Monday, October 11, 2021

எல்லாச் சாலைகளும் தீட்சை பூமியை நோக்கி...

-- முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி


அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாள் 1956 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14 ஆம் நாள். 

புத்தருடன் அம்பேத்கருக்கு ஏற்பட்ட புரிதல்:
அண்ணல் அம்பேத்கரின் சிறுவயதில் ராமாயணமும், மகாபாரதமும் தினமும் இரவில் படிக்கும் படி அவரது தந்தையார் உத்தரவிட்டிருந்தார். தந்தை சொல் கேட்டு அப்படியே செய்து வந்தார் அம்பேத்கர். மாணவப் பருவத்தில் அவர் மிக நன்றாகப் படித்து வகுப்பினில் தேறியதற்காக அவரது தந்தையின் நண்பர் தாதா கெலூஸ்கர் என்பவர், அவர் எழுதிய 'புத்தரின் வரலாறு' என்ற நூலை அம்பேத்கருக்குப் பரிசளித்தார். அந்த நூலை முழுவதுமாக ஆர்வத்துடன் வாசித்த அம்பேத்கருக்கு, அவருடைய மனதில் ஏற்கனவே பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகளுக்குப் பெரும் வடிகால் அமைந்த நிறைவு ஏற்பட்டது. நாள்தோறும் ராமாயணமும், மகாபாரதமும் படித்து வந்தாலும் அம்பேத்கர் அந்த இதிகாசங்களில் உள்ள பெரும்பாலான கதாபாத்திரங்களை விரும்பவில்லை. அவற்றில் ஆதிக்கமும், உயர் சாதி வெறியும் இருப்பதை உணர்ந்தார். அதுவும் கிருஷ்ணரின் நடவடிக்கைகள் தொடர்ந்த குற்றச்செயல்களாகவே அவருக்குப் பட்டன. அதேபோல் ராமனின் நடவடிக்கைகளும் மனித சமுதாயத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கவில்லை என்றும் அம்பேத்கர் கருதினார்.

மதக் கோட்பாடுகள் என்ற பெயரில் நம்மைச் சுற்றியிருக்கும் தவறான வழிகாட்டுதலிலிருந்து மனித சமுதாயம் விடுபடவும், மீளவும் புத்தரின் தம்மம் ஒன்றே வழி என்று அம்பேத்கர் உணர்ந்தார். புத்தர் கூறிய நல்ல அறிவுரைகள் தான் 'தம்மம்' என்ற பொதுவான சொல்லாக அறியப்படுகிறது. 

buddha art.jpg

 - வாழ்க்கையில் தூய்மையைக் கடைப்பிடிப்பது; 
 - வாழ்வில் நிறைவடைவது; 
 - புலன் உணர்வுகள் மீது போதுமான கட்டுப்பாடு (நிப்பானம்); 
 - ஆசையைத் துறந்து வாழ்வது; 
 - அனைத்துக் கூட்டுப் பொருட்களும் நிலையற்றவை என உணர்வது; 
 - நல்ல செயற்பாட்டினை ஒழுக்க நியதியின் கருவி என்று உணர்வது 
            (தம்மம்: நூல் 3: பகுதி 3: ப: 195 - 210) 
ஆகிய இவையெல்லாம் எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடிய தம்மம் ஆகும். ஆகவே புத்தர் காட்டிய தம்மத்தின் வழி நடப்பது ஒன்றே மனிதனை மனிதனாக உணர்வதற்குச் சரியான கருவியாகும் என்று அம்பேத்கர் கருதினார்.

இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்:
கௌதம புத்தர் ஒருவரே மாறிவரும் நவீன உலகத்திற்கு வழிகாட்டக்கூடிய ஒளியை அளித்திருக்கிறார் என்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். வருங்கால உலகத்திற்கான வழிகாட்டுதல் அனைத்தும் புத்த நெறியில் இருப்பதை அவர் கண்டார். இனிவரும் காலங்களில் அறிவியல் சார்ந்து வாழும் மனிதர்களுக்கு மதம் என்ற ஒன்று அவசியம் என்று கருதப்பட்டால், அவர்கள் புத்தரின் தம்மத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அம்பேத்கர் கருதினார். இவை எல்லாம், இந்தியாவில் உள்ள அனைத்து மதக் கோட்பாடுகளையும் கற்றறிந்த பின்னால், தனக்கு ஏற்பட்ட ஒரு தீர்க்கமான முடிவு என்று அம்பேத்கர் கூறினார். 

மதம் என்பது அதிகாரத்திற்கான ஓர் அடிப்படை என்பதை இந்திய வரலாறு நிரூபித்திருக்கிறது. இந்துக்கள் மதம் என்று அழைப்பது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதி நெறிகளைத் தான். இவற்றைப் பரப்புவதைத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக்க வேண்டுமானால், வேத, சாஸ்திர, புராணங்கள் புனிதமானவையோ, அதிகாரப் பூர்வமானவையோ அல்ல என்று சட்டப்பூர்வமாகச் செய்துவிட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். இந்துக்கள் இந்தியாவின் மன நோயாளிகள். உயர்ந்த இந்து, தாழ்ந்த இந்து என்று இருக்க முடியும். ஆனால் நல்ல இந்து என்று யாரும் இருக்க முடியாது என்பதையெல்லாம் முன்னமேயே கணித்து இருந்தார் அண்ணல் அம்பேத்கர். 

இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதியை ஒழிப்பது என்பது, இந்து மதத்தை அழித்து ஒழிக்கும் வழி என்று உறுதிப்படக் கூறினார் அண்ணல் அம்பேத்கர். சாதிக்கும், வர்ணத்திற்கும் உள்ள மத அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடிப்பது மதக் கடமை என்று கூறச் சாத்திரங்களே உதவுகின்றன என்பதும் அம்பேத்கரின் அறிவுரைகள். சாதிகளின் மதமான இந்து மதத்தைக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே நமது முதல் எதிரி என்று அடையாளப்படுத்திய அம்பேத்கர், இந்து மதத்தில் நிலவி வரும் சாதி, தீண்டாமையைச் சுட்டிக்காட்டி, தான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதன்படி சாதித்தும் காட்டினார் என்பது இந்திய வரலாற்றில் புத்தருக்கு அடுத்து நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் புரட்சி.

தன்மானத்தைக் காப்பதே தீட்சையின் மௌனப் புரட்சி:
மதம் மாறுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் அம்பேத்கரின் மதமாற்றம் தீண்டாமை என்னும் கொடிய பேயின் கோர நர்த்தனத்தால் விளைந்தது. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 'தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது' என்ற வாசகத்தை அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற வைத்தாலும், நடைமுறையில் இந்தியாவில் இன்னும் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்று உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில்தான் அவர் பல லட்சம் மக்களோடு பௌத்தம் தழுவினார். 

இனவெறியும், நிறவெறியும் மட்டுமே அறிந்திருந்த மேற்குலக நாட்டினர் 'சாதிவெறி' என்றால் என்ன என்ற கேள்வியுடன் இந்தியாவைத் திடுக்கிட்டு நோக்கினர். ஆனாலும் இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டங்களில் 'சாதிவெறி' விவாதப் பொருளாக வில்லை. அதை விவாதப் பொருளாக ஆக்குவதற்கு இந்தியாவும் விரும்பவில்லை. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 'தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது' என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அம்பேத்கரின் வாசகங்களைத்தான் இந்தியா உலக நாடுகளுக்குச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இந்தியாவில் தீண்டாமையும், சாதிவெறியும் இன்னும் நிலவுகின்றன என்பதை அன்றாடம் வரும் செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன. 

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக, தீண்டாமையை ஒழித்துவிட்ட ஒரு நாடாகத் தன்னை முன்னிறுத்துவதில் உள்ள கயமைத் தன்மையை உலகுக்கு அம்பலப்படுத்தும் விதமாகத்தான், அம்பேத்கர் இந்து மதத்தை விட்டுப் பௌத்தம் தழுவினார். இதுவே இந்தியப் பூர்வ குடிமக்களின் தன்மானத்தைக் காக்கும் நிகழ்வு என்றும் அம்பேத்கர் கருதினார்.

தீட்சை ஏற்கும் நாளின் சிறப்பு:
அண்ணல் அம்பேத்கர் தான் பௌத்தம் ஏற்ற நிகழ்வின் நாளையும், இடத்தையும் புத்தரோடு தொடர்பு உள்ளதாகவும், வரலாற்றுச் சிறப்பு உள்ளதாகவும் அமையுமாறு தேர்ந்தெடுத்தார். 

அசோக மன்னர் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) கலிங்கத்தின் மீது படையெடுத்து, வென்று, அப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மனம் வருந்தி, அங்கு வந்த ஒரு பௌத்த பிக்குவின் வழி புத்தரின் அறிவுரைகளை ஏற்று, பவுத்தம் ஏற்ற நாள்தான் அக்டோபர் 14 என வரலாறு குறிப்பிடுகிறது. 

அசோகர், கலிங்கப் போர் முடிந்த ஒன்பதாவது நாளில் (நவமி-பாலி) போர் ஆயுதங்களைத் தூய்மைப்படுத்தி, இனி அவை போருக்கல்ல; உழவுக்கும், பூசைக்குமான (ஆயுதபூசை) கருவி என்றாக்கி விட்டு, அசோகர், தான் போரில் வென்ற பத்தாவது நாளில் (விஜயதசமி-பாலி) பௌத்தம் தழுவினார். 

வரலாற்றோடும், புத்தருடனும் தொடர்புடைய அந்த நாளையே அம்பேத்கரும் பௌத்தம் தழுவும் நாளாகத் தேர்ந்தெடுத்தார்.

தீட்சை பூமியின் சிறப்பு:
ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் தமிழர்களே பரவியிருந்தனர்; தமிழர்களே ஆண்டிருந்தனர். "ஒரு மொழி வைத்து உலகாண்ட வரலாறை" சங்கத்தமிழ் இலக்கியங்கள் (புறநானூறு) பறைசாற்றுகின்றன. அவர்கள் தங்கள் முன்னோர் வழிபாடுகளில், பாம்பை (நாகம்) வைத்து வணங்கி வந்தனர். இதனால் அவர்கள் நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்த நாகர்களே, திராவிடர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அம்பேத்கர் தன் ஆய்வில் தெரிவித்திருக்கிறார். 

அந்த நாகர்கள் அனைவரும் பௌத்தர்களாகவே உலகியலை அறிந்து வாழ்ந்தனர். பௌத்தத்துக்கும், வைதிகப் பிராமணியத்திற்கும் நடைபெற்ற நீண்ட முடிவிலாப் போரை, அதர்ம யுத்தமாக்கி வைதிகம் வென்றது. அப்படி ஒரு காலத்தில், பௌத்தம் செழித்திருந்த பூமிதான், நாக்பூர் என்று அழைக்கப்படும் நாகபுரி. அதனால் தான் தெற்கையும், வடக்கையும் இணைக்கும் இந்தியத் துணைக் கண்டத்தின் மையத்தில், இந்நாடு முழுவதும் பௌத்தர்களாக இருந்த வரலாற்றை நினைவு கொள்ளும் வகையில் நாகபுரியைத் தேர்ந்தெடுத்தார் அம்பேத்கர். 

நாகபுரியில், 14. 10. 1956 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் தன் மனைவியுடனும், தன்னைப் பின்பற்றும் பல லட்சம் தொண்டர்களுடனும் புத்தர் சிலையை வணங்கி, வெள்ளைத் தாமரை மலர் தூவி, பௌத்தம் ஏற்றார். புத்த தம்மங்கள் பாலி மொழியில் சொல்லப்பட்டன. அவற்றை அம்பேத்கரும், அவர் மனைவியும் தங்கள் தாய்மொழியான மராத்தி மொழியில் கூறி பௌத்தம் ஏற்றனர். அதற்கு அடையாளமாக அம்பேத்கர் 22 உறுதி மொழிகளையும் அப்போது ஏற்றார். அவற்றை அம்பேத்கர் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல, மற்ற அனைவரும் அப்படியே திரும்பவும் மொழிந்து பௌத்தம் ஏற்றனர். 

Ambedkar.JPG
பௌத்தம் தழுவியதற்கு அடையாளமான 22 உறுதி மொழிகளில் பத்தொன்பதாவது உறுதிமொழியாக, "மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத, கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தைத் தழுவிக் கொள்கிறேன்" என்று அம்பேத்கர் அமைத்த வாசகம் தான் அவர் பவுத்தம் தழுவியது குறித்து உலகிற்கு அளிக்கும் செய்தி.

மத மாற்றமல்ல; சமூக விடுதலை:
அண்ணல் அம்பேத்கருக்கு ஒரு மாபெரும் கனவு இருந்தது. அது, உண்மையை உணர்ந்த, அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான். இதே கனவு தான் புத்தருக்கும் இருந்தது. பின்னர் அது சங்கமாக உருப்பெற்றது. 

அம்பேத்கருக்கு அந்தக் கனவு இன்னும் விரிந்தது. அந்தக் கனவுலகத்தில் அனைவரும் சமம்; பிறப்பு, பாலினம் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி; அதற்கான கட்டமைப்பு வசதிகள்; அனைவருக்கும் மருத்துவ வசதி; பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சமுதாயக் கூடங்கள்; உயர்கல்விக்கான நூல் நிலையங்கள்; தொழில் கல்லூரிகள்; பிக்குகளுக்கான பயிற்சி முகாம்கள் என்று நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கரின் கனவு. ஆனால் இதை அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ அம்பேத்கரின் கனவான தீட்சை பூமியில் அவர் செய்தார். அதற்காக ஓர் அறக்கட்டளையை நிறுவி, நூறு ஏக்கர் நிலத்தில் மேற்குறிப்பிட்ட வசதிகளை உருவாக்க அம்பேத்கர் திட்டமிட்டார். அவையெல்லாம் இன்று நனவாகி நிற்கின்றன.

அம்பேத்கர் பௌத்தம் ஏற்றது வெறும் மதமாற்ற நிகழ்வல்ல. அது சமூக விடுதலையின் ஓர் அடையாளமாகும். புத்தரின் புரட்சி எப்படி உலகையே மாற்றத்திற்கு உள்ளாக்கியதோ, உள்ளாக்கி வருகிறதோ அதேபோலவே அதே வழியில் அம்பேத்கர் செய்த புரட்சியானது, மானுட விடுதலைக்கு வித்திட்ட மகத்தான புரட்சி. மானுட இனம், அனைத்தையும், துக்கம் உட்பட, விட்டு விடுதலையாக வேண்டுமானால் புத்தர், திருவள்ளுவர், அம்பேத்கர் காட்டிய அறிவு (புத்த) வழியில் செல்வதே அனைவரின் கடமை. அதுவே பிறவிப் பெருங்கடலை நீந்த வைக்கும் அற வழியுமாகும்.

மதமாற்றம் ஏற்படுத்திய விளைவுகள்:
இந்தியாவின் உயிர்ப்பு என்ற ஒன்றை ஒற்றைச் சொல்லில் சொல்வதானால், அது புத்தரின் தம்மம் என்றே சொல்லமுடியும். அதைத் தமிழில் அறம் என்று திருவள்ளுவர் மொழிகிறார். ஒரு காலத்தில் பௌத்தத்தை அழித்த வைதீகர்கள் கூட இதைச் சொல்லத் தயங்குவதில்லை. என்னதான் சமணத்திலிருந்து கிளைத்ததாக 'அறம்' இருந்தாலும், கௌதம புத்தரால் வடிவமைக்கப்பட்ட நாணயமாக, அது எளிய மக்கள் எல்லோரிடமும் சேர்ந்தது. இதை இந்தியாவிலேயே முழுமையாக உணர்ந்தவரில் அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு அறிவாளியும், அரசியல்வாதியும் இல்லை.

அம்பேத்கருக்கு முன்னதாகவும், அவருக்கடுத்தும் தனிமனித வழியிலும், இயக்கக் கோட்பாட்டிலும், அரசியல் முறைகளிலும், கலைப் படைப்புகளிலும் புத்தரையும் அவரது அறத்தையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவுமே. அயோத்திதாசர் 'தமிழ் பௌத்தம்' என்ற புதிய பாதையை வகுத்தார். 

அயோத்திதாசர் காலத்திற்குப் பிறகு அவர் தோற்றுவித்த பௌத்த சங்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் ஒன்றாக இயங்கிய காலமும் இருந்தது. புத்தர் விழாக்களில் கலந்து கொண்ட பெரியார், அண்ணல் அம்பேத்கருடன் பர்மாவில் நடைபெற்ற உலகப் பௌத்த சங்க மாநாட்டில் கலந்துகொண்டார்.

1940 களில், அரசியல் பயணமாக பம்பாய், டெல்லி, லாகூர் வரை சென்ற பெரியாரும், அண்ணாவும் காசி வரை சென்று வாரணாசி, புத்த கயாவுக்கும் சென்று வந்தனர். அங்கு புத்தர் சிலையைப் பார்த்து, "பார்ப்பனியத்தை விரட்டிய உங்கள் புரட்சியை வைதீகம் நாடு கடத்தி விட்டதே" என்ற மௌனமாக வினவுகிறார் அண்ணா. அதற்குப் புத்தரின் மௌனமான புன்னகையே பதிலானது. "வைதிகத்தின் வைரிகள்" காலந்தோறும் தோன்றுவார்கள் என்பதாகப் புத்தரின் புன்னகைக்குப் பொருள் கொள்கிறார் அண்ணா. 

அந்தப் பொருளின் வடிவம் தான் பெரியாரும், அம்பேத்கரும். அந்த அறம்தான் அண்ணாவை வழிநடத்தியது. அவரது அரசியல் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அந்த அறமே காரணம். 

அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டில் புத்த மதம் தழுவிய போது அவரை வரவேற்றுப் பாராட்டுகிறார்; வாழ்த்துகிறார்; வணங்குகிறார் அண்ணா. அதைத் திராவிட நாடு இதழில் (21.10.1956) இப்படி எழுதுகிறார் அண்ணா.

"டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்றிருப்பவர். அவர் கற்காத இந்து மதத் தொடர்புடைய வடமொழி, வேத ஆகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக் கூடிய அளவிற்குச் சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர். 

அத்தகைய ஒரு பேராசிரியர், இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு மூன்று லட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி விட்ட சம்பவம் போல் கருதக்கூடியது அல்ல. 

டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றச் சம்பவம் உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறி விடாது. சட்டப்படி தீண்டாமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது. உலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் 3 லட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமையின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான் உலக மக்கள் முடிவு கட்டுவர். 

அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்டச் சமரசப் பூச்சும், இந்தியத் தேசிய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவையாகும். 

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு, தாழ்வு போன்ற மிகமிகக் கொடிய தொற்று நோய்க்கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப் பட்ட அரண்மனையாக இருந்தாலும், டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் அங்கு வாழ ஒப்ப மாட்டார்கள்.  வெளியேறித்தான் தீருவர். 

டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுகளுக்கும் உரியதாகும்." என்று கருத்தோவியம் தீட்டினார் அண்ணா.



நன்றி: புதிய கோடாங்கி 





No comments:

Post a Comment