Saturday, October 30, 2021

மெக்காலே மகாத்மாவா?


 — முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி


மெக்காலே.jpg

இந்தியாவின் தற்போதைய மதச் சார்புள்ள அரசாங்கம், சென்ற ஆண்டில் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கைத் திட்டம் நாடு முழுவதும் பெரிய விவாதங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. மதத்தைத் திணிக்கும் ஒரு கல்வி முறையாக இது பரவலான எதிர்ப்பைச் சந்தித்தாலும், அரசாங்கம் அதை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தப் புதிய கல்விக் கொள்கை தற்காலத்தில் எதிர்கொண்ட எதிர்ப்புகளை விடவும், பிரிட்டிஷ் ஆட்சியின்போது மெக்காலே கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தம், அது மதச்சார்பற்றது என்றாலும், அந்நாளில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.

இது குறித்துப் புதிய கோடாங்கியில் பல அறிஞர் பெருமக்களும் விளக்கம் அளித்திருந்தனர். "மொந்தை புதுசு கள்ளு பழசு" என்ற தலைப்பிட்ட (2020, செப்டம்பர்) கட்டுரையில், மெக்காலேயின் கல்வித் திட்டம் குறித்தும் அலசப்பட்டு இருந்தது. இக்கட்டுரையின் சில கருத்துக்களும், பகுதிகளும் இணைய தளங்களில் பதிந்த போது அவை பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்தன. 

மெக்காலேவின் கல்விச் சீர்திருத்தங்கள் சட்டமாக்கப் பட்டதை வைத்து, அவரை மகாத்மா அளவுக்குப் புகழ்ந்தவர்களும் உண்டு. அதேநேரம் அவர் இந்தியாவை மிகவும் இழிவாகக் கருதியவர் என்றும், இந்தியப் பண்பாட்டுக்கும், இந்தியப் பாரம்பரியக் கல்வி முறைக்கும் எதிரானவர் என்றும் அவரை எதிர்ப்பவர்கள் கட்டமைக்கும் கருத்துக்களின் உச்சமும் உண்டு. மெக்காலேவை எதிர்ப்பவர்கள், அவர் கூறியதாக, மிக முக்கியமான குற்றச்சாட்டின் ஒரு சான்றாகச் சுட்டிக்காட்டுவது இதுதான்.

“நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளேன். அங்கே ஒரு பிச்சைக்காரர் கூடக் கிடையாது. ஒரு திருடர் கிடையாது. மிக்க வளமான நாடு. உயர்ந்த ஆன்மீக மதிப்பீடுகள் கொண்ட நாடு. அதை வென்று அடிமைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு முதலில் அதன் இந்த வலிமையை உடைத்துத் தகர்த்தாக வேண்டும். அதனுடைய முதுகெலும்பாக உள்ள அதன் ஆன்மீக கலாச்சார மதிப்பீடுகளைத் தகர்க்க வேண்டும். அதற்கு நான் முன்வைக்கும் திட்டம் என்னவென்றால் அதன் பண்டைய கல்விமுறையை முதலில் தகர்க்க வேண்டும். அதனிடத்தில் ஆங்கிலக் கல்விமுறையை வைத்தால் தங்களுடைய கலாச்சாரம் முதலியவைதான் உயர்ந்தது என்கிற சுய பெருமிதத்தை அவர்கள் இழப்பார்கள்”

மேலுள்ள சொற்றொடரை மெக்காலே, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் 2.2.1935 அன்று பேசியதாக மெக்காலே எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

மெக்காலே இவ்வாறு கூறவில்லை என்று இதற்கு முன்பாகவே பல விளக்கங்கள் வெளியிடப்பட்டு விட்டன. ஆனாலும் மிகத் தந்திரமான ஃபோட்டோ ஷாப் தொழில்நுட்பத்துடன், அந்நாளில், அதாவது 1835 ஆம் ஆண்டு வெளியானதாக, மேற்கூறிய கருத்தை இணையதளத்தில் வெளியிட்டு, அதுதான் மெக்காலேவின் இந்தியாவைப் பற்றிய உண்மையான கருத்து என்ற புரளியைப் பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

தாமஸ் பாபிங்டன் மெக்காலே (1800 - 1859) இங்கிலாந்தின் கிராமமான லைசெஸ்டர்ஷயரில் 25.10.1800 அன்று பிறந்தவர். எளிமையான குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த மெக்காலே, சிறுவயதிலிருந்து மிகவும் புத்திக்கூர்மை உள்ள மாணவராகத் திகழ்ந்தார். அறிவுத் தரம் உயர்ந்தோரில் ஒருவராக அவர் 1926 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டுள்ள "300 அறிவாளிகள்" (The Early Traits of 300 Genius) என்ற நூலில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டார். ஐம்பத்து ஒன்பது ஆண்டுக் காலமே வாழ்ந்த அவர், இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம் தனது கல்வியின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவிகளை அடைந்தவர். அவரது மதிநுட்ப ஆலோசனைகளுக்காகப் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டின்கின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1834 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டு இந்தியாவுக்கு வந்து, பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரலின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மெக்காலே, அதன் பிறகு 1838 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து திரும்பினார். 

மெக்காலே இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் பேசியதாகக் குறிப்பிடப்பட்ட நாளில் (2.2.1835 அன்று) அவர் இங்கிலாந்தில் இல்லை. இந்தியாவில், கல்கத்தாவில் தான் இருந்தார். கல்கத்தாவில், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் ஆளுநர் மாளிகையில், இந்தியக் கல்வி முறை குறித்து, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் மற்றும் உயர்மட்டக் குழுவினர் முன்பு மெக்காலே நடத்திய விவாதங்கள் அவ் ஆணையத்தின் நடவடிக்கைக் குறிப்பில் உள்ளன. அவற்றில் 2.2.1835 ஆம் நாளில் இந்தியக் கல்வி முறை குறித்து மெக்காலே பேசியிருக்கிறார். அந்த உயர்மட்டக் குழுவில் மெக்காலே பேசாத ஒரு கருத்தை, அவர் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் பேசியதாக, அதுவும் இந்தியப் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்று பேசியதாக, மேற்குறிப்பிட்ட பேசாத பேச்சை வெளியிட்டுள்ளனர். சரி, கல்கத்தாவில் மெக்காலே என்னதான் பேசினார் என்பதைக் காணப் புகுமுன், அது தொடர்பான வரலாற்றுப் பின்னணியைக் காண்போம்.

மெக்காலே இந்தியா வருவதற்கு முன், இந்தியக் கல்விமுறை சமஸ்கிருதம் மற்றும் பாரசீகம் (அரேபியம்) ஆகிய இரு மொழிகளை மட்டுமே சார்ந்திருந்தது. இந்து மதத்தின் இரு பிறப்பாளர்கள் என்று கூறப்படும் பிராமண, பனியா, சத்திரியர், காயஸ்தர், காத்ரிஸ் என்னும் உயர் சாதியினருக்கு மட்டும் கல்வி சமஸ்கிருத மொழியிலும், பத்தன், அராபியர், மதம் மாறிய இருபிறப்பாளச் சாதியினருக்கு அரேபியக் கல்வியும் சாத்தியமாகி இருந்தது. உணவு உற்பத்தியில் கடும் உழைப்பாளிகளான சூத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும், மகளிருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. 1817 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிறித்துவ அமைப்புப் பள்ளி தான், முதன் முதலில் ஆங்கில மொழியில் கற்பித்தது. வில்லியம் கேரி (1761 - 1834) என்பவரால் கல்கத்தாவில், ராஜாராம் மோகன் ராயுடன் சேர்ந்து இந்தத் தனியார் ஆங்கிலப் பள்ளி தொடங்கப்பட்டது. அங்கும் இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. வில்லியம் கேரி இறந்த ஆண்டில்தான் (1834) மெக்காலே இந்தியா வந்தடைந்தார். மெக்காலேவின் முதல் திட்டமே இந்தியக் கல்வி முறையில் சமஸ்கிருதம், அரபிய மொழிகளை நீக்கி, ஆங்கில வழிக் கல்வி முறையைப் புகுத்துவது தான்.

அதற்கான காரணத்தைத்தான் கல்கத்தாவில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் 2.2.1835 அன்று மெக்காலே பேசினார். அப்போது இந்தியக் கல்வி முறையின் பயிற்று மொழி குறித்து அவர் கூறும் பொழுது, இந்தியக் கல்வி முறையின் பயிற்று மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். அவர் தனது உரையில், "இந்தியாவில் அதுவரையில் பழங்காலக் கல்வி முறைகள் சமஸ்கிருத மொழியிலும், அராபிய மொழியிலும் இருந்தன. இந்த இரண்டு முறைகளும் இந்தியாவின் வருங்கால இளைய தலைமுறையினர்க்கு ஏற்றதல்ல" என்று கூறினார். அதற்கான காரணத்தை, மெக்காலே இப்படிக் கூறுகிறார்.

"சமஸ்கிருத மொழி நூல்களிலிருந்து திரட்டி இருக்கக்கூடிய வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும், இங்கிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பள்ளியில் கொடுக்கப்படும் சுருக்கமான பாடங்களுக்கு முன்னால் மதிப்பற்றவை என்பது தனது மிகையற்ற நம்பிக்கை. மேலும், ஐரோப்பிய நாடுகளின் மதிப்புமிக்க இலக்கியங்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் அரபு, சமஸ்கிருத மொழியின் செய்யுள்கள் இல்லை. அப்படி இருக்கிறது என்று சொல்லக்கூடிய கீழை நாட்டு மொழிகளின் வல்லுநர் ஒருவரைக் கூட நான் சந்தித்ததில்லை" 

இதுதான் மெக்காலே 2.2.1835 அன்று கல்கத்தாவிலுள்ள கவர்னர் ஜெனரல் மாளிகையில் இந்தியக் கல்வி முறை குறித்துப் பேசிய குறிப்புகளில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள். இனி வருவதும் மெக்காலே பேசியவை தான்.

 "ஆடு மாடுகளைக் கொல்வது என்னும் காலாவதியாகிப் போன வேதக் கருத்துக்களை மொழிவதிலும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் தங்கள் இளமையைக் கழித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஆசை காட்டி இழுப்பது இந்திய அரசாங்கத்தின் வேலை அல்ல" (இதில் கழுதை என்னும் சொல்லுக்கு மெக்காலே ஆங்கிலத்தில் பயன் படுத்திய Ass என்னும் பதத்திற்கு வேறு பொருள்களும் உண்டு). 

"இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருங்கால இந்தியாவை உருவாக்க இந்திய மாணவர்களுக்குக் கணிதம், அறிவியல், நிலவியல் போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைக் கற்பிப்பதில் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்" என்று மெக்காலே உறுதியாகக் கூறினார். ஆங்கிலக் கல்வி முறையைச் சார்ந்திருப்பது தான் எதிர்கால இந்தியாவிற்கு நல்லது என்றும், சுதந்திரமான அரசியலும், அப்படிப்பட்ட பிரதிநிதித்துவம் உள்ள அரசாங்கத்தை வகுத்தல் என்ற ஒரு கருத்தியலை உருவாக்குவதும் தான் எதிர்கால இந்தியாவுக்குத் தேவை என்பதும், எதிர்கால இந்திய அரசியல்வாதிகள் சுதந்திர உணர்வின் மகத்துவத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் மெக்காலேவின் கருத்துக்களாக இருந்தன (Macaulay's Minutes on Education, 2.2.1835).

இதற்கு முன்பும், இங்கிலாந்துப் பாராளுமன்றத்திலும், மெக்காலேவின் குரல் இந்தியாவுக்கான உண்மையான விடியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. “இந்திய மக்கள், மோசமான நிர்வாகத்தில் நமக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பதைக் காட்டிலும், நம்மிடமிருந்து சுதந்திரம் பெற்று நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படுவதுதான் நமக்கு நல்லது” என்று 1832 ஜூலை 10ஆம் நாள் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் (இங்கிலாந்தில்) மெக்காலே கூறினார்.

1832 இல், தான் ஆற்றிய உரையில் மெக்காலே பின்வரும் கருத்துக்களையும் கூறினார்: “கடுமையான தண்டனைச் சட்டத்தைக் காட்டிலும் மென்மையான தண்டனைச் சட்ட அமைப்பு முறையில்தான் நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். பிராமணர்களுக்கு மென்மையான சட்ட விதிகளும், சூத்திரர்களுக்குக் கடுமையான சட்ட விதிகளும் இருப்பதுதான் தற்போதைய ஆட்சி அமைப்பு முறைகளில் மிக மோசமான ஒன்று. சாதி வேறுபாடுகளாலும் புரையோடிப் போயுள்ள பாரபட்சமான அணுகுமுறைகளாலும் இந்தியா ஏற்கெனவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று பிரிட்டிஷ் பேரரசு, இந்திய நிர்வாகத்தை ஏற்குமுன்பே, அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தின் போது பேசப்பட்டது என்ற உண்மை, மெக்காலேவின் எதிர்காலப் பார்வை எத்தனை சமத்துவமானது என்பதை நிரூபிக்கும். அதுமட்டுமல்ல, 1848-ஆம் ஆண்டில் 'கம்யூனிஸ்ட் அறிக்கை' வெளிவரும் முன்பே சமத்துவத்தை, அதுவும் சாதி ஒழிப்பின் சமத்துவ அரசியலைப் பற்றி மெக்காலே பேசினார் என்பதும் கவனிக்கத்தக்கது. இனவெறி நாட்டின் சிந்தனை, இதுவரையும் மேற்கத்தியர்கள் புரிந்துகொள்ள முடியாத சாதிவெறியைப் பற்றியும், அதை அழித்தொழிக்கும் வழியைப் பற்றியும் மெக்காலே வழி வெளிப்பட்டது என்பதும் கூட இந்தியாவைப் பொறுத்தவரைப் புதுமையானது தான். புத்தர், திருவள்ளுவர் ஆகியோருக்கு அடுத்துப் பேசப்பட்ட சமத்துவச் சிந்தனை மெக்காலேவுடையது என்பதையும் இந்தியச் சிந்தனையாளர்கள் முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்கு வந்த பின்னர் மெக்காலே மேலும் பேசினார்.

 “நாம் அவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பதற்காக இந்திய மக்களை அறியாமையிலேயே சிக்குண்டு வைத்திருக்கப் போகிறோமா? அல்லது விழிப்புணர்வுக்கான ஆவலைத் தூண்டிவிடாத அறிவைக் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது விழிப்புணர்வைத் தூண்டிவிட்டு அதற்கு உரிய வடிகால் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோமா? நமது அமைப்பு முறையின் வரம்புகளைக் கடந்து இந்திய மக்களின் மனம் விசாலமடையலாம்; அதாவது நிர்வாகத்தின் மூலம் நமது மக்கள் சிறந்த அரசை அமைத்துக் கொள்வதற்கான தகுதியைப் பெறுமளவுக்கு நமது சிறந்த அரசு நமது மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். அதற்கான கல்வி ஐரோப்பிய மொழி மூலம் வழங்கப்பட வேண்டும். அதனால், எதிர்காலத்தில் ஐரோப்பியக் கல்வி நிலையங்களுக்கான தேவை ஏற்படலாம். அப்படிப்பட்ட ஒருநாள் என்றாவது வருமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதைத் தடுப்பதிலோ, தாமதப்படுத்துவதிலோ நான் ஈடுபடவே மாட்டேன். ஆனால், அப்படி ஒருநாள் வந்தால், அதுதான் ஐரோப்பிய வரலாற்றின் பெருமைக்குரிய நாளாக இருக்கும்” என்று கூறியதன் மூலம், 1835 ஆம் ஆண்டிலேயே மெக்காலேவின் சமத்துவச் சிந்தனை, இந்தியச் சுதந்திர உணர்வுக்கு வித்திட்டதை எப்படி மறக்கவும், மறைக்கவும் முடியும்?

இந்திய மக்களுக்குக் கல்வி வழங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் கொடுக்குமாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் உத்தரவிட்டபோது, அதிகாரிகளிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. ஒரு தரப்பினர் அன்று நடைமுறையில் இருந்த அரேபிய மற்றும் சமஸ்கிருதக் கல்வியைத் தொடரும்படி வலியுறுத்தினர். மெக்காலேயின் தலைமையிலான மற்றொரு தரப்பினர், அறிவியல் களத்தில் விரைந்து முன்னேறுவதற்காக ஆங்கிலக் கல்விதான் தேவை என வலியுறுத்தினர். அரேபிய, சமஸ்கிருதக் கல்வியில் மோகம் கொண்டுள்ள தனது சக அதிகாரிகளைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக, அன்று அவர் பேசியது 15 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தின் நிலையைப் பரிகசிப்பதாக இருந்தது:
“15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுத்துகளுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காக மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை நினைவுபடுத்துகிறேன். அந்தக் காலகட்டத்தில், வாசிக்கத் தக்க கருத்துகள் அனைத்தும் தொன்மையான கிரேக்க மற்றும் ரோமன் மொழிகளில்தான் இருந்தன. நமது மூதாதையர்கள், துசைடிடஸ் (Thucydides), பிளாட்டோ, டெசிடஸ் ஆகியோரின் மொழிகளைப் புறக்கணித்திருந்தால், இன்றுள்ள நிலையை இங்கிலாந்து எட்டியிருக்குமா?” 

இந்திய மாணவர்களுக்குச் சுதந்திர உணர்வும், விடுதலை உணர்வும், சமத்துவம் நிறைந்த அரசியல் உணர்வும் ஊட்டக்கூடிய கல்வி முறை தேவை என்ற மெக்காலேவின் கருத்து, அவர் வெறும் கல்விப் புரட்சிக்கு மட்டுமல்ல, இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா என்று மெக்காலேவை மகாத்மாவாக முன்மொழியும் கூற்றுகளும் உண்டு. அதற்கு அணிகலனாக, மெக்காலேவின் எளிமையை விரும்பும் பண்பைச் சுட்டிக்காட்டுகிறார் கல்வியாளர் டி ஷியாம் பாபு. அரசாங்கத்தின் மகத்தான கவுரவ முத்திரையான (லார்ட்) பட்டத்தைத் துறந்தவர் என்றும், இந்தியத் தன்மையிலிருந்து (சாதி, சமத்துவமின்மை) மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட "இந்தியக் குற்றவியல் சட்டத்தினைத் (இந்தியன் பீனல் கோடு - Indian Penal Code)" தனது கடும் உழைப்பால் வடிவமைத்து நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் என்றும், இந்திய ஆட்சிப் பணி முதல் பல நிர்வாகப் பணி அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்தியப் பணிச் சேவை (இந்தியன் சிவில் சர்வீஸ் - Indian Civil Services) அமைப்பை வடிவமைத்தவர் மெக்காலே என்றும் ஷியாம் பாபு கூறுகிறார். இந்தியாவில் நவீனச் சட்டங்கள் அவதாரம் எடுக்கவும், நவீன இந்தியா உருவாக்கத்திற்கும் உயிர்நாடியானவர் மெக்காலே என்பது, இந்திய வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கரின் கருத்து. ('விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா மெக்காலே'; சந்திர பான் பிரசாத் கட்டுரை. தமிழில் ராஜலட்சுமி சிவலிங்கம் /minnambalam.com/  29.10.2017/ / livemint.com / indianexpress.com).

உயர்மட்டக் குழுவில் இருந்த சில ஆங்கிலேயர்கள், தங்கள் அனுபவங்களைக் கொண்டு, மெக்காலேவின் கல்விமுறை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேரும் என்று எச்சரித்த போதும், இந்தியாவின் கல்வி முறை இங்கிலாந்தின் கல்வி முறையையும், ஆங்கில மொழியைச் சார்ந்தும் இருப்பதை மெக்காலே உறுதிப்படுத்தினார். மெக்காலேவின் கல்வி முறையைச் சனாதனிகளும் கடுமையாக எதிர்த்தனர். அவற்றைப் புறந்தள்ளிய மெக்காலே, அன்றைய அரசாங்கத்தின் பலத்தால், தான் தயாரித்திருந்த சீர்திருத்தக் கல்வியைச் சட்டம் ஆக்கினார். இதற்காக மெக்காலே கல்விமுறைக் குழுவினரோடும், இந்தியச் சனாதனிகளோடும் பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. 

மெக்காலே, இந்து சனாதன வாதிகளுடன் மூன்று கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தில், இந்தியர்கள் அனைவருக்கும் (அனைத்துச் சாதியினர், மகளிர்) கல்வி கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதைச் சனாதன வாதிகள் முழுமையாக மறுத்தனர். கல்வி என்பது பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதி மக்களுக்கு மட்டுமே என்று அவர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். இந்த முதல் கட்டப் பேச்சு வார்த்தையே பலகட்டமாக நீடித்தது. பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டில் மெக்காலேயும், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் உறுதியாக இருந்ததால் சனாதன வாதிகளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. 

இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சினையில் கணிதத்தையும், அறிவியலையும் சேர்க்க வேண்டுமென்று மெக்காலே கூறியதற்குச் சனாதன வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேத, புராண, இதிகாசங்களைக் கற்பித்தால் போதும் என்பது அவர்களுடைய வாதம். இதுவும் பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்கு உள்ளானது. மெக்காலே, வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி ஓட்ட முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். அதை வைதீக பிராமணர்கள் இறுதி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை. இறுதியாக ஆங்கிலேயர்கள் தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைக் கொண்டு வந்து அறிவியல், கணிதம் சார்ந்த கல்வி முறையை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தினர். அதையும் எதிர்த்துப் பிராமணர்கள் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கும், அரசருக்கும் மனுக்களை அனுப்பினார்கள். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. 

மூன்றாவது கட்டமாகப் பயிற்று மொழி எந்த மொழியில் இருக்க வேண்டும் என்ற விவாதத்தில் மெக்காலே அரேபியம், சமஸ்கிருதத்தை விடுத்து ஆங்கில மொழியைத் தெரிவு செய்தார். ஆனால் வைதிகர்களின் தேர்வு சமஸ்கிருத மொழியும், அது உயர் வகுப்பினர்க்கு மட்டுமே கற்றுத் தர வேண்டும் என்பதாகவும் இருந்தது. அதற்கு ஒத்துக் கொள்ளாத மெக்காலே, பிரிட்டிஷ் பேரரசில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்திய நவீனக் கல்விமுறையை இந்தியர்கள் அனைவருக்கும் விரிவாக்கினார். 

இந்தியர்களின் கல்விக்காக மெக்காலே எவ்வளவு போராடியுள்ளார் என்பது அவரது அறிக்கை வழியாக வரலாற்றிலும் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாகவே வைதிகச் சமுகம் இன்றுவரையும் மெக்காலேயின் கல்வி முறையையும், அவரையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி படித்தவர்கள் மெக்காலேவின் குழந்தைகள் என்று கூடக் கேலியாக அழைக்கப்பட்டனர். இது மெக்காலேவிற்குக் குழந்தை இல்லாத நிலையைச் சுட்டிக் காட்டுவதாக நினைத்துச் சொல்லப் பட்டது தான். ஆனால் ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் குழந்தைகள் மட்டும் இல்லை. மகாத்மா காந்தி, பண்டிதர் நேரு, முகமதலி ஜின்னா, டாக்டர் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூடத் தங்களின் கல்வியை இங்கிலாந்தில் படித்தவர்கள்; இங்கிலாந்தின் சட்டம் படித்தவர்கள்; இங்கிலாந்தின் நீதிமன்றங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள். மகாத்மா ஜோதிராவ் புலேயின் ஆங்கிலக் கல்வி தான் அவரையும், அன்னை சாவித்திரி புலேவையும் கல்வித் தந்தை, தாயாக்கி மகா ஆத்மாக்கள் என்று போற்ற வைத்தது. பண்டிதர் அயோத்திதாசரும் அவரது முன்னோர்களும் ஆங்கிலக் கல்வி பெற்றிருந்ததையும், அப்படி இவர்கள் எல்லாம் பெற்ற கல்விச் சிந்தனைகளே, இந்தியச் சமுதாயத்தைச் சமத்துவத்தை நோக்கி மாற்றி அமைத்ததையும் நாடறியும். மெக்காலேவின் கல்வி முறையும், பயிற்சியும் தான் இந்தியாவுக்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு அடிப்படைத் தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தன.

மெக்காலே இந்தியத் தன்மை முழுவதையுமே இழிவாகக் கருதினார் என்றும், இந்தியாவிற்கு வரும் போது இந்தியாவைப் பற்றி ஒரு சார்பு எண்ணத்துடனும், இந்தியாவுக்கு அருள் புரிய வேண்டும் என்ற ஒரு தெய்வீகத் தன்மையுடனும் நினைத்துக் கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது. இதற்குக் காரணம், "இந்துக் கடவுள்கள் கோரமான உருவத்துடனும், பயங்கரம், அருவருப்பு நிறைந்ததாகவும் உள்ளன. அறியாமையும், பழிப்புக்கு இடமாகும் கணபதி போன்ற உருவங்களும் கடவுளாக இருக்கின்றன" என்று அவர் கருத்து தெரிவித்ததுதான். முப்பதடி உயரமுள்ள மன்னன், முப்பதாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறும் இந்திய வரலாறும், மனிதர்கள் காலிலும், தலையிலும் முளைத்த கதையும் யாருக்குத் தேவை? இந்த உலகம் பாற்கடலால் சூழப்பட்டது என்று கூறும் நிலவியலின் மொழி அமைப்பின் புனிதம் என்னவாக இருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் (English Education Act, 1835 - Macaulay's Minute upon Indian education, wikipedia.org).

இந்து மதம் குறித்தும், கடவுள்கள் குறித்தும், வேதங்கள் குறித்தும் மகாத்மா ஜோதிராவ் புலே, அயோத்திதாசப் பண்டிதர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் இவர்களெல்லாம் என்ன கூறினார்களோ, இதே கருத்தைத் தான் இவர்களுக்கு முன்பாகவே மெக்காலே கூறினார். அது மட்டுமல்லாமல் இந்தியக் கல்விமுறையில், மேற்கூறிய இந்தியத் தலைவர்கள் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்ததைத் தான், அதற்கு முன்பே மெக்காலே உறுதிப்படுத்தி, அதைச் சட்டமாகவும் ஆக்கினார். இவை எல்லாம் தாமஸ் பின்னி என்பவர் தொகுத்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வழி பல பாகங்களாக வெளியிடப்பட்ட "மெக்காலேவின் கடிதங்கள்" நூலில் இடம் பெற்றுள்ளவை (online publication May 2010/cambridge.org).

மெக்காலே செய்தது உண்மையில் ஒரு கல்விப் புரட்சி தான். இப்படிப்பட்ட ஒரு புரட்சியைக் கொண்டு வந்தவரைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் (இந்திய விடுதலை உட்பட) குறித்தும் ஏதும் சொல்லாமல், தங்கள் மதத்தையும், கடவுளையும் அவர் இழிவுபடுத்தினார் என்ற இந்துத்துவப் பார்வையை மட்டுமே கொண்டு, மெக்காலே மேல் சேற்றை வாரி இறைத்தது தான் அப்படிச் செய்தவர்கள் ஏற்படுத்திய விளைவுகள். மெக்காலே சொல்லாததை எல்லாம் அவர் கூறியதாக அவர்களால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவையெல்லாம் இந்துத்துவக் கருத்தியல் அடிப்படையில் தொகுக்கப்பட்டு, அவை "விடியல் கதிர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து, பின்வந்த நாட்களில் இந்தியப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன (The Awakening Ray, vol.4 - No.5, Published by Gnostic Centre/'Niti', Indian Magazine in 2002). இணையதளங்களில் புகுந்து விளையாடும் இணையதள வாதிகளால் (நெட்டிசன்கள்) இவை இன்னும் பரவலாக்கப்பட்டன. 

இவற்றின் விளைவால் "மெக்காலே வின் கல்விப் புரட்சி என்பது இந்தியாவின் பண்பாட்டைக் கேவலப்படுத்திய செயல் என்றும், இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த இந்திய மரபுவழிக் கல்விமுறையை நொறுக்கியது தான் மெக்காலேவின் சாதனை என்றும்" கூறும் அளவுக்கு மெக்காலே எதிர்ப்பு வாதம் சென்றது. இதைப் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான எல். கே. அத்வானியும் படித்து விட்டு மெக்காலேவைப் பற்றிக் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமும் இதே கருத்திலேயே, தொலைக்காட்சி கருத்து விவாதங்களிலும் பேசி இருக்கிறார். இதற்கான அடிப்படை என்பது மெக்காலே இந்து மதம், வேதம், கடவுள்கள் குறித்துக் கருத்து தெரிவித்தது தான். ஆனால் இதன் மறுபக்கம் வேறு விதமாக உள்ளதை, "மெக்காலேவின் இகழ்ச்சியான பேச்சு ஒருபோதும் நிகழவில்லை" என்ற தி வயர் இணையத்தின் ஆய்வுக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது (19 2.2017 இல் பதிப்பிக்கப்பட்டது. thewire.in).


இந்தியச் சனாதனப் பாதுகாவலர்கள் தான் முதன்முதலில் ஆங்கிலக் கல்வியைப் பயின்றனர். அதற்கு முன்பு அரேபிய மொழியையும் அவர்கள் பயின்றனர். ஆட்சியாளர்களின் தாள் பணிவதும், பிறரைத் தன் தாள் பணிய வைப்பதுமே அவர்களின் இலக்காக இருந்தது. சமஸ்கிருதமோ, அரேபியமோ, ஆங்கிலமோ அதுவரை உயர் சாதியினருக்கு மட்டுமே இருந்து வந்த கல்வியை, 1834 ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும், அதாவது அனைத்துச் சாதியினருக்கும், மகளிர்க்கும் என்று மடை திறந்த வெள்ளமெனக் கல்வியைப் பாய்ச்சியதாலேயே, மெக்காலே இந்தியச் சனாதனிகளுக்கு வேண்டாதவர் ஆகிவிட்டார். மெக்காலேவால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்வியைப் பயின்று, பின்னர் அவரையே திட்டித்தீர்த்த சனாதனிகள் போல், கல்வி மறுக்கப்பட்டவர்களும் சேதியறியாது மெக்காலே மேல் கடும் விமர்சனம் வைக்கின்றனர். ஆங்கிலக் கல்விப் பாகுபாடு சாதிகளுக்குள் மறைவாக நிலவ, கிராமம் - நகரக் கல்வியில் அது வெளிப்படையாக நிலவுகிறது. ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் அதிகார மையம், உயர் வணிகம், உலக மயமாக்கல் என்று பவனி வரும்போது, மாநில மொழி கற்றவர்கள் பின்தங்கும் நிலை இன்றும் உள்ளது. இப்படிப் பின் தங்கியவர்களும் தங்கள் நிலைக்குக் காரணமாக்குவது மெக்காலேவைத்தான். இருமொழிக் கொள்கையை அறிஞர் அண்ணா காலத்திலிருந்து (1968) நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கல்வியை ஏற்று, ஆங்கிலத்தை மூன்றாம் நிலைக்குக் கொண்டு சென்று, இந்தியர்களை மெக்காலே காலத்திற்கு முன் இருந்த நிலைக்குக் கொண்டு செல்வதையா "இந்தியா ஒளிர்கிறது" என்று சொல்ல முடியும்? அறிவுப் பாதையைத் தடுத்து நிறுத்துவதே சனாதனமும், இந்துத்துவமும் என்ற சிந்தனை எப்போது ஒளிரத் தொடங்கும்?

அனைவருக்கும் கல்வி என்ற நிலையைக் கொண்டு வந்த மெக்காலே, சட்டத்தின் முன் அனைவரையும் சமம் ஆக்கினார். இந்தியாவில் வர்ணமும், சாதியும், வந்தேறி நாட்டாண்மையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கோலோச்சி வந்த இருண்ட காலத்தை, இந்தியக் குற்றவியல் சட்டம் மூலமாக (ஐபிசி) 1835 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி மனு தர்மம் என்னும் அதர்மத்தைச் சட்டத்தின்முன் செல்லாக்காசு ஆக்கினார் மெக்காலே. பூர்வகுடி மக்கள் கல்வி கற்று, நிர்வாகத்தில் பங்கேற்பதற்காக "இந்திய சிவில் சர்வீஸ்" என்னும் அமைப்பை உருவாக்கினார் மெக்காலே. இந்தியாவில் சாதியினால் ஒடுக்கப்பட்டுப், பழிவாங்கப்பட்ட மக்கள், கல்வி கற்று, உயர் நிலைப் பதவிகளை அடையவும், அரசாங்கத்தில் இடம்பெற்றுத் தங்களைத் தாங்களே நிர்வகிக்கவும், நிர்ணயிக்கவும் வேண்டும் என்ற மெக்காலேவின் விருப்பத்தைக் கல்வி மறுக்கப்பட்ட பல்லாயிரம் பேர் நிறைவேற்றினர். 

மெக்காலேவின் எதிர்பார்ப்புக்குச் சரியான இந்தியக் கல்வியாளர் ஒருவரைக் கூற வேண்டுமானால், உச்சமாக அண்ணல் அம்பேத்கரைத் தான் கூறமுடியும். அம்பேத்கரின் ஆங்கிலக் கல்வியும், வெளிநாட்டுக் கல்வியும் அவரைச் சமத்துவத்தின் உயரத்தில் ஏற்றி வைத்தன. புத்தரிடம் இருந்து பெற்ற சமத்துவப் பார்வையை அனைவருக்கும் விரிக்க அம்பேத்கருக்குப் பெருந்துணையாக இருந்தது அவர் கற்ற கல்வியே. அதுவே அவரை ஒரு நாட்டுக்கான அரசியலமைப்பை உருவாக்க வைத்தது. எங்கிருந்தோ வந்து சமத்துவத்தைச் சட்டப்பூர்வமாக்கிய மெக்காலேவின் எண்ணச் சிதறல்கள் அதில் குவிந்து கிடந்தன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பக்கங்களில் மெக்காலே, அம்பேத்கர் முகங்களைச் சமத்துவ வாதிகள் காணமுடியும். 

மேற்கத்தியக் கல்வி முறையும், அதன் கல்வி நிறுவன அமைப்புகளும் இந்தியாவை உலகத்தோடு கைகோர்க்க வைக்கும் என்ற மெக்காலேவின் சிந்தனை, அம்பேத்கரிடம் இருந்ததை அரசியலமைப்பின் பக்கங்களைப் புரட்டினால் அறியமுடியும். இருவருக்கும் இடையில் கருத்தியல் ரீதியான ஒற்றுமையுடன், வெளிப்படையான ஒற்றுமையையும், இருவரின் மேற்கத்திய பாவனைகளில் காணமுடியும். எப்போதும் நூல்களைக் கையோடு வைத்திருக்கும் பிம்பங்களாக அடையாளப் படுத்தப் படும் புகழ்பெற்ற இருவரில், மெக்காலேவையும், அண்ணல் அம்பேத்கரையும் தான் உலகம் சிறப்புடன் அடையாளம் காட்டும். வர்ணம், சாதியினால் சனாதன பூமியாக்கப்பட்ட இந்தியாவை, சமத்துவப் பூமியாகக் கட்டமைத்த அந்த இருவருமே இந்தியாவிற்கு வழிகாட்டிகள். இருவருமே இந்தியாவின் மகாத்மாக்கள்.

-----------------










No comments:

Post a Comment