Tuesday, September 7, 2021

பண்டிதர் அயோத்திதாசரின் வாழ்வும் பணிகளும்

--முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி



ayothidasr.JPG

தமிழ், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையாக அமைந்ததற்குத் தொடக்கக் கால வித்தாய் அமைந்தவர் பண்டிதர் அயோத்திதாசர். அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் அவரது கருத்தியல் போராட்டங்களை மீண்டும் நினைவூட்டுகிறது இக்கட்டுரை.

முன்னுரை:
உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அடிப்படை, சிந்தனை வளர்ச்சியும், அதன் செயலாக்கமும் தான். சிந்தனை வளர்ச்சியில் ஏற்படுகின்ற ஒரு பொறி வரலாற்றையே திசை திருப்பிவிடும். அந்தப் பொறியை யார் உருவாக்குகிறாரோ அவர்தான் கலகக்காரர். இந்தக் கலகக்காரர்கள் காலச்சுவடுகளை ஏற்படுத்த வல்லவர்கள். அப்படி இரண்டு கலகக்காரர்கள் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்தனர். அவர்கள் செய்தது சமுதாயப் புரட்சி. அவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தான்.  இவர்களுக்கு முன்பே 19 ஆம் நூற்றாண்டில் ஒரு கலகக்காரர் இருந்தார். அவர் தொடங்கிய கலகம் இன்னும் ஒரு சமூகப் புரட்சியாக வெடிக்கக் கூடும். அவர்தான் அயோத்திதாசப் பண்டிதர்.

பெயர்க் காரணம்:
அயோத்திதாசர் 20. 5. 1845 அன்று பிறந்தார். அவருடைய இயற்பெயர் காத்தவராயன். அவருடைய தந்தையார் கந்தசாமி. அவருடைய பாட்டனார் கந்தப்பன். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் போது சென்னை மாகாண ஆட்சியாளராக தாமஸ் மன்றோ இருந்த வேளையில், கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகப் பொறியாளராகப் பணிபுரிந்தவர் ஜார்ஜ் ஆரிங்டன். அவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர் அயோத்திதாசரின் தாத்தா கந்தப்பன் ஆவார். 

கந்தப்பனார் பேரனும், கந்தசாமியின் மகனுமான காத்தவராயன், வளருங் காலத்தில் கல்வி கற்கும் பொருட்டு அக்காலத்திய வழக்கப்படி திண்ணைப் பள்ளியில் அயோத்திதாசக் கவிராயர் என்னும் புலவரிடம் விடப்பட்டார். காத்தவராயன் சிறு வயதிலிருந்தே கல்வியில் மிகவும் நாட்டம் உள்ளவராக வளர்ந்தார். தன் குருவின் புலமையினாலும், அறிவினாலும் ஈர்க்கப்பட்ட காத்தவராயன், குருவின் சிறந்த மாணவனாகி, அவரைப் போலவே புலமை பெற்றுக் கவிராயர் ஆனார். தன் குருபக்தியின் விளைவாக அவரது பெயரையே பூண்டு அயோத்திதாசர் ஆனார்.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, 1858 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆட்சி இந்தியாவில் பிரகடனப் படுத்தப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் இந்தியச் சமூகங்களின் வழக்காறுகளில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி சனாதனவாதிகளைக் களிப்படைய வைத்தது. ஆனாலும் அதற்கும் ஒரு மாற்றாக இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, இந்தியாவில் அனைவரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அரசுப் பள்ளியில் சேர்ந்து, கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கல்வி, கேள்விகளைத் திறம்பட முடித்தார் அயோத்திதாசர். 

பின்னர், தன் பூர்வீகக் கிராமமான கோவை, அரசம்பாளையம் சென்று சிறிது நாட்கள் பணிபுரிந்து வந்தார். அங்கு ஒரு மலையக மங்கையை மணமுடித்தார். அங்கு வசித்தவர்கள் தொழில் நிமித்தமாக இரங்கூனுக்குச் சென்றபோது, அயோத்திதாசரும் அவ்வழியே புலம்பெயர்ந்து, பத்தாண்டுகள் கழித்து திரும்பவும் சொந்த நாடு வந்து சேர்ந்தார்.

திருக்குறள் பதிப்பு:
தமிழகத்தின் ஆதி குடியான வள்ளுவர்கள் கற்றோர், கணியர்கள் அதிகம் கொண்ட சமுதாயமாக இருந்தனர். இவர்களில் பெரும் புலவர்களும் இருந்தனர் என்பதற்கு திருவள்ளுவரே சாட்சி. மேலும் இவர்கள் சோதிடர்களாகவும், வைத்தியர்களாகவும், கோயில் நிர்வாகிகளாகவும் இருந்தனர். சோதிடத்திற்கு வள்ளுவ சாத்திரம் என்ற பெயரும் உண்டு. கோள்களின் நிலையை வைத்து வானியல் அறிவின் துணையுடன் எதிர்காலத்தைக் கணிக்கும் முறையிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். முற்காலங்களில் மன்னனின் குருவாகவும், மன்னனின் ஆணையை அறிவிப்புச் செய்பவர்களாகவும் வள்ளுவர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களுக்கு "உள்படு கருமத் தலைவன்" என்னும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வள்ளுவர்களே கருவோட்டம் பார்த்து மழை முன்கணிப்புச் செய்து வந்தனர். 

சாக்கையர் என்று வழங்கி வரும் வள்ளுவர் சமுதாய வழித்தோன்றிய அயோத்திதாசரின் முன்னோர்களும் மிகச் சிறந்த கல்வியாளர்களாக இருந்தனர். அதனால் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாளர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளச் சாத்தியமானது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் அயோத்திதாசரின் முன்னோர்கள் கொண்ட தொடர்பும், இவர்களது கல்வி அறிவால் வளர்ந்திருந்த நெருக்கமும் தமிழிலக்கிய மேம்பாட்டிற்குப் பெரிதும் துணையாய் அமைந்தன. திருக்குறள் முதன்முதலாக அச்சில் வெளிக் கொணரக் காரணமாக அமைந்தவர் அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் அவர்களே.

இங்கிலாந்தில் குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று பிரிட்டிஷ் இந்திய நிர்வாகப் பணியாற்றச் சென்னைக்கு வந்திருந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் (1777-1819) தமிழ் மொழி கற்கத் தொடங்கி, பின் தமிழின் வளங்களைக் கண்டபின், தமிழ் தொடர்பான சங்கம் ஒன்றைத் தொடங்கி, தமிழில் கிடைத்த முக்கியமான ஓலைச்சுவடிகளை அச்சியற்றும் பணியைத் தன் ஓய்ந்த நேரப் பணியாகக் கொண்டிருந்தார். அயோத்திதாசரின் பாட்டனார் உதவியாளராக இருந்த பொறியாளர் ஜார்ஜ் ஆரிங்டன், எல்லீஸ் பிரபுவின் நண்பராக இருக்கவே கந்தப்பன் - எல்லீஸ் தொடர்பு சாத்தியமானது. இத்தொடர்பு எல்லீஸ் பிரபுவின் தமிழ்க் காதலுக்கு எருவானது.

கந்தப்பனாரிடம் தமிழின் வளம் மிகுந்த செல்வங்கள் ஓலைச் சுவடிகளாக  இருந்ததைக் கண்டு கொண்ட எல்லீஸ் பிரபு, அப்பாரம்பரியச் சொத்துக்களை அவரிடமிருந்து கேட்டுப் பெற்றார். இதுவரை வாசித்த தமிழ் இலக்கியங்களில் மிக அரிதானதும், முதன்மையானதும் ஆன திருக்குறள் ஓலைச்சுவடி அவரை திக்குமுக்காடச் செய்து விட்டது. தான் தமிழ் கற்றுக் கொண்டிருந்த தமிழ் வித்துவான்கள் தாண்டவராய முதலியார், முத்துசாமிப் பிள்ளை ஆகியோரிடம் அவ்வோலைச் சுவடிகளைக் கொடுத்து அச்சிலேற்றப் பணித்தார். 1831 ஆம் ஆண்டு திருக்குறள் முதன்முதலாக அச்சில் வெளிவந்தது. தொடர்ந்து கந்தப்பனாரிடம் இருந்து பெற்ற திருவள்ளுவமாலையும், நாலடி நானூறும் அச்சில் வெளிவந்தன. ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தோடு ஓலைச்சுவடிகள் அச்சு நூலாக வெளிவந்ததைக் கண்டுக் கந்தப்பனார் பெருமை அடைந்தாலும், அதில் ஒரு சில இடைச்செருகல்கள் அவரை வேதனை அடைய வைத்தன.

பின்னாட்களில் அயோத்திதாசர் திருக்குறளின் 55 அதிகாரங்களுக்கு உரை எழுதினார். அவை இதுவரை வெளிவந்த திருக்குறள் உரைகளில் இருந்து பெரிதும் வேறுபட்ட உரையாக இருந்தது. திருக்குறளைத் திரிக்குறள் என்றே அயோத்திதாசர் விளக்கம் அளித்தார்.

சமயப் பயணங்கள்:
அயோத்திதாசர்க்கு அவரது தந்தை இட்ட பெயர் காத்தவராயன். காத்தவராயன் என்ற அவரது இயற்பெயரே வள்ளுவத்தில் இருந்து வெகு தூரம் விலகி வந்து விட்ட தமிழ்ச் சூழலையும், அச்சூழலின் சாதி ஆதிக்க மேலாண்மையையும் குறிக்கும். இதிலிருந்து விடுபட்டுத் திரும்பவும் பௌத்தக் கடலினுள் போய் அடைவதற்குள் அயோத்திதாசருக்கு நீண்ட பயணம் நிகழ்ந்து விடுகிறது. முன்னோர் வழிகாட்டல், குருபக்தி எல்லாம் அவரைத் துளசிமாடம், அத்துவைதானந்த சபை ஆகிய அமைப்புகளுடன் உள்ளூரிலேயே (நீலகிரி - 1870) அடைத்து விடும் அளவுக்குச் சென்றாலும், அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து அவரது தேடலுக்கு விடை கிடைத்து விடுகிறது. 1882 ஆம் ஆண்டில் அயோத்திதாசர் நீலகிரியில் தன்னுடைய மைத்துனர் இரட்டைமலை சீனுவாசனுடன், கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் மற்றும் பிளாவட்ஸ்கி அம்மையார் ஆகியோரைச் சந்தித்தார். அமெரிக்கரும், ரஷ்யரும் ஆன இவர்கள் தத்துவத் தேடலில் ஒன்றிணைந்து 1883 ஆம் ஆண்டில் சென்னை அடையாறில் பிரம்ம ஞான சபையைத் துவக்கினர். தியோசாபிகல் சொசைட்டி என்னும் இந்த பிரம்ம ஞான சபை இதற்கு முன்னரே இவர்களால் 1875 இல் நியூயார்க்கிலும், 1879 இல் பம்பாயிலும் தொடங்கப்பட்டது. அதுவரை வைணவத்தைக் கடைப்பிடித்து, அத்துவைத மரபின் நம்பிக்கைகளோடு பயணித்து வந்த அயோத்திதாசர், தெளிந்த சிந்தனையுடன் மெல்ல மெல்ல மூடநம்பிக்கையில் இருந்து விடுவித்துக் கொண்டார். 

பௌத்த சமயச் சார்புடையவரான கர்னல் ஆல்காட், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வந்தவர். அடையாறில் பஞ்சமர் பள்ளியை நிறுவி நடத்தி வந்தார். இவையெல்லாம் அயோத்திதாசருக்கு அவரது தேடலின் முடிவாகக் கொள்ளப்படும் வாய்ப்பாக அமைந்து ஆல்காட் உதவியுடன் பௌத்தர் ஆகும் உறுதியைக் கொடுத்தன. 1898 இல், பஞ்சமர் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணசாமி, கர்னல் ஆல்காட் இவர்களோடு கொழும்பு சென்ற அயோத்திதாசர், அங்கு சுமங்களா என்னும் பௌத்த சமயக் குருவிடம் தீட்சை பெற்றுப் பௌத்தர் ஆனார். கொழும்பில் நடைபெற்ற பௌத்த சமயப் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஆல்காட்டுடன் அயோத்திதாசரும் பேசினார். 

இந்தியா திரும்பிய பின்னர், சென்னை ராயப்பேட்டையில், தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை அயோத்திதாசர், கர்னல் ஆல்காட்டின் உதவியுடன் 1898 இல் நிறுவினார். அயோத்திதாசர், தமிழ் பௌத்தம் என்னும் சித்த வைத்தியத்தைத் தமிழர்களுக்கு அளிக்கச் சித்தமானார். பௌத்த சமயத் தத்துவங்கள் இந்த சங்கத்தில் விளக்கப்பட்டன. அயோத்திதாசர், பேராசிரியர் லட்சுமி நரசு, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஆகியோர் இணைந்து பௌத்த சமயப் பிரச்சாரம் செய்து வந்தனர். இக் கூட்டங்களுக்கு எதிர்ப்பாளராக வந்த திரு வி. கலியாணசுந்தரனார் மனம் மாறி, "எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று" என்று பாராட்டியுள்ளார். 

இதன் பிறகு அனைத்திற்கும் பௌத்தத்தையே தீர்வாக வைத்து அயோத்திதாசர் எழுதியும், பேசியும் வந்தார். தமது பௌத்தச் சமயப் பணிகளின் காரணமாகத் "தென்னிந்திய பௌத்த சமய முதல் மறுமலர்ச்சியாளர்" என்று அயோத்திதாசர் போற்றப்படுகிறார்.

இந்துக்கள் அல்ல ஆதித் தமிழர்கள்:
1881 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இந்தியாவில் வாழ்ந்த பெரும்பான்மையினரை இந்துக்களாக மாற்றிய வஞ்சகம் நடைபெற்றது. ஆட்சியாளர்களுடன் நெருங்கி இருந்த உயர்சாதியினர், தங்களுக்கே தெரியாமல் மாபெரும் மதப் புரட்சியில் வெற்றி பெற்றனர். என்ன நடக்கிறது என்றே தெரியாத பல கோடி இந்தியர்கள் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 

இத்தகைய மறைமுகமான மத மாற்றத்தைப் புரிந்து கொண்ட அயோத்திதாசர், இப்படிப்பட்ட வலுக்கட்டாயமான, இந்துவாக மாற்றம் திணிப்பை எதிர்த்து அரசாங்கத்திற்குக் கோரிக்கைகள் அனுப்பினார். "இந்துக்கள் என்ற அடையாளத்தை விடுத்து ஆதித் தமிழர்களாக செவ்வியல் மதத்தைச் சார்ந்தோரும், சாராதோரும் அறிவிக்கப்பட வேண்டும்" என்று அவர் எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கை அன்றைய காலனிய ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. பிரிட்டிஷ் போர்வையில் இந்துத்துவம் பெரிதாக மலர்ந்துவிட்டது. இந்தியாவின் பூர்வ குடிமக்களைத் தமிழராகவும், திராவிடராகவும், பௌத்தர்களாகவும் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். இந்தியாவின் பூர்வ குடிமக்கள் நாகர்கள் என்றும், அவர்களே திராவிடர்கள் என்றும், அவர்களின் மொழி தமிழ் என்றும் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அயோத்திதாசர் எழுப்பும் குரல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான குரலாக ஒலித்தது. 

இந்திய வரலாற்றில் பழங்குடி மக்கள் அனைவரும் பௌத்தர்களாக இருந்ததைக் கண்ட அவர், பேரார்வம் கொண்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்குடி மரபினை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார். முந்தைய தமிழர், திராவிடர், பௌத்தம் ஆகிய வரலாறுகள் வைதிகப் பார்ப்பனர்களால் மாற்றம் செய்யப்பட்டுப் பொய்யான புதிய புராணங்களும், இதிகாசங்களும், வேதங்களும் கட்டமைக்கப்பட்டுப் பூர்வகுடி மக்கள் மேல் திணிக்கப்பட்டு விட்ட உண்மையை அயோத்திதாசர் அறிந்து, உணர்ந்து, அதைத் தமிழுலகம் அறியத் தந்தார்.

ஆதியில் இருந்த சாதி பேதமற்ற திராவிடப் பழங்குடியினர், பின்னாட்களில் சமய அதிகாரமும், அரச அதிகாரமும் கொண்ட வைதிகப் பிராமணியத்தின் வஞ்சகத்தில் வீழ்ந்து, தங்களை ஒடுக்கும் மதத்தை ஏற்று, தங்களை இழிவு படுத்தும் புராணங்களை நம்பி, தங்களை ஒடுக்கும் வரலாற்றுக் கூண்டினில் தாங்களே அடைபட்டுக் கண்கள் பஞ்சடைந்த புலிகளாகி விட்ட பழங்குடியினரின் வீழ்ச்சியுற்ற நிலையினைத்தான் அயோத்திதாசர் சுட்டிக்காட்டினார். 

உண்மையான வரலாற்றைக் கட்டுடைத்துப் பொய்யான புராணங்களைக் கட்டமைத்து, அதிகாரத்தின் உச்சத்தை அனுபவித்துக் கொண்டிருந்த வைதீகப் பிராமணிய ஆணவக் கூட்டத்தைத் துச்சமாக மதித்த அயோத்திதாசர், அந்தப் பொய்யான புராண, இதிகாசங்களைக் கட்டுடைத்து மீண்டும் தன் பூர்வகுடி மக்களுக்கான, திராவிடர்களுக்கான, தமிழ் பௌத்தர்களுக்கான தன்மான வாழ்வைப் புதியதாகக் கட்டமைக்கும் மாபெரும் பணியை, நெடிய பயணத்தைத் தனி ஒருவராக மேற்கொண்டார். 

அந்தப் பயணம் சாதி பேதமுற்று ஒடுங்கிக் கிடந்த தமிழர்களை மீண்டும் சாதியற்றத் தமிழர்களாக ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டமாக இருந்தது. வைதிகத்தை ஏற்று இத்தனை ஆயிரம் சாதிகளாகப் பிரிந்து விட்ட அத்தனைத் தமிழர்களையும் எப்படிச் சாதியற்றவர்களாக ஆக்குவது? ஆக்கலாம். ஆக்க முடியும். அப்படித்தான் வாழ்ந்தார்கள். இங்கு தான் உண்மையான வரலாறு கைகொடுத்தது. இருக்கின்ற சமயத்தைத் துறந்து பூர்வகுடி மக்களின் பூர்வ சமயம் இதுவென அறிவிப்பது தான் அது. 

பூர்வ பௌத்தர்களாகத் தமிழர்கள் ஆகும் பட்சத்தில், சாதி பேதமற்ற சமயமாகவும், சமுதாயமாகவும் அது மாறும் என்றார் அயோத்திதாசர். ஆதிக்கச் சமயங்கள் நமக்குச் சமநிலை தராதென்றால், ஆண்டவன் சன்னதியில் கூட அடுக்குமுறையும், அடக்குமுறையும் நிலவும் என்றால் நமக்கான சமயம், வழிபாடு, பண்பாடு எல்லாவற்றையும் நாமே கட்டமைத்துக் கொண்டு - கட்டமைத்தல் கூடத் தேவையில்லை - ஆதியில் இருப்பதையே மீட்டுருவாக்கம் செய்து கொண்டு, இன்னொருவன் சொல்லில் மானமற்று வாழ்வதைவிட, நம்முடைய மொழியில் தன்மானம் கொண்டு வாழ்வதே தமிழர்களின் வாழ்வு, அது தமிழ்ப் பௌத்தமாக நிலவும் பட்சத்தில் இது ஒன்றே வைதீகப் பார்ப்பனியத்திற்கு ஒலிக்கும் சாவுமணி என்று அறிவித்தார் அயோத்திதாசர்.

திராவிட மகாஜன சபை:
வெஸ்லி சபையாரான அருட்திரு ஜான் ரத்தினம் என்பவருடன் அயோத்திதாசருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 'திராவிடச் சங்கம்' என்ற அமைப்பின் மூலம் ஏழை மக்களுக்குத் தொண்டாற்றி வந்த ஜான் ரத்தினம், அயோத்திதாசரைத் துணை கொண்டு 1885 ஆம் ஆண்டில் 'திராவிட பாண்டியன்' என்னும் இதழைத் துவக்கினார். இதற்கு முன்னரே தன் ஆசானான வல்லக்காளத்தி வீ. அயோத்திதாசக் கவிராயருடன் 'சூரியோதயம்' என்னும் இதழை 1869 ஆம் ஆண்டிலும், புதுப்பேட்டை வேங்கடசாமிப் பண்டிதருடன் இணைந்து 'பஞ்சமன்' என்னும் இதழை 1871ஆம் ஆண்டில் நடத்திய அனுபவமும் அயோத்திதாசருக்கு இருந்தது.

1887 ஆம் ஆண்டு வாக்கில் அயோத்திதாசரின் தேடலில் மிகப்பெரிய பொக்கிஷம் ஒன்று கிடைத்தது. பௌத்தத் துறவி அசுவகோஷ் இயற்றிய "நாரதீய புராண சங்கைத் தெளிவு" என்ற பெயரில் 570 பாக்களைக் கொண்ட ஓலைச்சுவடி கிடைத்து, அயோத்திதாசரின் இத்தனை நாள் வேட்கைகளுக்கும் விடையளித்தது. மேலும், காக்கைப் பாடினியார் மற்றும் நல்லுருண்டையார் ஆகிய புலவர்களின் விளக்க ஓலைச் சுவடிகளும் கிடைத்து அவரின் சிந்தனைப் போக்கை விரித்தன. 

1891 ஆம் ஆண்டில் தன்னை ஒத்த கருத்துக் கொண்ட பலருடன் சேர்ந்து "திராவிட மகாஜன சபை"யைத் துவக்கினார் அயோத்திதாசர். அதற்கு அடுத்த ஆண்டில் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்ற சென்னை மகாஜன சபைக் கூட்டத்தில் திராவிட மகாஜன சபையின் நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட அயோத்திதாசர், ஆலய நுழைவில் ஆதிதிராவிடர்களுக்கான உரிமைக் குரலை எழுப்பினார். "எங்கள் கடவுள் ஆலயத்தில் உங்களுக்கு இடம் இல்லை. மேலும் உங்கள் கடவுள் வேறு" என்று மகாஜன சபையின் தஞ்சாவூர்ப் பிரதிநிதி சிவராம சாஸ்திரியின் பதிலால் மிகவும் வேதனை அடைந்தார் அயோத்திதாசர். 

மேலும் ஆதிதிராவிடர் கல்வி மேம்பாட்டிற்கும், குடியிருப்பு நிலம் தொடர்பாகவும் அக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று அயோத்திதாசர் குரல் எழுப்பியபோது, "கல்வியும், விவேகமும் பிராமண வித்திற்கே சொந்தமானது" என்று சிவராம சாஸ்திரி சொல்லக் கேட்டு, அங்குக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர். இதனால் மிகவும் மனம் நொந்த அயோத்திதாசர், "கல்வியும் விவேகமும் பிராமண வித்திற்கே சொந்தமானது என்றால், இன்றைய தினம் சிறைச்சாலைகளில் இருக்கக்கூடிய பிராமணர்கள் எல்லாம் யாருடைய வித்திற்குப் பிறந்தவர்கள்" என்று கூறி ஆர்ப்பரித்த அக்கூட்டத்தை அடக்கி உட்கார வைத்தார். ஆனாலும் இந்த நிகழ்ச்சி அவர் மனதை மிகவும் புண்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தான் சாதிய விரோதம், மதத்துவேஷங்களுக்கான காரணங்களாகத் தான் இதுவரை கண்டு, கேட்டு, உணர்ந்து கற்றவைகளிலெல்லாம் ஆய்ந்து ஒரு தெளிவுக்கு வந்தார் அயோத்திதாசர். அது முற்றிலுமாக வரலாறு முதற்கொண்டு அனைத்தையும் புரட்டிப் போடுவதுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வந்த புரட்டு, முரட்டு வாதங்களைத் தவிடுபொடியாக்கும் தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆதித் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் கலகத்தின் தொடக்கமாக அமைந்தது. அதுதான் தமிழ் பௌத்த அடையாளம். இக்கனவின் அடையாளத்தை நாட்டுப்புறத் தெய்வங்களில் இருந்தே அயோத்திதாசர் துவங்குகிறார் என்பது, இந்தத் தமிழ் மண்ணின் அடையாளத்தை இந்திய நாடெங்கும் விரிக்கும் அவரது பெருங்கனவாகக் கொள்ளலாம்.

ஒரு பைசாத் தமிழன்:

oru paisa.jpeg

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், நிகண்டுகள், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றை விரல்நுனியில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யும் பெரும் புலமை பெற்று விளங்கியவர் அயோத்திதாசர். தமிழ், பாலி, பிராகிருதம், சமக்கிருதம் என்று பன்மொழிப் புலமை பெற்றவர். ஏற்கனவே சூரியோதயம் (1869), பஞ்சமன் (1871), திராவிட பாண்டியன் (1885) ஆகிய இதழ்கள் நடத்திய பட்டறிவைக் கொண்டு, 19. 6. 1907 முதற் கொண்டு "ஒரு பைசாத் தமிழன்" என்னும் இதழைத் துவக்கினார் அயோத்திதாசர். இந்தப் பெயருக்கு அயோத்திதாசர் கொடுத்த விளக்கம்: 

"தாழ்த்தப்பட்ட சமூகத்தவரைப் பைசா பெறாதவன் என்பது போல இளப்பமாகக் கூறுவது வழக்கமாயினும், அத்தகைய ஒரு பைசாத் தமிழனின் அருமை அறியாதவர்கள், அதன் உண்மையை உணர்ந்தால் ஒரு கோடிப் பொன் இதுதான் என்று உரைப்பர்" என்று கூறியிருக்கிறார். என்றாலும், அடுத்த ஆண்டிலேயே இதனைத் "தமிழன்" என்று பெயர் மாற்றம் செய்து 26. 8. 1908 முதல் 15. 4. 1914 வரை நடத்தினார். இவ்விதழில் நிகண்டு நூற்பாக்கள், இலக்கண, இலக்கிய, காப்பிய விளக்கங்களும், உலகச் செய்திகளும் தொடர்ச்சியாக இடம் பெறச் செய்தார். இந்தியச் சமயங்கள், தத்துவங்கள் ஆகியவை மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் முன்னேற்றக் கட்டுரைகளைப் பெண்களே எழுதியுள்ளனர்.

தமிழன் இதழில் நூல் அறிமுகமும் செய்யப்பட்டது. கர்னல் ஆல்காட் தருமப் பாடசாலை, தாமோதரா கலாசாலைத் தலைமையாசிரியர் எம். சி. ராஜா எழுதிய நீதி மார்க்கக் கதைகளும் பாடல்களும் போன்ற மதிப்புரைகள் இதழியல் பணிகளில் மேதைமையைக் காட்டுகின்றன. இவ்விதழுடன் அனுபந்தம் ஆகிய இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.  அயோத்திதாசரின் சிந்தனைக் கீற்றின் பரிமாணங்களும், அவரது சிந்தனைத் தெளிவுகளும், எதிர்காலப் பேரொளியாகும் தத்துவ விளக்கங்களும் அவருடைய இதழ்களில் படைப்புகளாக உருவெடுத்தன. அவருடைய எழுத்தாளுமையைத் தீர்மானிக்கும் உறுதியான கொள்கைகளாகச் சாதி எதிர்ப்பு, அனைவருக்கும் கல்வி, இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, பௌத்த நெறி ஆகியவை அமைந்தன.

feminism.jpeg

வேஷ பிராமண எதிர்ப்பும் அதன் விளைவான இந்து மத எதிர்ப்பும் இவற்றின் வழி அவர் அடையப்போகும் இலட்சியமாகக் கனவு கண்ட தமிழ் பௌத்தமும் அவருடைய கருத்தாளுமையின் அரண்களாக அமைந்திருந்தன. இந்த அடிப்படையில் அவர் இதழ்களில் எழுதிய பல தொடர் கட்டுரைகளும், ஆய்வுகளும் நூல்களாகவும் வெளிவந்தன.  ஏழாண்டுக்  காலம் 'தமிழன்' வார இதழைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், ஆதித் தமிழர்களின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார் அயோத்திதாசர். அவரது மறைவிற்குப் பிறகு அவருடைய புதல்வர் பட்டாபிராமன் 17. 6. 1914 முதல் 26. 8. 1915 வரை தமிழன் இதழை நடத்தினார். பிறகு கோலார் தங்கவயல் பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர் பொறுப்பேற்று 7.7.1926 முதல் 27.6.1934 வரையில் தமிழன் இதழை நடத்தி வந்தார்.

எழுத்துகளும், படைப்புகளும்: 
வேத எதிர்ப்பு, பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு ஆகியவற்றின் வழி தாழ்த்தப்பட்டோரின் மனக்குமுறல்களைத் தன்னுடைய எழுத்துக்களில் வெளிப்படுத்தி வந்தார் அயோத்திதாசர். தலித் இலக்கியம், பகுத்தறிவு இலக்கியம் ஆகியவற்றுக்கான வித்துகள் அவரது படைப்புகளில் பரவலாகக் கிடைக்கின்றன. அவர் இதழ்களில் எழுதிய பல தொடர் கட்டுரைகளும், ஆய்வுகளும் நூல்களாகவும் வெளிவந்தன. "வேஷ பிராமண வேதாந்த விவரம்" தொடங்கிப் பல்வேறு மூடநம்பிக்கைகளின் உண்மை வரலாற்றையும், இலக்கிய ஆராய்ச்சிகளையும் "சாக்கைய முனிவர்" வரை அவர் சுமார் இருபத்தி ஐந்து நூல்களையும், பல நூறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். 

'ஒரு பைசாத் தமிழன்', 'தமிழன்' ஆகிய இதழ்களில் வெளிவந்த 'பூர்வத் தமிழொளி' என்னும் கட்டுரைத் தொடர் அயோத்திதாசர் காலத்திலேயே 1912 இல் அவரது முதல் நூலாக வெளிவந்தது. இந்நூலுக்குப் "பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம்" என்னும் பெயரிடப்பட்டது. இந்த நூலுக்கு எட்டுப் பக்கங்களில் பாயிரம் எழுதியுள்ளார் அயோத்திதாசர். அதில் பௌத்தத் தன்ம ஆய்வில் ஆழ்ந்தகன்ற தமிழிலக்கியப் பரப்பை அயோத்திதாசர் தனது நோக்கத்திற்கு ஏற்பப் பயன்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளார். அயோத்திதாசர் காலத்திலேயே வெளிவந்த மற்றொரு நூல் "புத்த மார்க்க வினா விடை". 1912 இல் இந்நூலின் முதல் பதிப்பு வெளிவந்தது. 'தமிழன்' இதழில் திருக்குறளின் 55 அத்தியாயங்களுக்கு உரை எழுதியுள்ளார் அயோத்திதாசர். முழுவதுமாக எழுதியிருந்தால் அதுவும் அவர் காலத்திலேயே நூலாக்கம் பெற்றிருக்கக்கூடும்.

"சாக்கைய புத்த சங்கத்தார் விளக்கம்" என்னும் நூலையும் அயோத்திதாசர் எழுதியுள்ளார். அயோத்திதாசர் காலஞ்சென்ற பிறகு அவருடைய கட்டுரைகள் பல நூல்களாக வெளிவந்தன. 'தென்னிந்தியர் தேச புத்த தர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவராகிய ஸ்ரீ அம்பிகை அம்மன் அருளிய திரிவாசகம் ஆத்திசுவடி, குன்றை வேந்தன், வெற்றி ஞானம்' (உரைகளுடன்); 'தென்னிந்திய தேச புத்த தர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவராகிய பாரதமாதா ஔவையார் என்னும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு'; 'வஜ்ஜிரசூசி'; 'தென்னிந்திய தேச புத்த தரும சாக்ஷியக்காரர்களில் ஒருவராகிய ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு'; 'யதார்த்த பிராமண, வேஷ பிராமண வேதாந்த விவரம்'; 'அரிச்சந்திரன் பொய்கள்'; 'திருவள்ளுவர் வரலாறு'; 'இந்திரர் தேச சரித்திரம்'; 'விசேஷ சங்கைத் தெளிவு' உட்படப் பல நூல்கள் பின்னாட்களில் வெளிவந்தன. 

அயோத்திதாசரின் சொற்பொழிவுகளும் நூல்களாக வெளி வந்தன. கபாலீசர் சரித்திர ஆராய்ச்சி, விபூதி ஆராய்ச்சி என்னும் அவரது உரை நூல்களில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வேகம் உச்சத்தை எட்டியுள்ளது. அவருடைய பெண்ணியச் சிந்தனைகள் தொகுப்பும், திருக்குறள் 55 அதிகாரங்களின் உரைத் தொகுப்பும், அவருடைய கடிதங்கள் தொகுப்பும், அவருடைய சொற்பொழிவுகள் தொகுப்பும் அண்மையில் நூல்களாக வெளிவந்துள்ளன.

இறுதிக்காலம்:
எழுத்துப் பணிகளிலும், இயக்கப் பணிகளிலும் தீவிரமாகவும், கடும் உழைப்போடும் ஈடுபட்டிருந்த வேளையிலேயே தன் இறுதிக் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அயோத்திதாசர், தம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அழைத்துத் தன் இறுதியைச் சொல்லி விடைபெற்றார். ஆம். 5.5.1914 அன்று அவர் இறப்பெய்தினார். "உங்களுடைய தருமமும், கருமமுமே உங்களைக் காக்கும்" என்பதே அவரது இறுதியான வாக்கு. 

அயோத்திதாசர் மறைந்த பொழுது சுடுகாடு வரை சென்று தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார் திரு வி. கல்யாண சுந்தரனார். அயோத்திதாசரின் பண்பு நலன்களை விளக்கி ஓர் இரங்கற்பாவையும் திரு.வி.க. இயற்றினார். திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் அயோத்திதாசப் பண்டிதரின் மிகத் தேர்ந்த மருத்துவப் புலமை குறித்து மதிப்பீடு உள்ளது. திரு. வி. க. வின் ஒன்பதாவது வயதில் அவர் பத்தியம் தவறவிட்டதால் கை, கால்கள் இயங்கா நோயால் மிகவும் துன்பமுற்றார். இரண்டு ஆண்டுகள் முயன்று அவருக்கு வைத்தியம் செய்து அயோத்திதாசர் குணமாக்கினார். இவ்வரலாற்றைத் திரு.வி.க. இரங்கற்பாவில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அயோத்திதாசரின் நூலறிவு, சொல்லாற்றல், மனிதநேயம் போன்றவையும் அந்த இரங்கற்பாவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. 

அயோத்திதாசரின் சிந்தனைத் தெளிவையும், அவரது முடிந்த முடிபான வரலாற்று உண்மை அடிப்படையில் அமைந்த எதிர்காலப் பேரொளி பற்றியும் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அவருக்கு மாபெரும் எதிர் காலக் கனவொன்று இருந்தது. அது ஒரு புது உலகமாக இருந்தது. அந்த உலகம் சமத்துவ உலகமாக இருந்தது. அங்குச் சாதிய வேறுபாடுகள் இல்லை. ஆதிக்கச் சக்திகள் எதுவும் இல்லை. எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்பு உள்ளதாகக் கட்டமைக்கப்பட்ட உலகம் அது. அதேநேரம், அந்த மாறுபட்ட உலகம் தமிழ் பௌத்த அடையாளம் கொண்டதாக இருந்தது.

நிறைவுரை:
அயோத்திதாசப் பண்டிதரின் படைப்புலகத்தின் அடிப்படை வேத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்பு ஆகியவனாக இருந்தது. வேதம், சாஸ்திரம், ஆரண்யகம், உபநிடதம் இன்னும் இந்தியத் தத்துவங்களாகச் சொல்லப்படுபவை அனைத்தும் பௌத்தத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவையே என்றும், இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் திருடப் பெற்றவையே என்றும் அயோத்திதாசர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். பல்வேறு இலக்கிய, இலக்கண ஆவணங்களில் இருந்து இதற்கான சான்றுகளை மேற்கோள்காட்டி அவர் நிறுவினார். அந்தச் சான்றுகள் மறுக்கப்பட முடியாதவைகளாக பழந்தமிழ் மற்றும் சங்க இலக்கியங்களில் நிறைந்துள்ளன. 

தமிழ் இலக்கியங்களில் பெரும்பான்மையாக உள்ள சமண, பௌத்தக் காப்பியங்கள் பல வரலாற்று உண்மைகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்துள்ளன. அதன் முழுமையான வரலாற்றை விளக்குவதில், உரையாசிரியர்கள் உண்மையாக இருந்திருக்க வில்லை என்னும் அவல நிலை சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்கள் வெளியேற்றப்பட்ட காலகட்டத்தை நம் கண்முன்னே கொண்டு வருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பின்னாட்களில் ஓலைச் சுவடிகளைத் தேடிப் பதிப்பித்தவர்களில் பண்டிதரைத் தவிர அனைவருக்குள்ளும் இருந்த பார்ப்பனியமும், பக்தி இலக்கியக் காலத்துச் செல்வாக்கின் நீட்சியும், தெரிந்த, தெரியவேண்டிய மீதி உண்மைகளையும் மறைக்கும் அளவிற்குக் கொண்டு சென்று விட்டன.

இப்படியாக அழித்தொழிக்கப்பட்ட ஓர் இனத்தின் உண்மையான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து கட்டமைக்கும் முயற்சியைச் செய்தவர் அயோத்திதாசர் ஒருவரே. பக்தி இலக்கியங்களைத் தவிர்த்து தமிழின் அத்தனை இலக்கிய, இலக்கண நூல்களும் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதும், இந்தியச் சிந்தனை மரபுகள் முழுமையும் தமிழ் இலக்கியங்களில் மட்டுமே ஆதிக்கக் கலப்பற்றும், வைதீகக் கலப்பற்றும் (இடைச்செருகல்கள் தவிர்த்து) இருப்பதை அயோத்திதாசர் ஆய்ந்துரைத்தார். அதனடிப்படையில் சமணமும், பௌத்தமும் தமிழர் சமயங்களாகவும், குறிப்பாகப் பௌத்தம் என்பதே தமிழ் பௌத்தம் தான் என்றும் முதன்முதலாக அடையாளப்படுத்திய வரும் அயோத்திதாசரே. 

புத்தரின் திரிபிடகங்களின் தோற்றம் தொடங்கி அவை திரிபேதமாக, திரிவேதமாக உருமாறிய வரலாறு, திரிபிடகம் மற்றும் திரிக்குறள் கருத்துக்களே வேதங்களாக மாற்றுவிக்கப்பட்ட வரலாறு, திராவிடர்களின் தனித் தன்மையும், அவர்களது மொழியும் மாற்றிக் கட்டமைக்கப்பட்ட வரலாறு என்று ஓர் அகழ்வாராய்ச்சியைப் போல் தோண்டித் துருவி வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்துத் தமிழர்களுக்குத் தந்தவர் அயோத்திதாசர்.இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கங்கள் முன்வைத்த ஆரியம், வைதிகம், பார்ப்பனிய எதிர்ப்பு, திராவிட இனத்தின் மேம்படுத்தப்பட்ட வரலாறு, உலக நாகரிகங்களில் திராவிட நாகரிகத்தின் தொன்மை, மேன்மை, தமிழ் மொழியின் தொன்மை மற்றும் இலக்கிய ஆளுமை இவை அனைத்தையுமே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆழமாக ஆய்வு செய்துத் தமிழர்களுக்குக் கொடையாகத் தந்தவர் அயோத்திதாசர்.

மேற்சொன்ன கூறுகளில் திராவிட இயக்கத்தின் நோக்கம் பண்டிதர் அயோத்திதாசரின் ஆய்வுகளோடு ஒத்திசைவாகப் போனாலும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, மத மதிப்பீடுகள் ஆகியவற்றோடு அயோத்திதாசரின் இவை பற்றிய கருத்துக்களோடும், இவற்றிற்காக அவர் முன்வைக்கும் தீர்வுகளோடும் குறிப்பிடும்படியான முரண்கள் இருப்பதை முன்னரே ஒரு சில ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதேநேரம் திராவிட இயக்கம் முன்வைத்த ஆரிய எதிர்ப்பு, முற்றான வடமொழி எதிர்ப்பு ஆகியவை தமிழர்களின் இலக்கியச் செல்வங்களை வளர்த்தெடுத்த பூர்வகுடிச் சமயங்களையும் சேர்த்தே எதிர்ப்பின் வரை முறைக்குள் கொண்டு வந்துவிட்ட மிகவும் நுட்பமான சேதியைத் திராவிட ஆய்வாளர்களோ, தமிழறிஞர்களோ சரிவர உணரவில்லையோ என்ற ஐயம் எழுகிறது.

இந்நிலையில் திராவிட இயக்கம், இருபதாம் நூற்றாண்டில் மக்கள் இயக்கமாகப் பெரிதும் பரவிய போதிலும், தமிழரின் பண்பாட்டு மீட்டுருவாக்கத் தளத்தில் திராவிட இயக்கத்தின் கருத்தியல் பின்னடைவு இந்த நூற்றாண்டில் வெளிப்படையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தத் தவறு அயோத்திதாசர் காலம் தொடங்கி இந்த இரண்டு நூற்றாண்டுகளாக மட்டும் நடைபெற்று வரவில்லை. புத்தரின் மறைவிற்குப் பிறகான 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறிது சிறிதாக நடைபெற்று வந்த இன, மொழி, பண்பாட்டு அழிப்பு வரலாறுகளைத் தான் அயோத்திதாசர் சுட்டிக்காட்டி, அதற்கும் தீர்வாகத் தமிழ் பௌத்தம் என்ற மாற்று வழியை அடையாளம் காட்டிச் சென்றார். 

அது ஒன்றுதான் தீர்வா என்றும், அவர் சொன்னதை அவருக்குப் பின் வந்த திராவிட இயக்கங்கள் ஏற்கவேண்டும் என்றும் விவாதித்துக் கொண்டிருப்பதை விட, அயோத்திதாசர் சுட்டிக்காட்டிய பண்பாட்டு அழிவுகளை, புறச் சமயங்கள் என்று பார்க்காமல் பூர்வகுடி மக்களின், ஆதித் தமிழ் மக்களின், சிந்துவெளி மக்களின் தொடக்கக் காலச் சிந்தனை மரபின் மீட்டெடுப்பு இயக்கமாகத் தமிழர்களால் உணரப்பட்டால், அயோத்திதாசர் முன்வைத்த தீர்வுகளும், திராவிட இயக்கக் கருதுகோள்களும் ஒரு புள்ளியில் சந்தித்து, ஒரே அலைவரிசையில் பயணிக்கும். அந்நிலையில் தமிழின, மொழி, பண்பாட்டின் உண்மையான படிவங்கள் வெளிவரும். அதன் வழியே தமிழினத்தின் அடையாளமும், பெருமைகளும் உலகளவில் பேசப்படுவதும், ஏற்கப் படுவதும் நிகழும்.


பண்டிதர் அயோத்திதாசர் குறித்த கட்டுரைக்கு உதவியவை:
பண்டிதர் அயோத்திதாசர் பற்றிய நூல்கள்- 
1. பண்டிதர் அயோத்திதாசர், கௌதம சன்னா, சாகித்திய அகாடமி வெளியீடு  

2. அயோத்திதாச பண்டிதர் நினைவு நூற்றாண்டு மலர். தொகுப்பு கௌதம சன்னா. விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியீட்டுப் பிரிவு

3. சாகித்திய அகாடமி, தலித் சாகித்திய அகாடமி ஆகியவை பண்டிதர் அயோத்திதாசர் குறித்து வெளியிட்ட நூல்கள்.

ஆய்வாளர்கள் - பெ.சு. மணி, ம.மதிவண்ணன்,  கௌதம் சன்னா, ஸ்டாலின் ராஜாங்கம், பெ. விஜயகுமார் ஆகியோரின் நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும்.

அயோத்திதாசர் குறித்துப் பல்வேறு இதழ்களில் நான் எழுதிய கட்டுரைகள்.

--------------------------------








No comments:

Post a Comment