திருநெல்வேலி ஜில்லா
ஆதிதிராவிடர் மகா நாடு
ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ்
தலைமைப் பிரசங்கம்
திருநெல்வேலி ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கு என்னை தலைமை வகிக்கும்படி கேட்டுக்கொண்ட வரவேற்பு கழகத்தாருக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். ஓர் சமுகமோ, ஓர் தேசமோ விடுதலையடைய வேண்டுமானால் கல்வி, ஒற்றுமை, மாதர் முன்னேற்றம் இம் மூன்றும் மிகவும் அவசியமாக கவனிக்கற்பாலன. நம் நாடோ கல்வியில் மற்றெல்லா தேசங்களையும் விட மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கின்றது. அதோடு நம் நாட்டில் ஜாதி வேற்றுமை முதலிய காரணங்களால் நமக்குள்ளாக ஒருவருக்கொருவர் ஒற்றுமை கிடையாது. இத்தேசத்தில் மாதர்கள் கேவலமாக நடத்தப்படுவதைப்போல் வேறெந்த தேசத்திலும் கிடையாது. ஸ்திரீகள் பிற்போக்கான நிலைமையிலிருப்பதனால் தான் நம் நாடும் மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கிறது. மாதர்கள் எங்கு முன்னேற்றமடைகின்றார்களோ அத்தேசமே முன்னேற்றமடையும்மென்று ஓர் பெரியார் சொல்லியிருக்கிறார். ஆகவே, நாம் எல்லோரும் முன்னேற்றமடைய வேண்டுமானால் ஸ்திரீகள் முன்னேற்ற விஷயத்தில் எல்லோரும் ஏகமனதாக பாடுபடவேண்டும்.
கல்வி:
"கண்ணுடைய ரென்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்" என்றார் நம்மரபிலுதித்த திருவள்ளுவநாயனார். அதாவது முகத்தில் இரண்டு கண்களிருந்தபோதிலும் கற்றவர்களுக்கே அக்கண்கள் இரண்டும் கண்களென்றும், கல்லாத பேர்களுக்கு அவ்விரண்டு கண்களும் புண்ணுக்குச் சமானமென்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே, உலகில் ஜனித்த ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் கல்வி மிகவும் முக்கியமானது. நம்மவர்களில் அநேகர் பெண்கள் கல்வி கற்கவேண்டியது முக்கியமில்லையென்றும், ''அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்றும் சொல்லுகிறார்கள். ஏனெனில் வீட்டில் சகல காரியங்களையும் கவனிக்கவேண்டியது ஸ்திரீகளாகையாலும், குழந்தைகள் தாய்மார்களின் பராமரிப்பிலேயேயிருக்க நேரிடுவதாலும் இல்வாழ்க்கையின் பொறுப்பு பெரும்பாலும் பெண்களே கவனிக்கவேண்டியிருப்பதாலும் பெண்மணிகள் முக்கியமாக கல்வி கற்பது மிகவும் அவசியம். மற்றெல்லா தேசங்களையும் விட நம் தேசமே கல்வியில் மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கின்றது. அதிலும், நமது சமூகமோ பலவாண்டுகளாக உயர் ஜாதியாரென்போரால் புறக்கணிக்கப்பட்டு, கல்வியிலும், மற்றெல்லா விஷயத்திலும் மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கின்றார்கள். நம் சமூகத்தில் ஆண்களே கல்வித்துறையில் மிகவும் பிற்போக்காயிருக்கிறார்களென்றா ல் பெண்களைக்குறித்து சொல்லுவானேன். ஆயின், இப்பொழுதோ காருண்யம் பொருந்திய அரசாங்கத்தாரால் நமக்கு கல்வியில் முன்னேற்றமடைய பல வசதிகள் செய்தளிக்கப்பட்டுள்ன. இம்மாதிரியான சந்தர்ப்பத்தை நாம் கைநழுவவிடாமல் நம் சமூகத்தார் யாவரும் கல்வியில் தேர்ந்து மற்றெல்லா சமூகத்தாரைப்போலும் முன்னேற்றமடைய வேண் டிய முயற்சிகள் செய்யவேணுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
ஒற்றுமை:
''ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்'' என்பார்கள். அதுபோல் ஓர் குடும்பமோ, ஓர் சமூகமோ, ஓர் தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். ஆயினும், நம் தேசத்திலோ பல்வேறு ஜாதி பாகுபாடுகளினால் நம் தேசமானது இன்று இந்நிலையிலிருக்கிறது. நம் தேசத்தில் இச்சாதிப் பிரிவினை அறவே ஒழிய இன்னும் பலவாண்டுகள் செல்லுமாயினும், நம் சமூகத்தினர் நாம் முன்னேற்றமடைய வேண்டுமென்றும், எல்லா சமூகத்தினரைப்போலும் முற்போக்கடைய வேண்டுமென்பதையும், மற்றவர்களால் மிருகத்தினும் கேவலமாக நடத்தப்படுவதை விலக்கி, நாங்களும் மனிதர்கள் தான்; எல்லோரைப்போலவும் எல்லா உரிமையும் எங்களுக்குமுண்டு என்று நிரூபிப்பான் வேண்டி எல்லோரும் ஒன்றாகச் சேரவேண்டும். ''தன் கையே தனக் குதவி'' என்றவாறு நாம் யாவரும் ஒன்றுபட்டு நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையானவற்றிற்குப் பாடுபடவேண்டும். நாம் யாவரும் ஒன்றுபடுவதற்கும் நம் சமூகம் முன்னேற்றமடைவதற்கும் நமக்கு வேண்டியனவற்றை போராடி பெறுவதற்கும் நமக்குள் போதிய சங்கங்கள் ஸ்தாபிக்க வேண்டும். சங்கத்தின் மூலமாக நாம் அளப்பறிய நன்மைகள் அடையலாம். நமது சமூகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் நாம் யாவரும் ஒன்றுபட்டு நமக்குள் பிரிவினையில்லாமல் ஒற்றுமையாக யிருக்கவேண்டும்.
சங்கங்கள்:
சங்கங்கள் ஸ்தாபிப்பதன் மூலமாக நாம் எவ்வளவோ நன்மையடையலாம்.
1. நாம் அடிக்கடி ஒருவரோடொருவர் சேர்ந்து பழகுவதால் நமக்குள் பரஸ்பரம் ஒற்றுமை யேற்படும்.
2. நமக்கு வேண்டிய பள்ளிக்கூடம், கிணறு முதலிய செளகரியங்களை சாதித்துக்கொள்வதற்கு சங்கங்கள் மூலமாக மனு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
3. சங்கங்கள் மூலமாக சுற்றுப்புறங்களிலுள்ள கிராமங்களில் இராப்பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்து பகலில் வேலைகளுக்குப் போய்த் திரும்பும் சிறியோர், பெரியோர் யாவரும் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் செய்வதற்கு அநுகூலமாகயிருக்கும்.
4. நமது சமூகத்தினருக்கு மற்றவர்களால் செய்யப்படும் அட்டூழியங்களை காருண்யம் பொருந்திய அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொள்வதற்கு சங்கத்தின் மூலமாக மனு அனுப்பலாம். இன்னும் நமக்கு வேண்டியனவற்றை எல்லா செளகரியங்களையும் சங்கத்தின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள லாம்.
ஐக்கிய நாணய சங்கங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்கள்:
கூட்டுறவு சங்கங்கள் இப்பொழுது எல்லா ஊர்களிலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இம்மாதிரி சங்கங்களின் மூலமாக விவசாயிகள் தங்கள் நிலங்களை பணக்காரரிடம் அதிக வட்டிக்கு அடமானம் வைத்து நஷ்டமாகாமற்படி, ஓர் குறித்தளவு வட்டி யில்கடன் கொடுப்பதற்கு அரசாங்கத்தாரால் நிறுவப்பட்டதாகும். நம்மவர்களில் நிலங்கள் வைத்துக்கொண்டு எல்லா உயர் ஜாதி இந்துக்களைப்போலும் வரி கொடுத்துவரும் அநேகர் தங்கள் பூமிகளின்பேரில் கூட்டுறவு சங்கத்தாருக்கு மனு அனுப்பி கடன் கேட்டால் அன்னவர்களுக்கு கடன் கொடுக்க மறுக்கப்படுவதல்லாமல் உயர் ஜாதி இந்துக்களிடம் பூமியை அடமானம் செய்து ஒன்றுக்கு பத்து வட்டியாக கொடுக்கும்படியாக வற்புறுத்துவதாக சென்னையிலிருக்கும் தாழ்த்தப்பட்டார் தலைவர்களுக்கு அடிக்கடி வெளியூர்களிலிருந்து மனுக்கள் கிடைக்கின்றன. இக்கூட்டுறவு சங்கங்கள் மேல் ஜாதியாரின் பராமரிப்பிலிருப்பதால் நம்மவர்களின் மனுக்களை அவர்கள் துச்சமாக எண்ணி எறிந்துவிடுகிறார்கள். ஆகையால், நமக்கென்று தனிச்சங்கங்கள் ஏற்படுத்தி நம்மவர்கள் நஷ்டமடையாமலிருப்பதற்கு வேண்டிய ஹேதுக்களை செய்து கொடுக்குமாறு அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொள்ளுவதற்கு செய்ய வேண்டிய முயற்சிகள் யாவும் செய்ய நாம் ஒரே கட்டாக முயல வேண்டும். இம்மாதிரி தனிக்கூட்டுறவு சங்கங்கள் நமக்கு மிகவும் அவசியம்.
மாதர் முன்னேற்றம்:
''மாதர் முன்னேற்றமே தேசிய முன்னேற்றம்" என்றார் ஒரு பெரியார். மாதர்களுக்கு கல்வி எவ்வளவு அவசியமென்பதை ஒவ்வொரு ஆண் மகனும் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஓர் மாதானவள் உலகில் தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவுமிருந்து ஆடவருக்கு உதவியாயிருக்கிறாள். மாதர்கள் ஆண்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ளுகிறார்கள். ஓர் பெண்ணானவள் கற்றவளாயிருந்தால் அவள் தன் பிள்ளைகள் கல்வி விஷயத்தில் வேண்டிய சிரத்தை எடுப்பதல்லாமல், குழந்தைகள் துர்ப்பழக்கங்களுக்கு உள்ளாகி தங்களைக் கெடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பதற்கும், இல்லறத்தை சரிவர நடத்துவதற்கும், அரசியல் துறையிலும், சமூக முன்னேற்றத்திலும் தம் கணவன்மாருக்கு பக்க பலமாகயிருந்து உதவி செய்வதற்கும், ஆடவருக்கு பலவித அசந்தர்ப்பங்களால் ஏற்படும் துயரைப் போக்கி கூடுமான வரை அவர்களை சந்தோஷமாக வைக்க முயற்சி செய்யவும், நல்ல வீரர்களாகவும் புத்தியிற் சிறந்த குழந்தைகளை ஈன்றெடுத்து தேசத்திற்கு பேரும் புகழும், கீர்த்தியும் கொண்டு வருபவர்களாகவுமிருப்பதாலும், நம் நாடு தாய் நாடென்றும், நாம் பேசும் பாஷை தாய் பாஷையென்றும் கல்விக்குத் தலைவி சரஸ்வதியென்றும், செல்வத்திற்குத் தலைவி இலட்சுமியென்றும், சிறப்பாக பெண்களைக் குறித்தே சொல்லப்படுவதால் மாதர்களை கேவலம் மிருகமாக மதித்து நடந்தாமற்படிக்கு அவர்கள் முன்னேற்றமே நமது விடுதலை, நம் தேச முன்னேற்றம் என்பதை மனதிலிருத்தி ஸ்திரீகள் முன்னேற்ற விஷயத்தில் ஏகமனதாகப் பாடுபட்டு அவர்களுக்கும் தக்க கல்வியை அளிக்குமாறு மிகவும் வந்தனத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி செய்த நன்மைகள்:
ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடை ய விஷயங்கள், அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் திட்டங் களின் ஆரம்பத்திலேயே தீண்டப்படாதவர்களுடைய விஷயங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதைப்பார்த்த பிறகே காங்கிரஸ்காரர்கள் 1920ல் தீண்டாமை விலகினாலொழிய சுயராஜ்யம் கேட்பதில்லையென்று சொல்லி தீண்டப்படாதாரை காங்கிரஸில் வந்து சேரும்படி சூழ்ச்சி செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சட்ட மூலமாக பல உருப்படியான நன்மைகள் அதாவது கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவங்களில் நாமினேஷன் (நியமிக்கப்படல்) வசதி முதலியவைகளும், தீண்டாமை பொது வாழ்வில் பாராட்டக்கூடாதென்று தெரு, குளம், பொது சாவடி, பள்ளிக்கூடங்கள் ஆகியவைகளில் பிரவேசிப்பதற்குத் தடையில்லாதபடி சட்டங்களும் செய்த பிறகே காங்கிரஸ்காரர்கள் “ஹரிஜன சேவா சங்கம்” என்று ஒரு பெயரை உண்டாக்கிக்கொண்டு பல லட்சக்கணக்காக ரூபாய்களை வசூலித்து மேல் ஜாதிக்காரர்களே பயன் அடையும்படி செய்தார்கள். இவ்வளவுமல்லாமல் வட்டமேஜை மகா நாட்டில் காந்தியார் சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் தீண்டாமையொழிக்க முடியுமென்றும் அது வரையில் தீண்டாதாருக்கென சட்டசபை முதலிய பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள் தனித்தொகுதி மூலமோ, ஒதுக்கிவைப்பதின் மூலமோ ஏதாவது ஸ்தானங்கள் அளிக்கக் கூடாதென்றும் நமக்கு பிரதிநிதியாக சென்றிருந்த தாழ்ப்பட்டார் மாபெருந்தலைவர் அம்பேட்காரின் பிரச்சினைக்கு எதிராக வாதாடி தடைசெய்தார்.
காங்கிரஸ்காரருடைய தடையை மீறி அரசாங்கத்தாரால் நமக்கு 18 ஸ்தானங்கள் அளிக்கப்பட்டன. அதுவும் பூனா ஒப்பந்தத்தின் மூலம் பாழாக்கப்பட்டது. பூனா ஒப்பந்தம் இல்லாதிருந்திருக்குமானால் இன்று நடைபெறும் தேர்தல்களில் தகுதியுள்ளவர்களும், தங்கள் சமூக முன்னேற்றத்தை முக்கியமாகக் கருதக்கூடியவர்களும் ஆதிதிராவிடர்களுடைய பிரதிநிதிகளாக தாராளமாக வரக்கூடும். ஆனால், பூனா ஒப்பந்தம் மூலம் இன்று அரசியலே இன்னதென்று தெரியாதவர்களும் சமூகத்திற்கு என்ன செய்யவேண்டுமென்பதை அறியாதவர்களும், மேல் ஜாதிக்காரர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்களுமே பெரும்பாலும் வரமுடியும்படியாக ஏற்பட்டுவிட்டது. தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசிக்கக்கூடாது என்று பூனா ஒப்பந்தத்தில் விளக்கப்பட்டிருந்தும், அ து ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தும், சமீபத்திலும் காந்தியார் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் தலையிடக்கூடாதென்று கூறியிருந்தும், பிறகு காங்கிரஸ்காரர்கள் அதில் பிடிவைத்து காந்தியாருடைய அறிக் கையை மாற்றச் செய்து இப்பொழுது பூனா ஒப்பந்தத்தில் ''காந்தியின் உயிரைக் காப்பாற்ற" கையெழுத்திட்டவர்களுக்கே காங்கிரஸ்காரர் எதிர் அபேட்சகரை நிறுத்தி தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை செய்திருக்கிறார்கள் என்பதும் ஜஸ்டிஸ் கட்சியார் என்ன நன்மை செய்தார்களென்பதும் நன்றாக விளங்கும். நிற்க.
சகோதர சகோதரிகளே !
நான் கூறின விஷயங்களை நீங்கள் பொறுமையோடிருந்து கேட்டுக்கொண்டிருந்ததோடல்லாமல், நமது சமூக முன்னேற்ற விஷயத்தில் செய்யவேண்டியவைகளைக் குறித்து சிந்தித்துப்பார்க்கும்படியாக கேட்டுக்கொள்வதோடு, மற்றுமோர் முறை என்னை இம்மகாநாட்டிற்கு தலைவியாகத் தேர்ந்தெடுத்த வரவேற்புக் கழகத்தாருக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த வந்தனத்தோடு என் உரையை முடித்துக்கொள்ளுகிறேன்.
______________________________ ___
திருநெல்வேலி ஜில்லா
ஆதிதிராவிடர் மகா நாடு
ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ்
(கௌரவ நீதிபதி, சென்னை)
தலைமைப் பிரசங்கம்
31-1-1937
______________________________
துணை நின்றவை:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
http://dalitshistory.blogspot.in/2016/03/blog-post_62.html
திருநெல்வேலி ஜில்லா - ஆதிதிராவிடர் மகா நாடு, ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ், தலைமைப் பிரசங்கம், 31.1.1937
http://www.subaonline.net/TPozhil/e-books/THF-Meenambal%20Speech-1937.pdf
உதவி: திரு. கௌதம சன்னா
No comments:
Post a Comment