Wednesday, September 25, 2019

கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . .


 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.
கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது என்பதால்
வினா விடையாக இப்பதிவுகள்.‌

1.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வு பற்றிய உரையாடல்களில் தமிழ் / தொல் தமிழ் / திராவிடம் என்ற சித்தரிப்புகளில் எது மிகவும் பொருத்தமானது?

விடை:
ஐயத்திற்கே இடமில்லாமல் தமிழ்ப் பண்பாடு என்பதே பொருத்தமானது ஆகும். இந்தத் தடயங்கள் சங்க காலம் என்று அறியப்படும் கால கட்டத்தைச் சேர்ந்தது. கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இருபகுதியிலும் பல அகழ்வாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை "வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு" என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.‌ சங்க இலக்கியம் ஆகச் சிறந்த தொல் தமிழ் இலக்கியம்.‌ வைகைக்கரை அதன் முக்கியமான களம்.‌ எனவே இந்த நாகரிகம் பற்றிக் குறிப்பிடும் போது திராவிடம் என்ற‌ சொல்லைப் பயன்படுத்த ஒரு தேவையும் இல்லை. அது "புரிதல் விகாரத்தில்" போய் முடியும். அது நல்லது அல்ல.

2.
கேள்வி:
சிந்துவெளி பற்றிய உரையாடல்களில் "திராவிடம்" என்ற "தமிழ்" என்ற சொல்லாடல்களின் பொருத்தப்பாடு என்ன?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டைக் கட்டமைத்தவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் இருந்தாலும் சிந்துவெளி மகுடத்திற்கான முக்கியமாக இரண்டு வேட்பாளர்கள் தான்.

1. "திராவிட மொழிக் குடும்பம்" ( கிழக்கு ஈரான் ஆப்கானிஸ்தானில் தொடங்கி நடு இந்தியாவிலும் கிழக்கு இந்தியா நேபாளம் ஆகிய இடங்களில் அங்கும் இங்கும்; தென்னகம் முழுவதும்; இலங்கையிலும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகிற பல மொழிகள் அடங்கியது) என்று அறியப்படும் மொழியை / அல்லது மொழிகளைப் பேசிய பண்பாட்டினர்.

2. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் என்ற வட மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டினர்.

சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் தமிழ்த்தொன்மங்களுக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சி என்ற முறையில் ஒரு மிக ஆழமான உறவு இருந்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

ஆனாலும் இந்த தொடர்பு மொழியியல் அடிப்படையில் "திராவிடக் கருதுகோள்" என்றே ஆய்வாளர்களிடையே தொடக்கம் முதல் அறியப்படுகிறது. சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளை இது வரை வாசிக்க இயலாததால் குறிப்பிட்ட ஒரு மொழி என்று சொல்லாமல் மொழிக்குடும்பத்தின் பொது அடையாளமாக "திராவிடம்" என்ற அடையாளத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிராகுயி என்ற திராவிட மொழி சிந்துவெளிப் பண்பாட்டின் கடைவாசல் பகுதிகளில் இன்றும் பேசப்படுவதாலும் கோண்டி போன்ற நடு இந்திய திராவிட மொழியின் சில பண்பாட்டுக் கூறுகள் சிந்துவெளி பொறிப்புகளுடன் நெருக்கம் காட்டுவதாலும் இத்தகைய பொதுவான சித்தரிப்பு தேவைப்படுகிறது.

சிந்துவெளிப் பண்பாடே பல்வேறு திணைகளைச் ( நிலப்பின்னணிகள்) சேர்ந்த பலவகையான சமூகப் பொருளாதார பண்பாட்டுப் பின்னணியின் கூட்டு இயக்கம் தான் என்று தோன்றுகிறது. மலை நில மக்களின் வாழ்விற்கும் கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களின் வாழ்க்கைக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும். ஆனால் சிந்துவெளிப் பண்பாடு இந்த இரண்டு துருவங்களும் எளிதில் சேர்ந்து இயங்கிய பண்பாட்டின் தொடர்ச்சியும் நகர்மய வாழ்வின் உன்னதமான உச்சக் கட்டமும் ஆகும்.

சிந்துவெளியின் பரந்த நிலப்பரப்பிலும் பல்வேறு நகரங்களிலும் நகர அமைப்பு, செங்கல் அளவு, எடைக் கற்கள், எழுத்துப் பொறிப்புகள், முத்திரைகள் என்று பொதுக்கூறுகள் உள்ளன. இந்தத் தரக் கட்டுப்பாடு ஒரு பண்பட்ட மொழி/ தொடர்பு மொழி இல்லாமல் சாத்தியமாகாது. ஆனால் அந்த மொழி எதுவென்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

ஆனால் அந்த உயர் நாகரிகத்தின் தொடர்ச்சியை அந்தப் பண்பாட்டோடு பொருத்தப்பாடு கொண்ட இன்னொரு ஆவணப்படுத்தப்பட்ட அடுத்தகட்ட பண்பாட்டு மரபில் இலக்கிய மரபில் தான் தேட வேண்டும். அங்கு தான் சங்க இலக்கியம் முக்கியமான சான்றாக நிற்கிறது.

ஒருவேளை சிந்துவெளிப் பண்பாட்டின் பொது நாகரிக மொழியாகத் தமிழ் அறியப்படும், நிறுவப்படும் சூழல் வந்தால் அப்போது ஆய்வாளர்கள் சிந்துவெளிக்கான மொழி அடையாளம் குறித்துத் தெளிவாக உரையாடுவார்கள்.

அதுவரை சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி குறித்த தேடலில் "திராவிடக் கருதுகோள்" என்ற சொல்லாடல் தேவையானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும்.

இல்லையென்றால் அது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

3.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வுகள் உண்மையில் எவ்வளவு முக்கியமானவை ? இந்த அகழ்வாய்வுகளின் முக்கிய பங்களிப்பு என்ன?

விடை:
கீழடி அகழ்வாய்வுகள் மிக மிக முக்கியமானவை. காரணங்கள்.

1. பழந்தமிழ் நாட்டில் நகர வாழ்வியலுக்கான முதல் அகழ்வாய்வுத் தடயம் கீழடி. இதற்கு முன் ஆதிச்சநல்லூரில் கிடைத்த புதைகுழிப் பகுதிகளில் கிடைத்த தரவுகள் மேலும் முன்னெடுக்கப்படவில்லை. அரிக்கமேடு, கொடுமணல், அழகன்குளம் போன்ற பல அகழ்வாய்வுகள் உள்நாட்டு வெளிநாட்டு வணிக மரபிற்குச் சான்றளித்தன. ஆனால் நகர வாழ்க்கை குறித்த தடயங்கள் இல்லை என்ற குறையைத் தீர்க்கிறது கீழடி.

2. இந்தியாவின் ஆகச் சிறந்த வாழ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் தீட்டும் துல்லியமான சொற்சித்திரம் கற்பனையான கட்டுக்கதை அல்ல; அவற்றில் பண்பாட்டு வரலாற்றுக்கான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன என்ற கருத்தை கீழடி மெய்ப்பிக்கிறது.

3. "தமிழி" யா தமிழ் பிராமி யா என்ற சொல்லாடல்களை விட என்பதை விட முக்கியமானது இந்த மண்ணில் தமிழ் மொழி சார்ந்த வரிவடிவத்தின் கால நிர்ணயம் கி.மு 6 ஆம் நூற்றாண்டிற்கு நகர்ந்துள்ளது என்பது தான். (இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்). அத்தகைய ஆய்வாளர்கள் சொல்வதைத் திறந்த மனதோடு செவி மடுக்க வேண்டும். இதில் முரண்பட்ட கருத்துகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

4. நான்காம் கட்ட‌ ஆய்வில் மட்டும் 1001 பானைக்கீறல்கள் கிடைத்துள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியது. இவற்றில் சில சிந்துவெளி பொறிப்புகளோடு ஒத்துப் போகின்றன என்பதும் கவனத்திற்கு‌‌ உரியது. சிந்துவெளி- தமிழ்த் தொடர்பை இதை வைத்து மட்டுமே வைத்து உறுதி செய்யமுடியாது என்பது உண்மைதான். ஆனால் சிந்துவெளி- சங்க காலம் - தமிழக பானைக்கீறல்களை பொருத்திப் பார்ப்பது இது முதல் தடவை அல்ல. பல. அறிஞர்கள் இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். கீழடியில் இது மேலும் தெளிவாகிறது அவ்வளவுதான். அதே நேரத்தில் சிந்துவெளி பொறிப்பைப் போலவே இதன் பொருள் என்ன என்பது புரியாவிட்டாலும் இது முக்கியமான துணைச்சான்று என்பதை மறுக்கமுடியாது.

4.
கேள்வி:
கீழடியில் இதுவரை வெளியான அகழ்வாய்வுத் தரவுகளின் அடிப்படையில் அங்கு சமயம் மற்றும் இறைவழிபாட்டை முன்னிலைப்படுத்தும் தடயங்கள் கிடைக்கவில்லை என்பதை வைத்து வைகைக் கரை தமிழ்ப்பண்பாட்டு மக்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் என்ற முடிவுக்கு வர முடியுமா?

விடை :
முடியாது. ஏனெனில் கீழடியில் இது வரை தோண்டப்பட்டு இருப்பது சிறு பகுதியே. எதிர்காலத்தில் தோண்டப்படும் போது எத்தகைய சான்றுகள் கிடைக்கும் என்பதை இப்போது ஊகிக்க முடியாது.‌ அப்படியே எதுவும் கிடைத்தாலும் அடுக்கு நிலை அகழ்வாய்வின் அடிப்படையில் (Stratigraphy) எந்த அடுக்கில் என்ன கிடைக்கிறது என்பதே முக்கியமானது. அதைப் பொறுத்தே கால நிர்ணயம் மற்றும் பண்பாட்டு நிலை பற்றி முடிவு செய்வார்கள்.

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நடுகல் வழிபாடு, மரத்தில் உறையும் தெய்வம், கொல்லிப் பாவை, கானுறை தெய்வம், அணங்கு, வேலன் வெறியாட்டு போன்ற மரபுகள் பேசப்படுகின்றன. திணை சார்ந்த கருப்பொருளாகவும் கடவுளர் அடையாளம் காட்டப்படுகிறார்கள். தாய்த் தெய்வ வழிபாட்டின் மேலதிகச் செல்வாக்கும் புலனாகிறது.

ஆனால் சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ( Beliefs and Faith System) இருந்தன என்றாலும் மனித வாழ்வியலின் நடைமுறை எதார்த்தமே காத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே"

என்ற‌ புறநானூற்று ( 335) வரிகள் தொல்தமிழர் சமயத்தின் முன்னுரிமையைத் தெளிவாக்குகிறது. எதிரிகளிடமிருந்து தனது குடிகளைக் காக்கப் போரிட்டு மாண்ட வீரனுக்கு எழுப்பப்படும் நடுகல் தான் தமிழர் வழிபாட்டு மையப்புள்ளி என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அதுவே நீத்தார் பெருமையின் நிலைக்களன்.

எதுவாயினும் வைகை கரை தமிழ்ப் பண்பாட்டுக் காலத்தின் வழிபாட்டு மரபுகள், நம்பிக்கைகள், முன்னுரிமைகள், பற்றி எதிர்கால அகழ்வாய்வுகள் சான்றளிக்கக் கூடும்.

எனவே இதுபற்றி தீர்மானமான தீவிரக் கருத்துகளைத் தவிர்ப்பது நலம் என்று தோன்றுகிறது.

There is an aphorism, "Absence of evidence is not evidence of absence,"

"தடயம் கிட்டவில்லை என்பது தடயம் இல்லை என்பதற்கான தடயம் இல்லை"

இது சிந்துவெளிக்கும் கீழடிக்கும் மட்டும் அல்ல எந்தச் சூழலுக்கும் பொருந்தும்.

May like to google for:

Evidence of absence
Absence of Evidence

5.
கேள்வி :
கீழடியில் கிடைத்திருக்கிற எழுத்து‌ப் பொறிப்புகள் ஏராளமாகக் பானைக்கீறல்கள் எதைக்காட்டுகின்றன? சங்க காலக் கல்விப்பரவலாக்கத்திற்கு இதை ஒரு அடையாளமாகக் கருத இடமுண்டா?

விடை:
உறுதியாக.‌ கீழடி எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டதாகக் கருதப்படும் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டா, ஐந்தாம் நூற்றாண்டா என்பதை விட முக்கியமானது இது தமிழக மண்ணில் முதல் கண்டுபிடிப்பு அல்ல என்பதும் தான். இது தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன அவற்றின் காலகட்டம் கி.மு. மூன்றாம் - ஐந்தாம் காலகட்டத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. எனவே இது முதல் முறை அல்ல; இதன் கால நிர்ணயம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது தான் புதிய தகவல்.

ஆனால் என் மட்டில் நான் அதை விட முக்கியமாகக் கருதுவது கீழடி வாழ்வியலுக்கும் சங்க இலக்கியத்திற்கும் இடையிலான இணக்கம்.

கல்விப் பரவலாக்கத்தின் முதல் உரைகல் (you can say " litmus test") கருத்தியல் அடிப்படையிலும் நடைமுறை எதார்த்தத்திலும் கல்வி அனைவருக்குமானதா என்பதே ‌ ஆகும்.

கீழடி பானைக் கீறல்களும் "தமிழி" எழுத்துகளும் யாரால் கீறப்பட்டது அல்லது எழுதப்பட்டது என்பதும் முக்கியம். இவை பேரரசர்களின் கல்வெட்டுகளோ செப்பேடுகளோ இல்லை. இதில் "அரசாங்கத்தின்" கரங்கள் இல்லை.

அது பானையை வனைந்த‌ குயவன் எழுதியது என்றால் அது "முதுவாய் குயவ" (Potter of the ancient wisdom) என்ற சங்க இலக்கியப் பதிவுக்குக் கிடைத்த சான்றிதழ். அது பானையை வாங்கிய பலராலும் எழுதப்பட்டது எனில் அது கல்விப் பரவலாக்கத்திற்கு உரைகல்.

இத்தகைய கல்விப்பரவலாக்கத்திற்கு சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலின் அறிவு சார்ந்த அணுகுமுறை ( Knowledge based approach) முக்கியக் காரணம் ஆகும்.

இதற்கு புறநானூற்றில் வரும் ஒரு பாடல் ஒரு சோற்றுப் பதம். இதோ அந்தப் பாடல். ( புறநானூறு 183)

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"

—(புறம்-183)

அப்போதே "வேற்றுமை தெரிந்த" சமூகப் படிநிலை முறைகள் தலைதூக்கி இருக்கவேண்டும். ஆனால் கவிஞனாகிய தமிழ் மன்னன் அதிலும் ஆரியப் படை கடந்தவன் என்று பெயர் சூட்டிக் கொண்டவன் (நெடுஞ்செழியன் என்ற பெயர் தொல் தமிழ்க் கல்வெட்டிலேயே வருகிறது) அறிவுடையோன் காட்டும் வழியில் தான் தனது அரசு செல்லும் என்று தனது கவிதையின் மூலம் அறிவிக்கிறான். கல்விப்பரவலாக்கத்திற்கான அரசு சார்ந்த / ஆவணப்படுத்தப்பட்ட முதல் குரல் எனக்குத் தெரிந்த வரையில் இது தான்.

இந்த அறிவிப்பு எதிர்பார்ப்போ புனைந்துரையோ இல்லை என்பதைச் சங்க இலக்கியப் புலவர்களின் சமூகப்பின்னணிகளே சான்றளிக்கும்.

கொற்றவனும்...குயத்தியும்...
கணியனும்...கணக்காயனும்...
குறமகளும்..‌கொல்லனும்...
வணிகனும்..வண்ணக்கனும்...
சேரனும் சோழனும் பாண்டியனும்...
கூடிப் பாடிய கூட்டியக்கம் தான் சங்கத்தமிழ் என்ற ஆவணக்களஞ்சியம்.

கீழடியில் வெளிவரும் எழுத்துப் பொறிப்புகளும் குயவரோ பானை உரிமையாளரோ கீறிய‌ பானைக் கீறல்களும் இந்தக் கருத்தியலின் இன்னொரு உடல் மொழிதான்.

இன்னொரு வகையில் சிந்துவெளி வாழ்வியலும் சங்க இலக்கிய வாழ்வியலும் தொன்மத்தின் தொடர்ச்சியாக அடிக்கோடிடும் இயக்கங்களில் / இணக்கங்களில் இதுவும் ஒன்று.

எனவே கீழடிப் பானை எழுத்துகள் கீறல்கள் கல்விப்பரவலாக்கத்திற்கு சான்று என்பது சரியான வாதமே.

6.
கேள்வி:
தாமிரவருணி மற்றும் வைகைக் கரையோர வாழ்வியலுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் ஏதோ ஒரு (சமகால அல்லது சற்று பின்னரான) தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்பது கீழடி ஆய்வுத் தடயங்களின் அடிப்படையில் புதிதாக முன்வைக்கப்படும் புதிய வாதமா அல்லது இக்கருத்தியல் ஏற்கனவே நிலவியதா?

விடை:
இது இப்போது திடீரென்று தோன்றிய புதிய முன்மொழிவு அல்ல. இதற்கு ஏற்கனவே நீண்ட‌ பின்னணி உண்டு. ஏற்கனவே அகழ்வாய்வாளர்கள் "இருக்கக்கூடும்" என்று நினைத்ததை, பேசியதை, எழுதியதைத் தான் கீழடி அகழ்வாய்வுகள் "இருக்கிறது" என்று கண்கூடாகத் தடயங்களைச் சாட்சி வைத்து நிறுவி வருகின்றன.

அறிந்ததிலிருந்து அறியாததை அறிய முயற்சி செய்வது அகழ்வாராய்ச்சியின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும். அந்த அடிப்படையில் தான் இப்போது கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வு போன்ற அகழ்வாய்வுகளின் தேவையை 80 ஆண்டுகளுக்கு முன்பே கே. என். தீட்சித் 1939 இல் கோடிட்டுக் காட்டினார். அப்போது அவர் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் (Director General of Archaeological Survey of India). 1937 இல் இருந்து 1944 வரை அப்பொறுப்பிலிருந்த அவர் நிகழ்த்திய உரையொன்றை 1939 இல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தீட்சித்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மொகஞ்சதாரோவில் நடந்த சிந்துவெளி ஆய்விலும் ஈடுபட்டவர் அவர். சர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் போன்றோருடன் பணியாற்றியவர். எனவே சிந்துவெளிப்பண்பாடு பற்றிய ‌நேரடியான கள அனுபவம் அவருக்கு உண்டு.

பெண்கள் சங்கு வளையல்கள் அணிவது என்பது சிந்துவெளியின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். சங்கு வளையல் தொழிலை மனதில் வைத்து அகழ்வாராய்ச்சி செய்தால் சிந்துவெளிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பை நிறுவி விடலாம் என்ற எதிர்பார்ப்பு அப்படி ஒன்றும் மிகையான எதிர்பார்ப்பு அல்ல என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே தீட்சித் சொல்லியிருக்கிறார். அவரது கருத்து பின்வருமாறு:

"At no great distance from these newly discovered places is the Gulf of Cambay. It was at the ports of Cambay and Broach that the carnelian industry of India was concentrated and the extensive use of this material in the Indus cities renders its almost certain that further investigation in the Narbada valley will bring to light other settlements of that period.

Considering that the conch shell which is typical of the Indus valley civilization and which seems to have been in extensive use in Indus cities was obtained from south-east coast of the Madras Presidency, it would not be too much to hope that a thorough investigation of the area in Tinnevelly Dt. and the neighbouring regions such as the ancient sea port of Korkai will one day lead to the discovery of some site which would be contemporary with of even little later than the Indus civilization.” (Dikshit 1939: 13)"

இதில் கடைசி ஐந்தாறு வரிகளில் தீட்சித் தின் பட்டறிவை, தொலைநோக்குப் பார்வையை விளக்கும் வைர வரிகள். "தீட்சித்தின் தீர்க்க தரிசனம்" என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அவர் சொன்னது ஆர்வக் கோளாற்றால் அல்ல. அனுபவ அறிவும் தரவு சார்ந்த தேடல்களின் மீதிருந்த நம்பிக்கையும் தான் இதற்குக் காரணம்.

பழங்காலத் தமிழ்நாட்டில் சங்கு அறுக்கும் / சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிற் கூடங்கள் இருந்ததற்கான தடயங்கள் பல இடங்களில் கிட்டியுள்ளன. இப்போது கீழடி அகழ்வாய்வுகளிலும் சங்கு தொழில் தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன. இது தமிழ்நாட்டில் முதல் முறையும் அல்ல. சங்கு தொழிற்கூடத்திற்கான தடயம் கொடுமணலில் கிடைத்துள்ளது. அழகன்குளம் கொற்கை போன்ற இடங்களும் சான்றளிக்கின்றன.

80 ஆண்டுகளுக்கு முன்பு தீட்சித் கோடிட்டுக் காட்டியபடி " விரிவான விசாரணை" ( "thorough investigation") செய்திருந்தால் தமிழ்த்தொன்மங்கள் மட்டுமின்றி இந்தியாவின் தேதியிடப்படாத காலகட்டங்கள்/ அவற்றின் தொடர்ச்சியை எங்கு எப்படித் தேட வேண்டும் என்பதில் கூடுதல் தெளிவு கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கீழடி போன்ற அகழ்வாய்வுகள் பாய்ச்சும் புது வெளிச்சத்தை தீட்சித் போன்ற அனுபவம் மிக்க அகழ்வாய்வாளர்களின் நெடுநோக்குப் பார்வையின் துணையோடு சீர்தூக்கிப் பார்ப்பது தரவு சார்ந்த ஆய்வுகளின் தவிர்க்க முடியாத அணுகுமுறை ஆகும்.

7.
கேள்வி:
கீழடி செங்கல் கட்டுமானங்களில் கண்டெடுக்கப்பட்ட செங்கல், சிந்துவெளி நாகரிக கால கட்டுமான செங்கல் – இவற்றுக்கு இடையே தொடர்பு ஏதும் உண்டா? இதை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவை (அதாவது நீளம், அகலம், உயரம்) மட்டும் வைத்துப் பார்த்தால் சிந்துவெளிச் செங்கற்களையும் கீழடிச் செங்கற்களையும் ஒன்றெனக் கூற முடியாது.

சிந்துவெளிப் பண்பாட்டு செங்கற்களின் அளவு பெரும்பாலும் 28 செ.மீ*14 செ,மீ* 7 செ.மீ என்ற அளவில் (நீள, அகல, உயரம்) 4:2:1 என்ற விகிதத்தில் அமைந்தவை. கீழடியில் கிடைத்துள்ள செங்கற்கள் பெரும்பாலும் 36*24*6 செ.மீ என்ற அளவில் (6:4:1) என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. கீழடியில் சில இடங்களில் 34*24*7 செ.மீ மற்றும் 38*24*7 செ.மீ 33*23*6 செ.மீ என்ற அளவிலும் செங்கற்கள் கிடைத்துள்ளன. ஆனால் பெரும்பாலும் 36*24*6 என்ற அளவே மிகுதியாக உள்ளது.

சிந்துவெளிப் பண்பாட்டை அறிவிக்கும் (1924) முன்னரே 1905 இல் அகழ்வாய்வு செய்யப்பட்ட, இந்தியாவின் வரலாற்றுக் காலத்தின் முதல் அகழ்வாய்வுச் செங்கல் சுவர் தடயம் என்று கருதப்படும் பீகாரிலுள்ள ராஜ்கீரில் (மௌரியப் பேரரசின் காலம்) கிடைத்த பழங்கால மதிற்சுவர்களில் பயன்படுத்தப்பட்ட செங்கல் 52*25*7 செ.மீ என்ற அளவில் (7.4: 3.5:1) என்ற விகிதத்திலும் 42*27*6 செ.மீ என்ற அளவில் 7:4.5:1 என்ற விகிதத்திலும் அமைந்துள்ளன.

இதனடிப்படையில் பார்த்தால் சிந்துவெளியின் ஆகச்சிறந்த செங்கல் பரிமாணத்தை வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவில் எந்த பிந்தையப் பண்பாடும் எட்டவில்லை என்பதே உண்மை. இதுபற்றி தனது கருத்தை கே.என் .தீட்சித் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். அசோகர் காலத்துச் செங்கற்களின் அளவு சிந்துவெளிச் செங்கற்களை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனாலும் இந்த கேள்விக்கான விடையை – சிந்துவெளிச் செங்கல்லிற்கும் கீழடிச் செங்கற்களுக்கும் இடையிலான அளவின் அடிப்படையில் நேரிடையான தொடர்பு இல்லை என்று கூறி முடித்துவிட முடியாது.‌ அளவின் அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும் பயன்பாட்டு ஒப்புமை (சுவர்கள், வடிகால்கள், தரைத்தளங்கள்) கவனிக்கத்தக்கது.

சிந்துவெளிப் பண்பாட்டின் மிக அடிப்படையான அடையாளம் செங்கற்களும் அச்செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களும் கட்டிடங்களும் தான். சிந்துவெளிக்கு என்று ஒரு நிற அடையாளம் காட்டவேண்டும் என்றால் அது செவ்வண்ணம் தான். ஹரப்பா, மொகஞ்சதாரோ சிதைவிடங்களில் சிதறிக் கிடக்கும் செங்கற்களும் செம்பானை ஓடுகளும் தான் இதற்குச் சாட்சியம்.

சிந்துவெளிப்பண்பாடு இருந்த இடம் தெரியாமல் புதைந்ததற்குப் பின்னால் வடமொழி இலக்கியத்தில் செங்கல் அப்படி ஒன்றும் பெரிதாகப் போற்றப்படவில்லை. ஆனால் செங்கல் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளும் செங்கல் என்ற சொல்லின் பின்புலனாக விளங்கும் பொருளமைவு சார்ந்த கருத்தாக்கமும் முற்றிலும் மாறானது.

செங்கல் என்ற தமிழ்ச்சொல் ஒரே நேரத்தில் இரண்டு கருத்தைத் தெரிவிக்கும். செங்கல்லின் ஒரே அளவான செம்மை, ஒழுங்கு என்பது செங்கல்லின் தரக்கட்டுப்பாடும் தகுதியுமாகும். அதனால் தான் செங்கல்லை ஒரே அளவாக அறுப்பதற்கான அச்சு "செங்கல் கட்டளை" என்றும் கட்டளைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது செங்கல்லின் செந்நிறம். அது செம்மையாகவும் இருக்கிறது; சிவப்பாகவும் இருக்கிறது. செங்கல்லின் உறுதியை உறுதி செய்வது அது சுட்டசெங்கல் என்பது தான். அதனால் தான் சுடாத செங்கல்லை ‘பச்சைக் கல்’ – (பச்சைக் குழந்தை, பச்சைக் காய்கறி என்று சொல்வது போல) - என்று சொல்கிறார்கள். செம்மைக்கும் (ஒழுங்கிற்கும்) சிவப்பிற்குமான (செந்நிறம்) வேர்நிலையான மானுட உளவியலுக்கு செம்மை, செம்பு, செப்பு, செப்புத்துறை, செந்தண்மை, செங்கோல், செங்களம், சே, சேய், சேயோன் போன்ற சொற்களின் ஆக்க முறையைத் துருவினால் தெளிவு கிடைக்கும்.

சங்க இலக்கியத்தில் செங்கல் பற்றிய துல்லியமான சொல்லாடல்கள் ஏராளம். ”சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்” (பெரும்பாணாற்றுப்படை 405) என்ற சங்க இலக்கிய ஒற்றைவரிச் சொல்லாடல் சுட்ட செங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் கொண்ட ஒரு நகரம் பற்றிப் பேசுகிறது. சுட்ட செங்கற்களால் ஆன குடியிருப்பிற்கு கீழடி சான்றளித்திருக்கிறது. அது மட்டுமின்றி அத்தகைய சுவர்களைச் சித்தரிக்கும் போதெல்லாம் சங்க இலக்கியம் செம்பு என்ற உலோகத்தால் செய்யப்பட்டது போன்ற சுவர் என்றே திரும்பத் திரும்பக் கூறுகிறது.

செம்பு விலையுயர்ந்த அரிய உலோகம். முழுவதும் செம்பைப் பயன்படுத்தி சுவர் எழுப்ப முடியாது. ஆனால் செம்பால் கட்டியது போன்ற சுவர் என்பது சுட்ட செங்கற்களின் செம்பு போன்ற வனப்பு, உறுதித்தன்மை, மேலும் செம்பு போன்ற ‘செந்நிறம்’ ஆகியவற்றை மனதில் வைத்து உயர்வு நவிற்சியாகக் கூறப்பட்டுள்ள ஆனால் இது உண்மையில் சுட்ட செங்கற்கள் பற்றிய சித்தரிப்பே ஆகும். "உவமை என்பது உயர்ந்ததன் மேற்றே" என்பது தொல்காப்பியம். எனவே இது பொருத்தமாகவே உள்ளது.

சங்க இலக்கியம் சொல்வதைப் போன்ற சுவர்கள் எதிர்கால அகழ்வாய்வுகளில் மேலும் கிடைக்கலாம். இப்போது தானே கீழடி போன்ற இடங்களைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறோம்.

எனது மதிப்பீட்டில் நான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு கருத்தை முன்வைத்து வருகிறேன். “சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே” என்பது தான். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் சுட்ட செங்கல் சுவர்களின் பிரமாண்டம் குறித்த சொல்லாடல் கி.மு ஆறாம் நூற்றாண்டை ஒட்டிய காலகட்டத்தின் செங்கல் கட்டிடங்களின் நேர்முக வர்ணனை மட்டுமல்ல; தமிழ்த் தொன்மங்களுக்குள் அதற்கு முந்தைய நெடுங்காலமாக நிலைபெற்று இருந்த ‘செங்கல் பண்பு” (Brick Culture) குறித்த மீள் நினைவுக்குமான சாட்சியமுமாகும்.

புறநானூற்றில் இருங்கோவேள் என்ற வேளிர் தலைவனின் முன்னோர்கள் அவனுக்கு 49 தலைமுறைக்கு முன்பே துவரை என்ற நகரை ஆண்டவர்கள் என்ற மீள் நினைவு இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலிலும் துவரை நகரின் சுவர் செம்பால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. செம்பு போன்ற செங்கல் தான் அது என்பது தெளிவு.

ஆனால் இத்தகைய இலக்கிய சாட்சியம், ஆவணங்கள் வடநாட்டு ராஜகிருகம் போன்ற நகரங்களுக்கு இல்லை. சிந்துவெளிப் பண்பாட்டின் பிரமாண்டமான செங்கற் கட்டுமானங்கள் வேத இலக்கியங்கள் உள்ளிட்ட வடமொழி இலக்கியங்களுக்குத் தெரியாத ரகசியம்.

"ரிக் வேத காலத்தில் செங்கல் என்ற கட்டுமானப் பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான அகழ்வாய்வுத்தடயமோ மொழியியல் தடயமோ இல்லை" என்று எச். எஸ் கன்வர்ஸ் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். யஜூர் வேதத்தில் இடம் பெறும் ”அக்னி சயனா” சடங்கில் தான் அதுவும் வழிபாடு சார்ந்த பயன்பாட்டுப் பொருளாகச் செங்கல்லின் பயன்பாடு முதன்முறையாகப் பதிவுபெறுகிறது என்றும் "சதபாத பிராமணத்தில்" தான் அது முழுமையாக வளர்ச்சி பெற்றது என்றும் அவர் குறிப்பிடுகிறார். பிரிட்ஸ் ஸ்டால் என்ற அறிஞரும் கிட்டத்தட்ட இக்கருத்துடன் உடன்படுகிறார்.

"இஷ்ட்டிகா" என்ற வடசொல்லின் மூலமே "சுட்ட கல்" என்ற தமிழ்ச்சொல் தான் என்ற கன்வெர்சின் கருத்து ஒப்புக்கொள்ளத்தக்கதா இல்லையா என்பதை விடவும் முக்கியமானது சுட்ட செங்கல் தொழில் நுட்பத்தின் உச்சத்தைக் கொண்டாடிய செங்கல் பண்பாட்டின் எச்சத்தைச் சிந்துவெளிப் பண்பாட்டிற்குப் பின்னர் சங்க இலக்கியங்களில் தான் காணமுடிகிறது என்பது தான்.

குறிப்பாக சுட்ட செங்கல்லும், அதன் உறுதியும் வனப்பும், செம்பு போன்ற அதன் நிறப்பொலிவும் நெடும் பெரும் சுற்றுச் சுவர்களுக்கான அதன் பயன்பாடும் போற்றப்பட்டிருக்கிறது என்றால் அதற்குச் சான்றாக நிற்பது சங்க இலக்கியம் தான். வேறொன்றுமில்லை.

"சிந்துவெளி காலம் வேறு சங்க இலக்கியம் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்ட தொகுக்கப்பட்ட காலம் வேறு" என்பதை காலண்டர் பார்த்தே சொல்லிவிடலாம். அதற்குக் கரிம ஆய்வு கூடத் தேவையில்லை.

இன்றைய தேதியில் இப்போது வரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தான் நாம் வாதிட வேண்டும். அந்த வகையில் கீழடிப்பண்பாடு சிந்துவெளி கட்டுமானங்களின் கருத்தியலோடு தொடர்ச்சி காட்டுகின்றன என்பது தான் முக்கியம். இதைச் சங்க இலக்கியம் என்ற வழித்துணையோடு வாசிக்கும் போது மேலும் தெளிவு கிடைக்கும். ஆனால் அதற்குத் திறந்த மனமும் தரவு சார்ந்த தேடலும் தேவைப்படுகிறது.

எதிர்கால அகழ்வாய்வுகள் தமிழ்த்தொன்மங்களை,நகர வாழ்வியலுக்கான காலகட்டங்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்று இப்போது சொல்லமுடியாது.

ஆனால், சிந்துவெளிச் செங்கல் சுவர்களுக்கும் கீழடிச் செங்கல் சுவர்களுக்கும் அளவால், கால நிர்ணயத்தால் இடைவெளி இருக்கிறது என்றாலும் இந்த இரு சுவர்களுக்கும் இடையிலான தூரத்தை நிரப்பும், விளக்கும் மரபின் தொடர்ச்சிக்கு சங்க இலக்கியம் மட்டும் தான் சான்றாக இருக்கிறது‌ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ”செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை” யாகவும் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பாகவும் நிமிர்ந்து நிற்கிறது தமிழ் போலவே. இதற்கு ஒரு சோற்றுப் பதமாய் வெளிவந்துள்ளன கீழடிச் செங்கல் சுவர்கள்.

சிந்துவெளி விட்ட இடமும்
சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே!

8.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உறைக்கிணறு பற்றி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகங்களிலும் இது பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. உறைக்கிணறு என்பதன் முக்கியத்துவம் என்ன? இதுபற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறதா?

விடை:
ஆமாம். சங்க இலக்கியம் உறைக்கிணறு பற்றி பின்வருமாறு கூறுகிறது.

"பறழ்ப் பன்றி பல் கோழி,
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாட" (75-77)

இது பட்டினப்பாலையில் வரும் சொற்சித்திரம்.

காவிரிப்பூம்பட்டினத்தின் அருகே அமைந்த புறநகர்ப்பகுதியை (sub-urban habitat) பற்றிய துல்லியமான படப்பிடிப்பு இது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே நடந்த அகழ்வாய்வுகளில் பல்வேறு இடங்களில் உறைக்கிணறுகள் கிடைத்துள்ளன. உறையூர், பூம்புகார், அரிக்கமேடு, திருக்கோவிலூர், கொற்கை, காஞ்சிபுரம், செங்கமேடு, திருவாமுத்தூர், திருவேற்காடு, மாமல்லபுரம், திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ள உறைக்கிணறுகள் இதன் பரவலான பயன்பாட்டிற்குச் சான்றாகும். இப்போது கீழடியில் கிடைத்துள்ளது.

எனவே உறைக்கிணறு என்பது சங்ககால வாழ்வியலின் பொதுவான உரைகல் என்பது தெளிவாகிறது.

காவிரிப்பூம்பட்டினம் அருகே இருந்த உறைக்கிணறு அமைந்த ஒரு புறநகர்ப்பகுதி பற்றிய மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியச் செய்தியைக் கையில் வைத்துக்கொண்டு கீழடி அகழ்வாய்வுக் களத்திற்குச் செல்லுங்கள்.

அதற்கு முன்பு அந்த மூன்று வரிகளின் எளிய பொருளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

”அது ஒரு புறஞ்சேரி, நகரத்தை ஒட்டிய குடியிருப்புப் பகுதி. உறைக்கிணற்றோடு கூடிய அந்தக் குடியிருப்பில் பன்றிகள் பல குட்டிகளுடனும், பல வகையான கோழிகளும், ஆட்டுக் கிடாய்களும், கவுதாரிகளும் விளையாடிக்கொண்டிருந்தன.”

இப்போது கீழடியில் நமக்குக் கிடைத்திருக்கிற தடயங்களைப் பார்ப்போம். உறைக்கிணறு இருந்த கீழடியில் பன்றி, ஆடுகள் மாடுகள் வளர்க்கப்பட்டதற்கான எலும்புத் தடயங்கள் (புனே நகரிலுள்ள ஆய்வுக்கூடம் உறுதி செய்தபடி) கிடைத்துள்ளன.

காட்டுப்பன்றியின் உருவம் பொறித்த சூதுபவளம் கிடைத்துள்ளது. வேறென்ன வேண்டும்?

இப்படிப்பட்ட சூழலை நேரில் பார்த்தால் அப்படித் தான் எழுதத்தோன்றும்.
சங்க இலக்கியங்கள் புனைகதைகள் அல்ல. அன்றாட வாழ்வியலின் அழகிய படப்பிடிப்பு என்பது தான் உண்மை.

கீழடியும் தமிழகத்தின் ஏனைய அகழ்வாய்வுக் களங்களும் அழுத்திச் சொல்வது சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையைத் தான்.

இந்த உறைக்கிணற்றுக் கவிதைக்கும் உண்மையில் நம் கண்முன் அகழ்ந்தெடுக்கப்படும் இந்த உறைக்கிணறுகளும் இடையிலான சூழல் ஒருமை நமக்கு வியப்பூட்டுகின்றன. தமிழகத்தின் பல இடங்களிலும் மேலும் மேலும் தோண்டவேண்டியதன் தேவையையும் இவை அடிக்கோடிடுகின்றன.
தொடர்பு: 
ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப. 
-  https://www.facebook.com/profile.php?id=100011737148867&fref=nf

No comments:

Post a Comment