Monday, January 6, 2020

சமூகப்பிரிவினைக்கு வித்திட்ட பிரம்மதேயங்கள்


சமூகப்பிரிவினைக்கு வித்திட்ட பிரம்மதேயங்கள்

  முனைவர் எஸ்.சாந்தினிபீ


            நம் சமுதாயம் வாழும் பல பகுதிகளில் சிலர் ஊருக்கு உள்ளேயும் சிலர் வெளியேவும் வாழும் அவலம் தொடர்கிறது. யாதும் ஊரே யாவரும் உறவினராக வாழச் சொன்ன பரந்த நோக்கமுடைய மூத்தோர்களின் வாரிசுகளுக்கு இப்படி கீழ்த்தரமான சிந்தனையும் வாழ்க்கையும் எப்போது, எப்படி ஏற்பட்டது என நம்மில் பலர் ஆலோசித்திருக்கலாம். இதற்காக நம் வரலாற்றைப் புரட்டினால் விடை கிடைக்கும். வரலாறு என்பது நமது பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்வைச் சொல்லும் கதைதானே.

            ஓர் இடத்தில் வாழ்ந்த மனிதஇனம் பல்வேறு காரணங்களுக்காக பன்னெடுங்காலமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இதற்குத் தமிழகம் விதிவிலக்கல்ல. இத்தகைய காலச் சுழற்சியில் தென்னகத்தில் வடபுலத்தோர் வாழ வந்தனர். குறிப்பாகத் தமிழகத்தில் கி.பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் கிடைக்கும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் இத்தகைய மாற்றத்தை மிகத் தெளிவாகச் சொல்லுகின்றன. வெவ்வேறு கலாச்சார மக்கள் ஓரிடத்தில் இணைந்து வாழும்போது, கலாச்சாரக் கலப்பு ஏற்படுவதும் இயற்கையே. அதுவும் ஆட்சியாளர்களின் ஆதரவு எந்த கலாச்சாரத்தின் பக்கம் சாய்கிறதோ அதுவே மேலோங்கி செழிக்கும் என்பது நமக்கு வரலாறு சொல்லும் செய்தி.

            பல்லவர்கள் வடபுலத்து மொழியையும் பார்ப்பன கலாச்சாரத்தையும் ஆதரித்து வளர்த்தனர் என்பதே வரலாறு. இக்காலத்தில் வளரத் துவங்கியதில் முக்கியமாக இன்றும் நம்மிடையே இணைந்திருக்கும் கோவில் கலாச்சாரம் ஆகும். இந்த நிலை கிட்டத்தட்ட ஆங்கிலேயர் ஆட்சிவரை நீடித்தது. அதுவரையிலும் ஆள்பவர்கள் மாறினார்களே தவிர, கோவிலுக்கான கொள்கையில் மாற்றமில்லை. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கூட கோவில்களுக்கு நிலமும் பொருளும் தானமாகக் கொடுத்தனர். உதாரணமாக இன்று சேலத்திலுள்ள சுகவன ஈசுவரன் கோவிலுக்கு திப்பு கொடை அளித்துள்ளார்.

            கடந்த காலத்தில், பெரும்பாலான பார்ப்பனர்கள் தானாக வந்தாலும், அரசனால் குடியமர்த்திய போதும் நம் தென்னகச் சமுதாயத்தோடு ஒன்றி வாழவில்லை. இதைக் கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் தெளிவாகச் சொல்கின்றன. இதன்றி, பார்ப்பனர்கள் பல சலுகைகளும் பெற்று நாடாண்ட மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாய் வாழ்ந்தனர். இப்படிப் பார்ப்பனர் மட்டுமே தனித்து வாழ அரசாண்டோர் உண்டாக்கிய புது ஊர்களே பிரம்மதேயங்களாகும். சில நேரங்களில் பல ஊர்களை ஒன்றாக இணைத்து புதிய பெயருடன் ஒரு பிரம்மதேயம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் அரசகுலத்தோரின் பெயர்களும் பட்டங்களும் இப்புதிய குடியேற்றங்களுக்குச் சூட்டப்பட்டது. இதற்கு உதாரணமாக அருண்மொழிதேவ சதுர்வேதி மங்கலம், திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம், இராஜஸ்ரீய சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களைக் கூறலாம்.

            இவ்வூர்களில் குடியேறிய பார்ப்பனர்களுக்கு விலையின்றி நிலம் தானமாக வழங்கப்பட்டது. பல சமயங்களில் அதற்கு நிலவரியும் ரத்து செய்யப்பட்டது. இவர்களுக்கு முன்பாக அங்கு வாழ்ந்தோர் வேறு ஊர்களுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டனர். பல வேளைகளில் குடிகள் எனப்பட்ட விவசாய கூலிகளும் வெளியேற்றப் பட்டு புதியவர்கள் நில உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த பிரம்மதேயங்களில் பார்ப்பனர் மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்தனர். இந்த பிரம்மதேயம் எனும் ஊர், சேரிகள் எனும் உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. முறையான திட்டமிடப்பட்ட தெருக்கள், குடியிருப்பு, தோட்டம், ஊரின் நடுவே விஷ்ணு கோவில், ஏரி குளம் போன்ற நீராதாரம் ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. சில பிரம்மதேயங்களில் வணிகர்களும், நெசவாளர்களும் பிற்காலத்தில் ஊருக்குள் வாழ்ந்துள்ளனர். இதற்கு, தஞ்சாவூர், உத்திரமேரூர் ஆகியவை உதாரணம் ஆகும். கோவில் நடப்புகளுக்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களின் அன்றாட தேவைக்கான உணவு, உடை, பாத்திரம், பண்டங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு ஒரு திட்டம் நடைமுறையில் வந்தது. அதுவே ‘’உள்ளே வெளியே” என்ற விபரீதத்திற்கு வித்திட்டது.

            பிரம்மதேயத்தின் எல்லையை ஒட்டியிருந்த ஊர்கள் கோவிலுக்கும் பார்ப்பனர்களுக்குமான நன்கொடைகளாக மாறின. இவற்றைப் பிடாகை என்றழைத்தனர். சில பிரம்மதேயங்கள் பத்துக்கும் மேற்பட்ட பிடாகைகளைக் கொண்டிருந்தன. பிடாகைகள் பிரம்மதேய ஊருக்குச் சொந்தம் என்றாலும் நடைமுறையில் பிரம்மதேயமும், பிடாகையின் செயல்பாடுகளும் இருவேறுவிதமாக இருந்தன. பெரும்பாலான விளைநிலங்கள் பிடாகையிலிருந்தன. இவர்களுடன் பயிர் செய்யும் தொழிலாளிகள், குயவர்கள், கால்நடை மேய்ப்போர், வண்ணார், தச்சர், கொல்லர் போன்ற தொழிலாள குடும்பங்கள் பிடாகையில் வாழ்ந்தனர். இவ்வாறாக, ஊர் எனும் பிரமதேயத்திற்கு வெளியே தொழிலாளர்களைக் குடியமர்த்தல் பார்ப்பனர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

             உதாரணமாக திரிபுவனியில் பல நெசவாளர் குடும்பங்கள் இவ்வூரின் தென் பிடாகையில் குடியமர்த்தப்பட்டனர்(கல்வெட்டு 208/1919). திரிபுவனிக்கு தெற்கே இருக்கும் புத்தூர் பார்ப்பனர்களின் பிடாகையாக பிரம்மதேயத்துடன் இணைகிறது. இந்த இணைப்பிற்குப் பின் புத்தூர் எனும் பெயர் ஜனநாத நல்லூர் என மாற்றப்படுகிறது. இந்த தென் பிடாகையில்தான் ஜனநாத வில்லிகள் எனும் வில் படை வீரர்களும் இருந்தனர்(கல்வெட்டு 199/1919). இதே பிரம்மதேயத்தின் கிழக்கு பிடாகையான வீரசோழ நல்லூரில் வாழ்ந்த ஒரு பெண்பணியாளர்  திருபுவனி ஆழ்வார் கோவிலுக்கு 12 ஆடு கொடை அளித்ததையும் அறியமுடிகிறது(கல்வெட்டு193/1919). இன்றைய புதுச்சேரியில் உள்ள பாகூர் சோழர்காலத்தில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியது. இதை, அழகிய சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தனர். இந்த பிரம்மதேயத்தின் மேற்கில் அமைந்த பிடாகை அவியனூர் சேரியில் வாழ்ந்தவன் பள்ளி கேசன். சேந்தனின் மகனான கேசன், பாகூர் ஆழ்வார் கோவிலுக்கு விளக்கு ஒன்று தானமாகக் கொடுத்துள்ளார். இப்படி பிரம்மதேயங்களின் பல பிடாகைகள் குறித்துச் சொல்லலாம்.

            தொழிலாளர்கள் பிடாகைகளில் வாழ்ந்ததற்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்குப் பார்ப்பனர்கள் எப்படி காரணமாவார்கள்? என்ற ஐயம் தோன்றுவது இயல்பே. இதற்கும் கல்வெட்டுகளே விளக்கம் சொல்லும். மன்னனின் ஆணைகள் மூலமாகவே பிரமதேயத்திற்குச் சலுகைகள் கிடைத்தன. இத்தகைய அரசாணைகள் நாட்டார் எனும் நாடு பிரிவு நிர்வாக அமைப்புக்கு அனுப்புவார்கள். நாட்டார்கள் பிரம்மதேய நிர்வாகத்தைக் கவனிக்கும் அமைப்பான ’சபை’க்கு கொடுப்பார்கள். இந்த சபையில் பிரம்மதேயவாழ் பார்ப்பனர்களே அங்கத்தினராவார்கள். இந்த சபையோரே மன்னனிடம் சலுகைப் பெற்று இடம்பெயர்ந்து பிடாகைகளில் வரும் தொழிலாளர்களுக்கு வாழ்விடங்களை ஒதுக்குவார்கள்.

            அரங்கன் கொமாரன் என்னும் ஒரு தட்டானுக்கு(தங்க நகை செய்பவன்)  மன்னன் முதலாம் ராஜாதிராஜன், திரிபுவனியில் தட்டார் பணி செய்யும் உரிமையும் அதற்கான சன்மானமாக தட்டார்காணியான நில உரிமையும் பெறக் கட்டளையிடுகிறார். இவன் மன்னனின் பெயரைப் பட்டமாகப் பெற்று ராஜராஜப் பெருந்தட்டான் என்று அழைக்கப்பட்டான். வழக்கப்படி மன்னனின் கட்டளை வரப் பெற்ற சபையோர் இவனுக்கு நிலம் ஒதுக்குகிறார்கள் (கல்வெட்டு 210/1919). இப்படி தங்கள் பிரமதேயத்திற்குக் கிட்டும் வசதி வாய்ப்புகள் எதுவாக இருப்பினும் அதனைச் செயல்படுத்தும் விதமும் முறையும் இந்த சபையே முடிவு செய்தது. இப்படித்தான் நெசவாளர்களைச் சபை குடியமர்த்தியது.

            இந்த உழைப்பாளிகளுக்கும் பிரம்மதேயத்திற்கும் தொடர்பு இருந்தது. இவர்களின் உடலுழைப்பால் விளைந்த பொருட்கள் கோவிலுக்கும் பிராமணருக்குமான அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்தது. அதே நேரத்தில் நெசவாளர்களின், குயவர், வண்ணார், தச்சர், தட்டான் மற்றும் விவசாய கூலிகள்  போன்ற அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான தொழிலும் பொருளாதாரமும் பிரம்மதேயத்தின் மூலம் கிடைத்தன. ஒருவரின் தேவை மற்றவருக்குப் பயன்பட்டு இருவரும் இணைந்தே அல்லது சார்ந்தே வாழ்ந்தபோதும் பிடாகைவாழ் தொழிலாளர்களுக்கு ஊருக்குள் வாழும் உரிமை மறுக்கப்பட்டது. இதற்குச் சாத்திரங்கள் என்றழைக்கப்பட்ட வடமொழி நீதி நூல்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டன.  

            இதன் அடிப்படையில், பதினோராம் நூற்றாண்டில் சிலருக்கு ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இன்றைய புதுவையில் உள்ள திரிபுவனியில் குயவர்களுக்குச் சாத்திரத்தின் அடிப்படையில் ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்டது. பிரம்மதேயத்திற்க்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பிடாகைகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. இதன்படி, பிரம்மதேயங்களில் இணைக்கப்பட்டதால் தாம் அந்த ஊருக்குள் வாழ்வதாக பிடாகையினர் எண்ணினர். ஆனால், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை பிரம்மதேய எல்லைகளில் அமைந்த பிடாகைகள் ஊருக்கு வெளியே அமைந்தவை ஆகும். தனது சபை என்னும் நிர்வாக அமைப்பை பிரம்மதேயத்தில் பார்ப்பனர்கள் அமலாக்கி இருந்தனர். அதேசமயம், பிடாகைகளின் நிர்வாகம் சபைகளின் கீழ் அன்றி ஊர் என்னும் அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால், பிடாகை வாசிகளுக்குச் சொந்தமான நிலங்களில் போதிய வருவாய் இல்லாததால், ஊர் எனும் நிர்வாகம் வலிமையற்றதாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம் போல் பிடாகைகள் பிரம்மதேயங்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தன.

            பிரம்மதேயங்கள் முறையாகத் திட்டமிடப்பட்டு தெருக்கள் கோவில்கள் வாழ்விடங்கள் என அமைக்கப்பட்டன. ஆனால் இத்தகைய திட்ட முறையைப் பிடாகைகளில் பின்பற்றப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. நாட்டின் வருமான நிர்வாகத்தின் வரி புத்தகங்களில் பிரம்மதேயமும் அதைச் சார்ந்த பிடாகைகளும் ஒரே ஊராகக் காட்டப்பட்டாலும் இவை இரண்டும் தனித்தனியாகவே செயல்பட்டன. பிடாகைவாழ் மக்கள் தாங்கள் ஊருக்குள் வாழ்வதாக நினைத்தார்கள் ஆனால் பிரம்மதேயத்தோர் இவர்களை ஊருக்கு வெளியே வாழும் நிலைக்குத் தள்ளி இருந்தார்கள். இப்படியாக ஒரே ஊரில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் கட்டமைக்கப் பட்டன. ஒருவரை மற்றொருவர் சார்ந்திருந்தும் பிரமதேயத்துப் பார்ப்பனர் முதலாளிகளாகவும், இவர்களது வேலையாட்களாக பிடாகைவாழ் மக்கள் வேறுபட்டனர். இந்த வேறுபாடு காலப்போக்கில் மோசமாகி பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும், பிடாகையினர் தாழ்ந்தவர்களாகவும் அவதரித்தனர். இதற்குச் சோழத் தலைநகர் தஞ்சையும் விதிவிலக்கல்ல. இடையர், யானை மற்றும் குதிரைப் படைகளில் பணிசெய்தவர் பலரும் ஊருக்கு வெளியே வாழ்ந்ததைத் தஞ்சை கல்வெட்டுகள் சொல்கின்றன. நெசவாளர்களின் குடியிருப்பு மட்டுமே தஞ்சை நகருக்குள் இருந்த தகவலைக் கல்வெட்டுகளில் காணலாம். இதற்கு நெய்தல் ஒரு வணிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.

            இதுபோன்ற வேறுபாடுகளை மக்கள் வழிபடும் கோயில்களிலும் பார்ப்பனர்கள் விட்டுவைக்கவில்லை போல. பிடாகைகளில் பெரும்பாலும் சிவன் மற்றும் துர்கையின் கோவில்களே இருந்தன. ஆனால் பார்ப்பனர்களின் முக்கிய கடவுள்களில் ஒன்றான விஷ்ணு கோவிலைக் காணவில்லை. திரிபுவனியின் கிழக்குப் பிடாகையில் ஒரு துர்கைக் கோவிலிருந்தது எனக் கல்வெட்டு மூலம் அறிகிறோம் (கல்வெட்டு 207/1919) திரிபுவனி ஊருக்கு வெளியே தெற்கு திசையில் ஒரு சிவன் கோவிலும் துற்கை கோவிலும் இருந்தது (கல்வெட்டு 175/1919).  இப்படி வேறுபாடுகள் பல இருந்த போதும், பிடாகை வாழ் மக்கள் பிரம்மதேயக் கோவில்களுக்கு ஆடு, மாடு, நிலம் மற்றும் பொருள் எனப் பல தானங்களைச் செய்த தகவல்களையும் கல்வெட்டுகள் தருகின்றன.

            எல்லையில் அமைந்த ஒரு ஊர் பிரம்மதேயங்களுடன் இணைக்கப்பட்டதும் அங்கே வாழ்ந்த மற்றும் குடியமர்த்தப்பட்ட தொழிலாளிகள் ஊருக்கு வெளியே வாழ்பவர்கள் ஆனார்கள். காலப்போக்கில் இதுவே வழக்கமாகி எல்லா ஊர்களிலும் தொழிலாளிகள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். கைவினைஞர்கள், மற்றும் தொழிலாளிகளின் உடலுழைப்பு தனது பெருமையை இழந்து பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டது. ஒரே ஊரிலிருந்த பின்பும் அதன் உள்ளே, வெளியே எனப் பார்ப்பனர்களின் மக்களை வேறுபடுத்தும் திறமையினால் சமூகம் பிரிக்கப்பட்டது.
நன்றி: கணையாழி இலக்கிய மாத இதழ்,  ஏப்ரல், 2019


தொடர்பு:
முனைவர் எஸ்.சாந்தினிபீ (chandnibi@gmail.com)
வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்
உபி  அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்
அலிகர்-202002


No comments:

Post a Comment