-- கே.ஆர்.ஏ. நரசய்யா
மதராசபட்டினத்து ஆரம்ப வருடங்களில் வலங்கை இடங்கை ஜாதிச் சச்சரவுகள் எழுந்தன. இந்த பாகு பாடு எப்படித் துவங்கினதெனத் தெரிந்து கொள்ள நாம் பல நூல்களை ஆராய வேண்டியுள்ளது. தவிரவும் சற்று பின்னோக்கிப் போகவேண்டியுமுள்ளது. இந்த பேதத்தைப்பற்றிய நூலொன்று இடங்கை வலங்கையர் வரலாறு என்ற பெயரில் டாக்டர் எஸ். சௌந்தரபாண்டியன் என்பவரால் தொகுக்கப்பட்டு, திரு நடன. காசிநாதன் (அன்றைய இயக்குநர், தொல் பொருள் ஆய்வுத்துறை, சென்னை) அவர்களால் பதிப்பிக்கப்பட்டு, தமிழ் நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பதிப்புரையில் இவ்வாறு ஆசிரியர் கூறுகிறார்.
"அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் உள்ள கீழ்வரும் நான்கு சுவடிகளின் பிரதியே இந்த நூல்:-
1. இடங்கை வலங்கை புராணம் (டி. 2793)
2. வலங்கைச் சரித்திரம் (
3. இடங்கை வலங்கை சாதி வரலாறு (டி. 2751)
4. புதுவை இடங்கை வலங்கைச் சாதியர் வரலாறு (டி. 3196)
இவற்றில் டி. 2751 டி. 2793 ஆகியன ஓலைச் சுவடிகள், மற்ற இரண்டும் தாள் சுவடிகள்.
"கல்வெட்டுகள் பதிப்புப் பெற்ற முறையிலேயே இந்த வரலாறுகளும் இங்கு பதிப்பிடப் படுகின்றன. அஃதாவது, மூலச்சுவடியில் என்ன வடிவில் உளதோ அதே வடிவு, இயன்றவரையில், இங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. மூலத்தில் உள்ள வடிவை வரலாற்று ஆசிரியர்கள் அப்படியே பெறுவதே, மேலாராய்ச்சிகளுக்கு வழி வகுக்கும். . . .
"முதலில் வருவது இடங்கை வலங்கைப் புராணம்: இது செய்யுளில் அமைந்த புராணம் அல்ல. இச்சுவடியின் தொடக்கம், 'ராப்புள்ளையனுக்கு ஒழிகரெ நாட்டுப் புன்னப்பன் எழுதிக் கொடுத்த பட்டயம்' என்று தொடங்குகிறது. இச்சுவடி தெலுங்கு எழுத்தில் முழுவதும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகும்.
"வலங்கைச் சாதி பத்து என்று தான் இந்த சுவடி கூறுகிறது. தவிரவும், சிவனும் தேவேந்திரனும் இடங்கைக்கு உரியவர்கள் என்றும், பிரும்ம தேவனும் பிருகு முனியும் வலங்கைக்கு உடையவர்கள் என்றும் இச்சுவடி சொல்கிறது.
"இரண்டாவது சுவடி வலங்கைச் சரித்திரம். இது தஞ்சை வேதநாயக சாஸ்திரி என்னும் கிறிஸ்துவப்புலவர் மெக்கன்சிக்காகத் தொகுத்தளித்து. ஆசிரியர் கூற்றுப்படி இதில் கிறிஸ்துப் பார்வை தென்படுகிறது. அவர் சொல் படி, "வலங்கை யென்கிறது, வெள்ளாளரையும் அவர்களைச் சேர்ந்த சகல சாதியாரையுஞ்சார்ந்து நிற்கும். இடங்கையென்றால், கம்மாளரையு மவர்களைச் சேர்ந்த சகல சாதியாரையுங்காட்டும்.
"இப்போ இருக்கிற சரபோசி மகராசாவின் நாளிலே 1798 வருஷத்திலே துவக்கி இரண்டு மூன்று வருஷக்காலம் இருதரத்தாரும் வழக்கிலே கிடந்து நெய்யிலே கையிட்டுக் கொண்டார்கள்" என்று வேதநாயகர் எழுதுவதால், இந்தச் சுவடி (டி. 462) எழுதப்பட்ட காலம் கி. பி. 1798-ஐ ஒட்டியது என்று அறியலாம் என்று நூலாசிரியர் கருதுகிறார்.
வலங்கையார் என்பதற்குப் பொதுவான இவரது கருத்து, "எந்தெந்த சாதி யுயர்ந்த கையா யிருந்ததோ, எவர்கள் காரியக்காரரோ அவர்களெல்லாம் வலங்கைத் தங்களோடே சேர்ந்தவர்களென்றார்கள்" என்பது வேதநாயகனாரின் கருத்து.
மூன்றாவது இடங்கை வலங்கைச் சாதி வரலாறு எனும் சுவடி. நூலாசிரியர் இந்த சுவடி மிகவும் இன்றியமையாதது என்கிறார். இதில் தான் இடங்கைச் சாதிகள் தொண்ணூற்றியெட்டும் வலங்கைச் சாதிகள் அதே எண்ணிக்கையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு உண்டான அடையாளங்களும் தரப்பட்டுள்ளன. ஆசிரியர் சொல் படி, "பண்டைக்காலச் சமுதாயம் தொழில் வழிச் சமுதாயம். சாதிகள் பிரிந்ததே தொழில் அடிப்படையில்தான் என்பர். அவ்வகையில் ஆய இச்சுவடி பயனுள்ளது"
நான்காவது சுவடி புதுவை இடங்கை வலங்கைச் சாதியர் வரலாறு என்ற சுவடி. பல சாதிகளுக்கு இருந்த மதிப்பை இந்தச் சுவடி கூறுகிறது. எடுத்துக்காட்டாக,, விசுவகர்மருக்கு வெள்ளைக்குடை பிடிக்கும் மரியாதை புதுவைப் பகுதியில் இருந்திருக்கிறது. வலங்கைச்சாதிகளுக்கு அவர்கள் வீடு விழாக்களில் இன்ன குடை பிடிக்கவேண்டும், இன்னவகைக் கோல் பிடிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதையும், அதே போல இடங்கைச் சாதிகளுக்கும் வரையறைகள் இருந்திருக்கின்றன என்றும் இந்த நூல் தெளிவாக்குவதாக ஆசிரியர் கருதுகிறார்.
ஆசிரியர் கூறுகிறார்: "வெள்ளாளர், அகம்படியர், இடையர், கவரை, கோமுட்டி, கைக்கோளர், சேடர், சேணியர், இவர்கள் சவுக்கழி பிடிக்கவும், வெள்ளைக் குதிரை ஏறவும் சுதந்திரமுண்டு . . . . . .தேவடியார்களிலேயும் இடங்கைத் தேவடியார்கள், வலங்கைத் தேவடியார்கள் என்ற இரு பிரிவுகளை இச்சுவடி குறிப்பிடுகிறது.
"பொதுவாக இந்த நான்கு சுவடிகளும் கி. பி. 18ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழ் நாட்டில் இருந்த இடங்கை வலங்கைச் சாதிப்பிரிவுகளைப் பேசுகின்றன. இவற்றால் அச்சாதிகளிடையே அடிக்கடி சிறு பூசல்கள் நிகழ்ந்த உண்மையும் அறிய இயலுகிறது.
"1876 ல் கியார்ண்ஸ் என்பவர் இடங்கை வலங்கைச் சாதிகள் பற்றிய ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதில், விசுகர்மருக்கும் பிராமணருக்கும், புரோகிதத் தொழில் தொடர்பான பூசலை விலக்கி அந்தப் பூசல் இறுதியில், சோழன், தன்னை ஆதரிப்போர் வலங்கையர் என்றும், விசுவகர்மரை ஆதரிப்போர் இடங்கையர் என்றும் வரையறுத்ததாகக் கூறுகிறார்"
ஆசிரியர் தொடர்கையில், "அதே போல இடங்கை வலங்கை வரலாறும் பேசப்படுகிறது. ஜெர்மன் நூல் ஒன்றில், இடங்கைச் சாதிகளாக ஒன்பதும், வலங்கைச் சாதிகளாகப் பதினெட்டும் குறிக்கப்படுகின்றன. வேடர், நெசவாளர், செட்டிகள் (வியாபாரிகள்), முதலானோர் இடங்கையர். குயவர், வண்ணார், பல்லக்குத் தூக்குவோர், முகம்மதியரில் ஒரு பிரிவினர் முதலியோர் வலங்கையர். இப்பிரிவுகளைச் ஜெர்மன் நூல் தருகிறது" என்கிறார்.
சமீப காலத்தில், இந்த ஜாதிப் பிரிவினைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள பல அயல் நாட்டினரும் முயன்றுள்ளனர். அவர்களில் முக்கியமான இருவர் பர்ட்டன் ஸ்டெயின், மாட்டிசன் மைன்ஸ் ஆவர். இவர்களைத் தவிர பல ஆய்வாளர்களும் இதில் கவனம் செலுத்தியுள்ளனர். திருமதி கனகலதா முகுந்த் எனபவரும் தமது "த வ்யூ ஃப்ரம் பிலோ" என்ற நூலிலும் இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
ஒய். சுப்பராயுலு எனபவர் இந்த ஜாதி பாகுபாடுகளைக் குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்துள்ளார். அவர் கருத்துப்படி இந்த வேறுபாடுகள் சோழர் காலத்திலிருந்தே இருந்தவனெனத் தெரிகிறது. தமது நூலான சோழர் காலத்துச் சரித்திரத்தில் "சமூக மாற்றங்களும், வலங்கை இடங்கை பிரிவுகள்" என்ற தலைப்பில் அவர் கூறுவதைப் பார்க்கலாம்.
அவர் கண்டதின்படி, இந்தப் பிரிவுகள் சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் இந்த சர்ச்சை அதிகமாகக் காணப்படுவது, ஆங்கிலேயர் காலத்தில் தான். அதுவும் சிறப்பாக 18-19 நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் தான். இந்தக் காலத்தில் இந்த இரு பிரிவினரும் எதிர்த்துக் கொண்டு கலவரங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. இதைப் பற்றிச் சமீப காலத்தில் நன்றாகவே ஆராய்ச்சி செய்த அயல் நாட்டவர் பர்ட்டன் ஸ்டெயின் ஆகும். அவர் முடிவில் கூறியிருப்பது, இந்தப் பிரிவுகள், ஜாதிகள் அடிப்படையில் இல்லாது, அவ்வப்போது ஏற்பட்ட சமூக மாறுதல்களால் தான் என்பதாகும்.
டாக்டர் இரா. நாகசுவாமி இதைப்பற்றித் தமது நூலொன்றில் விளக்கியுள்ளார்
"வலங்கை இடங்கை:
"கி. பி. 10 - ம் நூற்றாண்டிலிருந்து மற்றுமொரு பிரிவைக் காண்கிறோம். இப்பிரிவு தமிழக வரலாற்றில் ஒரு சமூகப் புரட்சியாக சற்றேறக்குறைய அண்மைக்காலம் வரை நிலவி வந்தது. இது வலங்கை இடங்கை என்று பிரிக்கப்பட்ட குடிகளாகும். தஞ்சைப் பெருங்கோயிலில் இராஜராஜனின் பல பெயர்களால் வலங்கை வேளைக்காரர்கள் இருந்திருக்கிறார்கள்.
1. இராஜராஜ தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
2. அரிதுர்க்க லங்கனத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
3. மூர்த்த விக்ரம்பாரண தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
4. இரணமுகராமத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
5. இராஜ கண்டிவத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
6. சத்ருபுஜங்கத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
7. அழகிய சோழத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
8. க்ஷத்திரிய சிகாமணித் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
எனப் பல வலங்கை வேளைக்காரர் இருந்தனர் என்று அறிகிறோம். வலங்கை வேளைக்காரர் என்பது படை என்றும் அவற்றில் பல குடியினர் இருந்தனர் என்றும் அறிகிறோம். இராஜராஜனின் படையில் வலங்கை வேளைக்காரனாக வெள்ளாளன் இருந்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. (238/ 17). 'இவ்வூர் இருக்கும் வெள்ளாளன் ஸ்ரீராஜராஜ தேவர் படை ஜநநாத தெரிஞ்ச வலங்கை வேளைக்காரரில் வண்ணக்கன் ஐய்யாறனாகிய சித்திரையாளி' என்று கல்வெட்டு கூறுவதால், இதை அறியலாம். அதிராஜேந்திர சோழனுடைய கல்வெட்டில் (4 / 8) 'வலங்கை இடங்கை மகமை' என்று குறிக்கப்படுகிறது. இதிலிருந்து வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு 11 - ம் நூற்றாண்டிலேயே நிலைத்து விட்டது என்பது தெளிவு.
"கைவகுத்தல் (வலங்கை இடங்கை தோற்றம்):
"வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு எவ்வாறு தோன்றியது என்று தெளிவாகத் தெரியவில்லை. பெரும் பாலும் படை அரசனின் வலக்கைப் புறத்தும் இடங்கை புறத்தும் வகுத்து நிறுத்தப்பட்டதிலிருந்து இது தோன்றியிருக்கலாம் என்று கொள்ளலாம். ஏனாதிநாதர் தனது படையை பாகுபடுத்தி நிறுத்தியதை 'கை வகுத்து' என்று பெரிய புராணம் கூறுகிறது. இதிலிருந்து படை வகுப்பது 'கைவகுத்தல்' எனப் பெயர் பெற்றது என்பது தெளிவு. சிறந்த திறன் மிக்கப் போர் புரிவோர் அரசனின் வலப்புறத்தும் அவர்களுக்குக் களத்தில் படைக்கலங்களை நீட்டித்தருதல் முதலிய பணி புரிவோர் இடப்புறத்தும் நிறுத்தப்பட்டிருக்கக் கூடும். போர்ப்புறத்து வீரர்கள் முதலிடமும், வேல் வடித்துக் கொடுத்தல் முதலிய தொழில் புரிவோர் இரண்டாவது இடமும் பெறுவதில் வியப்பில்லை. தங்கள் உயிரை மதியாது போரிட்ட வீரர்களுக்கு உயர் இடம் அளித்தது இயல்பே. உயர் இடத்தைக் குறிப்பதற்காக வலப்புறமும் இரண்டாம் இடத்தைக் குறிக்க இடப்புறமும் கொள்ளப்பட்டன். ஆதலின் காலப்போக்கில் வலங்கையினர் இடங்கையாரைக் காட்டிலும் ஜாதியில் உயர்ந்தவர் என்று கருதிக் கொள்ளத் தலைப்பட்டனர்.
"எல்லா ஜாதியினரும் போர் வீரர்களாகப் பணி புரிந்திருக்கின்றனர் என்று முன்னரே கண்டோம். ஆதலில் எல்லா ஜாதியிலும் வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு காணப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்குள் இப்பாகுபாடு காணப்படவில்லை.
"கல்வெட்டுகளில் வலங்கை இடங்கையினருக்கு பல சலுகைகள் அரசனால் அளிக்கப்பட்டவை குறிக்கப்படுகின்றன. சக வருடம் 1340-ல் (கி. பி. 1418) திருவண்ணாமலையில் வலங்கை இடங்கை வகுக்கப்பட்டது என்றும் வலங்கைக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்ன என்பதும் குறிக்கப்படுகின்றன. 'திருவண்ணாமலையில் வலங்கை இடங்கை இல்லை. திருவண்ணாமலையில் இரண்டு தெருவில் கைக்கோளருக்கு முன்பு பூர்வம் நடந்து போந்த சங்கு, தண்டு, ஆனை, சாமரம், மற்றும் வலங்கைக்கு உரிய வரிசைகள் எல்லாம் நடக்கக்கடவதாக' என அரசன் ஆணையிட்டதைக் கல்வெட்டு கூறுகிறது. (155 / 8) சக வருடம் 1350 - ல் (கி.பி. 1428) திருவையாற்றில் வலங்கை சாதி 98 ம் இடங்கை ஜாதி 98 ம் குறிக்கப்படுகின்றன. 'பொய்கை நாட்டு தென்கால சபையாரும் வலங்கை 98 ஜாதியும், இடங்கை 98 ஜாதியும் நிறைவற நிறைந்து குறைவற குவிந்து' என்று குறிக்கிறது. இதிலிருந்து கி. பி. 15 ம் நூற்றாண்டில் சற்றேறக்குறைய 98 ஜாதிகள் வலங்கையிலும் இடங்கையிலும் இருந்ததாக அறியலாம் இதிலிருந்து ஒவ்வொரு ஜாதியிலும் வலங்கையும் இடங்கையும் இருந்தனர் என்பது தெளிவு. செல்வத்தாலும் செல்வாக்காலுமே இப்பிரிவு ஏற்பட்டுப் பின்னர் ஜாதி அடிப்படையில் அமைந்தது என்றும் கருதலாம். வலங்கை என்பது அரசனால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் தெளிவு."
கம்பெனி காலத்தில் சாதாரணமாக அறியப்பட்டது, ஒரு பக்கம் விவசாயம் செய்பவர்களுக்கும், மறுபக்கம் கைத்தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கும் இடையில் தான் அடிக்கடி இம்மாதிரியான பேதங்கள் இருந்தன என்பதாகும். ஆனால் சில காரணங்களுக்காக இந்த எண்ணம் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார் சுப்பராயுலு. முதல் காரணம், 14- 15 நூற்றாண்டு கல்வெட்டுச் சாசனங்கள் இடங்கை பற்றியவை, பள்ளி அல்லது வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் சரித்திரத்திற்குத் தெரிந்த சில ஆயிரம் ஆண்டுகளில் வணிகத்தொழிலோ கைத்தொழிலோ செய்தவர்களல்ல; இந்தக் குலம் முதன் முதலாகக் குறிப்பிடப்படுகையில், போர்வீரர்களாக 11ம் நூற்றாண்டுக் காலத்தில் அறியப்பட்டார்கள். இவர்கள் சோழர்களது படைகளில் இருந்தனர். ஆனால் பிற்காலத்தில், விவசாயத் தொழிலுக்குச் சிறிது சிறிதாக இரண்டு நூற்றாண்டுகளுக்குள் மாறினர். அப்போதிருந்து அவர்கள் நிலை மாறவில்லை. இரண்டாவதாக, அய்யவோலே வணிகக்குழு சாசனங்களில், (11-13 நூற்றாண்டுகளில்) அவர்கள் வலங்கைக் குழுக்களாகத்தான் அறியப்படுகிறார்கள்.
நத்தம் கோயில்பட்டி வணிகக் குழு சாசனத்தில், (11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது) இவ்வாறுள்ளது:
நாட்டுச் செட்டிகளும், தன்ம செட்டிகளும், சேம்பியன் சேனாபதி ஆண்டான், வைகுண்ட நாடாள்வான் என்கிற வலங்கை மீகாம வீரகங்க பிள்ளை. . . என சொல்லப்படுகிறது. இதிலிருந்தும் வணிகர்கள் வலங்கைக் குழுவில் இருந்ததாகத் தெரிகிறது.
சுப்பராயுலு தொடர்கிறார்:
"சரித்திர பூர்வமாக, வலங்கை-இடங்கை பெயர்கள் சோழர் காலத்திலிருந்து இருப்பது தெரிகிறது. முதல் முதலாக வலங்கை என்ற சொல், 10வது நூற்றாண்டின் பிற்பகுதியில், ராஜராஜன் (985-1014) காலத்துச் சாசனங்களில் காணப்படுகிறது. தென்னிந்திய அரசர்களில், ராஜராஜன் தான் முதன் முதலாக போர்ப்படைகளைப் பெரிய அளவில் உருவாக்கினதாக அறிகிறோம். அதன் பிறகு, 11 வது நூற்றாண்டில், வரி ஒன்றைக் குறித்துப் பேசுகையில், வலங்கை இடங்கை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவற்றில் எவரெவர் இருந்தனர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆகையால் இவர்கள் போர்ப் படையினரெனக் கொள்ளுதலில் தவறிருக்காது. 11 வது நூற்றாண்டில் தான் முதன் முறையாக இடங்கை குறிப்பிடப்படுகிறது. அப்போது கூட வலங்கை போர்ப் படையாளர்கள் தனியாகக் குறிப்பிடப் பட்டுள்ளனர். உதாரணமாக, 1073 ம் ஆண்டு கல்வெட்டு, (கோலார் ஜில்லா) வலங்கை-மஹாசேனா, சோழமண்டலத்திலிருந்து வந்த, ஒரு பெரிய வேளாண் கூட்டம் கூடியபோது, அங்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறது. . . ."
அவர் கருத்துப்படி முதலில் போர்ப் படையாளர்களைக் குறிப்பிடத்தான் இச்சொற்கள் பயன் பட்டு வந்தன என்பதாகும். ஆனால் பிற்காலத்தில் முற்றிலும் மாறி அவ்வப்போது சமூக நிலைமையைக் குறிக்கும் சொற்களாக மாறி விட்டன.
மதராசபட்டினத்திலிருந்த வலங்கை இடங்கைக் குழுக்களுள், அவ்வப்போது, பேதங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இவை கட்டுக்கடங்காமல் பல தடவைகள் குழப்பமூட்டிக் கொண்டிருந்தன. அப்போது அறிந்திருந்த படி, பேரி செட்டிகள், கைவினையாளர்கள், நெசவாளிகள், தோல் பதனிடுவோர் முதலானோர் இடங்கைக் குழுவில் இருந்தனர். வெள்ளாளர்கள், ஆரிய வைசியர்கள் (கோமுட்டிகள்), வன்னியர்கள், ஆதி திராவிடர்கள், வலங்கையினராக இருந்தனர். இவர்களுள் சண்டைகள் மூண்டதற்குக் காரணம், திருமணம் போன்ற நல்லவை நடக்கும் போதும் சாவு ஊர்வலம் போன்றவை நிகழும் போதும், அந்நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகள் குறித்தும், அவைகளுக்கான ஊர்வலங்கள் செல்லும் வழிகள் பற்றியும் தான்!
இரண்டு குழுவினரும் அணியும் உடைகளில் கூட சில உரிமைகள் கொண்டாடப்பட்டன. அதே போல அவர்களது விழாக்களின் போது அமைக்கப்படும் பந்தல்கள் கூட அவர்களுக்குள் சச்சரவை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட அயர்லாந்து ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் இருந்த இடைக்காலப் பிரச்சினைகள் போலத்தான் இவையும் இருந்தன என்பது தான் உண்மை. அங்கும் இதே போல மிகச் சிறிய பிரச்சினைகள் பெரியவையாக்கப்பட்டு, அவற்றால் போர்களே மூண்டிருக்கின்றன எனப் பார்க்கையில் இவை போன்ற பிரச்சினைகள் தமிழ் நாட்டில் மட்டும் நடந்ததாக சொல்ல இயலாது.
ஆங்கிலேயரின் மதராசபட்டினத்து வருகை, ஒரு புதிய வணிக எழுச்சியை உண்டாக்கிற்று. இந்த அயல் நாட்டு வணிகத்தால் ஈர்க்கப்பட்ட தென்னிந்தியர்கள் பல இடங்களினின்றும் மதராசபட்டினம் வந்து சேர்ந்தனர். அன்றிருந்த நிலையில் ஆங்கிலேயர்களுடன் வணிகம் செய்து பொருளீட்டும் வர்க்கம் சமூகத்தில் ஒரு தனி அந்தஸ்தையும் பெற்றது. ஆகையால் அவர்கள், தமது ஜாதிகளைப் பிரித்துக்கொண்டு இடங்கை வலங்கையினராகப் பிரிந்த போது, அவர்களுள் உயர்வு தாழ்வு பேதமும் தலை தூக்கலாயிற்று.
தென்னகத்தில், பல இடங்களிலிருந்தும் வந்த வணிகர்களும் அவர்களுக்கு உதவ வந்த பல தொழில் விற்பன்னர்களும் ஆங்கிலேயர் வந்த சில வருடங்களுக்குள் மதராசபட்டினத்தை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். சிறு குப்பங்களாக மீனவர்களுடன் மட்டுமேயிருந்த இந்த ஊர் ஜனத்தொகையிலும், பரப்பளவிலும் பெருக ஆரம்பித்தது. அவ்வாறு பெருகுகையில் பல சமூகப் பிரச்சினைகளும் எழுந்தன. அதில் முக்கியப் பிரச்சினை சமூக நியதிகளும் உரிமைகளும் அவற்றால் உண்டான குழப்பங்களும் தாம்.
மதராசபட்டினத்தின் ஆங்கிலேயர் காலத்து முதல் பிரிவுப் பிரச்சினை 1652-53 ல் தான் ஏற்பட்டது. இதன் பிறகு அரசு கொடுத்த ஆணைப்படி பொதுவாக, இந்தியர் வாழ்ந்து கொண்டிருந்த ஊர்ப்பகுதியின் கிழக்குப் பாகம் இடங்கையினர் இருக்கும் பாகமாகவும், மேற்குப் பாகம் வலங்கையினர் வாழும் பாகமாகவும் ஆக்கப்பட்டது.
இரு பிரிவினருக்கும் இடையில், 1707 ல் ஒரு பெரிய பேதம் உருவாயிற்று. இதில் பொருட்சேதமும் உண்டாயிற்று. அது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குத் தொடர்ந்தது. சண்டை மூண்டதற்குக் காரணம், பெத்தநாயக்கன் பேட்டையிலுள்ள சில தெருக்களைப் பயன் படுத்துவதில் தான்! கலகத்தை அடக்க இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். அப்போது பேமாஸ்டராக இருந்த ராவொர்த் எனபவர் கலகத்தைக் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார். அப்போது வலங்கைப் பிரதிநிதியாக சேரப்பாவும் நாராயணன் எனபவரும், இடங்கைப் பிரதிநிதிகளாக காலவாய்ச் செட்டியும், வெங்கட செட்டியும் அழைக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் ராவொர்த் ஒரு வரைபடம் தயாரித்து அதில் இரு பிரிவினர்கள் இடங்களும் குறிப்பிட்டார். மேற்குப் பாகம் முழுதும் வலங்கையினரால் குடியேறப்பட்டிருந்தது. ஆனால் அதில் இரண்டு வீதிகளில் (பிரிட்ஜ் கேட் வீதி, பெத்தநாயக் வீதி) இடங்கையினர் இருந்தனர். இந்த வீதிகளில் சில வலங்கையினர் இருந்தனர் அரசு அம்மாதிரி இருந்த இடங்கையினரை அவ்விடங்களை விட்டுக் காலி செய்து கிழக்குப் பக்கம் செல்லுமாறு உத்தரவிட்டனர். அங்கு அரசு எல்லைக் கற்களை நட்டுவிக்கவும் ஏற்பாடு செய்தது. இந்த ஆணை 17, ஜூலை 1707 ல் இடப்பட்டது.
ஆனால் அம்மாதிரி நடப்பட்ட கற்களில் ஆகஸ்டு மாதம் சில அரசுக்கு விரோதமான வாசகங்கள் எழுதப்பட்ட காகிதங்கள் ஒட்டப்பட்டிருந்தன! தவிரவும் வலங்கையினர் அவர்கள் தடுக்கப்பட்ட இடத்தில் ஒரு திருமணம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் அவர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை சௌல்ட்ரி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அப்போது பழைய நிலைமைகளை எடுத்துக்கூறி அரசுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இதற்குள், பல வலங்கையினர் சாந்தோமுக்கு ஓடிவிட்டனர். மற்றவர்கள் தமது இல்லங்களுக்குள் தம்மையே அடைத்துக் கொண்டுவிட்டனர். கவர்னர் பிட் இதில் ஃபிரேசர் எனபவருக்குச் சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகித்து, அவர் மீது குற்றம் சாட்டினார். ஃபிரேசரோ தம்மீது சாட்டப்பட்ட குற்றங்களை நிரூபிக்கக் கேட்டார். கவுன்சில் கவர்னர் வேண்டுகோளுக்கிணங்கி, ஃபிரேசரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது.
ஆகஸ்ட் 25ம் நாளன்று கவர்னர் பிட் இருதரப்பினரையும் அழைத்து அந்தப் பிரதிநிதிகளை ஓர் அறையில் தனியே இருத்தி அவர்களுக்குள் இருக்கும் பேதத்தைப் பற்றித் தீர்மானிக்கச் சொன்னார். அப்படி அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, பெத்தநாயக்கன்பேட்டை முற்றிலுமாக வலங்கையினருக்கும், முத்தியால்பேட்டை முற்றிலுமாக இடங்கையினருக்கும் ஒதுக்கப்பட வேண்டுமென ஆயிற்று. ஆனால் கரையோரம் வாழும் மீனவர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டது. எல்லா மாற்றங்களும் 1708 ஜூன் முதல் தேதிக்குள் செய்து விட வேண்டுமெனவும் தீர்மானித்தனர். ஆனால் சாந்தோம் சென்ற பலரால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அங்கேயே இருந்தனர்.
அப்போது கவுன்சில், சூரப்பா, வெரொனா, சுங்கராமா மற்றும் ஆதி செட்டி எனபவர்களை வலங்கைக்காகவும், கால்வே செட்டி, வெங்கட செட்டி, பீதாம்ப செட்டி மற்றும் கார்னப்பா செட்டி முதலானோரை இடங்கைக்காகவும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இவர்கள் 25ஆம் தேதியன்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அங்கீகரித்து கம்பெனிக்கு ஒத்துழைப்பதாக அறிவித்தனர். அரசு, அவ்வாறு ஊரை விட்டுச் சென்றவர்களில், செப்டம்பர் 10ந் தேதிக்குள் திரும்பி வந்து விடுகிறவர்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு அளிப்பதாகவும் அறிவித்தது. அந்த நாளுக்குள் அந்தக் கற்கள் அகற்றப்பட்டு விட்டன. ஆனால் ஊரை விட்டு ஓடியவர்களிடமிருந்து, கடுமையான பதில் தான் வந்தது. அவர்கள் அதில் கம்பெனியைச் சரியாக மற்றொரு முறை பழைய ஆவணங்களைப் பரிசீலிக்குமாறு கூறினர். செப்டம்பர் 14ம் தேதியன்று, பெர்சியர்கள், பட்டான்கள், மற்றும் ஆர்மேனியர்கள் தாங்கள் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வதாக முன் வந்தனர். நாராயணன், மற்றும் முல்லா, பாப்பா பிராமணி மூவரும் இதற்காக சாந்தோம் நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் சாந்தோம் வாயிலிலேயே நிறுத்தப்பட்டனர். சின்ன கேப்டன் என்று அவர்களால் அழைக்கப்பட்ட ஃபிரேசர் அங்கு வர வேண்டுமெனவும் அவரின்றி ஒரு முடிவும் எடுக்கப்பட மாட்டாதெனவும் அங்கு கூடிய மக்கள் கூக்குரலிட்டனர்.
அப்படி ஏற்படுத்தப்பட்ட குழப்பம் அரசுக்கு, ஃபிரேசர் மேலிருந்த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதாய் இருந்தது! அப்போது அங்கு வந்திருந்த நவாபின் பிரதிநிதியும், கவர்னர் பிட்டைச் சென்று பார்த்துத் தனது சந்தேகத்தையும் கூறியிருப்பார் போலும்.
ஆகையால் அவரும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் பின்னிருந்து மூட்டிவிட்டவர் ஃபிரேசர் என்பது தெரிந்து விட்டதாகச் சொன்னார். ஆகையால் ஃபிரேசர் கைது செய்யப்பட்டார். அப்போது புதிதாக சாந்தோம் கவர்னராக நியமிக்கப்பட்ட ஒரு வலங்கை ஹிந்து மனிதரின் போக்கு தான், படைபலத்தைப் பயன் படுத்தி கலகக்காரர்களை அடக்க நினைத்த அரசின் முயற்சியை நிறுத்தியது. நவம்பர் ஆரம்பத்தில் இடங்கைப் பிரிவினர் தாங்கள் அமைதியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாகவும், கருப்பு டவுனுக்குச் சுவர் கட்ட தாங்களே ஒரு பகுதி வரி கட்டுவதாகவும் தெரிவித்தனர். அதன் படி முத்தியால்பேட்டை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமெனவும், பெத்தநாயக்பேட்டை வலங்கைக்கு அளிக்கப்படலாமெனவும் தெரிவித்தனர். அப்போது, நெசவாளிகளும், எண்ணெய் தொழிலாளர்களும் தமது பிரிவுகளைப் பற்றிச் சரியாக அறிந்திருக்கவில்லை. 1708, ஜனவரி 17 அன்று நெசவாளிகள், தாம் இடங்கையைச் சேர்ந்தவராகவும், எண்ணெய்த் தொழிலாளிகள் வலங்கையைச் சேர்ந்தவர்களாகவும், அறிவித்தனர் இது ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது ஏற்பட்ட புதியதொரு ஒப்பந்தத்தின் படி, கிட்டத்தட்ட 500 வீடுகள் இரு வகுப்பினரிடையே மாற்றிக்கொள்ளப்பட்டன. அதன் படி பெத்தநாயக்கன் பேட்டையின் சில பகுதிகள் இடங்கையினரால் பயன் படுத்தப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் கவர்னர் பிட் ஆமோதிப்புடன் ஆணையாக ஆயிற்று.
ஆயினும் 1716ல் திரும்பவும் சச்சரவுகள் உண்டாயின. அப்போது இடங்கைச் செட்டிகள், வலங்கை கோமுட்டிகள் மீது பழி சுமத்தினர். அதன்படி, வலங்கையினர், தமது பட்டங்களை பயன் படுத்துவதாகவும், தமது தெய்வங்களுக்கு முன்னால் சில பூஜைகள் செய்து விட்டதாகவும் குறை கூறினர். அப்போது கவுன்சில், இருதரப்பினருக்கும் ஓர் ஆலோசனையை அளித்தது, அதன் படி, இரு தரப்பினர்களும், சம எண்ணிக்கையிலான பிராமணர்களைத் தமது பிரதிநிதிகளாக வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு முடிவு காணலாம் என்றிருந்தது. ஆங்கிலேயர்கள் சாதாரணமாகப் பிராமணர்கள் பாரபட்சமின்றி முடிவெடுப்பார்கள் என நம்பியிருந்தனர். இது அந்த சமயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. சில நாட்களில் வீட்டு வேலை செய்பவர்களெல்லோரும் (சமையற்காரர்கள், தண்ணீர் சுமப்பவர்கள், கூலிகள், பல்லக்குத் தூக்கிகள் முதலானோர்) தமது வேலையைத் துறந்து விட்டு, கையில் கண்ட ஆயுதங்களுடன், கருப்பு (இப்போதைய ஜார்ஜ் டவுன்) டவுனில் பெரிய கோஷத்துடன் வலம் வந்தனர். அங்கே வரும் நீரைக் கூட வர விடாது தடுத்தனர். அவர்களில் தலைவர்களாகக் கருதப்பட்டவர்களை அரசு, சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைத்தது. அதே வருடம் டிசம்பரில், செட்டிமார்களும், தமது எதிர்ப்பைக் காட்ட, தங்கள் கடைகளை மூடி விட்டனர். அதன் பயனாக இடங்கைப் பணியாளர்கள் வேலைகளும் நின்று போயின. தமது தேவைகளின் கருத்தையும் மனத்தில் கொண்டு, காலத்தின் அவசியம் கருதி, அரசு இதில் தலையிட முன் வந்தது. அவர்கள் பிராமணர்கள் முடிவையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் கவர்னர் பிட் கூறியது போலவே இரு வகுப்பினரையும் பிரித்து வைத்து, அவர்களுக்குள் சண்டைகள் வராது பார்த்துக்கொள்ள வேண்டி அவர்களது கோவில்களை அவரவர்களே பார்த்துக்கொள்ளவும் எனவும் சொல்லித் தாற்காலிகச் சமாதானம் அரசு ஏற்படுத்தி வைத்தது. அது அப்போதைக்கு ஒரு வழியாகக் காணப்பட்டாலும் அந்தப் பிரிவினை சமாதானத்தை நிலை நிறுத்தவில்லை. 1787 லிலும், 1790 லிலும் மறுபடியும் சண்டைகள் உண்டாயின. ஒரு விதமாக முதல் சச்சரவு நிறுத்தப்பட்டது அதற்காக ஆகஸ்ட் 1786 5ம் நாள் ஓர் அரசு ஆணை வெளியிடப்பட்டது. அதன் படி, "இனி சச்சரவுகள் வராமலிருக்க, இடங்கை வலங்கை சாதியினர் தமக்குரிய உரிமைகளின் படி தமது விழாக்களைக் கொண்டாடலாம். ஒருவர் விஷயத்தில் மற்றவர் தலையிடலாகாது. எஸ்பிளனேட் பொது இடமாகையால் இருவகையினரும் கம்பெனியின் விதி முறைகளின் படி அவ்விடத்தைப் பயன் படுத்திக் கொள்ளலாம்" என்றிருந்தது.
ஆனால், சில மாதங்களிலேயே இரு வகுப்பினருக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. இது திருவொற்றியூர் கோவில் சம்பந்தமானது. இந்த வேறுபாட்டைக் குறித்துப் புரிந்து கொள்ள முதலில் இந்தக்கோவிலைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். திருவொற்றியூர் ஆங்கில மேலாண்மைக்கு அப்பாற்பட்டிருந்தது. இந்த கிராமம், 1708 ல் தான் வேறு ஓர் இடத்தில் கூறியுள்ளபடி, ஆங்கிலேயர் கைக்கு வந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்க, தமது இந்திய வணிகர்களையே பயன் படுத்தினர். அம்மாதிரியான பணிக்கு இந்த கிராமம், ஆங்கிலேயர்களால், பேரி செட்டி சமூகத்தைச் சேர்ந்த தம்பு செட்டி எனபவருக்கு உரிமையாக அளிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த தியாகராஜ ஸ்வாமி கோவில் நிர்வாகமும் அவருக்கு ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு புராதனமான சிவன் கோவில். அவர் அக்கோவிலுக்குத் தர்மகர்த்தாவாகச் செயல் பட்டார். சில வருடங்களில் அவரது வணிகம் குறைந்து அவரது செல்வாக்கும் ஒடுங்கியபோது, இந்த உரிமை, லிங்கி செட்டி என்ற மற்றொரு பேரி செட்டிக்குத் தரப்பட்டது. அவர் கைக்கு இந்த கிராமம் 1741ல் வந்தது. லிங்கி செட்டி, தங்க வியாபாரம் செய்து வந்தவர். ஆகையால் அவருக்கு கம்பெனியின் தங்கசாலையும் தரப்பட்டிருந்தது. தவிரவும் இந்த லிங்கி செட்டி தான் கம்பெனியின் முக்கியமான துணி வணிகர். 1757 நவம்பரில் இந்த மனிதர் காலமானபோது, அவருடைய குமாரனான செப்பெருமாள், (தெப்பெருமாள் என்றும் அழைக்கப்பட்டவர்) திருவொற்றியூருக்கு வரி வசூலிக்க நியமிக்கப்பட்டார். ஆகவே இடங்கை வகுப்பைச் சேர்ந்த தெப்பெருமாள் செட்டி மேற்பார்வையில் இவ்விடம் செயல் பட்டுக்கொண்டிருந்து. ஆனாலும் இடங்கை வலங்கை என்ற இரு வகுப்பினராலும் தொழப்பட்டுக் கொண்டிருந்த கோவிலாகவே இருந்தது.
1786ம் வருடத்து ஆகஸ்டு மாதத்தில், ஒரு நாள் இடங்கை வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களது பணிகளில் வலங்கையினர் குறுக்கிடுவதாக முறையீடு செய்தனர். தவிரவும், அவர்கள் வகுப்பைச் சேர்ந்த குப்பு செட்டி எனபவரை வலங்கையினர், தாக்கினதாகவும் புகார் எழுந்தது. 'கொண்டைக்கட்டி வெள்ளாளர்களா'ல் மற்ற வலங்கையினர் துணையுடன், "சுமார் ஆயிரம் பறையர்களை ஏவி, பூசாரியின் தீவட்டி வராமல்" செய்தனர் தவிரவும் இடங்கையினரின் தலைவர்களில் ஒருவரான, குப்பு செட்டி என்ற சொக்கப்ப செட்டியின் சகோதரரை "இந்தப் பறையர்கள்" தாக்கினதாகவும் குறை கூறினர். வலங்கையைச் சேர்ந்தவர்கள் தான் கலகத்தை ஆரம்பித்ததாகவும் தெரிந்தது.
அந்தக் கலகம் அடக்க முடியாமல் போகவே, அது மதராசபட்டினத்திற்கும் பரவியது. சொக்கப்ப செட்டியின் தலைமையில் ஓர் இடங்கைக் கூட்டம், வலங்கையினரைத் தாக்கியது. அங்கே கலகத்தை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட சிப்பாய்களும் இடங்கையினரால் தாக்கப்பட்டனர். இது ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரத்தையூட்டியது. ஆதலால், அவர்களால் மிகவும் தீவிர முயற்சியெடுக்கப்பட்டு, அப்போதைக்குக் கலகம் நிறுத்தப்பட்டது.
ஆனால் இம்மாதிரியான சச்சரவுகள் மறுபடியும் வரத்தான் செய்தன! நாற்பது வருடங்களுக்குப் பின்னர், 1828-ல், மற்றொரு கலகம் உண்டாயிற்று. இதுவும் கோவிலைப் பற்றியது. இதே கோவிலின் குருக்கள் தர்மகர்த்தாவுக்கு எதிராகச் செயல் பட்டதாகப் புகார் எழுந்தது. அங்கிருந்த ஒரு விக்கிரகம் அந்தக் குருக்களால், வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டதாகவும் அதனால் நவராத்திரி விழா ஒத்திப்போட வேண்டியதாயிற்று எனவும் அவர் மீது குற்றம் சாற்றப்பட்டது. ஆங்கில அதிகாரம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட்டது. 1831 ல் தர்மகர்த்தாவுக்கும் மற்ற கோவில் பணியாளர்களுக்கும் இடையில் மோதல் உண்டாயிற்று. இத்தடவை இதற்குக் காரணம், கோவிலில் நடனமாடும் பெண்கள் தடுக்கப்பட்டது தான். அப்போது கலெக்டராக இருந்த சி. ஆர். காட்டன் சட்ட ரீதிகளுக்கிணங்க, தர்மகர்த்தா அதிகாரம் மதிக்கப்பட வேண்டியது என்பதை அறிவுறுத்தினார். ஆனால் அந்த தர்மகர்த்தா முதலில் சரியான முறையில் நியமிக்கப்பட்டாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.
அந்தக் குற்றச்சாட்டிற்கு ஒரு காரணம் இருந்தது. 1750 வருடங்களில் இந்த தர்மகர்த்தா அதிகாரம் வலங்கையினர் கையில் இருந்தது. ஆனால் அவர்கள் பணமுடையினால் கோவில் நிர்வாகம் சரி வரச் செய்ய இயலாது போனார்கள். அப்போது நிதி உதவி செய்து, கோவிலின் பணிகள் தொடர்ந்து நடக்க உதவி புரிந்தவர் இடங்கையைச் சேர்ந்த லிங்கி செட்டி ஆவார். அப்போதிருந்து இடங்கையினரே அந்தக் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்துள்ளனர். காட்டன் காலத்தில் இருந்த தர்மகர்த்தா அருணாசலச் செட்டி எனபவர் இந்த லிங்கி செட்டியின் மூன்றாவது தலைமுறையினராவார். ஆகையால் காட்டன் இவரைத் தான் தர்மகர்த்தாவாக இருக்க விரும்பினார். தவிரவும் காட்டன் சொற்படி, அருணாசல செட்டி தமது சொந்தச் செலவிலேயே கோவிலுக்குப் பல நற்பணிகள் புரிந்துள்ளதாகவும் அறியப்பட்டது. தொடர்ந்து ஆங்கில மேலாண்மை அவரது பரிந்துரையையே ஏற்றுக் கொண்டது.
மதராசபட்டினம் முன்னரே பார்த்தது போல, சில வருடங்கள் ஆங்கில அரசால், கடலூர் கோட்டை ஆளுமைக்குக் கீழ் தான் செயல் பட்டு வந்தது. திரும்பவும், 1752, பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று, கோட்டை தனிப்பட்ட ஆளுமையை அடைந்தது என்பதையும் கண்டோம். அப்போது ரிச்சர்ட் பிரின்ஸ் எனபவர் இரண்டாவது நிலையில் இருந்தார். அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளில் இடங்கை வலங்கை பூசல்களும் ஒன்றாகும். அந்தப் பிரச்சினை, பிரெஞ்சுக்காரர்கள் மதராசபட்டினத்தை விட்டுச் சென்ற பிறகு, வட பகுதியில் இருந்த நிலத்தைப் பற்றியது. 1725 ல் கட்டப்பட்ட (முத்தியால் பேட்டையில், அரண்மனைக்காரத் தெருவில்) கச்சாலீஸ்வரர் கோயில், நிர்வாகம், இவ்விரு பிரிவினருக்கும் இடையில் கருத்து வேற்றுமையை உண்டாக்கியிருந்தது. வலங்கையினர், துளசிங்கச் செட்டியின் தலைமையில், ஒரு கருத்தை வைத்தனர். அதன் படி பிரெஞ்சுக்காரர்கள், தரை மட்டமாக்கிவிட்ட அவ்விடம், முன்பே போல வீதிகளுடன் அமைக்கப்பட வேண்டும்; தவிரவும், இடங்கையினர் வலங்கையினர் இடத்தில் வரக்கூடாது என்பதாகும். அதே போல, கச்சாலீஸ்வர கோயில் தெருவில், முன்பே போல பிராமணர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு ஷரத்தாக இருந்தது. இந்த இடம் பிரெஞ்சுக்காரர்கள் ஆளுமையில் நாட்டியப் பெண்களுக்குத் தரப்பட்டிருந்தது. இடங்கையினர் வீரண்ணா மற்றும் சிலர் தலைமையில், தரை மட்டமாக்கப்பட்ட அந்த இடம், பொது இடமாக அறிவிக்கப்பட வேண்டுமென்றனர். அதற்கு அவர்கள் தந்த காரணம், அவர்களால், கோட்டைக்குச் செல்கையில், அது பொது இடமாக இருந்தால் தான் வலங்கையினர் இடங்களைத் தவிர்த்துச் செல்ல முடியும். கவுன்சில் இவற்றையெல்லாம், தீர விசாரித்து, பிட் காலத்து முடிவுகளையும் மனதில் கொண்டு, மோர்ஸ் எனபவரின் ஆலோசனையையும் ஏற்று, ஒரு குறிப்பு தயாரித்தது. (ஆவணம் மார்ச் 3, 1749/50 தேதியிடப்பட்டது).
"கோட்டையின் மத்தியப்பகுதி கதவு மூடப்பட்டு விட்டதால், இடங்கையினரால், வெள்ளை டவுனுக்கு வர வேண்டுமெனில், வலங்கையினரின் இடங்களைத் தாண்டாமல் வர இயலாது. அதை வலங்கையினர் அனுமதிப்பதில்லையாதலால் ஒரு வீதி கட்ட வேண்டியுள்ளது. இதற்காக 40 அடி அகலமான இடம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த இடம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இது சௌல்ட்ரி கேட்டிலிருந்து கடலை நோக்கி இருக்கும். அதனால், இடங்கையினர், பெருமாள் கோயிலிலிருந்து நேராக, வெள்ளை டவுனுக்கு வரலாம். அங்கே திரும்புமிடத்தில் வலது பக்கமாகத் திரும்பாமல் இடது பக்கமாகத் திரும்பினால் திருவல்லிக்கேணி கோயிலுக்குப் போகலாம். வலங்கையினரும், இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். "ஆனால் இரு பிரிவினருக்கும் சண்டை சச்சரவு வராமலிருக்க இந்தப் பொது வீதியில் ஒரு விதமான ஊர்வலங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது."
நாட்டியப் பெண்கள் கச்சாலீஸ்வரர் கோயில் வீதியில் குடியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஆங்கிலேயர் கூறினர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, எஸ்பிளனேட் வீதியும் இரு பிரிவினருக்கும் பொதுவானது என அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலைப் பற்றிய ஒரு குறிப்பு: 1728 நவம்பர் 4ஆம் தேதியினது உள்ளது. அதில் இந்தக் கோயிலில் வந்த சச்சரவை ஜேம்ஸ் மேக்ரே கோட்டையில் அப்போது தலைவராக இருந்தவர் சமாளித்ததாகக் கூறுகிறது
"இடங்கையினர் சமீபத்தில் கச்சாலீஸ்வரர் கோயில் என்ற ஒரு கோயில் கட்டியுள்ளனர். முத்தியால்பேட்டையில் உள்ள காலவாய்ச் செட்டிக்குச் சொந்தமான தோட்டத்தில் இது கட்டப்பட்டது. ஆனால் அதன் ஒரு பகுதி வலங்கையினருக்குச் சொந்தமான இடத்தில் ஊடுருவியதாகத் தெரிந்தது. ஆகையால் குழப்பம் ஏற்பட்டது. அக்குழப்பம் தீவிரமாவதற்கு முன்னரே மேக்ரே குறுக்கிட்டு, அமைதியை உண்டாக்கி, இடங்கையினருக்கு நுழைவாயில் தனியாக கட்ட ஏற்பாடு செய்தார். அதற்காக அவர் அமைத்த குழுவில், கோஜா பெட்ரஸ், கோஜா சர்க்கிஸ், பெத்தநாயக் மற்றும் சில முசல்மான்கள் இருந்தனர். இவர்களது தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டது" இந்த ஆவணத்திலிருந்து நமக்கு கச்சாலீஸ்வரர் கோயில் கட்டிய ஆண்டு தெளிவாகிறது.
கபாலீஸ்வரர் ஆலயத்திலும் இரு பிரிவினருக்கும் இடையில் ஒரு கலகம் எழுந்தது. காரணம் அங்கு எழுப்பப்பட்ட தோரணங்கள், பூப்பந்தல்கள் பற்றியது. 1789 ல் வலங்கையினர், தாங்கள் கோவில் விழாவிற்காக அலங்காரத்திற்கு எழுப்பியிருந்த தோரணங்களையும் பூப்பந்தல்களையும் இடங்கையினர் அழித்ததாகக் குற்றம் சாட்டினர். அப்போதிருந்த ஆங்கில அதிகாரியின் கட்டளைகளையுங்கூட இடங்கையினர் சட்டை செய்யவில்லை! ஆகையால் வலங்கைப் பிரிவைச் சேர்ந்த தோட்டக்காரர்கள், மற்றும் பல தொழிலாளிகள் வேலை செய்ய மறுத்ததினால் கம்பெனியின் வணிகத்திற்கு இடையூறு விளையும் என்று சாந்தோமிலிருந்த முத்துப்பிள்ளை ஆங்கிலேயர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் இடங்கையினர் விடுவதாக இல்லை. அவர்கள் குற்றச்சாட்டு இவ்வாறிருந்தது.
"1. இடங்கையினருக்கு ஐந்து வர்ணங்கள் பயன் படுத்தும் அதிகாரம் உள்ளது. வலங்கையினரோ வெள்ளை வர்ணம் மட்டும் தான் பயன் படுத்தலாம். இந்த நியதியைக் கடந்து வலங்கையினர் பல வர்ணங்களைப் பயன் படுத்தியுள்ளனர்.
2. இரண்டாவதாக, வலங்கையினரை, சாந்தோம் வணிகரான முத்துப் பிள்ளை ஆதரிப்பதற்குக் காரணம் அவரும் வலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் தான். தவிரவும் கோட்டையில் துபாஷிகளாக இருக்கும் அகமுடையார்களும் ஆதரிக்கின்றனர்.
3. இந்த விதமாக, ஒருவிதமான அதிகாரப் பூர்வமான ஆதரவும் எங்களுக்கு இல்லை. ஆகையால் ஆங்கிலேய மேலாண்மை இதைக் கவனிக்க வேண்டும்."
(எட்கர் தர்ஸ்ட்டன் அகராதிப் படி, அகமுடையார்கள் விவசாயிகள் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தம்மை வெள்ளாளர் எனக் கூறிக்கொண்டதாகவும் தெரிகிறது.)
இதற்கு ஒரு தீர்வு காணவேண்டி ஆங்கில மேலாண்மை அப்போதிருந்து இரு வகுப்பினருமே, கோட்டைக் கொடியின் சிவப்பு வெள்ளை வர்ணங்களை மட்டுமே தமது கொடிகளில் பயன் படுத்தலாம் என உத்தரவிட்டது. இம்மாதிரி உத்தரவுகள் ஏற்கனவே இருந்தன என்றாலும் அவைகள் மதிக்கப்படவில்லை!
அப்போது தாற்காலிகமாக அந்தக் கலகம் ஒடுக்கப்பட்டு சமாதானம் நிலவியது. ஆனால் அடுத்து, சாந்தோமில், 1789 நவம்பரில், ஒரு கோவில் திருவிழாவின் போது கொடிகள் பயன் படுத்தப்பட்ட விதத்தில் தகராறு உண்டாயிற்று. 1790, ஏப்ரல் 13ம் தேதியிட்ட ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் படி, "வலங்கை இடங்கையினரிடையில் சமீபத்தில் சாந்தோமில் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக இனி அம்மாதிரி சண்டைகள் வராதிருக்க வேண்டி, எந்தப் பிரிவும் தமது விழாக்களின் போது கொடிகள் பயன் படுத்தக்கூடாதென அறிவிக்கிறோம்" என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆணை எதிர் பார்த்த பலனை அளிக்கவில்லை. அதே வருடம் செப்டம்பர் மாதம் 5 ம் தேதியன்று, வலங்கையினர் வெள்ளைக்கொடியை ஏற்றியது மட்டுமின்றி, இடங்கையினர் தமதெனக் கொண்டாடிய வண்ணக் கொடிகளையும் வலங்கையினர் பயன் படுத்தினர்! உடனே ஆங்கில மேலாண்மை அவர்களது கொடியான செயிண்ட் ஜார்ஜ் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியும் எந்த விழாவின் போதும் கொடியேற்றப்படக் கூடாதென அறிவித்தனர். அதே போல கூட்டம் கூடுவதும் தடுக்கப்பட்டது. அப்போது தலைவராக தாற்காலிகப் பணி செய்து கொண்டிருந்த மார்கன் வில்லியம்ஸ், 17, 18 20 தேதிகளில் இவர்களிடையில் கூட்டம் போட்டுப் பேசி, சமாதானப்படுத்த முயன்றார். வலங்கையினர் தமது வீடுகள் சூறையாடப்பட்டது மட்டுமின்றி தமது மக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் குறை கூறினர். தவிரவும், இடங்கையினர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர்களுக்கு ஆங்கிலப் படையின் உதவி அளிக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனால் இடங்கையினரோ, வலங்கையினர் பல அட்டூழியங்கள் செய்ததாகக் குறை கூறினர்.
அப்போது கவர்னருக்குத் துபாஷியாக இருந்தவர் தெலசிங்கப் பிள்ளை (சில இடங்களில் இவரது பெயர் தெலசிங்கச் செட்டி என்றும் கூறப்படுகிறது. இது சற்றே முரண்பாடாக உள்ளது. ஏனெனில் செட்டி ஜாதி, இடங்கையைச் சேர்ந்தது பிள்ளையோ வலங்கையைச் சேர்ந்தவர்கள்) அவரது துணையுடன்தான், ஆங்கில மேலாண்மை, மேலே கூறிய "இனி எந்தப் பிரிவும் செயிண்ட் ஜார்ஜ் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியும் பறக்கலாகாது" என்று உத்திரவிட்டு, சமாதானத்திற்கு வழி செய்தது. ஆனால் இடங்கையினர், தமது பிரிவினரில் 89 பேர் சிறையில் இருப்பதாகவும் அவர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டுமெனவும் விண்ணப்பித்தனர். வலங்கையினர், கொலைக்காக நீதி வழங்கக் கோரினர். தம்பி செட்டி எனபவர் இடங்கையினருக்காக 20,000 பகோடாக்கள் செலுத்தி கையெழுத்துமிட்டார். அப்போது அவர்கள் செய்த முறையீடு இவ்வாறிருந்தது: "இதற்கு முன்பு கவர்னர் சாண்டர்ஸ் அப்போதிருந்த கோவில்கள் தமது பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ளலாமெனவும் அரசு உத்தரவின்றி புதுக் கோவில்கள் கட்டப்படக்கூடாதெனவும் எழுப்பியிருந்த உத்தரவை மீறி, வலங்கையினர் கிருஷ்ணஸ்வாமி கோவில் எழுப்பி, அங்கு விழாக் கொண்டாடுகையில் தான் இந்தக் கலவரம் வந்தது. மாறாக இடங்கையாயினர் வழிபடும் காளஹதீஸ்வரா கோவில், சுமார் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னரே எங்களது மூதாதையரால் கட்டப்பட்டது. அங்கு நாங்கள் எங்கள் விழாக்களைக் கொண்டாடுகிறோம்".
அதே நேரத்தில், வலங்கையினர் சார்பாக, பாலகிருஷ்ண செட்டி, எஸ். கிருஷ்ணசாமி செட்டி என்ற இருவரால் கையெழுத்திடப்பட்ட முறையீடும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அவர்கள் கவர்னர் பிட் காலத்திய வரையறுத்தல்களையும் எடுத்துரைத்திருந்தனர். தவிரவும் சமீபத்திய சண்டைகளில் அவர்கள் அடைந்த நஷ்டத்திற்கு ஈடும் கேட்டனர். இவற்றையெல்லாம் ஆராய்ந்து அரசு இவ்வாறு ஆணையிட்டது (21 செப்டம்பர் 1790).
"கருப்பு (ஜார்ஜ்) டவுனில் எழும் சச்சரவுகளுக்கெல்லாம் காரணம் கொடிகள் பற்றியது தான். முன்னரே நாங்கள் ஆணையிட்டது போல, கொடிகள் பறக்கவிடுவதைப்பற்றி ஆராய ஒரு கூட்டம் கூட்டப்படும். . ."
1795ல் மறுபடியும் வலங்கையினருக்கும் இடங்கையினருக்கும் இடையில் சச்சரவேற்பட்டது. ஆலங்காத பிள்ளை கட்டிய ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிர்வாகியான வைத்தியநாத பிள்ளை எனபவர், இந்த கோவில் இரு பிரிவினருக்கும் பொதுவானதெனவும், முன்னரே கண்டபடி கோயிலில் இரு வகுப்பினரும் தொழுது கொண்டிருந்தனர் என்றும் கூறினார். 100 வருடங்களாக திருவிழாக்களும் ஊர்வலங்களும் தொந்தரவின்றி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். 29 மார்ச் அன்று, இடங்கையினர் கூட்டமொன்று, அந்தக் கோவிலின் நாட்டியப் பெண்கள் மீது மஞ்சள் நீர் தூவ முயன்றது. அடுத்த நாளே அவர்கள் கத்தி கபடாக்களுடன் வந்து வருடாந்திர கோயில் திருவிழாவை நடக்கவொணாது தடுத்தனர். ஆனால் பெத்தநாயக்கன்பேட்டை, கடை வணிகர்களோ வலங்கையினர் தான் வந்து தாக்கியதாகப் பழி சுமத்தினர். அரசாங்கம், கேப்டன் அலெக்ஸாண்டர் ஆலன் எனபவரை அனுப்பி கலகத்தை அடக்க ஏற்பாடு செய்தது. அந்த மனிதர் சமாதான அறிக்கைகளைத் தெரிவிக்க அனுப்பிய தண்டோரா போடுபவர்கள் தாக்கப்பட்டார்கள்! 31 மார்ச் 1795 ல் எழுதப்பட்ட குறிப்பொன்றில், இவ்வாறு காணப்படுகிறது.
"இடங்கைப் பிரிவின் தலைவர்களான, தம்பு செட்டி, காவல்சேரி பொன்னப்ப செட்டி, சின்ன தம்பு நாயக், நல்ல மூத்த ஆசாரி மற்றும் சுங்க பட்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது நண்பர்கள், குழப்பம் உண்டாக்கினவர்கள், அவர்களது மனிதர்கள் இல்லையென்றும், அவர்கள் சாதாரணக் கலகக்காரர்கள் என்றும் கூறி அவர்களை விடுவித்தனர். அதற்குப்பிறகு சமாதானம் நிலவியது".
இடங்கை வலங்கை ஜாதிகளைப்பற்றி சி. எஸ். ஸ்ரீனிவாசாச்சாரி என்பவர் தீவிரமாக ஆராய்ந்து, ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அவர் கருத்துப்படி, "மதராசபட்டினத்து மக்கள் பல நூற்றாண்டுகளாகத் தமது முக்கிய இரண்டு ஜாதிப் பிரிவுகளைக் கொண்டிருந்தனர். மிகவும் சிறிய குழப்பம் போதும், அயர்லாந்தின் ஆரஞ்ச்மென், ரிப்பன்மென் அல்லது வெரோனாவின் மாணடேக்ஸ் காபுலெட்ஸ் மக்கள் போல சண்டைகள் உண்டாக்கிக் கொண்டனர். சாதாரணமாக, வலங்கையினர் எல்லா மேற்குடி மக்களாலும், ஆதி திராவிடர்களையும் கொண்டதாக இருந்தது. இடங்கையினரோ பாஞ்சாலர்கள் எனப்படும் ஐந்து வகைத் தொழிலாளர்களையும், சக்கிலியர்களையும், மற்றும் சில கீழ் ஜாதியினரையும் கொண்டதாக இருந்தது. பிராமணர்கள், சில வெள்ளாள ஜாதியினர் மற்றும் சில மேற்குடியினர் நடு நிலை வகித்தனர். வலங்கையினர், தமது திருமணச் சடங்குகளில், 12 கால்கள் கொண்ட மண்டபம் அமைப்பதற்கு உரிமை கொண்டவர்கள். இடங்கையினர் குதிரைச் சவாரி செய்யவோ ஹனுமான் கொடியைப் பறக்கவிடவோ உரிமையற்றவர்கள் என்று வலங்கையினர் நம்பினார்கள். ஆனால் இடங்கையினரோ தமக்கு இந்த உரிமை காளி மாதாவே வழங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.
டாக்டர் மெக்ளீன் குறிப்புப்படி அவர் காஞ்சீபுரத்திற்குச் சென்று பார்த்த போது கூட இந்த இரு பிரிவினருக்கும் தனித்தனி மண்டபங்கள் இருந்தனவாம். பிரச்சினை என்னவெனில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமயங்களில் சாதிகள் தங்களுக்குள் பிரிவுகளை மாற்றிக்கொண்டன! ஆகையால் சரியாக எந்த ஜாதி எந்தப் பிரிவைச் சார்ந்தது என்று கூறுவது சாத்தியமில்லாததாக இருந்தது.
எல்லா நூலாசிரியர்களும் இதே போலத்தான் அபிப்ராயப்படுகின்றனர். ஆகையால் சுலபமாக, எந்த ஜாதியினர் எந்தப் பிரிவைச் சேர்ந்திருந்தனர் என்பது, காலத்தையும் இடத்தையும் பொறுத்துத்தான் இருந்திருக்கிறது!
இந்தப் பிரிவுகளின் இடையில் எழுந்த சச்சரவுகளைக் குறித்து நோபொரு கராஷிமா தனது நூலில் மிக விவரமாக எழுதியுள்ளார். அந்த விவரம் தென்னகத்து எல்லா இடங்களையும் குறித்துச் சொல்லப்படுகிறது. ஆனால் அது மதராசபட்டினத்தில் வேறு விதமாகத் தான் உருவெடுத்தது. அதைத் தமது ஆளுமையால் தமக்குச் சாதகமாகவும் ஆங்கிலேயர்கள் கையாண்டார்கள் என்பது தெளிவு! இதைப் பிற்காலத்தினர் சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகத் தான் கண்டார்கள்.
------
No comments:
Post a Comment