Friday, July 23, 2021

பண்பாட்டுப் புரிதலில் ஒரு மாற்றுக் கண்ணோட்டம்

-- முனைவர் ஆனந்த் அமலதாஸ்


“பண்பாடு” என்பது என்ன என்பதைக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம். பண்பாடு என்பது ஏதோ ஒருவகையான  கட்டிடக்கலை என்று பல கோபுரங்களை மட்டும் எண்ணாமல் அல்லது சித்திரம், சிலைகள், ஆடல் பாடல் கலைகள் என்று குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் விரிந்த அளவில் கணிக்கும் பொழுது அது நமது வாழ்வை அமைக்கும் அடிப்படை கோட்பாட்டைக் குறிக்கும் எனலாம்.

பண்பாடு மாறிக் கொண்டேயிருக்கும். நிலையான பண்பாட்டு அடையாளம் என்று ஏதும் இல்லை. அதன் சில அடையாளங்களைக் குறியிட்டு அப்படியே சிலையாக்கி அருங்காட்சியகத்தில்  வைத்து விட்டால் அது செத்தது எனலாம். எப்படி ஒரு மொழி பேசப்படவில்லை யென்றால் அது செத்த மொழி என்போமோ அதுபோலத்தான் பண்பாடும்.

இப்படி பண்பாட்டின் சிறப்பை அடையாளப் படுத்தி ஆராய்ச்சியாளர்கள் அட்டவணை போட்டுக் காட்டுவார்கள். அதில் ஒரு தெளிவு இருக்கும். இது உண்மைதான். ஆனால் அப்படி அவைகளை ஆவணக்கூடங்களில் வைத்து விட்டால் இது பெரிதா, மற்றவர்களுடையது பெரிதா என்ற சர்ச்சைக்கு இட்டுச் சென்று பண்பாட்டின் மோதலில் முடியும். அதைத்தான் சாமுவேல் ஹண்டிங்டன் தனது “பண்பாட்டின் மோதல்” (Clash of Civilisation) என்ற நூலில் குறிக்கின்றார்.

ஆனால் பண்பாடு என்பதை உண்மையில் பிரித்துக் காட்ட முடியும். அதற்குத் தனித்தன்மை உண்டு. அதனால் மற்றவர்களோடு உறவு கொள்ளும் இணைப்புப் பாலம் உடைந்து போகவில்லை. ஏனெனில் அந்தத் தொடர்பு உறவினால் தான் வாழ்கிறது, வளர்கிறது. இது தொடர்நிலை. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்பாட்டுக்கு என்ன அடையாளம் காட்டலாம்? இளங்கோ அடிகளா? கம்பனா?  பாரதியா? பாரதிதாசனா? இவர்களில் யார் தமிழ்ப் பண்பாட்டின் பிரதிநிதி? இவர்கள் ஒவ்வொருவரின் பின்னணி வேறு, சிந்தனை முறை வேறு. ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் தமிழ்ப் பண்பாட்டின் தொடர் உறவின் பங்காளிகள். 

இவர்கள் ஒரு வலையில் உள்ள முடிச்சுகள் மாதிரி. ஒவ்வொரு முடிச்சும் முக்கியம். இந்த முடிச்சுகளை எல்லாம் வெட்டிவிட்டால் வலையே பாழடைந்து விடும். ஆனால் ஒவ்வொரு முடிச்சும் தனியாக இருந்தாலும் அதற்கு மதிப்பு இல்லை. அது போலத் தான் பண்பாட்டின் பங்காளிகளும்.

பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நிலப்பகுதியில் தான் வளரும். குறிஞ்சி மலரோ, மல்லிகை மொட்டோ தானாக மட்டும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நிலப்பரப்பில்தான் தோன்றும். பண்பாடும் அப்படித்தான். வரலாறு படைப்பவனும் வரலாறு எழுதுபவனும் தனிப்பட்ட மனிதர்கள்தான். ஒட்டுமொத்தமாக எதுவும் எழாது. ஒரு செயற்குழு அமைத்து வரலாறு எழுதுவதில்லை. நமது திணைக்கோட்பாட்டை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தோன்றியது என்பது அதன் தனித்துவம். அதன் பெருமை.

முரண்பாடான கண்ணோட்டம் கொண்டவர்களானாலும் நாம் எல்லோரும் கூடி வாழ முடியும். ஒரே இனத்தவர் என்பதால் மட்டும் அல்ல, ஒரே சமயத்தவர் என்பதால் அல்ல, மனிதப் பண்புள்ளவர் என்பதால். நம்மிடம் ஏற்றத்தாழ்வு உண்டு. கணக்கியல்படி (Mathematically) நாம் சமமானவர்கள் என்றல்ல. சமத்துவம் என்பது திறமைகளின் அடிப்படையில் அல்ல. நாம் தேடும் சமத்துவம் மனிதனின் தனித்துவ மகத்துவத்தின் மதிப்பின் அடிப்படையில் உள்ளது. மனிதர்களாகிய நாம் சமமானவர்கள்  (As persons we are equal). சமுதாய அளவில் ஏற்றத்  தாழ்வு இருக்கலாம். இது நிலையானது அல்ல.  அது மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் தனிமனிதனின் மதிப்பு, அவன் தனித்துவம் நிலையானது. “சொர்க்க வாசலுக்குமுன் தோட்டியும் சரி தொண்டைமானும் சரி” என்பது தே நோபிலி சுட்டிக்காட்டிய ஒரு பழமொழி. இது சாதி-சமயப் பூசல்களிடையே அவர் கொடுத்த பதில். சமூக வேறுபாட்டை, ஏற்றத்தாழ்வை இயற்கையின் நியதி, கர்மம், தெய்வ பராமரிப்பு என்று பலவிதமாய் விளக்கம் கொடுத்தாலும் அடிப்படை உண்மை நிலை ஒன்றுதான்.

முதலில் நமது அடிப்படைத் தேவைகள் நிறைவுபெற வேண்டும். அவை யாவை?  உணவு – உடை – உறையும் வீடு – என்று சொல்வதுண்டு. ஆனால் இவை இருப்பதால் மட்டும் நிறைவான வாழ்வு வந்துவிடாது. மகிழ்ச்சி நிறைந்து வழியாது. ஏனெனில் மனிதன் மனிதனாய் வாழ மனிதனுக்கு இதற்கும் அடிப்படையான தேவைகள் உண்டு. மற்றவர் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்; என்னை மதிக்க வேண்டும்; உறவு கொள்ள இடம் கொடுக்க வேண்டும். அது இல்லாமல் மனிதனாய் வாழ முடியாது. நமது முரண்பாடுகள், எதிர்ப்பு போராட்டங்கள் எல்லாம் இங்குதான் தொடங்குகின்றன. மேல்நிலைக்கு, உயர்படிக்கு ஏற வேண்டும். சமூக அளவில், உணர்ச்சி அளவில், சிந்தனை அளவில், ஆன்மீக அளவில் அது கிடைக்கும் வரை நாம் ஆதங்கத்தோடு அலைந்து கொண்டுதான் இருப்போம்.

ஒரு சமூகத்தில் கூடிவாழும் பொழுது ஓர் அமைப்பு வேண்டும். பல் வேறு பணிகள் செய்ய அதற்கு ஏற்ற ஆட்கள் வேண்டும். உலக வங்கி தொடங்கி, கிராமப் பஞ்சாயத்து வரை  ஒருவர் நிர்வாகப் பொறுப்பில் இருக்க வேண்டும். அவருக்கடியில் பல துறைகளில் மற்றவர் பணி செய்ய வேண்டும். இத்தகைய அமைப்பில் மேலினம், கீழினம் என்பதற்கு இடமில்லை. பல்வேறு தொழிலோ பணியோ செய்யலாம், செய்யவும் வேண்டும். அதனால் தனிப்பட்டவரின் மதிப்பும் தனிமனிதனின் தனித்தன்மையும் இழந்துபோகாது. 

பண்பாடு என்பது தனிமனிதனின் பெருமையை, சிறப்பை நிலைநாட்ட உதவுவதற்கு இல்லை. அப்படி நடக்கின்றது என்றால் அது ஓர் அபத்தம் (Perversion).  தனக்காக போஸ்டர் ஒட்டி, தனது உருவத்தைப் பெரிதாகக் கருதுவதில்தான் பாசிசம் தொடங்குகிறது. 

பண்பாடு ஓர் ஊற்று போன்ற பொதுச்சொத்து. அது இதற்கு மாறாக பணி செய்கிறது. இத்தகைய குறுகிய வேலியைத் தாண்டிக் கட்டமைப்புகளை உடைத்தெறிவது, உலகோடு ஒத்து வாழும் நிலைக்கு, தனது சுயநலக் கோட்பாட்டுக்கு வெளியே வாழ இடம் தேடுகிறது. தனிப்பட்டவர் தளத்திலிருந்து பொதுத் தளத்தைத்  தேடுவது.

ஊற்றுச்சுனை போன்ற பொதுச்சொத்துக்கு விளம்பரம் தேவையில்லை. பிரச்சாரம் செய்து ஆட்கள் சேகரிக்க வேண்டியதில்லை. கோஷம் எழுப்பத் தேவையில்லை.  மதிப்பீடுகள் வேறு, பொதுச் சொத்து (Resources) வேறு. மதிப்பீடுகள் ஆட்களைச் சேகரிக்கும். போதகர்கள் வேண்டும். சமய மதிப்பீடுகளை நிலை நாட்டுவது போல் ஆகிவிடும்.

இந்தியப் பண்பாடு என்பது பல மரபுகளால் உருவாக்கப்பட்ட சொத்து.  பன்மைத்தனம் பெற்றது. ஏதோ ஒரு சமயம், ஓர் இனம், ஒரு சிந்தனைக் கோட்பாட்டால் உருவானது அல்ல. பலரும் இதன் பங்காளிகள், பங்கு அளித்தவர்கள் இடையே வேறுபாடுகள் உண்டு. அதனால் அவர்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் பண்பாட்டின் ஊற்றுக்கள்.

பல நதிகள் பாய்ந்தோடி கடலில் சங்கமம் ஆவது போல பல மரபுகள், கோட்பாடுகள் சேர்ந்து உருவானது இந்தியப் பண்பாடு. ஒவ்வொன்றும் பண்பாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்திருக்கிறது, செழிப்படைய வழி வகுத்தது, புதிய கண்ணோட்டத்தினை இன்றும் தூண்டுகின்றது.

இப்பொழுது ஐரோப்பாவிலும் பெரிய குழப்பம். அவர்கள் உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் உடைந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் பிரான்சுவா ஜீலியன் (2017) சொல்வது இது. தொடக்கத்திலேயே ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி எது, என்பது தெளிவில்லை. ஒரு சிலர் கருத்து: கிறிஸ்துவ நம்பிக்கையும் அதன்வழி எழுந்த பண்பாட்டுக் கோட்பாடு என்றனர். மற்றவர் அதற்கு மாறாக, இல்லை, சமயம் தாண்டிய பகுத்தறிவுப் பண்பாடு (Enlightenment) என்றனர். அவர்களுக்குள் ஒன்றித்த தெளிவு இல்லை. அதனால் முகப்புரை (Preamble) இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதன் விளைவு இப்பொழுது தெரிகிறது. சமய நம்பிக்கையும், பகுத்தறிவும் முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் அவை இரண்டும் ஒன்றிணைந்து வாழ முடியும். 

நமது நாட்டில், நம் மத்தியில்; நடப்பதும் அப்படித்தான். நமது பண்பாட்டில் பல்வேறு பங்காளிகள்; அங்கத்தினர்கள் உண்டு. இப்பண்பாட்டின் சொத்து எல்லோருக்கும் சொந்தம். வைதிக மரபு பெரியது. அதற்கென தனிவரலாறு உண்டு. ஆனால் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்ட மற்றவர்களை ஒழிக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் கடவுள் எதிர்ப்புவாதிகளும் கூடிவாழ முடியும், கூடிவாழ வேண்டும். அவர்களை ஒன்றிணைப்பது சமயம் சாராத அறநெறியின் அடிப்படையில் அமையவேண்டும்.

இயற்கையின் சொத்துக்கள், சுற்றம் சூழல் பாதிப்பு, அழிவு பற்றி பலர் கவலை கொண்டுள்ளனர். Bio-diversity அளவு குறைந்து கொண்டே போவது பற்றி பலர் ஆராய்ந்து அதைத்தடுக்க எடுத்து வரும் முயற்சிகளும் பாராட்டுக்குரியது.  அதைப்போல ஏன் கலாச்சார அழிவுக்கு, பண்பாட்டுச் சிதைவுக்கு போதிய எதிர்ப்பு, பாதுகாக்கும் போதிய முயற்சிகள் இன்னும் எழவில்லை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக இந்திய இஸ்லாமிய வரலாற்றைக் கவனிக்கலாம். சமய நல்லிணக்கத்திற்கு அவர்கள் பங்களிப்பு அதிகம். ஆல் பிரூனி முதன் முதலாக பாதஞ்சலி யோகம் என்ற சமஸ்கிருத நூலை அரபியில் மொழிபெயர்த்து குர்ஆனோடு நல்லிணக்கம் செய்தார். பிறகு அக்பர் பல்வேறு சமய பிரதிநிதிகளை அழைத்து உரையாடல் பண்பாட்டை உருவாக்கினார். அவருக்குப்பின் தாரா சிக்கோ 50 உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அதன் வழியாக ஐரோப்பியர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள வழி வகுத்தார். இத்தகைய முயற்சிகள் இஸ்லாமிய மரபின் பங்களிப்பு.

இவ்வாறு இந்திய யூதர்களும்,; கிறித்தவர்களும், பிறகு இங்குக் குடியேறிய பாரசீகர்களும், பல்வேறு வகையில் இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றார்கள். இவர்கள் அந்நியர்கள் என்று சொல்லி இந்தியப் பண்பாட்டின் சொத்து எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம் என ஒரு வர்க்கம் மட்டும் ஆதிக்கம் கொண்டாடும் மனநிலையும் செயல்முறையும் நம்மை ஒன்றிணைத்துக் கூடிவாழ வழிவகுக்காது. அழிவுக்குத்தான் இட்டுச்செல்லும்.---

No comments:

Post a Comment