Monday, April 27, 2020

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி

 – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்


          தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி குறித்து  வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் புதிய ஆதாரங்கள்

          தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் 1999 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டிய போது எதிர்பாராதவகையில் நூற்றுக்கணக்கான “ஈய” நாணயங்கள் வெளிவந்துள்ளன. இவற்றை முதலில் அவதானித்த அவ்வூர் மக்கள் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணராது அந்நாணயங்கள் பலவற்றை பழைய பொருட்களை வாங்கும் கடைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர். இந்நிலையில் இது பற்றிய செய்தி நாணயவியல் அறிஞரும், 1990 காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதியாகவும் இருந்த திரு. ராஜாவிக்கிரமசிங்கே  அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் பிரான்ஸ் நாட்டு நாணயவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராகக் கடமையாற்றி வரும் எமது நாட்டுப் பேராசிரியர் பொபேஆராய்ச்சியுடன் இணைந்து மக்களால் விற்பனை செய்த கடைகள், நாணயங்கள் வெளிவந்த இடங்கள், அவ்வூர் மக்கள் எனப் பல இடங்களிலிருந்து இந்நாணயங்கள் பலவற்றைச் சேகரித்து அவற்றைச் சிறந்த முறையில் ஆவணப்படுத்தி Ruhuna an Ancient Civilization Revisit என்ற நூலில் வெளியிட்டிருந்தனர்.

          இந்நாணயங்கள் பலவற்றின் முன்பக்கத்தில் பிராமி எழுத்தில் அதை வெளியிடக்காரணமாக இருந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது இந்நாணயங்களின் சிறப்பான அம்சமாகக் காணப்படுகின்றது. இவை பண்டைய இலங்கையில் வழக்கிலிருந்த எழுத்து, மொழி, ஆட்சியிலிருந்த சிற்றரசர்கள் முதலானவற்றை அறிந்து கொள்ள நம்பகரமான சான்றாகக் காணப்படுகின்றன. நாணய மற்றும் சாசனவியல் அறிஞர்கள் இந்நாணயங்களில் தெளிவாகக் காணப்படும் எழுத்துக்களின் எழுத்தமைதியைக் கொண்டு இவை 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இவை தென்னிலங்கையிலேயே வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதை நாணயங்கள் காணப்பட்ட இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் நாணய அச்சுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் நாணயங்களும், நாணய அச்சுக்களும் காணப்பட்ட இடம் பண்டைய காலத்தில் நாணயங்களை உற்பத்தி செய்யும் தொழிற் கூடமாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

          இந்நாணயங்கள் பற்றி முதலில் ஆய்வு செய்த பேராசிரியர் பொபெயாராச்சி மற்றும் ராஜாவிக்கிரமசிங்கே ஆகியோர் நாணயங்களில் உள்ள எழுத்து வடிவத்தை வடபிராமியாகவும், அவற்றின் மொழியைப் பிராகிருதமாகவும் பார்த்தனர். ஆயினும் இரண்டு நாணயங்களில் தமிழ்ப் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதை முக்கிய அம்சமாக்கச் சுட்டிக்காட்டிய அவர்கள் தமிழ் மொழியில் புலமையற்ற காரணத்தால் அவற்றின் பெயர்களைப் பிராகிருத மொழியாகவே பார்த்தனர். இந்நிலையில் இந்நாணயங்கள் தொடர்பாகக் கொழும்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட தென்னிந்தியத் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் வை.சுப்பராயலு அவர்கள் இந்நாணயங்கள் பற்றிய நூலை என்னிடம் தந்து நாணயங்களில் பொறிக்கப்பட்ட பெயர்களை மீள்வாசிப்பு செய்யுமாறு கூறியிருந்தார். இதற்கு வேண்டிய நாணய மூலப் பிரதிகளையும் (Coins Replica), நாணயங்களுக்குரிய அரிய புகைப்படங்களையும் பேராசிரியர் பொபெயாராச்சி மற்றும் ராஜாவிக்கிரமசிங்கே ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்நாணயங்கள் அனைத்தும் ஈயத்தில் வெளியிடப்பட்டிருப்பதால் கணிசமான நாணயங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் தேய்வடைந்து வாசிக்கப்படமுடியாத நிலையில் உள்ளன. ஆயினும் தேய்வடையாத நாணயங்களைக் கொண்டு அவற்றில் பொறிக்கப்பட்ட பெயர்கள் தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளுக்கு உரியவை என்பது தெரிகின்றது. அவற்றுள் ஐந்து நாணயங்களில் உதிரன், மஹாசாத்தன், கபதிகஜபன், தஜபியன், தி~புர சடணாகராசன், சோழ(ட)ணாக(ன்) முதலான பெயர்கள் தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர்களின் பின்னொட்டு சொல் தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் “அன்” என்ற ஆறாம் விகுதியில் முடிவதால் இவை தமிழ்ப் பெயர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த வாசிப்பைப் பேராசிரியர் சுப்பராயலு, தமிழ்ப் பிராமியின் தந்தை என அழைக்கப்படும் ஐராவதம் மகாதேவன் உட்படத் தென்னிந்திய, இலங்கை சாசனவியல் அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுகளில் பொருத்தமானதாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

          பண்டைக்கால நாணயங்கள் பொதுவாக அரசனால் அல்லது சிற்றரசனால் வெளியிடப்பட்டவை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அரசனின் அனுமதி பெற்ற வணிகர்களும், மதநிறுவனங்களும் நாணயங்கள் வெளியிட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. இது பற்றிக் கௌடில்லியனின் அர்த்தசாஸ்திரத்திலும் குறிப்புக்கள் உள்ளன. இந்நிலையில் இந்நாணயங்களில் ஒன்றில் தமிழில்; “திஷபுர சடணாக ராசன்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் விளக்கம் தென்னிலங்கையில் திஷபுரம் என்ற இடத்தில் ஆட்சிபுரிந்த சடணாகராசன் (அரசன்) வெளியிட்ட நாணயம் என்ற பொருளில் அமைந்துள்ளது. இந்நாணயங்களிலிருந்து இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளமையும், அவர்களிடையே தமிழ் அரச மரபு தோன்றியிருந்தமையும்; தெரியவந்துள்ளது. சமகாலத்தில் இலங்கையின் பல பிராந்தியங்களில் இனக்குழுத் தலைவர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியோரின் ஆட்சி இருந்ததற்கு நம்பகரமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 22 பிராமிக் கல்வெட்டுக்களில் “வேள்” என்ற தமிழ்ச் சொல் காணப்படுகின்றது. இச்சொல் சிற்றரசன், தலைவன், உயர் அதிகாரி ஆகிய உயர் பதவியிலிருந்தவர்கள் பயன்படுத்தி ஒரு பட்டப் பெயராகும். பேராசிரியர் றோமிலாதபார் வடமொழியில் “ராஜா” என்ற பட்டம் என்ன பொருளைக் குறித்ததோ அதே பொருளைத் தமிழில் “வேள்” என்ற பட்டம் குறிப்பதாகக் கூறுகின்றார். அண்மையில் சங்ககால அரச உருவாக்கம் பற்றி ஆய்வு செய்த கலாநிதி பூங்குன்றன் சங்க காலத்தை ஒத்த வேளிர் ஆட்சி சமகாலத்தில் இலங்கையிலும் இருந்ததற்குப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் “வேள்” என்ற பட்டத்தைச் சான்றாகக் காட்டியுள்ளார். இவ்விடத்தில் ஏறத்தாழ இந்நாணயங்களின் சமகால வரலாறு கூறும் மகாவம்சத்தில் துட்டாகாமினி மன்னன் அநுராதபுரத்தில் எல்லாள மன்னனை வெற்றி கொள்வதற்கு முன்னர் அவனுக்குச் சார்பாகத் தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த 32 தமிழ்ச் சிற்றரசர்களை வெற்றி கொள்ளவேண்டி இருந்ததாகக் கூறியிருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. இவ்வாதாரங்கள் சங்ககாலத்தின் சமகாலத்தில் இலங்கைத் தமிழரிடையேயும் அரச மரபு தோன்றியிருந்ததை உறுதி செய்வதாக உள்ளன.
தொடர்பு:
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
https://www.facebook.com/push.malar


No comments:

Post a Comment