—— மா.மாரிராஜன்
தஞ்சைப் பெரியகோவில், இராஜராஜர் மற்றும் அவரது தேவி உலகமாதேவியாரின் திருவுருவச்சிலைகள் களவாடப்பட்டது. மீண்டும் இது பரபரப்பான தலைப்புச் செய்தியாய் ஆகிவிட்டது.
என்ன சிலைகள் அவை? யார் எடுத்தது? என்ன ஆதாரம்? எப்பொழுது திருடு போனது? இப்பொழுது எங்கே உள்ளது? அதை மீட்க இயலுமா? அவசிய சில விபரங்களை எளிமையாகப் பார்ப்போம்.
தஞ்சை இராஜராஜேஸ்வரம். பெருவுடையாருக்குப் பல நிவந்தங்களும் வந்து குவிகின்றன. அரசர், அரண்மனைப் பெண்டிர், படைத்தலைவர்கள், அமைச்சர்கள், குடிமக்கள் என்று பலரிடம் இருந்து நிவந்தங்கள் வந்து நிரம்பின. செப்பு படிமங்களும், பிரதிமமும் நிறைந்தன. அவ்வாறு கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். "பொய்கை நாட்டுக் கிழவன் ஆதித்த சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்," இவரும் தன் பங்குக்குச் செப்புப் படிமங்களைத் தானமாக அளித்தார்.
சுந்தரர், பரவை நங்கையார், சம்பந்தர் என்று நாயன்மார்களின் படிமங்களை எடுத்தார். இருந்தும் அவருக்கு ஒரு குறை. எத்தனையோ அடியார்களின் படிமங்களை எடுத்தும், நிறைவில்லை அவருக்கு. கதைகளில் கேட்டறிந்த அடியார்களுக்குப் படிமம் எடுத்தாகி விட்டது. ஆனால், கதைகளிலும், காப்பியங்களிலும் கண்டும் கேட்டுமிராத, பல உன்னத சாதனைகளுக்குச் சொந்தக்காரராய் ஒருவர் உள்ளாரே. பாரததேசமே கொண்டாடும் தென்கயிலாயமாய் தட்சிணமேருவை இவ்வுலகிற்கு அளித்த அடியார். மக்களுக்கான மன்னனாய் வாழும் பெரும் அடியார் அல்லவா இவர்? இவருக்குப் படிமம் எடுக்காமல் இருப்பதா? எடுத்தே விட்டார். மாமன்னர் இராஜராஜ சோழனுக்கும், பட்டத்தரசி லோகமாதேவிக்கும் செப்பு படிமம் எடுத்தே விட்டார்.
தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டு. ( SSi vol. 2 No. 38.) தனது தலைவனை பெரியபெருமாள் எனக்குறிப்பிட்டு, இராஜராஜனுக்கும் லோகமாதேவிக்கும் எடுத்த படிமங்களை பற்றி விரிவாகச் சொல்கின்றன. படிமங்களின் நீளம் அகலம் உயரம், குறிப்பிட்டு அவற்றுக்கு வழங்கப்பட்ட பொன் முதலான ஆபரணங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. எத்தனையோ கனவுகளுடன், ஆசை ஆசையாய், பொய்கைநாடு என்னும் சிறு கிராமத்தைச் சேர்ந்த தென்னவன் என்பவர் தன் மன்னனுக்காக எடுத்த இராஜராஜர் மற்றும் லோகமாதேவியின் திருமேனிகள்... இப்போது நம்மிடம் இல்லை. எங்கே இருக்கின்றன இந்த இரண்டு சிலைகளும்?
தஞ்சை மராட்டிய அரசி காமாட்சிபாய் சாகேப் காலம் வரை, கி.பி. 1875 வரை இந்த இரண்டு சிலைகளும் தஞ்சையிலே இருந்துள்ளது. இவ்வம்மையாரின் இறப்புக்குப் பிறகு மராட்டிய அரச குடும்பத்தாரிடையே உரிமை பிரச்சனைகள் தோன்றின. வழக்கு, விசாரணை என்று உச்சக்கட்ட குழப்பம் நிலவியது. அச்சமயத்தில் இச்சிலைகள் களவாடப்பட்டிருக்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாகப் போலியாக இரு சிலை செய்து, அவற்றின் பீடத்தில், "பெரியகோவில் ராசா ராசேந்திர சோளராசா " என்று பிற்கால எழுத்தமைப்பில் எழுதி பெரியகோவிலில் வைத்துள்ளார்கள்.
தென்னவன் மூவேந்த வேளான் எடுத்த அந்த திருவுருவச் சிலைகள் எங்கே? எந்தத் தகவலும் இல்லை. வருடங்கள் கடந்தது. குஜராத், அகமதாபாத்தில் சாராபாய் என்னும் செல்வாக்கு மிகுந்த ஒரு வம்சம் உள்ளது. அவர்களுக்குச் சொந்தமாய் கெளதம் சாராபாய் என்னும் பெயரில் ஒரு அருங்காட்சியகம் ( காலிகோ மியூசியம்) உள்ளது.
அங்குதான் இச்சிலைகள் இருப்பதாகவும், அவற்றின் அளவு மற்றும் வடிவம் அப்படியே தஞ்சை பெரியகோவிலின் கல்வெட்டுடன் பொருந்துவதாகவும், இதுதான் இராஜராஜர் மற்றும் உலகமாதேவி படிமம் என்று அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் சான்றுகளுடன் உறுதிப்படுத்தினர். பரபரப்பு தொற்றியது.
இந்திராகாந்தி ஒரு முறை தஞ்சை வந்தபோது அவரது கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டது. அப்போதைய முதல்வர் எம். ஜி. ஆர். இச்சிலைகளை மீட்க முயற்சிகள் மேற்கொண்டார், பலனில்லை.
தமிழக முதல்வராகக் கலைஞர் இருந்தபோது, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டு சென்றார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டது. இராஜராஜர் தன் மனைவியுடன் தஞ்சை திரும்புவார் என்று அனைவரும் காத்திருந்தனர். அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் இறையன்பு, குடவாயில் பாலசுப்ரமணியன், தொல்லியல் இயக்குநர் இரா.நாகசாமி ஆகியோர் குழுவாக குஜராத் சென்று முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். எல்லாம் சரியாக நடந்தும் பயன் இல்லாமலே போனது. தொல்லியல் துறை இயக்குநர் திரு. நாகசாமி அவர்கள் இச்சிலைகள் தஞ்சை பெரியகோவிலுக்குச் சொந்தமானது அல்ல என்று கூறிவிட்டாராம். ஆகவே, குஜராத் அருங்காட்சியகம் அச்சிலைகளைத் தர மறுத்துவிட்டதாம். இப்படி ஒரு தகவல் பரவியது. கலைஞர் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனற்றதாய் ஆயின.
இப்போது மீண்டும் சிலை மீட்பு நிகழ்வுகளை ஐயா பொன். மாணிக்கவேல் அவர்கள் முன்னெடுக்கிறார். ஒட்டுமொத்த தமிழகமும் அவருக்குத் துணை நிற்கவேண்டும். இராஜராஜரையும், பட்டத்தரசி உலகமாதேவியையும் வரவேற்கக் காத்திருப்போம்.
______________________________ ______________________________ ____________
No comments:
Post a Comment