Tuesday, September 7, 2021

மறைப்புத் திரைகளில் மறையும் மலாயா அகத்தியர் சிலை


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


சிதைவுகளில் பல சிதைவுகள். இனச் சிதைவு; மொழிச் சிதைவு; உணர்வுச் சிதைவு; பண்பாட்டுச் சிதைவு; பாரம்பரியச் சிதைவு; ஆளுமைச் சிதைவு; கட்டுச் சிதைவு; கூட்டுச் சிதைவு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்தச் சிதைவுகளில் தலைச் சிதைவாக அமைவது வரலாற்றுச் சிதைவு. அதாவது ’ரூம்’ போட்டு ’டிஸ்கசன்’ பண்ணி ’பிளான்’ போட்டுச் சிதைக்கும் சிதைவு. தாராளமாகச் சொல்லலாம்.  இதில் இருப்பதை இல்லாமல் செய்வது இருக்கிறதே அதுதான் சிறப்பான வரலாற்றுச் சிதைவு. இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லாக் காலத்திலும் வரலாற்றுச் சிதைவுகளும், நல்லபடியாக நாலுகால் பாய்ச்சல் போட்டு வந்து இருக்கின்றன. 

அந்த வகையில் மலையூர் மலைநாட்டிலும் தமிழர்கள் சார்ந்த வரலாறு அன்று மறைக்கப் பட்டன. இன்று மறைக்கப் படுகின்றன. முயற்சிகள் செய்யப் படுகின்றன. இப்படி எழுதுவதால் ‘அரெஸ்ட்’ பண்ணி அடைத்து வைக்கலாம். பிரச்சினை இல்லை. முழுசா நனைந்த பின்னர் முக்காடு தேவை இல்லை. மலாயா தமிழர்களின் நாகரிகம், தமிழர்களின் பண்பாடுகளைச் சிதைக்க, ஒரு கூட்டம் இரவு பகலாகத் தூக்கம் கெட்டு, கொசுக்கடி பட்டு ஆலவட்டம் போடுகிறது. உண்மைதானே! 

சமரசத்துக்கு இடம் அளிக்காமல்... அதிகாரத்துக்கு அடி பணியாமல்... நேர்மையான முறையில் செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே நம் கடமை. வரலாறு என்பதைப் பிரித்துப் பாருங்கள். வரல் ஆறு என்று வரும். வரல் என்றால் நிகழ்வு. ஆறு என்றால் பாதை. நடந்து வந்த பாதையின் நிகழ்வுகளே வரலாறு. உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதுதான் வரலாறு.  வரலாற்றுச் சிதைவு என்பது ஓர் இனத்தின் சிதைவு. ஒரு மொழியின் சிதைவு.  என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம் என்று சொல்லிக் கொண்டு கட்டுரைக்கு வருகிறேன். 

சிம்மோர் அகஸ்தியர் சிலையைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். இருப்பினும் காலத்தின் கட்டாயம். மீண்டும் பதிவு செய்ய வேண்டி வருகிறது. மலாயா வரலாற்றில் கங்கா நகரம் என்பது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுப் புகலிடம். இந்த கங்கா நகர வரலாற்றில் தான் சிம்மோர் அகஸ்தியர் சிலையும் வருகிறது. ஒரே வார்த்தையில் சொன்னால் கங்கா நகரமும்; சிம்மோர் அகஸ்தியர் சிலையும் மறைக்க முடியாத மாபெரும் காலச் சுவடுகள். அந்தக் காலச் சுவடுகளில் புற்கள் முளைக்கலாம். பூண்டுகள் முளைக்கலாம். காடுகள் செழிக்கலாம். நதிகள் வழியலாம்.  இருந்தாலும் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; கங்கா நகரம் எனும் பெயர் மட்டும் அப்படியே ஆலம் விழுதுகளைப் போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாய்ப் பயணிக்கும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வரலாற்று உண்மை.

malaysia.JPG
1936-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.  அந்தச் சிலையின் எடை 34 பவுண்டுகள். அதாவது 15.4 கிலோ. உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். 



சிம்மோர் பள்ளத்தாக்கு ஜாலோங் பகுதியில் கிடைத்த புத்த பிராமின் பாட்டுங்
[மலாக்கா முத்துக்கிருஷ்ணன் இணைத்துள்ள இப்படம் எடுக்கப்பட்டபொழுது அதில்  Patung Brahmin / Patung Jalong  என்ற விளக்கம் இருக்கிறது. தாடி மீசை கமண்டலம் இருப்பதால் அகத்தியர் என்பதாகக் காட்டப்படுகிறது. மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைச் சான்றுகளில்  ஒன்று ஆய்வாளர்கள் கூறிய அகத்தியர் கருத்துக்கும் சான்று காட்டுகிறது. சிலையில் தற்பொழுது இருக்கும் படவிளக்கக் குறிப்பில் அகத்தியர் என்பது  நீக்கப்பட்டு 'புத்த பிராமின்' என்று மட்டும் விளக்கம் உள்ளது. ]

விக்கியில் கிடைக்கும் சிற்பம் அதன் விளக்கம் பகுதியில் 
புத்த சிலை என்ற குறிப்பு இருக்கிறது   
https://commons.wikimedia.org/wiki/File:Jalong_statue_KL_001.JPG

இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது. கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உண்மையை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை இந்தச் சிலை உறுதிப் படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.


chemor perak.jfif

கி.பி. 1025-ஆம் ஆண்டில் கங்கா நகரம் சிதைவுற்றது. அதன் பின்னர் அந்த அரசு ஆட்சி செய்த பகுதிகளின் அருகாமையில் சின்னச் சின்ன ஆளுமைகள் உருவாகின. அவை புத்த மதம் சார்ந்தவை. சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதம் வருவதற்கு முன்னர் கங்கா நகர அரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது. அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் நிறையவே இருந்து உள்ளன. அரச ஆசியாடிக் கழகத்தின் மலேசியக் கிளையின் ஆய்விதழ் (Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society - JMBRAS) சான்றுகள் உள்ளன.  அவை ஆர். ஓ. வின்ஸ்டெட் (R. O. Winstedt) எனும் மலாயா ஆய்வாளரின் சான்றுகள். 

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு. ஈயக் கனிமத்திற்குப் பேர் போன இடம். 1900-ஆம் ஆண்டுகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும், உலக மக்களின் பார்வை இந்தப் பக்கமாய்த் திரும்பியது. ஆயிரக் கணக்கான சீனர்கள், கிந்தா பள்ளத்தாக்கிற்குப் படை எடுத்தார்கள். கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த இந்து, புத்தக் கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கலாம்; அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் ஆழ் மண்ணுக்குள் அப்படியே ஆழ்ந்து போய் இருக்கலாம். வேதனையான கணிப்பு. இருப்பினும் அந்தப் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, புத்த மத வெண்கலச் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. 

அந்த வகையில் கிந்தா பள்ளத்தாக்கு ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு முக்கியமான இராச்சியத்தின் அடித் தளமாக இருந்து இருக்கலாம். அதுவே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் ஒருமித்தக் கருத்து.  சிலை கிடைத்த இடம் தே செங் சியூ (Teh Seng Chew) எனும் சீனருக்குச் சொந்தமான நிலமாகும். ஈயம் தோண்டுவதற்காக அவருக்குக் கிடைத்த அரசாங்க நிலம். தே செங் சியூ சுங்கை சிப்புட் பகுதியைச் சேர்ந்தவர். அந்தச் சீனருக்கு கிடைத்த இடத்தில் ஈயம் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. அதனால் அந்த இடத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யலாம் என முடிவு செய்தார். அதற்காகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

முதலில் ஒரு டிராக்டர் காட்டுப் புதர்களைச் சுத்தப் படுத்திப் போய்க் கொண்டு இருக்கும். அந்த டிராக்டருக்குப் பின்னால் ஒரு குழுவினர் மண்வெட்டிகளைக் கொண்டு மண்ணைக் கிளறும் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்போது திடீரென ஓர் உலோகப் பொருள், ஒரு தொழிலாளரின் மண்வெட்டியில் பட்டுத் தெறித்தது. அடையாளம் தெரியாத ஓர் உருவத்தின் சிலை. அந்தத் தொழிலாளி சற்று ஐதீக நம்பிக்கைவாதி. அவர் அந்தச் சிலையைத் தொடவில்லை. பயந்து கொண்டு அவருடைய கண்காணிப்பாளரை அழைத்து விசயத்தைச் சொன்னார். அந்தச் சிலையைப் பற்றிய செய்தி கண்காணிப்பாளர் மூலமாக நிலத்தின் சொந்தக்காரர் தே செங் சியூவிற்குப் போய்ச் சேர்ந்தது. அப்போது அவர் சுங்கை சிப்புட்டில் இருந்தார்.  அவரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். அந்தச் சிலையைப் பார்த்து அவரும் அதிசயித்துப் போனார். சிலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கும் போது டத்தோ (துன்) சம்பந்தன் அவர்களின் நினைவு வந்தது.

கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்: 
சிம்மோர் ஜாலோங் வனக் காப்பகப் பகுதியின் மலை அடிவாரத்தில் சுண்ணாம்புக் குகைகள் உள்ளன. அந்தப் பகுதியில் ஓராங் அஸ்லி மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.   அவர்களை விசாரித்துப் பார்த்ததில் காட்டுக்குள் ஒரு பெரிய கோயில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் தலைமுறை தலைமுறையாக அந்தக் கோயிலைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஒரு புராணக் கதையாகவும் இருந்து உள்ளது.

இருப்பினும் சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான இந்து கோயில் இருக்கலாம். இந்த வெண்கலச் சிலைக்கும் அந்தக் கோயிலுக்கும் தொடர்புகள் இருக்கலாம். இந்தச் சிலை ஏன் அந்த சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதிக்குப் போக வேண்டும்? மலை அடிவாரத்தின் மண்ணுக்குள் புதைந்து கிடக்க வேண்டும். தைப்பிங் அல்லது பீடோர் பகுதியில் இருக்க வேண்டிய சிலை எப்படி சிம்மோர் ஜாலோங் காட்டுக்குள் போனது? 



(நன்றி: தமிழ் மலர் - 07.09.2021)


இந்தக் கட்டுரைக்கான சான்றுகள்:
1. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13 
2. A.B. Griswold,”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.
3. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940. 
4. Art, archaeology and the early kingdoms in the Malay Peninsula and Sumatra: c.400-1400 A.D. Vol: 1. Nik. Hassan Shuhaimi.



-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
-----

No comments:

Post a Comment