனுபவிப்போம் என்று முயன்றால் பலவற்றை இழக்க நேரிடும்.

            எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
            நல்லை வாழிய நிலனே - புறம். 187
பொருள்: ஒரு நாட்டின் அரசன் நல்ல வழியைப் பின்பற்றினால் அந்த நாட்டு மக்களும் நல்லவர்களாய் வாழ்வார்கள். (ஆடு = வெற்றி. ஆடவர் = வெற்றியாளர் = அரசர்.)

            யான்உயிர் என்பது அறிகை வேல்மிகு
            தானை வேந்தற்கு கடனே - புறம். 186
பொருள்: குடிமக்களுக்குத் தானே உயிர் என்று அறிந்து அதன்படி ஒழுக வேண்டியது வெற்றியைத் தரும் படையினைக் கொண்ட அரசனது கடமையாகும். (வேல் = வெற்றி)

            கீழ்ப்பால் ஒருவன்  கற்பின் மேல்பால்
            ஒருவனும் அவன்கண் படுமே - புறம். 183
பொருள்: கீழ்நிலையில் உள்ள ஒருவன் கல்வி கற்கும் போது மேல்நிலையில் உள்ள ஒருவனும் அவனிடம் நட்பு கொள்வான். (கல்வி கற்பிக்கும் இடங்களில் கீழ் மேல் என்ற பாகுபாடு இருப்பதில்லை; இருக்கக்கூடாது என்பதை இது விளக்குகிறது.)

            தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென
            முயலுநர் உண்மை யானே - புறம். 182
பொருள்: தன்னலத்திற்காக இன்றிப் பிறர்நலத்திற்காக உழைப்பவர்கள் இவ் உலகில் இன்னும் இருப்பது உண்மைதான். (அதனால்தான் இவ் உலகமே நிலைபெற்று உள்ளது.)

            தம்இசை நட்டு தீதுஇல் யாக்கை
            யொடுமாய் தல்தவத் தலையே - புறம். 214
பொருள்: வாழும்போதே தம் புகழை நிறுவிப் பிறர்க்குத் தீங்கு செய்யாத யாக்கையராய் வாழ்ந்து மடிதலே தலைசிறந்த தவமாகும்.

            ஈயெனவிரத் தலிழிந்தன் றதனெதிர் ஈயேன்
            என்றலதனி னுமிழிந் தன்று - புறம். 204
பொருள்: தா என்று ஒருவரிடம் பிச்சை கேட்பது இழிவான செயலாகும். மாறாக, தரமாட்டேன் என்று சொல்வது அதைவிட இழிவான செயலாகும்.

            கொள்ளெனக் கொடுத்தலுயர்ந் தன்றதனெதிர் கொள்ளேன்
            என்றலதனி னுமுயர்ந் தன்று  - புறம். 204
பொருள்: வாங்கிக்கொள் என்று கூறி ஒருவருக்குக் கொடுப்பது உயர்வான செயலாகும். மாறாக, வாங்கமாட்டேன் என்று கூறி மறுப்பது அதைவிட உயர்வான செயலாகும்.

            சான்றோர் சான்றோர் பாலராப சாலார்
            சாலார் பாலரா குபவே - புறம். 218
பொருள்: நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களுடன் மட்டுமே பழகுவர். அதைப்போல, கெட்டவர்கள் எப்போதும் கெட்டவர்களுடன் தான் சேர்வர்.

            வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்
            காலைப் புணைபிறி தில்லை - புறம். 367
பொருள்: பிறர்க்கு நன்மை செய்து அவர்களை வாழச்செய்த புண்ணியமே துன்பக் கடலில் மூழ்கும் ஒருவருக்குக் கரையேற உதவும் தெப்பம் ஆகும். 
முடிவுரை:
            மேற்கண்ட புறக்குறள்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட திருவள்ளுவரும் அப்படியே தனது திருக்குறள்களில் வேறு சொற்களால் எடுத்தாண்டிருப்பதை அறியலாம். பொதுவாக, முன்னோர்கள் இயற்றிய பாடல்களைக் கூர்ந்து ஆராய்ந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டே பின்வருவோர் பாடல்கள் இயற்றுவர். இதற்கொரு சான்றாகத் திருக்குறள் விளங்கும் நிலையில், அந்தாதித் தொடையையும் ஒன்பதாம் தொடையினையும் கூட சான்றுகளாகக் கூறலாம். 

            ஐங்குறுநூற்றின் சில பாடல்களிலிருந்த அந்தாதி அமைப்பே பின்னாளில் தனியாக அந்தாதித் தொடையாக உருவெடுத்தது. அதைப்போல, பல சங்க இலக்கியப் பாடல்களில் எண் பெயர்களைக் கொண்டு பயின்றுவந்த தொடை அமைப்பே சரவெண் தொடை என்னும் ஒன்பதாம் தொடையாக உருவெடுத்தது. 






தொடர்பு: திருத்தம் பொன். சரவணன் ( vaendhan@gmail.com)
http://thiruththam.blogspot.com/







No comments:

Post a Comment