Thursday, November 3, 2016

விழுப்புரத்தின் கோட்டை...


 --கோ.செங்குட்டுவன்.

என்னுடைய ‘விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்’ நூலின் தலைப்புகளில் ஒன்று  மேற்கண்டவாறு அமைந்திருந்தது. இதைப் பார்த்தப் பலருக்கும் ஆச்சரியம். விழுப்புரத்தில் கோட்டை இருந்ததா?

உண்மைதான். ஆச்சரியம் இருக்காதா பின்னே?

‘தென்னிந்தியப் போர்க்களங்கள்’ எனும் நூலில் 18ஆம் நூற்றாண்டில், ஆர்க்காடு நவாப் சாதத்துல்லாகான் ஆட்சியின்போது இருந்ததாக 84 கோட்டைகளைப் பட்டியலிட்டுள்ளார் ஆய்வறிஞர் கா.அப்பாத்துரையார். இந்தப் பட்டியலில் ‘விழுப்புரம் கோட்டை’ இல்லை.

அப்புறம், எப்படி?

விழுப்புரம் கோட்டைக் குறித்தானக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்றால் நாம், புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் ‘டைரி’யைத்தான் புரட்ட வேண்டும்.

ஆர்க்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 400க்கும் மேற்பட்ட கில்லேதார்கள் ஆட்சி செய்துவந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான், அப்துல் ஜலீல். விழுப்புரம் கில்லேதார். 300 சேவகர்கள் மற்றும் குதிரை, ஒட்டகங்களுடன் விழுப்புரத்தில் கோட்டைக் கொத்தளங்களுடன் 1746வாக்கில் இவரது ஆட்சி நடந்திருக்கிறது.

ஆர்க்காடு நவாப் அன்வருதீன் மற்றும் அவரது மூத்த மகன் மாபூஸ்கான் ஆகியோருக்கு மிகவும் நெருங்கியவராக இவர் இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பெரும்பாலான பாளையக்காரர்கள் மற்றும் கில்லேதார்கள் பிரெஞ்சு அரசுக்கு விசுவாசிகளாக மாறத்தொடங்கினர். ஆனால் விழுப்புரம் கில்லேதார், பிரிட்டிஷாரின் ஆதரவாளராகவே தொடர்ந்தார்.

இது, அருகிலுள்ள புதுவையை ஆட்சி செய்து கொண்டிருந்த டூப்ளே தலைமையிலான பிரெஞ்சு அரசுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் கில்லேதாரை வீழ்த்த அவர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்கான நேரமும் வந்தது. 1750 மார்ச் 21ஆம் தேதி விழுப்புரம் கோட்டையின் மீது பிரெஞ்சுப் படை தாக்குதல் தொடுத்தது. அப்போது கோட்டையில் இருந்த அப்துல் ஜலீலும், சில ஆங்கிலேய வீரர்களும் அவர்களை எதிர்கொண்டனர்.

கடுமையான மோதல். துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. கில்லேதார் தரப்பில் 12 பேர் பலியானார்கள். இறுதியில் பிரெஞ்சுப் படையிடம் வீழ்ந்தது விழுப்புரம் கோட்டை. இந்தச் சண்டையின்போது கில்லேதார் அப்துல் ஜலீல் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பற்றிய தகவல் ஏதுமில்லை.

இதற்கிடையே 1752இல் விழுப்புரம் கோட்டையின் மீது தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் படை, இக்கோட்டையைத் தனது வசமாக்கியது.

இப்படியாக வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றின் அடித்தளமாக விளங்கிய விழுப்புரம் கோட்டை 1803இல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் மத்தியில், கைலாசநாதர் கோயில் எதிரில் அரவை ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பூமியில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட 2 பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை ஒவ்வொன்றும் 18 பவுண்ட் எடையுள்ளதாகும்.

இதில் ஒரு பீரங்கி சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று, விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் மேடை அமைக்கப்பட்டு அதன்மீது நிறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் சரி. கோட்டை- விழுப்புரத்தில் எந்த இடத்தில் இருந்தது?

இதற்கான விடை இன்னும் கிடைத்தபாடில்லை.

விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் ‘கோட்டை விநாயகர்’ வீற்றிருக்கிறார்.

ஒருவேளை, சித்தேரிக்கரை அல்லது மந்தக்கரைப் பகுதிகளையொட்டி கோட்டை இருந்திருக்கலாம் ....!      

_____________________________________________________
 

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

No comments:

Post a Comment