Sunday, September 26, 2021

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!

-- முனைவர் ஒளவை அருள்


அண்மைக்காலமாக, நம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது. நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையானதானதாக அமையவில்லை.

மின்னணு ஊடகம் வந்து அச்சு ஊடகத்தின் பயன்பாட்டைக் குறைத்தது. பெரும்பாலான செய்தித்தாள்களும், பருவ இதழ்களும் தொடர்ந்து நடைபோட முடியாமல் சோர்வடைந்துள்ளன . சில நிறுவனங்கள் அச்சிடும் பணியையே ஏறத்தாழ நிறுத்திவிட்டன. மக்களிடத்தில், வாசிப்புப் பழக்கம் குறைந்த அளவில்தான் இருந்து வருகிறது என்று பலர் கண்டுள்ளனர்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு சில காரணங்கள் உள்ளன. பெற்றோர்களுக்கு வீட்டில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனர். இணையவழித் தோற்றங்களும் வாசிப்புப் பழக்கத்தை வற்றச் செய்துவிட்டன.

தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றே போதும் என்று பெரும்பான்மையானோர் கருதுகின்றனர். ஆனால், செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் மாற்றாக தொலைக்காட்சி அமைய முடியாது என்பதே உண்மை.

kids reading.jpg

‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் என்பவர் கூறினார். வாசிப்பு ஒரு முழுமையான மனிதனை உருவாக்குகிறது” என்பது பிரான்சிஸ் பேகனின் கருத்தாகும். அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் ஒரே இடம் நூலகம். நூலகம் இவ்வுலகத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும். 

‘புத்தகங்கள், வாழ்க்கை குறித்த நம் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றி, வெற்றி எனும் நெடிய பாதையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. காலம் எனும் பெருங்கடலில் நம்மைக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்குதான் புத்தகங்கள்’ என்றார் எட்வின் பெர்சி . ‘பிறா் தன்னை ஏமாற்றும்போது, புத்திசாலி மனிதன் புத்தகங்களின் துணையை நாடுகிறான்’ என்பது ஆண்ட்ரூ லாங்கின் கூற்றாகும்.

நமக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிப்பதற்கும், நம் பொழுதை நல்ல முறையில் கழிப்பதற்கும் புத்தகங்கள் உதவுகின்றன. நூல்கள் வாயிலாக ஒருவர் பெறும் அறிவு அவரை பிறருடன் திறம்பட உரையாடச் செய்வதுடன், சமுதாயத்தில் அவருடைய நிலையை உயர்த்தவும் செய்கிறது. வாசிப்பு நம் அறிவுக்கு வளமூட்டுகிறது என்பதை வெளிப்படையாக நாம் காணலாம்.

எனவே முனைப்புடன் ஆர்வம் ததும்பப் படிப்பது மிகவும் அவசியமானதாகும். இயல்பான ஒரு பேச்சாளராக, உரையாடும் திறமை கொண்டவராக நாம் உருவாக வேண்டும். ஒருவர் தீவிர வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். பேருந்துகளிலும், தொடர்வண்டியிலும் புத்தகங்களைப் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்கும்.

சில நாட்கள், நமக்கு சோர்வுடைய நாளாகத் தோன்றும். நல்ல புத்தகங்கள், இந்த மனநிலையை மாற்ற உதவும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நம் மனம் புத்துணர்வு அடையும். மேலும், நாம் படிப்பது சிறந்த புத்தகமாக அமையுமானால், அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். தற்போது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற நூல்கள் ஏராளமாக உள்ளன.

மனிதர்களுக்கு மன அழுத்தம் கூடியுள்ள இன்றைய காலகட்டத்தில், புத்தக வாசிப்பு அவர்கள் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும். இங்கிலாந்தில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, நாளொன்றுக்கு ஆறு நிமிடம் படித்தால், நம் மன அழுத்தம் 68 விழுக்காடு குறையும் என்று தெரியவந்துள்ளது.

புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தால், நம் மூளை சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன், நினைவாற்றல் திறனும் அதிகரிக்கும். இதனால் மறதி நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறளில் இலங்கு நூல், நுண்ணிய நூல், உரைசான்ற நூல் என்று படிக்கும் நூல்களைப் பாராட்டிக் குறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய நூல்களை ஆர்வத்துடன் நாம் படிப்பதனால் நம் தனிமை, வெறுமை நீங்கி விடுகின்றன.

உலகமே நிலைகுலைந்து அழிந்த நேரத்தில் தன் தனிமையைப் போக்குவதற்காக திருவாசகத்தை சிவபெருமான் எடுத்துக்கொண்டார் என்று சுந்தரனார் கூறுகிறார்.
கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்தின்
உடையான் உன் திருவாசகத்தில் ஒரு பிரதி கருதியதே (மனோன்மணீயம்)

‘எனக்குத் தனிமை என்பதே தெரியாது; ஏனென்றால் என்னைச் சுற்றிலும் நிலையான நண்பர்கள் புத்தக வடிவத்தில் என்னோடு எப்போதும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இராபர்ட் சதே பாடியுள்ளார். பண்புள்ள நண்பனிடத்தில் பழகுவது ஒரு நூலைப் படிப்பது போல என்பது திருக்கு.

தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் கைப்பிடித்து ஓா் இளைஞர் மாடிக்கு அழைத்துச்செல்லும்போது படிக்கட்டுகளைக் காட்டி ‘படி’ ‘படி’ என்றானாம். உ.வே.சா. சிரித்துக்கொண்டே, ‘ஆம், படி, படி... படித்தால்தான் மேலே செல்லலாம்’ என்றாராம்.

தன் வரலாற்று நூல்களைப் படிப்பது மிகவும் பயனளிக்கும். அவை ஒருவரின் வாழ்வில் புதிய இலக்குகளை உருவாக்கும். அவற்றைப் படிப்பதன் மூலம், வாழ்ந்து மறைந்த அறிஞர்களைப் பற்றி பல அரிய செய்திகளை அறிந்துகொள்ளலாம்.

அனைவராலும் அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ள இயலாது. ஒரு பயண நூல், பல நாடுகளைப் பற்றிய அரிய பல தகவல்களை நமக்கு அளிக்கும். பல காட்சிகளை நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும்.

வேண்டாத நடைமுறைகள் நிறைந்துள்ள இன்றைய நிலையில், புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஒன்றே நம் வாழ்வை வளம்பெறச் செய்யும். வாசிப்புப் பழக்கம் வாழ்க்கை குறித்த நம்பிக்கையளிக்கும் சிந்தனையை உருவாக்கும். பெருந்தலைவர்களின் வாழ்க்கை நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாசிப்புப் பழக்கம் நம் வாழ்க்கையை மாற்றி நமக்கு புதுவித மகிழ்ச்சியளிக்கும். சிறந்த வாழ்க்கை முறை அமைய, புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இன்றியமையாததாகும்.

வாசிப்பு என்பது நாம் நாளும் செய்யும் உடற்பயிற்சி போன்றது மட்டும் இல்லை. நம்மை சிறப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு தெளிவான பழக்கமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாததால், நாம் எவற்றையெல்லாம் இழந்தோம் என்று பலர் அறிவதில்லை.

நூல்களின் விலை உயர்வால், வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று சிலர் கூறலாம். புத்தகங்களுக்கான தேவை குறைவதால், சில புத்தகங்களின் விலை உயர்ந்துள்ளது என்று மாற்றிச் சொல்லவும் இடமுண்டு.

எனினும், சில நல்ல புத்தகங்கள், உரிய விலையில் கிடைக்கின்றன. நூலகங்களையும் நாம் நாடலாம். பிறர் படித்த நல்ல புத்தகங்களையும் குறைந்த விலையில் பெறலாம் . அயல்நாட்டு நூல்களின் இந்தியப் பதிப்பு குறைவான விலையில் விற்கப்படுகின்றன.எனினும், சிறிய நகரங்களிலும், சிற்றூர்களிலும் உள்ள பள்ளி நூலகங்கள், தகுதியான நூலகர்களின்றி பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. இதனால், மாணவர்களுக்கு, வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நூலகத்தில் திரட்ட வாய்ப்பில்லாமல் போகிறது.

‘கல்வியறிவில் நாம் மேலும் உயர்ந்ததாக வேண்டும். வெற்றிகரமான எழுத்தறிவுத் திட்டங்களால், மூத்த வயதினரிடையே எழுத்தறிவு நம் நாட்டில் அதிகரித்துள்ளது. ஆயினும், சமுதாயத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பதற்கான தேவை பெரிதாக உயர்ந்துள்ளது.

மேலும், ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கான நம் பங்களிப்பையும் அதிகரித்துள்ளது’ என்று தேசியக் கல்விக் கொள்கை குறிப்பிட்டுள்ளது.

ஒரு தலைமுறையில் முதன்முதலாகப் படிப்பவருக்குப் பொதுவாக படிக்கும் பழக்கம் குறைவாக இருக்கும். சமூகக் கல்வித் திட்டங்களுக்கான வெற்றி, வாசிப்புப் பழக்கத்தையே சார்ந்துள்ளது. வாசிப்புப் பழக்கம் குறைந்தால் மனிதர்களின் வாழ்க்கைத் தரமும் குறையும்.

தொழில் நுட்ப வளர்ச்சியால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக அழிக்க முடியாது. மின்னணு புத்தகங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பெற்றோர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்து, கல்வி முறை நூலகம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே இன்றைய தலைமுறையினரிடம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க முடியும். அப்படிச் செய்வதுதான் சமுதாயத்திற்கான முன்னேற்றமாக மலரும்.

நான் தாய்வான் நாட்டிற்குச் சென்றிருந்த பொழுது, அங்கிருந்த நூலகத்திற்குச் சென்றேன். அப்போது நேரம் இரவு பதினொரு மணி. அந்நேரத்திலும் பல இளைஞர்கள் ஆர்வமுடன் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்ததைக் கண்டு நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

என்னை அழைத்துச் சென்ற நண்பர் சொன்னாா், ‘உலகத்திலேயே இந்த நூலகம்தான் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும்’. நாட்டின் வளத்திற்கு பொருளாதாரம் மட்டுமன்று, நூலாதாரமும் இன்றியமையாதது.


கட்டுரையாளர்:
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழக அரசு. 

நன்றி: தினமணி -27.9.2021 

--------------

No comments:

Post a Comment