Monday, November 14, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 6

- இராம.கி.

அடுத்தது பதிற்றுப்பத்தின் இரண்டாம்பத்துப் பதிகம். இரண்டாம்பத்தைப் பாடியவர் குமிட்டூர்க் கண்ணனார். பாடப்பட்டவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். பதிகம்பாடியது யாரென்று தெரியவில்லை. பதிகங்கள் மூலத்தோடன்றி உரைச்சுவடிகளில் மட்டுமுள்ளதால், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் இவற்றை இயற்றியிருக்கலாமென்பர். கடைசிப்பத்தின் தலைவனான யானைக்கட்செய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னிருந்த ஆதன்களும், இரும்பொறைகளும் இதில் இடம்பெறாததால், கடைசிப்பத்து எழுந்த சில ஆண்டுகளில் (பொ.உ.மு. இறுதிகளில்) தொகுப்பு நடந்திருக்கலாம் என எண்ணுகிறோம். இப்பதிகம் சிறியதாயினும் நெடுஞ்சேரலாதன் பெற்றோரில் தொடங்கி, முகன (main) வாழ்க்கை நிகழ்ச்சிகளை காலவரிசையிற் கூறுவதால் என் விளக்கமும் சற்று பெரிதாகிறது. ஊடே மண்ணுமங்கலம், வாள்மங்கலம், நெய்யிடுதல் போன்ற சில விதப்பான மரபுகளையுஞ் சொல்லவேண்டியுள்ளது.


மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற
மகன்
அமைவரல் அருவி இமையவில் பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்.
இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெண்ணாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ.. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்  
------------------------------
என்பது பாட்டும் பின்குறிப்புமாகும். பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப்பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
---------------------------
மன்னிய பெரும்புகழ் மறு இல் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு,
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்
அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ,
தகைசால் சிறப்பொடு பேர்இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து,
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ,
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு,
பெருவிறல் மூதூர்த் தந்து,
பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்தாள்
இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெண்ணாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ.. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்
-------------------------------------
இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். மன்னிய பெரும்புகழ் = நிலைத்த பெரும்புகழும்; மறுஇல் வாய்மொழி = குற்றமிலா வாய்மொழியும்; இன்னிசைமுரசின் = இனிது இசைக்கும் முரசுங் கொண்ட; உதியஞ்சேரற்கு = வானவரம்பன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனுக்கு; இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-143 ஆகும். முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் இவனைப் பாடுவார். அதில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே (சதகர்ணிகள்). பலருஞ் சொல்வது போல் பாரதப்போரின் கௌரவரல்லர். புறம் 2 இன் செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பது தேவையற்ற பௌராணிகப் பார்வை. உதியஞ்சேரல் காலத்திலேயே அசோகன்தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே மோரியருக்கடுத்து வந்த சுங்கரின்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதை. (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்தது. சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற்புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத்தொடரையும் படியுங்கள்.

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்
http://valavu.blogspot.in/2010/08/2-2.html
http://valavu.blogspot.in/2010/08/2-3.html
http://valavu.blogspot.in/2010/08/2-4.html
http://valavu.blogspot.in/2010/08/2-5.html

வெளியன்வேண்மாள் நல்லினி = வெளியன்வேள் மகளாகிய நல்லினி; வெளியன்வேள் பெரும்பாலும் பொதினியைச் சேர்ந்த ஆவியர் குலமாகலாம். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதனடிவாரத்தில் ஆவினன்குடி உள்ளது.) ஆவியர்குடியோடு சேரர்குடிக்குக் கொடிவழிதோறும் மணத்தொடர்புண்டு. ஈன்ற மகன் = ஈன்ற மகன்; உதியன் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதனென்பர். இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. அக்காலத் தமிழகத்தில் 16/18 அகவையில் ஆண்மகனுக்குத் திருமணம் நடந்துவிடும். 20/25 இல் இளவரசுப்பட்டஞ் சூட்டுவர். ஆட்சியாண்டுகள், இளவரசுப்பட்டம் கட்டியதிலிருந்து கணக்கிடப்படும். இல்லாவிடில், ”58 ஆண்டு நெடுஞ்சேரலாதனாட்சி”, ”55 ஆண்டு செங்குட்டுவனாட்சி” என்ற தொடர்களுக்குப் பொருளிராது. அரசுப்பட்டம் அளிப்பு தனித்துநடந்ததாய் பதிற்றுப்பத்துக் குறிப்புகள் தெரிவிப்பதில்லை. 

நெடுஞ்சேரலாதனுக்கு 2 மனைவியருண்டு. நல்லினிசோதரன் வேளாவிக்கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங்கோமான்; கூட்டத்தலைவன்.) முத்தமகள் பதுமன்தேவியை முதல் மனைவியாய்ப் பெற்றான். அவள் மூலம் பிறந்தவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அடுத்தவள் ஞாயிற்றுச்சோழன் மகள் நற்சோணை. இவளுக்குப் பிறந்த செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்டவன். நெடுஞ்சேரலாதன் மகனாய்ப் பலருஞ் சொல்லும் இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்படவில்லை. அக்காதையை இடைச்செருகலென நான் ஐயுறுவதால் இளங்கோ செங்குட்டுவன் தம்பியென என்னால் கொள்ளமுடியவில்லை. அவர் சிலம்பின் ஆசிரியர்.. அவ்வளவுதான். அவர்பற்றிய செய்திகள் வேறெங்குமோ, பதிற்றுப்பத்திலோ வரவில்லை. வரந்தரு காதையிலுள்ள பெரும் முரண்களை என்”சிலம்பின் காலம்” நூலில் தெரிவித்துள்ளேன்.

குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற தம்பியுண்டு. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் வேந்தனாகாததால், வானவரம்பனெனும் பட்டஞ்சூடான். அடுத்தது களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன்காலம் பொ.உ.மு. 131-107. இவன் இயற்பெயர் தெரியவில்லை. இவன் பெயர்முன்னொட்டு ஒருவகை முடியைக்குறிக்கும்.
நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்தபின், மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பின்  நார்முடிச்சேரல் வானவரம்பனாகி அரசுகட்டில் ஏறினான். இவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கலாமென்று ஊகிக்கிறோம்.  

புறம் 62 இல் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளியும் (மைத்துனன்; நற்சோணையின் சோதரன்) பொருதுகையில் இருவரும் இறந்துபட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 இல் நாகநாட்டுக் கரிகால்வளவன் [பெரும்பாலும் 2 ஆம் கரிகாலன். முதற்கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பாலறிவோம். முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் குழம்பித் தமிழாசிரியர் தடுமாறுவார்.] வெற்றிபெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறென்பது புரியும். ஆழ ஆய்ந்தால் புறம் 62 இல் விவரிக்கப்படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனென விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? .

நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப்பெருந்துறைச் சேரலாதன்” என்று வருங்கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதைவைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச்(=சிறிய) சேரலாதனென்றும், கடைத்தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர்சொல்லாமற் குறிப்புவரும். 

இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப்பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர்பெற்றவனைப் பார்ப்போம். இவன்காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார். வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென இன்றும் யாருக்கும் தெரியாது. இன்றுங் குட்டுவனைக் குட்டனென மலையாளத்திற்சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோவகையிற் குட்டனாகலாம். ஈழப்பெருந்தலைவரான பிறகும், பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் தம்பியா? இல்லையே? விளிப்பெயரே பரவலாய் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன் = வெல்லுங் குணங்கொண்ட குட்டுவன்;. செங்குட்டுவன் = செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை. சிலபெயர்கள் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.

செங்குட்டுவன் கங்கைக்கரைபோகிய செயல் பதிற்றுப்பத்தின் 4ஆம்பத்தில் வராது பதிகத்தில்மட்டுமே வரும். கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில். குட்டுவன் 55 ஆண்டுக் காலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப்பட விதம் விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் பரணருக்கு 50 வயதெனவையுங்கள். கடல்பிறக்கோட்டிய செயல் அடுத்தசில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச்சொல்வார். அதன்பின் செங்குட்டுவனுக்கு நடு அகவையிருக்கையில் முதல்முறை வடக்கே படையெடுத்துப்போனான். (பரணர் உயிரோடிருந்தால் தானே இதைச் சொல்வார்? இயலுமையை எண்ணிப்பாருங்கள்.) இது சேரரின் இரண்டாம் வடபடையெடுப்பு. (முதற்படையெடுப்பு குடக்கோ நெடுஞ்சேரலாதனின் இளமைக் காலத்தில் நடந்தது.)

 வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

என்பது சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தின் காட்சிக்காதை 158-164 வரிகளாகும். இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகள் நற்சோணையை. அவள் கங்கையிலாடியது பெரும்பாலும் வாரணாசியாய் இருக்கும். பொதுவாய்ப் பலரும் ஒருமுறையே செங்குட்டுவன் வடக்கேபோனதாய் எண்ணிக்கொள்கிறார். கிடையாது. சிலம்பின் படி அவன் இருமுறை போயிருக்கிறான். முதல்முறையில் பெரும்பாலும் சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரனோடு சண்டையிட்டிருக்கலாம். இரண்டாம் முறை பாகபத்ரனின் மகன் தேவபூதியோடும், அவன் அமைச்சன் விசய கனகனோடும் சண்டையிட்டிருக்கிறான். செங்குட்டுவனின் முதல் படையெடுப்பின் பின்புலம் அறிவோம்.

சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரன் காலத்தில் (பொ.உ.மு. 119-83) மகதம் ஆட்டங்கொள்ளத் தொடங்கியது. பாடலிபுத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (Beznagar. இற்றை ம.பி. மாநிலத்திலுள்ளது. இங்குதான் அசோகன் முதற்கொண்டு மகத இளவரசர் ஆட்சிபுரிவார்.) தலைநகர் மாற்றப்பட்டது. மகதம் கொஞ்சங்கொஞ்சமாய்ச் சுருங்கியது. மகதங்கவரக் கலிங்கர், நூற்றுவர்கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசர் என்று பலரோடும் சண்டைகள் தொடங்கின. இக்காலத்தில் பாணினியின் ”அட்ட அத்தியாயிக்கு” பதஞ்சலி மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்தசூத்ரம்) சுங்கர்கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். பாகபத்ரன் ஆட்சி முடிவில் நூற்றுவர்கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக்கொள்ள முயன்றார். மகதம் வலியிழந்தது இந்தியாவெங்கணும் அன்று தெரிந்திருக்கும். இந்நேரத்தில் செங்குட்டுவனும் வடக்கே படையெடுத்துப்போகத் துறுதுறூத்தது இயற்கையே. இக்காலத்தில் செங்குட்டுவன் தன் தந்தையின் சார்பாக முதல்முறை வடக்கே சென்றுள்ளான். அவன்தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும்.

2 ஆம்முறை கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு அகவை 78/80 ஆகலாம்.. மகதக்குழப்பத்திற் தானும்புகுந்து இன்னொருமுறை விளையாடமுடியுமென்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையை தன் அரசமுயற்சிக்குப் பயன்படுத்தியிருக்கிறான். செங்குட்டுவன் 2 ஆம் படையெடுப்பு நடக்குபோதிருந்த சுங்க அரசன் தேவபூதி இவன்காலம் பொ.உ.மு. 83-73 (இவனே கடைசிச் சுங்கன். அளவுக்குமீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்ட இவனை இவன் முதலமைச்சனான வாசுதேவக்கனகனே பின்னாற் கொன்றுவிடுவான். (விசயன் என்பது வாசுதேவனின் மறுபெயரோ, அன்றி வாசுதேவனின் தந்தையோ எனத்தெரியவில்லை.).அதற்கப்புறம் கனகரே ஆட்சிசெய்வார். தேவபூதிக்குத் தனுத்ரபூதியென்ற பெயருமிருக்கலாம். பாகதச்சான்றுகள் கொண்டு உறுதிசெய்யவேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயரைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப்பெயர், எவை இயற்பெயர்?” என்று சொல்லமுடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயமெழுகிறது. இது சேரரின் மூன்றாம் வட படையெடுப்பு. மயிலை சீனி வேங்கடசாமியாரும் சேரர் மூன்றுமுறை வடக்கே படையெடுத்ததாய்ச் சொல்வார்.

செங்குட்டுவனுக்குப் பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டமேறினான். ஆறாம்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக்காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக்கொணர்ந்தவனெ”ன ஆடுகோட்பாட்டிற்குப் பொருள்சொல்லும். பழம்போரில் ஆக் கவர்வதை வெட்சியென்றும், மீட்டுவதைக் கரந்தை என்றுஞ்சொல்வர். தொல்காப்பியர் கரந்தையை வெட்சிப்பகுதியாகவே சொல்வார். தவிர, இரண்டுஞ் சேர்ந்தது ஆகோட் பூசலாகும். அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. பெரும்பாலும் இவன் காலம் பொ.உ.மு. 106-75 ஆகும். செங்குட்டுவனுக்குப்பின் பட்டத்திற்குவந்து வானவரம்பனென்ற பெயருங்கொள்வான். இவன் வேந்தனானதற்கு இதுவே அடையாளம். இவனுக்கு ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகமுமுண்டு. ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன்; செந்நிறத்தால் (அத்து=சிவப்பு) அத்தியெனும் விளிப்பெயருற்றான். நெடுஞ்சேரலாதன் வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன்மகன் நாகநாட்டில் பெண்ணெடுத்தான். (பெண்கொடுப்பதும், சண்டைபோடுவதும் மூவேந்தரிடையே நடந்துள்ளன.) பெரும்பாலும் இவனே 2ஆம் கரிகாலன்மகள் ஆதிமந்தியை மணந்தவனாவான். சிலப்பதிகாரம் இவன் அரசவையில் அரங்கு ஏறியிருக்கலாம். இதன் காரணத்தைச் “சிலம்பின் காலம்” நூலில் விளக்கியிருப்பேன். செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் நமக்குத் தெரியவில்லை.

இப்பொழுது 2ஆம் பத்தின் பதிகத்திற்கு வருவோம். அமைவரல் அருவி = நெஞ்சையள்ளும் அருவியுள்ள; இமையம் வில்பொறித்து =இமையத்தில் விற்சின்னம் பொறித்து; இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க = ஓசுங்கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி; தன்கோல் நீறீஇ = தன் செங்கோலை (அங்கு) நிறுவி; தகைசால் சிறப்பொடு = தகுதிநிறைச் சிறப்பொடு; பேரிசை மரபின் ஆரியர் வணக்கி = பெரும்புகழ் மரபுகொண்ட ஆரியரை அடக்கி; ஆரியரென்போர் இங்கு எதிரியாகவே மதிப்புடன் சிறப்பித்துச் சொல்லப்படுகிறார். அவருக்கும் தனிமரபுண்டு என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்படி ஆவதாலேயே தமிழர் மரபும், ஆரியர் மரபும் சிலவகைகளில் வேறுபடலாம் என்பது வெள்ளிடைமலை; இப்படையெடுப்பு நெடுஞ்சேரலாதன் பட்டமேறிய சில ஆண்டுகளுள், பெரும்பாலும் பொ.உ.மு 160 க்கு அருகில் நடந்திருக்கலாம். அப்போது மோரியரரசைத் தொலைத்து புஷ்யமித்திரன் அரசு (பொ/உ/மு.165-149) வந்துவிட்டது.

[இங்கே ஒரு போகூழைச் சொல்லித்தானாகவேண்டும். வில்லும், புலியும், கயலும் இமையத்தில் பொறித்ததை இலக்கியத்திற் பலகாலம் படித்தாலும், அவை எந்த இடங்களென்பது நமக்குத் தெரியாது. குத்துமதிப்பாய், காசிக்கும், பாட்னாவிற்கும் வடக்கிருக்கலாமென ஊகஞ் செய்கிறோம். சான்றுகளுடன் நிறுவ ஒருசெய்தியும் இதுவரை கிட்டவில்லை. தொல்லோவியர், கல்வெட்டாளர் போன்றோர் வடநில ஆய்வாளருடன் சேர்ந்து இதைத்தேடவேண்டும். பதிற்றுப்பத்து அரசருக்கிணையான சுங்கர், கனகர் பற்றிய வட தரவுகள் நமக்கு வேண்டும். சேரலாதனும் செங்குட்டுவனும் வடக்கே போனாரா என்பதை நம் பக்கச் சான்றாற் சொல்வது ஒருவகை. எதிரிகள் பக்கம் காண்பது இன்னொரு வகை. பல்லாசிரியரும் அசோக மோரியனுக்கு அப்புறம் குத்தருக்குத் (குப்தர்) தாவுவார். கிட்டத்தட்ட 400 ஆண்டு காலம் அங்கும் வரலாற்று இடைவெளிதான். தவிர வடபகுதிகளின் மாகத(புத்த), அர்த்தமாகத(செயின) நூல்களைப் பார்க்கவேண்டும்.

நம்மூராய்வாளர் பாலி, பாகத மொழிகளை அறிவது இன்றியமையாதது. சங்கதம் வைத்தே எல்லாஞ் செய்யலாம் என்பது கானல்நீர். சங்ககால வரலாற்றறியச் சங்கதநூல்கள் இதுவரை உதவவில்லை. சங்க காலத்தை முன்சொன்னது போல் பொ.உ.மு.600-பொ.உ.150 இல் தேடவேண்டும். பொ.உ.மு.300-பொ,உ. 300 என்பது பிழை. அதையப்படியே புளியங்கொம்பாய்ப் பிடித்து ”அவர்சொன்னார், இவர் சொன்னாரெ”ன. 20ஆம் நூற்றாண்டு ஆய்வாளர் வழி நூறாண்டு காலம் தவறாய்த்தேடி முட்டுச்சந்துள் வந்துவிட்டோம். இன்னுந் தள்ளி பொ.உ.500 வரை சிலம்பைக் கொணர்வது வறட்டுத்தனமானது, போகாத ஊருக்கு வழிதேடுவது. Status quo doesn't take us anywhere. பல்லாண்டாய்வின் பின் இதைச்சொல்கிறேன். சங்ககால மகதத்தில் பாகதமே பேராட்சி பெற்றது. சங்கதம் வடமேற்கிருந்து கொஞ்சங்கொஞ்சமாய் வந்து படித்தோரிடம் பரவியது. குத்தருக்கு அப்புறமே வடக்கிலும் (பல்லவருக்கு அப்புறமே தெற்கிலும்) சங்கதம் மேலோங்கியது.]

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து = நயமிலா வன்சொல் பேசும் யவனரைச் சிறைப்படுத்தி; ஆரியரைச் சொன்னவுடன் யவனரைச் சொல்வதால் இது இந்தோ-சித்தியரை/ சத்ரபரை/ சகரை என்று புரிந்துகொள்ள வேண்டும். அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் வந்து வெளிச்சென்ற போது அவர் படையும், ஆளுநரும் இங்கே இருத்திவைக்கப்பட்டார். பின்னால் அவர் தனித்தியங்கும் மன்னராய் மாறி மதிப்புடன் இந்தியாவிற்குள் விரிய நுழைந்தார். அவந்தி நாட்டின் உச்செயினி வரை அவர் வந்தார். அவந்தி நாட்டோடு தமிழர்க்கிருந்த தொடர்பு சிலப்பதிகாரத்தால் வெளிப்படும். முதலாங் கரிகாலன் காலத்தில் (கிட்டத்தட்ட பொ.உ.மு.462) தமிழகத்தோடு நட்பாக இருந்த அவந்தி நாடு பின் நட்பாகவும் பகையாகவும் ஆட்சியாளருக்குத் தக்க மாறிமாறியிருந்தது. படித்தானம் தொடங்கி மகதம் வரை செல்லும் தக்கணப்பாதைக்கு உச்செயினி மிக அருகிற்றான் இருந்தது. இந்தோ - சித்திய யவனரை பொ.உ.மு.160 இல் தெற்கிருந்து வடக்கே போன சேரர் சிறைப்படுத்துவது நடக்கக்கூடியது தான்

நெய்தலைப்பெய்து = (வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து; கைபின் கொளீஇ = பின் அதைக் கையிற்கொண்டு;

இங்கோர் இடைவிலகல். ”நெய்யிடுதல் ஏதோ கப்பலில்வந்த யவனருக்களித்த தண்டனையென்றே” உரையாசிரியரும், தமிழாசிரியரும் தவறாய்ப் பொருள்சொல்வர். மாறாக ”இது மங்கலமானது; சேரன் பக்கஞ் சொல்வது; யவனர் பக்கமல்ல” என்பதை இன்றும் மிஞ்சிக்கிடக்கும் மரபுகள்சொல்லும். பட்டமேறல் (அரசர், சமய ஆதீனங்கள் பட்டமேறுவது, ஆண்டுதோறும் அதைக் கொண்டாடுவது), நல்லநாள், பெரியநாட்களில் வீட்டுப்பெரியவர் தலைவருக்குச் செய்வது, கோயில் குடமுழுக்கிற் செய்வது, இறைப்படிமத்திற்குத் திருமஞ்சனமாட்டுவது எனப் பல்வேறு விழவுகளில் நெய் தலைப்பெய்தல் இன்றும் நடக்கிறது. இவ்வளவேன்? மணம்முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் பிள்ளைவீட்டிற்குச் செல்லுமுன் பெண்வீட்டில் மஞ்சள்நீராட்டின் முன் ஒவ்வொரு பெரியவரும் இவர் தலையில் நெய்யைச் சிறிதேயிட்டுப் மஞ்சளுந்தடவி சிகைக்காயும் பூசி நீராடலாகும். மாப்பிள்ளையும், பெண்ணும் புதுக்குடித்தனம் போகிறாரல்லவா? புது வாழ்க்கைக்கு வாழ்த்துக்கூறி நெய் தலைப்பெய்தல் நடைபெறுகிறது. இப் பழக்கம் சீவக சிந்தாமணி கோவிந்தையார் இலம்பகத்திலும் (487 ஆம் பாட்டு) குறிக்கப்படும்.

நாழியுள் இழுது நாகுஆன் கன்றுதின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழுதொறு ஆவும் தோழும் போன்றுடன் மூக்க என்று
தாழிருங் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழைநீர் சொரிந்து மொய்கொள் ஆயத்தியர் ஆட்டினாரே.

நெய்யிடும் இந்தப்பழக்கம் இன்று தீபாவளிப் பண்டிகையின் போதும் தொடருகிறது. (நான் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்துள் போகவில்லை. அதனுள் நடக்கும் ஒரு சடங்கை மட்டுமே சொல்கிறேன்.)  தீபாவளியின் தொடக்கமாய்த் தலையில் எண்ணெய் தேய்த்து நீராடும் வழக்கம் மண்ணுமங்கலத்தில் தொடங்கியது.

ஆங்கிலத்தில் இச்சடங்கை anointing என்பர். unction என்றொரு பெயருமுண்டு. உலகமெங்கும் நெய் தலைப்பெய்தல் வெவ்வேறு நாகரிகங்களில் நடந்துள்ளது. http://biblehub.com/topical/a/anointing.htm என்ற வலைத்தளம் பாருங்கள். விவிலியத்திற் கூட ஆசிகூறித் தலையில் நெய்யிடும் பழக்கமுண்டு. இதைக் குறிக்கும் பலமொழிச் சொற்களிலும் நெய் உள்ளே அடங்கிக்கிடக்கும். தமிழன் நாகரிக முன்னோடி என்றால் நம்ப ஆளில்லாதிருக்கலாம். ஆனால் anointing என்பதற்குள் ”நெய்” என்றசொல் கட்டாயமுண்டு. [Pun intended] unguent (n.) Look up unguent at Dictionary.com. "ointment,"  early 15c., from Latin unguentem "ointment," from stem of unguere "to anoint or smear with ointment," from PIE root *ongw- "to salve, anoint" (source also of Sanskrit anakti "anoints, smears,"
Armenian aucanem "I anoint," Old Prussian anctan "butter," Old High German ancho, German anke "butter," Old Irish imb, Welsh ymenyn "butter")

நெய்யிடல் சேர்ந்த நீராட்டுவழக்கம் மண்ணனம் என்றும்,. மண்ணுமங்கலமென்றும் பழந்தமிழ் வழக்கிற் சொல்லப்படும். (மண்ணுதல் = நீராடுதல், மூழ்குதல், கழுவுதல், பூசுதல், செய்தல், அலங்கரித்தல், செப்பமிடுதல். மண்ணனம்>மஞ்ஞனம்>மஞ்சனமாகும். மங்கலத்தை திருவென்ற வேறுசொல்லாக்கி இன்று திருமஞ்சனம் என்கிறோம். இந்த விண்ணவச்சொல் மண்ணுமங்கலத்தில் எழுந்தது. பொதுவாய் விண்ணவ, சிவ ஆகமங்களிலுள்ள பல்வேறு பழக்கங்களும் பழங்குடிப் பழக்கங்களாகவே ஆகின்றன. சமயங்களுக்கும் இதற்கும் மெய்யியல் வரிதியாய்ப் பெரிதாய் உறவு காணோம்.) தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணியியலில் பாடாண் திணையை விவரிக்கையில் 1037 ஆம் நூற்பாவில் “சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம்” என்றுவரும். சேரன் பட்டமேறியபோதும் ஓவ்வோராண்டும் இது நடைபெற்றிருக்கும். இங்கே இன்னும் விதந்து வேறொன்று சொல்லப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றிபெற்று வந்தபின்னால் வாள், வேல், முரசு போன்றவற்றிற்குப் படையல் நடக்கும். அதிலும் இந்த நெய்யிடுதற் சடங்கு நடைபெறும். அந்நிகழ்வைப் பழங்காலத்தில் வாள்மங்கலம் என்பர். இதுவும் மேற்சொன்ன நூற்பாவில், மாணார்ச் சுட்டிய வாள்மங்கலம்” என்று குறிப்பிடப்பெறும். (மாணார் = பகைவர்)     . .

அருவிலை நன்கலம் = அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை வயிரமொடு = (அதிற்பொருத்திய) வயிரத்தோடு கொண்டு; பெருவிறல் மூதூர்த் தந்து = பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து; பிறர்க்கு உதவி = பிறருக்கு உதவி; அமையார்த் தேய்த்த = அடங்காதவரை அழித்த அணங்குடை நோன் தாள் = அணங்குடைய வலியகால் கொண்ட; இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை =  இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;  

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

நிலைத்த பெரும்புகழும், மறுவிலா வாய்மொழியும்,
இனிதேயிசைக்கும் முரசுங் கொண்ட
வானவரம்பன் உதியஞ்சேரலாதனுக்கு,
வெளியன்வேள் மகளாகிய நல்லினி ஈன்ற மகன்
நெஞ்சையள்ளும் அருவியுள்ள இமையத்தில் வில்பொறித்து,
ஓசுங்கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி தன் செங்கோல் நிறுவி,
தகுதிநிறைச் சிறப்பொடு பெரும்புகழ் மரபுகொண்ட ஆரியரை அடக்கி,
நயமிலா வன்சொல்பேசும் யவனரின் பொருளைச் சிறைப்படுத்தி,
அவ்வெற்றியின் பின்,
(வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து
பின் வாளைக் கையிற்கொண்டு,,
அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை,
(அதிற்பொருந்திய) வயிரத்தோடு கொண்டு,
பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து,
பிறருக்கு உதவி,
அடங்காதவரை அழித்த,
அணங்குடைய வலியகால் கொண்ட,
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;  
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.


[தொடரும்]
__________________________________________________________________


இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

No comments:

Post a Comment