—— சிங்கநெஞ்சம் சம்பந்தம்
வரலாற்றிற்கு முந்தைய இந்திய தொல்லியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் (Robert Bruce Foote) அவர்களின் தொல்லியல் பயணம் 1863 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி, பல்லாவரத்தில் துவங்கியது. அன்றுதான், இன்றைய விமான நிலையம் உள்ள பகுதிக்கு எதிரே உள்ள கண்டோன்மென்ட் மைதானத்தின் அருகே ஈட்டி போன்று ஒரு முனையில் மட்டும் கூறாக இருந்த கல்லாயுதம் ஒன்றை அவர் கண்டு பிடித்தார். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லாயுதம் இதுதான். தொடர்ந்து வந்த மாதங்களில் பல்லாவரம் பகுதியில் கைக்கோடரி கல்லாயுதங்கள் இரண்டு கிடைத்தன.
அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் புவியியல் பணியைத் தொடர்ந்தபோது, அத்திராம்பாக்கதிற்கு அருகே, கொற்றலையாற்றில் கலக்கும் ஒரு ஓடைப் படுகையில் இரண்டு பழங்கற்கால ஆயுதங்களை ஃபுட் அவர்களின் சக பணியாளர் வில்லியம் கிங் (William King) கண்டுபிடித்தார். சில நிமிடங்களிலேயே ஃபுட் அவர்களும் தன் பங்கிற்கு சில பழங்கற்கால ஆயுதங்களைக் கண்டுபிடித்தார். இது ஒரு துவக்கம்தான். தொடர்ந்து வந்த நாட்களில் அந்தப் பகுதியில் கொற்றலை ஆற்றின் கரைகளிலும், அதற்கு வடக்கே உள்ள நாரணவீரம் ஆற்றங்கரைகளிலும் நூற்றுக்கணக்கான பழங்கற்கால ஆயுதங்களை இருவரும் சேர்ந்து சேகரித்தனர்.
அருகேயுள்ள பகுதிகளிலிருந்து அடித்துக்கொண்டுவரப்பட்டு ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் கல்லாயுதங்கள் மட்டுமன்றி, இருந்த இடத்திலேயே இருக்கும் கல்லாயுதங்கள் பலவும் இந்தப் பகுதிகளில் கிடைத்தன. இவை சுமார் எட்டு முதல் பத்தடி ஆழத்தில் செம்புராங்கல்லும் கூழாங்கற்களும் கலந்துள்ள படுகைகளில் காணப்படுகின்றன. இந்தக் கல்லாயுதங்கள் உருவான காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்களை செம்புராங்கல்லில் உள்ள இரும்பு ஆக்சைட் அரித்து விட்டிருக்கும் என ஃபுட் கருதுகிறார். இவற்றிற்குக் கீழே செம்புராங்கல் படிவங்களும், இதற்கும் கீழே தாவர தொல்லுயிர் எச்சங்கள் (PLANT FOSSILS) தாங்கிய மேல் கோண்டுவானா படிவங்களும் அமைந்திருக்கின்றன. வல்லக்கோட்டை அருகே இந்த கோண்டுவானா படிவங்களில் மூன்றடி நீளமும் ஒரு அடி விட்டமும் கொண்ட கல்மரம் (FOSSILWOOD) ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப்படிவங்களில் கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களும் (MARINE FOSSILS) அபூர்வமாகக் கிடைக்கின்றன. கல்லாயுதங்கள் மட்டுமன்றி, முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஈமச்சின்னங்கள் பலவும் இந்தப் பகுதிகளில் இவ்விருவராலும் கண்டறியப்பட்டன.
முழுமையாக உருப்பெற்ற கல்லாயுதங்கள் மட்டுமன்றி, அரைகுறையாய் உள்ள கல்லாயுதங்களும் அவற்றைச் செதுக்கும்போது உடைந்த சில்லுகளும் குவியல்களாக, குப்பிடு எனும் கிராமம் அருகே கிங் அவர்களால் 1863ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இனம் காணப்பட்டன. இதன் அடிப்படையில் இங்கே கல்லாயுதம் தயாரிக்கும் தொழிற்சாலையே ( MADRAS STONE AXE FACTORY) இருந்திருக்கலாம் என்று கிங் கருத்து வெளியிட்டார்.
இந்தப் பகுதிகளில் கிடைத்துள்ள கல்லாயுதங்கள் அனைத்துமே வன் கற்களான குவார்ட்சைட் பாறைகளால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. கல்லாயுதங்கள் செய்யப்பட்ட கற்களையும் , அல்லிக்குழி கங்லாமெரேட் கூழாங்கற்களையும் ஒப்புநோக்கிய ஃபுட், இந்தக் கல்லாயுதங்கள் செய்யப் பயன்பட்ட குவார்ட்சைட் கற்கள், அல்லிக்குழி கங்லாமெரேட் கூழாங்கற்களே என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அத்திராம்பாக்கதிலும் அதைச் சுற்றியும் , பழங்கற்கால கல்லாயுதங்கள் கிடைத்தப் பகுதிகளை கூகுள் பதிமத்தில் பதிவிட்டுப் பார்த்தபோது இவையனைத்தும் பழைய பாலாற்றின் கழிமுகப் பகுதியிலேயே கிடைக்கின்றன என்பது தெளிவாகிறது. வரைபடத்தில் பழங்கற்கால ஆயுதங்கள் ( both in situ and transported) கிடைத்த இடங்களில் சில பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு தொல்லியல் ஆய்வுகள் நடந்த இடங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பட்டறைப்பெரும்புதூர், நெய்வேலி, வடமதுரை போன்ற இடங்கள். அத்திராம்பாக்கமும் இதில் சேரும்.
N.B.: Luminescence dating at the stratified prehistoric site of Attirampakkam, India, has shown that processes signifying the end of the Acheulian culture and the emergence of a Middle Palaeolithic culture occurred at 385 ± 64 thousand years ago (ka), much earlier than conventionally presumed for South Asia1. The Middle Palaeolithic continued at Attirampakkam until 172 ± 41 ka.
• Nature volume554, pages97–101 (01 February 2018)
________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)
No comments:
Post a Comment