Showing posts with label மலாக்கா முத்துக்கிருஷ்ணன். Show all posts
Showing posts with label மலாக்கா முத்துக்கிருஷ்ணன். Show all posts

Sunday, September 12, 2021

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள்


 -- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்



1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) ஜே. டிரைவர் (Inspector of Schools FMS, J. Driver) என்பவர் மலாயா பள்ளிகளின் தலைமைக் கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை அமலில் இருந்தது. அதை அவர் விரும்பவில்லை.  தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார். 
 
இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர் (ACS - Anglo Chinese School KLANG). இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை மலாயா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழர்களும் சீனர்களும் தடுமாறிப் போனார்கள்.

treacher.jpg

இந்தக் கட்டத்தில் தான் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour Ordinance) சட்டம். ஆங்கிலேயர்கள் உருக்கிய சட்டம்.  அந்தச் சட்டமே அவர்களைத் திசை திருப்பியது. அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியாது. தடுமாற்றம் அடைந்தார்கள்.

1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour Ordinance 1912). மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட சட்டம். இந்தச் சட்டம் தான் சரியான நேரத்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது. 

1912-ஆம் ஆண்டு மலாயா தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். 
அந்தச் சட்டத்தில் ஒரு பிரிவு: ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டப் பிரிவு. (The British and rubber in Malaya, c 1890–1940 Jim Hagan and Andrew Wells University of Wollongong: The 1912 Labour Ordinance compelled the planters to set up ad-hoc schools for children of the plantation labour.) ஆக இந்த 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் வழி மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன. 

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். எடுத்துக்காட்டாக கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி பகுதியில் டப்ளின் தோட்டம். ஏழு டிவிசன்கள். ஸ்கார்புரோ தோட்டத்தில் ஆறு டிவிசன்கள். ஜொகூர் சா ஆ தோட்டத்தில் ஆறு டிவிசன்கள்.

ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. அந்த மாதிரி நிறையப் பள்ளிகள் தோன்றின. 1920-ஆம் ஆண்டில் மட்டும் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் உருவாகி விட்டன. என்ன சொல்ல வருகிறேன் என்றால், 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் என்பது அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது. ஆக,  அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால், 1925-ஆம் ஆண்டு வரையில் மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் புதிதாக நிறுவப்பட்டன.  தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் போன்றோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள். சரி.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர் சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார். 
1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்புச் செயற்குழு ஒன்றை நிறுவியது. 
இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 547 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.

1938-இல் 13 அரசு தமிழ்ப்பள்ளிகள், 511 தோட்டத் தமிழ்ப்பள்ளிகள்; 23 சமயப் பரப்பு தமிழ்ப்  பள்ளிகள். ஆக மொத்தம் 547 தமிழ்ப்பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் 22,820 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 15,584. பெண்கள் 7236. இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலகப் போரினால் தடைப் பட்டது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலம். பெரும் பாதிப்புகள். பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின. 

பின்னர் அந்த எண்ணிக்கை கூடியது. 1947-இல் 741 தமிழ்ப் பள்ளிகள். 33,954 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 20,834. பெண்கள் 13,120.
1956-இல் 47,407 மாணவர்கள். ஆண்கள் 26,128. பெண்கள் 21,279.
1957-இல் 50,766 மாணவர்கள். ஆண்கள் 26,153. பெண்கள் 24,613. 
தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 1930-இல் 333; 1938-இல் 547; 1947-இல் 741; 1957- இல் 888. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கல்விக் கொள்கையின் மாற்றம் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு. அதனால் பல பள்ளிகளை மூடப்பட்டன. அந்த வகையில் 1963-இல் 720 பள்ளிகள். இப்போது இந்த 2021-ஆம் ஆண்டு 526 பள்ளிகள் மட்டுமே உள்ளன. சரி. 

1951-ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் (Sydney Francis Barnes) என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).


---

Tuesday, September 7, 2021

மறைப்புத் திரைகளில் மறையும் மலாயா அகத்தியர் சிலை


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


சிதைவுகளில் பல சிதைவுகள். இனச் சிதைவு; மொழிச் சிதைவு; உணர்வுச் சிதைவு; பண்பாட்டுச் சிதைவு; பாரம்பரியச் சிதைவு; ஆளுமைச் சிதைவு; கட்டுச் சிதைவு; கூட்டுச் சிதைவு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்தச் சிதைவுகளில் தலைச் சிதைவாக அமைவது வரலாற்றுச் சிதைவு. அதாவது ’ரூம்’ போட்டு ’டிஸ்கசன்’ பண்ணி ’பிளான்’ போட்டுச் சிதைக்கும் சிதைவு. தாராளமாகச் சொல்லலாம்.  இதில் இருப்பதை இல்லாமல் செய்வது இருக்கிறதே அதுதான் சிறப்பான வரலாற்றுச் சிதைவு. இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லாக் காலத்திலும் வரலாற்றுச் சிதைவுகளும், நல்லபடியாக நாலுகால் பாய்ச்சல் போட்டு வந்து இருக்கின்றன. 

அந்த வகையில் மலையூர் மலைநாட்டிலும் தமிழர்கள் சார்ந்த வரலாறு அன்று மறைக்கப் பட்டன. இன்று மறைக்கப் படுகின்றன. முயற்சிகள் செய்யப் படுகின்றன. இப்படி எழுதுவதால் ‘அரெஸ்ட்’ பண்ணி அடைத்து வைக்கலாம். பிரச்சினை இல்லை. முழுசா நனைந்த பின்னர் முக்காடு தேவை இல்லை. மலாயா தமிழர்களின் நாகரிகம், தமிழர்களின் பண்பாடுகளைச் சிதைக்க, ஒரு கூட்டம் இரவு பகலாகத் தூக்கம் கெட்டு, கொசுக்கடி பட்டு ஆலவட்டம் போடுகிறது. உண்மைதானே! 

சமரசத்துக்கு இடம் அளிக்காமல்... அதிகாரத்துக்கு அடி பணியாமல்... நேர்மையான முறையில் செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே நம் கடமை. வரலாறு என்பதைப் பிரித்துப் பாருங்கள். வரல் ஆறு என்று வரும். வரல் என்றால் நிகழ்வு. ஆறு என்றால் பாதை. நடந்து வந்த பாதையின் நிகழ்வுகளே வரலாறு. உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதுதான் வரலாறு.  வரலாற்றுச் சிதைவு என்பது ஓர் இனத்தின் சிதைவு. ஒரு மொழியின் சிதைவு.  என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம் என்று சொல்லிக் கொண்டு கட்டுரைக்கு வருகிறேன். 

சிம்மோர் அகஸ்தியர் சிலையைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். இருப்பினும் காலத்தின் கட்டாயம். மீண்டும் பதிவு செய்ய வேண்டி வருகிறது. மலாயா வரலாற்றில் கங்கா நகரம் என்பது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுப் புகலிடம். இந்த கங்கா நகர வரலாற்றில் தான் சிம்மோர் அகஸ்தியர் சிலையும் வருகிறது. ஒரே வார்த்தையில் சொன்னால் கங்கா நகரமும்; சிம்மோர் அகஸ்தியர் சிலையும் மறைக்க முடியாத மாபெரும் காலச் சுவடுகள். அந்தக் காலச் சுவடுகளில் புற்கள் முளைக்கலாம். பூண்டுகள் முளைக்கலாம். காடுகள் செழிக்கலாம். நதிகள் வழியலாம்.  இருந்தாலும் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; கங்கா நகரம் எனும் பெயர் மட்டும் அப்படியே ஆலம் விழுதுகளைப் போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாய்ப் பயணிக்கும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வரலாற்று உண்மை.

malaysia.JPG
1936-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.  அந்தச் சிலையின் எடை 34 பவுண்டுகள். அதாவது 15.4 கிலோ. உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். 



சிம்மோர் பள்ளத்தாக்கு ஜாலோங் பகுதியில் கிடைத்த புத்த பிராமின் பாட்டுங்
[மலாக்கா முத்துக்கிருஷ்ணன் இணைத்துள்ள இப்படம் எடுக்கப்பட்டபொழுது அதில்  Patung Brahmin / Patung Jalong  என்ற விளக்கம் இருக்கிறது. தாடி மீசை கமண்டலம் இருப்பதால் அகத்தியர் என்பதாகக் காட்டப்படுகிறது. மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைச் சான்றுகளில்  ஒன்று ஆய்வாளர்கள் கூறிய அகத்தியர் கருத்துக்கும் சான்று காட்டுகிறது. சிலையில் தற்பொழுது இருக்கும் படவிளக்கக் குறிப்பில் அகத்தியர் என்பது  நீக்கப்பட்டு 'புத்த பிராமின்' என்று மட்டும் விளக்கம் உள்ளது. ]

விக்கியில் கிடைக்கும் சிற்பம் அதன் விளக்கம் பகுதியில் 
புத்த சிலை என்ற குறிப்பு இருக்கிறது   
https://commons.wikimedia.org/wiki/File:Jalong_statue_KL_001.JPG

இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது. கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உண்மையை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை இந்தச் சிலை உறுதிப் படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.


chemor perak.jfif

கி.பி. 1025-ஆம் ஆண்டில் கங்கா நகரம் சிதைவுற்றது. அதன் பின்னர் அந்த அரசு ஆட்சி செய்த பகுதிகளின் அருகாமையில் சின்னச் சின்ன ஆளுமைகள் உருவாகின. அவை புத்த மதம் சார்ந்தவை. சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதம் வருவதற்கு முன்னர் கங்கா நகர அரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது. அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் நிறையவே இருந்து உள்ளன. அரச ஆசியாடிக் கழகத்தின் மலேசியக் கிளையின் ஆய்விதழ் (Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society - JMBRAS) சான்றுகள் உள்ளன.  அவை ஆர். ஓ. வின்ஸ்டெட் (R. O. Winstedt) எனும் மலாயா ஆய்வாளரின் சான்றுகள். 

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு. ஈயக் கனிமத்திற்குப் பேர் போன இடம். 1900-ஆம் ஆண்டுகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும், உலக மக்களின் பார்வை இந்தப் பக்கமாய்த் திரும்பியது. ஆயிரக் கணக்கான சீனர்கள், கிந்தா பள்ளத்தாக்கிற்குப் படை எடுத்தார்கள். கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த இந்து, புத்தக் கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கலாம்; அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் ஆழ் மண்ணுக்குள் அப்படியே ஆழ்ந்து போய் இருக்கலாம். வேதனையான கணிப்பு. இருப்பினும் அந்தப் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, புத்த மத வெண்கலச் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. 

அந்த வகையில் கிந்தா பள்ளத்தாக்கு ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு முக்கியமான இராச்சியத்தின் அடித் தளமாக இருந்து இருக்கலாம். அதுவே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் ஒருமித்தக் கருத்து.  சிலை கிடைத்த இடம் தே செங் சியூ (Teh Seng Chew) எனும் சீனருக்குச் சொந்தமான நிலமாகும். ஈயம் தோண்டுவதற்காக அவருக்குக் கிடைத்த அரசாங்க நிலம். தே செங் சியூ சுங்கை சிப்புட் பகுதியைச் சேர்ந்தவர். அந்தச் சீனருக்கு கிடைத்த இடத்தில் ஈயம் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. அதனால் அந்த இடத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யலாம் என முடிவு செய்தார். அதற்காகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

முதலில் ஒரு டிராக்டர் காட்டுப் புதர்களைச் சுத்தப் படுத்திப் போய்க் கொண்டு இருக்கும். அந்த டிராக்டருக்குப் பின்னால் ஒரு குழுவினர் மண்வெட்டிகளைக் கொண்டு மண்ணைக் கிளறும் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்போது திடீரென ஓர் உலோகப் பொருள், ஒரு தொழிலாளரின் மண்வெட்டியில் பட்டுத் தெறித்தது. அடையாளம் தெரியாத ஓர் உருவத்தின் சிலை. அந்தத் தொழிலாளி சற்று ஐதீக நம்பிக்கைவாதி. அவர் அந்தச் சிலையைத் தொடவில்லை. பயந்து கொண்டு அவருடைய கண்காணிப்பாளரை அழைத்து விசயத்தைச் சொன்னார். அந்தச் சிலையைப் பற்றிய செய்தி கண்காணிப்பாளர் மூலமாக நிலத்தின் சொந்தக்காரர் தே செங் சியூவிற்குப் போய்ச் சேர்ந்தது. அப்போது அவர் சுங்கை சிப்புட்டில் இருந்தார்.  அவரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். அந்தச் சிலையைப் பார்த்து அவரும் அதிசயித்துப் போனார். சிலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கும் போது டத்தோ (துன்) சம்பந்தன் அவர்களின் நினைவு வந்தது.

கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்: 
சிம்மோர் ஜாலோங் வனக் காப்பகப் பகுதியின் மலை அடிவாரத்தில் சுண்ணாம்புக் குகைகள் உள்ளன. அந்தப் பகுதியில் ஓராங் அஸ்லி மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.   அவர்களை விசாரித்துப் பார்த்ததில் காட்டுக்குள் ஒரு பெரிய கோயில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் தலைமுறை தலைமுறையாக அந்தக் கோயிலைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஒரு புராணக் கதையாகவும் இருந்து உள்ளது.

இருப்பினும் சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான இந்து கோயில் இருக்கலாம். இந்த வெண்கலச் சிலைக்கும் அந்தக் கோயிலுக்கும் தொடர்புகள் இருக்கலாம். இந்தச் சிலை ஏன் அந்த சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதிக்குப் போக வேண்டும்? மலை அடிவாரத்தின் மண்ணுக்குள் புதைந்து கிடக்க வேண்டும். தைப்பிங் அல்லது பீடோர் பகுதியில் இருக்க வேண்டிய சிலை எப்படி சிம்மோர் ஜாலோங் காட்டுக்குள் போனது? 



(நன்றி: தமிழ் மலர் - 07.09.2021)


இந்தக் கட்டுரைக்கான சான்றுகள்:
1. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13 
2. A.B. Griswold,”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.
3. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940. 
4. Art, archaeology and the early kingdoms in the Malay Peninsula and Sumatra: c.400-1400 A.D. Vol: 1. Nik. Hassan Shuhaimi.



-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
-----

Saturday, July 31, 2021

கிழக்கு மலேசியா சபாவில் பூமிபுத்ரா தமிழர்கள்


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் சபாவிற்குச் சென்றார்கள். சபாவிலேயே வாழ்ந்து, நிரந்தரவாசிகளாகி விட்டனர். அந்த வகையில், தமிழர்கள் பலர் கடசான், மூருட், பாஜாவ் பெண்களைத் திருமணம் செய்து வாழ்கின்றனர். இந்தப் பெண்களில் பலர் கிறிஸ்துவப் பெண்களாகும். 

muthukrishnan.jpg
ஒரு தமிழருக்கும் ஒரு கடசான் அல்லது பாஜாவ் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை, பூமிபுத்ரா தகுதியைப் பெறுகிறது. மலேசிய அரசியலமைப்பின் 160A (6)(a) சட்டப்பிரிவின் கீழ் அந்த விதி சொல்லப் படுகிறது.

தமிழர்கள் சிலர் சீனர் அல்லது கடசான் பாரம்பரியங்களுடன் ஐக்கியமாகி விட்டனர். அவர்களில் சிலர் பாஜாவ் பெண்களை மணந்து, இஸ்லாம் சமயத்திற்கு மாறி உள்ளனர்.

சபாவில் 12,600 இந்தியர்கள் உள்ளனர். தமிழர்கள் 3,200. இவர்களின் நலன்களுக்காக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் பெயர் சபா இந்தியர் சங்கம். 

1960-களில் மலேசியக் குடியேற்ற வாரியம், தீபகற்ப மலேசியாவிலிருந்து இந்தியத் தொழிலாளர்களைச் சபா ரப்பர் தோட்டங்களுக்குக் கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழர்களின் எண்ணிக்கையும் கூடியது. 

இருப்பினும் வேலை ஒப்பந்தம் முடிந்ததும் பலர் திரும்பிச் சென்று விட்டனர். குறைவான எண்ணிக்கையில் மட்டுமே சிலர் தங்கினர். அப்படித் தங்கியவர்கள் பின் நாட்களில் சபா பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலர் பூமிபுத்ரா தகுதியைப் பெற்று உள்ளனர்.

தீபாவளி, வைகாசி, தைப்பூசம் போன்ற திருவிழாக்களை இன்று வரை கொண்டாடுகின்றனர். வேறு சமயங்களுக்கு மாறிய தமிழர்கள் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, நோன்புப் பெருநாள் போன்ற திருநாட்களைக் கொண்டாடுகின்றனர்.

தமிழர்கள் எங்கே சென்றாலும் அங்கே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விடுகிறார்கள். அந்த வகையில் சபாவிலும் ஒரு தனித்துவமான தமிழர்ச் சமுதாயம் உருவாக்கப்பட்டு உள்ளது.


சான்றுகள்:
1. One Indian man, who calls himself as Huang Poh Lo, proclaims in an advertising banner that he is The World’s Only Indian Chinese Calligrapher. - http://www.nst.com.my/life-times/showbiz/sunday-gaiety-1.178092
2. Ethnic Indians may be few in Sabah, but Deepavali is a 1Malaysia celebration. - http://insightsabah.gov.my/article/read/648/ 
3. The Sabah Indian Association
4. If one of the parents is a Muslim Malay or indigenous native of Sabah as stated in Article 160A (6)(a) Federal Constitution of Malaysia; thus child is considered as a Bumiputra. - http://en.wikipedia.org/wiki/Bumiputra/


-

Thursday, July 8, 2021

ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு (1942 – 1945)


 -- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்



1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி. ஜப்பான் நாட்டின் வெறியாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பான் கைப்பற்றிய நாடுகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என முடிவு செய்யப் பட்டது. அந்த வகையில் அமெரிக்கா கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.  சான் பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் என்று பெயர். இதை ஜப்பான் சமாதான ஒப்பந்தம் என்றும் அழைப்பார்கள். இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 8, 1951-ஆம் தேதி, 48 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 

Malacca2.JPG

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஜப்பான், போர் இழப்பீடுகளை வழங்கத் தொடங்கியது. மலாயாவுக்கும் இழப்பீடு வழங்கப் பட்டது. ஏன் என்றால் ஜப்பானின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலாயாவும் ஒன்றாகும். 
(சான்று: The Treaty of San Francisco - Treaty of Peace with Japan. It was signed by 49 nations on 8 September 1951, in San Francisco, California, U.S. at the War Memorial Opera House.)

மலாயாவுக்குப் போர் நஷ்டயீடு வழங்குவதற்கு ஜப்பான் சம்மதிக்கும் போது என்ன என்ன நடந்தன என்பதைப் பார்ப்போம்.  பணம், பொருட்கள், நிலம் போன்ற பல்வேறு வடிவங்களில் மலாயாவுக்கு இழப்பீடு வழங்கப் பட்டது.  1946-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மலாயா, சிங்கப்பூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்த  பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ’போர் சேதக் கோரிக்கை ஆணையம்’ (War Damage Claims Commission) எனும் ஆணயத்தை அமைத்தது. 

Malacca.jpg

அந்த ஆணையம் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் மலாயாவுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு எவ்வளவு என்பதற்கான தகவல்களைச் சேகரித்தது. மலாயா மக்கள் சார்ந்த இழப்பீட்டுக் கோரிக்கையில் அடங்கியவை:
1. போரினால் ஏற்படும் நேரடிச் சேதங்கள். 
2. மலாயாவில் இருந்த ஜப்பானியத் தொழிற்சாலைகள்; சுரங்கங்கள்; கட்டுமானப் பொருட்கள்; உபகரணங்கள் போன்ற தொழில் மற்றும் வணிகத் தளவாடங்கள். 
3. மலாயாவில் சீன மக்களிடம் திணிக்கப்பட்ட கட்டாயப் பங்களிப்புகள்; ஜப்பானிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட கடன் நீட்டிப்பு; மற்றும் இரயில் கட்டுமானச் சேவைச் செலவு.

1947-ஆம் ஆண்டிலிருந்து 1950-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்குத் தகவல் சேகரிப்பு. கடைசியில் மொத்த நஷ்டயீடு 67.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என முடிவு செய்யப் பட்டது. இது மலாயா சிங்கப்பூர் போர் சேதக் கோரிக்கை ஆணையம் வழங்கிய நஷ்டயீடு கணக்கு. இருப்பினும், உண்மையான மொத்த நஷ்டயீடு கோரிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம். ஏனெனில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமநிலையான அளவிற்கு மட்டுமே இழப்பீடு கோரிக்கையை முன்வைத்தது.  இதில் வட போர்னியோவின் இழப்பீட்டுக் கோரிக்கை இருக்கிறதே அது மலாயா இழப்பீட்டுக் கோரிக்கையை விட உயர்ந்து இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தைச் சும்மா சொல்லக் கூடாது.  இழப்பீடு கோரிக்கையின்படி போர்க் கப்பல்கள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள்; தளவாட உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி ஈடு செய்தது. யாருக்கு? மலாயா அரசாங்கத்திற்கு!  ஆனால்... ஆனால்... அங்கே ஒரு பிடி இருந்தது. ஜப்பான் கொடுத்த எல்லாவற்றையும் அப்படியே எடுத்து அப்படியே மலாயாவுக்கு கொடுத்துவிட முடியாத நிலை. மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்தாலும் நடக்காத காரியம். என்ன தெரியுமா??

இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளின் (Allied Powers) ஒரு பகுதியாக பிரிட்டன் இருந்தது.   நாஜி ஜெர்மனி, ஜப்பான்; இத்தாலி போன்ற நாடுகளைத் தோற்கடிக்க அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன்; சீனா ஆகிய நாடுகள் ஒரு கூட்டணி அமைப்பை உருவாக்கின.  ஆகவே, ஜப்பான் இழப்பீடாக வழங்கும் சொத்துக்களை அந்த நேசக் கூட்டணி நாடுகளிடையே பிரிட்டன் விவாதிக்க வேண்டி இருந்தது. அந்த நாடுகளைக் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும்.

ஆக அந்த நேச நாடுகள் எல்லாம் ஒன்றுகூடி மலாயாவுக்கு ஒதுக்கிய இழப்பீடு என்ன தெரியுமா??? வேதனையாக இருக்கிறது. 
மலாயாவுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு:
(1) அமெரிக்க டாலர் 85.7 மில்லியன் (350 மில்லியன் ரிங்கிட்). 
(2) இயந்திரத் தளவாடங்கள் 809. 
(3) ஒரு பெரிய போர்க் கப்பல். 

தவிர மேலே சொன்ன இயந்திரத் தளவாடங்கள்; போர்க் கப்பல்; இவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் விற்றால் கிடைக்கும் பணம் மலாயா அரசாங்கத்திற்குப் போய்ச் சேர வேண்டும். 

ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. மலாயாவுக்கு கிடைத்த இழப்பீடு: 
1. ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிற்சாலை பொருட்கள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள். (5 விழுக்காடு). 5 %. நூறு விழுக்காட்டில் ஐந்தே ஐந்து விழுக்காடுதான் வழங்கப் பட்டது.
2. ஜப்பானியக் கடற்படையைச் சேர்ந்த 23 சின்னப் போர்க் கப்பல்கள். ஒரு பெரிய கப்பலைக் கேட்டு இருந்தார்கள். அமெரிக்கா ஒத்துக் கொள்ளவில்லை. சின்ன நாட்டிற்குச் சின்ன கப்பல்கள் போதும் என்று சொல்லி விட்டது.

முறைப்படி இழப்பீடுப் பணம் எல்லாம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஜப்பானியத் தொழிற்சாலைகள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள் போன்றவற்றை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். 23 போர்க் கப்பல்களை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.  ஆனால் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படிச் செய்யவே இல்லை. பெரும் தொகையைத் தன்னுடைய காலனித்துவ நிர்வாகச் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது. ஒன்றே ஒன்று உருப்படியாகச் செய்தது. அந்தக் காலக் கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட அரச மலாயா தொண்டர் கடற்படைக்கு (Malayan Royal Naval Volunteer Reserve) ஒரே ஒரு போர்க் கப்பலை வழங்கியது தான் உலக மகா சாதனைச் சேவை.

ஜப்பான் வழங்கிய இழப்பீட்டில் பெரும் தொகை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்டங்களைச் சீர் செய்யவும்; மலாயாவில் இருந்த ஈயச் சுரங்கங்களைச் செப்பனிடவும் பயன்படுத்தப் பட்டன.  ஜப்பானியர் காலத்தில் ஆங்கிலேய ரப்பர் தோட்டங்கள் பெரிதும் சேதம் அடைந்து விட்டதாகவும் அந்தத் தோட்டங்களை மறுபடியும் சீர் செய்ய வேண்டும் என்று சொல்லி பெருவாரியான பணம் செலவு செய்யப் பட்டது.  இந்த விசயம் துங்கு அவர்களுக்கும் தெரியும். ஜப்பான் வழங்கிய நஷ்டயீட்டுத் தொகை எப்படிச் செலவாகி இருக்கிறது கவனித்தீர்களா?

ஜப்பானின் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு முன்னதாகவே பிரிட்டிஷார்; மலாயா கூட்டாட்சி சட்டமன்றம், சிங்கப்பூர் சட்டமன்றம் ஆகியவற்றில் ஒரு சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு வந்தார்கள். அந்தச் சட்டத்தின்படி பிரிட்டிஷார் தங்கள் விருப்பப்படி இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஜப்பான் வழங்கிய போர் இழப்பீடுகளின் விளக்கம். 
(1960-ஆம் ஆண்டுகளில் ஜப்பானிய யென் கணக்கில் மலேசிய ரிங்கிட் நாணய மாற்றம்: 1 பில்லியன் யென் = 30 மில்லியன் ரிங்கிட்). போர் நஷ்டயீடு பட்டியல்:

1. மைக்ரோனேசியா (Micronesia) - (ஆண்டு 1950) - 18 பில்லியன் யென் - (540 மில்லியன் ரிங்கிட்)
2. மியன்மார் - (ஆண்டு 1954 - 1963) - 50.4 பில்லியன் யென் - (1500 மில்லியன் ரிங்கிட்)
3. பிலிப்பைன்ஸ் - (ஆண்டு 1956; 1967) - 53 பில்லியன் யென் - (1590 மில்லியன் ரிங்கிட்)
4. இந்தோனேசியா - (ஆண்டு 1958) - 63.7 பில்லியன் யென் (1910 மில்லியன் ரிங்கிட்) 
5. லாவோஸ் (ஆண்டு 1958) - 1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)
6. கம்போடியா (ஆண்டு 1959) - (1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)
7. வியட்நாம் (ஆண்டு 1960) - (14.04 பில்லியன் யென் - (420 மில்லியன் ரிங்கிட்)
8. கொரியா (ஆண்டு 1965) - (72 பில்லியன் யென் - (2160 மில்லியன் ரிங்கிட்)
9. மலேசியா (ஆண்டு 1967) - (2.94 பில்லியன் யென் - (90 மில்லியன் ரிங்கிட்)
10. தாய்லாந்து (ஆண்டு 1967) - (5.4 பில்லியன் யென் - (165 மில்லியன் ரிங்கிட்)
11. தைவான் (ஆண்டு 1967) - (58 பில்லியன் யென் - (175 மில்லியன் ரிங்கிட்)
12. சிங்கப்பூர் (ஆண்டு 1967) - (2.9 பில்லியன் யென் - (87 மில்லியன் ரிங்கிட்)
13. ஹாலந்து (ஆண்டு 1956) - (3.6 பில்லியன் யென் - (110 மில்லியன் ரிங்கிட்)
14. சுவிட்சர்லாந்து - Switzerland - (ஆண்டு 1955) - (33 மில்லியன் ரிங்கிட்) 
15. டென்மார்க் - (ஆண்டு 1955) - (215 மில்லியன் ரிங்கிட்)
16. சுவீடன் - (ஆண்டு 1958) - (150 மில்லியன் ரிங்கிட்) 
17. ஸ்பெயின் - (ஆண்டு 1957) - (155 மில்லியன் ரிங்கிட்)

இழப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் 1955-இல் தொடங்கி 23 ஆண்டுகள் நீடித்தது. 1977-ஆம் ஆண்டு வரையில் சன்னம் சன்னமாகக் கொடுக்கப் பட்டது. மலேசியாவிற்கு எவ்வளவு பணம் எந்த ஆண்டில் கொடுக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள். 

சான்றுகள்:
1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.
2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF) 
3. San Francisco Peace Conference 8 Sep 1951
4. Japan's Records on War Reparations, The Association for Advancement of Unbiased View of History
5. War Responsibility, Postwar Compensation, and Peace Movements and Education in Japan

நன்றி: தமிழ் மலர் - 08.07.2021

----





Sunday, June 27, 2021

அக்கரைச் சீமையின் வீரமகள் அஞ்சலை குப்பன்



--  மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


மொரீசியஸ் நாட்டின் ஐரோப்பியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரீசியஸ் நாட்டின் கரும்புத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர்.  மொரீசியஸ் நாட்டின் மனித உரிமைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். 1940-ஆம் ஆண்டுகளில் மொரீசியஸ் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி.  கப்பலேறி வந்தாலும் சூடு சொரணை உண்டு. கைப்பிடி சோற்றிலும் கைத்துளி உப்பு உண்டு. மனித உரிமைகள் மரித்துப் போகா என்று காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தமிழ்ப் பெண்மணியின் வீர வரலாறு வருகிறது. அவரைச் சற்று நேரம் நினைத்துப் பார்ப்போம். அஞ்சலைக்கு அஞ்சலி செலுத்துவோம்.

மொரீசியஸ் நாட்டில் இப்போது அந்தப் பெண்மணிக்காகச் சிலை வடித்து சீர் செய்கிறார்கள். அஞ்சல்தலை வெளியிட்டுப் பார் புகழப் பெருமை செய்கிறார்கள். ஒரு விளையாட்டு அரங்கத்தைக் கட்டி மரியாதை செய்கிறார்கள். யார் அந்த அஞ்சலை குப்பன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அஞ்சலை குப்பன் எனும் பெயர் கொஞ்சமாய் மறைந்து மங்கலாகத் தெரியும். ஏன் தெரியுமா? இந்தத் தமிழச்சியின் தியாக உணர்வுகள் குறித்து உலகத் தமிழர்களுக்கு அதிகமாய்த் தெரியாது. தெரியவே தெரியாது என்று சொன்னால் தான் சரியாக அமையும். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தமிழ்ப் பெண் வாழ்ந்து இருக்கிறார் என்று தெரியாமலேயே போய்விடும். அதனால் முன்கூட்டியே இப்படி ஒரு பதிவைப் பதிவு செய்துவிடுவது சாலச் சிறப்பு என்பது காலத்தின் கணிப்பு அல்ல. ஞாலத்தின் எதிர்பார்ப்பு.

மொரீசியஸ் நாட்டில் இரண்டு பெண்களுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். ஒன்று மொரீசியஸ் தலைநகரில் வைக்கப்பட்டு உள்ள இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியாரின் சிலை. உலகத்தின் கால் பகுதிக்கு மகாராணியாராகக் கோலோச்சியவர்.  மற்றொன்று அஞ்சலை குப்பன் அவர்களின் சிலை. மொரீசியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் அந்தச் சிலையை வைத்து இருக்கிறார்கள். வேறு சிலைகள் எதுவும் இல்லை. ஒரு தமிழ்ப் பெண்ணுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். பெருமையாக உள்ளது.

அஞ்சலை குப்பன், மொரீசியஸின் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்குத்தான் அங்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது.  மொரீசியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர். 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர். 3 விழுக்காடு சீன வம்சாவழியினர். 2 விழுக்காடு பிரிட்டிஷ் வம்சாவழியினர். ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர்.  

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் அஞ்சலை குப்பன் உரிமைப் போராட்டங்கள் செய்து சாதனை படைத்து இருக்கிறார். நவீன மொரீசியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரீசியஸ் மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார். 

அஞ்சலை குப்பன்; அஞ்சலை திவாகரன்; அஞ்சலாய் குப்பன் (Anjalay Tassalam Twakaran); 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி ரிவியர் டு ரெம்பார்ட் (Riviere du Rempart) எனும் மாவட்டத்தில் பிறந்தார்.   1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி உயிர் துறந்தார்.  அந்த நாள் மொரீஷியஸ் மக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். தியாக நாளாகவும் கருதுகிறார்கள். அன்றைய நாளில் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும்; தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராட்டம் உச்சம் அடைந்த நாளாகும். 

ஆங்கிலேய முதலாளிகள் கேட்பதாக இல்லை. தெரிந்ததுதானே. வரித்து விடு. பிரித்து விடு. தொலைத்து விடு எனும் சாணக்கியத்தில் ஆங்கிலேயர்கள் பேர் வாங்கியவர்கள். பரம்பரை புத்தி பாதியில் போய் விடுமா. இந்தப் பக்கம் மலாயாவில் மட்டும் என்னவாம். 1900-ஆம் ஆண்டுகளில் அதே நிலைமை தானே. நான்கு தகரத்தில் ஒரு டப்பாவைக் கட்டி வைத்து; அதற்கு கூலி லைன் என்று பெயர் வைத்து; 150 ஆண்டுகளாக மலாயத் தமிழர்களின் உயிரை வாங்கவில்லையா. அது போலத்தான். 

Anjalai Kuppan.jpg
அஞ்சலை குப்பனுக்கு அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).  அது மட்டும் அல்ல. 2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள். பள்ளிப் பாட நூல்களில் அவரின் வரலாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொரீஷியஸ் நாட்டில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அஞ்சலையின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் படிக்க வேண்டும்.   2015 மார்ச் 8-ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம். அதை முன்னிட்டு மொரீஸியப் பாலினச் சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரால் அதிகாரப்பூர்வமாக அஞ்சலி குப்பன் கௌரவிக்கப் பட்டார். அதன் பின்னர் பாட நூல்களிலும்  இந்த வீரமகளின்  வரலாறு இடம் பெற்றது. 


சான்றுகள்:
1. The historical significance of Anjalay Coopen - https://www.lexpress.mu/article/historical-significance-anjalay-coopen

2. Nouvelle d'Ananda Devi, La Mort d'Anjalay dans Au tour des femmes. Ed. B. Pyamootoo & R. Poonoosamy. Port-Louis:  Immedia, 1995: 67-74

3. Anjalay Coopen: Tamil Lady ‘Kabali’ of Mauritius - https://tamizharmedia.com/2019/06/30/anjalay-coopen-tamil-lady-kabali-of-mauritius/