Showing posts with label கோ.செங்குட்டுவன். Show all posts
Showing posts with label கோ.செங்குட்டுவன். Show all posts

Monday, September 2, 2019

கோப்பெருஞ்சிங்கனின் அண்ணமங்கலம் கல்வெட்டு

  —   கோ.செங்குட்டுவன்



“சொக்கப் பல்லவன் வாய் சொல்லும் வன்னிய மணாளன்”

            நீண்டு வளர்ந்த பாறை. அதன் ஒரு முனையில், ஆண் யானையின் பிடரியைக் கவ்வி இருக்கிறது, ஒரு ஆண் சிங்கம். சிங்கத்தின் கண்கள் உருண்டு திரண்டு இருக்கிறது. அதன் ஒருபக்கப் புருவத்தின் மீதுதான் மேற்காணும் வாசகம் கல்வெட்டாக வெட்டப்பட்டு உள்ளது. இதன் காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு!

            விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலத்தில் செங்காட்டுக் குன்று என்றும் ஆனைமலை என்றும் அழைக்கப்படும் மலையின் மீதுதான் மேற்காணும் சிற்பமும் கல்வெட்டும் காணப்படுகின்றன.

            யானை: மூன்றாம் ராஜராஜன். 
            அதன் பிடரியைக் கவ்வி நிற்கும் சிங்கம்: கோப்பெருஞ்சிங்கன்.

            ஆகா… அழகிய உவமை! அழகான சிற்பம்!

            மாபெரும் வரலாறு இங்கே அமைதியாகக் காட்சி அளிக்கிறது! பாண்டிய மன்னனிடம் தோற்ற சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜராஜன், குந்தள அரசனிடம் ஓடினான். தெள்ளாறு அருகே அவனை வழிமறித்த காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன், சோழ வேந்தனையும் அவன் படையினரையும் சிறைபிடித்தான் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.



            சிறைபிடிக்கப்பட்ட சோழ மன்னனும் அவனதுப் படை பரிவாரங்களும், சேந்தமங்கலம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அண்ணமங்கலம் மலைக் குகையில் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார் அண்ணமங்கலம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் செஞ்சிக் கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்றச் செயலாளருமான திரு.நா.முனுசாமி அவர்கள்.

            தன் சொந்த ஊரின் மீதும் அதன் வரலாற்றின் மீதும் இவருக்கு அவ்வளவு ஈடுபாடு: அக்கறை! வரலாற்றுத் தடயங்களைத் தேடி ஊருக்கு வரும் ஒவ்வொருவரையும் சளைக்காமல் மலைக்கு அழைத்துச் சென்று காண்பிக்கிறார், திரு.முனுசாமி.

            மலைமீது மட்டுமல்ல, நிலப்பரப்பிலும் ஏரியிலும் வரலாற்றுத் தடயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கிறது அண்ணமங்கலம்.

            நீங்களும் ஒரு முறை இங்குப் போய் வரலாம்!


குறிப்பு:
அண்ணமங்கலம்: செஞ்சியிலிருந்து வளத்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தலைமை ஆசிரியர் திரு.முனுசாமி அவர்களின் தொடர்பு எண்: 99949 43787


தொடர்பு: கோ. செங்குட்டுவன் (ko.senguttuvan@gmail.com)






Sunday, September 9, 2018

பல்லவர் கால விநாயகர் மீட்பு


—  கோ. செங்குட்டுவன்



இதுவும் வரலாறு மீட்பு தான்…

ஒரே மண்டபம். ஆனால் இரண்டு விநாயகர் சிற்பங்கள்.

பின்னால், பலகைக் கல்லில் பிரம்மாண்டமாய் காட்சி தருபவர், பல்லவர் காலத்திய, இடம்புரி விநாயகர்.  ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்.

முன்னால் இருப்பவர், குட்டி விநாயகர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தபோது, யாரோ ஒரு பக்தரால் குடியேற்றப் பட்டவர்!



விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர், அபிராமேசுவரர் கோயில் வளாகத்திற்குள் தான் இந்தக் காட்சி.  பல்லவர் காலத்திய விநாயகருக்கு, சோழர்கள் மண்டபம் கட்டி இருக்கின்றனர்.

ஆனால், அண்மைக் காலத்திய அறநிலையத் துறையினர் புது பிள்ளையாருக்கு அனுமதி கொடுத்து விட்டனர்.  இதுபற்றி நம்முடைய தொல்லியல் ஆய்வாளர்கள், அறநிலையத்துறை கவனத்துக்கு எடுத்துச் சென்று, புதுப் பிள்ளையாரை அகற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் துறையினர் ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது தான் அதிசயம்!

நேற்று, இந்தக் கோயிலில் கல்வெட்டு மீட்புப் பணி நடந்தது. அப்போதுதான் ஒரே அறையில் அடைபட்டுக் கிடந்த இரண்டு விநாயகர்களுக்கும் விடுதலைக் கிடைத்தது.

கரிகால சோழன் மீட்புப் படையினர் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் குழுவினர்  புதிய விநாயகரை வெளியே அழைத்து வந்தனர். கோயிலின் வடக்கில் உள்ள வன்னி மரத்தடிக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிறப்பாக அமர வைக்கப்பட்டார்.



பல்லவர் கால, இடம்புரி விநாயகர் இப்போது, நிம்மதிப் பெருமூச்சு விடுவார் என நம்புகிறோம்!



இதுவும் ஒரு வகையில் வரலாற்று மீட்பு தான்.

இதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த கல்வெட்டு ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்… நன்றிகள்…



___________________________________________________________
தொடர்பு: கோ. செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
https://www.facebook.com/ko.senguttuvan








Monday, February 26, 2018

ஆரோவில்லில் கலைஞர்...



——   கோ.செங்குட்டுவன்.




விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அப்போதுதான், சர்வதேச நகரமாக உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்ட தமிழக அரங்கிற்கான அடிக்கல் நாட்டுவிழா, 1973ஆம் ஆண்டு, அக்டோபரில் நடந்தது.

விழாவுக்குத் தலைமை அமைச்சர் நாவலர். இதில் பங்கேற்ற, முதல்வர் கலைஞர், தமிழக அரங்குக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதன் சுருக்கம் வருமாறு:
‘விழாத் தலைவர் நம் நாவலர் அவர்கள் புறநானூறு பாடிய பெரும்புலவன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து ஓதியிருக்கிறான் என்று குறிப்பிட்டார்கள். அவர் அப்படிக் குறிப்பிட்டபோது ஓர் இளம் நண்பர் வேகமாக என் பின்னே ஓடிவந்து ஒருவேளை அந்தப் புறநானூற்றுக் கவிஞன் இந்தக் கிராமத்திலேதான் பிறந்திருப்பானோ என்று என்னிடத்தில் கேட்டார்.

அவன் இந்தக் கிராமத்தில் பிறந்தானோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அந்த முழக்கம் தமிழ்நாட்டிலே இருந்து உலகுக்கு அறிவிக்கப்பட்டது என்பது புறநானூற்றுக் காலத்திலே மாத்திரம் அல்ல, அதற்குப் பிறகு பல்லாண்டு காலம் கடந்தபிறகு இப்போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறிவிப்பதும் தமிழ்நாட்டிலே இருந்துதான் என்று எண்ணுகிற நேரத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு பல்வேறு உணர்ச்சிகளுக்கு, பல்வேறு உன்னதமான நிலைகளுக்கு வழிகாட்டுகிற நாடாகும்.

ஆரோவில் என்றால் பிரெஞ்சு மொழியில் புதிய நகர் அல்லது புதிய வாழ்வு உதயம் என்று பொருள். பிரெஞ்சு மொழியில் சொல்லிப் பார்த்தாலும் அது பொருத்தமாக இருக்கிறது. ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்துச் சொல்லிப் பார்த்தாலும் ஒரு வகையிலே இது பொருத்தமாக இருக்கிறது. உள்ளபடியே இது ஒரு மகத்தான சாதனையாகும். இந்த மகத்தான சாதனையினுடைய விளைவை உடனடியாக நாம் காணமுடியுமா என்றால் – நாளைக்கோ, நாளைய மறுநாளைக்கோ கண்டுவிட முடியுமா என்றால்  – இயலாது. ஆனால் இதற்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் இன்றைக்கே நிச்சயித்துக்கூற முடியும். அந்த எதிர்காலத்தை இப்போதே அமைத்துக் காட்ட இயலாது.

ஒரு இணைப்பு – அதாவது ஒரு சங்கமம்  – மாநிலத்துக்கு மாநிலம் அல்ல – நாட்டுக்கு நாடு – உலகத்திலே இருக்கிற பல்வேறு நாடுகளுக்கு இடையே இங்கே உருவாகிறது. நாங்கள் உலக அளவிலேகூட இணைப்பை விரும்புகிறவர்கள். இணையாமல் இருக்கிற தன்மையை எந்த நேரத்திலும் நாங்கள் விரும்பாதவர்கள். நாங்கள் என்றைக்கும் உலக அரங்கத்தில் இணைப்பை விரும்புகிறவர்கள். இந்த ஆரோவில் நகரம் நல்ல முறையிலே வளர்வதைத் தமிழ்நாடு அரசு தனக்குற்ற ஒரு இலட்சியமாகக் கொண்டு ஒத்துழைப்பை எந்த அளவுக்குத் தருமோ அந்த அளவுக்குத் தரும்.’

இவ்வாறு கலைஞர் பேசினார். ஆரோவில் இன்று வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.


படம் உதவி: விக்கிப்பீடியா

________________________________________________________________________
தொடர்பு: கோ.செங்குட்டுவன் <ko.senguttuvan@gmail.com>




Wednesday, December 27, 2017

தமிழ் வெளியீட்டுக் கழகம் . . .



——   கோ.செங்குட்டுவன்


          அண்மையில், விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலைக்குச் சென்ற நான், அதன் தாளாளர் திரு.பெ.சு.இல.இரவீந்திரன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், பள்ளியின் நூலக அறையினை எனக்குக் காண்பித்தார். அங்கு ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும், இரவீந்திரன் அவர்களின் தந்தையார் திருவாளர். பெ.சு.இலட்சுமணசுவாமி அவர்கள் இருபத்தைந்து,  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்தவை.




          என் பார்வையில் பட்ட நூல்களில் ஒன்று, “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்”–எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியது. ஏராளமானப் புகைப்படங்களுடன் 455 பக்கங்களில் வெளிவந்துள்ள அற்புதமான நூல். 1966 மார்ச்-ல் முதற்பதிப்பைக் கண்ட இந்நூலின் விலை ரூ.9.

          ஆனாலும், அதில் என் கவனத்தைக் கவர்ந்தது, “தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு–அரசாங்கம்” என்றிருந்ததுதான். ஆமாம். தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் தான் இந்நிறுவனம் இயங்கியிருக்கிறது.   1962இல் நிறுவப்பெற்ற தமிழ் வெளியீட்டுக் கழகம் 1966 வரை 136 நூல்களை வெளியிட்டுள்ளது.

          1966ஆம் ஆண்டில் மட்டும், இந்த நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரம், வரலாறு, அரசியல், உளவியல், தத்துவம், அறவியல், அளவையியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், புள்ளியியல், விலங்கியல், பௌதிகவியல், மருத்துவம், பொதுநூல்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் 72 நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

          இந்தியப் பொருளாதாரம் பற்றி மட்டுமல்லாமல், இங்கிலாந்து பொருளாதார வரலாறு, அமெரிக்காவின் நவீன பொருளாதார வளர்ச்சி, கிரேட் பிரிட்டனில் தொழில் வாணிபப் புரட்சி, கிரேக்க வரலாறு ஆகியவை குறித்தும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

          தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 101ஆவது வெளியீடான “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள, அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள், “தமிழை ஆட்சி மொழியாக அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழுக்கு ஆக்கம் தேடுகின்ற முறையில், இன்னும் மகத்தான அளவில் தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் வெளியீட்டுக் கழகம் நிறுவப்பெற்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.

          பரவாயில்லை நல்ல முயற்சிதான். இது எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது எனும் விவரம் தெரியவில்லை.

          தமிழ்நாட்டில் காங்கிரசு அரசாங்கம், குறிப்பாக பக்தவச்சலனார் அரசாங்கம் என்றதுமே வேறு மாதிரியான பிம்பங்கள்தான் நம்முன் வந்து நிற்கின்றன. ஆனாலும் இதுபோன்ற நல்ல காரியங்களும் தமிழுக்கு நடந்துதான் இருக்கிறது..! 



________________________________________________________________________
தொடர்பு: கோ.செங்குட்டுவன் <ko.senguttuvan@gmail.com>





Thursday, March 16, 2017

விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி...



--கோ.செங்குட்டுவன்

இந்தியாவில் ஐரோப்பியர்களின் மிச்ச சொச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள், அவர்களின் கட்டடங்களைச் சொல்லலாம்.

தமிழகத்தில் இரயில் பாதையின் நெடுகிலும், முக்கிய சந்திப்புகளில் இந்த மாதிரியானக் கட்டடங்கள் நூறாண்டைக் கடந்தும் நம்முன் வாழ்ந்து வருகின்றன.

அவர்கள் உருவாக்கிய இரயில்வே குடியிருப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவைதாம்.

உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரையிலுமாக அனைவருக்கும் குடியிருப்பு. ஒவ்வொரு நிலையினருக்கும் தனித்தனியான வடிவமைப்புகளில் வீடுகள்.

சில, ஓடுகள் மட்டும் வேயப்பட்டும், மேலும் சில ஓரடுக்கு, ஈரடுக்குடனும் காட்சியளிக்கும்.

ஆனாலும், ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் கண்டிப்பாகத் தோட்டம் உண்டு. ஒட்டுமொத்தமாக இக்குடியிருப்புகளை மரங்கள் சூழ்ந்திருக்கும்.

ஐரோப்பியர்கள் அழகியல் உணர்வுடையவர்கள் என்பதற்கு இத்தகுக் குடியிருப்புகள் சான்றுகளாகும்.

தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த இரயில்வே குடியிருப்பாக அமைந்திருப்பது, விழுப்புரத்தின் வடக்கு இரயில்வே காலனி.

ஒரு காலத்தில், சட்டைக்காரர்கள் காலனி என்றழைக்கப்பட்டப் பகுதி. அப்போதெல்லாம், விழுப்புரம் இரயில் நிலையத்தில், ஆங்கிலோ இந்தியர்கள்தான் பெருமளவில் பணியில் இருந்திருக்கின்றனர்.

அவர்கள் குடியிருந்த இந்தப் பகுதி, மக்கள் மொழியில், சட்டைக்காரர்கள் காலனி எனப்பட்டது.

பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குடியிருப்பு, விழுப்புரத்தின் தனி உலகம்.

காலம் மாறியது. ரயில்வேயில் ஆங்கிலோ இந்தியர்களின் ஆதிக்கம் குறைந்தது. அவர்களின் புலம்பெயர்வுகளும் தொடங்கின.

இப்போது, விழுப்புரத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான், இந்தச் சட்டைக் காரர்கள் வசிக்கின்றனர்.

வடக்கு இரயில்வே காலனியிலும், பெரும்பாலான வீடுகள் காலியாகவே கிடக்கின்றன. இதில் மிகப்பல வீடுகள் சிதிலமடைந்து, டிமாண்டி காலனிபோல் காட்சியளித்து வருகின்றன.

இத்தகைய வீடுகளை இடித்து அகற்ற முடிவுசெய்துள்ள இரயில்வே நிர்வாகம், கடந்த சில நாள்களாக அந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

பல வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டன. இடிக்கப்பட்டும் வருகின்றன.


இடிக்கப்பட்ட இடங்களில் வெள்ளைக் கற்களின் குவியல். ஆம், செங்கற்கள் அப்படித்தான் காட்சியளிக்கின்றன.

கட்டடம் முழுக்க சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டுள்ளதே, இதற்குக் காரணம்.


ஐம்பது, நூறாண்டுக்கு முன்பு பலரது கனவுகளையும், கற்பனைகளையும் சுமந்து திரிந்த இந்தக் கட்டடங்கள், இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டன.

இதில் வாழ்ந்தவர்கள், இப்படிப் பார்க்கும்போது, அவர்களது மனசு நிச்சயம் கனத்துப் போகும்!

பழையன கழிதல் வேண்டும்தானே?

பழைய கட்டடங்கள் இடிக்கப்படும் அதே நேரம், இங்குள்ள மரங்கள்..?

இந்த மரங்களுக்கு எப்படியும் குறைந்தபட்சம் ஐம்பது வயதாவது இருக்கலாம்.

நகரமயத்திற்கு இரையாகிவிட்ட விழுப்புரத்தில், உயிர் வாழும் வனமாக இருப்பது, வடக்கு இரயில்வே காலனி மட்டும்தான்.

எத்தனை விதமான மரங்கள், அதிலிருந்து வீசும் வாசங்கள், பெயர் தெரியாத பறவைகளின் சங்கீத ஒலிகள்... இந்த மரங்கள், வனம் வாழத்தான் வேண்டும்..!

மேலும், இடிக்கப்பட உள்ள கட்டடங்கள் சிலவற்றின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இப்போது...

சில கட்டடங்களைப் பழமை மாறாமல் பாதுகாக்கலாம்.




 பழையனவற்றின் எச்சங்கள் இருக்கத்தான் வேண்டும். வருங்கால தலைமுறையின் நினைவுகளுக்காக இருக்க வேண்டும்.

ஏன், புதுவையில் இன்னும் பிரெஞ்சுப் பெயர்களில் ஆன வீதிகள், கட்டடங்கள், காவல்துறையின் சீருடைகள் இன்றளவும் நின்றுள்ளனவே?     





_____________________________________________________

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

Thursday, November 17, 2016

பட்டம் பற... பற... காத்தாடி வெங்கடேசன்

--கோ.செங்குட்டுவன்




பட்டம் பறக்க விடுவது என்பது சிறுவயதில் நமக்குக் கிடைத்தச் சுகமான அனுபவம். இந்த அனுபவத்துக்காக நாம் பட்டபாடு... அப்பப்பா சொல்லி மாளாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அந்த அனுபவங்கள் ஒளிந்திருக்கின்றன. அவையெல்லாம் நம் குழந்தைகளுக்கு இன்றும் கிடைக்கின்றதா? முழுமையாக என்று இல்லாவிட்டாலும்கூட, இன்றும் குழந்தைகள் பட்டம்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருச்சியிலோ அல்லது கோவையிலோ வானில் பட்டங்கள் பறந்து கொண்டிருந்தால், அவை விழுப்புரம் பட்டங்களாகத்தான் இருக்கும் என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் வெங்கடேசன் (வயது 48). விழுப்புரம் வடக்கு ஐயனார் குள வீதியில் 40 ஆண்டுகளாகப் பட்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் இவர். பட்டம் என்று சொல்கிறோமே இந்தக் காத்தாடிக்குப் பேர் போனது கொல்கத்தா தானாம். அங்கு மக்களின் மகிழ்ச்சி பட்டங்களாகப் பறந்து கொண்டிருக்கும். இதற்காக, கொல்கத்தாவுக்குச் சென்று சிலநாட்கள் தங்கியிருந்து தொழில்முறை குறித்து வெங்கடேசன் கற்று வந்திருக்கிறார். 





பட்டம் செய்வதற்கு முக்கியத் தேவையான அந்தக் குச்சி(பேம்)கூட கொல்கத்தாவிலிருந்து விழுப்புரத்துக்கு வரவழைக்கப் படுகிறது. பட்டம் செய்யும் தொழிலானது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில்தான் நடக்கிறது என்று சொல்லும் வெங்கடேசன், ‘இப்போதும்கூட திருச்சிக்கு அனுப்புவதற்காகப் பட்டங்களை செய்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார். இப்படியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுவையில் இருந்தும் இவருக்கு ‘ஆர்டர்’கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தொழிலில் வெங்கடேசனின் மிகப்பெரிய மூலதனமே அவரது உழைப்புதான். காலை ஏழு மணிக்கே தனதுப் பணியைத் தொடங்கிவிடுகிறார். இரவு வரை இது தொடர்கிறது.

‘கொஞ்சம் சோர்ந்துவிட்டால் அவ்வளவுதான்’ என்று சிரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது உதடுகள்தான் அசைகின்றனவே தவிர, அவரது கைகளும் கண்களும் வேலையின் மீதே கவனமாக இருக்கின்றன. ‘இப்படி சோம்பல் இல்லாமல் உழைத்தால், எப்படியும் மாதம் ஒன்றிற்கு 3ஆயிரம் பட்டங்கள் வரை செய்து விடலாம்’ என்கிறார் வெங்கடேசன்.

‘சரி. குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துவிட்டச் சூழலில், இந்தத் தொழிலில் பாதிப்பு இல்லையா?’ கேட்டேன்.

‘இல்லை’ என்று சொல்லும் அவர், ‘தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பட்டங்கள் பறந்து கொண்டுதான் இருக்கிறது’ என்கிறார். அதே நேரம் பட்டம் தொழில் முன்பு போல இல்லை எனும் உண்மையையும் அவர் ஒத்துக்கொள்கிறார். இதற்கு வெங்கடேசன் சொல்லும் காரணம், ‘மாஞ்சா நூலுக்கு விதிக்கப்பட்டத் தடைதான்’.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சா நூல் ஏற்படுத்திய பாதிப்புகள், இந்தத் தொழிலையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அப்போதெல்லாம் பட்டம் விடுவது, போட்டிக்கான ஒரு விளையாட்டாக, ஒருவரதுப் பட்டத்தை இன்னொருவர் வானத்திலேயே வெட்டுவது, வீரவிளையாட்டாக இருந்தது. இதற்கு முக்கியத் தேவை, மாஞ்சா ஏற்றிய நூல். இப்போது மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுவதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும்.

இதனால், வெங்கடேசன் பயன்படுத்தி வந்த, மாஞ்சா போடும் 2 இயந்திரங்கள் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. பட்டம் பறக்க விடுவது, இப்போது பொழுது போக்குக்கான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஆனாலும், பட்டங்கள் பறந்து கொண்டு தான். இந்தத் தொழிலின் எதிர்காலம்?

‘உடலில் தெம்பு இருக்கிறவரை இதில் என் உழைப்பு இருந்து கொண்டிருக்கும்’ என்று உறுதியுடன் சொல்லும் வெங்கடேசன், ‘இதைக் கற்றுக்கொள்ள முன்வருபவர்களுக்குச் சொல்லித் தரவும் தயாராக இருக்கிறேன்’ என்கிறார்.

நீண்ட நேரம் ஆகிவிட்டது. அவரதுப் பணியில் மேலும் குறுக்கிட விரும்பவில்லை. அவரிடமிருந்து விடை பெற்றேன்.




நீங்களும் ‘காத்தாடி’ வெங்கடேசனுடன் பேச விரும்பினால், 9677559979 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..! 



_____________________________________________________
 

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

Thursday, November 3, 2016

விழுப்புரத்தின் கோட்டை...


 --கோ.செங்குட்டுவன்.

என்னுடைய ‘விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்’ நூலின் தலைப்புகளில் ஒன்று  மேற்கண்டவாறு அமைந்திருந்தது. இதைப் பார்த்தப் பலருக்கும் ஆச்சரியம். விழுப்புரத்தில் கோட்டை இருந்ததா?

உண்மைதான். ஆச்சரியம் இருக்காதா பின்னே?

‘தென்னிந்தியப் போர்க்களங்கள்’ எனும் நூலில் 18ஆம் நூற்றாண்டில், ஆர்க்காடு நவாப் சாதத்துல்லாகான் ஆட்சியின்போது இருந்ததாக 84 கோட்டைகளைப் பட்டியலிட்டுள்ளார் ஆய்வறிஞர் கா.அப்பாத்துரையார். இந்தப் பட்டியலில் ‘விழுப்புரம் கோட்டை’ இல்லை.

அப்புறம், எப்படி?

விழுப்புரம் கோட்டைக் குறித்தானக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்றால் நாம், புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் ‘டைரி’யைத்தான் புரட்ட வேண்டும்.

ஆர்க்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 400க்கும் மேற்பட்ட கில்லேதார்கள் ஆட்சி செய்துவந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான், அப்துல் ஜலீல். விழுப்புரம் கில்லேதார். 300 சேவகர்கள் மற்றும் குதிரை, ஒட்டகங்களுடன் விழுப்புரத்தில் கோட்டைக் கொத்தளங்களுடன் 1746வாக்கில் இவரது ஆட்சி நடந்திருக்கிறது.

ஆர்க்காடு நவாப் அன்வருதீன் மற்றும் அவரது மூத்த மகன் மாபூஸ்கான் ஆகியோருக்கு மிகவும் நெருங்கியவராக இவர் இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பெரும்பாலான பாளையக்காரர்கள் மற்றும் கில்லேதார்கள் பிரெஞ்சு அரசுக்கு விசுவாசிகளாக மாறத்தொடங்கினர். ஆனால் விழுப்புரம் கில்லேதார், பிரிட்டிஷாரின் ஆதரவாளராகவே தொடர்ந்தார்.

இது, அருகிலுள்ள புதுவையை ஆட்சி செய்து கொண்டிருந்த டூப்ளே தலைமையிலான பிரெஞ்சு அரசுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் கில்லேதாரை வீழ்த்த அவர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்கான நேரமும் வந்தது. 1750 மார்ச் 21ஆம் தேதி விழுப்புரம் கோட்டையின் மீது பிரெஞ்சுப் படை தாக்குதல் தொடுத்தது. அப்போது கோட்டையில் இருந்த அப்துல் ஜலீலும், சில ஆங்கிலேய வீரர்களும் அவர்களை எதிர்கொண்டனர்.

கடுமையான மோதல். துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. கில்லேதார் தரப்பில் 12 பேர் பலியானார்கள். இறுதியில் பிரெஞ்சுப் படையிடம் வீழ்ந்தது விழுப்புரம் கோட்டை. இந்தச் சண்டையின்போது கில்லேதார் அப்துல் ஜலீல் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பற்றிய தகவல் ஏதுமில்லை.

இதற்கிடையே 1752இல் விழுப்புரம் கோட்டையின் மீது தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் படை, இக்கோட்டையைத் தனது வசமாக்கியது.

இப்படியாக வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றின் அடித்தளமாக விளங்கிய விழுப்புரம் கோட்டை 1803இல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் மத்தியில், கைலாசநாதர் கோயில் எதிரில் அரவை ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பூமியில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட 2 பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன.




இவை ஒவ்வொன்றும் 18 பவுண்ட் எடையுள்ளதாகும்.

இதில் ஒரு பீரங்கி சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று, விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் மேடை அமைக்கப்பட்டு அதன்மீது நிறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் சரி. கோட்டை- விழுப்புரத்தில் எந்த இடத்தில் இருந்தது?

இதற்கான விடை இன்னும் கிடைத்தபாடில்லை.

விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் ‘கோட்டை விநாயகர்’ வீற்றிருக்கிறார்.

ஒருவேளை, சித்தேரிக்கரை அல்லது மந்தக்கரைப் பகுதிகளையொட்டி கோட்டை இருந்திருக்கலாம் ....!      

_____________________________________________________
 

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________