Wednesday, January 15, 2020

ஏறு தழுவல்

ஏறு தழுவல்

——   மா.மாரிராஜன்


          இன்றைய நாள். மாட்டுப்பொங்கல். ஜல்லிக்கட்டு. களத்தில் காளைகளும், காளையர்களும் ஆடும் ஆட்டத்தை நேரடியாகவும், தொலைக்காட்சியிலும் பார்த்துப் பரவசமடைந்தோம். இந்நிகழ்வுகளை அப்படியே நமது சங்க இலக்கியமான கலித்தொகை ஏறுதழுவல் என்னும் பெயரில் பதிவுசெய்கிறது. ஒரு நேரடி வர்ணனை போல் இக்காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது.

          மிகப்பழமையான நமது சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று கலித்தொகை. அதில், முல்லைக்கலி பாடலை இயற்றியவர் நல்லுருத்தினார் என்னும் புலவர்.

ஏறுதழுவல் நிகழ்வை அடுத்தடுத்த காட்சிகளாகப் பாடல்கள் விளக்குகிறது. களம்... காளை... வீரர்கள்... களமாடுதல்... என்று நேரடிக் காட்சியாப் பாடல்கள். இப்பாடல்களில் தமிழர்களின் பல பாரம்பரிய வழக்கங்களும், வரலற்றுத் தரவுகளும் பதிவாகியுள்ளன.

          ஆயர் குடி மக்களின் தொன்மை, பாண்டியனின் பெருமை, அவன் நிலத்தைக் கடல் கொண்டமை, குரவைக் கூத்து, என்ற பல வரலாற்றுத்தரவுகள். வழிபாடும் தமிழனது பாரம்பரிய வழக்கமாய் இருந்துள்ளது.  சிவன், பெருமாள், முருகன், இந்திரன், போன்ற தெய்வங்கள் பல பாடல்களில் சிறப்பாகத் தோன்றுகின்றனர்.

          உவமைகளாக மகாபாரத போர் நிகழ்வுகளும் காட்டப்படுகின்றன. 101 - 105 வரை மிக நீண்ட பாடல்கள்; பாடல்களின் வரிசை மாற்றி ஒரு தொகுப்பாகச் சுருக்கி.. சுருக்கி.. சுருக்கி... தொகுத்ததே நீண்ட பதிவாகிவிட்டது.

          இனி, கலித்தொகைக் காட்டும் ஏறுதழுவல் காட்சிகள்; ஆயர் குடி பெருமை மற்றும் தொன்மையைப் பறைசாற்றும் பாடலுடன் துவங்குகிறது.

"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய 
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு."

பொங்கிய கடல் வந்து தன் நிலத்தை அபகரித்தது. சினம் கொண்ட பாண்டியன், புலிச்சின்னம் கொண்ட சோழனையும், வில் சின்னம் கொண்ட சேரனையும் வீழ்த்தி தன் மீன் சின்னத்தைப் பொறித்த பாண்டியர் குடி தோன்றிய போதே தோன்றிய தொன்மைக் குடி ஆயர் குடி.

          அடுத்த பாடல் ஏறுதழுவலின் சிறப்பை மிக வீரியமாகப் பதிவு செய்கிறது.

"கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்."

கொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை, இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறப்பிலும் மணக்கமாட்டாள் ஆயர் மகள்.

          ஏறுதழுவல் விழா ஆரம்பமாக உள்ளது. மாடு பிடி வீரர்கள் வந்தனர். அவர்கள் முதலில் வழிபாடு செய்தனர்..

"துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ "

நீர்த்துறையில் இருக்கும் தெய்வம், ஆலமரத்தடி இறைவன் (சிவன்) மராமரத்து இறைவன் (திருமால்) ஆகியோரை வணங்கி ஏறு தழுவும் களத்தில் நுழைகின்றனர்.

          களத்தில் எவ்வாறான மாடுகள் இருந்தன?

" வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,   மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும்."

பனைக்கொடியுடைய குற்றமற்ற பலராமனின் வெள்ளை நிறம் கொண்ட காளை, போர் வெற்றிதரும் சக்கரத்தையுடையவனும், திருமகளை தன் மார்பில் கொண்டவனுமான திருமாலின் கரியநிறம் கொண்ட காளை, ஒளிமிகுந்த சடையில் பிறையைச் சூடி நெற்றியில் ஒரு கண்ணுடன் திகழும் முக்கண்ணனின் நிறம் போல் ஒரு காளை, மாமரமாய் நின்ற சூரனை தன் வேல் கொண்டு வதம் செய்த வேலவனின் செந்நிறத்தில் ஒரு காளை..

          ஆட்டம் ஆரம்பமானது.  எவ்வாறு..?

"மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு
அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப .

மாறு எதிர் கொண்டவர்களைத் தாக்கி அழிக்கும் சிவனின் கணிச்சிப்படையினர் போல் கொம்பு சீவப்பட்ட காளைகள் இருக்கும் தொழுவத்தில் வீரர்கள் புகுந்தனர். இடி முழக்கம் போல் பறையொலி எழும்ப ஏறுதழுவல் தொடங்கியது.

தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன்
எதிர்எதிர் சென்றார் பலர்
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்
அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான்மன்ற,
அவ் ஏறு
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ
ஏறு உடை நல்லார்: பகை?

காளைகள் மேல் பாய்ந்து பிடிப்பதற்காக பெரும் ஆரவாரத்துடன் காளைகளின் எதிரே சென்றனர். கொல்லும் வில்லைபோல் வளைந்த காளை அவர்களை எதிர்கொள்ளத் தயாரானது. காளைகளின் கால்கள் தரையைக் கீற புழுதி கிளம்பியது. வீரர்கள் தன் மார்பை விரித்து தயாராக, அவர்களைக் குத்திக் கிழிக்க தன் கொம்புகளைத் தாழ்த்தியது காளை. இதைப் பார்ப்பவர்கள் கலக்கமுற்றனர். மலரும் மணிப்பூண் ஒன்றை தன் தோளில் அணிந்த ஒருவன் பாய்ந்து சென்று காளையின் திமிழைப்பிடித்து காளையை வருத்தினான். இதைக்கண்ட காளையின் சொந்தக்காரிக்கு இவன் பகை ஆவானோ?

          இனி காளைகளின் ஆட்டம்...

மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் 
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் 

மேலே சுற்றும் நூற்கண்டின் நிறமும் சிறிய சிவந்த கண்களை உடைய காளை ஒன்று, தன்னை நோக்கிப் பாய்ந்தவனைக் குத்தி தன் கொம்பில் வைத்துச் சுழற்றுவதைப் பாருங்கள். இக்காட்சியானது. அழகியசீர் நடையழகியின் (திரௌபதி)கூந்தல் பற்றி இழுத்தவனின் ( துச்சாதனன்) நெஞ்சம் பிளப்பேன் என்று வஞ்சினம் கூறியவனின் (பீமன்) செய்கையை ஒத்திருந்தது.

தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் 
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன

காளையை அடக்குவோர் தொழுவத்துள் சுழன்று சுழன்று பாய்ந்தனர். அவர்களைக் காளைகள் பார்த்துப் பார்த்துக் குத்தின. கொம்புகளிலிருந்த மாலையை வீரர்கள் அறுத்தனர். சூலம் ஏந்திய சிவன் சூடிய பிறையில் இருக்கும் மாலையைப்போல் ஒருவனது குடலை தன் கொம்புகளில் வைத்துச் சுழன்றது ஒரு காளை.

ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர், 
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ

பெரும் கூச்சலுடன் காளைகள் மேல் பாய, காளைகள் அவர்களை எதிர்கொள்ள, கொம்புகளுக்கிடையே அவர்கள் போராட, இக்காட்சி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெற்ற போர்க்களம் போல் இருந்தது.

மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும், 
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு

வீரர்களில் சிலர் காளைகளின் கொம்பைப் பிடித்தனர். சிலர் திமிலைப் பற்றினர்.சிலர் காளைகளின் தோளில் தொங்கினர்.இவர்களைக் காளைகள் தங்கள் கொம்புகளால் தடுத்து நிறுத்தியது.

"தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர், 
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ"

இவ்வாறான ஏறுதழுவல் நடைபெற்று முடிந்தபிறகு காளைகள் மேய்ச்சல் நிலத்திற்கு விடப்பட்டன. ஊரார்களும் மற்றவர்களும் ஊர் மன்றத்தில் கூடி ஒருவரையொருவர் கட்டித்தழுவி தழுஉ கூத்தாடினர்.

"ஆங்கு,
குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி, 
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே"

இவ்வாறான ஏறுதழுவுதல் நமது மரபாகும்.இதனைப் பாடி குரவைக்கூத்து ஆடி மங்காத புகழ் கொண்ட நம்தெய்வத்தைப் போற்றுவோம். கடலால் சூழப்பட்ட இந்நிலத்தை ஆளும் அரசன் வாழ்க.

          இம்மலர்ந்த உலகமும் வாழ்க.....



தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)





No comments:

Post a Comment