Wednesday, October 6, 2021

வ.உ.சி.யின் திரிசூலம்



 -- ஆ.சிவசுப்பிரமணியன்


voc5.JPG

இந்திய விடுதலை இயக்கத்தின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவரான வ.உ.சிதரம்பரனார் (1872-1936) தனித்துவமான போராட்டங்களை மேற்கொண்டவர். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, வேறு யாரும் சிந்திக்காதது. அது ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ (சுதேசி நாவாய்ச் சங்கம்) என்கிற கப்பல் நிறுவனம். இந்திய கம்பெனி சட்டப்படி 16.10.1906-ல் இந்நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. இதன் தொடக்க மூலதனம் ரூ.10 லட்சம். ரூ.25 முக மதிப்புள்ள பங்குகளின் விற்பனை மூலம் இது பெறப்பட்டது. 10,000 பங்குகளை விற்பது என்கிற வரம்பையும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தே பங்குத்தொகையைப் பெறுவது என்ற முடிவையும் இந்நிறுவனம் எடுத்திருந்தது. இதன் அலுவலகம் தூத்துக்குடியில் செயல்பட்டது.

voc2.JPG


இந்நிறுவனத்தை நடத்துவதற்கு இயக்குநர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. நிறுவனத் தலைவராக பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் நியமிக்கப்பட்டார். நான்காம் தமிழ்ச் சங்கம் என்றழைக்கப்படும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவியவர் இவர். வ.உ.சி. உதவிச் செயலாளராக இருந்தார், இக்கப்பல் நிறுவனம் ஆதாயம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிக நிறுவனமாக அமைக்கப்படவில்லை. இந்நிறுவனத்தின் நோக்கங்கள் குறித்த விவர அறிக்கை இவ்வுண்மையை அறியத் தருகிறது:

 - இந்தியர்களையும் இலங்கையர்களையும், ஆசியா கண்டத்து ஜாதியார்களையும் கப்பல் நடாத்துந் தொழிலில் பழக்குவித்து அதன் மூலம் வரும் லாபத்தை அடையும்படிச் செய்தல்.
 - கப்பல் நடாத்துந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையுஞ் செய்து காட்டிக் கற்பித்தல்.
 - மாணவர்க்கு கப்பலோட்டுந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையும் சாஸ்திர சம்பந்தமாகக் கற்பிக்கும் கலாசாலைகளை ஏற்படுத்தல்.
 - ஸ்டீமர்கள், ஸ்டீம்லாஞ்சுகள், படகுகள் முதலியன நிர்மாணஞ் செய்வதற்கும் அவைகளைச் செப்பனிடுவதற்கும் துறைகளேற்படுத்தல்.
 - கம்பெனியார் தீர்மானிக்கும் சுதேசியக் கைத்தொழில்களையும் வியாபாரங்களையும் நடத்துதல்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் இக்குறிக்கோள்கள் வ.உ.சி.யின் தொலைநோக்கான பார்வையை வெளிப்படுத்துபவை. முதற்படியாக மும்பை சென்று இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கினார். ‘எஸ்.எஸ்.காலியோ’, ‘எஸ்.எஸ்.லாவோ’ என்கிற பெயரிலான இரண்டு கப்பல்களும் தூத்துக்குடிக்கு 1907 மே மாதம் வந்துசேர்ந்தன. ஒவ்வொன்றிலும் 42 முதல் வகுப்புப் பயணிகள், 24 இரண்டாம் வகுப்புப் பயணிகள், 4,000 மூட்டை சரக்கு செல்ல முடியும்.
voc1.JPG

இவ்விரு கப்பல்களின் வருகையால் மகிழ்ச்சியடைந்த பாரதியார், தாம் நடத்திவந்த ‘இந்தியா’ இதழின் (26 மே1927) முகப்பில் கருத்துப் படம் வெளியிட்டதுடன், “வெகு காலமாய்ப் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்துவந்த பெண்ணொருத்தி ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால், எத்தனை அளவற்ற ஆனந்தத்தை அடைவாளோ, அத்தனை ஆனந்தத்தை நமது பொதுமாதாவாகிய பாரததேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது திண்ணமே” என்று குறிப்பும் எழுதினார். அக்குறிப்பில் வ.உ.சி.க்கும் அவருக்கு உதவியவர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடியில் ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஆங்கிலேயக் கப்பல் நிறுவனமான ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்கிற ஆங்கிலேயக் கப்பல் நிறுவனம், சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வருகையால் ஆதாய இழப்புக்கு ஆளானது. இவ்விழப்பானது, 1907-ம் ஆண்டின் இறுதியிலும் 1908-ன் தொடக்கத்திலும் மாதம் ஒன்றுக்கு முப்பதினாயிரம் முதல் நாற்பதினாயிரம் வரை இருந்ததாக வரலாற்றறிஞர் இராசேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மக்களிடையே நிலவிய சுதேசி இயக்க உணர்வே இதற்குக் காரணம்.
voc3.JPG

1908 மார்ச் மாதம் கைதாகி விசாரணைக் கைதியாக இருந்த வ.உ.சி. அதே ஆண்டு ஜூலையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தண்டனைக் கைதியாகி கோவைச் சிறைக்குச் சென்றார். இதன் பின் ஆஷ் என்கிற ஆங்கிலேய அதிகாரி கொடுத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள இயலாது, சுதேசிக் கப்பல் கம்பெனி ஆங்கிலேயர்களிடமே விற்கப்பட்டது.

தொழிலாளர் இயக்கம்:
1907-ல் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய வ.உ.சி., அடுத்த ஆண்டில் தூத்துக்குடியில் இயங்கிவந்த ஆங்கிலேயர் நடத்திய ‘கோரல் மில்’ என்கிற நூற்பாலையில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, சுப்பிரமணிய சிவாவின் துணையுடன் வேலைநிறுத்தத்தை 1908 பிப்ரவரி 27-ல் தொடங்கினார். (1) ஊதிய உயர்வு, (2) வார விடுமுறை, (3) இதர விடுமுறை வசதிகள் என்பனவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக நடந்த வேலைநிறுத்தம் 07.03.1908 நண்பகலில் முடிவுற்றது.

50% ஊதிய உயர்வு, பணி நேரத்தில் உணவருந்த அனுமதி, ஊதியமில்லா விடுமுறை என்பனவற்றை ஆலைத் தொழிலாளர்கள் பெற்றனர். இன்று எளிதானதாகத் தோன்றும் இவ்வுரிமைகளைப் பெறுவதற்குக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்தப் போராட்டம் நிகழ்ந்துள்ளது.

இப்போராட்ட நிகழ்வு, இந்திய அளவில் பேசுபொருளானது. வேலைநிறுத்தக் காலத்தில் உணவின்றித் தவித்த ஆலைத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை வ.உ.சி. மேற்கொண்டிருந்தார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழும் ‘சுதேசமித்திரன்’ தமிழ் நாளிதழும் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. வங்கத்தின் அரவிந்தர் தமது ‘வந்தேமாதரம்’ இதழில் வேலைநிறுத்த நிகழ்வு குறித்து விரிவான முறையில் செய்தி வெளியிட்டுவந்தார். வேலைநிறுத்தம் வெற்றிபெற்றவுடன் ‘தூத்துக்குடி வெற்றி’ (The Tuticorin Victory) என்கிற தலைப்பில் நீண்ட தலையங்கமே எழுதியுள்ளார்.

ரஷ்யாவை ஜார் மன்னன் ஆட்சிபுரிந்துவந்தபோதுதான் இவ்வேலைநிறுத்தம் நடந்துள்ளது. இக்காலத்தில் ஜார் மன்னருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. எனவே, இந்தியாவில் நடக்கும் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதில் ஜார் மன்னருக்கு ஆர்வம் இருந்தது. இதன் அடிப்படையில் மும்பையில் ரஷ்யாவின் தூதுவராகப் பணியாற்றிவந்த செக்கின் என்பவர், தூத்துக்குடியில் நிகழ்ந்த வேலைநிறுத்தம் குறித்து ஜாருக்கு அறிக்கைகள் அனுப்பிவந்துள்ளார். அதில் ஓர் அறிக்கையில் தூத்துக்குடியில் நிகழ்ந்த வேலைநிறுத்தம் குறித்து, “இது திறம்பட நடத்தப்படும் வேலைநிறுத்தம். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு உணவு படைக்க வேலைநிறுத்தத்தை நடத்தும் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்போராட்டத்தின்போது தூத்துக்குடி நகரின் பொதுமக்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். தொழிலாளர் போராட்டம் ஒன்றை அரசியல் போராட்டமாக மாற்றுவதில் சிவாவும் வ.உ.சி.யும் வெற்றிபெற்றுவிட்டனர். இவ்வகையில் இந்தியாவில் நிகழ்ந்த தொழிலாளர்களின் முதல் அரசியல் வேலைநிறுத்தமாக இவ்வேலைநிறுத்தம் அமைந்தது.

பண்பாட்டுப் பார்வை:
வ.உ.சி. தன் அரசியல் குருவாகத் திலகரை ஏற்றுக்கொண்டவர். 1907-ல் நடந்த ‘சூரத் காங்கிரஸ் மாநா’ட்டில் திலகரைத் தலைவராகத் தேர்வுசெய்ய பாரதியாருடன் இணைந்து செயல்பட்டதைப் பற்றி வ.உ.சி. எழுதியுள்ளார். சிறையிலிருந்து 1912-ல் விடுதலையாகி வந்த பின்னர், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் நாளேடு ஒன்றில் ‘திலக மகரிஷி’ என்கிற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொடராகவும் எழுதிவந்தார். ஜெர்மனியில் இயங்கிவந்த இந்தியப் புரட்சிக் குழு ஒன்றிடமிருந்து வந்த ரகசியச் செய்தி ஒன்று குறித்து விவாதிக்க வ.உ.சி.யை திலகர் அழைத்துள்ளார். வ.உ.சி.யும் அந்த அழைப்பை ஏற்று திலகரைச் சந்தித்துள்ளார். இந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்துள்ளது. வ.உ.சி. சென்னையில் வாழ்ந்தபோது திலகரை சென்னைக்கு வரவழைத்து, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றோரில் வ.உ.சி.யும் உண்டு. இந்த அளவுக்கு திலகரின் மீது அன்பும் நெருக்கமும் கொண்டிருந்தாலும், பண்பாடு குறித்த திலகரின் அணுகுமுறையிலிருந்து வ.உ.சி. இறுதிவரை மாறுபட்டே இருந்தார்.

இதுபோல் அழுத்தமான சைவராக இருந்து ‘சிவஞானபோதம்’ நூலுக்கு உரை எழுதியபோது, பல மதக் கோட்பாடுகளையும் அவற்றின் மீதான கண்டனங்களையும் எழுதுவதை வ.உ.சி. தவிர்த்தார். அத்துடன் நாஸ்தீகரது இயற்கையைத்தான் ஆஸ்தீகர்கள் கடவுள் என்று கூறுகின்றனரென்றும் ஆஸ்தீகரது கடவுளைத்தான் நாஸ்தீகர்கள் இயற்கையென்று கூறுகிறார்களென்றும் விளக்கமளித்தார்.

‘‘1,330 குறளையும் பொருளுடன் உணர்ந்திராத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்ற தந்தையேயாயினும் யான் பெற்ற மக்களே யாயினும் யான் இவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை நேசிப்பதுமில்லை’’ என்ற இவரது கூற்று, தமிழரின் பண்பாட்டு அடையாளமாகத் திருக்குறளைக் கருதியதை உணர்த்துகிறது. 1927-வது ஆண்டில் சேலத்தில் நடந்த காங்கிரஸ் மகா சபை மூன்றாவது அரசியல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை ஆதரித்து அவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

திரிசூலம்:
மூன்று கூர்முனைகளைக் கொண்ட ஓர் படைக்கருவியே திரிசூலம். இப்படைக்கருவியைக் கொண்டிருப்பதாக நம்புவதன் அடிப்படையில் எமனுக்கு திரிசூலன் என்ற பெயருண்டு. ஒரு நாட்டு மக்கள் தம் முன்னேற்றத்துக்காக அரசியல் போராட்டம், பொருளாதாரப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் என மூன்று வகையான போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இவற்றுள் எவற்றையும் ஒதுக்கிவிட முடியாது. அதேநேரத்தில், பொருளாதாரப் போராட்டத்திலும் பண்பாட்டுப் போராட்டத்திலும் அரசியல் மறைந்துள்ளது. இம்மூன்று போராட்டங்களின் தேவையை வ.உ.சி. நன்கு உணர்ந்திருந்தார். அவரது தொடக்க கால சுதேசி இயக்க அரசியலை உள்வாங்கியே ஏனைய இரண்டு போராட்டங்களையும் அவர் நடத்தினார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்றும் தனித்தனியாக இருப்பதுபோல் தோன்றினாலும் அவற்றுக்கிடையே உள்ள உறவு திரிசூலம் போன்றது. இதுவே வ.உ.சி. வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி.


- ஆ.சிவசுப்பிரமணியன், 
மூத்த ஆய்வாளர் மற்றும் மார்க்சிய அறிஞர்
நன்றி - இந்து தமிழ் திசை 


---------







No comments:

Post a Comment