Tuesday, October 26, 2021

மொழிபெயர்ப்பாளர் பண்பாடுகளிடையே பாலம் கட்டுபவர்



— முனைவர் ஆனந்த் அமலதாஸ்


நூல் ஒன்றை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எடுத்துச்செல்வது உலகெங்கும் ஒரு பெரிய பணியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் கூடி வாழும்பொழுது மொழிபெயர்ப்பு அன்றாட வாழ்வின் எதார்த்த நிலையாகிறது. எடுத்துக்காட்டாக, டில்லியில் வாழும் தமிழர் வீட்டில் தமிழ் பேசுவார், தெருவில் இந்தி பேசுவார், அலுவலகத்தில் ஆங்கிலம் பேசுவார். அதேபோல சென்னையில் வாழும் வங்காளர் வீட்டில் பங்களா, தெருவில் தமிழ், அலுவலகத்தில் ஆங்கிலமாக இருக்கும். இங்கே ஏதோ ஒரு வகையில் மொழிபெயர்ப்பு நடந்துகொண்டே இருக்கிறது.

மேலும் நமது நாட்டில் பிற மொழியில் உள்ள நூட்களை ஆங்கில மொழிபெயர்ப்பால் அறிமுகமாக்கிக் கொண்டிருக்கின்றோம். இருபதாம் நூற்றாண்டில் நடந்த பல்வேறு சீர்திருத்தங்களும் நமது நாட்டின் நூட்களை அயல் நாட்டார் ஆங்கிலத்தில் அமைத்துக் கொடுத்ததால் அதன் துணைநாடி நமது தலைவர்கள் நமது பண்பாட்டைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் உருவாக்கிய “இன்டாலஜி” என்ற துறை முக்கியத்துவம் பெற்றது.

இன்றைய அளவில் புலம்பெயர்ந்த அல்லது அயல் நாட்டோடு தொடர்பு கொண்டுள்ள தமிழர்கள் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஒரு சில எடுத்துக்காட்டுகள் அதற்குச் சான்று. ஜெர்மன் கவிதைத் தொகுப்பைத் தமிழில் மொழியாக்கம் செய்து வத்சலா விஜயகுமார் வெளியிட்டார். (2007). “மகாத்மா காந்தியின் ஐந்து நொடிகள்” என்று வால்டர் எரிக் சேபர் (1948) எழுதிய ஜெர்மன் வானொலி நாடகத்தை “கூத்துப்பட்டறை” நாடகக்குழு தமிழில் அரங்கேற்றியது. நானே பல தமிழ் நூட்களை – அபிராமி அந்தாதி, கந்தர் அநுபூதி, நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து 100 பாடல்கள், சித்தர் பாடல்கள் போன்றவற்றை - ஜெர்மனில் மொழி பெயர்த்துள்ளேன்[1].

மொழிபெயர்ப்புக்கு எதிர்ப்பு:
மூல நூலின் சிறப்பை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியாது; அதனால் மொழிபெயர்ப்பெல்லாம் இரண்டாம் தரம் என்ற பழைய கருத்து மாறிக் கொண்டிருக்கிறது. “மொழிபெயர்ப்பு சமுக்காளத்தின் மறுபக்கம்”, “மொழிபெயர்ப்பவன் காட்டிக்கொடுக்கும் துரோகி” (இத்தாலிய பழமொழி - Traduttore, traditore).  “கவிதையை மொழி பெயர்க்க முடியாது. அதனால் கவிஞர்கள்தான் மொழியின் பாதுகாவலர்கள்” (டாக்டர் ஜான்சன்). “கவிதையை மொழிபெயர்ப்பில் வாசிப்பது ஒரு பெண்ணைத் திரைவழியாய் முத்தமிடுவதற்குச் சமம்” (Chaim Bialik).

மொழிபெயர்ப்பு கோட்பாளர்கள் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் மொழிபெயர்ப்பு புதிதாக ஆக்கும் ஆற்றல் கொண்டது, புதிய விளக்கம் கொடுக்கும் திறனுடையது. அது மாற்றுக்கருவுயிர்ப்புக்கு இடம் அளிக்கிறது. மொழிகளும் இலக்கியமும் தொடர்ந்து ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் போது மனுக்குலத்தின் வரலாற்று வளர்ச்சியைத் தெளிவுபடுத்துகிறது[2]. 

மொழிபெயர்ப்பாளர் பண்பாடுகளிடையே பாலம் கட்டுபவர்:
மொழிபெயர்ப்புப் பணி வரலாற்றில் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. ஐரோப்பாவில் ரிச்சர்ட் பர்ட்டனை (Sir Richard Francis Burton 1821-1890) அதிகம் கொண்டாடுகின்றனர்[3].    23 மொழிகள் கற்றவராகவும், இந்தியா, அரபு நாடுகள் போன்ற இடங்களுக்குச் சென்று முப்பதுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பைக் கொடுத்தவர். அவரது காம சூத்திர நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின என்பர்.

இவர் ஐரோப்பாவின் மனநிலைக்கு எடுத்துக்காட்டாக முன் வைக்கின்றனர். ஐரோப்பாவின் அறிவுதேடும் முயற்சிக்கு முன்னோடி. ஐரோப்பிய சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர். எராஸ்மஸ் சொல்வது போல, “அவர் கட்டிய நூலகத்திற்கு உலகத்தைத் தவிர வேறு எந்த எல்லையும் இல்லை” (“a library which has no other limits than the world itself.”). கான்ஸ்டன்டைன் (Constantine the African (c.1020-1087) பல நாடுகளுக்குச் சென்று 40 ஆண்டுகளாக சேகரித்த இலத்தீன் நூட்களை எல்லாம் “மோந்தே கசினோவில்” (உரோமை நகருக்கு அருகில்) வைத்ததாகச் சொல்வார்கள்[4].

ஐரோப்பாவில் எல்லோருக்கும் இலத்தீன் வாசிக்கத் தெரியாது. அதனால் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி மொழிபெயர்ப்பால் நிகழ்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் தெரிந்த சாதாரண மனிதன் அரபு, சமஸ்கிருத, பாரசீக மொழிகளில் இருந்த நூட்களை வாசித்து அறிந்து கொள்ள முடிந்தது[5]. 

மொழிபெயர்ப்பாளர் பல பண்பாட்டின் பங்காளிகள்:
மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் மற்ற பண்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாது, மற்ற பண்பாட்டோடு இணைந்து வாழ முடியாது. தற்சமயம் பன்முகப் பண்பாட்டுப்பார்வை என்ற குரல் ஒலிக்கிறது. சிலர் தமது மொழிபெயர்ப்பால் பல பண்பாட்டை இணைத்துப் பாலம் கட்டியதால் இது சாத்தியமாகிறது. சாதாரண மக்கள் பிற பண்பாட்டில் தோன்றிய நூட்களைத் தங்கள் சொந்த மொழியிலேயே வாசிக்க முடிகிறது. அதனால் அவர்கள் கண்ணோட்டம் விரிவடைகிறது. பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கெடுக்க, உலகளாவிய பொதுநலத் திட்டத்தைப்பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கிறது.

இரண்டாவதாக, மொழி பெயர்ப்பாளர் நூட்களின் மற்றொரு உலகில் நுழையும் பொழுது அவர்களுக்குள்ளும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. எங்கெல்லாம் ஒருவர் மற்றொருவரைத் திறந்த மனத்தோடு சந்திக்கின்றனரோ அதை ஒரு மாற்றம் நிகழும் நேரம் என்று சொல்லலாம். இந்த உண்மை மனிதர்களைச் சந்திக்கும்பொழுது மட்டும் அல்ல, நூட்கள் போன்ற மற்ற பொருட்களுக்கும் பொருந்தும். ஒரு நூலைச்சந்திக்கும் வழியாக நாம் நம்மையே புதிதாகக் கண்டு கொள்கிறோம். நாம் சந்திக்கும் தோழர் நமது உண்மையான நிலையை ஒரு கண்ணாடிபோல காட்டுவது போல, ஒரு நூலும் நாம் யாரென்றும், நம்மையே விமர்சனத்திற்குட்படும் தன்னறிவையும் காட்டும். 

நாம் திறந்த மனத்துடன் அணுகும்பொழுது, நாம் வாசிக்கும் நூலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் நமது கண்ணோட்டம் மாறும். நூட்கள் ஒரு புது தொலை நோக்குப் பார்வையை, புதிய சிந்தனைகளை, சிலசமயம் வியப்பிற்குரியதாகவும், சில சமயம் நமது மரபையும் கூட கேள்வி கேட்கும் அளவிற்குத் தூண்டி விடலாம். நாம் ஒரு நூலிலிருந்து கண்டுணர்ந்த சிந்தனை மற்றொரு சூழ்நிலைக்கு அழைத்துச்செல்லும். சொற்களும், நூட்களும், புதிதான உள்ளர்த்தம் பெறும். இவ்வாறு நூட்களே ஆசிரியர்களாக மாறும். இந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட நபரில் மட்டும் நிகழ்வதல்ல, நமது சூழ்நிலையிலும், உள்ளதனைத்திலும் நிகழும். ஒரு நூலை வாசித்த பிறகு நமது உலகமே வேறுபட்டுத் தெரியும். ஏனெனில், நமது முந்திய புரிதலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழிமுறையில் ஏற்படும் சில இடர்ப்பாடுகள்:
சமமதிப்புப் பொருள்கொண்ட சொற்களைத்தேடல்?
இது பண்பாட்டை இணைக்கும் முயற்சியில் நாம் கையாளும் முறையைப் பொருத்திருக்கிறது. ஒரு கருத்தை ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப் பின்னணியில் வைத்து வரையறை செய்துவிட்டு, அதற்குச் சமமான கருத்தை மற்றொரு பண்பாட்டில் தேடினால் அங்கே அது கிடைக்காது. இந்த முயற்சி வெற்றி பெறாது. அப்படியே தொடர்ந்து செய்தால் ஒரு பண்பாட்டின் உயர்ந்த நிலையைத் தூக்கிப்பிடித்து மற்றொரு பண்பாட்டோடு போட்டிக்கு இட்டுச்செல்லும்.

இந்தத் தவற்றை தவிர்ப்பதற்கு ரெய்மோன் பணிக்கர் (1918-2010) பரிந்துரைத்த முறை பயனாக இருக்கும். அவர் கூறுவது போல நாம் என்ன தேட வேண்டும் என்பது: homeomorphic equivalents- functional similarity.   அதாவது, சம பொருள்தரும் சொற்களைத் தேடாமல், சம பணிசெய்யும் சொற்களைத் தேடலாம். எடுத்தக்காட்டாக, ஐரோப்பாவில்; - ‘பிலாசபி’ – என்ற சொல் என்ன பணியைச் செய்கிறதோ அதே பணியை இந்திய மரபில் பல்வேறு சொற்கள் சேர்ந்து செய்கின்றன: தர்சனா, பிரஞ்ஞா, ஞானம், ஆன்வீக்சிகி – இவை சமஸ்கிருதத்தில் உள்ளவை; தமிழில் - மறைஞானம், மெய்ஞானம், காட்சியியல் (தொல்காப்பியம்), மெய்யியல் போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம்[6].    

மற்றுமொரு எடுத்துக்காட்டு: நம்பிக்கை வாதிகளின் சமூகத்தை “எக்ளேசியா” (ecclesia) என்பது மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தும் சொல். இது மற்ற பண்பாட்டில் அறியப்படாத ஒன்றல்ல. பௌத்தத்தில் சங்கா (sangha) என்பதும், இஸ்லாமியர் “உம்மா” (Umma) என்பதும்  “எக்ளேசியா” வின் “ஹோமியோமோர்பிக் ஈக்குவலன்ட்”. ஆனாலும் கூட “எக்ளேசியா”வும் “உம்மா”வும் “சங்கா”வும் சமம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொன்றுக்கும் உரிய தனித்துவத்தை இங்கு மறுக்க வில்லை. அந்த அந்தச் சமூகத்தில் இச்சொற்கள் சம பணியைச் செய்கின்றன.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் உருவான தனித்துவம் பெற்ற ஒரு கருத்தியலை எப்படி மற்றொரு பண்பாட்டிற்கு எடுத்துச்செல்வது? சில சமயங்களில் ஒரு சொல்லைப் பல சொற்களால் பதிவு செய்யவேண்டியிருக்கும். அப்பொழுதுதான் அதன் தனித்துவம் தெளிவாகும். அப்படி ஒரு சொல்லுக்குப் பல சொற்கள் விளக்கம் தருமானால், அது மொழிபெயர்ப்பல்ல, பொழிப்புரையாக மாறும். ஜெர்மானிய சிந்தனையாளர் மத்தியில் (Lüder, Paul Thieme, Jan Gonda)  ஒரு விவாதம் எழுந்தது:‘ரித’ (rta)  என்ற சமஸ்கிருத சொல்லை உண்மை (Wahrheit)  என்று மொழி பெயர்த்தார்கள். ஆனால், அதன்வழி அச்சொல்லின் முழு பொருளும் தெளிவடையவில்லை. ரித என்பது “உண்மை” மட்டுமல்ல. அதனால் பவுல் ஹாக்கர் சொல்வது கொஞ்சம் தெளிவு கொடுத்தது. பல்வேறு கருத்தியல்களை மொழி பெயர்க்கும்பொழுது அவைகளின் ஒன்றிணைப்பை அல்ல, அவற்றின் உட்பொருளை (Wortinhalt)  வெளிக்கொணர வேண்டும் என்பது[7].    

இந்தியாவில் நூற்றுக்கணக்கான வகையில் இராமாயணத்தைப் பதிவு செய்துள்ளார்கள். வால்மீகியின் மூல நூலிலிருந்து அப்படியே மொழி பெயர்க்கவில்லை. இத்தகைய மொழிபெயர்ப்பில் மூல கதை சூழ்நிலைக்கேற்ப, பல்வேறு மரபுகளுக்கு ஏற்ப, புதிய உருப்பெற்று தொடர்ந்து வந்திருக்கின்றது. ஏ. கே. இராமானுஜன் சொல்வது போல, “மூல நூல் என்று ஒன்று இல்லை. இக்கதையை ஒரு நூலில் அடக்கிவைத்திருந்தாலும் கூட,  இக்கதைக்கு வேலி ஏதும் இல்லை. இராமாயணத்தையோ, மகாபாரதத்தையோ யாரும் முதல் தடவையாக வாசிப்பதில்லை. கதைகள் எப்போதும் ஏற்கனவே இங்கே இருந்துகொண்டே இருக்கின்றன” [8].    

ஒரு நூலைத் தவறாகப்புரிதல்:
மொழி பெயர்ப்பாளர்களுக்கு எதிராக இன்னுமொரு குற்றச்சாட்டு இருக்கிறது. தவறாகப் புரிந்து கொள்வது ஒரே மொழி பேசும் அறிஞர்கள் மத்தியிலும் உண்டு. பிற மொழியினர் செய்யும் மொழிபெயர்ப்பில் மட்டும் உண்டு எனச்சொல்ல முடியாது. இந்தக் கேள்விக்கு கடமர் (Gadamer) கொடுக்கும் விளக்கம் கவனத்திற்குரியது. ஒவ்வொரு புரிதலிலும் “முன்கூட்டிய மன நிலை” (prejudice – pre-judgment) என்று ஒன்று உண்டு. நாம் வாசிக்கையில் முன்கூட்டிய மன நிலையோடுதான் தொடங்குகிறோம். அது தன்வளர்ச்சியில் தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருக்கும். யாரும் வெற்றிடமான அல்லது வெட்டவெளியான மனத்தோடு தொடங்குவதில்லை. ஏதாவது ஒரு முந்திய பின்னணியில்; பதிவான மனநிலையோடுதான் தொடங்குகின்றோம்.

ஓரியன்டலிசம் (Orientalism) என்ற கண்ணோக்கு:
பண்பாட்டுப் பரிமாறல் முயற்சியில் பொதுவாகவே ஓர் எதிர்மறையான பார்வை உண்டு. இது எட்வர்ட் சயத் எழுதிய நூலிலிருந்து இது வலுவடைந்தது. மேற்கத்திய சிந்தனையாளர் பார்வை இஸ்லாமிய உலகைக் கட்டுப்படுத்தும் அரசியல் நோக்கம் கொண்டது என்பது[9].    இத்தகைய பார்வை காலனிய ஆதிக்கத்தோடு எங்கும் பரவலாகப் பார்க்கப்பட்டது. முக்கியமான எடுத்துக்காட்டு ஐரோப்பியர் அமெரிக்காவை சூறையாடியதிலிருந்து தொடங்குகிறது.

1492 ஆம் ஆண்டில் கொலம்பஸின்; கடல் பயணத்தோடு இது தொடங்குகிறது. இதைச் சுருக்கமாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு என்ற நூல் சித்தரிக்கிறது[10].  “ஒரு புதிய மும்மூர்த்திகள் பழங்கால போர்வீரன்-வெற்றியாளர் என்ற சொல்லாடலை மாற்றி அமைக்கின்றனர்: அறிஞர்-மதகுரு-வியாபாரி என்ற மும்மூர்த்திகள். முதலில் அறிஞர் வந்து நாட்டின் விவரங்களைச் சேகரிப்பார்; பிறகு சமயகுரு வந்து ஆன்மீக அளவில் ஒன்றிணைப்பார்; பிறகு, வியாபாரி செல்வம் சேகரிக்க தொடங்குவார்” [11].

ஏன் மற்றவர்களைப் பற்றிப் படிக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கேள்விக்குப் பலவிதமாக பதில் சொல்லலாம். சில காலங்களில் மற்றவர்களைத் தோற்கடிப்பதற்காக, அவர்கள் கோட்பாட்டை மறுப்பதற்காக, மனம் மாற்றுவதற்காக ஆராய்ச்சியில் ஈடுபடலாம். ஆனால் எல்லா முயற்சிகளையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டியதில்லை. மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ள, மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள, மற்றவர்களோடு இணைத்துப் பாலம் கட்ட முயன்ற ஆய்வாளர்கள் அநேகர் உண்டு. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த–வாழ்கின்ற திறந்த மனம்கொண்ட சில ஆய்வாளர்களை இங்குக் குறிப்பிடலாம். Wilfred Cantwell Smith [12], Raimon Panikkar [13],  J. L. Mehta [14] , Wilhelm Halbfass [15], A. K. Ramanujan [16],   R. Balakrishnan [17] -  இவர்கள் உண்மையிலேயே இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாலம் கட்டியவர்கள்.

ருட்யார்டு கிப்லிங் (Rudyard Kipling) சொன்னதை இப்பொழுது ஏற்றுக்கொள்ள முடியாது: “கிழக்கு கிழக்குதான்; மேற்கு மேற்குதான்; இவை இரண்டும் ஒருநாளும் இணையாது, சந்திக்காது.” சமூக வலைத்தளம் நிறைந்த உலகில் பண்பாடுகளிடையே செய்திகள் மிக விரைவாக பரவுவதைப் பார்க்கிறோம். இன்று உலகச் சந்தையைப் பற்றி, உலகளாவிய நெறிமுறை பற்றிப் பேசுவதைச் சாதாரண அளவில் கணிக்கப்படுகிறது.

இன்றைய அளவில் பண்பாடுகளுக்கிடையே எழுப்பிய சுவர்களும் வேலிகளும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இருந்தாலும் இதன் பின்னணியில் பண்பாட்டின் தனித்துவத்திற்காகவும் போராடும் போர்க்குரலும் பலமாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால், முன்பு கிப்லிங் சொன்னதைப் புதிய பண்பாட்டு மோதலின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான அடையாளத்தைத் தேடி அலைகின்றனர். மேற்கத்திய நாடுகள் தாங்கள் அடைந்த ஆதிக்க நிலையின் செல்வாக்குத் தலையணையில் சாய்ந்து கொண்டு அனுபவிக்கலாம். இருப்பினும் இந்தப்பண்பாட்டு மோதலின் தாக்கம் அவர்கள் அடையாளத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வைக்கிறது[18].

இந்நிலையில் நம்மிடம் எழும் முக்கிய கேள்வி இது: நம்மைவிட வேறு உலகைச் சார்ந்தவரை,  பண்பாட்டால் வேறுபட்டவரைப் புரிந்து கொள்ள முடியுமா? எப்போதும் தவறாகத்தான் புரியமுடியுமா? ஏனெனில் நமது முன்புரிதல் வேறுபட்டிருக்கிதே? அதனால் இந்த முயற்சியை முழுதும் கைவிட்டு விடவேண்டுமா? அப்படி ஒதுங்கிப்போவது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமில்லை. அதாவது சந்தைகள் உலகமயமானபின், வலைத்தளவழி செய்திபரவும் நிலை எதார்த்தமான அளவில் ஒதுங்கி இருக்க வாய்ப்பில்லை. பண்பாட்டுப் பலாத்காரமின்றி, மற்றவரைப் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு, அத்தகைய வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் மொழிபெயர்ப்பு-அரசியல்:
ஒரு இந்திய மொழியில் உள்ள நாவலை (புதினத்தை) மற்றொரு மொழிக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சி குறைந்து கொண்டே போகிறது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு அதிகரித்து உள்ளது. மராத்தியிலிருந்து கன்னடத்திற்கோ, தமிழிலிருந்து மலையாளத்திற்கு எடுத்துச் செல்வது இயற்கையானது, சுலபமானதும் கூட. ஆனால் இந்திய மொழி நாவல் ஆங்கிலம் போன்ற உலக மொழியில் வெளிவரும் பொழுது அதன் ஆதிக்கச் செல்வாக்கும் பொருளாதார வளமும் அதிகரிக்கிறது. மேலும் இன்றைய இன்றைய  இந்திய இளைஞரிடம் உள்ள மனப்பான்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தால் இன்னொரு இந்தியமொழி கற்பது தேவையற்றதாகிறது. உலகளாவிய ஒரு மொழி கற்றால் போதும் என்பது இன்றைய தலைமுறையின் எண்ணமாகத் தெரிகிறது[19]. 

இரண்டாவதாக, புத்தகங்கள் அழகியல் உலகில் மட்டும் இயங்குவதில்லை. மக்கள் பொதுவாக பத்திரிக்கையில் விளம்பரம் பார்த்து, வலைத்தளங்களில் விமர்சனம் பெற்ற புத்தகங்களை வாசிக்க விரும்புகின்றார்கள். புத்தகங்களும் மற்ற பொருட்களைப்போல விற்பனைக்கு விளம்பரம் பெருகுகின்றன. ஆனால் எந்தப் புத்தகம் மொழி பெயர்க்கப்படவேண்டும், அதிக விளம்பரத்திற்கு உட்படுத்த வேண்டும் என யார் முடிவு செய்வது? மேலும், பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில்  உள்ளவர்கள்  ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய நூல்களையே விரும்புவார்கள். இரபீந்திரநாத் நூட்களை ஆங்கில வடிவில் கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் ஆங்கில நூட்கள் அதிகம் இங்கே இறக்குமதியாகுகின்றன. 

இந்திய நாட்டு எழுத்தாளர் நூட்களை ஐரோப்பியர் நமது சமூக சூழ்நிலையை அறிந்து கொள்ள வாசிக்கின்றனர். இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இத்தகைய உலகமயமான புதிய உலக கட்டமைப்பில் நாம் ஒரே பக்கமாக பார்க்கும் கைதிகளாக இருந்து விடுவோமோ என்ற அச்சமும் ஆபத்தும் உண்டு[20]. 

நாட்டார் மரபை மொழிபெயர்க்கும் ஆராய்ச்சியாளர் கடமை:
எழுத்துருவம் பெற்ற ஒரு நூலை மொழிபெயர்ப்பதற்கும் வாய்மொழி மரபை மொழி பெயர்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. மூலப்பண்பாட்டின் கனவுகள், கதைகள், புராணங்கள், சின்னங்கள், சடங்குகள் போன்றவை வாய்மொழி மரபின் “நூட்கள்” எனலாம்.

இங்கு எழும்  கேள்வி கவனத்திற்குரியது. நாட்டார் மரபை மொழிபெயர்க்க முடியுமா என்பது மட்டுமல்ல, வாய்மொழி மரபில் ஒரு குறிப்பிட்ட நிலையான நூல் வடிவம் இல்லை. அது மாறிக்கொண்டே இருக்கும். அதனால் பல்வேறு ஓலைச்சுவடிகள், வேறுபட்ட விளக்கங்கள் கொண்டுள்ளன. சடங்கு முறைக்குட்பட்ட மரபு இன்னும் அதிகமாக மாறிக்கொண்டே இருக்கும்[21].   மூல நூல் என்பது ஒருவர் மனப்பாடமாக வைத்திருந்ததைத் திரும்பத் திரும்பச் சொல்வதை நாட்டார் மரபு ஆராய்ச்சியாளர் பதிவு செய்கிறார். அந்த மரபின் ஆசிரியர் தெரியாது. ஆனால் மொழிபெயர்த்தவர் பெயரில் இது வெளியாகும்[22].  

இறுதியாக ஓர் எச்சரிக்கை:
ஒரு வரலாற்று நூலை வாசிக்க முன்பு அதை எழுதியவரின் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் பதிவு செய்யும் வரலாற்று நிகழ்வுகள் அவரது சிந்தனைக் கட்டமைப்பைப் பொருத்திருக்கிறது. மீன்பிடிப்பவர் எத்தகைய வலை வைத்திருக்கிறார் என்று தெரிந்தால் அவர் எத்தகைய மீனைப் பிடிப்பார் என்று முன்னதாகவே சொல்லி விடலாம். அவர் கடலின் எந்தப் பகுதியில், எந்த நேரத்தில், வலை வீசுகிறாரோ அதைப் பொருத்துத்தான் அவருக்குக் கிடைக்கும் மீன் வகைகளும் இருக்கும். அதுபோலத்தான் வரலாற்று நிபுணர்கள் நமக்குக் காட்டும் உலகமும் அமைந்திருக்கும். இதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் விதிவிலக்கு அல்ல.


References:
1. Anand Amaladass, Abhirami Antati. Die weibliche Dimension der Gottheit.  Eine indische Perspektive, Verlag Mueller-Speiser, Anif/Salzburg, 2004; Siva, der Tanzende Gott (2004), Mein Gott ist ein Dieb, Vishnu-Hymnen der tamilischen Alvar-Tradition, (2004); Siva Tanzt in Südindien (2009).

2. Dilip Chitre, “Translating Sensibility”, in Culture and the Making of Identity in Contemporary India. Edited by Kamala Ganesh & Usha Thakkar, Sage Publications New Delhi, 2005, p. 127.

3. Iliya Troyanov’s novel The Collector of Worlds (Weltensammler, 2006).

4. Daniel J. Boorstin, The Discoveries.  A History of Man’s Search to Know His World and Himself. Penguin Books, 1982, 492.

5. Daniel J. Boorstin, p. 549 –550.

6. Raimon Panikkar, “Satapathaprajna: Should We Speak of Philosophy in Classical India?  A Case of Homeomorphic Equivalents.” In: Contemporary Philosophy. A New Survey. 1993. Vo. 7, 11-67.

7. “Zur Methode der philologischen Begriffsforschung”, in Paul Hacker. Kleine Schriften. Hrg von Lambert Schmithausen, Franz Steiner Verlag GMBH, Wiesbaden 1978, 18-33.

8. A.K.Ramanujan, “Three Hundred Ramayanas”, in The Collected Essays of A.K.Ramanujan, Edited by Vinay Dharwadker, Oxford University Press, 1999, p. 158.

9. Edward W. Said, Orientalism.  Western Conception of the Orient, (1978) Penguin Books, 1995.

10. Tzvetan Todorov, The Conquest of America: The Question of the Other, trans. Richard Howard, New York: Harper and Row, 1984.

11. Fred Dallmayr, Beyond Orientalism.  Essays on Cross-Cultural Encounter, Rawat Publications, Jaipur & New Delhi 1996, p. 7.

12. C.W Smith, Islam in Modern History, New American Library, New York 1957 and On Understanding Islam, The Hague: Mouton 1981.

13. Raimon Panikkar, Myth Faith and Hermeneutics, Paulist Press, New York 1978 and The Intrareligious Dialogue, Paulist Press, New York, 1978.

14. J. L. Mehta, India and the West: The Problem of Understanding (Chico, Calif.: Scholar Press, 1985 and Philosophy and Religion: Essays in Interpretation, New Delhi: Manoharlal, 1990.

15. W. Halbfass, India and Europe: An Essay in Understanding, Albany: State University of New York Press, 1988;  Tradition and Reflection: Explorations in Indian Thought Albany: State University of New York Press, 1991.

16. A. K. Ramanujan, “Is there an Indian Way of Thinking? An Informal Essay”, in McKim Marriot, ed. India through Hindu Categories, Delhi: Sage Publications, 1990; Folk Tales from India: A Selection of Oral Tales from Twenty-Two Languages, New York: Pantheon Books, 1991.

17. R. Balakrishnan, The Journey of a Civilization. Indus to Vaigai, RMRL, Chennai, 2019.

18. Dallmayr, p.134.

19. Meenakshi Mukherjee, “The Novel In India, In English and in English Translation”, in Culture and the Making of Identity in Contemporary India, edited by Kamala Ganesh and Usha Thakkar, Sage Publications, New Delhi, 2005, 112.

20. U. R. Anantamurthy, “What does Translation Mean in India?” in Culture and the Making of Identity in Contemporary India, edited by Kamala Ganesh and Usha Thakkar, Sage Publications, New Delhi, 2005, p. 133.

21. Kailash C. Baral, “Translating the Oral: Transltability and Cultural Dynamics”, in Indian Folklore Research Journal. No. 9, Dec. 2009, p. 30.

22. Ibid. 33.


----

No comments:

Post a Comment