Tuesday, October 26, 2021

“இந்திரனே சாலுங் கரி”


- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி



     மேற்குறிப்பிட்ட தலைப்புக்கு ‘இந்திரனே தக்க சான்று’ என்று பொருள் கொள்கின்றனர் உரையாசிரியர்கள். அப்படியானால், ‘இந்திரன்’ என்பவன் யார்? என்று கேள்வி எழுகிறது. வேதத்தில் சொல்லப்பட்டு, வைதீக வழி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவனாகச் சுட்டப்படும் இந்திரனைத்தான் வள்ளுவர் கூறுவதாகப் பொருள் கொள்கின்றனர். அதைத்தான் ‘அகல் விசும்புளார் கோமான்’ (அகன்ற வான் உலகத்தார்க்குத் தலைவன்) என்று குறிப்பிட்டுள்ளதாக வேதகால இந்திரனை நிறுவச் சான்றாகக் கொள்கின்றனர். எப்படிப்பட்ட இந்திரனாக, வேதகால இந்திரனை நிறுவ முற்படுகிறார்கள் என்றறிய வள்ளுவரின் அந்தக் குறளைக் காண்போம்.
          “ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
          இந்திரனே சாலுங் கரி” (குறள் - 325)

(இதன் பொருள்: ஐம்பொறிகளையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) அடக்கினவனது வல்லமைக்கு, அகன்ற வானுலகத்தார்க்குத் தலைவனான இந்திரனே தக்க சான்றாகும் – புலவர் குழந்தை உரை).

     திருக்குறளில் பாயிரமாகக் கொள்ளப்படும் முதல் நான்கு அதிகாரங்களுள், மூன்றாவதில் நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் ஐந்தாவது பாடலாக இக்குறள் இடம் பெற்றுள்ளது. இதில் சான்றாகக் கொள்ளப்படும் இந்திரன் யாரென்றால் அவன் வேதகால இந்திரன் என்றும், அவனே ஐம்பொறிகளை அடக்கினவன் என்றும் பெரும்பாலானோர் கருத்துரைக்கின்றனர்.

     வேதத்தின் வழியும், புராண இதிகாசங்களின் படியும் இந்திரன் இந்தியா முழுமையும், தமிழ் மக்களுக்கும் சேர்த்து நன்கு அறிமுகமானவன் தான். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கிய ஒருவனுக்கு இந்திரனே சான்றாவான் என்றால் அனைவருமே நகைப்பை அடக்க நீண்ட நேரமாகும். ஒரு புலனைக் கூட அடக்காத ஒருவனை ஐந்து புலன்களையும் அடக்கிய ஒருவனுக்குச் சான்றாகச் சொல்ல முடியுமா? அதையும் வள்ளுவரே சொல்லுகிறார் என்றால் அவர் எப்படிப் பொய்யில் புலவர் ஆவார்?

     வேதகால இந்திரனைப் பற்றிப் புராணங்களும், வேதங்களும் என்ன கூறுகிறதென்றால் அவன் சுராபானம் அருந்துபவன்,  தன் இந்திர தேசத்தில் அரம்பை, ஊர்வசி, இரதி போன்ற பேரழகிகளை ஆசைநாயகிகளாக மட்டுமல்ல, அவர்களை முனிவர்களின் தவத்தைக் கலைக்க ஏவிவிட்டுக் காரியம் சாதிப்பவன் என்றும் கூறுகின்றன. மேலும் பிற அழகிய  பெண்கள், அவர்கள் வேறு உலகத்தில் இருந்தாலும் கூட அவர்களைத் தன் பதவி அதிகாரத்தால் அல்லது தந்திர வித்தையால் எப்படியும் அடைபவன் என்றும் கூறுகின்றன. இன்றைய இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி பல்வேறு சட்டப்பிரிவுகளில் தண்டனை பெறும் அளவிற்கு அத்துணைக் காரியங்களையும் வேதகால இந்திரன் செய்துள்ளதாகவும் இந்தியாவின் பன்மொழிப் புராணங்களும் பெருமை பொங்கக் கூறுகின்றன.

     அவற்றுள் ஒன்றுதான் கௌதம முனிவரின் மனைவி அகல்யா என்னும் பேரழகியை இந்திரன் சுகித்த கதை. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்டவளே அகல்யா (தமிழில் அகலிகை). இவள் அழகு கண்டு பிரம்மனே பிரமித்து நிற்க, இந்திரனும், கௌதம முனிவரும் அவளை அடையத் தயாராகினர். இதனால் பிரம்மன் ஒரு போட்டியை வைக்க, அதில் வென்ற கௌதமர் அகலிகையை மணந்தார். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் கௌதமரின் ஆசிரமத்திற்கு நடுநிசியில் சென்ற இந்திரன், சேவலாக மாறிக் கூவவும், விடிந்துவிட்டது என்று நினைத்து கௌதமர் ஆற்றுக்குச் செல்ல, முனிவரின் உருவமாக மாறிய இந்திரன் அகலிகையை அடைந்தான். திரும்பிவந்த கௌதமர் இருவரையும் கண்டுச் சாபமிட அகலிகை கல்லானாள். இந்திரன் உடம்பெல்லாம் அவன் கொண்ட காமத்தின் அடையாளமாகப்  பெண்குறிகளாக மாறின. இந்திரன் சாப விமோசனம் வேண்ட, பிறர் கண்களுக்கு அவை கண்களாகவே தெரியும் என்று கௌதமர் கூற, இந்திரன் ஆயிரங்கண்ணுடையான் என்ற பெயர் பெற்றான்.

     இதேபோல இந்திரப் பட்டம் எய்திய நகுடனைப் பாம்பாக மாற்றிய அகத்தியரின் செய்கையையும், சியவனர் என்ற முனிவரோடு பகைகொண்டு இறுதியில் அசுவினி தேவதைகளுக்காக இரங்கித் தோற்றதையும், சம்வர்த்தனின் யாகத்தை எதிர்த்த இந்திரன் பின் அவரின் தவ வலிமைக்கு அடங்கிப் போனதையும், அகத்தியரின் பன்னிரண்டு ஆண்டு வேள்வியை எதிர்த்துப் பின், தலைமைப் பதவியைக் காக்க, அவரிடமே இந்திரன் சரணடைந்த கதையையும் மகாபாரதம் கூறுகிறது. 

     அதாவது, வேதங்களிலும், புராண, இதிகாசங்களிலும், உபநிடதங்களிலும் குறிப்பிடப்படும் வேதகால இந்திரன் ஐம்பொறிகளில் ஒன்றின் ஆசையைக் கூட அடக்காதவனாகவே அறியப்படுகிறான். இப்படிப்பட்ட இந்திரனை ஐம்பொறிகளையும் அடக்கியவனாக அடைமொழியுடன் கூற யாருக்குத் துணியும்? ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதிய பெரும்பாலான தமிழ்ப் புலவர்கள் அப்படித்தான் எழுதியுள்ளனர். ஆனால் வைதிகத்திற்கு ஆதரவாக நின்று, முழுமையான அறங்கூறும் திருக்குறளை முழுக்க முழுக்க வைதீகப் போர்வை போர்த்தி உரையெழுதிய பரிமேலழகர், இக்குறளில் உண்மையை ஒளிக்காமல் குறிப்பெழுதியுள்ளார். ஐம்புலன் அவியாது சாபம் பெற்றுக் கொண்டு, ஐம்புலன் அவித்தவனின் ஆற்றலை உணர்த்தியவன் இந்திரன் என்று கூறுகிறார். இங்கு, ஐம்புலன் அவித்தவனாக அவர் குறிப்பிடுவது கௌதம முனிவரைத்தான். ஆனால் அவரும் புலன்களை அடக்கியவர் அல்லர் என்பது அவர் அகலிகையை விரும்பி மனைவியாக ஏற்றார் என்பதில் இருந்தே விளங்கும்.

     ஆனாலும் அவரை ஐந்தவித்தானாகக் கொள்ளலாம் என்றும், கௌதம முனிவரைப் போன்ற வானப்பிரஸ்தர்கள், மனைவியோடு ஓய்வுக்காலத்தில் கூடுவது காமத்திற்காக இல்லை என்றும் மகாபாரதத்தை (அனுசாசனபர்வம் - துணைப்பிரிவு) மேற்கோள் காட்டித் தமிழ் லெக்சிகன் தொகுத்தவர்களில் ஒருவரான பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் (திருக்குறள் - அறத்துப்பால் - பாலருரை, 1939) தன் உரையில் கூறுகிறார். இப்படி எதனையாவது மேற்கோள் காட்டி ஆரிய தர்மத்தை உயர்த்திப் பிடிப்பதையே தொழிலாகக் கொண்டு ஆரிய பிராமணர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர். நிறைய தமிழ்ப் புலவர்களும் அதை வழிமொழிந்து எழுதியுள்ளனர்.

     ஆனால் பரிமேலழகருக்கும் முன்னதாக எழுதப்பட்ட பழைய உரைகளில் வைதிகம் உயர்த்திப் பிடிக்கப்படவில்லை. ஆனாலும் எதிர்ப்பு வன்மையாக இல்லை. வேறு ஒருவர் தவம் செய்தால் தன்னை மிஞ்சிவிடக் கூடும் என்று இந்திரன் அஞ்சினான் என்பதையே திருவள்ளுவர் இந்திரனைச் சான்றாகக் கூறியதன் விளக்கமாக மணக் குடவர் உரைக்கிறார். அப்படித் தவம் செய்பவரைத் திலோத்தமை போன்றோரை அனுப்பித் தவம் அழித்தவன் இந்திரன் என்பதால் அவனைச் சான்றாகக் கூறினார் என்று காலிங்கர் உரை கூறுகிறது. பதினான்காம் நூற்றாண்டின் முன் வரை திருக்குறளுக்குத்  தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பருதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய பத்துப் புலவர்கள் உரை எழுதியுள்ளனர். இவை பழைய உரைகள் எனப்படுகின்றன. இவற்றுள் மணக்குடவர், பருதி, பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் எழுதிய உரைகளே அச்சில் வெளிவந்துள்ளன. (உ.வே.சா. தன்னுடைய பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தேடுதலில், பதினெட்டு உரைகளைக் கண்டதாகக் கூறுகிறார். மீதிப் பதின்மூன்று உரைகள் என்னவாயின என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் அவர் பழிசுமத்துவது வரகுண பாண்டியன் மீது).



     1812-ஆம் ஆண்டில் எல்லீஸ் வெளியிட்ட திருக்குறள் நூலில் இந்திரனைப் பற்றிய கதையை அவர் வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் இருந்து எடுத்து மேற்கோள் காட்டுகிறார். அக்கதை கம்பராமாயணத்து பாலகாண்டத்தின் அகலிகைப் படலத்தில் சிறிது மாற்றம் பெறுவதையும் (ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாக என்பது சாபம்) எல்லீஸ் சுட்டிக்காட்டுகிறார். இன்னும் இக்குறளுக்குத்  தத்துவ போதசுவாமி, கவிராய பண்டிதர் கருத்துகளையெல்லாம் மேற்கோள் காட்டியபின்னர், சமணர்களின் பார்வை இதிலிருந்து வேறுபட்டதாகக் கூறுகிறார் எல்லீஸ். நீத்தார் என்றும், துறவோர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவது கௌதம முனியைப்போல் மனைவியோடு இல்லறம் நடத்துபவரை அல்ல என்பது சமணர் கருத்து. மேலும், அப்படியே கதைக்காக இருந்தாலும் கூட சாபங்கள் எதையும் அவர்கள் அளிக்க மாட்டார்கள். அதுவும் இதுபோன்று வக்கிரமான சாபங்களை நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.  இப்படியான ஒரு சாபக்கதையை கூறி ஐந்தவித்தவனுக்குச் சான்றாக வள்ளுவர் கூறியிருக்க வாய்ப்பேயில்லை என்ற சமணர்களின் கருத்தையும் பதிவு செய்கிறார் எல்லீஸ்.
 
     திருவள்ளுவர் குறிப்பிட்ட இந்திரனை, வேதகால இந்திரனாகப் பெரும்பான்மை உரையாசிரியர்கள் கூறுவதால், தொன்மங்கள் எல்லாம் வரலாறாக மாறிவிட்டன. இந்திரன் தமிழ் நிலத்துத் தெய்வம் என்றும், புகார் நகரில் கொண்டாடப்பட்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே அதற்குச் சான்று என்றும் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.  ஆனால் இந்திரன் என்பது தமிழ்ச் சொல் அல்ல, தமிழில் வேந்தன் என்பதைக் குறிக்க வடமொழியில் (பாலி) உருவாக்கப்பட்ட சொல். வேந்தன் மருதநிலத் தமிழ்த் தெய்வம். “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்கிறார் தொல்காப்பியர் (தொல்.951). ஆகவே திருவள்ளுவர் குறிப்பிட்ட இந்திரன், வேதகால இந்திரன் அல்ல. அது வேறொருவர். திருவள்ளுவர் வேறொருவரை அல்லது வேறொரு கதையை மனதில் கொண்டு, இந்திரன் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று தேவநேயப் பாவாணர் தன் திருக்குறள் மரபுரையில் குறிப்பிடுகிறார்.

     அப்படி யாராவது ‘இந்திரன்’ என்ற பெயருக்குப் புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார்களா என்றொரு வினா இதுவரை தேடலாகவே இருந்துவந்தது. அந்த வினாவிற்கு விடை அளித்தவர் ஒரே ஒரு புலவர்தான். அவர்தான் பண்டிதர் அயோத்திதாசர்.

     இந்திரன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயர் என்கிறார் அயோத்திதாசர்.  அவர் மேலும் கூறுவதாவது. புத்தரின் ஆயிரம் பெயர்களில் (சகஸ்திர நாமம்) இந்திரனும் ஒன்று. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் ஆசையை அடக்கியவர்களையே ஐந்திரன் என்று குறிப்பிடுவர். வடமொழி அட்சர பேதத்தால் ஐ, இ ஆகத் திரிந்து, ஐந்திரன் என்பது இந்திரன் என வழங்கியது. இத்தேசமெங்கும் புத்தரையே இந்திரனெனப் பூசித்து அரசமரத்தடியிலும், அறப்பள்ளிகளிலும் இந்திர விழா கொண்டாடப்பட்டது. இந்திரனைக் கொண்டாடியவர்கள் இந்தியர். கொண்டாடுந் தேசம் இந்திய தேசம். இந்திரியத்தை வென்றான் என்ற பொருளில் ‘இந்தியத்தை வென்றான்’ என்று அருங்கலைச் செப்பு கூறுகிறது. ‘இந்தியக் குஞ்சரத்தை ஞானப் பெருங்கயிற்றினால் பூட்டியவர்’ என்று அறநெறிச் சாரம் கூறுகிறது. “இந்திரன் எனப்படும் இறைவன் நம் இறைவன்’ என்று மணிமேகலை கூறுகிறது. அனைத்து ஆசைகளையும், குறிப்பாகப் பெண்ணாசையை முற்றும் துறந்தவர்களே இந்திரர்களாக அறியப்படுவர் என்று சீவக சிந்தாமணியும் கூறுகிறது. ஆகவே இந்திரன் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கௌதம புத்தரையே. அவரே ஐந்தவித்தவனின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டானவர் என்று பண்டிதர் கூறுவதை ஏற்றால் காவிப் பிரச்சனை தீரும். இங்கு இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. காவி நிறம் வைதிகத்தின் அடையாளம் அல்ல. அது புத்தர் உடுத்திய ஆடை நிறம். சமண, பௌத்தத்தின் கருத்துக்கள் தொடங்கி அனைத்தையும் கபளீகரம் செய்துகொண்ட வைதிகம் இன்று காவி வண்ணத்தில் புகுந்திருக்கலாம். ஆனால், அதற்குரியவர் புத்தர் என்ற முறையில் திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் அணிவிப்பது, அயோத்திதாசர் கூறுவதுபோல் திருவள்ளுவர் புத்த சமயத்தினர் என்று ஏற்றுக்கொள்வ தாகத்தான் பொருள். 


துணை நின்ற நூல்கள்:
1.  G.U. Pope, Thirukkural, 2018, சாரதா பதிப்பகம், சென்னை.
2.  க. அயோத்திதாசப் பண்டிதர், திரிக்குறள்., 2015, மெத்தா பதிப்பகம், சென்னை.
3.  ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, 2000, இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை.
4.  புலவர் குழந்தை, திருக்குறள், 2007, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
5.  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, திருக்குறள்–அறத்துப்பால், 1939, திருச்சி.
6.  திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், 1967, கழகம், சென்னை.
7.  ப.மருதநாயகம், எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி, 2009, சீதைப் பதிப்பகம், சென்னை.
8.  திருக்குறள் பன்முக வாசிப்பு, 2009, மாற்று, சென்னை.
9.  மருதமுத்து, திருக்குறள் – தமிழ்த் தேசிய அரசியல் நூல், 2013, போர்க்கொடி பதிப்பகம், சென்னை.
10. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம். 


முனைவர் சிவ. இளங்கோ,
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.
பேசி: 99940 78907.
Mail ID:   ilangosiva57@gmail.com


-------

No comments:

Post a Comment