Wednesday, September 1, 2021

கிரேக்க கடவுள் ஹைஜீயா - துருக்கியில் கண்டுபிடிப்பு

-- முனைவர் க.சுபாஷிணி


பல புதிய கண்டுபிடிப்புக்களை வெளிக்கொணரும் அகழாய்வுக் களமாக துருக்கியின் பல பகுதிகள் திகழ்கின்றன. அண்மையில் (20.8.2021) துருக்கி நாட்டின் மேற்குப் பகுதி நகரமான அய்சானோய் (Aizanoi) நகரில் ஒரு பெண்தெய்வச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்படும் தாய்த்தெய்வம் ஹைஜீயா (Goddess Hygieia) சிலை இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தெய்வம் மக்களுக்குப் பாதுகாப்பையும், உடல் நலனையும், தூய்மையையும் வழங்கக்கூடிய தெய்வமாகக் கருதப்படுகிறது. இத்தெய்வம் கிரேக்க மற்றும் ரோமன் புராணங்களில் வழங்கப்படும் கடவுளான அசேலிபியூஸ் (Asclepius) என்ற தெய்வத்தின் மகளாகவும் கருதப்படுகின்றார். ஹைஜீயா என்ற இந்த கிரேக்கச் சொல் இன்று வழக்கில் லத்தின் மொழியில் உள்ள Hygēa or Hygīa என்றும், ஆங்கிலத்தில் இன்று நம் வழக்கில் உள்ள "hygiene" என்ற சொல் உருவாக அடிப்படையான சொல்லாகவும் அமைகிறது. அய்சானோய் நகரில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் கள ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் கோகான் குச்கூன் (Gökhan Coşkun) அச்சிலை பளிங்கினால் செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரு மனிதரின் உடல் அளவு உயரத்தில் அச்சிலை இருப்பதையும், அது கண்டெடுக்கப்பட்ட போது அச்சிலையின் தலைப் பகுதி இல்லாத நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டதையும் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். அப்பகுதியில் முன்னர் நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் பல சான்றுகள் கிடைத்தமையைக் குறிப்பிட்டு அதற்குத் தொடர்புடைய வகையில் சில அரும்பொருட்கள் அப்பகுதியில் கிடைப்பதையும் ஒப்பிட்டுக் காணும் போது அப்பகுதியில் ஒரு கோயில் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றார். அப்பகுதி கிரேக்க கடவுளான சீயஸ் (Zeus) கடவுளுக்குப் பிரம்மாண்டமான கோயில் கண்டெடுக்கப்பட்ட அந்தோலியா நகருக்கு அருகில் இருப்பதால் இந்த வளாகம் முக்கியத்துவம் பெறும் ஒரு பண்டைய நகரமாக இருக்க வாய்ப்புள்ளதையும் குறிப்பிடுகின்றார். இந்த அய்சானோய் நகரம் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய நகரமாக 2012ம் ஆண்டில் பட்டியலில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையான ஒரு நகரமாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த அகழாய்வுகள் நடைபெறுவதற்கு முன் சீயஸ் கடவுளின் கோவில் கண்டெடுக்கப்பட்ட பகுதி பொ.ஆ.மு 3000 என கால வரையறை செய்யப்பட்டது. பொ.ஆ.மு 133ல் இந்த நகரத்தை ரோமானியப் பேரரசு கைப்பற்றி தன் ஆளுமைக்குள் உட்படுத்தியது. 2011ம் ஆண்டு முதல் துருக்கிய தொல்லியல் ஆய்வாளர்கள் இப்பகுதிகளில் தொடர்ச்சியான பல ஆய்வுகளைச் செய்து வருகின்றனர் என்பதோடு இவ்வாய்வுகள் அரிய பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பு: https://www.hurriyetdailynews.com/statue-of-greek-health-goddess-hygieia-unearthed-167210




No comments:

Post a Comment