Monday, April 13, 2020

நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால் சரியான விளக்கம் கிடைக்குமா ?—   முனைவர்.ப.பாண்டியராஜா


          நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால்  சரியான விளக்கம்  கிடைக்குமா? என்ற ஒரு கேள்வி எழுந்தது. இதைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் தற்செயலாக எனக்குச் சில விளக்கங்கள் கிடைத்தன. இப்போது நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியத்திற்காக, ‘விதிர்’ என்ற சொல்லை விளக்க முற்படுகையில் இது நிகழ்ந்தது.

குறும்பூழ் எனப்படும் காடைப்பறவைக்கு மேனி முழுக்கப் புள்ளி புள்ளியாக இருக்கும். யாரோ ஒருவர் சிவந்த அரக்கினை அதன் உடம்பில் தெளித்துவிட்டாற்போன்று அது இருக்கிறதாம்.

                    விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
                    காமர் சேவல் - அகம் 103/3,4

தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையுடைய
அழகிய குறும்பூழ் சேவல்         
என்கிறது அகநானூறு.

          ஒரு பாத்திரத்தில் ஏதோ ஒரு குழம்பில் ஐந்து விரல்களையும் மேலாக நனைத்து, விரல்களைக் குவித்துப் பின்னர் ஒரு பரப்பின் மீது விசையுடன் பலமுறை தெறித்துவிட்டாற்போன்று அந்தப் புள்ளிகள் இருக்கின்றனவாம். இதைத்தான் ’விதிர்த்த போலும்’ என்கிறது பாடல்.

          திருமண நிகழ்ச்சிகளில் வாசலில் நுழையும்போது பன்னீர் தெளிக்கிறார்கள் இல்லையா? அதுவும் விதிர்த்தலே.

          அடுப்பில் ஒரு திறந்த சட்டியில் ஏதோ வெந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு கரண்டியும் போடப்பட்டுள்ளது. கரண்டி சுடத்தானே செய்யும்? அதை அறியாமல் ஒருவர் அந்தக் கரண்டியின் கைப்பிடியைப் பிடிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவருக்குக் கை சுட்டுவிடும். உடனே அவர் என்ன செய்வார்? கரண்டியை விட்டுவிட்டு, கையைப் பலமுறை உதறுவார் இல்லையா? அதுவும் விதிர்த்தல்தான்.

          ஒரு தலைவனும் தலைவியும் தனிமையில் சந்தித்துக்கொள்கிறார்கள். சங்க கால வழக்கப்படி, ஆண்கள் தலையில் மாலை அணிந்துகொள்வது வழக்கம். இதைக் கண்ணி என்பார்கள். அன்றைய காலத்தில் ’கிராப்’ வெட்டிக்கொள்ளும் பழக்கம் கிடையாது. தலைமுடியை உச்சிக்குடுமி போல் கட்டி, அதை மலர்ச் சரத்தால் சுற்றிக்கொள்வர். இது ஆண்கள் தலையில் அணியும் மாலை. கண்ணி எனப்படும். பெண்கள் சூடிக்கொள்ளும் பூச்சரம் கோதை எனப்படும். ’கூந்தல் வேய்ந்த கோதையும்’ என்கிறது பெருங்கதை. தலைவி என்ன செய்கிறாள் - தலைவன் கண்ணியைக் கழற்றித் தன் கூந்தலுக்குள் செருகிக்கொள்கிறாள். வெளியில் தெரியும்படி அணிந்துகொள்ளமுடியாது. பூச் சூடாமல் வெளியில் சென்றவள் பூவுடன் திரும்பி வந்தால் வீட்டில் கேள்வி கேட்பார்களே!

          வீட்டுக்கு வந்தவளின் தலைமுடியைச் செவிலித்தாய் அவிழ்க்கிறாள். உள்ளே மறைத்துவைத்திருந்த பூ வெளியில் வந்து விழுகிறது. அப்பனும் ஆத்தாளும் வீட்டில்தான் இருக்கிறார்கள். அவள் வெளியில் பூச்சூடாமல் சென்றது அவர்களுக்குத் தெரியாது போலும். எனவே அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. செவிலித்தாய்மட்டும் கவனித்துப் புரிந்துகொள்கிறாள். எனினும், வெளியில் வந்து விழுந்த பூவைப் பார்த்துத் திடுக்கிட்டுப்போன செவிலி, “ஐயோ, குட்டு வெளிப்பட்டுவிடும் போலிருக்கிறதே” என்று கையைப் பலமுறை உதறியவாறு வேகமாக வெளியில் சென்று மறைகிறாள்.

          இந்தச் சூழலை மனத்திற்கொண்டு, “அச்சச்சோ” என்று கூறிக்கொண்டு நீங்கள் கைகளை உதறிப்பாருங்கள். இதுவும் விதிர்த்தலே. இது என்னுடைய விளக்கம் அல்ல. இதற்கு ஒரு சங்கப்பாடல் உண்டு.

                    புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்
                    முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்
                    கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
                    வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
                    அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
                    அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ
                    அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்
                    நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
                    நீங்கி புறங்கடை போயினாள் - கலி 115/11,12

இதன் பொருள்:
ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே! என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே!
என் செவிலித்தாய் என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக, அவள் முன் விழுந்தது அந்தப் பூ;
அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை,         
நெருப்பைக் கையால் தொட்டவர் அக் கையை விதிர்க்குமாறு போலக் கையை விதிர்த்து வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள்.
"நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்" என்ற தொடர் இக்காட்சியில் வரும் விதிர் என்ற சொல்லை நன்கு விளக்கும்

          இப்போது இன்னொரு காட்சிக்குச் செல்வோம். இது ஒரு திருமணக் காட்சி.
                    ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
                    தண் நறும் சாந்தம் கமழும் தோள்மணந்து - அகம் 186/11,12

இதன் பொருள்:
மிக்க தண்மை வாய்ந்த முழவினைக் குறுந்தடியால் அடிக்கவும்
தண்ணிய நறிய சந்தனம் நாறும் தோளையுடையவளை மணம்புரிந்து
என்பது இதன் பொருள் என்கின்றந்த உரை.
முழவு = மத்தளம். குணில் = குறுந்தடி. எறிதல் = அடித்தல்.
ஆனால் இங்கே விதிர்ப்ப என்ற சொல்லுக்கு எந்த உரைகாரரும் வேறு விளக்கம் தரவில்லை. எறி குணில் விதிர்ப்ப என்பதற்குக் குறுந்தடியால் அடிக்க என்றுமட்டுமே உரை சொல்கின்றனர். இங்கு ‘எறி குணில் விதிர்ப்ப’ என்ற தொடரை உற்றுப்பார்க்கவேண்டும். அடிக்கின்ற குறுந்தடி அடிக்க என்பது கூறியது கூறல் ஆகாதா?

          முதலில் குறிப்பிட்ட பல வகை விதிர்ப்புகளை உற்றுநோக்குங்கால், விதிர்த்தலில் ஒரு விரைவான செயல் (quick action) தெரிகிறது. எனவே, இங்குக் கூறப்பட்டுள்ள ’எறி குணில் விதிர்ப்ப’ என்பதிலும் ஒரு விரைவான செயல் இருக்கவேண்டும். ’அடிக்கும் குறுந்தடி வேகமாக இயங்க’ என்ற பொருள் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இங்குக் குறிப்பிடப்படும் முழவினைத் தடியால் விதிர்ப்பது என்பது, ஒரு மண நிகழ்வின் போது நடப்பதாகும். ’எறி குணில் விதிர்ப்ப---தோள் மணந்து’ என்று வருவதால், தற்காலத்துத் திருமணங்களில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் நேரத்தில் எழுப்பப்படும் கெட்டிமேளம் போல் அன்றைக்கும் விரைவாக முழவு அடிக்கப்படுவதையே பாடலாசிரியர் ’எறி குணில் விதிர்ப்ப’ என்கிறார் என்று தோன்றுகிறது. எனவே, ‘எறி குணில் விதிர்ப்ப’ என்பதற்குக் ’கெட்டிமேளம் முழங்க’ என்று பொருள்கொள்ளலாம்.

இப்பொழுது சொல்லுங்கள்:
நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால்  சரியான விளக்கம்  கிடைக்குமா ?


தொடர்பு:
முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/1 comment:

  1. அருமையான விளக்கம் , நன்றி 🙏

    ReplyDelete