Saturday, July 3, 2021

ஃபிரான்சோயி க்ரோ - ஃபிரெஞ்சுத் தமிழறிஞர்-- கே.ஆர்.ஏ. நரசய்யா

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குவது) ஆண்டு தோறும் தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான 'குடியரசுத் தலைவர் செம்மொழி விருதுகள்' வழங்கி வருகிறது. இதன் கீழ் வழங்கப்படும் 'குறள் பீடம்' விருது ஆண்டு தோறும் இருவருக்கு -- அயல் நாட்டினருக்கு ஒன்று, அயல் நாடு வாழ் இந்தியருக்கு ஒன்று -- (மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை ஆகியவை) வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2008-09 ஆம் ஆண்டிற்கான அயல் நாட்டினர் பிரிவில் விருது பெற்றவர் ஃபிரான்சோயி க்ரோ (François Gros,1933-2021) என்ற பிரெஞ்சுக் காரர். அன்னார் சென்ற மே 24 ஆம் தேதி 88 வது வயதில் ஃபிரான்சில் காலமானார்.

Francois Gros.jpg

1963 ஆம் வருடம் புதுச்சேரிக்கு வந்திருந்த இவருக்குத் தமிழ் கற்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதற்கு உந்துதல் அளித்தவர் அவரது ஆசானான ஜீன் ஃபிலியோசாட் என்ற ஆசிய மொழிகளின் (சமஸ்கிருதம், பாலி, திபெத்தியன் மற்றும் தமிழ்) வல்லுநர். அவர்தான் புதுச்சேரியில், ஒரு பிரெஞ்சு பள்ளியைத் தொடங்கியவர். அவர் க்ரோவைப் புதுச்சேரி சென்று அங்கு தமிழ் மொழி ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையைச் சேர்ந்த பரிபாடலை ஃபிரெஞ்சு மொழி பெயர்ப்பு செய்யச் சொல்லியும் பணித்தார். அதன்படி க்ரோ 1963 ல் புதுவை சென்றார். அதே போல அவர் செய்வித்த மற்றொரு சிறந்த காரியம் தேவாரத்தின் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு. அந்த நூல், நம் நாட்டின் சாகித்ய அகாதெமி போலுள்ள அந்நாட்டின் அகாதெமியின் செயின்தார் விருதினை 1969 ஆம் ஆண்டில் பெற்றது.

அவரது 70ஆம் ஆண்டு நிறைவின் போது சௌத் இண்டியா ஹொரைசன்ஸ் (South India Horizons) என்ற ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்நூல் தொகுப்பாளர்கள் ழான் லு செவாலியர் என்ற ஃபிரெஞ்சுக்காரரும் இவா வில்டன் என்ற ஜெர்மானியப் பெண்மணியும் ஆவர். இவர்கள் க்ரோ விடம் பயின்றவர்கள். நூல் எழுத முருகையன் என்ற ஓர் ஆய்வாளரும் உதவி புரிந்துள்ளார். அதில் 16 நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்கள் (தத்துவவியலாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், கல்வெட்டாய்வாளர்கள்) க்ரோவைப் பற்றிய கட்டுரைகள் எழுதியுள்ளனர். முக்கியமாக ஃபிரான்ஸ் நாட்டில் தமிழ் ஆய்வில் க்ரோ ஒரு முன்னோடி என்று அறியப்படுகிறார். அவரிடம் பயின்ற பலர் தமிழ் மொழியில் சிறப்பான பணிகள் செய்துள்ளனர்.

அவரது கட்டுரைகளும் மற்ற எழுத்து வடிவங்களும் தொகுப்பாக டீப் ரிவர்ஸ்: செலக்டட் ரைட்டிங்ஸ் ஆன் டமில் லிடரேச்சர் (Deep Rivers: Selected Writings on Tamil Literature) என்ற  ஃபிரெஞ்சு நூலில் கொணரப்பட்டது. இது 2009 ல் பி. போஸ்மென் என்பவரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்நூலில் காணப்படும் கட்டுரைகளினின்று அவரது தமிழ்ப் படிப்பின் ஆழமும் மொழியில் இருந்த அவரது அபார வீச்சும் அறியப்படுகிறது. சங்க, பக்தி இலக்கியங்கள் தவிர தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள் முதலியனவும் இதில் அடங்கும்.

தமிழ் பக்தி இலக்கியத்தில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. காரைக்காலம்மையார் பனுவல்களையும் அவர் தமது மொழியில் இயற்றியிருக்கிறார். பக்தி இலக்கியத்தில் அவர் போற்றப்படுவது அவரது தேவாரத்து மொழிபெயர்ப்பால்.  இந்த ஃபிரெஞ்சு நூல் யுனெஸ்கோ வின் உதவியுடன் 1984 ல் பதிப்பிக்கப்பட்டது. தவிரவும் பெரிய புராணம், மற்றும் அருணகிரிநாதர் பாடல்களையும் மொழி பெயர்த்துள்ளார். 

மூதறிஞர் நாகசுவாமியுடன் வரலாற்றையும் தொல்லியலையும் கலந்து உத்திரமேரூர் மீது ஒரு பெருங்கட்டுரை எழுதியுள்ளார். அது (உத்திரமேரூர்: கதைகள், வரலாறு மற்றும் நினைவுச் சின்னங்கள் - ஃப்ரெஞ்சு இன்ஸ்டிட்யூட், பாண்டிச்சேரி 1970ல் வெளியிட்டது) ஒரு சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

தமது உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவர் தமது நாட்டுக்குத் திரும்பிவிட்டார்.

தமிழ் மொழியைப் பற்றிய அவரது கருத்து: "தமிழ் மொழியின் எழுத்து அளவை விட அதன் தரத்தால் ஒரு சிறப்பான மொழியென்ற தகுதியை அதைப் போன்ற ஐரோப்பிய மொழிகளை ஒத்துப் பெறுகிறது. செம்மொழி என்பது அந்நிலையைப் பெறுவதற்கு அதன் மொழிபெயர்ப்புகள் எல்லா நாடுகளிலும் பெறும் வரவேற்பைப் பொறுத்துள்ளது. அது தமிழுக்குப் பெருமளவில் உள்ளது."

க்ரோ புதுவையில் ஈகோல் பிரான்செய்ஸ் டிஎக்ஸ்ட்ரீம் - ஓரியன்ட் என்ற அமைப்பின் இயக்குநராக 1977 லிருந்து 1989 வரை பணியாற்றினார்.

அங்கு பல பயிற்சிக் குழுக்களை நிறுவினார். அங்கிருந்த போது அவர் இலக்கியத் தமிழ் மட்டுமின்றித் தற்காலத் தமிழ் நூல்கள் பலவும் சேகரித்தார். எண்ணிக்கையில் அவை 10,000 ஆகும். அவற்றையெல்லாம் அவர் கனடாவின் டொராண்டோ பல்கலைக் கழகத்திற்குக் கொடையாக அளித்து விட்டார். அதைப் பற்றி அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீலதா ராமன் சொல்கிறார். "அந்நூல்களெல்லாம் அட்டவணையிடப்பட்டு இணைய வழி படிப்பதற்கான வடிவத்திற்கு நாங்கள் ஆவன செய்து வருகிறோம். விரைவில் இத்தொகுப்பு இணைய வழியில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் கற்போருக்கும் பயனள்ளகாக அமையும்"

க்ரோ புதுவையில் இருக்கையில் திருக்குறளை (காமத்துப் பால்) தமது மொழியில் வடித்தார். அவர் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான பேராசிரியராகவும் பணி புரிந்தவர். சங்ககாலத்திலிருந்து தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்புகள் வரை இவரது ஆர்வமும் ஆய்வும் நீண்டது.

சென்னையின் க்ரியா அமைப்பின் நிறுவனர் காலஞ்சென்ற ராமகிருஷ்ணனுடன் க்ரோ கலந்து பல உன்னதப் பணிகள் ஆற்றியுள்ளார்.

க்ரோவின் மறைவு தமிழுலகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் இடையே இருந்த ஒரு பெரும் தொடர் உறவுக்கு மாபெரும் இழப்பு.


நன்றி: அமுதசுரபி | ஜூலை 2021


------------------------------------------

No comments:

Post a Comment