Sunday, September 5, 2021

ஒரு வகுப்பு நடக்கிறது

 -- ருத்ரா இ பரமசிவன்

(ஆசிரியர் தினக்கவிதை)


அந்த வகுப்புக்குள்
ஒன்றன் பின் ஒன்றாக‌
ஐந்து சிட்டுக்குருவிகள்
பறந்து வந்தன.
கிரீச் கிரீச் ஒலிகள்
வகுப்பு முழுதும்
எதிரொலித்தன.
குருவிகள் சிறகடிக்கும் போது
மாணவர்களின்
புத்தகங்களின் பக்கங்களும்
சிறகுகள் போல் படபடத்தன.
எல்லோருடைய கண்களின்
கருவிழிகளில் கூட
குருவிகளின் சிறிய பிம்பங்கள்
சிதறி ஓடின!
ஒரு குருவி அறை முழுதும்
வட்டம் அடித்துக்கொண்டே
இருந்தது.
இரண்டு குருவிகள்
ஒன்றின் சிறகை மற்றொன்று
கவ்விக்கொண்டே
பறந்து பறந்து
கிரீச் கிரீச் என்றன.
அது என்ன?
அது என்ன மொழி?
அது கலித்தொகையா?
குறுந்தொகையா?
ஒரு குருவி ஒற்றையாய்
அறையின்
உத்திரத்து விளிம்பில் இருந்து
ஒலித்துக் கொண்டே இருந்தது.
வால் பகுதி
எதுகை மோனைகள் போல‌
அசைந்து கொண்டே இருந்தது.
ஒரு குருவி எச்சமிட்டது
சரியாக‌
ஆசிரியரின் தலையில்.
கொல் என்ற சிரிப்பலை
வகுப்பு முழுவதும்.
அவரும் சிரித்துக்கொண்டே
துடைத்து விட்டுக்கொண்டார்.
வகுப்பு முடிந்ததாய்
மணி ஒலி கேட்டது.
எல்லா குருவிகளும் வெளியேறின.
ஆசிரியர் சொன்னார்.
நான் எடுக்க நினைத்த வகுப்பை
இந்த குருவிகளே எடுத்துவிட்டன.
என்றார்.
எதைப்பற்றி அந்த வகுப்பு?
அது இது தான்.
"சுதந்திரம்"


-----


No comments:

Post a Comment