Monday, September 6, 2021

கடந்த கால சென்னையைக் காட்டும் ஒரு கலைடாஸ்கோப்

-- தேமொழி



கடந்த கால சென்னையைக் காட்டும் ஒரு கலைடாஸ்கோப் – ‘மெட்ராஸ் 1726′ நூல் திறனாய்வுக் கட்டுரை - 

பொது ஆண்டு 1500களுக்குப் பிறகு முதல் அலையில் இந்தியா வந்த ஐரோப்பியர்களது வருகையின் முதன்மை நோக்கமாக இருந்தது சமயம் பரப்புதல் என்றாலும், ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பணியாளர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிய பொதுநலச் சேவைகளும், தமிழ்ப்பணிகளும், கல்விப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. இதைக் கருத்தில், கொண்டு கல்வி அனைவருக்கும் கிடைத்திராத கடந்த சில நூற்றாண்டுகளில், தமிழகத்தில் பேதமின்றி அனைவரும் கல்வி பயில தக்க ஏற்பாடுகளையும் கல்விக்கூடங்களையும் உருவாக்கி ஒடுக்கப்பட்டிருந்த பிரிவினருக்குக் கல்வி வழங்கிய ஜெர்மானியச் சமயப்பணியாளர்களுக்கு இந்த நூலைக் காணிக்கை செய்துள்ளார் நூலாசிரியர். போற்றத்தக்கச் செயல் இது. அத்தகைய கிறித்துவ இறைப்பணியாளர்களுள் ஒருவரான பெஞ்சமின் சூல்ட்சே என்பவர் எழுதிய சென்னை நகர் மக்களின் வாழ்வியல் குறிப்புகளின் தொகுப்புதான் காலச்சுவடு பதிப்பகம் மூலம் தமிழ்மரபு அறக்கட்டளையின் முனைவர் க. சுபாஷிணி வெளியிட்டுள்ள ‘மெட்ராஸ் 1726′ என்ற நூல்.

பெஞ்சமின் சூல்ட்சே எழுதிய ‘மெட்ராஸ் ஸ்டாட்’ என்ற ஜெர்மானிய மொழி நூல் இந்த ‘மெட்ராஸ் 1726′ என்ற நூலாக உருவாகியுள்ளது. ஓர் ஐரோப்பியராகத் தன் பார்வையில் சென்னை குறித்துத் தான் அறிந்தவற்றை பெஞ்சமின் சூல்ட்சே மற்ற ஐரோப்பியச் சமயப் பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் எழுதிய நூல் இது. இதன் மூலம் அக்கால சென்னை மக்களின் வாழ்வியலை, உணவுகளை, பழக்க வழக்கங்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் முன்னுரையையும், ஜெர்மானிய ஆய்வாளர் பேராயர் ஆனந்த் அமலதாஸ் அவர்கள் அணிந்துரையும் வழங்கி தங்கள் துறைசார் வல்லுநர்கள் பார்வையில் கருத்துக்களை வைத்திருப்பது நூலுக்கு அணி செய்வதாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஐரோப்பியரின் எதையும் ஆவணப்படுத்தும் வழக்கம் கடந்த நூற்றாண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்த சாதாரண மாக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகை, அவர்கள் கொணர்ந்த அச்சு இயந்திரம் ஆகியவற்றினால் காகித அச்சு ஆவணங்கள் வரலாற்றுத் தகவல்களைத் தந்து உதவின. ஐரோப்பியர் சமயம் பரப்ப, வணிகம் செய்ய, ஆட்சி செய்ய என்ற பல பரிமாணங்களில் இந்தியாவுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டதால் அவர்களின் ஆவணங்களும் சமயம், தனிமனித செயல்பாடுகள், நிர்வாகம் என்ற பிரிவுகளில் தமிழகத்தின் வரலாற்றுக்குச் சான்றுகள் தந்துள்ளன.

பெஞ்சமின் சூல்ட்சேயும் அவரது சமயப் பணிகளும்:



பெஞ்சமின் சூல்ட்சே (Benjamin Schultze, 1689-1760) என்ற ஜெர்மானிய நாட்டவர், 18 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தக் கிறித்துவச் சபையின் போதகராக தரங்கம்பாடிக்கு 1719 ல் வந்து தனது 30 ஆம் அகவையில் சமயப் பணியைத் துவக்கினார். அவருடைய நாட்குறிப்புகளில் இருந்த தகவல்கள் இந்த நூலாக உருவாகியுள்ளது. இவரது முன்னோடியான ஜெர்மானிய மதகுரு ‘பார்த்தலோமஸ் சீகன்பால்க்’ மற்றும் ‘க்ருண்டலர்’ ஆகியோரின் மறைவுக்குப் பிறகு திருச்சபையின் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டு, தமிழ் கற்றுக்கொண்டு அவர்களின் சமயப்பணியை தரங்கம்பாடியில் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவர் பெஞ்சமின் சூல்ட்சே. பின்னர் அங்கிருந்து சென்னையில் இருந்த எஸ். பி. சி. கே (Society for Promoting Christian Knowledge) என்ற கிறித்துவ அறிவை வளர்க்கும் அமைப்பின் சமயப் போதகர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, 1726 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தரங்கம்பாடியில் இருந்து கடலூருக்குப் படகில் சென்று, பின்னர் அங்கிருந்து கால்நடையாக 1726 ஆம் ஆண்டு மே மாதம் சென்னைக்குச் சென்று சேர்ந்தார்.

இந்தப் பயணம் குறித்து அவர் எழுதிய குறிப்புகளையும், சென்னையில் அவர் 1726-1742 வரை பள்ளிகள் துவக்கி சமயப்பணிகள் செய்த பொழுது அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சென்னை குறித்து, சென்னை மக்கள் வாழ்வியல் குறித்து அவர் அறிந்தவற்றையும் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மன் மொழியில் ‘மெட்ராஸ் ஸ்டாட்’ (மெட்ராஸ் நகரம்) என்று எழுதி 1950 ஆம் ஆண்டு ஜெர்மானிய மொழியில் பெஞ்சமின் சூல்ட்சே வெளியிட்டார். முன்னர் ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் பெஞ்சமின் சூல்ட்சே அவர்களால் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமது 50 ஆம் வயதுகளில், உடல் நலம் தளர்வுற்ற காரணத்தால், மெட்ராசில் சமயப் பணிகள் தொடர்வதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்து, முறைப்படி பொறுப்பைப் பின் வந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, 1743 ஆண்டு ஜனவரி 5 ம் தேதி மெட்ராஸ் திருச்சபையில் கிறிஸ்துமஸ் வழிபாட்டில் பங்கேற்றுவிட்டு (300 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய வழக்கப்படி ஜனவரி 5 ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது) தாய்நாட்டுக்குக் கப்பல் ஏறுகிறார் பெஞ்சமின் சூல்ட்சே. தாய்நாட்டில் ஒரு 17 ஆண்டுகள் சமயப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டும், தனது இந்திய வாழ்க்கையில் அறிந்தவற்றைத் தொகுத்து நூல்கள் வெளியிட்ட பின்னர் அவர் தம் 70 ஆம் வயதில் உயிர்நீக்கிறார்.

தரங்கம்பாடியில் இருந்து கடலூருக்குச் செல்லுதல், பிறகு கடலூரில், பரங்கிப்பேட்டையில், சதுரங்கப்பட்டினத்தில் வாழ்க்கை, பின்னர் அங்கிருந்து மெட்ராஸ் என்ற சென்னைக்குச் செல்வது என்று நூல் விரிகிறது. பெஞ்சமின் சூல்ட்சேக்கு மெட்ராசில் கிடைத்த அனுபவங்கள், அவரால் அங்கு திருச்சபை துவக்கப்பட்ட வரலாறு, பின்னர் அங்கிருந்து அவர் மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்புதல் ஆகிய நிகழ்ச்சிகளை நூலின் முதல் பகுதி 66 பக்கங்களில் விவரிக்கிறது. அதாவது சுருக்கமாக பெஞ்சமின் சூல்ட்சே என்பவர் யார், அவருடைய பணி என்ன, அவரது வாழ்க்கை வரலாறு என்ன என்று அவரை நமக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது.

சுவையான தகவல்கள் நிறைந்த பகுதி நூலின் ‘உரையாடல்கள்’ என்ற இரண்டாம் பகுதி. இது பெஞ்சமின் சூல்ட்சே அவர்கள் எழுதிய குறிப்புகளின் மொழிபெயர்ப்புப் பகுதி. இப்பகுதி 30 தலைப்புகளில் சென்னை மக்களின் அக்கால நடைமுறை வாழ்க்கைக் கூறுகளை உள்ளடக்கியுள்ளது. 1733 மற்றும் 1746 ஆம் ஆண்டுகளில் வரையப்பட்ட சென்னை மாநகரின் வரைபடங்களும் பெஞ்சமின் சூல்ட்சே அவர்களின் ஓவியமும் பின்னிணைப்புகளாக நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. வரைபடங்களைப் பின்னிணைப்பாக கொடுத்ததற்கு மாறாக, இரண்டாம் பகுதியான உரையாடல் பகுதி தொடங்கும் முன்னர் கொடுத்திருக்கலாம். படத்தையும் அதற்கான விளக்கத்தையும் படித்துவிட்டு உரையாடல்களைப் படிப்பது உதவியாக இருக்கும். அவ்வாறே, பெஞ்சமின் சூல்ட்சே உருவப்படத்தையும் அவரைப் பற்றி விளக்கும் முதல் பகுதியின் தொடக்கத்தில் இணைத்திருந்தால் சிறப்பாகவும் உதவியாகவும் இருக்கும் என்பது எனது கருத்து.

இரண்டாம் பகுதியில் உள்ள 30 உரையாடல்களுக்கும் தனது மொழிபெயர்ப்புடன் உரையாடலின் சூழலையும் கருத்தையும் விளக்கும் பொருட்டு, உரையாடலின் தொடக்கத்தில் ‘சூழல்’ என்ற பகுதியும், இறுதியில் ‘உரையாடல் கூறும் செய்திகள்’ என்ற பகுதியும் நூலாசிரியரால் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூல நூலில் இடம் பெறாத இந்த விளக்கப் பகுதிகளைப் படிப்பவருக்குக் கொடுத்துதவிய முறை பாராட்டிற்குரியது.

இந்த நூலின் மூலம் சென்னை குறித்துப் படிப்பவர்கள், அட அப்பொழுதே அப்படியா என்று வியக்கும் பல செய்திகளை மனதில் நிறுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. பல்வேறு பண்பாட்டினர் கூடுமிடமாகவும், வணிகத்தின் தலைமை நகராகவும் சென்னை விளங்கியதால் அக்காலத்திலேயே ஒரு பெருநகரம் என்பதன் அறிகுறியாக 1725களில், அதாவது 300 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் 23 மொழிகள் பேசப்பட்டுள்ள நிலை இருந்திருக்கிறது என்ற வியப்பிற்குரிய செய்தியை பெஞ்சமின் சூல்ட்சே தனது குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

ஐரோப்பாவில் இருந்து கப்பலில் சென்னை வந்து சேர குறைந்தது ஒரு நான்கு மாதங்களுக்கும் மேலான பயணக் காலம் தேவைப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே உலகின் எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் சென்னையில் வாழ்ந்திருக்கிறார்கள். துபாஷி என்ற இருமொழி அறிந்தவர்கள் மாதச் சம்பளம் பெறும் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணிபுரிந்து ஐரோப்பியர்கள் உள்ளூர் மக்களுடன் உரையாட உதவியுள்ளார்கள். வெள்ளையர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் உள்ளே அமைந்திருந்த வெள்ளையர் நகரிலும், கோட்டைச் சுவருக்கு வெளியே இருந்த கறுப்பர் நகரில் உள்ளூர் மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள். பல்லக்கு, குதிரை, எருமை, கழுதை, எருது, ஒட்டகம், வண்டி போன்றவற்றை மக்கள் பயணத்திற்காகப் பயன் கொண்டுள்ளார்கள். கழுதை, குதிரை, எருமை, எருது எனத் தங்கள் தேவைக்கேற்ப விலங்குகளை வண்டி இழுக்கப் பயன்படுத்தி உள்ளார்கள். மலைப் பாம்பு, பெருச்சாளி, கிளி, அணில், நாய், எறும்பு, கொசு போன்ற உயிரினங்கள் ஊரில் இருந்துள்ளன.

முத்தியால் பேட்டை மற்றும் பெத்தநாயக்கன் பேட்டை பகுதிகளில் நிறைய தோட்டங்கள் இருந்துள்ளன. உயர் அதிகாரிகளும் மேல்தட்டு மக்கள் போன்றோரும் பயணிக்கும் பல்லக்கு, அதைச் செய்ய ஆகும் செலவு, பல்லக்கு தூக்குவோருக்காக அரசு நிர்ணயித்த அடிப்படை ஊதியம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளமுடிகிறது. ஐரோப்பியர்கள் ஏறக்குறைய தினமும் பன்றி இறைச்சி சாப்பிட்டுள்ளார்கள். வீட்டு வேலைக்கு வேலைக்காரச் சிறுவர்கள், நீர் கொண்டுவரும் பணிப்பெண்கள், சமையற்காரர், தோட்டக்காரர், குதிரையைப் பராமரிப்பவர் என பல வகைப் பணிகளுக்கும் பணியாளர்கள் ஐரோப்பியர்கள் இல்லத்தில் உதவிக்கு இருந்துள்ளனர். சில சமையற்காரர்கள் களவாடும் பண்புடனும் இருந்துள்ளனர். ஊரில் செல்வந்தர்கள் வீட்டில் அடிமைகளும் கூட இருந்துள்ளனர். பிச்சைக்காரர்களும் அவர்களுக்கு உணவளிப்போரும் சென்னையில் இருந்துள்ளனர்.

அன்றாடச் சமையலுக்கும் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கும் வேண்டிய பொருட்கள் யாவை, அவை சென்னை நகரில் எங்கெங்கு கிடைக்கும், அவை என்ன விலை இருக்கும் என்று பணிப்பெண்ணுடன் நடத்தும் பல உரையாடல்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. சரக்கு கிடைக்கும் நிலைக்கு ஏற்ப வணிகர்கள் சந்தையில் பொருளின் விலையை ஏற்றி இறக்குவதும், விலை பேரம் பேசுவதும் அன்றும் வாடிக்கையாக இருந்திருக்கிறது, எந்தப் பொருட்களாக இருந்தாலும், நகைகள் உட்படப் பேரம்தான் (செய்கூலி சேதாரம் போன்றவை இருந்ததா என அறிய ஆர்வம் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை). புழக்கத்தில் இருந்த நாணயங்களையும் அவற்றின் மதிப்பையும், வடிவத்தையும், அவை உருவாக்கப்பட்ட அக்கசாலைகள் எங்கிருந்தன என்பது வரையிலும் நூலில் குறிப்புகள் கிடைக்கின்றன. மக்களுக்குக் கொசுவலைகள் தேவைப்பட்டுள்ளன. அச்சு வேலை, சரிகை வேலை செய்யப்பட்ட துணிகளையும், பருத்தி பட்டுத் துணிகளையும் உள்ளூர்க் கடைகளில் வாங்கி, உள்ளூர் தையற்காரரிடம் கொடுத்து ஐரோப்பியர்கள் தாங்கள் உடுக்கும் வகை ஆடைகளாகத் தயாரித்து அணிந்திருக்கின்றனர்.

வண்ணார்கள் துணிகளைப் பிரித்தறிய துணிகளில் குறியீடுகள் பயன் படுத்தி உள்ளார்கள். துவைக்க வரும் துணிகளை உரிமையாளருக்குத் தெரியாமல் வாடகைக்குப் பிறருக்குக் கொடுத்துள்ளார்கள். திருமணம் என்று பதின்ம வயது பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி, அந்த விழாவிற்காக ஏராளமான செலவு செய்து, கடமை என்று கருதி 5000 பார்ப்பனர்களுக்கு 5 நாட்களுக்கு வகைவகையாக உணவுகள் படைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. வாணவேடிக்கைகளும் இசைக் கச்சேரியும் ஊர்வலமும் திருமண விழாவில் இடம் பெற்றுள்ளன. விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளின் வகைகளும், கேளிக்கைக்கு விட்ட பட்டாசுகளின் வகைகளும் அவற்றின் விலைகளும், இசைக்கச்சேரி நிகழ்த்திய கலைஞர்களும் அவர்கள் இசைத்த இசைக் கருவிகளின் வகைகளும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் என ஏராளமான மலைக்க வைக்கும் திருமணவிழா குறிப்புகள் மட்டுமல்ல இறப்புச் சடங்குகள் பற்றிய குறிப்புகளும் கூட இடம் பெற்றுள்ளது இந்த நூலில்.

உள்ளூர் மக்கள் ஐரோப்பியர்களை அவர்களது முகத்திற்கு முன்னர் புகழ்ந்து பேசியும், பின்னர் அவர்கள் இல்லாத பொழுது தூற்றுவதும் ஏமாற்றுவதும் வழக்கமாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்த இந்தியர் ஒருவர் இருநாட்டு மக்களின் பண்புகளை ஒப்பிட்டுக் குறிப்பிடுவதாகவும் காட்டப்படுகிறது. ஊழியர்கள் மற்றொரு ஊழியரைப் பற்றி கோள் சொல்வது, நீதிமன்றத்தில் பொய்யுரைப்பது போன்றவையும் நூலில் பதிவாகியுள்ளது. நீரை விலைகொடுத்து வாங்கும் நிலை, கள்ளச்சந்தை, பதுக்கல் போன்றவற்றைச் சுயநலம் கொண்ட அரசர்களும் அவர்களது அதிகாரிகளுமே செய்து மக்களை வறுமை நிலைக்குத் தள்ளி புலம் பெயர்ந்து ஓட வைத்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

கொடை அளிப்பவர் தங்களுக்குப் புண்ணியம் என்று நோக்கில் மட்டுமே அளிக்கிறார்கள் என்பது போன்ற மக்களின் மனப்பான்மை இன்றும் வழக்கமே. இந்த நூலின் இறுதிப் பகுதியில் உள்ள சில உரையாடல்களில் இந்தியாவில் பல ஆண்டுகளாக வாழும் ஐரோப்பியர் ஒருவர், கப்பலில் வந்திறங்கிய தனது சகோதரர் ஒருவரையும், இங்கு வாழும் ஐரோப்பியரை மணக்க வரும் சகோதரியையும் சந்திக்கிறார். இந்தப் பெரிய அண்ணன் தனது தம்பிக்கும் தங்கைக்கும் இந்திய உணவுவகைகள், உணவுக்காகப் பயன்படும் விலங்குகள் மீன் பறவை வகைகள், மதுபான வகைகள், தமிழ்நாட்டில் பயிராகும் காய் கனிகள், மக்கள் வாழும் வீடுகளின் அமைப்பு, தமிழ்ப்பெண்களின் உயர் பண்புகள், பசுக்களை வணங்கும் வழக்கம், இளவயது திருமணம், குடும்ப வாழ்க்கை, இறப்பு, கைம்பெண்கள் நிலை, ஏற்றுமதி இறக்குமதியாகும் பொருட்கள் அவற்றின் விலை என்று அறியத்தரும் செய்திகள் ஏராளம். அவற்றால் 1700களில் தமிழ்நாட்டு மக்கள் குறித்து நாம் அறிவதும் ஏராளம்… ஏராளம்.

மக்களின் வாழ்வு குறித்து இவ்வளவு விவரங்களை ஓர் அயல்நாட்டார் பதிவு செய்திருக்க, சங்க காலத்திற்குப் பின்னர் வந்த இலக்கியங்களில் இது போன்று பதியப்பட்ட ஒரு நிலை இல்லாது போய், குறைந்தது ஒரு 1500 ஆண்டுகளுக்கு நம் தமிழக மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், சராசரி மக்களின் வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது என்ற குறிப்புகள் அதிகம் இல்லாத ஓர் இலக்கிய வெற்றிடம் நெஞ்சைக் கனக்க வைக்கிறது. பெரியார் தமிழ் இலக்கியவாதிகளின் அக்கறையின்மை குறித்தும், எழுதப்பட்ட இலக்கியங்களினால் விளைந்த பயன் குறித்தும் கொண்ட சினமும் புரிகிறது. அன்றைய சங்ககாலப் பட்டினப் பாலை மூலம் காவிரிப்பூம்பட்டினத்து நகர்வளம் மக்கள் வாழ்க்கை முறை அறிந்து கொள்ள உதவினார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். 18 ஆம் நூற்றாண்டு மதராசபட்டினத்தின் நகர்வளம் மக்கள் வாழ்க்கை முறையை நாம் அறிந்து கொள்ள உதவியுள்ளார் பெஞ்சமின் சூல்ட்சே.

ஓர் இனத்தின் வரலாறு என்பது ஆட்சியாளர்களின் வெற்றி குறித்த வரலாறு மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் வாழ்ந்த குடிமக்களின் இயல்பு வாழ்வையும் அறியத் தருவதாக வரலாறு இருக்க வேண்டும். இல்லாவிடில் அந்த வரலாறு முழுமையான வரலாறாக அமையாது. பல ஐரோப்பியர்களின் ஆவணக் குறிப்புகளில் கிடைக்கப் பெறும் தமிழக வரலாற்றுச் செய்திகளைத் தவிர்த்து வரலாறு எழுதுவதும் வரலாற்றை முழுமை பெறச் செய்யாது என்ற நோக்கில் தன்னால் இயன்ற வழியில், தான் பெற்ற ஜெர்மானிய மொழி அறிவு மற்றும் ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்கள், நூலகத் தொடர்புகளைப் பயனுக்குக் கொண்டுவரும் வகையில் சென்னை மாநகரின் வரலாற்றுத் தகவல் நிறைந்த சிறந்த நூலொன்றை வெளியிட்டுள்ளார் சுபாஷிணி. அதையும் இந்த ஆண்டின் சென்னை நாள் கொண்டாட்டத்தில் வெளியிட்டது மிகவும் பொருத்தம். அடுத்து வரும் ஆண்டுகளில் சென்னை நாள் கொண்டாட்டங்களில் பலர் மெட்ராஸ் 1726 நூல் தரும் வரலாற்றுச் செய்திகளை நினைவுகூர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நூல் கடந்த கால சென்னையைக் காட்டும் ஒரு கலைடாஸ்கோப். 18 ஆம் நூற்றாண்டு மெட்ராஸ் மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று இந்த நூலின் மூலம் அறியத் தந்த முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்குப் பாராட்டுகள்.



நூல் விவரம்:
மெட்ராஸ் 1726
பெஞ்சமின் சூல்ட்சே (Benjamin Schultze)
ஜெர்மனியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு:
முனைவர் க. சுபாஷிணி
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 216
ஆகஸ்ட் 2021
ISBN: 978-93-91093-97-6


நன்றி:  சிறகு 



No comments:

Post a Comment