Saturday, September 14, 2019

வாழ்வை அதன் போக்கில் கண்டவர் புதுமைப்பித்தன் !


 ——   இரா.குமரகுருபரன்


            கடவுளை ‘கீழே இறக்கிய’ பெருமை புதுமைப்பித்தனுக்கு உண்டு என்று பீடிகை போட்டார் மொழிபெயர்ப்பாளரும் ஆங்கிலப் பேராசிரியருமான செல்லப்பன்...  தமது மையக் கருத்துரையில் அவர் புதுமைப்பித்தனின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.

            புதுமைப்பித்தன் எழுதிய மொத்தச் சிறுகதைகளையும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு சாகித்திய அகாதெமி மொழிமாற்றம் செய்துள்ளது. தமிழ், மலையாளம் அறிந்த மொழியியல் அறிஞரும் எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் மொழியியல் பேராசிரியருமான ஆர். இ. ஆஷர், ஆங்கில மொழிப் பேராசிரியர் முனைவர் வி.சுப்பிரமணியன் இருவரும் இணைந்து மொழிபெயர்த்த “புதுமைப்பித்தன்: தி கம்ப்ளீட் ஷார்ட் ஸ்டோரீஸ்” என்ற நூலை, ஆகஸ்ட் 23 அன்று சென்னை பல்கலைக் கழக- தொல்காப்பியர் அரங்கில் துணைவேந்தர் முனைவர் இரா. தாண்டவன் வெளியிட்டார். துணைவியார் உடல்நலக் குறைவினால் மொழிபெயர்ப்பாளர் ஆஷர் கூட்டத்துக்கு வந்து தலைமை ஏற்க இயலவில்லை. புதுமைப்பித்தனின் புதல்வி தினகரி சொக்கலிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் பங்கு கொண்டனர்.

            நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் புதுமைப்பித்தனின் பொருத்தப்பாட்டை நினைவு கூர்ந்து பேச்சைத் துவக்கிய சாகித்திய அகாதெமியின் சென்னை பொறுப்பு அலுவலர் அ. சு. இளங்கோவன், "மேலை அறிஞர்களும், கிறித்தவத்தொண்டு நிறுவனங்களும் அறிமுகம் செய்த பின்னரே தமிழுலகம் பெரிய படைப்புகளை உணரத் துவங்கியது. கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற பலரும் தமிழ் கற்றபின் தமிழுக்குத் தொண்டு செய்தனர். ஒருமுறை சாகித்திய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த ஆஸ்திரேலிய அறிஞர்கள் கூட்டத்தில் ஆஷர், புதுமைப்பித்தனின் பெருமையை விளக்கிப் பேசினார். இளம் வயதிலேயே மறைந்த புதுமைப்பித்தன் சாவைக் கண்டு அஞ்சாதவர். தனது இறப்பைக்கூட எவ்விதத்திலும் துக்கமாக அனுசரிக்க வேண்டாம் என்றே உறுதியாகச் சொன்னவர். ‘ஜீனியஸ்’ என்பவர்கள் நெடுங்காலத்துக்குப் பின்னரே கிடைப்பார்கள். புதுமைப்பித்தனுக்குப் பின்னர் ஜெயகாந்தன் ஜீனியஸ் ஆக விளங்கி வருகிறார்.சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதலில் தோன்றிய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த நிகழ்வு நடைபெறுகிறது" என்று அவர் சிலாகித்தார்.

பேரா. செல்லப்பன், தமது மையக் கருத்துரையில் குறிப்பிட்டது வருமாறு :
            "சென்ற நூற்றாண்டு எழுத்தாளரைக் கவுரவப்படுதுவது சிறப்பு. புதுமைப்பித்தனை ஆங்கிலத்தில் நினைப்பது புதுமைதான். மொழிக்கு அங்கீகாரம் தரும் அமைப்பு சாகித்ய அகாதெமி. பாரதி கவிதைக்குப் புரட்சி செய்தார் என்றால், உரை நடை இலக்கியத்தில் புதுமையும், புரட்சியும் செய்தவர் புதுமைப்பித்தன். மு.வ. எழுதிய இலக்கிய வரலாற்றில் சிறுகதையின் தந்தை என்று ஐந்து பக்கங்கள் புதுமைப்பித்தனுக்கு ஒதுக்கினார்! வ.வே.சு. அய்யரும், பாரதியும்தாம் முதலில் உரைநடையை வசப்படுத்தினர். முழுக்க முழுக்க யதார்த்த பாணியில் சந்துபொந்துகளில் அலசி உயிருடனான பாத்திரங்களாகக் கதைகளில் உலவ விட்டது புதுமைப்பித்தன்தான். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், சராசரி மனிதர்கள் பற்றி அவர் எழுதினார். இலக்கியம் மன ஆவேசத்தின் எழுச்சி என்பதை உணர்ந்த புதுமைப் பித்தன் நடைமுறையை எழுதுவதில் கவுரவக் குறைச்சல் பார்க்காதவர்.

வாழ்வை அதன் போக்கில் கண்டவர் புதுமைப்பித்தன்: 
            சாதாரண மனிதர்களின் அசாதாரணத்தைச் சாதாரணத் தமிழில் கொண்டுவந்தவர்.சிறுகதைகளில் கடவுளை மனிதர்களாகக் கீழிறக்கியவர் அவர். “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்“ சிறுகதையில், கடவுள் கந்தசாமிப்பிள்ளையிடம் ‘உங்களுக்கு வரம் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும்‘ என்று சொல்லும்போது, 
'அதற்குத்தான் லாயக்கு’ என்பார் கந்தசாமிப்பிள்ளை. இப்படியாக கடவுளைக் ‘கீழே இறக்கிய’ பெருமை புதுமைப்பித்தனுக்கு உண்டு.

             "சாப விமோசனம்" கதையில் அகலிகை பாத்திரம் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தை அந்நியமாக்கியது அவர்தான். நனவோடை உத்தி முறையிலமைந்த அவரது படைப்புகளை வர்ஜீனியா வூல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ் படைப்புகளுடன் ஒப்பிடலாம். வாழ்க்கை அனுபவங்களூடே அர்த்தத்தைக் காட்டுவது இது. பிரக்ஞை மற்றும் எல்லா உணர்வுகளையும் போகிற போக்கில் விட்டுவிட்டு, அதிலிருந்து கண்டுபிடிப்பது.

            ராமன் சென்றபின்னர் சீதைக்கும், அகலிகைக்கும் நடைபெறும் உரையாடலில் ராமன் அக்கினிப்பிரவேசம் நிகழ்த்தச் சொல்லியதை அகலிகை கேட்கும்போது,                       
           “...என்ன, அவன் அப்படிக்கேட்டானா?” என்று துடித்துக் கத்துவாள்...
            ”உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறிச் சிரிப்பாள் சீதை....
            ”உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா ..” என்று அகலிகை கேட்பாள். 
பதில் சொல்லமுடியாது சீதைக்கு. அகலிகை மீண்டும் கல்லானாள் என்பதாகக் கதை முடியும். ஒரு பெண்ணின் பெரும் கலகக் குரல் இது. 

            ராமாயணம் படிப்பவர்களைப் பற்றி கவலையே படாதவர் புதுமைப்பித்தன்! “சாப விமோசனம்“ கதைத் தொடக்கத்தில் இராமாயண பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை என்பார். யதார்த்தம், புனைவு, சர்ரியலிசம் இணைந்த கலவை அவரது படைப்பு! “மகாமாசானம்“ கதையில் பிச்சைக்காரனின் பிணம் மூலம், வாழ்வையும் மரணத்தையும் அருகருகே வைத்து ஒப்புநோக்கி ஊடாடல் நிகழ்த்துகிறார்.

            "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" கதையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் என்றால், "சாபவிமோசனத்தில்" குழந்தைக்கும் கிழவனுக்குமாக; பிறப்புக்கும், இறப்புக்குமாக நிகழும். ‘தகரப்பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக்கொண்டு’ சம்பூர்ணமாகிப்போவான். எவ்வளவு பெரிய உண்மை! குழந்தைக்குச் சாவே புதுமையாகத் தோன்றும். இறப்புக் கோட்பாடு பற்றி குழந்தையின் அழகியல் கோட்பாட்டில் நின்றுகொண்டு, புதுமைப்பித்தனுக்கு இயல்பாகச் சொல்ல முடிகிறது! 

            ஈ மொய்க்கும் கிழவனின் மரணத்தருவாயில் மாம்பழம் வாங்கி வரும் அப்பாவிடம், “வாசனையா இருக்கே! “ என்று பழவாசனை குறித்துப் பேசமுடிகிறது குழந்தைக்கு... என்ன அற்புதமான படைப்புத் திறன்! மரணத்தைத் தாண்டி வாழ்வின் மீது பிடிப்பு ஏற்படுத்தும் யதார்த்த அறிவிப்பல்லவா அது! சாவுக்குமேல் தன்னை நிலைநாட்டும் வாழ்வு பற்றி அந்தக் குறுகிய கணத்தில் உண்மை வெளிப்படுகிறது.

            ஒரு துளியில் வாழ்வின் நிரந்தரம் பற்றி எழுதிய உரைநடைக் கவிஞன் புதுமைப்பித்தன்.மொழிபெயர்ப்பில் தங்குதடையில்லை.  ஆஷரின் ஆங்கில மனமும், சுப்பிரமணியத்தின் தமிழ் மொழி நடையும் இணைந்து படைப்பில் வெளிப்படுகிறது.புனைவு என்பது கவிதையை விடச் சிக்கலானது. வாழ்வுடனான முரண்கள் பற்றிப் பல மொழிகளும் பேசுகின்றன. சென்னை மாநகரின் கலிடாஸ்கோப் தரிசனம் வியக்க வைக்கிறது. புதுமைப்பித்தன் பாதையில் நாமும் நடந்திருக்கிறோம். 

            மொழிபெயர்ப்பில் கவிதையாக எஞ்சி நின்று விரிகிறது படைப்பு! வேட்கைகளை, மொழிபெயர்ப்பு புதுப்புது அர்த்தங்கள் மூலம் புதிதாகப் படைக்கின்றது. பிளேட்டோ சொன்னது போல, உலகமே 'போலச்செய்வதுதான்'; மொழிபெயர்ப்பு என்பது 'போலச் செய்தலின்' போலச் செய்தலே... "போலச்செய்தல் மூலம் யதார்த்தத்தை அடையமுடியும்" என்றார் தெரிதா. மொழிபெயர்ப்பின் மூலமே உண்மை உணர்தல், வளர்ச்சி சாத்தியப்படும். ஒவ்வொரு பிரதிக்கும் உள்ளே பொதிந்து கிடக்கும் உபபிரதி மூலமாக முழுமைபெறாது தொடர்கிறது படைப்பு. தேடிக்கொண்டே இருக்கும் திறனாய்வாளர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் இந்த அறிதல் சாத்தியமாகிறது." 

            மொழிபெயர்ப்பில் உள்ள நுட்பமான பிரச்சனைகளை, வட்டார வழக்குகளை எடுத்துரைத்தார் சகமொழிபெயர்ப்பாளர் வி.சுப்பிரமணியம்.   எழுத்தாளர் மாலன், முனைவர் பா.வளன் அரசு, அபிலாஷ், பேரா. ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோர் உரையாற்றினர். சென்னைப் பல்கலை ஆங்கிலத் துறை-சாகித்திய அகாதெமி சார்பில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.   காலச்சுவடு பதிப்பகத்துக்காக 2000-ஆவது ஆண்டில் ஆ. இரா. வெங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தனின் 99 சிறுகதைகளும் சாகித்திய அகாதெமியின் இந்த வெளியீட்டில் இடம் பெற்றிருக்கின்றன.குறிப்பு:  ஆகஸ்ட் - 2014, "யாம் பெற்ற  இன்பம் பெறுக இவ்வையகம்" நிகழ்வின் தொகுப்பு
No comments:

Post a Comment