Friday, March 2, 2018

தமிழக அரசிற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை முன்வைத்த பரிந்துரைகள்



——   முனைவர்.க.சுபாஷிணி


இன்றைய காலகட்டத்தில் தமிழர், தமிழகம், தமிழ் மொழி, மற்றும் வரலாறு தொடர்பான முயற்சிகள் சீரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய சூழல் இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசிற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை உடனடியாக செய்யப்பட வேண்டியனவாக நாம் கருதும் பரிந்துரைகளை முன்வைத்திருந்தோம். இந்தப் பரிந்துரைகள் அடங்கிய கோப்பினை  மார்ச் 2, 2018 அன்று தமிழகத்தின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கி அவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை முன்வைத்து அத்தேவைகளைத் தெளிவுபடுத்தி, கலந்துரையாடி, அவற்றைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்.

உலகத் தமிழ் மரபு மாநாட்டில் தமிழக அரசிடம் தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கிய கோரிக்கைகள்!!
*********************************************************************************

அன்புடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம்.

உலகத் தமிழ் மரபு மாநாட்டின் மூலமாகத் தமிழக அரசுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாகவும், தமிழகத்தின் வரலாற்றின் மீது அக்கறை கொண்டோரின் சார்பாகவும் பின்வரும் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், மாண்புமிகு துறைசார் அமைச்சர்களுக்கும் முன்வைப்பதில் பெருமை கொள்கிறோம்.

1. தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை என்பது உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பன்னாட்டு அமைப்புகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தமிழக வரலாற்றை ஆய்வு செய்வதற்கான ஊக்கம் பெற்றுள்ளன. உலகின் பலநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் உருவாக்கப்பட்டு வருவது இதற்கு மிக முதன்மையான சான்றாகும். இம்முயற்சி தொடரப்பட வேண்டும் என்பதோடு தமிழின் தொன்மையையும் பெருமையையும் சொல்லும் நூல்கள் பலவேறு உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
2. தமிழகத்தின் வரலாற்றுத் தொடர்பான சான்றுகளான கல்வெட்டுப் படிகள், சிலைகள், காசுகள், ஓலைச்சுவடிகள், நூல்கள், வெளியீடுகள் மற்றும் அரசு சார்ந்த ஆவணங்கள் ஆகியன இன்றும் உலகில் பல நாடுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை இன்னும் முறையாக நமது ஆய்வுக்குப் பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவற்றைப் பெறுவதற்கான முறையான அரசு வழிகாட்டல்களும், உதவிகளும் உருவாக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு முன்வைக்கிறோம். தங்களது மேலான ஆட்சியில் இதற்கான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களோடு உலகின் பலநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களோடு உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் முன் குறிப்பிட்ட தமிழகத்தின் வரலாற்றுத் தரவுகளை நாம் எளிதாகப் பெற முடியும்.
3. தமிழகத்தின் தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை புலப்படிப்புகள் இன்னும் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. பல நாடுகளில் அத்துறை முழுமையான அறிவியல் துறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே அத்துறைகள் மேம்படுத்தப்பட வேண்டுமாயின், வரலாற்றுத் துறை, தமிழ்த்துறை, மொழியியல் துறை, மானுடவியல் துறை, நாட்டுப்புறவியல் ஆகியனவற்றிற்கு ஒருங்கிணைந்த இயைபை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பிற பல்கலைக் கழகப் படிப்புகளுடன் நாம் சர்வதேசத் தரத்தினை எட்ட முடியும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் துறைசார் அமைச்சர் பெருமக்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
4. கல்லூரிகளில் உள்ள மேற்கண்ட துறைகளின் மாணவ மாணவியரிடையே செய்முறைப் பயிற்சியில் உள்ளுர் அருங்காட்சியக பராமரிப்பு என்பது சேர்க்கப்பட வேண்டும். அப்படிச் சேர்க்கப்படுமாயின் தமிழகத்தின் வட்டாரங்கள் அளவில் அருங்காட்சியகங்களை உருவாக்க முடியும். தமிழகத்தின் எல்லாக் கலை, வாழ்வியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் உலகத்திற்கும் கொண்டு சேர்க்க முடியும். இந்த வட்டார அருங்காட்சியகங்களைக் கல்லூரிகளிலோ அல்லது அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலோ ஒரு சிறிய இடத்தில் அமைப்பதின் மூலம் உருவாக்கலாம் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்குக் கோரிக்கையாக முன்வைக்கிறோம். கடந்த ஈராண்டுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக சில கல்லூரிகளிலும் தனியார் பள்ளிகளிலும் இந்த அருங்காட்சியகத் திட்டத்தைத் தன்னார்வமாகச் செயல்படுத்தி வருகிறோம் என்பதை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறோம்.
5. மாறிவரும் மின்னணு ஊடக உலகில் நமது வரலாற்றுச் சான்றுகளை பாதுகாப்பது எளிதாகி வருகிறது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருமுறை மின்னாக்கம் செய்து பதிவேற்றிவிட்டால் அது உலகம் முழுமைக்கும் நம்மால் கொண்டு சேர்க்க முடியும். அந்த வகையில் ஓலைச் சுவடிகள், அரிய நூல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை மின்னாக்கம் செய்வதற்கான பயிற்சிகள் மாணாக்கர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ சமண மடங்களிலும் மற்றும் ஏனைய சமய அமைப்புக்களிலும் பல நூறு ஆண்டுகளாகப் பாதுகாத்து வரப்படும் ஓலைச்சுவடிகளையும் கையெழுத்து ஆவணங்களையும் மின்னாக்கம் செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். இவை அனைத்தும் தமிழக அரசின் சார்பில் Centralized Tamil Heritage Virtual Platform உருவாக்கப்பட்டு அதன் வழி அவை பொது மக்கள் பார்வைக்குக் கிடைக்கும் வகை செய்யப்பட வேண்டும் என்பதை மாண்பமை முதல்வர் அவர்களிடம் வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.
6. இந்தியாவில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் எழுபது சதவிகிதத்திற்கும் மேலானவை தமிழகம் தொடர்பானவை என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஆயினும் பிற மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகள் நமது ஆய்வாளர்களுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு மைசூர் தேசிய தொல்லியல் காப்பகத்தில் உள்ள தமிழகம் தொடர்பான கல்வெட்டுக்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. அங்கு படியெடுக்கப்பட்டவை அழியும் நிலையில் உள்ளன, அவை மின்னாக்கம் செய்யப்பட்டால் நமது அறிஞர்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
7. தமிழகத்தில் பாதுகாப்பற்று இருக்கும் வரலாற்று ஆதாரங்களையும், சின்னங்களையும் பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மணாக்கர்களை அதில் ஈடுபடுத்த வேண்டியதும் அவசியமாகின்றது.
8. உலகின் பலநாடுகளில் தற்போது கவனத்தை ஈர்க்கக்கூடிய சுற்றுலா கோட்பாடு, அதாவது Heritage Tour அல்லது Cultural Tour என்பதாகும். ஒருங்கிணைக்கப்பட்ட அருங்காட்சியகங்கள், சுற்றுலாத்தலங்கள் மட்டுமின்றி மக்கள் பண்பாட்டை நேரடியாக அறியும் பொருட்டு அவ்வகை சுற்றுலாக்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்குக் குறிப்பாக ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே Heritage Tour என்பதில் நாம் கவனம் செலுத்துவதற்கு நமது பணிகள் உதவியாக இருக்கும்.
9. வட்டார அருங்காட்சியகங்களில் கிராம கைவினைப் பொருட்கள் மட்டுமின்றி, மக்கள் பண்பாட்டு நடவடிக்கைகளான பாடல்கள், நடனங்கள், கதைகள் மற்றும் நிகழ்த்துக் கலைகளில் விழியப் பதிவுகளின் (வீடியோ) படிகள் வைக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை இதுவரை வெளியிட்டுள்ள மற்றும் வெளியிட உள்ள விழியப்பதிவுகளைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.
10. கல்வெட்டு, ஓலைச்சுவடி வாசிப்பு என்பது தற்போது கல்லூரிகளின் தமிழ்த்துறைகளில் ஒரு பாடமாக இல்லாத நிலை இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கல்வெட்டுக்களையும் ஓலைச்சுவடிகளையும் வாசிக்கும் திறன் படைத்தோர் இல்லாத நிலை உருவாகும் அபாயகரமான சூழல் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கல்லூரிகளில் துணைப்பாடமாக அல்லது பட்டயப் பாடமாகத் தொல்லியல் பாடத்தை அறிமுகம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். இதற்கான பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது என்பதையும், அவற்றைத் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் கொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவண்,
முனைவர்.க.சுபாஷிணி
நிறுவனர் - தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை



--------------


No comments:

Post a Comment