Sunday, September 15, 2019

குமரிக் கண்ட குழப்பங்கள்


——  திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்


          திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சோமசுந்தரம் ராமசாமி மற்றும் ஜே. சரவணவேல் ஆகியோர் செயற்கைக்கோள் படங்களை வைத்து மேற்கொண்ட  ஆய்வின் முடிவுகள் 2019 ஜூன் 25ஆம் தேதியிட்ட Current Science இதழில் வெளியாகியிருக்கின்றன. குமரிக்கண்டம் குறித்து இந்த ஆய்வு சொல்வது என்ன?

          "எங்களுடைய கண்டுபிடிப்பின்படி குமரிக்குத் தெற்கே சுமார் 2 -3 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள நிலப்பரப்பு இருந்திருக்கலாம். அவ்வளவுதான். மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியா வரை இந்த நிலப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.”  

          லெமூரியா கருதுகோள் மேலை நாடுகளில் ஓரங்கட்டப்பட்ட வேளையில், அது நம் தமிழ்நாட்டில் புகுந்து குமரிக் கண்ட கருதுகோள் உருவாகக் காரணமாக அமைந்தது.  உரையாசிரியர்களின் இடைக்காலத்திற்குப் பின்னர்  கிட்டத்தட்ட ஐந்நூறு ஆண்டுகள் உறங்கியிருந்த குமரிக் கண்ட கருதுகோள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மீண்டும் உயிர்பெற்று எழுந்தது ( உரையாசிரியர்கள் செய்த  குழப்பங்களைப்  பின்னர் பார்க்கலாம்).

          தமிழிலும், ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வித்தகராக விளங்கிய பரிதிமாற் கலைஞர் 1903 ஆம் ஆண்டு தான் எழுதிய ‘தமிழ் மொழி வரலாறு’ எனும் நூலில் ஐந்தாம் அத்தியாயத்தில், உரையாசிரியர் அடியார்க்குநல்லார் கூறும்  49 நாடுகளையும் பட்டியலிட்டு, அந்த நாடுகள் அடங்கிய பகுதியை “குமரி நாடு’ என்று அழைத்தார். 

          நீளத்தில் இக்கால குமரிமுனையிலிருந்துகேர்கியுலன் தீவின் தென்முனை வரையிலும் அகலத்தில் மடகாஸ்கர் தீவு முதல் கிழக்கே ஜாவா, சுமத்ரா ஆகியவற்றை அடக்கிய சந்தா தீவு வரையிலும்   குமரிநாடு பரந்து கிடந்தது என எழுதும் இவர், இதுவே இலெமுரியா நிலப்பரப்பு என்றும் உலகின் நடுப் பகுதியாகத் திகழும் இங்கிருந்துதான் மனிதன் நாலாபுறமும் பரவினான் என்றும் கூறுகிறார். அடியார்க்கு நல்லார் கூறும் எழுநூறு காதம் இவர் கருத்தில் ஏழாயிரம் மைல்கள் ஆகிறது. இந்த நூல் 1908-09 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவர்களுக்குப் பாட நூலக அறிவிக்கப் பட்டது.

          பரிதிமாற் கலைஞரின் நூலை, மறைமலை அடிகள், சோம சுந்தர பாரதியார் போன்ற சான்றோர்களும் ஆதரித்தனர்.  சோம சுந்தர பாரதியார்(1912) தன்  “தமிழகம்’” நூலிலும், பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் 1904 ஆம் ஆண்டு “தமிழ் இலக்கியம்” எனும் நூலிலும், ஆப்ரஹாம்பண்டிதர் 1917 இல் தான் எழுதிய நூலிலும் குமரிக்கண்டத்திற்கு ஆதரவாக விரிவாக எழுதினர்.  இவர்கள் குமரிநாட்டை மாந்தன் பிறந்தகம் என்றும் தமிழ் இங்கேதான் பிறந்தது என்றும் வலியுறுத்தினர். ஸ்ரீநிவாசப்பிள்ளை (1927), கந்தையாபிள்ள(1934) ஆகியோரும்  தங்கள் நூல்களிலும் கட்டுரைகளிலும் குமரிக் கண்டம் பற்றி விரித்துரைத்தனர். அறிஞர்  கந்தையா அவர்கள் குமரிஆறு இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே சற்று தொலைவில் இருந்திருக்கலாம் அதற்கும் தெற்கே குமரிமலை இருந்திருக்கலாம் என்று தனது “தமிழகம்”(1934)  நூலில் குறிப்பிடுகிறார். குமரி ஆறு, குமரி மலை பற்றியெல்லாம் இவர் நூலில்தான்  பார்க்கிறோம். 

          எனவே “குமரி மலை” பற்றிய கற்பனை இதற்குச் சற்று முந்தைய காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். குமரிக் கண்டம் அழியக் காரணமாக இருந்த கடல்கோள் எப்படி உருவாகியிருக்கும் என்று இவர் சொல்வது சற்று வித்தியாசமாக இருக்கிறது 1927 ஆம் ஆண்டில் பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள்குமரிக் கண்டம் அழிந்து போனதால் அங்கே வாழ்ந்த மக்கள் வடக்கே சென்று சிந்துவெளி நாகரிகத்தை ஆரம்பித்தனர் எனக் கூற, தொடர்ந்து வி.ஆர். நெடுஞ்செழியன் (1953) ஆம் ஆண்டு, சிந்து வெளிக்கு மட்டுமல்ல, குமரி மக்கள் சுமர், அரேபியா, எகிப்து, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் அதற்கு அப்பாலும் சென்று குடியேறினர்  என்றார். 1927 ஆம் ஆண்டிலேயே பள்ளிப் பாட நூல்களில் குமரிக் கண்டம் இடம் பெற ஆரம்பித்து விட்டது. ஐரோப்பியர்கள் கூறிய இலெமூரியாவே தமிழர்களின் குமரிநாடு என்று   1940 ஆம் ஆண்டில் ஒன்பதாவது வகுப்பு பாட நூலில் கூறப்பட்டது. தொடர்ந்து  1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, குமரிக் கண்டம் பற்றிய அன்றைய தமிழ் அறிஞர்கள் மற்றும்  ஆர்வலர்களின் கருத்துகள் வேகமாகப்பரவின. தமிழின் தொன்மை பற்றி ஆராய அறிஞர் மு.வ. அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் 1981 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் வரலாற்றுப் பாட நூலிலும் குமரிக் கண்டம் இடம் பெற்றது.

          1902 ஆம் ஆண்டு முகிழ்த்த குமரிக் கண்ட கருதுகோள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, தி.மு.கழக ஆட்சியில்  செழித்தோங்கியது. இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல், மதுரையில் 1980 இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் குமரி கண்டம் குறித்து, ப. நீலகண்டன் அவர்கள் இயக்கிய ஆவணப் படம் ஒன்று அன்றைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் திரையிடப் பட்டது. PLATE TECTONICS, கடல்கோள் என எல்லாவற்றையும் கலந்து மசாலா செய்து உருவாக்கப் பட்ட இந்த படத்தை லட்சக் கணக்கான பொது மக்களும் பார்த்து மகிழ்ந்தனர். 

          தேவநேயப் பாவணரின் (இவரது கருத்தைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்) மாணவர்களில் ஒருவரான மதிவாணன் அவர்கள்(1991) குமரி நாகரிகம் 50000  ஆண்டுகளுக்கு முன் செழித்திருந்தது; பின்னர் சுமார் 16000 ஆண்டுகளுக்கு முன் படிப் படியாக பல்வேறு கடற்கோள்களால் அழிந்துபோயிற்று எனும் கருத்தை தன ஆசானின் வழி நின்று வெளியிட்டார். கொஞ்சம் யோசிக்க வேண்டும். இன்றைக்குக் கிடைத்துள்ள தொல்லியல் மற்றும் மொழியியல் தரவுகளின் அடிப்படையில் தமிழ் மொழி   50000 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கிய வளம் பெற்றிருந்தது எனக் கூற இயலுமா? 

குமரி நாடு பற்றி பலரும் பலப்பல பேசியும் எழுதியும் வந்த போதும், அந்த கற்பனை  நிலப்பகுதியின் நீளம், அகலம், பரப்பளவு ஆகியவை பற்றி அவர்களிடம் ஒத்த கருத்து இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதைப் போலவே குமரிக் கண்டத்தை அழித்த கடல்கோள்கள் எப்போது நிகழ்ந்தன என்பது பற்றியும் குமரிக் கண்ட ஆதரவாளர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. 

குமரி முனைக்குத் தெற்கே எவ்வளவு தூரம் நீண்டிருந்தது குமரிக் கண்டம்?


•   பரிதிமாற் கலைஞர்  (1903), தனது “தமிழ் மொழியின் வரலாறு” எனும்  நூலில், ஒரு காதம் என்பது பத்து மைல், எழுநூறு காதம் என்பது ஏழாயிரம் மைல்; எனவே குமரி நாடு இன்றைய குமரி முனைக்குத் தெற்கே கெர்கியிலன் தீவு வரை இருந்திருக்கலாம் என்கிறார். கெர்கியிலன் தீவு எங்கேயுள்ளது என்பதைப் படத்தைப் பார்த்து அறிக.
•   பூர்ணலிங்கம்பிள்ளை(1904) , பரிதிமாற்கலைஞர்  அவர்களின் கருத்தையே வழி மொழிகிறார்.
•   அரசன் சண்முகனார்  (1905)  குமரி நாடு பல ஆயிரம் மைல்கள் நீண்டிருந்திருக்கும் எனக் கருதுகிறார்.
•   சோமசுந்தர பாரதியார் (1912),  சுமார் 6000 முதல் 7000 மைல்கள் வரை இருக்கலாம் எனக் கணக்கிடுகிறார்.
•   ஆப்ரகாம் பண்டிதர் (1917),  இராகவ அய்யங்கார் ஆகியோர் இந்த தூரம் 1400 முதல் 3000 மைல்கள் வரை இருக்கலாம் என எண்ணுகிறார்கள்.
•   ந.சி. கந்தையா பிள்ளை (1934), யாப்பருங்கல விருத்தி எனும் நூலில் குறிப்பிட்டுள்ள கணக்கின்படி, 700 காதம் என்பது   2800 மைல் எனும் முடிவுக்கு வருகிறார்.  
•   மறைமலை அடிகள் (1948) குமரிக் கண்டம் தென் துருவம் வரை நீண்டிருந்திருக்கும் எனக் கருத்து தெரிவிக்கிறார்.
•   தேவநேயப் பாவாணர் (1956) தனது “தமிழர் வரலாறு” நூலில் குமரிக் கண்டம் தென்வடலாக ஏறத்தாழ 2500 கல் நீண்டிருந்தது என்கிறார்.
இவை அனைத்திற்கும் மாறாக,
•   உ.வே.சாமிநாத அய்யர், இரு கூற்றம் அளவிற்கு சில கிராமங்கள் மூழ்கி இருக்கலாம் எனக் கருதுகிறார்.

          எழுநூறு காதத்தில் நாற்பத்து ஒன்பது நாடுகள் இருந்தன என உரையாசிரியர் கூறுவதால் அது நீட்டல் அளவையாக இல்லாமல் பரப்பு அளவையாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனின் 2800 ச.கி.மீ. (நாடு என்பது இன்றைக்கும் கொல்லிமலைப் பகுதிகளில் சிறு கிராமத்தையே குறிக்கும், எனவே அதில் ஒன்றும் சிக்கல் இல்லை).  கடற்கரையோரம் சுமார் 280 கி.மீ. துரத்திற்கு( கடற்கரையின் நீளத்தைச் சொல்கிறேன்) சுமார்  10கி.மீ. அளவிற்குக் கடல் உட்புகுந்திருந்தால் (இதற்கு வாய்ப்புகள் உண்டு) அடியார்க்கு நல்லாரின் கணக்கு சரியாகிறது. ஹோலோசீன் கடல் மட்ட உயர்வின் போது இது நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. 

          ஹோலோசீன் கடல்மட்ட உயர்வு பற்றிப் பேசுவதற்கு முன்  இலெமூரியாகண்ட  கருதுகோள்  எழ எது காரணம் அல்லது என்ன காரணம் என்பதைப் பார்த்து விடலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொழிற்புரட்சி உச்சக் கட்டத்தை எட்டியபோது, இயந்திரங்களை இயக்க ஆற்றல் தேவைப்பட்டது. புவியியலாளர்கள் நிலக்கரி படிவங்களைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். நிலக்கரி படிவங்கள் படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும். தொல்லியல் எச்சங்களும் படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும் என்பதையும்  இங்கே குறிப்பிட வேண்டும்.  நிலக்கரியைத் தேடிச்சென்ற புவியியலாளர்களுக்கு, குறிப்பாக, தொல்லுயிரியலாளர்களுக்கு  (PALAEONTOLOGIST) பல வியப்புகள் காத்திருந்தன. பலவிதமான தொல்லுயிர் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் பூமியின் தொல்நிலஅமைப்பை (PALAEO GEOGRAPHY) அறிந்துகொள்ளும் வேட்கையைத் தூண்டின. இந்தியாவில் கிடைத்தத் தொல்லுயிர் எச்சங்களும், மடகாஸ்கர் தீவில் கிடைத்த தொல்லுயிர் எச்சங்களும் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருந்தன. இவற்றுள், இலெமூர் எனும் உயிரினத்தின் தொல்லுயிர் எச்சங்களும் அடங்கும். இன்றும் இலெமூர் உயிரினம் ஆப்ரிக்கா, மடகாஸ்கர், இந்தியா போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றது. ஆப்ரிக்காவில் 20 வகை, மடகாஸ்கரில் 18 வகை, இந்தியாவில் மூன்று வகை    இலெமூர்கள் இருப்பதாக உயிரியலாளர்கள் சொல்கிறார்கள்.


          இன்றைக்கு சுமார் நான்காயிரம் கி.மீ. அகல கடலால் பிரிக்கப் பட்டிருக்கும் இரண்டு இடங்களில் ஒரே மாதிரியான உயிரினங்கள் வாழ்ந்தனவா? அப்படியெனில் இந்தியாவிலிருந்து மடகாஸ்கருக்கு, ஏதேனும் இணைப்பு இருந்திருக்குமோ, அந்த இணைப்பின் அல்லது பாலத்தின் வழியே உயிரினங்கள் அங்கும் இங்கும் சென்றிருக்குமோ எனும் எண்ணம் பல அறிஞர்கள் நடுவே உருவானது.

          கண்டங்கள்  LAND BRIDGE  மூலமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் எண்ணம் 1850 களில் வலுப் பெற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த எர்நெஸ்ட் ஹெய்ன்ரிச் ஹேக்கல் எனும் உயிரியலாளர் மனிதன் தெற்கு ஆசியாவில் தோன்றி இந்த LAND BRIDGE வழியே ஆப்பிரிக்கா சென்றிருக்க வேண்டும் என்று எண்ணினார். 


          தொடர்ந்து பிலிப்ஸ் ஸ்க்லேட்டேர் எனும் ஆங்கிலேய விஞ்ஞானி தான் வெளியிட்ட MAMALAS OF MADAGASKAR எனும் கட்டுரையில், இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையே இருந்ததாக எண்ணப்பட்ட LANDBRIDGE ற்கு (இங்கே LANDBRIDGE எனக்குறிப்பிடப்படுவது ஒரு பெரும் நிலப் பரப்பு)    இலெமூரியா என்று நாமகரணம் சூட்டினார்.   

          இலெமூர்கள் வாழ்ந்த இடம், ஆதலின், ஸ்க்லேட்டேர் இலெமூரியா எனப் பெயரிட்டார் அவரின் கட்டுரை THE QUARTERLY  JOURNAL OF SCIENCE (1864) இதழில் வெளியானது. 

          உலகெங்கும் பேசப்பட்டது. கண்டங்களை இணைத்ததாகக் கருதப்படும் “இலெமூரியா கண்ட கோட்பாடு” தோன்ற முக்கிய காரணம், கண்டங்கள் நிலையானவை, அவை அசைவதில்லை என்னும் தவறான கருத்து அந்நாட்களில் நிலவியதுதான். 

          கண்டம் எனும் சொல்லிற்கு ‘துண்டு’ என்பது பொருள். (எ.கா. “கண்ட துண்டமா வெட்டிப் போட்டான்”,‘உப்புக்கண்டம்’ போன்றன.) இதற்கு எதிர்ச் சொல் ‘அகண்டம்’ (எ.கா. அகண்ட இந்தியா).

          தற்போது இலெமூரியா எனும் பெயர்  தமிழ்கூறும் நல்லுலகில் மிகப் பரவலாகப் பேசப்படும் பெயர். இந்த கற்பனைக் கண்டத்திற்கு இலெமூரியா என ஏன் பெயரிடப்பட்டது என்பதற்கு  உண்மைக் காரணத்தை விட்டு விட்டு நம் மக்கள் பல்வேறு கதைகள் சொல்கிறார்கள். அவற்றில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.

          “இந்தக்கண்டத்தில் மூலிகைகள் நிறைந்திருந்தன. அவை அனைத்தும் இலை மூலிகைகள். மூலிகை என்பது மூரிகை எனத் திரிந்தது. இலைமூலிகைஇலைமூரிகை, இலைமூரிகை - இலெமூரியா என மாறிவிட்டது.” இது ஒரு விளக்கம். இதைப்போல நிறைய உள்ளன. ஏடு இட்டோர் இயல்தான் EDITORIAL , தோற்றோர் இயல்தான் TUTORIALஎன்பதுபோல்தான் இதுவும்.).

          கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கொடி கட்டிப் பறந்த “இலெமூரியா கண்ட கருதுகோள்” இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய  ‘CONTINENTAL DRIFT’   கருத்தால் சற்று ஆட்டம் காண ஆரம்பித்தது. தொடர்ந்து வந்த   ‘OCEAN FLOOR SPREADING’ கருத்துகளும் அதைத் தொடர்ந்து வந்த  PLATE TECTONICS  கருத்தும் இந்த இலெமூரியா கண்ட கோட்பாட்டினை ஓரம் கட்டி விட்டன.

          ஆனால், நம் தமிழ்நாட்டு மொழி அறிஞர்களோ, ஓரம்கட்டப்பட்ட கருதுகோளை எடுத்துக் கொண்டு, இதுதான் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ‘குமரிக் கண்டம்’  என்று இன்றும் சொல்லி வருகிறார்கள். கற்பனையில் தோன்றிய இந்த கண்டத்திற்கு, வடிவம் ஒன்றும் கொடுத்து வரைபடம் ஒன்றும் கொடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறீர்கள் என்றால், ‘இலக்கியச் சான்றுகள்’ உள்ளன என்கிறார்கள். 



குமரிக்கண்டம், குமரி நாடு, குமரிப் பரப்பு, குமரி நிலம், குமரி மலை, குமரித் தொடர், குமரி ஆறு போன்ற தொடர்களில் ஒன்று கூட தமிழின் தொன்மையான இலக்கியங்கள் என்று  கருதப்படும் தொல்காப்பியத்திலோ அன்றி சங்கப் பாடல்களிலோ காணப் படவில்லை என்பதுதான் உண்மை. 

          குமரிக் கண்டம் என்று ஒன்று இருந்ததென நம்புகிறவர்கள், அந்தக் கண்டம் கடல்கோளால் அழிந்தது என்றும் நம்புகிறார்கள். அப்படித்தான் நம்பியாக வேண்டும்; வேறு வழியில்லை. ஆனால், கடல்கோள்கள பற்றியும், இவர்களிடையே ஒத்த கருத்து இல்லை என்பதே உண்மை. 




---

No comments:

Post a Comment