Friday, September 13, 2019

வ.உ.சி.யும் இஸ்லாமியர்களும்——    ரெங்கையா முருகன்


            வ.உ.சி. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி ஆரம்பிக்கும் போது பங்குதாரர்களாக ஆசியா கண்டத்தைச் சார்ந்த  இந்தியா, இலங்கை, பர்மா, ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர்கள் ஆகியோர் பங்கு கொள்ளலாம். ஐரோப்பியர்களிடமிருந்து பங்குகள் பெற்றுக் கொள்ளப் படமாட்டாது என்று அறிவித்தார்.  எல்லா சமூகத்தாரையும் சுதேசி நேவிகேஷன் மூலம் இணைப்பதையும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்தார் வ.உ.சி.  பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித் துரைத் தேவர் தலைவராகவும், மற்றும் சுதேசி கம்பெனி பங்கில் 8000 பங்குகள்( 1 பங்கு   ரூ. 25) 8000 X 25  = Rs. 2,00,000)வாங்கி சுதேசி கம்பெனிக்கு உயிரூட்டம் அளித்த ஹாஜி முகமது பக்கீர் சேட்& சன்ஸ் , கம்பெனியின் காரியதரிசியாகவும் இருந்துள்ளனர்.

            வ.உ.சி. தனது சுயசரிதையில் பின்வருமாறு முகமது பக்கீர் சேட் குறித்துக் குறிப்பிடும் போது: 
“பாக்கிய மிகுந்த பக்கிரி முகம்மதை
வாக்கின் வலியால் வசப்படச் செய்தி
யான் வணிகர் பலரையும் வருந்தி அவனிலம்
துணிவோடு சுதேசி நாவாய்ச் சங்க நன்மலர் கண்டேன்.

            3.11.1906 இந்தியா இதழில் சுதேசி கப்பல் கம்பெனியின் டைரக்டர்கள் பட்டியலில் முதலாவதாக ஹாஜி பக்கீர் முகமது சேட் பெயர் இடம் பெறுகிறது.

            29.12.1906 இந்தியா இதழில் இஸ்மாயில் ஹாஜி அப்துல் ரகுமான் சேட் பெயர் 14வது டைரக்டர்களில் இடம் பெற்றுள்ளது.

            சுதேசி கப்பல் கம்பெனி முதலீட்டில் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பாகும்.

            1908 ல் வ.உ.சி.யை சிறைக்கு அனுப்பிய பிறகு சுதேசி கம்பெனி சரியத் தொடங்கியது. நட்டமடைந்து வரும் கம்பெனியை காப்பாற்ற, சரிவை மீட்க  இந்தியா இதழ் சார்பாக தரும நிதி திரட்ட பாரதியார் முயற்சி செய்தார்.  அதில் தமிழக இஸ்லாமியர்களின் பங்களிப்பு ரூபாய் 180/- திரட்டப்பட்டது. இது பத்தில் ஒரு பங்கு இஸ்லாமியர்கள் அளித்தது.

            வ.உ.சி. சிறை சென்றதும், நெல்லையில் நடைபெற்ற எழுச்சி போராட்டத்தில் வெள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது நான்கு நபர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த நான்கு நபரில் ஒருவர் தியாகி முகமது யாசின்.

            வ.உ.சி. வறுமைப் பட்ட இறுதிக் காலத்தில் உத்தமபாளையம் கோம்பை சார்ந்த உ.ம.சே. முஹைதீன் பிள்ளை சாஹிப் வ.உ.சி. எழுதிய நூல்களினை வாங்கி விற்றுக் கொடுத்து உதவி புரிந்துள்ளார்.  இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வ.உ.சி. மடல் எழுதியுள்ளார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த கே.எம். அகமது மீரான், முஹைதீன் பிள்ளை வ.உ.சி.யுடன் மிக்க நேசம் கொண்டுள்ளவர்களாக அறியப்படுகிறது.

வ.உ.சி.க்கு மீண்டும் வாதாட சன்னத் வாங்கி கொடுத்த இஸ்லாமியப் பெருமகனார்:
            சென்னை வாழ்வு வ.உ.சி.க்கு பெரும்பாலும் வறுமை உழன்ற வாழ்வாகத்தான் இருந்தது. தமிழ்ப் பணிகளோடு அரிசிக் கடை வியாபாரம், மண்ணெண்ணெய் கடை வியாபாரம் பல தொழில்கள் நடத்திப் பார்த்து ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை.

            வெள்ளையர் அரசாங்கம் கோர்ட்டில் சென்று வழக்காடும் உரிமையைப் பறித்து விட்டது.  மீண்டும் வழக்காடு மன்றத்தில் வழக்குரைஞர் சன்னத்தை உரிமையைப் புதுப்பிக்க முயற்சி செய்தார்.  அப்போதைய தலைமை நீதிபதி அப்துல் ரகீம் என்பவரிடம் வ.உ.சி., தண்டபாணி பிள்ளை, சங்கரன் நாயர் ஆகியோர் சேர்ந்து மனு செய்து முறையிட்டார்கள்.

            அப்போதைய பெரும் வக்கீல் இராஜாஜி இது நடவாது என்று கூறி தலையிட மறுத்து விட்டார்.  அவரைத் தொடர்ந்து சங்கரன் நாயரும் பின்வாங்கி விட்டார்.  இந்த விசயத்தில் அஞ்சாநெஞ்சன் அப்துல் ரகீம் துணிச்சலோடு வ.உ.சி.யை வழக்கறிஞர் வேலைக்குப் பரிந்துரை செய்து விட்டு பிரச்சினை வரும் என்று எண்ணி அப்துல் ரகீம் முன்னெச்சரிக்கையாக  வங்காளத்துக்குப் பணி மாறுதல் செய்து கொண்டு போய்விட்டார்.

            இதனைத் தொடர்ந்து வாலஸ் என்பவரின் உதவியோடு மீண்டும் வ.உ.சி.க்கு வாதாட வழக்கறிஞர் சன்னத் கிடைத்தது.  சாதி, மதம், இனம் பாராது நடந்த வேள்வியில் கிடைத்த சுதந்திரம் இது.  வ.உ.சி.யின் வாழ்வில் நீதிபதி அப்துல் ரகீம் மிகவும் முக்கியமானவர்.
மூலம்: செ. திவான் எழுதிய விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள்.
என். தண்டபாணி பிள்ளை எழுதிய சில சுவையான குறிப்புகள்: வ.உ.சி.குறித்துகட்டுரையாளர் குறிப்பு: ரெங்கையா முருகன்
19ஆம் நூற்றாண்டு தமிழ் ஆளுமைகள், அச்சு ஊடகப் பண்பாடு, பழங்குடிகள் மற்றும் வெகுசன கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறவர். ‘அனுபவங்களின் நிழல் பாதை’ எனும் நூலின் ஆசிரியரான இவர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை நூலகராக பணிபுரிந்து வருகிறார்.   தொடர்புக்கு: amthara73@gmail.comNo comments:

Post a Comment